Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேறு பெற்ற பெண்மணிகள்... தொடர்கிறது - 16 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 10, 2012 | , ,

கண்டோம்; கட்டுண்டோம்!

(இப்போது நாம் ருகய்யாக்கள் இருவரைச் சந்திக்க இருக்கின்றோம்.  அவர்கள் இருவரும் இரு வேறு துருவங்களைச் சார்ந்தவர்கள்.  அவர்கள் முஸ்லிம்களைக் கண்டு, அவர்களின் மார்க்கமாகிய இஸ்லாத்தை ஆராய்ந்தார்கள்; அதில் கட்டுண்டார்கள்!)

இன்றிலிருந்து இருபதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது அது.  அப்போது நான் பதினாறு வயதுப் பெண்ணாக இருந்தேன். ஒரு நாள் நான் ரயிலில் நியூயார்க்குக்குப் பயணம் செய்துகொண்டிருந்தேன்.  எனது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணொருத்தி அணிந்திருந்த ஆடை என் இதயத்தில் புயலைக் கிளப்பிற்று.  அதாவது, அவளது அங்கங்கள் தெரியும்படி ஆடையணிந்திருந்தாள் என்று நினைக்கிறீர்களா?  அதுதான் இல்லை!

அவளை நான் எரித்துவிடுவதுபோல் எரிச்சலுடன் நோக்கினேன்.  அவளோ, தன் உடல் முழுவதையும் மறைத்து, ஒரு கறுப்புக் குப்பைப் பை (garbage bag) போன்று காணப்பட்டாள்.  நான் ஓரளவு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடம் கேட்டேன்:  “என்ன இது?”

அவள் அமைதியாகச் சொன்னாள்: “நான் ஒரு முஸ்லிம்!”

அதனைத் தொடர்ந்து, தான் பின்பற்றும் மார்க்கம் அப்படித்தான் பெண்கள் உடை அணியவேண்டுமென்று கட்டளையிடுவதாக அமைதியாக எனக்கு விளக்கினாள்.

முதலில் அவளது பதில் எனக்கு எரிச்சலைத் தந்தாலும், அவளது உறுதியான பேச்சும், அதற்குப் பின்னணியில் இருந்த அவளது மார்க்கப் பற்றும் சில நிமிடங்களிலேயே என்னைக் கவர்ந்தது!  சிறிது நேரத்தில், அவளிடத்தில் ஒரு புனிதத் தன்மை இருந்ததை உணரத் தொடங்கினேன்!

மென்மையான அவள் பேச்சும், அதைத் தொடர்ந்து அவள் முகத்தில் நிழலாடிய புன்முறுவலும் என்னை அடிமைப் படுத்தின என்றுதான் கூற முடியும்!

அதுவரை, ‘முஸ்லிம்’ என்பவர் யார்?  ‘இஸ்லாம்’ என்பது எது? என்றெல்லாம் எனக்குத் தெரியாது!  இருப்பினும், அப்போது அவள் கூறியதுதான் சரியென்று எனக்குத் தோன்றிற்று!

அக்காலத்தில் -சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்- முஸ்லிம்கள் என்று தம்மைக்  கூறிக்கொள்பவர்களைக் காண்பதே அரிது!  மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல், நான் சும்மா இருந்துவிட்டேன்.  ‘முஸ்லிம் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமா?’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன்.

நான் நியூயார்க்கில் வந்து இறங்கினேன்.  நான் நடந்து சென்ற வீதியில் சிலர் வித்தியாசமான தோற்றத்தில், ‘அத்தர்’ எனும் வாசனை எண்ணெயை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.  அவர்களைப் பற்றி விசாரிப்பவர்களுக்கு, தாம் ‘முஸ்லிம்கள்’ என்றும், ‘இஸ்லாம்’ பற்றிய தகவல்களை விளக்கிக்கொண்டும் இருந்தனர்.

புதிர் வயப்பட்ட நானும் அவர்களை நெருங்கி, அவர்கள் கூறியதைக் கேட்கத் தொடங்கினேன்.  அவர்கள் விற்றுக்கொண்டிருந்த ‘அத்தர்’ என்ற வாசனைப் பொருள் எனது வழக்கமான வாசனைப் பொருளுக்கு மாற்றமாகவும் புதுமையாகவும் இருந்தது.  இருப்பினும், நானும் காசு கொடுத்து ஒன்றை வாங்கினேன்.  அவர்கள் ஆண்களாயிருந்தாலும், அமெரிக்கப் பெண்ணான நான், தைரியமாக அவர்களின் வசிக்குமிடத்தைப் பற்றியும் வணங்குமிடத்தைப் பற்றியும் விசாரித்தேன்.  நியூயார்க்கின் புரூக்லின் (Brooklyn) வீதியின் பக்கம் எனக்கு வழி காட்டினர். என் கால்கள் அவ்வழியே நடந்தன!

அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் சிலர் இருந்தனர்.  அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.  அவர்கள் என்னைக் கனிவோடு வரவேற்றார்கள்!  காட்சிப் பொருளாக நோக்கவில்லை!  எனது புதுமையை அறியும் ஆர்வத்தைக் கண்டவுடன், அவர்கள் எனக்கு ‘இஸ்லாம்’ பற்றிய சில விளக்கங்களை அளித்தார்கள்.  கிருஸ்தவ மதத்தில் நான் அறிந்திருந்ததற்கு மாற்றமாக இருந்தன இஸ்லாமியக் கொள்கைகள்!

இயேசு கிறிஸ்து (ஈசா நபி) சிலுவையில் அறையப்படவில்லை என்ற குர்ஆனின் வாக்கு, என் இதயத்திற்கு இதமளித்தது!  அம்மனிதப் புனிதர் சிலுவையில் அறையப் பட்டார் என்ற கிருஸ்தவ மதத்தின் செய்தி, நான் சிறுமியாயிருந்தபோது என் இதயத்தைப் பிழிந்தது!

நியூயார்க்கின் இந்தப் புதிய அனுபவத்தின் பின், ஆறாண்டுகள் இஸ்லாத்தைப் பற்றிப் பல ஆய்வுகள் செய்து, அவற்றின் முடிவாக, என் வாழ்வின் மிகச் சிறந்த முடிவை எடுத்தேன்!  முஹம்மது நபியவர்களின் மகள்களுள் ஒருவரான ‘ருகய்யா’வின் பெயரைத் தேர்ந்தெடுத்து முஸ்லிம் பெண்ணானேன்!

இப்போது பெண்கள் யாரேனும் என்னிடம் இஸ்லாத்தைப் பாற்றிக் கேட்டால், 25 ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் நான் சந்தித்த அந்த முஸ்லிம் சகோதரி எப்படிப் புன்முறுவலுடன் விளக்கத் தொடங்கினாளோ, அந்த முன்மாதிரியைப் பின்பற்றி, இஸ்லாத்தை விளக்கும் பண்பையும் பயிற்சியையும் தகுதியையும் நான் பெற்றுவிட்டேன் என்பது மாபெரும் மாற்றமல்லவா?  அருட்பேறல்லவா?

(அடுத்து நாம் சந்திக்க இருப்பவர் இரண்டாவது ‘ருகய்யா’.)

எனது தாய் நாடு ஜப்பான்.  நான் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்டது அந்த மாற்றம்!  நான் இஸ்லாத்தைத் தழுவிவிட்டேன் என்ற உண்மையை வெளியிட்டபோது, என் தோழி அதிர்ச்சியுற்றாள்!  “அதெப்படி?  இஸ்லாத்தைப் பற்றி இழிவாகப் பேசியவள் அல்லவா நீ!?”  வியப்பின் எல்லைக்கே போனாள் அவள். 

ஜப்பானின் ‘கியோட்டோ’ நகரத்தில் பிறந்து வளர்ந்தவள் நான்.  என்னைச் சுற்றி புத்த மதத்தின் அடையாளங்கள்!  அந்தக் கோயில்களுக்குச் செல்வதில் எனக்கு அலாதிப் பிரியம்.  ஓர் ஆன்மீக அமைதியும், வாசனைப் பொருள்களின் சுகந்தமும், தூய்மையான சூழலும் என்னைக் கவர்ந்திருந்தன.  அப்படிப்பட்ட சூழலிலிருந்து வந்ததால், ஒரு வேளை, நான் இஸ்லாத்தின் தூய்மையாலும் கவரப்பெற்றிருக்கலாம்.

என்றாலும், மதம் பற்றிய எனது கருத்து, வேறுபட்டதாக இருந்தது.  அதாவது, பலவீனர்கள் தஞ்சமடைந்த இடம் மதம் என்று எண்ணினேன்.  எனவே, அவர்களைப் பார்த்துப் பரிதாபப் பட்டேன்.

ஆனால், உண்மை யாது?  கடவுளிடம் கேட்பது எல்லாருக்கும் பொதுவானது.  ஏன், இன்று ‘ஹாலிவுட்’ சினிமாப் படங்களில்கூட, வில்லன்களால் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கதாநாயகன், “கடவுளே! காப்பாற்று!” என்று கெஞ்சுகின்றான்!  என் தாயகமான ஜப்பானிலும் நான் பார்த்திருக்கிறேன், மாணவ-மாணவியர் தேர்வில் கடினமான கேள்வியைக் காணும்போது, “தாசு கீட்டி!” (கடவுளே! உதவி செய்!) என்று முணுமுணுப்பதைக் கேட்டிருக்கிறேன்.  ஆக, கடவுளிடம் உதவி தேடுவதென்பது, எல்லா மதங்களிலும் உண்டு; அதுவே மனித இயற்கை என்ற உண்மை எனக்குப் புரிந்தது.

எனது இங்கிலாந்துக் கல்வியின்போது, அரபு நாட்டு மாணவர்கள் சிலரைச் சந்தித்தேன்.  அதற்கு முன் நான் படித்த பயண நூல் ஒன்றில், “நீங்கள் அரபிகளைச் சந்தித்தால், அவர்கள் அனைவரும் திருடர்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள்!” என்று எழுதப்பட்டிருந்த குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது.  ஆனால், நேரில் பார்த்த அந்த அரபு மாணவர்களோ, வித்தியாசமானவர்களாக இருந்தனர்!  அவர்கள் தமது மார்க்கத்தில் அத்துணைப் பிடிப்பு இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்களிடம் அதைப் பற்றிப் பேசத் தொடங்கினால், அவர்களுக்கு அவர்களின் மார்க்கமாகிய இஸ்லாத்தின் மீது இருந்த பற்றும் அக்கறையும் ஆழ்ந்த அறிவும், அத்துடன் அந்த மார்க்கத்தைத் தமது வாழ்க்கை நெறியாகப் பெற்றதன் பெருமையும் அவர்களின் பேச்சில் வெளிப்பட்டது!  அதன் மீது வெறுப்போ, அறியாமையோ அவர்களிடம் இருக்கவில்லை!

அவர்கள் அனைவருமே புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றது எனக்கு வியப்பைத் தந்தது.  அவர்கள் வேடமிட்டிருக்கவில்லை; வேதம் படித்து, விளக்கம் பெற்றிருந்தார்கள்.  அதனால்தான், அந்த மார்க்கக் கடமையில் அத்துணைப் பிடிப்பு அவர்களுக்கு.  இந்த அனுபவத்தின் பின்னர், அரபு நாடுகளின் மீதும், அம்மக்களின் வாழ்க்கை மற்றும் பண்பாடுகளின் மீதும் எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது,  

நான் ஜப்பானுக்குத் திரும்பிச் சென்ற பின்னர், எனக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது.  அங்குள்ள நூலகங்களிலிருந்து அரபுகள் மற்றும் இஸ்லாம் பற்றிய நூல்களை எடுத்துப் படித்தேன்.  அவற்றைப் படிக்கப் படிக்க, அரபு நாடுகள் அனைத்திலும் ஒரே மார்க்கமும் பண்பாடும் நிலவுகின்ற உண்மையை உணர்ந்தேன்.  அதுவே, இஸ்லாம் எனும் மார்க்கமும் பண்பாடுமாகும் என்பதையும் உணர்ந்தேன்.  அதன் பின்னர், இஸ்லாத்தைப் பற்றிப் படிக்கும் ஆர்வம் என்னுள் எழுந்தது.

ஜப்பானில் இருக்கும் ‘இஸ்லாமிக் செண்ட’ருக்குச் சென்று, இன்னும் பல நூல்களைப் பெற்றுப் படித்தேன்.  அவற்றை விளங்கி ஏற்றுக்கொண்ட பின்னர், எனது கை மது பானத்தின் பக்கமும் பன்றி மாமிசத்தின் பக்கமும் நெருங்கவில்லை!  ஏனெனில், அவற்றை நமது நன்மைக்காகவே இறைவன் தடுத்துள்ளான் என்ற உண்மை எனக்குள்ளே ஆழமாக வேரூன்றிற்று.  இத்தகைய மன மாற்றத்தின் பின்னர், நான் இஸ்லாத்தைத் தழுவக் கால தாமதம் ஏற்படவில்லை.

இஸ்லாமிய வாழ்க்கையின் உண்மை நிலையைக் கண்டும், அதன் தொடர்பாகச் சில நூல்களைப் படித்தும்தான் நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.  அன்றி, எனக்குள் எந்த அற்புதமும் நிகழவில்லை.

இலகுவில் புரியும் மார்க்கம் இஸ்லாம்.  இதனைப் புரிந்தும், இன்னும் பலர் இந்த இயற்கை மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது யாருக்கு இழப்பு?  சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்!
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
அதிரை அஹ்மது

2 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல பதிவு!

நாம் உள்ளளவில் மட்டுமல்லாது வெளிப்படையாகவும் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவது இன்னும் பல ருகய்யாக்களையும் உருவாக்க முடியும் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. நாமும் அப்படி வாழ்வோம். நாலு பேர் நம் வழியில் வர வழி கோளுவோம். இன்சா அல்லாஹ்.

abdul hakkim said...

அஸ்ஸலாமு அலைக்கும் அஹமத் பாய் அருமையான தகவல்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிய நினைக்கும் சகோதர சகோதரிகளுக்கு இதுபோன்ற தகவல்கள் அதிமதிகம் ஊக்கத்தையளிக்கும் இந்த ஆக்கங்களை வலைதிரட்டிகள் இனைத்தால் அதிகமான மாற்றுமதத்தவர்கள் அறிந்துகொள்ளால் அல்லவா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு