நோம்பு வருது....

இஸ்லாமிய மாத வரிசையில்
ஒன்பதாம் மாதமாம் உன்னதமாய்
சங்கைமிகு ரமளானும் நம்மை
சீராட்டி இறைப்புகழ் பாராட்ட வருது


தெளிவாக வானம் தென்பட்டாலும்
தெரியாமல் போன அப்பிறையை
இலங்கை ரேடியோ கண்டெடுக்கும்
அதனால் நோன்பும் ஊரில் ஆரம்பமாகும்
 
 
முதற்பிறையை கண்டதுமே
எம் முகமலர்ச்சி பெற்றிடுமே
பெரியவர் சிறியவருக்கெல்லாம்
பெரும் மகிழ்ச்சி வந்திடுமே
 
 
பிறையைக்காணும் முன்னே
நம் வீட்டு பெண்டிரும்
ஒரு மாத தேவைகளை
அது வருமுன்னே செய்திடுவர்
 
 
வீட்டை கழுவி ஒட்டடை அடித்து
மாவிடித்து பூபோல் வறுத்தெடுத்து
வீட்டு ஆண்களின் அகம்புறம் குளிர
அனைத்தையும் செய்து வைப்பர்.
 
 
பள்ளிகளெல்லாம் வெள்ளையடித்து
தன்னழகை மெரு கூட்டி நிற்கும்
காற்றில் கரைந்து வரும் பாங்கின்ஒலி
தொழுகைக்கு நம்மை தயார் படுத்தும்
 
 
கஞ்சி கீற்று கொட்டகையிடம்
பிஞ்சு உள்ளம் கெஞ்சிக்கேட்டிடும்
இன்னும் பதினொறு மாதங்களும்
நீ பள்ளியிலேயே தங்கிடுவாயாவென.
 
 
நோன்பு கால தண்ணீர் தாகம்
வீம்பின்றி பொறுமை கொள்ளும்
பசிகளெல்லாம் பறந்து போகும்
நோன்பு திறக்கும் சமயத்தை எண்ணி.
 
 
கண்சிவக்க குளித்து வந்த குளக்கரையும்
உள்ளம் குளிர உம்மா தந்த சர்பத்தும்
பார்வையால் உண்டுமகிழும் பதார்த்தங்கள்
பசித்தலால் உருவாகும் பல ருசித்தல்கள்
 
 
பள்ளிவாசல் நஹராவோ
பகல்நேர சூரியக்குளியல் எடுக்கும்
பகலவன் மறையும் மக்ரிபில்
இடிமுழக்கமென ஊருக்கு பறைசாற்றும்
 
 
ஆங்காங்கே வாடா,சம்சா கடைகள்
திடீர் காளானாய் முளைத்து நிற்கும்
வாடாவில் புதையுண்ட இறாலை
கண் பார்வை பெயர்த்தெடுக்கும்
 
 
இராக்கால வீண் விளையாட்டு
போர்க்களம் போல் நடந்தேறும்
தேவையற்ற தெரு சண்டைகளும்
தேடாமல் தெருவுக்கு வந்து சேரும்
 
தலை நோன்பில் கொடுத்த சீனி சோறு
நினைக்கும்பொழுதெல்லாம் தித்திக்கும்
சில்லரையில் நிறையும் சட்டைப்பை
நிறைமாத கர்ப்பிணியாய் வழிந்திருக்கும்
 
 
முதல் நாள் ஆசையாய் தொழுத தராவீஹும்
இரண்டாம் நாள் ஆசையே மோசம் செய்யும்
மூன்றாம் நாள் இடுப்பொடிந்த கிழவன் போல்
அமர்ந்து கொண்டே நார்சாவுக்கு நேரம் கடத்தும்
 
 
அட்டூழியம் புரியும் சைத்தான்கள் கட்டப்பட்டு
கபடியும்,கிளித்தட்டும் கட்டவிழ்த்துவிடப்படும்
இராக்கால வணக்க வழிபாடாய் உள்ளம்
தவறாக வீண்விளையாட்டை புரிந்துகொள்ளும்
 
 
பவுடர் போட்ட கேரம் போர்டில்
கருப்புவெள்ளையை சிகப்பு விரட்டும்
குழிக்குள் விழும் காய்களோ
குழந்தையாய் தொட்டில் உறங்கும்
 
 
அதிகாலையிலிருந்து அமைதியுற்ற இதயம்
அஸருக்குப்பின் அங்குமிங்கும் அலைபாயும்
வாடா,சம்சா வேண்டியதை சேமித்து வைக்கும்
வாங்கி வரும் வரை கஞ்சியும் காத்திருக்கும்
 
 
பேரீத்தம்பழம் கிடைத்து உள்ளம் பேரானந்தமடையும்
அதன் கொட்டை எடுக்க கைகள் பட்டை தீட்டும்
பசியின் உச்சத்தில் நோன்புதிறக்க ஓதும் து'ஆவும்
ஏனோ மறந்து போகும் பாதியில் மறைந்து போகும்
 
 
கஞ்சி குடிக்கும் முன் உள்ளம்
பசியில் கோட்டை கட்டும்
குடித்ததுமே ஆசையில் சேமித்தவை எல்லாம்
அடுத்த நாள் வேலைக்காரிக்கு போய் சேரும்
 
 
திருக்குர்'ஆனும் சிறப்புடன் ஓதி முடித்து
பள்ளிகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து
வருவோருக்கு நல்ல நாக்கு ருசியாய் நார்சாவும்
நிரப்பமாய் வந்து சேரும் வயிறுண்டு வாழ்த்தும்
 
 
முதல் பத்தில் உள்ளம் சிறு மூச்சு விடும்
இரண்டாம் பத்தில் அரை கடலை தாண்டும்
மூன்றாம் பத்தில் பெருநாளுக்கு தயாராகும்
முடிவில் வேதனையுடன் ஆனந்தமடையும்
 
 
ஏழைகளின் ஏக்கம் தீர்ந்து காசும் சேரும்
பயனடைந்தவர்களின் உள்ளமோ இன்னும்
பன்னிரண்டு மாதமும் ரமளானை வேண்டும்
இராப்பகலாய் ரஹ்மத்தும் ரஹ்மானிடமிருந்து வந்துசேரும்
 
 
காலஞ்சென்ற ரமளான் நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்தேன்.

இன்னும் இரு மாதங்களில் புதுக்குழந்தையாய் பிறக்க இருக்கும் புனித ரமளானே! நீ எங்களுக்கு வாழ்வில் பரக்கத்தும், ரஹ்மத்தும் தந்து எஞ்சி இருக்கும் எம் வாழ்நாட்களை இனிமையாக்கி இறுதியில் இன்முகத்துடன் இறைவனடி வந்து சேர உன்னையும், என்னையும் படைத்த அந்த வல்லோனிடம் இறைஞ்சிடுவாயா!
 
 
என புதுக்குழந்தையாய் பிறக்க இருக்கும் ரமளானை பாசத்துடன் கேட்டுக்கொண்டவனாக..
 
 
இனிய நினைவுகள் தொடரும் இன்ஷா அல்லாஹ் இறைவன் அதற்கு வாய்ப்புகள் கொடுக்கும் வரை.....
 
 
- மு.செ.மு. நெய்னா முஹம்மது

12 கருத்துகள்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் நெய்னா முஹம்மது..

வழக்கம் போல் ஊர் நினைவுகளை அடிக்கடி ஞாபகப்படுத்திவிடுகிறீர்கள்.

ரமலானை ஞாபகப்படுத்திருக்கும் தங்களின் இந்த பதிவை படித்த பின்பு, நோன்புக்கு தேவையான பொருட்களை நம் பெண்கள் இப்போது வாங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இவ்வளவு ஞாபகசக்தியை அல்லாஹ் தங்களுக்கு கொடுத்ததுக்கு இறைவனை நிச்சயம் பல முறை புகழ வேண்டும்.

தங்களைப் போன்றவர்களின் ஞாபகசக்தி இன்றைய இளைய தலைமுறைகளுக்கும் இருக்க வேண்டும், அது நன்மை தரும் விசயங்களில் மட்டும்.

Many Thanks MSM(N)

அப்துல்மாலிக் சொன்னது…

அருமை நெய்னா, அதற்கான் அருமை பெருமைகளை வார்த்தையாய் கோர்த்து கொடுத்தது அற்புதம், நினைவுகள் அனைத்தும் ரமலான் மாதத்தை சுற்றுகிறது, இருந்தாலும் மண் சட்டி கஞ்சியை மிஸ்பண்ணுகிறேன்

Yasir சொன்னது…

ரமளான் 30 நோன்பு பிடித்து ஒரு வெர்ச்சுவல் பெருநாளே கொண்டாடின திருப்தி உங்கள் எழுத்தை படித்ததும்....சிறந்த ஞாபக சக்தி அதனை தொகுத்து தரும் விதம் அப்பப்பா.....உங்களை வாழ்த்த வார்த்தை தேடினேன்..கூகுள் கூட உதவவில்லை.....அருமை சகோதரரே...ஆமா உங்க வயசு என்ன..??

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

alhamdulillah my age is only 36. All credits will go to the almighty Allah. May Allah bless all of us in his grace Aameen....

I will be back insha-allah.

MSM Naina Mohamed.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அனிமேஷன் காட்சிகளாக கோர்வையாக்கி கண்முன்னால் கொண்டு வந்திருப்பது அருமை ! இதுதான் MSM(n)க்கு கை(தட்டி)வந்த கலை...!

நல்ல எழுதினால் பாராட்டித்தானே ஆகனும் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நோன்பின் மாண்புகளையும் நிகழ்வுகளையும்
நூதனக் கவி வடிவில் அப்படியே நினைவூட்டி
அறுபது நாளைக்கு முன்பே அடிபிறலாமல்
அருமையாய் வடித்த நெய்னா வளர்க மேலும்!

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். நோன்பின் மான்பினையும், நம் மண்ணின் நடைமுறையையும் ஒருங்கே இணைத்து செம்மை மிகு படிப்பாக நைனாவினால் நையப்பட்ட இந்த பேரிழை! மிகவும் அழகான வேலைப்பாடுடன் மிளிர்கிறது.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

//பவுடர் போட்ட கேரம் போர்டில்
கருப்புவெள்ளையை சிகப்பு விரட்டும்
குழிக்குள் விழும் காய்களோ
குழந்தையாய் தொட்டில் உறங்கும்//

இந்த கேரம் போர்டின் முசீபத்தினால் எண்ணற்ற நம் மக்களின் அமல்கள் பாழாவது குறித்து,சகோ கவிதை புனைந்து வெளியிட்டால் நல்வாய் இருக்கும்.

பவுடர் போட்ட கேரம் போர்டில்
குழிக்குள் விழும் காய்களோ
நோன்பின் மாண்பறியா இவ்விளையாட்டால்,
கபுருக் குழியை நினைவுபடுத்தும்

என எழுத தோற்றுகிறது.

சகோ நெய்னா உங்களிடம் இன்ஷா அல்லாஹ் நிறைய எதிர்பார்க்கிறோம்.
--------------------

நோன்பு நேரத்தில் இவ்வாறு கேரம்,கிளித்தட்டு,வீண் பேச்சுக்கள் குறித்த விழிப்புணர்வுக்கு அதிரை நிருபர் நிறைய செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

crown சொன்னது…

'ஒருவனின்' அடிமை சொன்னது…
//பவுடர் போட்ட கேரம் போர்டில்
கருப்புவெள்ளையை சிகப்பு விரட்டும்
குழிக்குள் விழும் காய்களோ
குழந்தையாய் தொட்டில் உறங்கும்//

இந்த கேரம் போர்டின் முசீபத்தினால் எண்ணற்ற நம் மக்களின் அமல்கள் பாழாவது குறித்து,சகோ கவிதை புனைந்து வெளியிட்டால் நல்வாய் இருக்கும்.
--------------------------------------------------------------------
என் சகோதரரின் வேண்டுகோளுக்கு உங்கள் சார்பாய் நான் எழுதியவைதான் மேலே காண்பது தவறு இருப்பின் சுட்டி காட்டவும்.

crown சொன்னது…

crown சொன்னது…
கேரம் போர்ட் எனும் கேளிக்கை விளையாட்டு
குழிக்குள் விழுந்து கிடக்கும் காய்களைப்போல் நாளை நம் நிலைமை.
நேரம் போவதே தெரியாமல் ரமலானின் புனிதத்தை
புதைத்துவிட்டு, என்னா தான் கிடைக்கும்?
சுவர்கத்தின் கனியா?இல்லை அந்த காய்தான்.
விளையாட்டு விளைடாடும் பொழுது விளையாடு!
இல்லையெனில் விளையாட்டும் வினையாகும், அலைகழிக்கும் நல் வாழ்வை.
நன்மையெல்லாம் வீனாகும்.
சரி,சரியென தலையாட்டும் நாம் பின் விளையாட்டில்
களைகட்டும்.
இரவெல்லாம் பகலாய் நினைத்து
பாழாகும் நல் பொழுதெல்லாம். நாளை மஹ்சரில் கேள்விக்கு வினையாகும், நல் அமல் மட்டுமே துணையாகும்.
வீன் பொழுதெல்லாம் சுவர்கம் செல்லாமல் நம்மை நரகத்தில் தள்ளும் பகையாகும்.
காலம் வந்து சாட்சி சொல்லும். கவனம் கொள்வோம் மறுமை கவலை கொள்வோம்
இன்சாஅல்லாஹ் சுவனம் செல்வோம் ,
வாழ்வை வெல்வோம்.

Meerashah Rafia சொன்னது…

இரண்டு மாதத்திற்கு முன்னாடியே நோன்புக்கு டிக்கட் போட்டாச்சு..இனி எழுத்து வடியில் இருக்கும் இவைகளை எண்ணிக்கொண்டே காலம் கடத்தி விமானத்தில் காலடி வைக்கவேண்டியதுதான்.

msm(m)

sabeer.abushahruk சொன்னது…

அருமையான வர்ணனை. ஊர் நினைவை வர்ணிப்பதில் சகோ நெய்நாவுக்கு நிகரில்லை.

மிகவும் ரசித்தது:

//குழிக்குள் விழும் காய்களோ
குழந்தையாய் தொட்டில் உறங்கும்//

//வாடாவில் புதையுண்ட இறாலை
கண் பார்வை பெயர்த்தெடுக்கும்//