Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழ்க்கையின் வலக்கரம்.. ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | February 15, 2012 | , , , ,

புன்னகைத்துக் கொண்டே
புலர்ந்தது பொன்நாள் - தன்னை
அலங்கரித்துத் தானே
அலர்ந்தது அந்நாள்!

கண்டு வந்த கனவுகளெல்லாம்
கைகூடிய சுபவேளை
கல்யாணச் சேலையில் நீ
கற்கண்டு ஆலை

துப்பட்டி முக்காட்டில்
தூயவள் உன்முகம்
மல்லிகைப் பூவுக்குள்
ரோஜாப்பூப் புதையல்

வலக்கரம் பிடித் தென்னோடு
வாழவந்த நாள் முதல்
வாழ்க்கையும் எனக்கு
வசப்பட்ட தென் னன்பே

கல்யாண நாள்முதல்
காதலித்து வாழும்நான்
காணாத பொழுதுகளில்
பேதலித்துப் போகின்றேன்

கணினி கருவறைபோல் என்
காதலைச் சேமித்தாய்
தந்தை எனும் மென்னுயிரைப்
பதிவிறக்கம் செய்து தந்தாய்

ஆணென்று என்னை
அறிவித்தது உன் தாய்மை
தேனென்று வாழ்வை
தெரிவித்தது உன் நேர்மை

விடிகின்ற நாட்களெல்லாம்
விழிக்கின்றேன் உன் முகத்தில்
விழிகளுக்குள் எனைவைத்து
வீடு விருத்தி செய்கின்றாய்

என் பெயரை அருமையாய்
யாராரோ அழைத்தாலும்
உன் மகளின் தந்தை என
நீ விளிக்க உளம் ரசிக்கும்

தடுமாறி விழநேர்ந்தால்
தாங்கிநீ தோள்தருவாய்
இடம் மாறி வாழும்போதும்
தொடராக உடன் வருவாய்

ஆலம் விழுதுகள் தொங்க
அகிலத்தில் விருட்சமானேன்
நீர் உரிஞ்சி நிரம்பத் தரும்
வேர் அன்றோ நீ எனக்கு

கவலைகள் எத்தனையோ
கனம்கொண்டு அழுத்தினாலும்
கவனமாய்க் கரை சேர்த்த
கப்பலன்றோ நீ எனக்கு

மேக மெனும் புனைபெயரில்
மிதக்கின்றது மழை
மின்னலில்லா இடியில்லா மென்
சாரலன்றோ நீ எனக்கு

வார்த்தைகளைக் கூர் சீவி
வீழ்த்துகின்ற உலகினிலே
உயிரெடுத்து உடுத்தி வைத்த
கவசமன்றோ நீ எனக்கு

உன்னைக் கைதுசெய்து
உளச்சிறையில் அடைத்து வைத்தேன்
கைதியின் ராஜ்ஜியம்தான்
காலமெல்லாம் நடக்கிறது

உலகைப் படைத்தவனே எனக்கு
உன்னையும் கொடுத்தான்
அன்னையைத் தவிர்த்த உலகில்
உன்னை யார் அன்பில் வெல்ல?

காலங்கள் கடந்து போகும்
கனவெல்லாம் காரியமாகும்
கண்மூடும் கனம் வரை-உன்
கைகோர்த்து நான் நடப்பேன்!

-சபீர்

25 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேற்று என்றொரு நாள் !
நினைவில் இல்லை !

அதற்கு
நான் பொறுப்பல்ல..

கைக்குள் அடங்கும்
கவிதை கேட்டேன்
கை(க்கு) பிடித்ததை
கவிதை யாகியதே !

என்னமோ காக்கா...
இன்னுமா இப்படி,
இவ்வவு நேர்த்தியாக
வசப்படுகிறது வார்த்தைகள்

மீண்டும்....

நேற்று என்றொரு நாள் !
நினைவில் இல்லை !

அதற்கு
நான் பொறுப்பல்ல..

Yasir said...

அன்பு,காதல்,ரம்மியம்,ரசனை,தாலாட்டு,இனிமை,மகிழ்ச்சி,புதுமை போன்ற அனைத்தையும் கலந்து குடித்த உணர்வு உங்கள் கவிதையை படித்தவுடன்....ஒவ்வொரு வரிகளும் உளிகொண்டு செதுக்கப்பட்டு இருக்கின்றது......அருமை காக்கா...வாழ்த்துக்கள்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\புன்னகைத்துக் கொண்டே
புலர்ந்தது பொன்நாள் - தன்னை
அலங்கரித்துத் தானே
அலர்ந்தது அந்நாள்!//

மிக அருமையான வரி எக்சலன்ட் சபீர் காக்கா அனைத்து வரிகளுமே சூப்பர்....கலக்கல் கவிதை

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சபீர் காக்கா(கவிவேந்தன்) நலமா? நலம் என்பதை இக்கவிதையே பகருவதால் நான் பதறாமல் படிக்கின்றேன் கவிதை வைர வரிகளை( மனைவியை வைரவங்கதான் அதிகம்- வைராங்க=திட்டுறாங்க). இன்னும் நீங்கள் இளமையாகவும், இன்பமாகவும் இருக்க காரணம் உங்கள் வலக்காரம் உங்களை நீங்கா அனுபொழுதும் அருகில் இருப்பதால் அல்ஹம்துலில்லாஹ். மனைவி அமைவதெல்லாம் அல்லாஹ் கொடுத்தவரம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//crown சொன்னது…//

நீ இப்போ எங்கே(டா)ப்பா இருக்கே ?

அங்கேயும் ஏதாவது நெட்வொர்க் முடியுமான்னு பார்க்கிறேன்... !

சேக்கனா M. நிஜாம் said...

“அழகி”ய வர்ணனை !

வாழ்த்துகள் கவி சகோ. சபீர் அவர்களுக்கு

Anonymous said...

தம்பி சபீர் அவர்களே!

இந்த கவிதை இளைஞர்களுக்கு மட்டும். எங்கள் ரோஜாப்பூவெல்லாம் வாடி நீண்டநாள் ஆகிவிட்டது.

இவ்வளவும் எழுதியும் நீங்கள் ஏன் பூண்டு உரித்துகொடுக்கவில்லை என்பதே என கேள்வி.

உங்களின் பேனாவை கொஞ்சம் தர முடியுமா? அ.நி. நெறியாளரிடம் சொல்லி அதற்கு ஒரு தங்கத்தொப்பி அணிவிக்க வேண்டும்.

இபுராஹீம் அன்சாரி

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


//// ரோஜாப்பூப் புதையல்
வசப்பட்ட தென் னன்பே
பேதலித்துப் போகின்றேன்
பதிவிறக்கம் செய்து தந்தாய்
தெரிவித்தது உன் நேர்மை
வீடு விருத்தி செய்கின்றாய்
நீ விளிக்க உளம் ரசிக்கும்
தொடராக உடன் வருவாய்
வேர் அன்றோ நீ எனக்கு
கப்பலன்றோ நீ எனக்கு
சாரலன்றோ நீ எனக்கு
கவசமன்றோ நீ எனக்கு
காலமெல்லாம் நடக்கிறது

உன்னை யார் அன்பில் வெல்ல?
கைகோர்த்து நான் நடப்பேன்!///

சபீர் !
அன்பு மனைவிக்கு ஓர் அழகிய
கவி மாலையை கோர்த்துள்ளாய்!
வாழ்த்துக்கள்!

Noor Mohamed said...

தம்பி கவி சபீர்,

கனவுகள் நினைவுகள் கலந்த கவிதைகள். இல்லறமே நல்லறமாய் இன்புற்று வாழும் வரிகள். வாழ்த்துக்கள்.

ZAKIR HUSSAIN said...

அலர்ந்தது= அப்டீனா என்ன?...வர வர தமிழ் டிக்சனரி பார்க்கிற தமிழ் லெ எழுத ஆரம்பிச்சுட்டே...[ இல்லெ நான் தான் ரொம்ப பேக்வேர்டா இருக்கிரேனா?]

கவிதையோடு மல்லிகைப்பூ படம் ...சூப்பர் செலக்சன்.

உன் தமிழில் கொஞ்சம் 'ஆன்டி ஆக்சிடன்" கலந்து இருக்கிறாயா?....வயதானால் வரும் சோம்பேறி கலைந்து புது ரத்தம் தருகிறது தமிழ்.

Unknown said...

எதை சொல்ல ?, எதை விட ?

அனைத்தும் இதில் இணைத்துள்ள

மல்லிகை சரம் போல் மனதை

கொள்ளை அடிக்கின்றன

அவ்வளவு பூவாச(க)ங்கள் .

KALAM SHAICK ABDUL KADER said...

//ஆணென்று என்னை
அறிவித்தது உன் தாய்மை
தேனென்று வாழ்வை
தெரிவித்தது உன் நேர்மை//

சந்தத்தில் சிந்திக்கும்
சந்தனப்பா தந்தீர்
மனைவியெனும் துணைவியின்
நினைவில் வாழும் சபீர்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாழ்க! இப்படியே வாழ்க்கை உள்ளவரை!!

நேசங்கொள்ள யாராலும் முடியும்!
நேர்த்தியான அழகு மல்லிகையாய் கோர்த்தெடுக்க உங்களால் மட்டுமே முடியும்!!

செமெ சூப்பர் க(வி&)லை காக்கா!

உங்க மகளின் உம்மாவோடு என் மகளின் உம்மா சிநேகிதம் கொள்ள வழி கிடைக்குமா?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சபீர் காக்காவின் வாடாத மல்லிகையின் வாசனை வார்த்தைகளை நுகர்வதற்கு காலதாமதம் மூக்கு அடைப்பட்டதால்.

// அன்பு,காதல்,ரம்மியம்,ரசனை,தாலாட்டு,இனிமை,மகிழ்ச்சி,புதுமை போன்ற அனைத்தையும் கலந்து குடித்த உணர்வு உங்கள் கவிதையை படித்தவுடன்....ஒவ்வொரு வரிகளும் உளிகொண்டு செதுக்கப்பட்டு இருக்கின்றது//

வாசனை மயக்கத்தில் கருத்துச்சொல்ல முடியாமல் திணறிய எனக்கு வடிவமைத்து தந்த சகோ யாசிருக்கு வாழ்த்துக்கள்.

எம்.ஹெச்.ஜே சொன்னது.

// உங்க மகளின் உம்மாவோடு என் மகளின் உம்மா சிநேகிதம் கொள்ள வழி கிடைக்குமா?//

எம்.ஹெச்.ஜே மகளின் உம்மா நினைத்தால் வழிதர மறுக்கும் வழிகூட சிநேகிதத்தால் திக்கு முக்காடிவிடும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கவி காக்கா,

எனக்கு ஒரு டவுட்..

இப்படி எல்லாம் கவிஐஸ் வைத்தாலும் நம் பேச்சு எடுபடுமா?

என்னத்தை கிழிச்சியே என்ற கவிதையை திரும்ப வாசிக்க வேண்டிவருமா?

http://adirainirubar.blogspot.com/2012/02/blog-post_02.html

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்ல கவிதைகளை இரசித்து மகிழும் அதேவேளை, புனிதங்களைப் பொதுவில் வைப்பதில் எனக்கு எதிர்க் கருத்துண்டு.

ஸாரி கய்ஸ்!

அப்துல்மாலிக் said...

நிச்சயம் மணவாழ்வு சிறப்பாக இல்லையெனில் இது மாதிரி வரிகள் கொட்டுவதும் இல்லை, மாஷா அல்லாஹ் இந்த வரிகள் ஒவ்வொன்றும் வைர வரிகள், இல்ல வாழ்வின் சிறப்பை விளக்கும் வரிகள், உங்க இளமைக்கு இந்த கவிதையும் ஒரு எ.கா. அருமை காக்கா

அப்துல்மாலிக் said...

வார்த்தைகளைக் கூர் சீவி
வீழ்த்துகின்ற உலகினிலே
உயிரெடுத்து உடுத்தி வைத்த
கவசமன்றோ நீ எனக்கு//

வேறு யார்தான் செய்வார் நண்பனையும், பெற்றோரையும், மனைவியையும் தவிர்த்து

//உன்னைக் கைதுசெய்து
உளச்சிறையில் அடைத்து வைத்தேன்
கைதியின் ராஜ்ஜியம்தான்
காலமெல்லாம் நடக்கிறது//

மதுர ஆட்சியா #@#@#@

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கவிதையைக் கண்டதும் ஒவ்வொரு வரியும் ரொம்பப் பிடித்துப் போகவே,
உடனே ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு போனில் என் வலதுக்கரத்திடம்
நான் படித்துக் காட்டவும் வலக்கரம் பூரிச்சுப்போச்சு.என்னமோ,நானே
எழுதிய நிணைப்பு(தாள்லே எழுதுனது நான்தானே)..........

Anonymous said...

Attn>: Jameel kaakka:

காக்கா,

வ அலைக்குமுஸ்ஸலாம்.

“மணவாழ்க்கைச் சிறப்பக அமைய கீழே உள்ளதுபோல் வாழுங்கள்” என்று பொதுப்படையாகச் சொல்லி விடத்தான் நினைத்தேன். “இதெல்லாம் சாத்தியமா?” என்று கடமைக்காக வாழும் யாரும் கேட்டுவிடக்கூடாதே என்றுதான் நானே என் வாழ்க்கையின் தோரணையை முன்னிருத்தி தன்மையில் நின்று முன்னிலைக்கு எழுதி முடித்தேன்.

கீழே மூன்றாம் ஆளாய் நின்று “பொது”வாக மாற்ற முனைந்திருக்கிறேன். இது அகத்துப்பால் எனினும் இதைவிட நாசுக்காகச் சொல்லும் திறன் எனக்கில்லை. நீங்கள் சோலியாக இருந்ததால் முதலிலேயே கொடுத்து திருத்தி வாங்க நேரமின்றிப் போனது. அதனாலென்ன? நேரம் கிடைத்தால் திருத்திக் கொடுங்கள் காக்கா. மாற்றிப் பதிகிறேன்.

வஸ்ஸலாம்.

வாழ்க்கையின் வலக்கரம்

புன்னகைத்துக் கொண்டே
புலர்ந்தது பொன்நாள் - தன்னை
அலங்கரித்துத் தானே
அலர்ந்தது அந்நாள்!

கண்டு வந்த கனவுகளெல்லாம்
கைகூடிய சுபவேளை
கல்யாணச் சேலையில்
கற்கண்டு ஆலை

துப்பட்டி முக்காட்டில்
தூயவள் மணமகள்
மல்லிகைப் பூவுக்குள்
ரோஜாப்பூப் புதையல்

வலக்கரம் பிடித் துடன்
வாழவந்த நாள் முதல்
வாழ்க்கையும் அவர்கட்கு
வசப்பட்டது மெய்யன்பால்

கல்யாண நாள்முதல்
காதலித்து வாழுமவர்
காணாத பொழுதுகளில்
பேதலித்துப் போகின்றனர்

கணினி கருவறைபோல்
காதலைச் சேமித்து
தந்தை எனும் மென்னுயிரைப்
பதிவிறக்கம் செய்து தருவாள்

ஆணென்று அவனை
அறிவிப்பது அவள் தாய்மை
தேனென்று வாழ்வை
தெரிவிப்ப தவள் நேர்மை

விடிகின்ற நாட்களெல்லாம்
விழிக்கின்றான் அவள் முகத்தில்
விழிகளுக்குள் அவனை வைத்து
வீடு விருத்தி செய்கின்றாள்

அவன் பெயரை அருமையாய்
யாராரோ அழைத்தாலும்
தன் மகளின் தந்தை என
அவள் விளிக்க அவன் ரசிப்பான்

தடுமாறி விழநேர்ந்தால்
தாங்கித் தோள்தருவாள்
இடம் மாறி வாழும்போதும்
தொடராக உடன் வருவாள்

ஆலம் விழுதுகள் தொங்க
அகிலத்தில் விருட்சமானால்
நீர் உரிஞ்சி நிரம்பத் தரும்
வேர் அன்றோ அவள் உனக்கு

கவலைகள் எத்தனையோ
கனம்கொண்டு அழுத்தினாலும்
கவனமாய்க் கரை சேர்த்த
கப்பலன்றோ அவள் உனக்கு

மேக மெனும் புனைபெயரில்
மிதக்கின்றது மழை
மின்னலில்லா இடியில்லா மென்
சாரலன்றோ அவள் உனக்கு

வார்த்தைகளைக் கூர் சீவி
வீழ்த்துகின்ற உலகினிலே
உயிரெடுத்து உடுத்தி வைத்த
கவசமன்றோ அவள் உனக்கு

அவளைக் கைதுசெய்து
உளச்சிறையில் அடைத்து வைத்தான்
கைதியின் ராஜ்ஜியம்தான்
காலமெல்லாம் நடக்கிறது

உலகைப் படைத்தவனே
அவளைஉம் கொடுத்தான்
அன்னையைத் தவிர்த்த உலகில்
அவளை யார் அன்பில் வெல்ல?

காலங்கள் கடந்து போகும்
கனவெல்லாம் காரியமாகும்
கண்மூடும் கனம் வரை-அவள்
கைகோர்த்தே நீயும் நட!

சபீர்

sabeer.abushahruk said...

ஜாகிர்: காலை விடிந்தது – சாதரணமானது
             பொழுது புலர்ந்தது – இலக்கிய சாயல் கலந்தது
             அன்று அலர்ந்தது – அன்று மலரைப்போல அலர்ந்தது…மலர்ந்தது! “அன்றலர்ந்த மலர்” கேள்விப்பட்டதில்லே? கவிதையாக்கும்!
 
கிரவுன்: உங்கள் வருகை எப்போதும் சந்தோஷமானது. நலமாயிருக்கிறேன். நீங்கள் குடும்பத்தோடு நலமாயிருக்க என் து ஆ.

எம் ஹெச் ஜே: இந்த அறிமுகத்தின் தொடர்ச்சி அந்த வழியாகத்தான் நீளும் இன்ஷா அல்லாஹ்!
 
மேலும், வாசித்து கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் குறிப்பாக அபு இபுறாகீம், யாசிர், இர்ஃபான், கிரவுன், சேக்கனா நிஜாம், இபுறாகீம் அன்சாரி காக்கா, அலாவுதீன், wuuர் முஹம்மது காக்கா, அப்துர்ரஹ்மான், கவியன்பன், எம் ஹெச் ஜே, எல் எம் எஸ். ஏ, தாஜுதீன், ஜமீல் காக்கா, அப்துல் மாலிக், ZAEISA ஆகிyooருக்கு என் நன்றி.
 

sabeer.abushahruk said...

ஒரு பதிவு எழுதிவிட்டு அதற்கான பின்னுட்டங்களை வாசித்துவிட்டு ஓர் ஏற்புரையில் நன்றியும் சொல்லி மேற்கொண்டு உரையாடி முடிப்பது மனசுக்கு ரும்ப சுகமான ஒன்று.
 
வழக்கம்போலவே கவிதை என்று வந்துவிட்டால் கருத்திடும் சகோதரர்களும் மிகவும் ரசிக்கத்தக்க வகையிலேயே எழுதுகின்றனர். சந்தோஷமாக இருக்கின்றது.
 
மற்ற உறவுகளைச் சொல்லும்போது கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் ஏதாவது காரணங்களைச் சொல்லி தப்பித்துக்கொள்ளலாம்.  ஆனால், கணவன் மனைவி உறவு என்பது மிகவும் நாசூக்கானது, காதல் கலக்காமல் சொல்வது அவ்வளவு ஒன்றும் சுலபமில்லை.  அத்துடன், இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்ல விழையும்போது உதாரணம் காட்டி விளக்குவதே மிகவும் எளிது.

எடுத்துக்காட்டுகள் கொடுத்துச் சொன்னால் விளங்குவது சுலபம்.  எனவேதான் என்னையே எடுத்துக்காட்டினேன்.

 
என் வாழ்நாளில் நான் கண்ட பல ஜோடிகள் அற்ப காரணங்களுக்காக பிரிந்து போகும்போது, பல ஜோடிகள் ஒன்றி, விட்டுக்கொடுத்து, புரிந்துகொண்டு, சந்தோஷமாக வாழ்ந்து ‘கட்டுவதைக்’ கண்டிருக்கிறேன், கண்டும் வருகிறேன்.  ‘அதைப்போலத்தான் வாழனும்’ என்று ஓர் உத்வேகம் தோன்றும். அப்படியே வாழ்ந்தும் வருகிறேன்.
 
சொல்லிச் சென்றால் மட்டும் போதாது சகோதரர்களே, சொல்வதுபோல் வாழ்ந்தும் காட்டவேண்டும். குறைந்தபட்சம் முயற்சியாவது செய்தல் வேண்டும்.  வரலாற்றைப் பாருங்கள். சொன்னவர்கள் பின்னாலல்ல, சொன்னதுபோல் வாழ்ந்து காட்டியவர்கள் பின்னால்தான் உலகம் சென்றது.   “ஊருக்குத்தான் உபதேசம்” எனும் நிலை வெற்றியைத் தாராது.
 
ஜமீல் காக்காவின் பின்னூட்டம் பார்த்ததும் “வரம்பு மீறிவிட்டோமோ” என்கிற அச்சம் மேலிட்டது. மீண்டும் மீண்டும் வாசித்ததில் எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை.  சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவன்தான் நான்.  அதுவும் காக்கா சொன்னால் மொத்தப் பதிவையுமே திருப்பிப் பெற்றுக்கொள்ளுமளவுக்கு அவர்களின்பால் மரியாதை உள்ளவன் நான்.
 
சுறுக்கமாக:
 
தம்பதியரே
வாழுங்கள்
நன்றாக சிறக்க வாழுங்கள்
எடுத்துக்காட்டாய் வாழுங்கள்
வாழ்க்கையை ரசனையோடு வாழுங்கள்
பொருளாதாரக் கணக்கீடுகளுக்குள் முடக்காதீர்கள்
எனினும்
எதிலும்
வரம்பு மீறாதீர்கள்.
 
வஸ்ஸலாம்.
 
 
 
 
 

அதிரைக்காரன் said...

மனைவியைக் காதலிப்பது எப்படி? என்று கவிதை எழுத வேண்டுமெனில் நம் சொந்த அனுபவத்தை எழுதுவதே எதார்த்தமும் பாதுகாப்பும். அந்த வகையில் சபீர் காக்காவின் கவிதை அகப்பொருள் பேசினாலும் பதிவை நீக்கும்வகையில் தவறல்ல.

(காதல் தம்பதியருக்கு 'கண்ணேறு' பட்டுவிடக்கூடாதே என்ற நல்லெண்ண நடவடிக்கையே ஜமீல் காக்காவின் அறிவுரை என்று நினைக்கிறேன் :))

//ஆணென்று என்னை அறிவித்தது உன் தாய்மை// இந்த வரிகள் சிலருக்கு வலி ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதால் தவிர்க்கலாம் என்பது என் அன்பு கலந்த கோரிக்கை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவிஞரின் கருத்திலிருந்து......

// நானே என் வாழ்க்கையின் தோரணையை முன்னிருத்தி தன்மையில் நின்று முன்னிலைக்கு எழுதி முடித்தேன்.//

அது தான் நல்லாயிருக்கு. படிக்கும் போது உங்களை பற்றி மாஸா அல்லாஹ் 'ன்னு சொல்ல வைத்த தன்னிலையாக்கம்!


//தொடர்ச்சி அந்த வழியாகத்தான் நீளும் இன்ஷா அல்லாஹ்!//

இன்சா அல்லாஹ்.

புல்லாங்குழல் said...

/துப்பட்டி முக்காட்டில்
தூயவள் உன்முகம்
மல்லிகைப் பூவுக்குள்
ரோஜாப்பூப் புதையல்./ மிகவும் ரசித்த வரிகள். என் மனிவிக்கும் காட்டினேன். இனிமையான கவிதை என்றாள்.

/ஆணென்று என்னை
அறிவித்தது உன் தாய்மை/ என்ற வரிகளை மட்டும் மாற்றி எழுதேன் நண்பா!

உ-ம்

தந்தை என்று என்னை
அறிவித்தது உன் தாய்மை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு