Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம் அ.மார்க்ஸ் கோ.சுகுமாரன் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2012 | , , , ,


கோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஒன்பதரை ஆண்டு காலம் கோவை சிறையில் பிணையின்றி அடைக்கப்பட்டு இறுதியில் குற்றமற்றவர் என சென்ற ஆகஸ்ட் 1, 2007ல் விடுதலையான கேரள ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’த் தலைவர் அப்துல் நாசர் மதானி அவர்கள் மீண்டும் ஆக்ஸ்ட் 17, 2012ல் பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டது ஒரு சிலருக்கு நினைவு இருக்கக்கூடும். கடும் நோய் வாய்ப்பட்டிருக்கும் அவரைப் பிணையின்றி கர்நாடக அரசும் கடந்த மூன்றாண்டுகளாகச் சிறையில் அடைத்துள்ளது. பெங்களூரு பராப்பன அக்ரகாரத்தில் புதிதாகக் கட்டபட்டுள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் இருக்கும் அவரை இன்று (17.09.2012) சந்தித்தோம். எங்கள் இருவரைத் தவிர நகரி பாபையா, ஆர்.ரமேஷ், ஷோயப், முகம்மது காக்கின்ஜே (பெங்களூரு), ரெனி அய்லின், ‘தேஜஸ்’ நாளிதழ் ஆசிரியர் முகமது ஷெரீப் (கேரளா) ஆகியோரும் வந்திருந்தனர்.

கர்நாடகச் சிறைகளில் கைதிகளைப் பார்ப்பதற்கான சடங்குகளும், கெடுபிடிகளும் அதிகம். ஏற்கனவே இருமுறை மைசூர் சிறையில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியைச் சந்தித்த அனுபவம் எங்களுக்குஉண்டு. எல்லாச் சடங்குகளும் முடிந்து சிறையின் முதன்மை வாயிலுள் நுழையும் போது ஒரு கணம் நிறுத்தி நம் கை ஒன்றில் ஒரு முத்திரை பதிப்பார்கள். அனேகமாக வேறெந்த மாநிலச் சிறைகளிலும் இப்படி ஒரு பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த முத்திரையைக் கைதியைப் பார்த்துவிட்டு வரும் வரையில் நாம் அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். சிறைக்குள் நுழையும் போது போடப்படும் இந்த முத்திரை நமக்கு சோழர் காலத்தில் கட்டாயமாகப் பிடித்து வரப்பட்டு தேவதாசிகள் ஆக்கப்பட்டவர்களுக்கும், நாசி சித்திரவதைக் கூடங்களில் யூதர்களுக்கும் இடப்பட்ட முத்திரைகளை நினைவூட்டுவது தவிர்க்க இயலாது.

மைசூர் சிறையைக் காட்டிலும் பராப்பன அக்ரகாரச் சிறையில் கெடுபிடிகள் அதிகம். சிறைகள் நவீனப்படுத்தப்பட படுத்தப்பட கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் (surveillances) அதிகமாகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி, நம்மூர் புழல் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சிறைகள் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள். பராப்பன அக்ரகாரச் சிறையில் கைதிகளைப் பார்ப்பதற்கு முன்பானசடங்குகளை முடிக்க சுமார் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். சிறைக் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் நமது பேராசிரியர் பாபையாவின் மாணவராக இருந்ததால், சற்றுக் கூடுதல் சலுகை அளிக்கப்பட்டும் கூட, எங்களுக்கும் சடங்குகளை முடிக்க மூன்று மணி நேரமானது. க்யூவில் நின்று மனுக் கொடுத்து நமது இடது பெருவிரல் ரேகை, முகம் அனைத்தையும் நுண்ணிய கேமரா ஒன்றின் முன் அமர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும், நமது தொலைபேசி எண் உட்பட முக்கிய விவரங்களையும் அத்துடன் பதிந்து ‘ப்ரின்ட் அவுட்’ ஒன்றைத் தருவார்கள். இதற்கான இடத்தில் க்யூவில்காத்திருந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதைதைக் கண்டோம். 

2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி நமது நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.4 சதம். ஆனால்,சிறைச்சாலைகளில் அவர்களின் பங்கு 50 சதத்திற்கும் மேல் என்பது நினைவுக்கு வந்தது. விரல் ரேகை,முகப்பதிவு கொண்ட தாள்களை சிறை வாசலில் கொடுத்து விட்டு மீண்டும் காத்திருந்தால் வெகு நேரம் கழித்துச் சிறை அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின் நமக்கு அழைப்பு வரும். கண்காணிப்பாளர்,பாபையாவின் மாணவர் என்பதால் நாங்கள் சற்று விரைவாக அழைக்கப்பட்டதோடு, கண்காணிப்பாளரின் அறையிலேயே ஒருபுறம் அமர்ந்து சற்று ஆறஅமரப் பேசவும் முடிந்தது.

நாங்கள் உள்ளே நுழைந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் அப்துல் நாசர் மதானியைச் சக்கர நாற்காலியில் தள்ளி வந்தனர். ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன் வீசிய குண்டு வீச்சில் வலது காலை இழந்தவர் மதானி. வழக்கு நடந்துக்கொண்டிருந்த போது குண்டு வீசியவன் வந்து அவாரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளான். அவனை மன்னித்ததோடு அவன் மீதான தனது குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று வழக்கு தள்ளுபடி ஆவதற்குக் காரணமாக இருந்தவர் மதானி.

தூய வெள்ளுடையில் மலர்ந்த முகத்துடன் அருகில் நெருங்கிய மதானியைக் கண்டவுடன் அனைவரும்எழுந்து நின்றோம். துரும்பாய் இளைத்து இருந்தாலும் அவரது கண்களில் ஒளி குன்றவில்லை.ஒவ்வொருவராக அருகில் சென்று அவரது கைகளைப் பற்றி அறிமுகம் செய்துக் கொண்டோம்.கண்காணிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்த பாபையா எழுந்தோடி வந்தார். மதானியின் அருகில்வந்தவுடன் அவருடைய கண்கள் கலங்கின. கன்னங்கள் துடித்தன. அப்படியே அவரை மார்புறத் தழுவிக் கொண்டார். பார்த்திருந்த அனைவருக்கும் நெஞ்சு இரும்பாய் கனத்தது. மனித உரிமைப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சிறை அனுபவித்தவர் பேராசிரியர் பாபையா.

மார்க்ஸ், சுகுமாரன் என்று நாங்கள் பெயர்களைச் சொன்னவுடன் மதானி உடனடியாக எங்களை நினைவுகூர்ந்தார். கோவைச் சிறையில் இருந்த போது சுகுமாரன் அவரைச் சந்தித்துள்ளார். கோவைச் சிறையில் இருந்த அவரை உடல் நலம் கருதி பிணையில் விடுவிக்க வேண்டுமென நாங்கள் முன்னின்று தமிழ் எழுத்தாளர்களிடம் கையொப்பம் பெற்று வெளியிட்ட அறிக்கையை மதானி இருமுறை நினைவுகூர்ந்தார். அறிக்கையில் கலைஞரின் மகள் கனிமொழியும்கையெழுத்திட்டிருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னார். பிரபஞ்சன், சாரு நிவேதிதா, வெளி ரங்கராஜன்,சுகிர்த ராணி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.

அடுத்த ஒன்றைரை மணி நேரமும் மெல்லிய குரலில் மதானி பேசிக் கொண்டிருந்தார். மதானி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். சுற்றிலும் நாற்காலிகளை நெருக்கமாகப் போட்டு நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். தற்போது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து மிக விரிவாக சொன்னார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவாக விளக்கினார். பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேர்களில் 31வது குற்றவாளியாக அவர் இணைக்கப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட முக்கியமானவர்களில் ஓரிருவரை முன்னதாகத் தனக்குத் தெரியும் என்பதைத் தவிர இந்தக் குற்றச் செயலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், இப்படியான ஒரு செயல் நடக்கப்போகிறது என்பது தனக்குத் தெரியாது என்பதையும் விரிவாக விளக்கிச் சொன்னார்.

விசாரணையில் இருக்கும் வழக்கு என்பதால் எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை. எனினும் ஒன்றை மட்டும் இங்கு சொல்லியாக வெண்டும். முக்கிய குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தடியண்டவீடு நசீர் தங்களுடைய சதி குறித்து மதானிக்குத் தெரியுமெனக் கூறியுள்ளதாதாக விசாரணையின் போது மதானியிடம் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளனர். “நசீரை ஒருமுறை என்னிடம் அழைத்து வாருங்கள். உங்கள் முன் நான் அவரைக் கேட்கிறேன்” என மதானி வற்புறுத்தியுள்ளார். தயங்கிய புலனய்வுத்துறையினர் இறுதியாக வேறொரு சிறையில் இருந்த நசீரை முகமூடியிட்டு அழைத்து வந்து நிறுத்தியுள்ளனர். புனாய்வுத்துறையினர் முன்னிலையில் மதானி கேட்ட போது தான்அப்படிச் சொல்லவில்லை என நசீர் பதிலளித்ததோடு, “உங்களை அரசியலில் இருந்து விலகச் சொல்லிப் பலமுறை எச்சரித்தேனே நான்” என்றும் கூறியுள்ளார்.

குற்றமற்ற என்னை ஏன் இப்படித் திரும்பத் திரும்பக் கொடுமைப் படுத்துகிறீர்கள் என மதானி கேட்டபோது விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒரு கணம் அமைதியாய் இருந்தபின் இப்படிச்சொல்லியுள்ளார். “இந்தப் பிறவியில் நீர் ஏதும் குற்றம் செய்யாதிருக்கலாம். போன பிறவியில் செய்திருப்பீர். அந்தப் ‘பூர்வ கர்மா’வின் பலனை இப்போது அனுபவிக்கிறீர்.”

வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டால் கோவை வெடிகுண்டு வழக்கில் அவர் எப்படிக் குற்றமற்றவர் என்று விடுதலைச் செயப்பட்டாரோ அதேபோல் இதிலும் விடுதலை செய்யப்படுவது உறுதி. ஆனால்,பராப்பன அக்ரகாரச் சிறை வளாகத்தில் இருந்து செயல்படும் தனிநீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்கத் தயாராக இல்லை. குற்றம்சட்டப்பட்ட பலரும் வெவ்வேறு சிறைகளில் இருப்பதைக் காரணம் காட்டி விசாரணையை இழுத்தடிக்கிறார்கள்.

அதேநேரத்தில் படிப்படியாக மோசமாகிக் கொண்டிருக்கும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு,அவரைப் பிணையில் விடுதலைச் செய்ய அரசும், நீதிமன்றமும் தயாராக இல்லை. கடும் இருதய நோய், முற்றிய நீரிழிவு நோய், நீரிழிவினால் ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பு, முதுகுத்தண்டுத் தேய்வு என்பவற்றோடு, எல்லாவற்றுக்கும் மேலாகப் பெங்களூருச் சிறைவாசம் இன்று அவர் கண் பார்வையைப்பறித்துள்ளது. வலது கண் பார்வை முற்றிலும் பறிபோய்விட்டது. இடது கண்ணில் 20 சதப் பார்வைதான் எஞ்சியிருக்கிறது. நீரிழிவுனால் ஏற்பட்ட இந்த பார்வைக் குறைவுக்கு உரிய நேரத்தில் லேசர் சிகிச்சை அளித்திருந்தால இன்று அவர் பார்வை காப்பாற்றப்பட்டிருக்கும். துண்டாடப்பட்டு முழங்காலுக்கு மேல் எஞ்சியிருக்கும் அவரது வலது காலின் மேல்புறம் உணர்ச்சியற்றுப் போயுள்ளது. உள்ளே கடுமையான வலி. கேரளம் சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்தால் நிச்சயம் பலனிருக்கும் என அவர் நம்புகிறார். ஆனால், கர்நாடக அரசும், நீதிமன்றமும் அனுமதி அளிக்கவில்லை. 

உச்சநீதிமன்றம் வரை சென்று வேண்டிய போது பெங்களூரிலேயே ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உத்தரவு கிடைத்தது. 70 ஆயிரம் ரூபாய் அளவில் முடிய வேண்டிய சிகிச்சைக்கு அங்குள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவ மனை எட்டரை லட்ச ரூபாய் ‘பில்’ கொடுத்தது. ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டுமெனவும், ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை முழு சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த வைத்தியசாலை வலியுறுத்தியும் சிறை அதிகாரிகள் ஒருமுறை கூட அவரைப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை. உள்ளூர் மருத்துவமனை ஒன்றிற்குக் கண் மருத்துவத்திற்காக அனுப்பப்பட்ட போது, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அடுத்த நாள் அவரது வலது கண் பார்வை முற்றிலும் அழிந்து போனது.

இப்படி அவரது உடல் அவயவங்களை ஒவ்வொன்றாகச் சிறை வாழ்க்கை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மிக விரிவாக அவர் சொன்னார். மிக மிகச் சுருக்கமாகவே நாங்கள் இங்குக் குறிப்பிட்டுள்ளோம். கடைசியாக அவர் சொன்னது எங்கள் எல்லோரது கண்களையும் கசிய வைத்தது.

“எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை நோன்பு நாட்களில் குனிந்து தொழவும் என்னால் முடியவில்லை. ஆனால், அல்லாஹ்வின் அருளால் மன உறுதியை மட்டும் நான்இழக்கவில்லை. என் மனம் தளர்ந்துவிடவில்லை. உடல் உபாதைகளையும் கூடத் தாங்கிக்கொள்கிறேன். ஆனால் கண் பார்வை இழந்ததைவிடவும் என்னால் தாள முடியாத வேதனையாகஇருப்பது எனக்குள்ள மலச் சிக்கல்தான். சாப்பிட்டு இரண்டு நாளானாலும் மலம் கழிவதில்லை. திடீரென இரவு நேரங்களில் என்னை அறியமலேயே மலம் கழிந்துவிடுகிறது. அந்த நேரத்தில் என்னையும் என் படுக்கையும் என்னால் சுத்தம் செய்துக் கொள்ள முடிவதில்லை. இரவு நேரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் அதைச் செய்ய முடியாது. நகர வேண்டுமானால் எனது வலது செயற்கைக் காலைப் பொருத்திக் கொள்ள வேண்டும். தண்ணீரை எடுப்பது, கழுவுவது எதையும் தனியாகச் செய்ய முடியாது. இரவு முழுக்க அப்படியே கிடக்கவும் முடியவில்லை. இந்தக் கொடுமையைதான் என்னால் தாங்க முடியவில்லை.” 

அந்த அறையில் ஒரு கணம் இறுக்கமான அமைதி நிலவியது. நாங்கள் என்ன ஆறுதல் அவருக்குச் சொல்ல முடியும். நேரமாகிவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காகக் கண்காணிப்பாளர் ஒருமுறை அங்கு வந்து எங்களைப் பார்த்துப் புன்முறுவலித்துச் சென்றார். நாங்கள் புறப்படத் தயாரானோம்.

“நான் ஒன்பதரை ஆண்டுக் காலம் கோவைச் சிறையிலிருந்தேன். சிறையில் இருந்தது என்பதைத் தவிர எனக்கு வேறெந்தப் பிரச்சினையும் இல்லை. அதிகாரிகள் என்னிடம் அக்கறையுடன் நடந்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் என்னிடம் அக்கறையாக நடந்து கொண்டார்கள். சிறையில் நான் எதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. இங்கே எல்லாம் தலைக்கீழ். என்னுடைய ‘செல்’ அருகில் ஒரு பூனைக்குட்டிஇருக்கிறது. அதுவொன்றுதான் இங்கே காசு கேட்பதில்லை. இங்குள்ள ஊடகங்களும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் என்னைப்பற்றி மோசமாக எழுதுகின்றன.”

மெல்லிய குரலில் எல்லாவற்றையும் எளிய ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் மதானி. நாங்கள் எழுந்து நின்றோம். குனிந்து ஒவ்வொருவராக அவரைத் தழுவிக் கொண்டோம். நகர மன்மின்றி நகரத்தொடங்கிய போது அவர் குரல் எங்களை அழைத்தது “நீங்கள் வந்து சென்றது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் நாளை நடத்த உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லப் போகிறவை எனது சிகிச்சைக்கும், நான் பிணையில் விடுதலைப் பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை அந்தப் பயன் எனக்குக் கிடைக்காமலும் போகலாம். ஆனால் நீங்கள் வந்ததே எனக்குப் பெரும் பயன்தான். அல்லாஹ்வின் அருளால் நான் விடுதலையாகி வெளியே வந்தால்,என்னுடைய எஞ்சிய வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செலவிடுவேன். அவர்களோடு வாழ்ந்து மடிவேன்.”

மதானியின் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’, தலித், முஸ்லிம் ஒற்றுமையை முன்னெடுத்துப் பேசுகிற ஒன்று. அவரது நிறுவனங்களின் மூலம் பெரிய அளவில் தலித்கள் பயனடைகின்றனர்.

நாங்கள் படிகளில் இறங்கிக் கீழுள்ள பேரேட்டில் கையெழுத்திட்டோம். எங்களது செல்போன்களைப் பெற்றுக் கொண்டோம். கையிலுள்ள முத்திரை அடையாளத்தைக் கத்தி பொருத்திய துப்பாக்கியுடன் இருந்த காவலரிடம் காட்டிய பின் கதவு திறந்தது..

ஏதோவொரு கொண்டாட்டத்திற்காக ஒளி அலங்காரம் செய்வதற்கென சீரியல் விளக்குகள் சிறை வாசலில் வந்து இறங்கி இருந்தன. எதற்காக இருக்கும் என நாங்கள் சற்று வியப்புடன் நோக்கிய போது மிகப் பெரிய அலங்கரிக்கப்பட்ட ஒரு வண்ண விநாயகர் சிலையை சுமார் 10 கைதி வார்டர்கள் சுமந்துவந்து கொண்டிருந்தனர்,

நன்றி : 'மக்கள்உரிமை'
மின்னஞ்சல் பகிர்வு : முதுவை ஹிதயத்துல்லாஹ்

5 Responses So Far:

Yasir said...

மனம் கனக்கின்றது..கலிமாவை எற்றுக்கொண்ட ஒரே காரணத்துக்காக நம் சகோதர சகோதரிகள் படும் துன்பம் சொல்லி மயாது..அல்லாஹ் இவர்களுக்கு நீதான் உதவவேண்டும்...

sabeer.abushahruk said...

கன்னடிகள் பொதுவாகவே கபடதாரிகள்; சிறையில் இன்னும் மோசமான குத்தாக்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பொய் வழக்குகளால் வாழ்க்கையை பறிகொடுத்தவர்களின் கண்ணீர் கதை..

மதானி ஒரு கட்சி தலைவர் என்பதால் அவரின் சோகம் மட்டும் நமக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது, ஆனால் என்னற்ற ஜீவன்களின் சோகக் கதையை கேட்டால் நம் எல்லோருடைய இதயம் வெடித்துவிடும். வாழ் நாட்களில் பொய் வழக்குகளில் சிக்கியுள்ள ஒரு கோவை சிறைவாசி குடும்பத்தையாவது நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அநியாயம், குழப்பங்கள் செய்து கொண்டு இருக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கு வல்ல அல்லாஹ்வின் எச்சரிக்கை:
**********************************************************

நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான். (அல்குர்ஆன் : 2:212 )

அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் :2:171 )


எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் :2:98 )

இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் : 3:178 )




Iqbal M. Salih said...

வல்ல ரஹ்மான் முஃமின்களின் கஷ்டங்களை லேசாக்கி
வைப்பானாக. ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு