Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யார் இந்த உமர்த்தம்பி? 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , , , ,

கருங்குயிலும் காகமதும் ஒன்றாய்த் தோன்றும்(1)
காதுடையோர்(2) இன்னிசையால் குயிலைத் தேர்வார்
அருங்கருணை ஆண்டவனின் அன்பைத் தேக்கி
அகமுவந்து நற்றமிழின் மக்க ளெல்லாம்
பெரும்பயனை அடைந்திடவே 'தேனீ' யென்னும்
பெயர்சூட்டித் தட்டச்சில் வார்த்தெ டுத்தே
ஒருங்குறியாம் 'யூனிக்கோ' டெழுத்தைத் தந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

நற்குலமாம் 'வாவன்னா' குடும்பத் தோன்றல்
நாற்புலமும்(3) ஒருங்கிணைந்த அதிரைச் செல்வன்
(4)பொற்குணமுன் மாதிரியைக் கடைப்பி டித்துப்
புகழ்விரும்பாத் தன்மையிலே சேவை செய்தே
அற்புதமாம் தேனீயாய் மலர்த்தே னுண்டான்
அகிலத்தார் பலன்பெறவே கணினிக் கூட்டில்
உற்பவமாய்(5) இன்றமிழை இயங்கச் செய்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?


******

இளமையிலே நுண்ணறிவைப் பெற்ற தம்பி
இயங்காத கருவிகளைப் பழுது பார்ப்பான்
எளிமையுடன் அடுத்துள்ள பட்டுக் கோட்டை
ஏகிடுவான்; அங்கவற்றை இயங்க வைப்பான்
களிகொள்வார் கருவிகளின் உடைமைக் காரர்
காசளித்தால் வாங்கமாட்டான்; நன்றி ஏற்பான்
ஒளிகொடுக்கும் முழுமதிபோல் பயனைத் தந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

திறமையுடன் செயலாற்றி வறுமை போக்கத்
தேர்ந்தெடுத்தான் அமீரகத்தை; அங்கி ருந்து
மறுமையுடன் இம்மையையும் சேர்ந்து பெற்று
மகிழ்வோடு தன்வாழ்வை அமைத்து யர்ந்து,
பொறுமையுடன் நுண்ணறிவை வளர்த்துக் கொண்டு
புகழ்வாய்ந்த கணினிகளுள் புகுந்து மேய்ந்தான்
ஒறுமையிலாத்(6) தன்மையுடன் உயர்ந்து நின்ற
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?


******
கடைந்தெடுத்த வெண்ணெயினைப்(7) பல்லோ ருக்கும்
காசில்லாக் கொடையாகக் கொடுத்த சீலன்
அடைந்ததுவோ உயிர்கொல்லிப் புற்று நோயாம்!
அதனைத்தான் பொறுமையுடன் சகித்து வந்தான்
குடைந்ததுநோய் அவனுடலை; இயன்ற மட்டும்
குணப்படுத்தச் சிகிச்சையெலாம் செய்து பார்த்தான்
உடைந்ததுவே (8)உயிர்ப்பானை! பாவம்! அந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?


******

அருஞ்சொல் விளக்கம்:

(1) கருநிறம் கொண்டிருப்பதால், குயிலும் காகமும் பார்வைக்கு ஒன்றாய்த் தோன்றும். அதுபோல், செயற்கரிய செய்த உமர்த்தம்பி, சாதாரணமானவர் அல்லர் எனும் உவமை எடுத்தாளப்பட்டுள்ளது.

(2) காதுடையோர் = இங்குக் 'காதுடையோர்' என்பது, குயிலிசைக்கு மயங்கி மகிழும் காதையுடையவர்கள் என்பதைக் குறிக்கும். எ.கா: திருக்குறளில், 'கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்' எனும் பாட்டு இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. உண்மையில், கற்றோரே கண்ணுடையார் என்பது போல, காதால் குயிலிசையைக் கேட்பவரைக் காதுடையவர் என மிகைக் கூற்றாகக் கூறப்பட்டது.

(3) நாற்புலமும் = தமிழிலக்கியத்தின் நிலப் பகுப்புகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் (பாலையின்றி) ஆகிய நான்கு நிலப் பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட அதிராம்பட்டினம்.

(4) 'பொற்குண முன்மாதிரி' = பொன்னான நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 'பிறர் நலம் பேணும்' முன்மாதிரியைக் கடைப்பிடித்துச் செயலாற்றியவர்.

(5) உற்பவமாய் = கருக் கொள்ளச் செய்து

(6) ஒறுமையிலாத் தன்மை = யாரையும் வெறுக்காத தன்மை

(7) கடைந்தெடுத்த வெண்ணெய் = பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகிய நான்கு பரிணாமங்களைப் பெற்ற பின்னர்தான், 'வெண்ணெய்' எனும் அரும்பொருள் உருவாகும். அதுபோல், கணினித் துறையில் முயன்று பாடுபட்டு முன்னேறிப் பெற்ற பயனை (ஒருங்குறி எழுத்துருவை) தமிழுலகிற்கு இலவசமாகக் கொடுத்த கொடையாளி உமர்.

(8) உயிர்ப்பானை = மனித உயிர் மாயும் தன்மையுடையது என்பதைச் சுட்ட, 'உயிர்ப்பானை' எனும் உருவகம் இங்கு எடுத்தாளப்பட்டது.

- கவிஞர் அதிரை அஹ்மது

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு