Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எப்படிப் பிறந்த நீ… 30

அதிரைநிருபர் பதிப்பகம் | October 17, 2012 | , , , , ,

எப்படிப் பிறந்த நீ…
இப்படி ஆயிட்டே!

உச்சந்தலையில்
பொத்தல் விழுந்த
ஓட்டோடுதான் பிறந்தாய்

இருக்கிப் பொத்திய
கைகளுக்குள்
ரேகைகளைத் தவிர
ஒன்றுமில்லாமல்தான் வந்தாய்

கண் திறந்து பார்க்கவே
கால அவகாசம்
தேவைப்பட்டது உனக்கு

இருந்த நிலையிலும்
படுத்தும் நின்றும்
தவழ்ந்தும் புரண்டும்
என
இப்படித்தான் என்றில்லாது
மலஜலம் கழித்தாய்

எல்லாவற்றிற்கும் அழுதாய்
இல்லாவற்றிற்கும் அழுதாய்

அழுவதைத் தவிரவும்
சிரிப்பதைத் தவிர்த்தும்
வேரொன்றும்
அறிந்திருக்கவில்லை நீ

உறக்கம் வேண்டியோ
உணவுக்காகவோ
அழுவதைத் தவிர
நீ அறிந்த மொழிதான் யாது

குரல் கொடுத்தால் அம்மாவும்
விரல் பிடித்து நடக்க அப்பனும்
அவசியப்பட்டது உனக்கு

உணவோ உடையோ
உதவி வேண்டியவனாகவே வளர்ந்தாய்

கூனிக் குறுகி
கால்கள் மடித்து
முடங்கிக் கிடந்த கருவறை வாசம்
மறந்து போனாய்..

காலப்போக்கில் உன்
கோலம் மாறினாய்
விழி விரித்தாய்
மொழி அறிந்தாய்
உணவுக்காக பிறர்
உணர்வுகளைக் கொன்றாய்

வேட்க்கைகளை அடைவதை
வாழ்க்கையெனக் கொண்டாய்
யாக்கையின் தேடலின்
போக்கை மற்றவில்லை நீ

புலன்களின் சுகங்களே வாழ்வின்
பலன் எனக் கொண்டாய்

பிறந்தவர் யாவரும்
இறப்பவர் தானே

இமைகள் விலக்கவே
இயலாது உன்னால்

பார்வை இருக்கும்
பரிச்சயம் தெரியாது

சுவாசம்
சுமையாகிப் போகும்

உற்றார் உறவினர்
உடனிருப்பர் உதவமாட்டார்

முதுகு அரிக்கும்
புரண்டு படுக்க முடியாது

உனக்குப் பிடித்த
எல்லாம் உன்
கூட இருக்கும்
கூட வராது

கும்மிருட்டும்
குறுகிய இடமும்
குலை நடுங்கச்செய்யும் அமைதியும்
குடும்பத்தினர் அற்றத் தனிமையுமாய்
குழிக்குள் இடுமுன் உணர்
குறுகியது
குவலயத்து வாழ்வு!

சபீர் அபுசாரூக்

30 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நேற்று பிறந்தது முதல் போய் சேர வேண்டிய இடம் வரை அழகாய் கவித்து அசத்திவிட்டீர் எங்கள் கவித் தந்தையே!

Iqbal M. Salih said...

புதுக்கவிதைகள் அலங்காரம் துறந்தவை! ஓசை நயத்தின் வேலைப்பாடுகள் அற்றவை! ஆனால், தானே வந்து விழும்போது தயங்காமல் ஏற்றுக்கொள்பவை! இதில், சிந்தனையின் படைப்புத்தெரிப்புகள் அழகியல் சார்ந்து வெளிப்படும்போது, கவிதைக்குரிய பரவசத்தை ஏற்படுத்தும் என்பதை சென்ற மாதம் சபீருடன் செல் ஃபோனில் பகிர்ந்து கொண்டேன். அதே பரவசத்தை மறுபடியும் ஒருமுறை உண்டாக்கி இருக்கின்றான் சபீர். இது முழுமையாக வரவேற்கத்தக்கது!

KALAM SHAICK ABDUL KADER said...

//கூனிக் குறுகி
கால்கள் மடித்து
முடங்கிக் கிடந்த கருவறை வாசம்
மறந்து போனாய்..//

கருவறை வாசம் மறந்தவன் போகும்
....கல்லறை வசிப்பிடம் மறந்து
மறுமுறை மீண்டும் உயிரினைப் பெற்று
.....மஹ்ஷரை நெருங்குதல் மறந்து
ஒரு்முறை வாழ்தல் மட்டுமே வாழ்க்கை
...உலகமே கதியெனக் நினைத்துத்
திருமறை சொன்ன உண்மையை மறுத்து
....தினம்தினம் வீணாய்க் கழியும்!


கையை மூடியவாறுப் பிறந்தவன்
கையைத் திறந்தவாறு இறப்பதும்
மண்டை ஒடுத் திறந்தவாறுப் பிறந்தவன்
மண்டை ஓடு மூடியவாறு இறப்பதும்
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்
திறப்பதும் மூடுவதுமான இடைப்பட்டக்
காலம்தான் வாழ்வென்று உணரவே
ஞாலத்தில் பிறந்தோம் என்கின்றார்!


KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்கள், “கவிதைகளின் போக்கு” பற்றிய ஓர் ஆய்வினை எழுதி, அதற்கான “டாக்டர்” பட்டம் பெறும் அளவுக்கு ஆழமாகக் கவிதைகளைப் பற்றிய துல்லியமான அளவீடுகளைத் தன்னகத்தே வைத்திருப்பதும் அதனை அலைபேசியிலும், பின்னூட்டத்திலும் தெள்ளத் தெளிவாகத் தூயத் தமிழில் பேசுவதும் எழுதுவதும் எங்களைப் போன்று கவிதை எழுதக் கற்றுக் கொண்டிருப்பவர்கட்கு ஓர் அரிய விளக்கம் நிறைந்த வழிக்காட்டுதலாக உணர்கின்றேன்

அதிரை சித்திக் said...

இக்கவிதை ஞானிகளின் பார்வை
திறமையுள்ளவர்கள் திமிர் கொள்ளல்
எல்லாமுள்ளது என்று இறுமாப்பு கொள்ளல்
வனப்பு உள்ளவரை தான் கர்வம்
என்று எவ்வளவோ கூறலாம்
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
என்ற உணர்வை ஊட்டும் கவிதை
வாழ்த்துக்கள் கவி நேசரே ...!

Ebrahim Ansari said...

உலக வாழ்வின் இறுதி அத்தியாயங்களை ஏற்கனேவே எழுதிக் கொண்டிருப்பவர்களையும், எழுதத் தொடங்கி இருப்பவர்களையும் அச்சப்படவைக்கும் வரிகள்.

படித்துப் படித்து பயம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன்.

//கும்மிருட்டும்
குறுகிய இடமும்
குலை நடுங்கச்செய்யும் அமைதியும்
குடும்பத்தினர் அற்றத் தனிமையுமாய்
குழிக்குள் இடுமுன் உணர்
குறுகியது
குவலயத்து வாழ்வு!//

என்று எழுதி அச்சமூட்டினால் நான் அழாமல் என்ன செய்வேன்? எனக்குப்பின்னால் பலர் தேம்பித் தேம்பி அழும் சத்தமும் கேட்கிறதே.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

எல்லாவற்றிற்கும் அழுதாய்
இல்லாவற்றிற்கும் அழுதாய/////

இந்த பழக்கம் குழந்தையாய் இருக்கும்பொழுது மட்டுமல்ல
சிலர் பெரியவர்களாயும் தொடர்வதுதான்
வேடிக்கை

ZAKIR HUSSAIN said...

ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துப்போகும்போது வரும் உணர்வு, கவிதையின் கடைசியை நெருங்கும்போது.

ஆபரேசன் தியேட்டர் டெம்ப்ரரி....குழி பெர்மனன்ட்

mulakkam said...

எப்படி நாம் இருடில்லிருந்து வந்தோமோ !! அதே இருட்டுக்குதான் செல்ல இர்ருகிறோம். என்னா இரண்டு இருட்டுக்கும் வித்தியாசம் தங்கி இருந்த இடம் தான்அதுமட்டும் இல்லை தங்கி இருந்த காலமும்தான்.கருவறையில் இறுக்கும் பொழுது கோமாவில் இருந்தோம். ஆனால் கை ,கால் வளர்ந்தவுடன் இபொழுது தலை கணத்தில் கோமாளியாஹா இர்ருக்கிறோம் . காலம்தான் பதில் சொல்லனும் !!! நண்பன் சபீர் புது கவிதை எழுத்துக்கு எப்பொழுதுமே தனி பாணி இறுக்கும் என்பது எனக்கு தெரியும் அவர் பனி .மீண்டும்! மீண்டும் !! தொடரனும் .வாழ்த்துக்கள் !! நண்பனே !!!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இருட்டு அறையிலிருந்து மற்றொரு இருட்டு அறைக்கு ஆன உறவுக்கொடிதான் மனித வாழ்கை! இதில் இருட்டு அறையை அடைந்தாலும் வெளிச்சம் தரும் அமல் சம்பாதித்து போவதில்தான் வாழ்வின் உண்மை வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது. இதை கவிதை முடிச்சி போட்டி நனமையைகொண்டே அதை அவிழ்க்கமுடியும் என்பதை முடிசூடா கவிஅரசன் சொல்லியவிதம், கையில் நெல்லிக்கனி போல் தெள்ளத்தெளிவான பாடம்.வாழ்த்துக்கள்.

crown said...

காலப்போக்கில் உன்
கோலம் மாறினாய்
விழி விரித்தாய்
மொழி அறிந்தாய்
உணவுக்காக பிறர்
உணர்வுகளைக் கொன்றாய்
-----------------------------------------------
சுய நலத்தின் குணத்தினை உணர்த்தும் வரிகள்!இந்த வரிகள் !போது நலத்தில் எழுதப்பட்ட சிந்தனையினால் வரிகளும் சலுகையாக பாராட்டு பெறுகிறது.

crown said...

வேட்க்கைகளை அடைவதை
வாழ்க்கையெனக் கொண்டாய்
யாக்கையின் தேடலின்
போக்கை மற்றவில்லை நீ
------------------------------------------------
மனதிலும், யாக்கையான உடலிலும் அழுக்கை பூசிக்கொள்ளும் விபரீத செயலை செய்கிறான் மனிதன் எனும் மனிதாபிமானம் மறந்த ஆருயிர் ஈனம்!ஒர் உயிரியைவிட கீழ் இனம் ஆனா உயிர் சடம்!

crown said...

புலன்களின் சுகங்களே வாழ்வின்
பலன் எனக் கொண்டாய்
---------------------------------------
ஆமாம் இந்த ஜென்மத்தின் பயனை அடைந்துவிட்டேன் என்று மார்தட்டும் வன்மம் நிறைந்தவனாகவே ஓலமிடும் அறிவிலிக்கூட்டம். எல்லாம் தாண்டி இறுதி என்பது உள்ளது என்பதை உறுதியாக அறியாத ஊத்தைகூட்டம்.

crown said...

கும்மிருட்டும்
குறுகிய இடமும்
குலை நடுங்கச்செய்யும் அமைதியும்
குடும்பத்தினர் அற்றத் தனிமையுமாய்
குழிக்குள் இடுமுன் உணர்
குறுகியது
குவலயத்து வாழ்வு!
-----------------------------------------------------
ஆமாம் இந்த அவயம் அடங்கி போகும் குவலயத்து வாழ்வு சிறு குவளையிலும் நிறையாத அரை குவளை அளவு நீர்போல் நீர்த்து போகும், தாகம் தனியாமலே தாகத்தில் தாக்கம் உன்னை தாக்கும் போதே முடிந்து போகும். கவனம் நன்மையை நாடினால் மட்டுமே சுவனம். அருமையான கவிதை என்பதை ஆன்றோர் போற்றியபின் இந்த சின்ன பயலுக்கு இதுக்கு மேல் எழுத தோனல!வாழ்துக்கள்....

sabeer.abushahruk said...

இந்த வாரம் திண்ணையில் எழுதியது, அதிரை நிருபர் வாசகர்களுக்காகக் கீழே:

 
எதிர் வினை!
 
காத்தமுத்துப் பேத்திக்குக்
காதுவரை வாய்
 
காட்டுக் கூச்சல் போடும்
காது கிழியப் பேசும்
 
கட்டிக்கப் போகிறவனுக்கு
கஷ்டம்தான் என்பர்
 
சொந்தங்க்ளுக்கு இடையேயான
உரையாடல்களிலும்கூட
சந்தம் வைத்துக் கத்தும்
சந்தைக்கடை தோற்கும்
 
ஒன்றுமில்லா விடயத்திலும்
கத்திப் பேச
அதற்குக்
காரணங்கள் இருக்கும்!
 
பழநியப்பன் பேரனோ
பரம சாது
 
சொற்ப டெஸிபலுக்கே
சுருங்கிப் போகும் முகம்
கண்களைப் பொத்திக்கொண்டு
காது மடல்களைக்
கைகளால் மடிப்பான்
 
ஒலி கலந்த வார்த்தைகளைப்
பல சமயங்களில்
புன்னகையோ தலையசைப்போ
கொண்டு எதிர்கொள்வான்
 
நான்கு பேர்கள் இருக்கும்போதும்
மூன்று குரல்களோடும்
பெரும்பாலும் இவன்
மவுனம்கொண்டே பேசுவான்!
 
நியாய விலைக் கடையில்
அநியாயக் கூட்டம்
சர்க்கரை வாங்கி முடிக்கும்போது
இலவசமாக
இரவையும் சேர்த்துத் தந்தனர்
 
நிலவு
நலிந்து வளைந்து
பிறையெனப் பெயர் கொண்டு
மேகம் போர்த்தி
வடிகட்டிய வெளிச்சத்தை மட்டும்
வீதியில் ஊற்றி இருந்தது
 
நசுவுனி ஆற்றுப்
பாலத்தின் மேல் செல்லுகையில்
காய்ந்த ஆற்று மணலிலிருந்து
காற்றில் வந்த சலசலப்பு
நிச்சயம்
நீர்வரத்தினா லல்ல
 
மதகுப் பக்கம்
பழநியப்பன் பேரன் மடியில்
காத்தமுத்துப் பேத்தி
சாய்ந்திருந்தது ஒன்றும் காரியமல்ல
 
அவன் பேசிக்கொண்டிருக்க
அவள் கேட்டுக்கொண்டிருந்தாள்!
-Sabeer abuShahruk

thanks: www.thinnai.com

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைநிருபரில் (கவிதையின்)கரு !

தின்னையில் - வெண்ணெய் !

இரண்டுமே உயிரோட்டமே !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

'மனிதனை' சிந்திக்க தூண்டும் கவிதை!

///உனக்குப் பிடித்த
எல்லாம் உன்
கூட இருக்கும்
கூட வராது

கும்மிருட்டும்
குறுகிய இடமும்
குலை நடுங்கச்செய்யும் அமைதியும்
குடும்பத்தினர் அற்றத் தனிமையுமாய்
குழிக்குள் இடுமுன் உணர்
குறுகியது
குவலயத்து வாழ்வு!////


****எப்படிப் பிறந்த நீ…
இப்படி ஆயிட்டே!*****
மனிதனின் உண்மை வாழ்வை படம் பிடித்துக் காட்டி சிந்திக்க வைக்கும் சீர் மிக்க அருமையான கவிதை! சபீர்! வாழ்த்துக்கள்!

Shameed said...

இதுதான் ஒரு மனிதனை பற்றிய A TO Z . கவிதை சூப்பர்

இப்னு அப்துல் ரஜாக் said...

Brother sabeers poem makes a reminder for all. MaashaAllah.

Yasir said...

புருவங்களை தூக்கவைத்து விழித்திரையை அகலமாக்கும் வியத்தகு சொல்வரிகள்....இதயத்தின் இரத்த ஓட்டத்தை அதன் சக்திக்குமீறி பம்ப் செய்து படபடப்பையும்,பயத்தையும் தரும் கருத்துக்கள் அடங்கிய கவிதை இது....சான்ஸ்சே இல்ல காக்கா..

//காலப்போக்கில் உன்
கோலம் மாறினாய்
விழி விரித்தாய்
மொழி அறிந்தாய்
உணவுக்காக பிறர்
உணர்வுகளைக் கொன்றாய்// நெத்தியில் ஓங்கி அடித்து இருக்கின்றீர்கள்...அல்லாஹ் நாம் யாவரையும் காப்பற்ற வேண்டும்

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

என் பாணியில் ஏற்புரை எழுதி நாளாச்சு (ஆரம்பிச்சிட்டான்டா)

மரண சிந்தனையை அடிக்கடி ஏற்படுத்துவதும் ஒரு மார்க்க வழிமுறைதான். எக்குத்தப்பாக எகிறிக்குதிக்கும் இளமைக்கு ஒரு நினைவூட்டல்; முதுமையிலும் படைத்தவன் நினைவின்றி பொடுபோக்காக இருக்கும் முதியோருக்கு ஒரு எச்சரிக்கை, எனக்கு என் எண்ணங்களைச் சுத்திகரிக்க; அவ்வளவுதான்.
 
எம் ஹெச் ஜே: //கவித்து அசத்திவிட்டீர்கள்//

கவித்து? சுஜாதா தமிழ்? கைகட்டுகள் அவிழ்ந்தால் மொழிக்கு அழகான பல சொற்களைத் தேடித்தருவார்கள் கவிஞர்கள்.  கூடாது ஆகாது என்று கோஷம் போட்டால் தமிழ் சுருங்கிப் போய்விடும்.  என்ன நான் சொல்றது?

இக்பால் எம். ஸாலிஹ்: கருவைவிட கவிதையை ரசித்திருக்கிறாய். கவிதையைப் பாராட்டுவதுபோல் என்னைப் பாராட்டியிருக்கிறாய். மிகவும் அர்த்தமாகவும் சத்தாகவும் கருத்தைத் துவங்கிவிட்டு எப்படி முடிக்கலாம் என்று யோசித்து வளைவு வைத்து வரவேற்றுவிட்டாய்  உன்னாலெல்லாம் வரவேற்கப்படுவது ஓர் அங்கீகாரம்.

 கவியன்பன்:

நான் வகுப்பெடுத்து வெளியாவதற்குள் ஹெட் மாஸ்ட்டர் வந்து க்ளாஸ் எடுத்ததுபோல் இருக்கிறது உங்கள் கவிதைகள்.

 சகோதரர் அதிரை சித்திக்: என்ன உணர்வை இங்கு நிலைநிறுத்த விரும்பினேனோ அதை அப்படியே கிரகித்திருக்கிறீர்கள்.  ஒத்த உணர்வு.

 ஈனா ஆனா காக்கா: பயம் வரவழைக்க எழுதியதுதான் இது. அழுகை? அத்துணை மென்மையானவர்களா நீங்கள்!?

சகோ. ஸஃபீர்: அதுமட்டுமல்ல. அவர்கள், எதுவும் இல்லையெனில் சிரிப்பதில்லை; எல்லாம் இருந்தும் சிரிப்பதில்லை. வேடிக்கைதான்.

 

sabeer.abushahruk said...

ஜாகிர்: “குழி பெர்மனென்ட்” தெரிந்துவிட்டத் தீர்ப்பு நம்மை வந்து அடையுமுன் எத்துணை வழக்குகள் ஏனென்ன வழக்காடல்கள்?
 
முலக்கம்: அய்யா, யாருய்யா நீரு? நல்லாக் கருத்துச் சொல்லுறிய.  ஆனா, யாருன்னு தெரியாம முலக்கத்தை எப்படி விளங்குறது?
 
கிரவுன்: அமல்களே வெளிச்சம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  கவிதையினூடே நானே சொல்லியிருக்கனும். கருத்தினூடே நீங்கள் நிரப்பி விட்டீர்கள்.
 
அபு இபுறாகீம்: இரண்டிலும் உயிரோட்டமா? ஒன்றில் உயிரோட்டம்; ஒன்றில் உணர்வோடம்!  நீங்கள் கவிதையைச் சொல்கிறீர்கள்; நான் கருக்களைச் சொல்கிறேன்.
 
அலாவுதீஇன்: சிந்திக்கத் தெரிந்த மனிதன் சிந்திக்க மருப்பதுதான் ஏனென்று புரியவில்லை.  அடிமேல் அடி அடிப்போமே.
 
ஹமேது: இதன் பொருளைப் பற்றினால் மனிதனாவது உறுதி.
 
அர அல:  ஐ யூஸ் ப்போயம் அச் மை ட்டோல் ட்டு ரிமைன்ட் ரியாலிட்ய்.
 
யாசிர்: நினைப்பதை நினைத்தபடி சொல்லிவைக்க மொழியைத் தவிற வேறொன்றும் வேண்டாம், இல்லையா?
 
Vஆசித்து கிரகித்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

sabeer.abushahruk said...

Sorry Ara Ala: I wanted to say:

I use poem as my tool to remind reality!

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தரின் ஏற்புரைக்கு நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

திண்ணையில் பேசிய கதை

எண்ணங்களில் ஊறிய விதை



என் கவிதைக் குழந்தைகள் முதற்கண் உங்களின் முகக்கண்ணில் பட்டு, இத்தளத்தில் பதியப்பட்டு, வாசகர்களால் பாராட்டப்பட்டுக் கொண்டிருப்பது சான்றுப் பகரும்!

KALAM SHAICK ABDUL KADER said...

வாழ்க்கை ஒரு வினா;
எவரும் விடை அளிப்பதில்லை!
இறப்பு ஒரு விடை;
எவரும் வினா எழுப்புவதில்லை!

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

வாழ்க்கை ஒரு கனா
எவரும் கண்டு களிப்பதில்லை
இறப்பு ஒரு நிஜம்
எவரும் நின்று நிலைப்பதில்லை!

வாழ்க்கை ஒரு கடல்
எவரும் கரை கண்டவரில்லை
இறப்பு அதன் கரை
எவரும் அதை கடந்தவரில்லை

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

கவிச் சகோதரரே !

நிரந்தரமற்ற இந்த வாழ்கையை ஒற்றைக் கவிதையில் எப்படி சாத்தியம்!

உங்களை பாராட்ட மட்டும் இந்த வார்த்தயல்ல, எங்களின் பிரார்த்தனையும் உங்களுக்காக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

உங்களின் ஒவ்வொரு கவிதைக்குமிடையே இடைவெளி அதிமாகமாகாமல் தொடருங்கள்.

Iqbal M. Salih said...


//வாழ்க்கை ஒரு வினா;
எவரும் விடை அளிப்பதில்லை!
இறப்பு ஒரு விடை;
எவரும் வினா எழுப்புவதில்லை!//

இந்தப் பரீட்சைக்களம் பற்றியே:

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்;


என அத்தியாயம் 'அரசாட்சி'யிலே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகின்றான்.

KALAM SHAICK ABDUL KADER said...

//இந்தப் பரீட்சைக்களம் பற்றியே://

தேர்வெழுதச் சென்று வினாத்தாளைப் பெறும் வரை விடையறியா வினாவாக வாழ்கையே கேள்விக்குறியாகிப் பதற்றமுடன் இருக்கின்றோம்; சரியான விடை எழுத வேண்டும் என்று அல்லும் பகலும் அயராமல் படிக்கின்றோம்., நிரந்தரமற்ற வாழ்வின் மகிழ்ச்சியைக் காண!

ஆனால்,

இதுதான் வினா? இதுதான் விடை என்று வினாவும்-விடையும் நிரப்பியத் திருமறையைக் கையில் வைத்துக் கொண்டு( பொருளறிந்துப் படிக்காமல்), விடையறியா வினாவாக “மறுமை” இருப்பதாக வீணாக விவாதிப்பவர்கட்கு,

அன்புத் தம்பி இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் விளக்கம் ஒரு சிறந்த அறிவுரையாகும்.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு