Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | December 20, 2012 | ,

தொடர் : 15
அண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு  மாலிக் (ரலி)

அவர் அல்லாஹ்வால் அருள் பாலிக்கப்பட்டவர்!

அண்ணல் நபியால் ஆசீர்வதிக்கப்பட்டவர்! ஒருநாள், இருநாள் அல்ல! தொடர்ந்து பத்து ஆண்டுகள் பக்கத்திலேயே இருந்து பாடம் பயின்றவர். பாக்கியம் பெற்றவர்!

அவர்தான் அனஸ் இப்னு மாலிக் (ரலி). மதீனாவின் மக்களால் ஹாதிமுர்ரசூல் - இறைத்தூதரின் பணியாள் என்று இனிமையாக அழைக்கப்பட்டவர்!

"என் கடன் இறைத்தூதருக்குப் பணிசெய்து கிடப்பதே" என்பதைச் சொல்லாமலேயே செயலால் பறைசாற்றியச் சேவகர் அவர்!

கடைக்குச்சென்று  பொருள் வாங்கிவருபவராக, காலணிகளை எடுத்து வைப்பவராக, தலைப்பாகையைச்  சுமப்பவராக, தலைவாரும் சீப்பைத் தயாராக வைத்திருப்பவராக, அங்க சுத்தி செய்யத் தண்ணீர் சுமப்பவராக, அன்னை ஃபாத்திமாவின் உடன்பிறவாத் தம்பியாக, மிஸ்வாக்கைப் பத்திரப் படுத்துபவராக, முஃமின்கள் அன்னையரின் முழு அன்பைப் பெற்றவராக, ஒட்டகையின் கயிற்றைப் பற்றிப் பிடித்தவராக, ஓதும் நேரம் போக மீதம் நேரமெல்லாம் அண்ணலின் அழைப்பில் இன்பம் காண்பவராக மொத்தத்தில் நீதி நபியின் நிழலாகவே மாறிப் போனார் அந்த நிஜமான நண்பர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்.

மாண்பாளர் நபிகள் நாயகம்(ஸல்) மதீனா வந்தபோது அனஸ் பின் மாலிக் பத்து வயது பாலகன்! உறுதியான முடிவெடுத்த உம்மு சுலைம்(ரலி), உத்தம நபியின் ஊழியத்தில் அனஸை அழைத்து வந்து சேர்த்தார்! உம்முசுலைமின் வேண்டுகோளுக்கு இணங்க அனஸை அருகே வைத்துக் கொண்டார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

அண்ணலின் அரவணைப்பில் சுவனக்காற்றைச் சுவாசித்தார் அனஸ்! ஏந்தல் நபியின் எளிமையான தோற்றத்தில் 'மூசா' நபியின் வீரத்தைக் கண்டார்! மேன்மைமிகு நபியின் மென்மையான பண்புகளுக்குப் பின்னால் 'ஈஸா' நபியின் பணிவைக் கண்டார்! கண்ணியத் தூதரின் கட்டளைகளிலும் காருண்யத்திலும் 'சுலைமான்' நபியின் கம்பீரத்தைக் கண்டார்! ஓங்கி நின்ற ஒப்பற்ற எழிலில் 'யூசுப்' நபியின் பேரழகைக் கண்டார்! எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்து வகையான அற்புத குணங்களும் அவர்தம் பாட்டனார் 'இப்ராஹீம்' நபியிடமிருந்து பளிச்சிடக் கண்டார்!

எந்த மனிதரும் தன் வேலையாளுக்கு நிறைவான மனிதனாக விளங்கமுடியாது என்றுசொல்லப்படுகின்றது. ஆனால், அது முத்திரைத் தூதர் முஹம்மது நபியைத் தவிர! காரணம்,நெருங்கிப் பழகியவர்கள், அவரின் குறைகளையும் பலவீனங்களையும் தெரிந்து கொள்ள முடியும் அல்லவா!

ஆகவே, அனஸ் இப்னு மாலிக் (ரலி), மேதினி போற்றும் அந்த மேதை நபியைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

நான் பத்து ஆண்டுகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களுக்குப்  பணியாற்றும் ஊழியனாக இருந்து இருக்கின்றேன். ஒரு சந்தர்ப்பத்தில் கூட என்னை அவர்கள் இகழ்வாக அழைத்ததும் இல்லை. குறைவாக ஏசியதும் இல்லை! இதை ஏன் செய்தாய்? இவ்வாறு ஏன் செய்யவில்லை? என்று ஒருபோதும் என்னைக் கேட்டதுமில்லை! சொந்தப் பிள்ளையைப் போன்றே என்மீது அன்பு செலுத்தினார்கள். ஆதரவு அளித்தார்கள்!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மக்களிலேயே மிகவும் நற்குணம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். ஒருநாள் ஒருவேலையாக என்னை வெளியே அனுப்பினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் போகமாட்டேன்' என்று சொன்னேன். ஆனால், என் மனசாட்சி "நபிகளின் உத்தரவுக்குக் கட்டுப்படு" என்றே உரைத்தது!

எனவே, நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்களைக் கடந்து சென்றேன். அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாட ஆரம்பித்து விட்டேன். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), என் பின்பக்கமாக வந்து, என் பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் திரும்பிப் பார்த்தபோது, அந்திமழைச் சாரல் போல அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்!

என்னை நோக்கி, "அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்குச் சென்றாயா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்கள்.

"ஆம்! இதோ செல்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!" என்று சொல்லி விட்டுப் புறப்படலானேன். (1)

இவ்வாறு, அனஸை நெறிகள் நிறைந்த நேரிய வாழ்வுக்கு அண்ணலார் அவர்கள் அழைத்துச் சென்றார்கள்!

சுயமரியாதையின் பொருளை அவருக்குச் சொல்லித் தந்தார்கள்! கட்டுப்பாடு என்றால் என்னவென்று அவரிடம் காட்டித் தந்தார்கள்!

சிறுவராக இருந்த அவர் சிறந்த நண்பராக மாறினார். ஆமாம்! அனஸ் என்றாலே 'நண்பர்' என்றுதானே அர்த்தம்!

உண்மையே பேசும் உத்தம நபிக்கு உற்சாகம் வரும்போதெல்லாம் "ஓ. அந்த இரு காதுகள் கொண்ட என்னருமைப் பையனே!" என்று அனஸைப் பார்த்து, அழைப்பது கேட்டுப் பூரிப்பால் புளகாங்கிதப் பட்டுபோவார், புண்ணியம் தேடிக்கொண்ட அனஸ் (ரலி) அவர்கள். (2)

ஆனாலும், அனஸின் இறுதி மூச்சுவரை அவருக்கு நீங்காத குறை ஒன்று இருந்து கொண்டே இருந்தது. இறைமறை தந்த இனிய நபியுடன் ஒன்றாகவே இருந்த பத்து வருடகாலத்தில், ஒரே ஒரு முறைகூட, உன்னதநபி (ஸல்) அவர்களுக்குத்  தாம் முதலில் 'ஸலாம்' கூற இயலவில்லையே! "ஸலாம்" சொல்வதில் சன்மார்க்கத் தூதரல்லவா எப்போதும் தம்மை முந்திக் கொண்டுவிடுகிறார்கள் என்பதேயாகும்!" என்று இவர் இயம்புகிறார்.

ஒருமுறை அனஸ்(ரலி) அவர்கள் ஒரு படையணிக்குத் தலைமைதாங்கிச் சென்றார்கள். எதிரிகளுடன் நீடித்த கடுமையான மோதலின் காரணத்தால் அஸர் உடைய தொழுகை நேரம் கடந்து சென்று விட்டது. இறுதியில் கோட்டை வீழ்ந்தது. பொழுது அடையும் நேரத்தில் எதிரிகள் தோற்று ஓடினர்! அது கண்டு, முஸ்லிம் படையினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துமகிழ்ந்தனர். ஆனால்,அனஸ்(ரலி) அவர்கள் அழுதவண்ணம் நின்றிருந்தார்! காரணம் வினவப்பட்டபோது, வான்மறை தந்த வள்ளல் நபி(ஸல்)அவர்கள், "அஸர் தொழுகையை உரிய நேரத்தில் தொழுபவர்களுக்கு, சுவனத்தில் அழகிய மாளிகை ஒன்று அளிக்கப்படும்" என்று கூறினார்கள். ஆனால், "இம்மையின் கோட்டையை மாளிகை எனப் பெரிது கண்டு, மறுமையின் மாளிகையைக் கோட்டைவிட்டு விட்டோமே!" என்று வேதனைப்பட்டு அழுதார்கள்.

அடிமைத்தளையை அறுத்தெறிந்த அண்ணலாரை இவர் அண்மியே இருக்கும் பாக்கியம் பெற்றதால், மொத்தம் 2286 ஹதீதுகள் இவர்வாயிலாகத் தெரிய வருகின்றன.

அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் நாம் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்!

நான் சாந்தி நபி நாயகம் (ஸல்) அவர்களோடு நடந்து கொண்டிருந்தேன். அவர்கள் கடினமானதொரு போர்வையால் தங்களின் மேனியைப் போர்த்தி இருந்தார்கள். ஒரு காட்டரபி, கருணை நபி (ஸல்)அவர்களிடம் வந்து,அவர்களின் போர்வையைப் பிடித்து, அண்ணலின் கழுத்தில் அடையாளம் விழும் அளவுக்குக் கடினமாக இழுத்தார். அதைக் கண்டு நானோ நிலை குலைந்து போனேன்! "ஓ முஹம்மதே! அல்லாஹ் உமக்குத் தந்திருப்பதிலிருந்து, என்னுடைய பங்கில் கொஞ்சம் கொடுப்பீராக" என அதிகாரமாய்க் கேட்டார். தோழர்கள் அவர் கதை முடிக்க வாளை உருவினர்! ஆனால்,பொறுமைமிகும் பெருமானார் (ஸல்)அவர்கள் கொஞ்சம்கூடக் கோபப்படவே இல்லை! தோழர்களைக் கட்டுப்படுத்தினார்கள். அக்காட்டரபியைத் திரும்பிப் பார்த்து விட்டு, செவ்வாய் இதழில் சூரியனுடன் போட்டி போடும் ஓர் ஒளிமிக்கச் சிரிப்பைத் தவழ விட்ட வண்ணம், அவர் கேட்பதை அவருக்கு வழங்கும்படி தோழர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள்!

ஓர் இறைவிசுவாசியின் நல்ல ஒழுக்கமே அவனதுபக்தி! சகிப்புத்தன்மையே அவனதுஅறிவு! தாராளத் தன்மையே அவனது பண்புகளில் சிறந்தது என்பதை நபிகளாரின் நடவடிக்கையின் மூலம் நாம்  அறிந்து கொண்டோம் அல்லவா! ஆம். புன்முறுவல் ஒருகணமே இருந்தாலும்கூட, அதன் நினைவுகள் நீண்டகாலம் நிலைத்துவிடுகின்றன! நிலையான பலன்களையும் அளிக்கின்றன என்பது சத்தியமார்க்கம் சொல்லும் உண்மை!

இன்னுமொரு நெகிழ்ச்சியான சம்பவத்தை அனஸ் இப்னு மாலிக் (ரலி) இவ்வாறு அறிவிக்கிறார்:

ஒருநாள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், தம் தோழர்களோடு மஸ்ஜித் நபவீயில் அமர்ந்திருந்தார்கள். அவ்வேளை, எங்கோ நாட்டுப்புறத்திலிருந்து காட்டரபி ஒருவர் கண்ணியத்தின் இருப்பிடமாம் கருணை நபி (ஸல்) அவர்களைக் காண வந்தார்.

வழக்கம்போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், அவரை நன்கு உபசரித்தார்கள். பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் உண்மைத்தூதர் அவர்களோடு உரையாடினார். தோழர்களும் அந்த உரையாடலில் கலந்துகொண்டனர்.  கடைசியாக விடைபெற்றுச்செல்ல எழுந்த அந்த நாட்டுப்புற அரபி, மன்னர் நபியின் மலர்க்கரங்களைப் பற்றிக்கொண்டு நல்வாழ்த்துக் கூறினார்.

அவரது கைகளின் கடினத்தைக் கண்டு வேந்தர் நபி (ஸல்) அவர்கள் வியப்படைந்தார்கள். கொஞ்சம்கூட நளினமின்றி, மரத்தைப் போல் சொரசொரவென்றிருந்தன அந்தக் கரங்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் வினவினார்கள்:

"நண்பரே, உங்களது கைகள் ஏன் இத்தனைக் கடினமாக இருக்கின்றன?"

காட்டரபி சொன்னார்: “இறைத்தூதர் அவர்களே! விபரம்தெரிந்த நாளில் இருந்து எனது உடலுழைப்பால் வாழ்க்கையை நடத்தி வருபவன் நான்!”

இதைக் கேட்ட ஏந்தல் நபி (ஸல்) அவர்கள், உடனே அந்தக் காட்டரபியின் கரடுமுரடான அந்தக் கைகளை எடுத்து, தங்கள் கருணைக் கண்களிலே ஒத்திக் கொண்டு அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார்கள்!

சபையில் இருந்த தோழர்களுக்கு பெரும் ஆச்சர்யமாகப் போய்விட்டது! அவர்கள் கேட்டார்கள்: "யா ரஸூலல்லாஹ், அந்த முரட்டு மனிதனின் கைகளை ஏன் தங்கள் கண்களிலே ஒத்திக் கொண்டீர்கள்?"

“உழைத்து உழைத்து உரமேறிப்போய்விட்ட ஓர் உத்தமனின் புனிதக் கரங்கள் அவை!”

என அமைதியுடன் பதிலளித்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

உழைப்புக்கு பெருமானார் (ஸல்) அளித்த பெருமையும் புனிதமும் தோழர்களின் உள்ளங்களில் பசுமரத்தாணியாய்ப் பதிந்துபோனது!

மேலும்,அனஸ்(ரலி)அவர்கள் கூறுகின்றார்கள். வாய்மையிலே வரலாறு கண்ட வள்ளல் நபி(ஸல்)அவர்கள், என்னை அழைத்துப் பின்வருமாறு போதனைகள் செய்தார்கள்:

அருமை அனஸே! முடிந்த அளவு உன்னுடைய காலைநேரம் யாரைப்பொருத்த வரையிலும் உள்ளத்தில் குரோதம், வெறுப்புணர்வு இல்லாதவகையில் இருக்கவேண்டும். மேலும், மாலைவேளையும் இதேநிலையில் கழியவேண்டும் என்பதில் உறுதியாக இரு!

அருமை அனஸே! உனக்குக் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் செயலும் எனது நடைமுறையாக (சுன்னத்தாக) இருக்கிறது. யார் எனது நடைமுறையை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசிக்கிறார். எவர் என்னை நேசிப்பாரோ, அவர் என்னுடன் இருப்பார்!

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஜாஹிர் என்ற பெயருடைய கிராமவாசி இருந்தார். அவர் அவ்வப்போது, கிராமத்துப் பொருட்களை (காய்கறிகள், தின்பண்டங்கள் போன்றவற்றை) நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பார். நபி (ஸல்) அவர்கள், அவர் மதீனா வந்து ஊர் திரும்பும்போது, அவருக்குத் தேவையானவைகளை தயார்செய்து கொடுப்பார்கள். எனவே, மகிமை நிறைந்த நபியவர்கள் "ஜாஹிர் நம்முடைய கிராமத்தார். நாம் அவருடைய நகரம்" என்றார்கள்! நேசமிகு நபி அவர்கள், அவரைநேசித்தார்கள். அவரும் பாசத்துடன் நபியிடம் பழகிவந்தார். ஆனால், அவர் பார்ப்பதற்கு அழகற்றவராக இருப்பார்.

ஒருநாள் அவர் வியாபாரத்தில் மும்முரமாக, அவருடைய சரக்குகளை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அண்ணல்நபி(ஸல்)அவர்கள், அவர் எதிர்பார்க்காத வண்ணம், அவர் பின்னால் சென்று அவரை அன்புடன் கட்டி அணைத்தார்கள்! அவர் வியப்புடன், யார் அது! என்னை விட்டுவிடுங்கள்! என்று பதறியவராகத் திரும்பினார். ஆனால், அங்கே, அண்ணலைக் கண்டதும் ஆனந்தம் கொண்டார்! அல்லாஹ்வின் தூதரின் நெஞ்சில் தம் முதுகை அன்புடன் இணைத்துக் கொண்டார்.

அப்போது பெருமானார் (ஸல்)அவர்கள், "இந்த அடிமையை விலைக்கு வாங்கிக் கொள்பவர் யார்?"என்று வினவினார்கள். அதற்கு ஜாஹிர், அல்லாஹ்வின்மீது ஆணையாக, என்னை விலை போகுபவனாகக் காணமாட்டீர்கள், யாரசூலல்லாஹ்! என்றார்.

அதற்கு அண்ணல் நபியவர்கள், "அவ்வாறல்ல! நீர் அல்லாஹ்விடத்தில் விலைபோகாதவர் அல்லர்! நிச்சயமாக, நீர் அல்லாஹ்விடம் விலை உயர்ந்தவராவீர்!" என்று சொல்லி, முத்துக்கள் சிதறியது போன்று, முகம் முழுதும் சிரித்தார்கள் நம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்! (3)

சஞ்சலம் தீர்க்க வந்த சன்மார்க்கத்தூதர் (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் :

ஓர் அடியான் பாவம் செய்தபின், பாவமன்னிப்புக் கோருவதற்காக, மனம்வருந்தி அல்லாஹ்விடம் திரும்பும்போது, அவனைப்படைத்த இறைவன் பெருமகிழ்ச்சி அடைகிறான். எந்தஅளவுக்கு என்றால்;

தன் வாழ்க்கையில் முதுகெலும்பாகத் திகழக்கூடிய, தன் ஒரே ஒரு ஒட்டகத்தை நடுக்காட்டில், தொலைத்து விட்டமனிதன், திடீரென்று அந்த ஒட்டகம் கிடைத்தால், எந்தஅளவுக்கு மகிழ்ச்சி அடைவானோ அதுபோல, இன்னும் அதைவிட அதிகமாக அல்லாஹ் (ஜல்) மகிழ்ச்சி அடைகிறான் (4)

தாயார் உம்முசுலைம் (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று, அண்ணல்நபி (ஸல்) செய்த துஆவின் காரணமாக, இவர் நீண்டஆயுள் பெற்றிருந்தார். பிற்காலத்தில், அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் மிகப்பெரும் செல்வந்தராகவும்  விளங்கினார். இவரின் ஈச்சமரங்கள் ஆண்டுக்கு இருபோகம் விளைந்தன. இவருக்கு 98 மகன்களும் 2 மகள்களும் பிறந்தனர். இவர் ஹிஜ்ரீ 93ல் தமது 103 வது வயதில் பஸராவில் வைத்து இறப்பெய்தினார்.

பாக்கியம் பெற்ற நபி(ஸல்)அவர்களிடமிருந்து தாம்  கற்றுக்கொண்ட முக்கியமான ஒரு துஆவை, தம் இறப்புப்படுக்கையில் இருக்கும்போது, அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தம் ஊழியருக்கு அறிவித்துக் கொடுத்தார் என்று கூறப்படுகின்றது:

"பிஸ்மில்லாஹி கைரில் அஸ்மாஇ பிஸ்மில்லாஹில்லதீ லாயலுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலாஃபிஸ்ஸமாயி"

(பெயர்களில் நல்லதான அல்லாஹ் எனும் பெயரைக் கொண்டு அவனது பெயருடன் விண்ணிலோ மண்ணிலோ தீமை செய்யாத, அத்தகு அல்லாஹ் எனும் திருப் பெயரைக் கொண்டு துவங்குகின்றேன்)

மேலும்,அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: எவர் ஒருவர் தனக்கு நீண்டஆயுளும் வளமான வாழ்வும் வேண்டுமென்று விரும்புகின்றாரோ, அவர்தம் தாய் தந்தையரை நன்றாக நடத்தி, அவர்களைப்  பரிவுடனும் பாசத்துடனும் பராமரித்து வரட்டும் (5)
o o o 0 o o o
(1) ஆதாரம்: முஸ்லிம் 4626
(2) ஆதாரம்: அபூதாவூத் 4984
(3) ஆதாரம்: ஷமாயில் திர்மிதீ 238
(4) ஆதாரம்: புகாரி 6309
(5) ஆதாரம்: அத்தர்கீப் வத்தர்ஹீப்

இக்பால் M.ஸாலிஹ்

27 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வியாழக் கிழமைகள் 
எனக்கு 
அரபுநாட்டுக் 
கூடாரங்களாகவே
வாய்க்கப் பெறுகிறேன்

இந்தக்
கூடாரத்துள்
என் கண்மணி நபி(ஸல்)யும்
நபி தோழர்களும்
உரையாடுகையில்
அங்கு
நானும் இருப்பதாகவேத்
தோன்ற வைக்கிறான்
இக்பால்
நபிமணியும் நகைச்சுவையும் வாயிலாக.

ஏந்தல் நபி(ஸல்)யின்
எண்ணமும் 
சொல்லும் செயலும்
போதித்ததெல்லாம்
புன்னகையோடு இங்கு வாசிக்கக் கிடைக்கிறது.

நன்றி-டா நண்பா

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

வரலாற்றைச் சொல்ல எழுத்திலும் எண்ணத்திலும் தகுதி வேண்டும் என்று உரைக்கும் அற்புதமான தொடர்.

மாஷா அல்லாஹ் !

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

"சஞ்சலம் தீர்த்திடும் சன்மார்க்கத்தூதர் (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் "

மன்னிக்கவும் - சஞ்சலம் தீர்ப்பவன் அல்லாஹ் ஒருவனே..

Unknown said...



உத்தம திருநபியின் உண்மைத்
தோழர்களின் உரைகளை!
சத்தியத்தின் சாதனைகளை!!
சரித்திரம் சான்று பயக்கும்

பாலைவன அரேபியாவில்- பிறந்த
பாசமுள்ள மனிதனானவர்
நேசமுள்ள நெஞ்சத்தவர்
உண்மையாளராக உலகுக்கு
இறைசெய்தியை உரைத்தவர்

பார்ப்போற்றும் புகழுக்குரியவர்
நேர்நெறி தவறாத நெறியாளர்
முஹம்மது(ஸல்)அவர்கள்!!!

வலைதளத்தில் வியாழன்று வசந்தம் வரும்
வரம்பு மீறா நபி தோழர்களின் வரலாறு கூறும்
இயந்திர வாழ்க்கையில் இன்னல்கள் ஏராளம்
ஏற்றம் பெற இடம் உண்டு தாராளம்
படித்திடுவோம் பார்போற்றும் நபிகளின் பண்புகளை
ஏடுகள் எடுத்துரைக்கும் ஏந்தல் நபியின் மாண்புகளை
எத்துனை வருடங்கள் ஆனாலும் வாராது
வல்லோன் அல்லாஹ்வின் தூதர் சொல் மீறாது
நபிமணியின் நகைசுவை
நல்லோர்களின் அறுசுவை
நன்றி பகர்வோம் - நாயனை போற்றிப் புகழ்வோம்
-----------------
இம்ரான்.M.யூஸுப்

Yasir said...

உத்தம நபி(ஸல்)யின் சத்திய வாழ்க்கையை / வார்த்தைகளை சுத்தம் செய்து தேனில் தொட்டு சாப்பிடும் பலாச்சுளைபோல் தந்து மனதுக்கு ருசியும் அமைதியும் தருகின்றது உயர்ந்த எழுந்துநடைக்கொண்ட உங்கள் ஆக்கம்.அல்லாஹ் உங்களுக்கு எல்லாவற்றிலும் பயன்தருவானாக

Shameed said...

அருமையான தொடர் அழகிய எடுத்துக்காட்டுக்கள் வியாழன் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது

ZAKIR HUSSAIN said...

Good style of writing ...as usual. How it is possible for you to compile all the incidents?... with the high respect & love to our Nabi Muhammad, it is possible i think.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ இப்னு அப்துல்வாஹித்,

சஞ்சலம் மட்டுமல்ல சகல சுகங்களும் தருபவன் அல்லாஹ் ஒருவனே.

இருப்பினும், தங்களின் சுட்டல் "இணை வைக்கிறாய்" என்னும் தொணியில் இருப்பதால் பதிலளித்தல் அவசியமாகிறது.  

நாம் அனைவரும் பின்பற்றத் துடிக்கும் நபி (ஸல்) மொழியும் நபி (ஸல்) வழியும் நமக்குத் தந்தது நம் நாயகமா நாயனா?

நபி வழியாக நாயன் தந்த வாழ்வியல் வரைமுறைதானே ஹதீஸ்? அப்படிப்பட்ட ஹதீஸ்களை நாம் எப்படி நாயகமே சொன்னதுபோல எடுத்துக்கொள்ளக் கூடாதோ அதைப்போல "சஞ்சலம் தீர்ப்பவன்" இறைவனே என்றாலும் அதை நபியைக்கொண்டே தீர்த்ததால் வழக்கில் நபி சஞ்சலம் தீர்த்தார்கள் என்று சொல்வது தவறாகாது. அதனால்தான் கட்டுரை ஆசிரியர் அப்படிச் சொல்லியுள்ளார்.

கணினியில் வல்லவனை "வல்லவன்" என்று சொன்னால் " வல்லவன் அல்லாஹ் மட்டுமே" என்பது குதர்க்கம். அல்லாஹ் எல்லாம் வல்லவன் என்பதில் தெளிவு இருந்தால் இப்படி வாதம் செய்ய மட்டோம்.

உலகைப் படைத்து பரிபாலிப்பவன் இறைவனே, அதற்காக பாலத்தைக் கட்டியது யார் என்று கேட்டால் இறைவனே என்பது சிறுபிள்ளைத்தனமானது.

நோய் தீர்ப்பவன் இறைவன் என்றாலும் வழக்கில் டாக்டர் பேரைச் சொல்வது தவறாகாது.

இல்லையேல், அல்லாஹ் தந்த  வீட்டிலிருந்து கிளம்பி, அல்லாஹ் தந்த வேலை பார்த்து,  அல்லாஹ் வழியாக பயணித்து, அல்லாஹ் தந்த மருந்தை உண்டு என்று மக்கள் அடையாளமற்றுப்போக நேரிடும்.

புரிதலுக்கு நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எவ்வளவுக்கு அதிகம் நேசிக்க வைக்க முடியுமோ அந்த அளவுக்கு ஈடுகொடுத்து வரும் எழுதோவியம் !

மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் வர்ணனை மட்டுமல்ல, கற்பதற்கு கைபிடித்து அழைத்துச் செல்லும் எழுத்தின் நடை அழகோ அழகு !

Canada. Maan. A. Shaikh said...

அஸ்ஸலாமு அலைக்கும்.


அனஸின் இறுதி மூச்சுவரை அவருக்கு நீங்காத குறை ஒன்று இருந்து கொண்டே இருந்தது. இறைமறை தந்த இனிய நபியுடன் ஒன்றாகவே இருந்த பத்து வருடகாலத்தில், ஒரே ஒரு முறைகூட, உன்னதநபி (ஸல்) அவர்களுக்குத் தாம் முதலில் 'ஸலாம்' கூற இயலவில்லையே! "ஸலாம்" சொல்வதில் சன்மார்க்கத் தூதரல்லவா எப்போதும் தம்மை முந்திக் கொண்டுவிடுகிறார்கள் என்பதேயாகும், சகோதர்களே ஸலாம் கூற்வதில் ஏற்றம் தாழ்வோ பகை உணர்வோ காட்டாதீர். 'ஸலாம்' கூற முந்திக்கொள்ளுகள்



M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அண்ணலாரின் அழகான சிறப்பம்சங்கள்!

//"ஸலாம்" சொல்வதில் சன்மார்க்கத் தூதரல்லவா எப்போதும் தம்மை முந்திக் கொண்டுவிடுகிறார்கள்//

அண்ணலார் வழியில் நாமும் சலாமுக்கு முந்துவோம்.

இக்பால் காக்கா சலாம்:
இப்படி சொல்லலாமா, எழுதலாமா?
அல்லது
இக்பால் காக்கா அஸ்ஸலாமு அலைக்கும்:
என்று தான் முழுமையாக சொல்ல, எழுத வேண்டுமா?

crown said...

sabeer.abushahruk சொன்னது…
கணினியில் வல்லவனை "வல்லவன்" என்று சொன்னால் " வல்லவன் அல்லாஹ் மட்டுமே" என்பது குதர்க்கம். அல்லாஹ் எல்லாம் வல்லவன் என்பதில் தெளிவு இருந்தால் இப்படி வாதம் செய்ய மட்டோம்.

உலகைப் படைத்து பரிபாலிப்பவன் இறைவனே, அதற்காக பாலத்தைக் கட்டியது யார் என்று கேட்டால் இறைவனே என்பது சிறுபிள்ளைத்தனமானது.

நோய் தீர்ப்பவன் இறைவன் என்றாலும் வழக்கில் டாக்டர் பேரைச் சொல்வது தவறாகாது.

இல்லையேல், அல்லாஹ் தந்த வீட்டிலிருந்து கிளம்பி, அல்லாஹ் தந்த வேலை பார்த்து, அல்லாஹ் வழியாக பயணித்து, அல்லாஹ் தந்த மருந்தை உண்டு என்று மக்கள் அடையாளமற்றுப்போக நேரிடும்.

புரிதலுக்கு நன்றி.
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் இன்றி ஓர் அணுவும் அசையாது எனவேதான் நாம் சில காரியம் செய்தாலும் எல்லாப்புகழும் அல்லாஹுக்கே என்கிறோம். தெளிவான விளக்கத்திற்கு கவியரசுவிற்கு என் நன்றி!

crown said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
அண்ணலார் வழியில் நாமும் சலாமுக்கு முந்துவோம்.
-----------------------------------------------------------
இதை நடைமுறைப்படுத்துவதில் முடிந்தவரை நான் என்றுமே தயங்கியது இல்லை! அல்ஹம்துலில்லாஹ்.

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே,

"சலாம்" என்று சொல்ல நான் அறிந்தவரை நபிவழிச்செய்திகள் இல்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் என்றுதான் சொல்ல வேண்டும்.

அல்லாஹ் ஒருவனே மிகவும் அறிந்தவன்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\வியாழக் கிழமைகள்
எனக்கு
அரபுநாட்டுக்
கூடாரங்களாகவே
வாய்க்கப் பெறுகிறேன்

இந்தக்
கூடாரத்துள்
என் கண்மணி நபி(ஸல்)யும்
நபி தோழர்களும்
உரையாடுகையில்
அங்கு
நானும் இருப்பதாகவேத்
தோன்ற வைக்கிறான்\\

உண்மையிலும் உண்மை! கவிவேந்தரின் இதே நினைவுகள் எனக்கும் பலமுறை ஏற்பட்டுள்ளன. பொதுவாக ஹதீஸ்-பயான் கேட்கும் பொழுதும், படிக்கும் பொழுதும் இந்த உணர்வால் நான் உந்தப்படுகின்றேன்; மேலும், குறிப்பாக, அடியேன் பிறந்த தெரு-ஆஸ்பத்திரித் தெருவில் இருக்கும் “ஆலிம்சா” வீட்டுக்குள் இந்நிகழ்வுகள் நடப்பது போல் என் மனக்கண்ணில் தோன்றும் (கவிவேந்தர்க்கு அரபு நாட்டுக் கூடாரம் போல்- எனக்கு மேற்படி ஆலிம்சா வீடு நினைவுக்கு வரும்)

படிப்பவர்களைச் சுண்டி இழுத்து, சொல்லப்படும் நிகழ்வுகளின் இடத்திற்கே அழைத்து, ஓர் அற்புதமான நபி(ஸல்)அவர்களிடம் உரையாடுதல் போல் அமைத்து.. அப்ப்பப்பா, இதுவன்றோ எழுத்தாளனின் அருமை நடை!! என் அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்கட்கு அல்லாஹ் அளித்த அருட்கொடை!!!

எனக்கு வாய்க்காத ஓர் அரிய எழுத்துத் திறமை; இலக்கணத் தூய்மை;உங்களின் உரை நடைக்கு உண்டு என்பது உண்மை; வெறும் புகழ்ச்சியன்று.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும் சபீர் காக்கா,
ஐயம் நீங்கிடச் செய்தமைக்கு நன்றி!

Meerashah Rafia said...

// நபி(ஸல்)அவர்கள், "அஸர் தொழுகையை உரிய நேரத்தில் தொழுபவர்களுக்கு, சுவனத்தில் அழகிய மாளிகை ஒன்று அளிக்கப்படும்" என்று கூறினார்கள். ஆனால், "இம்மையின் கோட்டையை மாளிகை எனப் பெரிது கண்டு, மறுமையின் மாளிகையைக் கோட்டைவிட்டு விட்டோமே!" என்று வேதனைப்பட்டு அழுதார்கள்.//

This mistakes happening highly as and when at many work places.

Whenever I read about "காட்டரபி" I will start to think about my previous Shepherd Kafeel(Sponsor)/any other free kafeel. We can't explain about 'காட்டரபி's character. Oh my God...Horror scenes passing in my mind..

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்

\\"சஞ்சலம் தீர்த்திடும் சன்மார்க்கத்தூதர் (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் "//
மொவ்லூது ஒதுபவர்கள், நபி(ஸல்) அவர்களை புகழ்ந்து படிப்பது ஷிர்க் ஆகுமா...

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பிற்குரியச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

இத்தொடரில் விவாதத்துக்குரிய சொற்றொடரான, “சஞ்சலம் தீர்த்திடும் சன்மார்க்கத் தூதர் (ஸல்)....” என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கவிவேந்தர் சபீர் அவர்களின் ஆழமான விளக்கமே போதுமானதாகும். என் அறிவில் பட்டதையும் சொல்கிறேன். “மன்னித்தல்” என்பதும் இரு கோணங்களில் பொருள்படும். அல்லாஹ்தான் மன்னிப்பாளன் என்பதில் நமக்குக் கிஞ்சிற்றும் ஐயமில்லை; ஆனால், இரசூலுல்லாஹ் முஹம்மத்(ஸல்)அவர்கள் சஹாபாக்கள் அல்லது முஃமீன்களில் யாரும் தவறு செய்து விட்டால் அதனைப் பொருட்படுத்தாமல் “மன்னித்து” விட்டார்கள் என்று எழுதினால்-பேசினால் “ஷிர்க்” ஆகாது என்பதே என் கருத்து. இஃதே போல், “உதவி செய்தல்” என்பது போன்ற பல சொற்களில் இரு கோணங்களில் நாம் பொருள் கொள்ள வேண்டும்.
1) அல்லாஹ்வின் தரத்தில் அவனது “மன்னிப்பு” என்பது வேறு.
2) மனிதர்களின் குணங்களில் ஒன்றான “மன்னித்தல்”. என்பது வேறு.

இப்படியாகவே நாம் கருத்தில் கொண்டு, விவாதங்களைத் தவிர்ப்போம்.

sabeer.abushahruk said...

//மொவ்லூது ஒதுபவர்கள், நபி(ஸல்) அவர்களை புகழ்ந்து படிப்பது ஷிர்க் ஆகுமா...//

அவர்களை ஒரு மனிதப் புணிதர் என்ற நிலையில் வைத்து, உங்களையும் என்னையும்போன்ற அற்ப மனிதரிலிருந்து மேன்படுத்தி, அதேசமயம் இறையையொத்த தன்மைகள் அவர்களுக்கு இருப்பதாகப் புகழாதவரை...ஆகும்தான்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\This mistakes happening highly as and when at many work places.\\

Had we been at Saudi Arabia, we would have practised to offer our prayer even at Office Premises. Masha Allaah, I am offering my Luhar, Asar and Maghrib prayers in Office File Room. Now, after watching me, some muslim brothers (including Arabs) joined with me and we started "Jamath" for these three "waqth" prayers. Hence, it's not a big problem for anyone who worked at Saudi Arbia and practised prayer regularly. They can maintain the timings of Sala even while flying by aeroplane. Ref: Our Brother AR AL's article where he had mentioned that he had offered prayer at London Airport. Masha Allaah, I am offering prayer (in sitting position) while flying by aeroplane;while travelling by bus,car or train.

NO EXCUSE FOR "SALA"
NO "KADHA" FOR OFFERING PRAYER

The above incident was extra-ordinary and permitted by Allaah at the time of war. But, now-a-days we are not offering FAJR prayer at the fixed time and offering at late time as "KADHA" It's absolutely wrong.
If a train comes to our platform at early morning 5 O'Clock, Shall we go to the platform at mid-day to catch the train? Then, why are we so lazy in offering prayer (FAJR) which is the most prescribed prayer by Allah?

May Allah Save Us!

அதிரை தாருத் தவ்ஹீத் said...

"சஞ்சலம் தீர்த்திடும்" என்று நிகழ்காலத்தில் எழுதாமல் சஞ்சலம் தீர்க்க வந்த என்று இறந்த காலத்தில் மாற்றினால் சரியாக இருக்கும்

Unknown said...

ஜமீல் சொன்னது…
//"சஞ்சலம் தீர்த்திடும்" என்று நிகழ்காலத்தில் எழுதாமல் சஞ்சலம் தீர்க்க வந்த என்று இறந்த காலத்தில் மாற்றினால் சரியாக இருக்கும்//


ஜமீல் காக்கா , ஜசாகல்லாஹு கைரன்.

Unknown said...
This comment has been removed by the author.
U.ABOOBACKER (MK) said...

நபிமணியும் நகைச்சுவையும்' என்ற இத்தொடரை விறுவிறுப்பாக பயனுள்ள வகையில் எழுதி வரும் தம்பி இக்பாலுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் ஆரோகியமான நீண்ட ஆயுளை கொடுத்து, மேலும் பயனுள்ள ஆக்கங்களை எழுத அருள் புரிய வேண்டும்.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தாபியீன்கள் காலம் வரை வாழ்ந்தார்கள்.அக்காலத்தில் மக்கள் செய்த சிறு பாவங்களை கண்டு, பின்வருமாறு கூறியுள்ளார்கள்: " அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் காலத்தில்,நாங்கள் அழிந்து விடுமோ என்று அஞ்சிய பாவங்களை எல்லாம்(தலை) முடிக்கு சமமாக கருதி செய்து கொண்டிருக்கிறார்கள்".(ஸஹீஹ் புகாரி)

வட்டி,விபச்சாரம் போன்ற பெரும்பாவங்களை சாதாரணமாக செய்யும் இக்காலத்தில் அனஸ்(ரலி)அவர்கள் இருந்தால் என்ன சொல்வார்களோ?

Iqbal M. Salih said...

ATTN:தம்பி ஜஃபர் ஸாதிக்.

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.

எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஆதாரம்: புஹாரி 3326

Iqbal M. Salih said...

இந்தப் பதிவுக்கு வந்து கருத்திட்ட என் உடன்பிறந்த சகோதரர் அவர்கட்கும்

மதிப்பிற்குரிய சகோதரி ஆமினா அவர்கட்கும்

அன்பான சகோதரர்கள் அபூஇப்ராஹீம், இம்ரான் கரீம், கவியன்பன் கலாம், இப்ன் அப்துல்வாஹித், சபீர், தஸ்தகீர், மீராஷா, முஹம்மது இப்ராஹீம், சாவண்ணா, ஷெய்க் ஜலாலுத்தீன், யாசிர், ஜாகிர், ஜஃபர் ஸாதிக் ஆகியோருக்கும்

எங்கள் உமர் மாமா மகன் முனாகினா அவர்களுக்கும் தனி மின்னஞ்சலில் வாழ்த்திய என் உடன்பிறவா சகோதரர் N.A.S. அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

இரு கவிவேந்தர்கள் (கலாமும் சபீரும்) 'சஞ்சலம்' பற்றி தெளிவாக விளக்கிவிட்டார்கள். ஜஸாக்குமுல்லாஹு கைரன்!

ஜாகிர்: அனஸ் (ரலி) அவர்களுடன் அப்துல்மலிக் இப்னு மர்வான், ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் போன்றோர் நிகழ்த்திய உரையாடல்களை விரிவஞ்சி நான் எழுதவில்லை!

இனிய சகோதரர் கலாம்: இந்த வாரம் நான் படித்ததிலேயே என்னை மிகவும் கவர்ந்த அறிவார்ந்த வரிகள் நீங்கள் எழுதியதுதான்.

"If a train comes to our platform at early morning 5 O'Clock, Shall we go to the platform at mid-day to catch the train? Then, why are we so lazy in offering prayer (FAJR) which is the most prescribed prayer by Allah?

May Allah Save Us!"

அதற்காக அல்லாஹ் தங்களுக்கு பெரும் நன்மைகளைத் தரப்போதுமானவன்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு