Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பர்தா தடையால் புதிய மருத்துவ பர்தா அறிமுகம்....! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2012 | , , , , ,

அஸ்ஸலாமுஅலைக்கும்.

மேற்கத்திய நாடுகளான பிரான்ஸ் போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா முறைக்கு (முகம் மறைப்பதற்கு) தடை போடப்பட்டுள்ளதை நாம் அறிந்ததே!..

அதை உடைத்தெறியும் விதமாக மிக நேர்த்தியாக ஒரு விடியோ ஒன்று தற்போது வெளியாகி பார்ப்பவர்களை பிரமிக்க மட்டுமல்ல நிறையவே சிந்திக்க வைக்கின்றது.

எங்களுக்கு சூது-வாது என்றால் என்னவென்றே தெரியாதுங்கோ....!

அந்த வீடியோ காட்சி உங்களுக்காக.....!


காணொளி பகிர்வு : அதிரை முஜீப்

அதிரைநிருபர் குழு

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 20 5

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2012 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

மனைவியிடம் கணவனின் உரிமைகள்:

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன்:4:34)

''ஒருவன் தன் மனைவியை இல்லறத்திற்கு அழைத்து, அவள் வரமறுத்து, இதனால் அவள் மீது அவன் கோபமாக இருந்தால், விடியும் வரை வானவர்கள் அந்தப் பெண்ணை சபிப்பார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 281)

''ஒரு பெண், அவளின் கணவன் ஊரில் இருக்கும் சமயம் அவனின் அனுமதியின்றி (நபில்) நோன்பு வைத்தல் கூடாது. மேலும் அவனின் அனுமதியின்றி அவனது வீட்டினுள் (எவரையும்) அனுதிக்கக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 282)

''நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் அவரது பொறுப்புப்பற்றி கேள்வி கேட்கப்படுவீர். ஒரு தலைவர் பொறுப்பாளியாவார். ஒரு மனிதர், தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளியாவார். ஒரு பெண் தன் கணவனின் வீடு, மற்றும் குழந்தைக்கு பொறுப்பாளியாவாள். நீங்கள்  அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் தன் பொறுப்புப் பற்றி கேள்வி கேட்கப்படுவீர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 283)

''ஒரு மனிதரை மற்றொரு மனிதருக்கு 'ஸஜ்தா' செய்ய நான் கட்டளையிடுதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளின் கணவனுக்கு 'ஸஜ்தா' செய்யும்படி கட்டளையிட்டிருப்பேன்'' என நபி(ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 285)
  
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

 இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன்.S

நபிமணியும் நகைச்சுவையும்...! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2012 | , ,

தொடர் - 12
அமீருல் முஃமினீனும் அந்-நுஐமானும்...

படைப்புகளில் எல்லாம் மகிமையானவர், மனித குலத்தின் மாண்பாளர் நம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு, அண்ணல் நபியின் 

எளிமையான, ஆனால் எல்லா வகையிலும் மாட்சிமை பொருந்திய, சக்தியும் யுக்தியும் நிறைந்த போதனைப் பிரகாரம் நேர்வழி நடந்த குலபாயே ராஷிதீன்களில் (*)  மூன்றாவது கலீபா நமது உதுமான்(ரலி) அவர்கள் ஆவர்!

முதன்முதலில் தூய இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட எட்டு நபர்களில் ஏழாவது இடத்தையும் சுவனத்தைக்கொண்டு இவ்வுலகிலேயே அஷரத்துல் முபஷ்ஷரா (**) என்று  நன்மாராயம் பெற்ற பதின்மரில் மூன்றாவது இடத்தையும் பெறுபவர் உதுமான் (ரலி) அவர்கள்!

மிக முக்கியமாக, ஒவ்வொரு நபிக்கும் மறுமையில் ஒரு நெருங்கிய தோழருண்டு. தேன் சுரக்கும் சொர்க்க லோகம், தூயவர்கள் வாழும் இல்லம்! அங்கே "எவர் என் ஆத்ம நண்பர் என்றால், அவர்தாம் உதுமான் இப்னு அஃப்பான்" என்ற அல்லாஹ்வின் தூதரின் ஆத்மார்த்த நட்பு எனும் அபூர்வமான, நிலையான பாக்கியத்தையும் பெற்றவர்!

வெற்றிகரமான வணிகராகவும் குறைஷிகளில் மாபெரும் செல்வந்தராகவும் திகழ்ந்த உதுமான் கனி (ரலி) அவர்கள், பல சமயங்களில் சன்மார்க்கம் செழிக்க தன்  செல்வத்தை வாரி வழங்கினார்கள். குறிப்பாக,  தபூக் யுத்தத்தின்போது, மொத்தம் ஆயிரம் ஒட்டகங்களும் பதினாயிரம் திர்ஹங்களும் நிதியாக அல்லாஹ்வின் தூதரிடம் வழங்கினார்கள்!

யூசுப் நபியின் வசீகரமான அழகைக் காண விரும்புபவர்கள், உதுமான் இப்னு அஃப்பானை கண்டுகொள்ளுங்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களால், அவர்தம் எழில் தோற்றம் குறித்துப் பாராட்டைப் பெற்றவர். அண்ணலாரின் இரு பெண்மக்களான ருக்கையாவையும் அதன்பின், உம்முகுல்தூமையும் மணமுடித்த, மாண்புமிக்க மருமகன் ஆதலால், துன்நூரைன் (இரு ஒளிகள் உடையவர்) எனும் சிறப்புப் பெயர் பெற்றவர்!

நெஞ்சின் இருள்கள் நீங்கிடச்செய்யும் நேரிய வாழ்வு ஓங்கிடச்செய்யும் அருள்மறையைத் தொகுத்தளிக்கும் அரும் பணியை ஆற்றியவர் அவர்!

"நான் நாணத்தின் நகர் என்றால், அதன் நுழைவாயில் உதுமான்" என்று அல்லாஹ்வின் தூதரால் அடையாளம் காட்டப்பட்டவர்.

நபி பெருமானின் நல்லுரைகள் பேணி நானிலத்தில் வாழும் நல்லவர்களின் தலைவராக, நீதி மிகுந்த, நெறி மிகுந்த ஆட்சியாளராக அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி)அவர்கள் அரசோட்சிய காலம் அது!

அன்று மதீனாவில் மஸ்ஜிதுன் நபவீ வழக்கம்போல் மக்களால் நிரம்பி வழிந்தது.

அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி)ன்  மனைவி, நபிகளாரின் நெருங்கிய தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) உடைய சகோதரி என்பதை முன்னரே நாம் கண்டோம்.  அந்த கோத்திரத்தில் கண்பார்வை அற்றுப் போய்விட்ட மக்ரமாஹ் பின் நஃபல் என்ற வயோதிகர் இருந்தார். வயது வெறும் 115 தான்! இவர் அந்-நுஐமானின் மனைவிக்கு பாட்டனார் முறை.

மனைவியின் நெருங்கிய உறவினர் என்ற உரிமையில், மக்ரமாஹ்வை சற்று அதிகப்படியாகவே சீண்டிப்பார்ப்பதும் கிண்டல் செய்வதும் அந்-நுஐமானின் (***) வாடிக்கையாகவே இருந்தது!

பள்ளியில் அமர்ந்திருந்த மக்ரமாஹ் வுக்கு, அடிக்கடி வயோதிகர்களுக்கே  இயல்பாக வரும் உணர்வாகிய சிறுநீர் உபாதை தோன்றிவிட்டது. தன் கைத்தடியை ஊன்றிக் கொண்டே தள்ளாடி நடந்து சென்று ஓரிடம் தேர்ந்தெடுத்து சிறுநீர் கழிக்க அமர முயன்ற அவரைப் பார்த்து  கும்பலில் இருந்து கூச்சல் எழுந்தது! அவர் இன்னும் தள்ளிப்போக வேண்டும் என்று கும்பலின் அதிரொலிகளால் ஆட்சேபிக்கப்பட்டார். தடம் புரியாத தவிப்பில், சரியான இடம் கண்டுபிடிக்கத் தடுமாற்றம் அந்தகர் அவருக்கு!

என் இன்னல் தீர்ப்பதில் உதவிக்கு  எவர் முன் வருவர்? என்று ஏங்கி நின்ற அவருக்கு ஆதரவாக, ஒரு குரல் ஒலித்தது!

"உதவ நான் தயார்!" அந்தக்குரல் மக்ரமாஹ் வுக்கு மட்டும் தெரிந்ததல்ல!

அனைவருக்கும் அறிமுகமான அதே கிண்டலடிக்கும் கீச்சுக் குரல்தான்! அது யாருமல்ல. நம் அந்-நுஐமான் (ரலி)தான்!

அதாவது, அவரைப் பொறுத்தவரை மக்ரமாஹ்வை வைத்து ஒரு வேடிக்கை செய்து பார்க்க வசமான ஒரு வாய்ப்பு கிட்டி விட்டது!

"வாருங்கள் பாட்டனாரே!, ஒரு தோதான இடத்திற்கு உங்களை கூட்டிச் செல்கிறேன்" என்று என்ன செய்தார் தெரியுமா?

முன்பு இருந்த இடத்திலிருந்து சில அடி தூரமே  தள்ளி அவரை அழைத்துச்சென்று, இதுதான் வாகான  இடம். நான் தங்கள் முன்னால் நின்று மறைத்துக் கொள்கிறேன். இப்போது நீங்கள் தாராளமாகப் பெய்யலாம் என்று கிழவருக்கு தைரியம் கொடுத்துவிட்டு, மக்ரமாஹ் சிறுநீர் கழிக்கத் துவங்கியதும் சுற்றுமுற்றும் பார்த்த அந்-நுஐமான் வயோதிகரை அதே நிலையில் அப்படியே  விட்டுவிட்டு, நைஸாக நழுவி ஓடிவிட்டார்.

அந்த இடம் இன்னும் பள்ளியின் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்ததால், மக்களுக்கு அவர் மறைவாகத் தோன்றவில்லை!

சப்தம் எழுந்ததும் மக்ரமாஹ் வுக்கு மானப் பிரச்சினை ஆகிவிட்டது! மக்களில் சிலர் அவரை அதட்டி, ஆட்சேபம் செய்ததில் மிகவும் சங்கடப் பட்டுப்போன மக்ரமாஹ் சபதம் செய்து நின்றார். "இப்படி என்னை மோசம் செய்த அவனை நிச்சயமாக, என் கைத்தடியாலேயே ஓங்கி அடித்து அவன் மண்டையைப் பிளப்பேன்!"

அடுத்த நாள், அந்-நுஐமான் மஸ்ஜிதுக்குள் நுழையுமுன்பே, அங்கு மக்ரமாஹ் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டார்.

சற்று தூரத்தில் அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். "தொழுகை" அவர்களுக்கு அண்ணலாரின் பாசறையில் பயின்ற நேரடிப் பயிற்சி அல்லவா? எனவே, தக்பீர் கட்டி தேனமுதம் திருமறையை உகப்பான முறையில் உதுமான் (ரலி) அவர்கள் ஓதத் தொடங்கி விட்டார்கள் என்றால், அதன்பிறகு, இந்த உலகையே மறந்து அதன் இனிமையிலேயே லயித்து விடுவார்கள்!

கிழவர் மக்ரமாஹ்வை  மீண்டும் சீண்டிப் பார்க்கத் தோன்றியது அந்-நுஐமானுக்கு!

நெருங்கி வந்தார். குரலை கனைத்து வைத்துகொண்டார். தொனியை அடிக்குரலில் அழுத்திக்கொண்டு "பெரியவர் அவர்களே!

அந்-நுஐமான் எங்கிருக்கிறான் என்று உங்களுக்குக் காட்டித் தந்தால்  அது உதவியாக இருக்குமா" என்று கேட்டார் நயமாக!

நேற்று நடந்த அந்-நுஐமானின் அட்டூழியம் நினைவுக்கு வந்து ஆவேசமானது. "பேராண்டி! உடனே அந்த உதவியைச் செய்! எங்கே அந்தக் காட்டுப் பயல்? காட்டு உடனே" என்றார், நேற்றைய சபதத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன்!

சற்றுத் தள்ளி, தொழுகையில் ஒன்றிப் போய் இருந்த அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்களுக்கு நேர் பின்னால் கொண்டுபோய் கிழவரை சரியாக நிறுத்தினார். இதோ, அந்-நுஐமான். உங்களுக்கு எதிரேதான் நிற்கிறான். கவனித்துக் கொள்ளுங்கள் என்று கிழவரின் காதுக்குள் அவசரமாய் சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்!

மனதில் தேக்கி வைத்திருந்த ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி, இருகைகளாலும் அவர் கைத்தடியை உயரே தூக்கி ஒரே போடாக போடுவதற்கு ஓங்கினாரே கிழவர்!

அவ்வளவுதான்! உடனே பாய்ந்து சென்று மக்ரமாஹ்வை பின்னால் இழுத்துப் போட்டார்  ஒருவர். மக்களிடையே ஒரே கூச்சலும் குழப்பமும் சேர்ந்துகொண்டது!

புனித மஸ்ஜிதுன் நபவீயில் இருந்து கொண்டு அமீருல் முஃமினேயே தாக்கும் முயற்சியா? என்று ஒரே அமளி துமளியாய் ஆகிப்போனது! கிழவரைப் பிடித்து வைத்துகொண்டு ஆளாளுக்கு ஏசத்தொடங்கினார்கள்! முதலில் அவருக்குப் புரியவில்லை!

பிறகுதான், ஒருமுறை அல்ல! இருமுறை, தான் அந்-நுஐமானால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அங்கிருந்த அனைவருக்கும் விளக்கி வைத்து வருத்தம் தெரிவித்தார்.

அந்-நுஐமானைப் பிடித்து வர சிலர் எழுந்தபோது, அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்கள் மக்களைக் கட்டுப் படுத்தி விட்டார்கள்.

அந்-நுஐமானை அவர் வழியிலேயே விட்டு விடுங்கள். என்னதான் எப்படி இருந்தாலும் அவர் பத்ருப் போரில் பங்கு கொண்ட சகோதரர் (****)

என்று புன்னகைத்த வண்ணம் நவின்றார்கள்  நிலவில் மலர்ந்திடும் அல்லிமலரைப்போன்ற மென்மையானவராகவும் பொதுவாழ்க்கையிலே சாந்தம் கொண்ட மிகவும் நல்லவராகவும் திகழ்ந்த அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்கள்!

***********************************************************

(*) அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு கலீபாவாக ஆகி நேர்வழியில் ஆட்சி செய்த நம்பிக்கையாளர்களின் தளபதிகள்.

(**) இவ்வுலகில் வாழும்போதே அல்லாஹ்வின் தூதரால் சுவர்க்கவாசிகள் என்று நற்செய்தி வழங்கப்பட்ட பத்து முக்கியமான நபித்தோழர்கள்: (1) அபுபக்கர் (ரலி), (2)உமர் (ரலி) (3)உதுமான் (ரலி) (4)அலீய் (ரலி) (5)தல்ஹா (ரலி) (6)ஜுபைர் (ரலி) (7)அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8) ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) (9) சயீது இப்னு ஸைத் (ரலி) (10) அபூ உபைதா இப்னு ஜர்ரா (ரலி)

(***) அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி அவர்களை முன் மாதிரியாகக் கொண்டே, பிற்காலத்தில் அல்-அஸ்மயீ, அபூநுவாஸ், முல்லா நஸ்ருத்தீன் போன்ற நகைச்சுவை வித்தகர்கள் தோன்றினர் என்பர் வரலாற்று விற்பன்னர்கள்.

(****) இப்போரில் முஸ்லிம்கள் இறைமறுப்பாளர்களை வெட்டவில்லை என்றும் தானே வெட்டியதாகவும் அண்ணல் நபி(ஸல்)  அவர்கள் இறை மறுப்பவர்கள் மீது கற்களை எறிய  வில்லை என்றும் தானே எறிந்ததாகவும் தூயோன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்  திருமறையில் குறிப்பிடுகின்றான் (8:17)
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M.ஸாலிஹ்

பிலால் நகர் தாருத் தர்பியாவில் அதிரை தாருத் தவ்ஹீத் நடத்தும் பெண்கள் பயான் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2012 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அல்லாஹ்வின் பேரருளால் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினால் பிலால் நகரில் புத்தம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாருத் தர்பிய்யா மையத்தில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (30-11-2012)  அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு : "இளைய தலைமுறையினரின் எதிர்காலம்"

சிறப்புரை : அஃப்ழலுல் உலமா ஷஃபான், ஆலிமா ஸித்தீக்கியா (முதல்வர், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, அதிரை)

பிலால் நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருக்கும் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.

அதிமுக்கியமாக, ஆண்களுக்கு தனியிட வசதியுண்டு.

புதிய தர்பியா மையம் சிறப்புடனும் வலிமையுடனும் செயல்பட வாழ்த்துகிறோம் அதற்காக பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...


அதிரைநிருபர் குழு

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை - 6 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2012 |

தொடர்கிறது - 6

ஊரிலிருந்து (தற்போது நிறுத்தப்பட்டு விட்ட) பட்டுக்கோட்டை-திருவாரூர் இரயிலில் புறப்பட்டு, திருவாரூரிலிருந்து கம்பன் எக்ஸ்பிரஸில் சென்னை வந்து சேர்ந்தோம்.

ஊரிலிருந்து கிளம்பிய முதல் திருவாரூர் வரை அந்த இரயில் நிறைய பள்ளிக் குழந்தைகள், அலுவலகம் செல்வோரைக் காண முடிந்தது. அந்த இரயில் நிறுத்தப்பட்டு விட்டதால் இனி அவர்களுக்கு சிரமம்தான். அதேவேளை, நமக்கு அகல இரயில் பாதை கிடைப்பதை எண்ணி சந்தோஷப்பட வேண்டிய நேரம், அது முடிய ஆறு அல்லது ஏழு வருடங்கள் ஆகும் என்ற செய்தியும் அது மிக கூடுதலான காலம் என்றே புலப்படுகிறது. காரணம், ஆட்சி மாறினாலோ, அல்லது அரசியல் சூழ்நிலைகளால், சூழ்சிகளால் பல திட்டங்கள் நம் இந்தியாவில் முடக்கப்பட்டு விடுகின்றன.


எனவே, துரிதமாக முடிந்தால் நம் நாடு அல்ல, அமெரிக்கா, மலேஷியா, சீனா போன்ற நாடுகளிடம் காண்ட்ராக்ட் விடால் துரிதமாக முடியும் !?!!

அதிகாலை 5:30 மணிக்கு கம்பன் எக்பிரஸ் சென்னை வந்து சேர்ந்தது. சென்னையிலிருந்து மறுநாள் அதிகாலைப் பயணம். பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மூலம் லண்டன் வழியாக லண்டனிலிருந்து டால்லாஸ் / சான்பிரான்ஸிஸ்கோ வரை அமெரிக்கா ஏர்லைன்சில் டிக்கெட் புக் செய்திருந்தேன்.

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் புறப்பட்டது, சில நேரங்களிலேயே "muslim food for you" என்று எனக்கு உணவு பரிமாறப்பட்டது. சுடச்சுட மீன் உணவு மிகவு ருசியாக இருந்தது. அவித்த உருளைக் கிழங்கு, பழங்கள் அதன் சர்வீசும் உணவும் எனக்கு மிகவும் பிடித்து போயிருந்தது.

சுமார் 10:30 மணி நேரப் பயணம், லண்டன் நேரம் காலை 11:20 மணிக்கு ஹித்ரோ விமான நிலையம் வந்து சேர்ந்தேன்.


டிரான்சிட் பயணம் என்பதால் லண்டன் ஏர்போர்ட்டை சுற்றி வந்து கொண்டிருந்தேன். அடுத்த விமானம், பகல் 03:20க்குதான் எனவே, நேரம் இருந்தது நிறைய முஸ்லிம்களை அங்கே காண முடிந்தது.

இதற்கிடையில், லுஹர், அசரை ஜம்மு கசராக முடித்து விடலாம், என்றெண்ணித் தொழுவதற்கு இடம் தேடும்போது Prayer Hall for All faith மேல் மாடியைச் சுட்டிக் காட்டிய அடையாள சின்னத்தை நோக்கிச் சென்றால் "மாஷா அல்லாஹ்" அங்கிருந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களாவே இருந்தார்கள்.


ஏக இறைவன் அல்லாஹ்வை வணங்க உலகின் எந்த விமான முனையத்திலிருந்து வந்தாலும், அங்கு வந்து தொழுதுவிட்டு செல்லும் காட்சி, நமக்கு இஸ்லாம் ஒரு universal way of life என்பதை இங்கும் காட்டுகிறது அல்லவா ?

அந்த prayer hallலின் உள்ளே நுழைந்தவுடன், சிலர் தொழத் தயார் நிலையில் இருந்தனர், சரி தயம்மும் செய்து கொள்வோம் என்று எண்ணி சுவற்றின் மேல் கைவைக்கப் போகும்போது அங்குள்ள ஒருவர் 'அதை' கை காட்டி இதில் தயம்மும் செய்யும்படி சொன்னார், நானும் செய்தேன். ஆனால், அப்படி 'அது' அங்கு இருப்பது எனக்கு அதிர்ச்சியாகவே உள்ளது.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
A.R.அப்துல் லத்தீஃப்

வினாடி வினா போட்டி முடிவுகள் - மாணவர்கள் பிரிவு :: காணொளி Updated ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | November 27, 2012 | , , , , ,


இன்று 27-11-2012 அதிரை பள்ளிகளுக்கிடையே மாணவர்கள் பிரிவுக்கான வினாடி வினா போட்டி மிகச் சிறப்பாக இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

மாணவர்கள் ஆர்வமுடனும் துடிப்புடனும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

நிகழ்வின் தலைமை மற்றும் அறிமுக உரையை அதிரை தாரூத் தவ்ஹீத் அமீர், தமிழ் அறிஞர் அதிரை அஹ்மது B.A., அவர்கள் அற்புதமான உரையை ஆற்றினார்கள்.

மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை, ஆரம்ப காலங்களில் வினாடி வினா போட்டி என்றால் அங்கே அதிரை மாணாக்களின் மனம் வென்ற ஆசான் ஒருவரின் நினைவு வரும் அவர்கள்தான் S.K.M.ஹாஜா முகைதீன் M.A. BSc., B.T., அவர்கள் மிகச் சிறப்புடன் நடத்தினார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகள் விபரம்

முதல் பரிசு : இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி
பரிசு தொகை: ரூ.5,000/-
வழங்கியவர்கள்: அல்நூர் ஹஜ் சர்வீஸ்

இரண்டாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)
பரிசு தொகை: ரூ 3,000/-
வழங்கியவர்கள்: சுப்ரீம் கார்கோ, தமாம்

மூன்றாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)
பரிசு தொகை: ரூ 2,000/-
வழங்கியவர்கள்: அதிரை எஜுகேஷனல் மிஷன்

மேலும் வினாடி வினா நிழ்வை சிறப்பித்தவர்கள் : மூத்த சகோதரர்கள் முஹம்மது ஃபாரூக், M.A.அப்துல் காதர், இபுறாஹீம் அன்சாரி, நூர் முஹம்மது, பேராசிரியை தஸ்லீமா, மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் ஆஃப்தா பேகம், கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள்.

நிறைவாக நன்றியுரை: மூத்த சகோதரர் இப்றாஹீம் அன்சாரி,  அதிரைநிருபர் குழு சார்பாக.

நிகழ்சிக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து, நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற பேருதவியாக இருந்த சகோதரர் ஹசன் (அபு இஸ்மாயில்) மற்றும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளுக்கு உதவி செய்த இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளி ஆசிரியர்கள், மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அற்புதமான இந்த நிகழ்வின் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு இன்ஷா அல்லாஹ்....









முதல் பரிசு : இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி



இரண்டாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)


மூன்றாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)



அதிரைநிருபர் குழு

வினாடி வினா போட்டி முடிவுகள் - மாணவிகள் பிரிவு : காணொளி இணைப்பு 20

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2012 | , , , , , ,


இன்று 26-11-2012 அதிரை பள்ளிகளுக்கிடையே மாணவிகள் பிரிவுக்கான வினாடி வினா போட்டி மிகச் சிறப்பாக இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

மாணவிகள் ஆர்வமுடனும் துடிப்புடனும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

நிகழ்வின் தலைமை மற்றும் அறிமுக உரையை காதிர் முகைதீன் கல்லூரி முன்னால் முதல்வர் பேராசிரியர் அப்துல் காதர் M.A. Mphil. அவர்கள், அவர்களுக்கே உரிய பாணியில் கம்பீரமாகவும் உணர்வுபூர்மாகவும் ஆற்றினார்கள்.

மாணவிகளுக்கான வினாடி வினா போட்டியை திறம்பட நடத்தியவர்கள் பேராசிரியை தஸ்லீமா M.A. Mphil., பேராசிரியை ஆயிஷா மரியம் MSc., Mphil., BEd.

போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகள் விபரம்

முதல் பரிசு : ஆக்ஸ்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி
பரிசு தொகை: ரூ.5,000/-
வழங்கியவர்கள்: அல்நூர் ஹஜ் சர்வீஸ்

இரண்டாம் பரிசு: இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி
பரிசு தொகை: ரூ 3,000/-
வழங்கியவர்கள்: ஷப்னம் மினி டவர்ஸ்

மூன்றாம் பரிசு: அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி
பரிசு தொகை: ரூ 2,000/-
வழங்கியவர்கள்: ஃபேமிலி மார்ட் மற்றும் ஃபேமிலி ரெஸ்டரண்ட்

மேலும் வினாடி வினா நிழ்வை சிறப்பித்தவர்கள் : மூத்த சகோதரர்கள் முஹம்மது ஃபாரூக், S.K.M.ஹாஜா முகைதீன், இபுராஹீம் அன்சாரி, நூர் முஹம்மது மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் ஆஃப்தா பேகம், கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள்.

நிறைவாக நன்றியுரை: M.தாஜுதீன்,  அதிரைநிருபர் அமீர்.

நிகழ்சிக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து, நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற பேருதவியாக இருந்த சகோதரர் ஹசன் (அபு இஸ்மாயில்) மற்றும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளுக்கு உதவி செய்த சகோதரிகள் Y. சபீரா ,  M.S. ராபியா ஆகியோருக்கும், இமாம் ஷாஃபி (ரஹ்) நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அற்புதமான இந்த நிகழ்வின் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு



முதல் பரிசு : ஆக்ஸ்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி


இரண்டாம் பரிசு: இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி


மூன்றாம் பரிசு: அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி




அடுத்த போட்டி நாளை (27-11-2012) மாணவர்களுக்கிடையே நடைபெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் குழு

எனக்குத் தெரிந்த இஸ்லாம் - காணொளி - 2 தொடர்கிறது... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2012 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்றைய சூழலில் பொழுபோக்கவென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய  அவசியமே இல்லை என்று சொல்லுமளவுக்கு தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வீட்டுக்கு வீடு வரவேற்பறை மட்டுமல்ல, உறங்கும் உறைவிடம் வரை நீண்டிருக்கிறது.

விளைவு, அதனால் பாதிப்படைவது சின்னஞ்சிறு குழந்தைகள்தான் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா? இளம் சிறார்களை அவர்களின் பசுமையான கவனத்தை இறைநம்பிக்கையின்பாலும், நல்ல விஷயங்களை கற்றுக் கொடுப்பதனாலும் பக்குவப்படுத்தினால் எதிர்கால சந்ததியினர் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை இன்ஷா அல்லாஹ்.

சின்னஞ்சிறு குழந்தைகளின் சுயமுயற்சியும் பெற்றோரின் ஒத்துழைப்பும் ஒருங்கே அமைந்தால் சமுதாயத்திற்கு அற்புதமான நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லலாம் அதன்படி அவர்களும் நடக்கலாம் என்ற நம்பிக்கையூட்டும் மற்றுமொரு காணொளி.

சிறப்புரை : செல்வி ஷஹ்லா பின்த் ஷஃபி அஹ்மது.


அதிரைநிருபர் குழு

வாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 10 19

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2012 | , ,

தந்தை வழி உறவு...

ஐந்து வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பங்காளி அதன் பின் பகையாளி என்பது முதுமொழி இது பல இடங்களில் பரம்பரை சொத்துக்கள் பிரித்து கொள்வதில் ஏற்படும் பகை. இவைகளால் பிரியும் சகோதரர்கள் கூட அண்ணனின் பிள்ளைகளை வழியில் கண்டால் பாசமாக பேச எத்தனிப்பார்கள்.

அண்ணனின் மகன் நல்ல நிலையில் இருப்பதை, புகழ் பெற்ற மருத்துவராகவோ, வழக்குரைஞராகவோ திகழும் போது என் அண்ணனின் மகன் என்று புளங்காகிதம் அடையும் சித்தப்பர்களை காண முடியும். தாய் வழி சொந்தம் போல் நெருங்கிய பாசப் பிணைப்புகள் காணப்படவில்லை என்றாலும், சில சமயங்களில் கஞ்சி ஊற்ற ஆளில்லை என்றாலும் கச்சல் கட்ட ஆளுண்டு என்ற பழமொழிக்கு தகுந்தார் போல் தார்மீக ஆதரவு என்றும் கிடைக்கும்.

அண்ணன் குடும்பத்தில் இடர்பாடுகள் ஏற்படும் போது தம்பிமார்களின் உதவி அபரிதமானது.

*தாய் வழி சொந்தம் தானே வந்து ஒட்டிக்கொள்ளும் சொந்தம்.

*தந்தை வழி சொந்தங்களை நாம் சென்று வளர்த்துக்கொள்ள வேண்டும்.

*தந்தையோடு உடன் பிறந்த சகோதரி, அத்தை (மாமி) இவர்களின் பாசம் தானாக வராது ஆனால் நாம் சென்று பார்க்கும் போது. அவர்கள் காட்டும் பாசம் இனிமையானது, இறகுகளால் வருடும் வசந்தம் அது சொல்லில் அடங்காது மாமி என்று நமதூரில் அழைக்கப்படும் அற்புதமான உறவு.

மாலை நேரங்களில் சென்று மாமி(மார்களை)யை பார்க்கும் சிறு பிள்ளைகளுக்கு கிடைக்கும் உபசரிப்புகளும் அவர்களால் வழங்கப்படும் தின்பண்டங்கள் அல்லது காசு என்று கொடுத்து மகிழும் மாமி என்ற அழகிய உறவு. உடன் பிறந்த சகோதரனின் பிள்ளை என்ற பாசம் சொந்த சகோதரனிடம் பாசம் காட்டுவது போல் உணர்வாக இருக்கும்.

*தாய் வழி உறவு என்றும் கிடைக்கும் உணவு, தந்தை வழி உறவு சிறப்பு பதார்த்தம் போன்றது. எபோதாவது ஒரு முறை சாப்பிடுவது போல் தந்தை வழி உறவையும் எப்போதாவது ஒரு முறை சந்திப்பதே நலம்.

*தந்தை வழி சொந்தத்தின் அருமை, நமக்கு ஏதாவது ஆபத்தான நிலை வரும்போது புரியும்.

*தந்தையை இழக்க நேரிட்டால் தந்தையின் உடன்பிறனந்தவர்கள் அண்ணனின் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள முன்வரும் நிலை இன்றி அமையாத ஒன்று.

*ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு எல்லா வகையான உறவின் ஆதரவும் இருக்க வேண்டும் என்ற என்னத்தை ஊட்ட வேண்டும் பெரிய தன்தை, சிறிய தந்தை, மாமி ஆகியோர் பற்றிய நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பிள்ளைகளும் உறவை நாடி செல்லும் 

*தாயில்லா பிள்ளை, தந்தையை இழந்த பிள்ளை என்று இரண்டில் ஒன்றுக்கு ஏற்படும் பேரிழப்பு தாய் வழியே தாங்கி நிற்கும் என்றாலும் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு தந்தை வழி சொந்தங்கள் உதவ முன் வருவார்கள் என்பதை காண முடிகிறது.

*தாய் வழி சொந்தங்களின் பாசம் தானே வரும், தந்தை வழி  சொந்தங்கள் நாம் தேடி சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பதிய விரும்புகிறேன்.

*ஒரு வாசகர் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார் தாய் வழி சொந்தம் இயற்கையாக அன்பு செலுத்த கூடியவை என்று கூறி இருந்தீர்கள்.ஆனால் இடர்பாடுகள் வந்தால் காக்கை கூட்டத்தில் கல் எறிந்தால் கலைவது போல் கலைந்து விடுவார்கள். தந்தை வழி சொந்தங்கள் தந்தைக்கு இடர் பாடுகள் வந்த போது அவர் சகோதரர்  முன் வந்து அவர் கஷ்டத்தை நீக்க முன் வந்தது மட்டுமல்லாமல் அவர் பிள்ளைகள் வளர்ப்பதற்கு உறுதுணையாய் இருப்பார்கள் என்பதை தாங்கள் பதிய வேண்டும் என கேட்டுகொண்டார். பெரும் இடர்பாடு வந்தால் தந்தை வழி சொந்தம் உதவும் என்பதை உணர முடிகிறது.

*பிள்ளைகளிடம் பகையை மிகை படுத்தி கூறி தந்தை வழி மீது துவேசம் கொள்ள செய்வதும். நல்லதை கூறி பாசம் பெற செய்வதும், தாயிடமே உள்ளது கூடுதல் சொந்தங்கள் இருத்தல் நலம் தானே!!.
உறவுகள் தொடரும்...
அதிரை சித்தீக்

பேசும் படம் - தொடர்கிறது.... 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2012 | , ,



சேர்மேன் வாடி அருகே யானை பிடிக்க குழி வெட்டி வைத்துள்ளார்களோ !?


தக்வாபள்ளியின் சுற்றுசுவரில் ஏற்பட்ட காயம் அதிரையர்களின் மனதில் ஆறாத சுவடு ! 


இப்படியோ போய் லெஃப்ட்ல திரும்புனா மாட்டுக்கறி கடை இது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ நம்ம ஊரு தலைங்களுக்கு நல்லவே தெரியும் என்பது சொல்லித்தான் தெரியனுமா ?


இனி இந்த கேட்-கிப்பருக்கு  ரெஸ்ட் தான் (அது சரி வேலை இருந்தப்ப மட்டும் என்ன கிளிச்சாங்களாம்)


மஃக்ரிப்புக்கு நேரமாச்சு 


எந்த பூவாக இருந்தாலும் நமது கவிங்கர்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை புதைந்திருக்கும் கவிதைகளை கோர்த்து மாலையாக்கித் தாக்கிடுவாங்க. 


புகையும் போச்சு வண்டியும் (நின்னு) போச்சு நிலையம் மட்டும் நிலைத்து இருக்கு அகன்ற அலைகற்றுபோல் இல்லாமல் அகன்ற பாதை(கள்) வருமென்று காத்துகிட்டு இருக்கு !


நல்லா  காயப்போடுறாங்க கருவாடு 


கை கட்டு கால் கட்டு அந்த வரிசையில் இது படகு கட்டு...


தமிழ் நாட்டின் கடைசி மீட்டர் கேஜ் இதுதான்

Sஹமீது

வரலாறு மீள்பதிவாகட்டும்! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2012 | , , , , ,


இஸ்ரவேலர்களுக்கு
இதரவேலை இல்லை
பாலஸ்தீனத்தில்
பாவம் செய்வதைத் தவிர

கான்க்ரீட் கட்டடங்கள்
கற்குவியலாகின்றன
இடிபாடுகளுக்கிடையே
இஸ்லாமிய உடல்கள்
குற்றுயிரும் குலையுயிருமாய்க்
குழந்தைகள்

இந்தக்
கொலை நிகழ்ச்சிகளைக்
கலை நிகழ்ச்சிகளாய்க்
கண்டு களிக்கின்றன
அண்டை நாடுகள்;
மென்று விழுங்குகின்றன
உலக ஊடகங்கள்

காக்கை குருவிகளைப்போல்
காஸா தெருக்களில்
சுட்டு வீழ்த்தப்பட்ட
சனங்கள்
செங்குருதிச் சேற்றில்
சிதறிக் கிடக்க
அங்கஹீனம் செய்கிறார்கள்
பாலஸ்தீனத்தை

நாக்கைச் சப்புக்கொட்டி
நரபலி செய்து
நரமாமிசம் உண்ணும்
நயவஞ்சக நரிகள்...
நிலங்களை அரித்தனர்;
நிஜங்களை அழித்தனர்

தட்டிக் கேட்டவரை
அதட்டி வைத்தனர்
அமெக்க அரக்கனின்
ஆதரவோடு
பசித்த வயிறுகளுக்கு
ரவை புகட்டினர் -
துப்பாக்கி ரவை!

அருளாளனை நம்பியோர்க்கு
பொருளாதாரத் தடை
வயிறு பசித்தாலும்
வற்றுமோ வீரம்?
நாவினில் நீர்த்தாகம்
நெஞ்சிலே வேறு தாகம் - அது
நாட்டின் விடுதலைத் தாகம்

மாத்திரை மருந்துகளை
யாத்திரையின்போது கொண்டுசெல்லத்
தடை செய்ததால்
கொசுக்கடிகூட அங்கு
விஷக்கடியானது

தலைவெட்டைச் சற்று
தாமதப் படுத்தி
உலகின்
கண்கட்டும்போது
மின்வெட்டைக் கொண்டு
துன்புறுத்தினர்
கஸ்ஸாவிகளுக்கு
கற்கால வாழ்க்கை
தற்காலத்தில்!

மூச்சுக்காற்றை மட்டும்
முடக்க முடியுமெனில்
கஸ்ஸாவிகள் காலம்
கடந்தகாலம் ஆகியிருக்கும்

ஐநாவில் உறுப்பினர்களாய்
ஆணுமுண்டு, பெண்ணுமுண்டு
ஆனால் அவர்தம் ஆற்றலிலே
அடக்க ஆண்மையில்லை
அரவணைக்க பெண்மையில்லை

வருடக் கணக்கிற்குள்
வற்றிவிடும் இந்த
இம்மைக் கணக்கை
இறைவனிடம் சாட்டி
இருகரம் ஏந்துவோம்
வான்வழி வரலாறொன்றை
மீள்பதிவு செய்து
இஸ்ரவேலை ஆள்வதற்கு
இஸ்லாம் வரும்நாள்
வெகுதூரம் இல்லை!

சபீர்
நன்றி : சத்தியமார்க்கம்.com
http://www.satyamargam.com/2050

இரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரையாளர் - கலந்துரையாடல் ! - 6 தொடர்கிறது 11

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2012 | , , ,

பகுதி - று

தம்பி  நூர் முகமது அவர்கள் சுட்டிக்காட்ட விரும்பிய ‘அப்பாசியா’ ஆட்சிக் காலத்து இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் முன்பு அந்த வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றையும் அது பற்றி அறிஞர்களின் கருத்துக்களையும் வரலாற்றின் பக்கங்களில் இருந்து படித்து அவற்றை எடுத்து  இங்கே இந்த ஆக்கத்தைப் படிப்பவர்கள், அறிமுகமாக  விளங்கிக்கொள்வதற்காகக் குறிப்பிட விரும்புகிறேன். இவை படிக்கவும் அறியவும்  பிரமிப்பாக இருந்தன. அதன் பின்னர் இவை தொடர்பாக நூர் முகமது அவர்கள் சொல்லிய  செய்தியை தொடர்ந்து  கேட்க இந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும். அவர் சொல்லியவை  சொல்லொண்ணாத வேதனையாக இருந்தவை. நம்மைக்  கதற வைப்பவை.      

வரலாற்றின் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் சாராம்சம் என்னவென்றால்   பல நாடுகளை வெற்றி கொண்ட முஸ்லிம்கள் இறைவேதம் மற்றும் நபி போதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சியை நிறுவி அந்த அடிப்படையில் ஆட்சி அதிகாரங்களில் மற்றும் நல்லாட்சி செலுத்துவதில் மட்டும் முன்னணி வகித்து வரவில்லை. அன்றைய உலகின் அத்துனை துறைகளிலும் வல்லுனர்களாகத் திகழ்ந்தவர்கள் முஸ்லிம்கள்தான். கி.பி 1600 வரை ஐரோப்பா என்பது அறிவொளியற்ற ஓர் இருண்ட கண்டமாகவே காட்சியளித்தது. பூமி உருண்டை வடிவமானது என்ற நாம்  கூறிய  உண்மையை ஏற்று அன்றைய விஞ்ஞானிகள் சொன்னதற்காக பூமி தட்டை என்ற பைபிளின் கூற்றுக்கு அது மாறுபடுகிறது என்று கூறி அவர்களை தூக்கிலிடச்சொன்னது அன்றைய கிருத்தவத் திருச்சபை. அந்த அளவிற்கு ஐரோப்பாவும் கிருத்துவ திருச்சபைகளும் புத்தம் புது கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளாத மனப்பான்மையில் அறியாமை இருளின் படுபாதாளத்தில் மூழ்கியே கிடந்தன. ஆனால் முஸ்லிம்களோ அறிவில் சிறந்து விளங்கி வரலாறுகளில் பொற்காலம் (Golden age) என்று  குறிப்புகள்  வர்ணிக்கும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருந்தனர்.

கி.பி 700ன் இறுதியில் ஹாருன்-அல்-ரஷித் அவர்களின் தலைமையில் வீற்றிருந்த அப்பாஸியர்களின் ஆட்சியில் வானவியல், கணிதம், மருத்துவம், வேதியல், உடற்கூறுகள், நிர்வாகம், ஆட்சி முறைகள், வரிவிதிப்புக்  கொள்கைகள், இலக்கியங்கள் பற்றிய ஆய்வு போன்றவைகளில் வல்லுனர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் கண்டு பிடிப்பாளர்களாகவும் சிறந்து விளங்கியவர்கள் முஸ்லிம்கள்தான். அந்நாளில் முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் ஒரு கரையைக் கடந்து விட்டார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு உலகின் எத்துறையில் யார் ஆய்வுகளை மேற்கொண்டாலும் முஸ்லிம்கள் எழுதிய அரபிமொழியில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகளையும், ஆராய்ச்சி நூல்களையும் புரட்டியே ஆகவேண்டும் என்ற நிலைதான் இருந்தது. இவ்வாறு கல்வி அறிவு, நிர்வாகத்திறன் போன்றவற்றில் முஸ்லிம்கள் பேரெழுச்சி பெற்றிருந்தனர்.

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தனது ‘உலக சரித்திரம்- ஒரு பார்வை ’       (Glimpses of World History) என்னும் நூலில், “ஸ்பெயினின் எழுநூறு வருட முஸ்லிம்களின் ஆட்சி ஆச்சரியத்தை பயப்பதாக இருக்கிறது. அதைவிட பெரிய ஆச்சரியம் அரேபியரின் உயர்ந்த நாகரிகமும் கலைப் பண்புமேயாகும். ஐரோப்பா முழுவதும் அறியாமையிலும் போரிலும் மூழ்கிக்கிடந்த போது மேற்கு உலகிற்கே அறிவு, நாகரிகத்தின் ஒளியை பரப்பியது அரேபியரின் ஆட்சிக்குட்பட்ட ஸ்பெயின் தான்” என்று கூறுகிறார்.  அந்த அளவிற்கு அரேபிய ஸ்பெயினுடைய ஆட்சி சிறந்து விளங்கியிருந்து இருக்கின்றது.

மேலும் ராபர்ட் பாரிபால்ட் என்னும் ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் தனது ‘மேகிங் ஆப் ஹுயுமாநிட்டி’  (Making of Humanity) என்னும் நூலில் கூறுகிறார், “அரேபியர்களின் வானவியல் ஒரு கோபர் நிக்கொசையோ அல்லது நியூட்டனையோ உருவாக்கவில்லை என்றாலும் அரேபியர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு கோபர் நிக்கொசோ, நியூட்டனோ உருவாகியிருக்க முடியாது” என்று. அந்த அளவிற்கு விஞ்ஞானத் துறையில் அரேபியர்களுடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது. இந்தச்செய்தி நமக்கு பிரம்மிப்பூட்டும். ஆனால் யூத கிருத்துவ வரலாற்றுப் பொய்யர்களும் சூழ்ச்சியாளர்களும் இவைகளை மறைத்தே பதிவு செய்தனர்.

இப்போது கடந்த அத்தியாயத்தில் நான் நிறைவு செய்த கீழ்க்கண்ட வரிகளை நினைவு படுத்திக் கொண்டால் தொடர்ந்து படிக்க உதவியாக இருக்கும்.

“இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டு, ‘அப்பாசியா’ ஆட்சிக்காலம். முஸ்லிம்கள் கல்விப்பணியில் உச்சநிலை அடைந்திருந்த பொற்காலமாகும். ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் அவர்களைச் சூழ்ந்திருந்தவர்களும் பேரறிஞர்களாகத் திகழ்ந்த நல்ல காலமாகும். இப்படிப்பட்ட அறிஞர்களால் வடித்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய இலக்கியச் செல்வங்களின் குவியல்கள்  இன்று எங்கே?

இதனைப் பற்றி, ஜனாப் நூர் முகமது அவர்கள் சொன்ன தகவல்கள்  பிரம்மிப்பும், அதே நேரம் மிகுந்த வேதனையும் தருவதாகவும் அமைந்தது.”  என்று கடந்த அத்தியாயம் நிறைவுற்று இருந்தது.

அப்பாசியா ஆட்சிக்காலத்தில் திரண்டிருந்த இஸ்லாமிய அறிவுக் கருவூலங்கள், ஆராய்ச்சி நூல்களின் குவியல்கள்  இன்று எங்கே? 

இப்போது நூர் முகமது அவர்கள் பதில் கூறி விளக்குவதைக் கேட்கலாம்.

“அக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஏராளமான அறிவுக் கருவூலங்கள், பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் சோதனைச் சூறாவளியில் சிக்கி அழிக்கப்பட்டுவிட்ட கொடுமை பெரும் வேதனையைத் தருவதாகும். தாத்தாரியர்கள் வெற்றி வெறியில், பூராத் நதியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு வருவதற்காக, முஸ்லிம்கள் நூலகங்களில் பாதுகாத்து வைத்திருந்த அறிவுக் கருவூலங்களைப் பயன்படுத்தி ஆற்றுப் பாலம் அமைத்தார்களாம். கழுதைக்குத் தெரியுமா   கற்பூர வாசனை? ஒரே நேரத்தில், குதிரைகள் ஏழு வரிசைகளில் சாரி சாரியாக நடந்து செல்லும் வகையில் அப்பாலம் அமைக்கப்பட்டதாம். புராத் நதியின் நீர், ஒன்பது மாதங்களுக்கு மேலாக அந்த அந்நூல்களிலுள்ள மையுடன்  கலந்து வண்ணமாக ஓடிக் கொண்டிருந்ததாம். 

பின்னர் ஸ்பெயின் நாட்டை சூழ்ச்சியினால் கைப்பற்றிவிட்ட மேலை நாட்டு வெள்ளையர், முஸ்லிம்களின் கலைக்களஞ்சியங்களை அழிப்பதற்கென்றே தனி அரசு இலாகாவை அமைத்திருந்தார்கள். அறிவுக் களஞ்சியங்கள்  அவ்வாறு அழித்தொழிக்கப் பட்ட வேளையில், பொதுமக்களின் வீடுகளில் இருந்து  சோதனையிடப்பட்டு சேர்த்தெடுத்த நூல்கள் மட்டும் 20 இலட்சம் இருந்தனவாம்; திறந்த வெளியில் இவற்றைச் சுட்டு சாம்பலாக்கிய போது எழுந்த நெருப்பு, 28 நாட்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாம். இவையெல்லாம் நம்புவதற்கு வியப்பான வேதனையான உண்மைகள்.  

குர்த்துபா, சமர்கண்ட், புகாரா, நைசாப்பூர், கஜ்னி, மெர்வ், பல்கு, தூஸ் , ஷீராஸ் போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான நூலகங்களும், இலட்சக் கணக்கான நூல்களும் இருந்துள்ளன. ஹிஜ்ரீ ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் ஜமாலுத்தீன் ஸுயுத்தி அவர்கள்,  பாக்தாத் நிஜாமியா பல்கலைக் கழகத்தில் 800 தொகுதிகளைக் கொண்ட தப்ஸீர் ஒன்றும், எகிப்தின் ஜாமியுள் அள்கர் பல்கலைக்கழகத்தில்  900 தொகுதிகளைக் கொண்ட தப்ஸீர் ஒன்றும் இருந்ததைப் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு அறிவுத்துறையில் முத்திரை பதித்த முஸ்லிம்களுக்குக் கற்பனை செய்ய இயலாத பேரிழப்பு ஏற்பட்டது. “  

மேற்கண்ட வேதனையான வரலாற்று நிகழ்வை நூர் முகமது அவர்கள் சொல்லிக்காட்டியதும் அனைவருக்கும் சோகம் தொற்றிக்கொண்டது. உடனே நான் நூர் முகமது அவர்களிடம் இப்போது நீங்கள் சொன்ன செய்திகளுக்கு எதை ஆதாரமாகக் காட்டவேண்டுமென்று கேட்டேன். அதற்கு அவர்கள் பேராசியர் மர்ஹூம் கா. அப்துல் கபூர் அவர்கள் எழுதிய மிக்க மேலானவன் என்ற தலைப்பிட்ட நூலுக்கு பாராட்டுரை வழங்கியுள்ள மெளலானா மெளவி அல்ஹாஜ் ஏ. எம். ஷப்பீர் அலி ஹளரத் பாசில் பாகவி அவர்கள் இந்த சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார்கள் என்று கூறினார்கள். 

அதனைத்தொடர்ந்து, இவ்வளவு அறிவுக்கருவூலங்கள் எதிரிகளால் அழிக்கப்பட்டு இருக்காவிட்டால் இன்றைக்கும் அரபு நாடுகள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அறிவாக்கங்களிலும் தலைமை ஏற்று இருக்குமே என்ற ஆதங்கம் அனைவரிடமும் காணப்பட்டது; நம்மை பதை பதைக்க வைத்தது. 

அழிந்துவிட்ட இலக்கியங்கள் , அறிவுநூல்கள் போல் மீண்டும் உருவாகிட முடியாதா என்ற கேள்வியை நான் வைத்தேன். உடனே சொல்லி வைத்தாற்போல் பேராசிரியர் அவர்களும், நூர் முகமது அவர்களும் கட கடவென்று மாறி மாறி திருக் குரானின் சில வசனங்களை ஓத ஆரம்பித்தார்கள். நானும் ஹாஜா முகைதீன் சார் அவர்களும் இவர்கள் இருவரின் மார்க்க மற்றும் மேம்பட்ட மனப்பாட ஆற்றலைக் கண்டு வியந்தோம். அவர்கள் ஓதிய திருமறையின் ஆயத்துக்களின் தமிழாக்கம் :

பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) யாவும் எழுதுகொல்கலாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து பின்னர் அது தீர்ந்து மீண்டும் ஏழு கடல்கள் மையாக உபயோகித்து எழுத உதவினாலும், அல்லாஹ்வுடைய வசன்கள் நிச்சயமாக எழுதி முடிவு பெறாதவையாகும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும், ஞனமுடையவனுமாக இருக்கிறான். ( 31:27)        

மேலும் 

நபியே நீர் கூறும்: கடலிலுள்ள நீர் யாவும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால் , என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் யாவும் வற்றிவிடும்; ( செலவாகிவிடும்) அதேபோல் இன்னொரு பங்கு கடலைச் சேர்த்துக் கொண்டாலும் கூட  (18 :109)  

பல்லாயிரக் கணக்கான நூல்கள் உலகில் தோன்றி மறைந்தோ அல்லது மறைக்கப்பட்டோ இருந்தாலும் அருள் மறையும் அதன் விளக்கங்களும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. எனவே ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ; ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஆகவே இறைவனின் அருள் இருந்தால் , எதிரிகளால்  அழிக்கப்பட்ட அறிவுக்களஞ்சியங்கள் போல் இன்னும் பல ஆயிரங்கள் புத்துயிர் எடுத்துப் பூக்கும் .    அனைவரும் துஆச் செய்வோம். 

நூர் முகமது அவர்கள் தந்த வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் பிரம்மிப்பும் வேதனையுமான செய்திகள் தந்த வியப்பின் அதிர்ச்சியில் நாங்கள் மூழ்கி இருந்த போது, இமாம் ஷாபி பள்ளியில் முன்னர் படித்து முடித்து வெளியேறிய  ஒரு மாணவரின் தகப்பனார் பள்ளியின் இயக்குனரான பேராசிரியர் அவர்களைக் காணவேண்டுமென்று ஸலாம் சொல்லிய வண்ணம் அலுவலகத்தினுள் நுழைந்தார். 

அவருடைய ஸலாத்துக்கு பதில் சொல்லி வரவேற்ற பேராசிரியர் அவர்கள் என்ன விஷயம்  என்று கேட்டார்கள். 

“என்  மகநோட பெருலே ஒரு பிரச்னை ஈக்கிது . அவனுக்கு பாஸ்போர்ட் எடுக்க முடியலே. அதுனாலே  அவன்ற முழுப் பேருலே ஒரு பகுதியை நீக்கி  புதுசா ஒரு டி சி நீங்க தந்தா உதவியா ஈக்கிம் “ (தம்பி  நெய்னா மன்னிக்க!)  என்றார். 

“ அப்படியா உங்கள் மகன் பெயர் என்ன?” இது பேராசிரியர். 

“ முகமது சேக்காதியார்”- இது வந்தவர்.

“ அது என்ன சேக்கதியார் ? ஷேக் ஹாதி என்பது தானே சரி இதில் யார் என்கிற வார்த்தை  எங்கிருந்து வந்தது? அது சரி யார் என்பதை நீக்க வேண்டுமா?” – என்று பேராசிரியர் கேட்டார்.

இதற்கு அந்தப் பையனின் தந்த சொன்ன பதில் எங்கள் எல்லோரையும் அதிர வைத்தது. அவர் சொன்னார், 

“ இல்லே காக்கா! முகமது ன்கிற பெயரை நீக்கிவிட்டு வெறும் சேக்கதியார் னு போட்டு வேணும்” .

“ என்ன முகமது என்கிற பெயரை நீக்க வேண்டுமா? உலகிலேயே அதிகம் பெயர் சூடிக்கொண்டிருக்கும் பெயர் முகமது – உலகிலேயே அதிகம் பெயரால் ஒரு நாளில் உச்சரிக்கப்படும் பெயர் முகமது – ரசூளுல்லாவின் பெயர் முகமது - அல்லாஹுத்தாலாவுக்கு விருப்பமான பெயர் முகமது அந்தப் பெயரை நீக்க வேண்டுமா? “ என்று கூறிய பேராசிரியருக்கு பெருங்கோபமே வந்து விட்டது போல் முகம் மாறிவிட்டது. 

அதன்பின் அவர்கள் சொன்ன ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் நடந்த வரலாற்றுச் சம்பவம் அடுத்த வாரம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்
இபுராஹீம் அன்சாரி

அதிரையில் பள்ளிகளுக்கிடையே வினாடி-வினா போட்டி! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | November 23, 2012 | , , ,



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அதிரைநிருபர் வலைத்தளம் அதன் வெற்றிப் பாதையின் தொடர்ச்சியாக மற்றுமொரு வழிகாட்டும் நிகழ்வுடன் அதிரை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான பொது அறிவு வினாடி-வினா போட்டியை, இன்ஷா அல்லாஹ் நடத்த இருக்கிறது.

வரும் 26-11-2012 மற்றும் 27-11-2012 ஆகிய தேதிகளில் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி புதிய கட்டிட வளாகத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் என்று தனித் தனியாக இப்போட்டி நடக்க இருக்கிறது.

கலந்து கொள்ளும் பள்ளிகள்:-

1.            கா.மு.மே.பள்ளி (ஆண்கள்)
2.            கா.மு.மே.பள்ளி (பெண்கள்)
3.            இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி
4.            ஆக்ஸ்ஃபோட் மெட்ரிக் பள்ளி
5.            அரசு பெண்கள் உயர் நிலை பள்ளி

26-11-2012 அன்று மாணவிகளுக்கான வினாடி வினா போட்டியை காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியை ஆயிஷா மரியம் MSc., Mphil.BEd., மற்றும் பேராசிரியை தஸ்லீமா M.A., Mphil.,  நடத்த இருக்கிறார்கள். 

27-11-2012 அன்று மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை கா.மு.மே.பள்ளி (ஆண்கள்) முன்னால் தலைமை ஆசிரியர்  S.K.M.ஹாஜா முகைதீன்  M.A.BSc., B.T. அவர்கள் நடத்த இருக்கிறார்கள்.

மேலும் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவமணிகளுக்கு தனித்தனியாக முதல் மூன்று பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்க இருக்கிறது.

மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித் தனியாக:-

முதல் பரிசு தலா            :     ரூ 5,000/=
இரண்டாம் பரிசு தலா  :     ரூ 3,000/=
மூன்றாம் பரிசு தலா     :     ரூ 2,000/=

கலந்து கொள்ளும் அனைத்து மாணவமணிகளுக்கும் பங்களிப்பிற்கான சான்றிதழ்களும் வழங்க இருக்கிறது.

இதுமட்டுமன்றி, மேலும் சிறப்பு பரிசுகளும் வழங்கி கவுரவிக்க இருக்கிறது.

மாணவமணிகளின் பொது அறிவுத் திறனையும் அவர்களின் திறமைகளையும் வெளிக் கொணர்ந்து அவர்களை ஆர்வமூட்டவும், எதிர்காலம் சிறக்கவும் அதிரைநிருபர் வலைத்தளம் இந்த அரிய முயற்சியை துவங்கியிருக்கிறது.

இனிவரும் காலங்களிலும் இவ்வாறான சிறப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்த இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !.

அதிரைநிருபர் குழு

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 19 5

அதிரைநிருபர் பதிப்பகம் | November 23, 2012 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!. 

பெண்களின் நலம் நாடுதல்!

...அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (அல்குர்ஆன்: அன்னிஸா 4: 19)

'பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்! ஒரு பெண், விலா எலும்பிலிருந்தே படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பில் மிகவும் கோணலானது அதன் மேற்புறத்தில் உள்ளதுதான். அதை நிமிர்த்த நாடினால் அதை உடைத்திடுவாய். அதை விட்டு விட்டால் கோணலாகவே இருக்கும். எனவே பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்).

'அவைகளின் மற்றொரு அறிவிப்பில் ''ஒரு பெண் விலா எலும்பைப் போன்றவள். அதை நீ நிமிர்த்தினால் அவளை உடைத்திடுவாய். அவளிடம் நீ மகிழ்வுடன் இருக்க விரும்பினால் அவளின் கோணல் நிலையிலேயே மகிழ்வுறுவாய்'' என்று உள்ளது. (புகாரி,முஸ்லிம்)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் (பின்வருமாறு உள்ளது):
ஒரு பெண் விலா எலும்பினால் படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே வழியில் உன்னுடன் நேராக நிற்க மாட்டாள். அவளிடம் நீ மகிழ்வுற விரும்பினால் அவள் கோணல் நிலையிலேயே அவளிடம் மகிழ்வுறுவாயாக! அவளை நேராக்க நீ முயற்சித்தால், அவளை உடைத்திடுவாய். அவளை உடைத்தல் என்பது, அவளை விவாகரத்து செய்வதாகும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 273)

''ஒரு மூஃமின், தன் மூஃமினான மனைவியை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால், மற்றொரு குணத்தின் மூலம் அவளிடம் அவன் திருப்தியுறுவான்''  என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 275)

'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவரிடம் அவரது மனைவியின் உரிமைகள் என்ன? என்று கேட்டேன். நீ சாப்பிடும் போது அவளையும் நீ சாப்பிடச் செய்ய வேண்டும். நீ (புதிய ஆடை) உடுத்தும் போது அவளுக்கு நீ உடுத்தக் கொடுக்க வேண்டும் முகத்தில் அடிக்காதே! இழிவாக பேசாதே! வீட்டிலேயே தவிர அவளைக் கண்டிக்காதே! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹய்தா(ரலி) அவர்கள்  (அபூதாவூது).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 277)

''இறை விசுவாசிகளில் நம்பிக்கையால் முழுமை பெற்றவர், அவர்களில் அழகிய குணமிக்கவர்தான். உங்களில் சிறந்தவர், மனைவியரிடம் சிறந்தவராக நடந்தவர் தான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இது ஹஸன் ஸஹுஹ் என்று திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்). (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 278)

''அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை அடிக்காதீர்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) அவர்கள் வந்து, ''(பெண்கள் அடிக்கப்படாததால்) தங்களின் கணவர்களுக்கு எதிராக தைரியம் பெற்று விட்டார்கள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் பெண்களை அடிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள். உடனே அதிகமான பெண்கள் தங்களின் கணவர்கள் பற்றி முறையிட்டவர்களாக நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் வரத் துவங்கினார்கள். அப்போது, ''தங்கள் கணவர்களை குறை கூறியவர்களாக பெண்கள், இந்த முஹம்மதின் குடும்பத்தினரை சுற்றி வருகின்றனர். (குறை கூறும் அளவுக்கு நடக்கும் கணவர்களாகிய) அவர்கள் உங்களில் சிறந்தவர்களாக இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இயாஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு அபீதுபாப்(ரலி) அவர்கள் (அபூதாவூது).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 279)

''உலகம் (சிறிது காலத்திற்கு) சுகமளிக்கும் ஒன்றாகும். இந்த சுகப்பொருட்களில் சிறந்தது, நல்ல மனைவியாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் (முஸ்லிம்)     (ரியாளுஸ்ஸாலிஹீன்: 280)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன்.S


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு