Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தியாகப் பெருநாள் சிந்தனை 9

அதிரைநிருபர் பதிப்பகம் | October 26, 2012 | , ,



பாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த/வாழும்/வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத படிப்பினையாகவும் அம்மூவரது செயல்பாடுகளில் சில முஸ்லிம்களின் கடமையான வழிபாடுகளாகவும் மாறிப் போயின.

ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் - எண்ணியெண்ணி வியக்கும் அந்த வரலாறு,

"எங்கள் இறைவா! விவசாயமற்ற இப்பள்ளத்தாக்கில், மாண்புமிகு உன் இல்லத்தை அடுத்து என் வழித்தோன்றலை (குடும்பத்தாரை) வசிக்க விட்டிருக்கிறேன். தொழுகையை நிலைபெறச் செய்வதற்காகக் குடியேற்றி இருக்கிறேன். எனவே, எங்கள் இறைவா! ஆதரவுள்ளம் கொண்ட மக்களை இவர்களுக்கு ஏற்படுத்துவாயாக! இவர்கள் உனக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, கனிகளைக் கொண்டு இவர்களுக்கு உணவளிப்பாயாக!" (அல்-குர்ஆன் 14:37) என்று தொடங்குகிறது.

தன் வாழ்க்கைத் துணைவியையும் வயோதிக காலத்தில் தனக்கு வாரிசாகப் பிறந்த பால்குடி மாறாப் பாலகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்ல அண்ணல் இபுறாஹீம் நபி (அலை) எப்படித் துணிந்தார்கள்?

அதுதான் தியாகம்! அல்லாஹ்வின் கட்டளைக்காக அனைத்தையும் துறக்கத் துணிந்த தியாகம்!

"இறைவன்தான் இந்தப் பாலைவனத்தில் எங்களை விட்டுச் செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டான் எனில், அவனே எங்களைப் பாதுகாப்பான்" என்று உறுதியோடு உரைக்க அன்னை ஹாஜராவுக்கு எப்படி மனம் வந்தது?

அல்லாஹ்வின் மீதுள்ள அளவு கடந்த நம்பிக்கையில், வானமே கூரையாக சுட்டெரிக்கும் பாலையிலும் வாழ்ந்திடத் துணிந்த தியாகம்!

மகன் மட்டும் தியாகத்தில் சளைத்தவரா?

"... என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உன் கருத்து என்ன என்பதை யோசித்துச் சொல்"

"என்னருமைத் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப் பட்டதோ அதையே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால், (எதையும்) சகித்துக் கொள்ளக் கூடியவர்களுள் ஒருவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்" (அல்-குர்ஆன் 37:102).

இங்குக் கொடுத்திருக்கும் இஸ்லாத்துக்கே சொந்தமான தியாக வரலாற்றின் மிகச் சில வரிகள் வாசிப்பதற்கு மட்டுமா? என்ற கேள்வியை நாம் நம்மையே கேட்டுக் கொள்ள இந்நாளில் கடமைப் பட்டிருக்கிறோம்.

தியாகத்திருநாளை இரு ரக்அத் சிறப்புத் தொழுகையுடனும் நபி இபுறாஹீம் குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுபடுத்தும் ஒரு குத்பா கொண்டாடுவதோடு நம் தியாகங்களும் முடிந்து விட்டன என்ற தவறான எண்ணத்திலிருந்து விடுபட்டு... இத்தியாகத் திருநாளில் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.

தியாகம் நினைவுபடுத்துவதற்கோ நினைவுகூர்வதற்கோ மட்டும் அல்ல; ஒவ்வொருவரின் வாழ்விலும் செயல்படுத்துவதற்கும் சேர்த்தேதான்!

உலகம் முழுதும் இஸ்லாத்துக்கு எதிரான திட்டமிட்ட, பல்முனைத் தாக்குதல்கள் பெருகி வரும் காலமிது. குறிப்பாக ஊடகத்துறையில் இஸ்லாத்தைப் பற்றிய பொய்களும் பூஞ்சைத் தனமான குற்றச்சாட்டுகளும் தற்போது தமிழ் இணையத்திலும் பெருகி வருகின்றன. தடுத்துச் சற்றே கையை உயர்த்தினாலே பொடியாகிப் பறந்து விடும் என்ற கருத்தில்தான் 'பூஞ்சைத் தனமான' குற்றச் சாட்டுகள் என்று இங்குக் குறிப்பிடப் படுகிறது.

கை உயர்த்துவதற்குத்தான் ஆட்கள் தேவை. வெறும் கையைன்று; எழுதுகோல் எனும் ஆயுதம் ஏந்திய கைகள்!

அண்ணல் இபுறாஹீம் எதிர் கொண்ட சோதனைகள் இன்று நமக்கில்லை. அன்னை ஹாஜரா தாங்கிக் கொண்ட வேதனைகள் நமக்கில்லை. அண்ணல் இஸ்மாயீல் ஏற்றுக் கொண்ட 'சுயபலி'யும் நமக்கில்லை. நமக்குள்ள நேரத்தைக் கொஞ்சம்போல் தியாகம் செய்தால் போதும். எழுத்துலகுக்கு இன்னும் இன்னும் இன்னும் முஸ்லிம்கள் வேண்டும்.

கையை உயர்த்துங்கள் - எழுதுகோல் ஆயுதத்தோடு!

9 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.உலகெங்கும் பரவியுள்ள சகோதர சகோதரிகளுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்

உலகெங்கும் வாழும் அன்பு உடன் பிறப்புகள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் து ஆக்கள்.

இதுவே இந்தப் பெருனாளைக்கான நமது சிந்தனையின் முழக்கமாகட்டும். .

//கை உயர்த்துவதற்குத்தான் ஆட்கள் தேவை. வெறும் கையைன்று; எழுதுகோல் எனும் ஆயுதம் ஏந்திய கைகள்!//

இன்றைய அறிவியல் வளர்ச்சியில் எழுதுகோலை ஆயுதமாக ஏந்தக்கூட தேவை இல்லை. தட்டும் விரல்களை சமுதாயத்துக்கு தானமாகத் தந்து விழிப்புணர்வைத் தாருங்கள்.

இன்ஷா அல்லாஹ்.

இப்னு அப்துல் ரஜாக் said...

இன்ஷாஅல்லாஹ் விரல் கை உயிர் எல்லாம் தருவோம் இஸ்லாத்துக்கு .உலக முஸ்லிம் மாந்தர் யாவருக்கும் ஈத் Mubarak.

Ebrahim Ansari said...

தியாகத்தின் தழும்புகள்
*****************
மக்கா -
மயில்கள்
தோகை விரிக்காத
மணல் காடு !
குயில்கள் வந்து
கூவாத
குன்றுகளின் கூடு !
*****
அது -
சூரியன் மட்டுமே
குளிக்க வருகின்ற
வெயில் நீர்த் தேக்கம் !
வெப்ப விழுதுகள் மட்டுமே
வேர்விடுகின்ற
கானல் நீர் தேசம்!
*****
செழுமையின்
அருமையேத் தெரியாத
அந்தத்
தணல் பூமியில்தான்
தாயோடு தன்
தளிர்க் குழந்தை
இஸ்மாயீலை
தனியாகத் தவிக்க விட்டு
திரும்பிச் சென்றார்
இறைத்தூதர்
இப்ராஹீம் நபி!
அது -
அல்லாஹ்
அவருக்கு அனுப்பி வைத்த
*வஹி!
*****
தாகத்தால் துடித்த குழந்தை
இஸ்மாயீலின் கால்
ஒருநாள்
மணல் பெண்ணின்
மலட்டு மார்பை மிதித்தது!
அதற்காகவே காத்திருந்த
மணல் காம்புகள்
தாய்மை பெற்று
தண்ணீரை
அமுதமாய்ச் சுரந்தது!
அதைப் பருகப் பருக
குழந்தையின் தாகம் தணிந்தது!
பாலைப் பெருவெளி
நதிகள் நடந்து செல்லும்
நீர் வழியானது !
*****
ஆமினாத் தாய்
பெற்ற பிள்ளை
முஹம்மது நபிகளாருக்கு
செவிலித்தாய் ஹலிமா
பாலூட்டும் பண்பை
மக்கத்து மண் மார்பு
அன்றே... அங்கே
பதியனிட்டுக் கொண்டிருந்தது!
*****
மண்ணொன்று
பெண்ணாகி
பாலூட்டும் அதிசயத்தை
பரவசமாய்ப் பார்த்த
*ஹாஜரா அன்னை
முதலில் வியந்தார்!
பின்னர் ....
பயத்தால் நனைந்தார்!
"அத்தனை நீரும் வற்றி விட்டால்....."
அதனால்...
* "ஜம்...ஜம்..." என்று
சொல்லால்
ஒரு வேலியிட்டார்!
*****
உலக நதிகளின்
ஜீவ நதி
தன்னை அடக்கிக் கொண்டு
ஒரு கிணற்றுக்குள்
அடங்கி விட்டது!
*****
மற்றொருநாள்...
மகன் இஸ்மாயீலின்
கழுத்து அறுபடும்
காட்சியொன்றைக்
* முதியவர்
கனவாகக் கண்டார்!
உடனே
மக்காவை நோக்கி நடந்தார்!
*****
அங்கே -
"மகனே !
அல்லாஹ்வுக்காக உங்கள்
கழுத்தை அறுக்கலாமா?
இறை கட்டளை ஏற்று
உங்களை பலியிடலாமா?"
வினாவொன்று தொடுத்தார் தந்தை!
*****
பேசும் பருவம் வந்த பிள்ளை
திரு வாய் திறந்தது!
"இறைவன் கேட்டால்
உயிரையேத் தருவேன்"
திருவாய் மலர்ந்தது!
*****
தந்தையின் சிந்தை
*தலைவன் நிகழ்த்துகின்ற விந்தை
என்பது
தனயனுக்கு தெரிந்தே இருந்தது!
*****
கழுத்துக்கும்
கத்திக்கும்
நடந்த யுத்தத்தில்
தோற்றுப்போனது கத்தி!
வெற்றி பெற்றது
நேசர்களின்
இறை பக்தி!
*****
தன் நேசரின்
அன்பு மகனுக்கு பதிலாய்
ஆடொன்றை
அறுக்கச் சொன்னான்
அருளாளன்!
*****
அங்கே நிகழ்ந்தது
ஓர் அதிசயப் பிரசவம்!
*****
கத்தியின்றி
ரத்தமின்றி
இஸ்மாயீலின்
மூச்சுக் குழாய்
சுகமாய் பிரசவித்தது
ஒரு குழந்தை...
அதன் பெயர்
* குர்பானி!
உலக முஸ்லிம்
தியாகிகளின் முன்னோடி!
*****
மக்கா -
தியாகத்தால்
சீர் பெற்றது!
இப்ராஹீம்
இஸ்மாயீல் என்ற
தியாகிகளால்
புனித கஃபா
உருப்பெற்றது!
*****
அன்று -
ஜீவராசிகள் எதுவும்
திரும்பியே பார்க்காத
அந்த சுடுமணல்
பூமியைத்தான்
இன்று -
திசைகளெல்லாம்
தேடிவந்து
* தவாபு செய்கின்றன!
தியாகத்தின் தழும்புகளை
தழுவிக் கொள்கின்றன!
*****
அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர் ....அல்லாஹு அக்பர்
லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்....
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து .....
*************************************

அபூ ஹஷிமா. ( தொட்டால் தொடரும் தொடரை எழுதியவர்.)

Iqbal M. Salih said...

இன்றைய தினத்திற்கும் இந்த சூழ்நிலைக்கும் மிகப் பொருத்தமான கவிதை!

குறிப்பாக,

*****
கத்தியின்றி
ரத்தமின்றி
இஸ்மாயீலின்
மூச்சுக் குழாய்
சுகமாய் பிரசவித்தது
ஒரு குழந்தை...
அதன் பெயர்
* குர்பானி!
உலக முஸ்லிம்
தியாகிகளின் முன்னோடி!
*****

என்ற மனங்கவர்ந்த வரிகள்.

மிக்க நன்றி டாக்டர் காக்கா!

அபுஹஷிமா என்பது நம்ம ஊர் மனிதரா?

இப்னு அப்துல் ரஜாக் said...

காக்கா ஜிப்ரயீல் அலை அவர்கள் தங்கள் இறக்கையால் மண்ணை தோண்டியதாகவும் அதனால் அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் நீர் வந்ததாகவும் ஹதீஸ் கேள்விப்பட்டுள்ளேன். Which one is correct, can you clarify?

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி இக்பால் அவர்கள் கேட்பது

//அபுஹஷிமா என்பது நம்ம ஊர் மனிதரா?//

இல்லை. இவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருவிதாங்கோட்டில் வசிப்பவர். ஒரு சில நூல்கள் எழுதியுள்ளார். அ.நி. யில் எற்கனவே தொட்டால் தொடரும் என்ற தொடர் எழுதி நம் மனம் கவர்ந்தவர். எனக்கு நண்பர்.

தம்பி அர அல அவர்களின் கேள்விக்கு யாராவது தெரிந்தவர்கள் பதில் சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

அப்துல்மாலிக் said...

//ஜிப்ரயீல் அலை அவர்கள் தங்கள் இறக்கையால் மண்ணை தோண்டியதாகவும் அதனால் அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் நீர் வந்ததாகவும்// இஸ்மாயில் (அலை) அவர்கள் பசியின் கொடூரத்தால் கை/கால்களை உதறியபோது கால் குதி மண்ணில் பட்டு (பள்ளம் தோண்டி) அதன் மூலம் தண்ணீர் வந்ததாகவும் படிச்சிருக்கோம் - தெரிந்தவர்கள் விளக்கமாக சொல்லலாம்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு