தமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள்

தமிழ் இணைய மாநாட்டு அரங்குகளுக்கு பெயர் சூட்டப்பட்ட தமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள்: 

உமர் தம்பி June 15,1953 - July 12,2006 தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர் தம்பி. மின்னணுவியலாளரான இவர் தமிழில் ஒருங்குறி படியெடுத்த காலத்தில் தமிழில் முதன் முறையாக எல்லா தளங்களிலும் இயங்கும் WEFT நுட்பத்தின் அடிப்படையிலான 'தேனீ' இயங்கு எழுத்துருவை உமர் தம்பி அறிமுகம் செய்தார். ஒருங்குறியல்லாத WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்களைச் சில தமிழ் வலைத்தளங்கள் முன்பே பயன்படுத்தி வந்தன. WEFT அடிப்படையிலான இயங்குஎழுத்துருக்கள் அந்த எழுத்துரு எந்த தளத்துக்கு உருவாக்கப்பட்டதோ அந்த ஒரு தளத்துக்கு மட்டுமே இயங்குமாறு இருந்தது. மேற்கண்ட இரண்டையும் முதன் முதலில் மாற்றிய பெருமை உமரையே சாரும். தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றிப் பல்வேறு வலைத்தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் பெரும்பாலானோர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைத்தளம், வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.தமிழ் உலகம் ம‌ட‌ற்குழு, தமிழ் மணம், ஈ உதவிக் குழுமம், ஒருங்குறிக் குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் என இணையத்தின் பெரும்பாலான தமிழ்க் குழுமங்களில் பங்கெடுத்துத் தம்மால் ஆன அத்தனை உதவிகளையும் நல்கி இருக்கிறார். உமர் தம்பி அவர்கள் உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன. எல்லா வகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி ஒருங்குறி மாற்றி, தேனீ ஒருங்குறி எழுத்துரு வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு வைகை இயங்கு எழுத்துரு என்பனவற்றோடு தமிழா-இ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.இப்படியாக தமிழ் இணையத்தோடு இணைந்த உமர் தம்பி அவர் வடிவமைத்துத் தந்த தமிழ் மென்பொருள்கள் மூலம் தமிழ் இணையத்தில் மங்காப் புகழை எய்தியவர்!

முரசொலி மாறன்

தமிழ் இணைய மாநாட்டை 1999ம் வருடம் நடத்த பெரு முயற்சி எடுத்துவர்களில் ஒருவர் அமரர் முரசொலி மாறன். இவ்வகையில் தமிழகத்தில் உத்தம நிறுவனத்தை மக்களிடைய பிரபலப்படுத்திய பெருமை இவரைச் சாரும். மின் வழி தமிழ் வளர மென்பொருள் பல தமிழர்களுக்காகத் தயார் செய்திட வழி வகுத்தவர் இவர். தமிழ்நாட்டில் நடந்த இணைய மாநாடுதான் ஒருங்குறி இல்லாத காலத்தில் தமிழ் எழுத்துருக்களைத் தரப்படுத்துவதற்கு வழிகோலியது எனலாம். ஆங்கிலம்-தமிழ் என்னும் இருமொழியில் அமைக்கப்பட்ட தாப் என்னும் எழுத்துருவும் தமிழில் மட்டுமே தட்டச்சு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட தாம் என்னும் எழுத்துருவும் அமைக்கு இம்மாநாட்டில்தான் வழிவகை செய்யப்பட்டது. அமரர் முரசொலி மாறன் தமிழர்களிடைய மென்பொருள்களின் தரப்படுத்தலுக்கான முயற்சியை வற்புறுத்தியவர். தமிழ் மென்பொருள் உற்பத்தியாளர்களிடைய பலப்பல மென்பொருள்களை உருவாக்க ஊக்குவித்தவர். தமிழகத்தில் மென்பொருள் உற்பத்தியளர்களுக்கு அரசு மூலமாக நிதியுதவிகள் பலவும் செய்து பல சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்க வழிகோலியவர்.
தமிழ் இணையமும் உத்தம நிறுவனமும் அமரர் முரசொலி மாறன்
அவர்களின் தமிழ்க் கணினித் தொண்டை என்றென்றும் நினைவு கூறும்.

சுஜாதா

சுஜாதா எனும் புனைப்பெயரைக் கொண்ட ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அமரர் ரங்கராஜனை அறியாதோர் தமிழ் இலக்கிய உலகில் இருக்கமுடியாது. தமிழ் இலக்கிய உலகில் ஆணித்தரமான ஒரு இடத்தைப் பெற்ற சுஜாதா கணினி வழி தமிழைப் பயன்படுத்தும் ஒரு சிறந்த பயனாளராக விளங்கினார். இவரின் கணினி ஆர்வம் இவரை அதிக அளவில் தமிழ் நாவல்களை எழுதவைத்தது என்றால் மிகையாகாது. 1997ல் அமரர் நா. கோவிந்தசாமி ஏற்பாடு செய்த தமிழ் இணைய மாநாட்டில் பங்கு கொண்ட சுஜாதா தமிழ் இணைய வளர்ச்சியின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்களில் ஒருவராக ஆனார். தமிழகத்தில் இணைய மாநாடு நடக்கவேண்டும் என்னும் உறுதியோடு 1999ம் ஆண்டு தமிழகத்தில் இதை நடத்த வழிகோலினார். முரசு அஞ்சல் எனும் தமிழ்த் தட்டச்சு மென்பொருளை இடையறாது பயன்படுத்தி மற்ற எழுத்தாளர்களிடையே கணினி பயன்பாட்டைப் பற்றியும் தமிழில் கணினி பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கணினியின் அற்புதங்களை மையமாக வைத்துத் தமிழில் நிறைய கதைகளை எழுதி தமிழ் வாசகர்களை தமிழ்க் கணினிக்கு ஈர்த்தவர்! உத்தம நிறுவனத்தின் முன்னோடிகளில் பலரோடு இணைந்து பணியாற்றி உத்தமம் ஆரம்ப காலத்தில் வளர வழிவகுத்தவர் அமரர் ரங்கராஜன் அவர்கள். உத்தமம் எனும் நிறுவனம் வளர வேண்டும் என முனைந்து ஆரம்ப காலங்களில் உத்தமத்தின் குழுமத்தில் அடிக்கடி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு உத்தம உறுப்பினர்களிடைய ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தினார்.


நா. கோவிந்தசாமி

இணைய முன்னோடிகளில் ஒருவர் என பலராலும் அன்புடன் கூறப்படும் அமரர். நா. கோவிந்தசாமி சிங்கப்பூரில் தமிழாசிரயராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழில் சிறுகதைகள் பல எழுதிய இவர் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியவாதிகளின் வரிசையில் இடம்பிடித்தவர். 1946-ஆம் ஆண்டு பிறந்த கோவிந்தசாமி 'உள்ளொளியைத் தேடி', 'வேள்வியைதேடி'. ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் பல சிங்கப்பூரில் பிரபலமானவை. சிங்கை வானொலியில் அவர் எழுதிய அன்புக்கப்பால், அலைகள் ஓய்வதில்லை எனும் தொடர் நாடகங்கள் புகழ்பெற்றவை. இணையம் வளர்ந்த காலத்தில் தமிழுக்கு இணையத்தில் ஒரு சிறந்த இடம் வேண்டும் என்ற எண்ணத்துடன் டாக்டர் டான் டின் வீ, லியோங்க கோக் யொங் ஆகிய இரு சீனக் கணினி வல்லுனர்களோடு இணைந்து தமிழ்நெட் எனும் எழுத்துருவைப் படைத்தார். இந்த எழுத்துருவின் பிறப்பு சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல தமிழ் இணையப் பக்கங்கள் பிறக்க வழிகோலியது. ஐஈ விசைப்பலகை எனும் தமிழ்த்தட்டச்சு முறையை அமைத்து தமிழை எளிதாகக் கணினியில் தட்டச்சுச் செய்ய வழியமைத்தார். குறிப்பாக இவரின் முயற்சியில் 1997ம் ஆண்டு முதல் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடந்தது. பல தமிழ்க் கணினி வல்லுனர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். இவ்வகையில் தமிழ் இணையமும் உத்தம நிறுவனமும் வளர வித்திட்டவர் நா. கோவிந்தசாமி! அண்ணாரின் இறுதிகாலத் தமிழ்க் கணினி முயற்சி தமிழ் இணையத்தின் முதற்கட்ட வளர்ச்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 1999-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மாரடைப்பால் இளம் வயதில் காலமான நா. கோவிந்தசாமி உத்தமத்தனரின் மனதில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

யாழன் சண்முகலிங்கம்

அப்பு ஆர்ச்சி என அன்பாக அழைக்கப்பட்ட அமரர் யாழன் சண்முகலிங்கம் இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியவாதி மற்றும் மென்பொருள் பொறியியலாளரான இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பல ஆண்டு காலம் பணியாற்றி அமெரக்கப் பிரஜை உரிமை பெற்று அங்கிருந்தே தனது தமிழ்த் தொண்டை ஆற்றினார். இவருடைய மிக முக்கியமான தமிழ் மென்பொருள் யாழன் தமிழ்ச் சொற்பகுப்பியாகும். இம்மென்பொருளை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்றைந்தாம் ஆண்டிலேயே எழுதி அதை உலகலவில் தமிழர்களிடையே பிரபலப்படுத்தினார். இது தமிழ்வலை99 என்ற மென்பொருளுக்கு முன்னதாகவே எழுதப்பட்டது. இந்த வகையில் தமிழர்களிடையே தமிழைக் கணினியில் பயன்படுத்த முயற்சி செய்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றார். தமிழ் எழுத்துரு வளராத நாட்களில் தமிழைக் கணினியில் பயன்படுத்த போதுமான வசதி இல்லாத நாட்களில் இணைய வளர்ச்சி தொடக்க்க் காலத்தில் இருந்த நாட்களில் ஒரு எளிமையான பலரும் பயன்படுத்தும் வகையில் ஒரு மென்பொருளைச் செய்து அதை தமிழர்களின் மத்தியில் பிரபலப்படுத்தியது மிகச் சாதனை என்றுதான் கூறவேண்டும். யாழன் விசைப்பலகையை இவர் 1993ம் ஆண்டு உருவாக்கி அதை தமிழர்களுக்கு அர்ப்பணித்தது தமிழ் இணைய வளர்ச்சியின் முக்கியமான காலகட்டங்களில் ஒன்று எனலாம்.


நன்றி: உத்தமம்

ஜூன் 2010

கருத்துகள் இல்லை