Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வடிவும் வகிடும்...! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | October 08, 2012 | , , , ,



வானத்தில் மிதக்கும் வடிவு
....வெண்மேகம் இழைத்த வகிடு
தானத்தில் சிறந்த வடிவு
....தூயோன்சொல் விகித வகிடு

தென்னை மரத்தின் வடிவு
....தென்றல் வருடும் வகிடு
கன்னம் கொடுக்கும் வடிவு
...காந்தக் குழியின் வகிடு

கடலின் நீரில் வடிவு
.....கப்பல் கிழித்த வகிடு
உடலின் சேரும் வடிவு
....உள்ளம் விரித்த வகிடு

புன்னகைப் பூக்கும் வடிவு
....பூவிதழ் விரித்த வகிடு
எண்ணமும் காட்டும் வடிவு
...எம்முணர் வுகளின் வகிடு

வயற்கள் தோறும் வடிவு
.... வரப்புக் கட்டிய வகிடு
செயற்கள் தோறும் வடிவு
....செயலின் திட்டமே வகிடு

ஊரின் பரப்பில் வடிவு
....ஊரும் தெருவின் வகிடு
வேரின் உறுதி வடிவு
....வேறாய்ப் பரவும் வகிடு

வலிமைக் கட்டிட வடிவு
.....வரைபடம் எழுதிய வகிடு
பொழியும் சந்திரன் வடிவு
....பிறையெனப் பிளந்திடும் வகிடு

இலைகளின் ரேகை வடிவு
....இறைவன் தீட்டிய வகிடு
மலைகளின் பாக வடிவு
....மனங்கவர் நீர்வழி வகிடு

ஏறும் எறும்பின் வடிவு
....ஏற்றப் பணியின் வகிடு
ஆறு சிறக்கும் வடிவு
....ஆங்கு அணைகள் வகிடு

தேசிய கொடியின் வடிவு
......தியாக வண்ண வகிடு
தேசிய தலைமை வடிவு
.....தெளிவாய்ப் பண்ணும் வகிடு

குடும்பத்தின் உறவுகள் வடிவு
....குலையாத உறுப்பினர் வகிடு
மிடுக்கான உடையினில் வடிவு
.....மெலிதான மடிப்பினில் வகிடு

முகத்தின் தோற்ற வடிவு
....முகத்தின் மூக்கே வகிடு
முதுகின் தோற்ற வடிவு
....முதுகின் தண்டின் வகிடு

வெண்பா யாப்பின் வடிவு
.....வெண்டளைக் காய்சீர் வகிடு
பெண்பால் சீப்பின் வடிவு
.....பெண்டலை நேர்சீர் வகிடு

செல்வம் பெற்றதன் வடிவு
...செய்யும் செலவின் வகிடு
கல்வி கற்றதன் வடிவு
... கற்றல் முறையின் வகிடு


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

23 Responses So Far:

Shameed said...

வடிவுக்கெல்லாம் வடிவம் கொடுத்த கவிதை இது

அதிரை சித்திக் said...

அப்பப்பா ...என்ன அற்புதமான கவிதை
அலைபாயும் மனதை தெளிய வைத்த கவிதை
கவிதையை படித்தோமா நுகர்ந்தோமா
என்றே தெரியவில்லை அவ்வளவு
வேகமாக படித்து முடித்தேன்
என்ன சிந்தனை இயற்கையை
கவிஞன் பார்க்கும் பார்வையே தனிதான்
காக்கா கலக்கிட்டீங்க ...
அமைதியான் எண்ணத்தில் ...!
உங்கள் சீரிய சிந்தனை வடிவு ...
மாதம் ஒருமுறை ..அதிரை நிருபரில்
உங்களின் கவிதை பதிவு நல்ல வடிவு ...
தேர்ந்தெடுத்த வார்த்தைகள் ...
நல்ல சூழ்நிலை தேர்வு என
எல்லாம் நல்ல வடுவு எடுத்து
வடித்துள்ளீர்கள் ..வாழ்த்துக்கள் காக்கா

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவள் கூந்தலை அழகுடன் சீவி வாருவது வகிடு
அபுல் கலாம் அவர்கள் கவி வடிப்பது அழகு வடிவு!

Ebrahim Ansari said...

கவிதை என்பதன் வடிவு
கவியன்பன் எடுத்த வகிடு

புலரும் பொழுதில் இக்கவிதையைப் படித்து புல்லரித்துவிட்டது.

எதிர்வரும் பெருநாளில் ஊரில் சந்திக்கலாம் இன்ஷா அல்லாஹ் . நாவலர் நூர் முகமதும் கூடவே காத்து இருக்கிறார். நேற்று இமாம் ஷபி பள்ளியில் நானும், பேராசிரியர் அப்துல் காதரும், ஹாஜா முகைதீன் சாரும், நாவலர் நூர் முகமதும் நீண்டநேரம் கலந்துரையாடிக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். பல விஷயங்கள் பற்றி அருமையான கருத்துப் பரிமாற்றங்கள். அவைகளைத்தொகுத்து, "இரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரையாளர், ஒரு கலந்துரையாடல்" என்கிற தலைப்பில் எழுத இருக்கிறேன். பல பயனுள்ள தகவல்கள் தெறித்து விழுந்த சுவைமிகு கலந்துரையாடல்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் அதிரை நிருபர் தளத்தில். முன்னறிவிப்பு நல்குவதற்கு நெறியாளர் அனுமதிப்பார் என்கிற நம்பிக்கையுடன்.

Anonymous said...

//இன்ஷா அல்லாஹ் விரைவில் அதிரை நிருபர் தளத்தில். முன்னறிவிப்பு நல்குவதற்கு நெறியாளர் அனுமதிப்பார் என்கிற நம்பிக்கையுடன். //

மகிழ்வுடன் அறிவிக்க காத்திருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒவ்வொரு வரிகளும் அற்புதமான வடிவு தான் !

கவிதை(யே) தாருங்கள் என்றால் அருவி போலல்ல, ஆற்றுப் பெருக்காக அள்ளிச் சுருட்டிக் கொண்டு வரும் உங்களிடமிருந்து பெற்றவைகளின் இருப்பு இன்னும் இருக்கிறது சுரபியாக சுரக்க... வரிசைப்படுத்தி வகுடு வருடி வைத்திருக்கிறோம் விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுப்பு நடத்த இன்ஷா அல்லாஹ் !

Yasir said...

கிடு கிடுவென வகிடு கவிதை படித்தாலும் மனதில் தட தட வென மகிழ்ச்சியை ஒவ்வொரு வரிகளும் உண்டாக்கின..மாஷா அல்லாஹ் வியக்கவைக்கின்றது உங்கள் கவித்திறமை...

அதிரை நிருபரின் வடிவு
அதன் பங்களிப்பாளர்களின் & நெறியாளரின் வகிடு

அலாவுதீன்.S. said...

வடிவும் வகிடும்...!
மிக அழகு!

சகோ. அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

sabeer.abushahruk said...

கவியன்பன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

உமது இந்தக் கவிதை உலகத்தரம் வாய்ந்தது. இந்த வார்த்தைகளின் உட்கட்டமைப்பு எதேச்சையானதா விலை கொடுத்து வாங்கியதா? விற்க வேண்டிய கவிதையை அதிரை நிருபருக்காக இலவசமாகத் தந்து பசியாளிக்குப் பந்தி வைத்து விட்டீர்கள்.

இதில் இழையோடும் ரிதம் மயிலிறகாய் வருடுகிறதய்யா! இப்படி மயக்கும் கவிதைகள் எதையும் சாதித்துவிடும் என்றுதான் அர.அல அன்று எச்சரிக்கை மணியடித்தார்.

வாசிக்கத் துவங்கியதுமுதல் இறுதிவரை எல்லாம் மறக்கடித்து உம் வசம் பிடித்து வைத்தது இந்த ஆக்கம்.

சரியான வித்தைக்காரர் நீர்.

என் போன்ற தருமிகளுக்கிடையே நீர் ஒரு ராஜ கவி.

வாழ்க.

sabeer.abushahruk said...

//கன்னம் கொடுக்கும் வடிவு
...காந்தக் குழியின் வகிடு//

ஏற்கனவே விழுந்துகிடக்கும் குழியெனில்...சர்தான். மற்றபடி வழியெல்லாம் வாய்க்கும் குழிகளைவிட்டு தாண்டிச் செல்லவும் :)

sabeer.abushahruk said...

நான் மிகவும் வியந்த வரிகள்:

//தானத்தில் சிறந்த வடிவு
....தூயோன்சொல் விகித வகிடு//

க்ளாஸ், சார்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பான நேயர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

“சுட்டும் விழிச் சுடர்” ஷா.ஹமீத்:
முதன்முதலாய்க் கண்ட வடிவான வாழ்த்து, உங்களின் அழகு தமிழைப் படம்பிடித்துக் காட்டியது; வெளித்தோற்றங்களை நீங்கள் படம்பிடிக்கும் அழகைப் போலவே..

தமிழூற்று அதிரை சித்திக்: இன்ஷா அல்லாஹ் என் வலைப்பூவில் பூக்கும் முன்பாகவே, இனிமேல் தொடர்ந்து அ.நி. தோட்டத்தில் என் கவிதைப் பூக்ககளைப் பறிக்கலாம்.

இலண்டன் வாழ் இளங்கவிஞர் ஜெஹபர்:

உங்களின் அக்கருத்து இக்கவிதையின் ஓரிடத்தில் காணலாம்; ஆம். அலகிட்டு வாய்பாடு அமைப்புடன் யாத்திட்டது இப்பாவினத்தில் வகிடு; அதுவே இப்பாடலின் வடிவு;பெண்ணின் தலை வகிடெடுத்துச் சீவினால் உண்டாகும் வடிவைப் போல் என்பதைக் குறிப்பிட்டுள்ளேன்.அவ்வரிகளில், “வெண்பா / பெண்பால்” என்று எதுகைக்காக எழுதினாலும், உங்களின் நெஞ்சிலிருத்திய இப்பாவினம் “வஞ்சி விருத்தம்”. எல்லாப் பாவினத்திற்கும் அலகு எனும் வகிடு இருப்பின் அஃதே ஒரு வடிவு!

டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா:

புலரும் காலைப் பொழுதில் புன்னகைப் பூக்க வைத்த என் கவிதைக் குழந்தைக்கு நீங்கள் வழங்கிய பாராட்டு முத்தம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியால் நிரம்பியது என் சித்தம். இன்ஷா அல்லாஹ் நேரில்-ஊரில் கற்றவர் சபையில் எனக்காக ஓர் இடமும் தர வேண்டும்.

அன்புநெறியாளர் அபூஇப்றாஹிம்:

இன்ஷா அல்லாஹ் உங்களின் அ.நி.நோக்கி என் கவியருவி மழையாய்த் தொடர்ந்து கொட்டிக் கொண்டேயிருக்கும், நீங்களும் நெறியாளர் எனும் பொறியாளராதலால் “அணைக்கட்டு” எனும் வரிசைக்கட்டில் நிறுத்தி வைத்துத் தேவையான தருணத்தில் திறந்து -பதிந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையிற்றான் இருக்கின்றேன். அதனாற்றான், யான் ஈன்றெடுக்கும் என் கவிதைக் குழந்தைகளை முதன் முதலாக என் சொந்த வலைப்பூத் தொட்டிலில் கிடத்து முன்பாக அ.நி. எனும் “இலக்கியத் தொட்டிலில்” இட்டுவிட்ட பின்னரே என் சொந்த வலைத்தொட்டிலுக்கு மாற்றுவேன்; இஃது உங்கள் மீதும் உங்கள் கவிக்குழுவினர் மீதும் யான் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு என்பதை இச்சபையோர் முன்னிலையில் ஒப்புக் கொண்டேன்.

கல்வியாளர் யாசிர்:

ஓட்டம் எனும் நடையழகு இப்பாவினத்தின் “அளவொத்தச் சீர் அமைப்பும்” உங்களைக் கிடுகிடுவென வாசிக்கவும்;நேசிக்கவும் வைத்தது.

மார்க்கப் பிரச்சாரகர் அன்பர் அலாவுதீன்:

மார்க்கம் அனுமதிக்கும் எல்லைக்குள் என் பாக்கள் இருப்பதனாற்றான், உங்களின் பேராதரவும் பாராட்டும் துஆவும் அடியேனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.




கவிவேந்தர் சபீர்:

சென்ற வாரம் இக்கவிதையை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதும், இதனை வகிடு எனும் அலகிட்டு வடிவு எனும் அழகுறச் செதுக்கிக் கொண்டே யாத்திட்ட வேளையில், இன்ஷா அல்லாஹ் ஆஸ்தானக் கவிஞரின் பொற்கரத்தால் இந்த ஏழைப் புலவனுக்கு அங்கீகாரம் கிட்டும் என்று என் ஆழ்மனம் சொன்னது (”படிக்கட்டுகள்” உளவியலாரின் கூற்றுப்படி ஆழ்மனம் சொல்வது உறுதியானது).கலைஞர் அவர்கள் “கவியன்பன்” என்று வாயால் கூறிப் புகழ்ந்தார் கல்லூரித் தமிழ் மன்ற விழாவில்; இன்று ஆஸ்தானக் கவி “இராஜ கவி” என்கின்றார். பட்டங்களைத் தேடிச் செல்லாமல், பட்டங்கள் தேடி வருகின்றன என்பதால், எல்லாம் அல்லாஹ்வுக்குச் சொந்தம் என்று “உளத்தூய்மையுடன்” ஏற்கிறேன்; அப்பட்டம் என் ஆசான்களிடம் நன்றி கடன் பட்டமைக்குச் சமர்ப்பிக்கின்றேன்.”விலைகொடுத்து வாங்காமல்” எனக்குக் கிட்டிய உன்றன் பேரன்பும் ஆதரவும் இருக்கும் வரை நான் எதை விலைகொடுத்து வாங்குவேன், ஆஸ்தான கவியே?

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே1
எல்லார்க்கும் “ஜஸாக்கல்லாஹ் கைரன்”

தொடர்ந்து என் கவிமழைப் பெய்யும்; இதயக் குடத்தைத் திறந்து வைத்திருங்கள்.

Iqbal M. Salih said...

யெப்பா! இந்த வார்த்தைகளின் வடிவமைப்பு
என் போன்ற சாமான்யனுக்கு பெரும் மலைப்பு!

KALAM SHAICK ABDUL KADER said...

//

யெப்பா! இந்த வார்த்தைகளின் வடிவமைப்பு
என் போன்ற சாமான்யனுக்கு பெரும் மலைப்பு!//

அஃது எப்படிச் சாத்தியம் அல்லது சத்தியம் ஆகும்? பழகு தமிழ்ப் பயிற்றுவிக்கும் எங்கள் ஆசானின் உடன்பிறப்புச் சாமான்யானா? புதுக் கல்லூரியின் புதுக் கவிதைப் புலமையோனாய் புறப்பட்டு வந்து, ஆங்கிலத்திலும் சொல்லாட்சிச் செய்யம் ஆற்றுலுடையவர் எங்ஙனம் சாமானயன் ஆகலாம்?

30 வருடங்கட்கு முன்பாக என்னிடம் கல்வி கற்ற மாணவர்களுடன் நீங்களும் இருந்திருக்க வேண்டும் என்ற என் அவாவினை, அல்லாஹ் ஈண்டு அ.நி. எனும் அதிரைப் பல்கலைக்கழகத்தின் மார்க்கத்துறைப் பேராசானாய் நீங்கள் எங்கட்குப் பாடம் நடத்திக் கொண்டிருப்பதன் வழியாக, அடியேனை உங்களின் மாணவனாய் மாற்றி அமைத்து வைத்திருப்பதை எண்ணி அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் அடியேன்,உங்களைச் சாமான்யன் என்று ஏற்க மாட்டேன்.

உங்களின் பாராட்டுக்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்”

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

தென்னை தோகையின் வகிடெடுத்த அழகை
விசுவல் டேஸ்டாய்!!!!!!!!!!!!!!!!!!!!
காக்காவின் கவிதைக்கு
மேலும் அழகு?!?!?!?!

ZAKIR HUSSAIN said...

//தேசிய தலைமை வடிவு
.....தெளிவாய்ப் பண்ணும் வகிடு//

மெய்யாலுமா?.. காமடி கீமடிபன்லய்ல....

KALAM SHAICK ABDUL KADER said...

என் உறவினரின் உறவினரான அன்புத் தம்பி , “தொழிலதிபர்” சபீர் அவர்கட்கும், உளவியல் மருத்துவர் ஜாஹிர் அவர்கட்கும் “ஜஸாக்கல்லாஹ் கைரன்.
உண்மையில் அ.நி.ஒவ்வொரு ஆக்கத்திற்கும் பொருத்தமானப் படங்களைத்தான் தேர்வு செய்கின்றனர்; அதனால் ஆக்கம் எழுதும் எங்கட்குப் படத்தைத் தெரிவு செய்யும் பணிச் சுமையைக் குறைக்கும் நெறியாளரின் அற்புதத் திறமைக்கு இவ்வண்ணம் படத்தேர்வு செய்வதும் ஓர் எடுத்துக்காட்டு!

சகோ.ஜாஹிர்: “காமெடி” பண்ணவில்லை; உற்று நோக்கினால், நீங்களும், டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களும் அடிக்கடி ஆக்கங்களில் வலியுறுத்தும் ஓர் உணமையைத் தான் சுருக்கமாக இவ்வரிகளில் சொன்னேன். ஆம். தேசத்தின் நல்லாட்சி எனும் வடிவு, தெளிவாய்த் திட்டமிட்டு- அமைச்சர்கட்கானத் துறைகளைப் பங்கிடும் -வகிடு அமைவதில் உள்ளது என்பதே இவ்வரிகள் கூறும் கருத்து ஆகும்.

ZAKIR HUSSAIN said...

//அமைச்சர்கட்கானத் துறைகளைப் பங்கிடும் -வகிடு அமைவதில் உள்ளது என்பதே இவ்வரிகள் கூறும் கருத்து ஆகும்.//

வகிடு அமையாததால்தான் காமெடி பண்ணலியே?? என கேட்டு எழுதினேன்.

பாரதி தொடக்கம் எல்லா கவிஞர்களும் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். கவிதையாக வடிக்கிறார்கள் , ஏனோ ஆட்சி செய்பவர்கள் தமிழை பாராட்டி விட்டு கருத்தை விட்டு விடுகிறார்கள்

ZAKIR HUSSAIN said...

To Bro Abulkalam,

சபீரை தொழிலதிபர் என்று எழுதியிருப்பது எங்கள் நண்பர்கள் கூட்டத்துக்கு தெரிந்தால் ரொம்ப ஆச்சர்யப்படுவார்கள். ஏனெனில் சபீர் கோடைகாலத்தில் சின்ன பசங்க தெருவில் ஆரம்பிக்கும் சர்பத் கடை கூட போட்டது கிடையாது.

KALAM SHAICK ABDUL KADER said...

//பாரதி தொடக்கம் எல்லா கவிஞர்களும் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.//


தேடலும் தீயதைச் சாடலும் உட்பொருளாய்ப்
பாடலில் வைப்பதே பா

KALAM SHAICK ABDUL KADER said...

To Bro. Zahir,

நான் தொழிலதிபர் என்று சொன்னது, திருப்பூரில் வணிகம் செய்யும் மு.செ.மு. சபீர் அஹ்மத் அவர்களைத்தான்; அப்படித்தானே "விழிப்புணர்வுப் பக்கத்தில்" பேட்டித் தலைப்பில் இட்டிருக்கின்றார்கள்; மேலும், எனக்கு அச்சகோதரர் இன்று எழுதியிருந்த தனிமடலிலும் அவர்களின் வணிகத்திறமைப் பளிச்சிடுவதைக் காண்கின்றேன்; ஒரு வணிகவியல் பட்டதாரியாகவும்- வணிகவியலைப் படித்துக் கொடுக்கும் ஆசானாகவும் - வணிகம் செய்த வாப்பவுக்குப் பிள்ளையாகவும் இருந்து எட்டு வயதிலிருந்தே சொந்தக் கடையினை நடத்தும் வாய்ப்பும் பயிற்சியும் கிடைத்த- பேறு பெற்ற அடியேனால், திருப்பூர் சபீர் அவர்கள் வளர்ந்துவரும் தொழில் அதிபர் என்பதைக் கணிப்பதில் சிக்கல் இருக்காது என்பதும் அடியேனின் திண்ணம் மிக்க எண்ணம்.

Kavianban KALAM, Adirampattinam said...

வார்த்தைச் சித்தர் மகுடக் கவிஞர் க்ரவுன் அவர்களின் கண்ணில் என் கவிதை “வகிடும் வடிவும்” படவில்லையா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு