Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேறு பெற்ற பெண்மணிகள் - பெண்ணினத்திற்குப் பெருமை... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2012 | , , , ,

தொடர் :  22

‘பனியா’ இனத்தைச் சேர்ந்த அந்த இந்துப் பெண்ணின் திருமணம் மிகக் கோலாகலமாகத்தான் நடந்தேறிற்று.  அவள் தன் பெற்றோர்களால் மிகச் செல்லமாகத் தான் வளர்க்கப்பட்டாள்.  அருமையாக ஆரம்பக் கல்வி ‘கான்வெண்ட்’டில் தொடங்கி, M.A. வரை முன்னேறிற்று.

ஆக்ரா நகரத்தின் IAS அதிகாரியான அவள் தந்தை, 1982 ஆம் ஆண்டில் ‘நல்ல’ வரன் பார்த்துத்தான் மகளைத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்.  விதி அவள் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கியதற்கு அவர் பொறுப்பில்லைதான்.  இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்கள், இந்துக் குடும்பங்களில் நிலவியிருக்கும் மனப்போக்கு ஆகியவைதாம் அவளது வாழ்க்கைச் சூராவளியின் பின்னணி என்று நாம் கூறலாம்.

இன்பமாகக் கழிந்த இரண்டாண்டு இல்வாழ்க்கையின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் வனிதா எனும் பெயர் பெற்ற அப்பெண்.  முதல் பெண் குழந்தையைப் பெற்றவுடன், “பெண்ணா?” என்று வாயைப் பிளந்தனர் புகுந்த வீட்டுக்காரர்கள்.  அதன் பின்னர், வரதட்சனை போதாது என்ற காரணத்தைக் காட்டி, வசை பாடத் தொடங்கினர்.  ஏச்சுப் பேச்சு எதிர்வாதத்திற்கிடையில், இன்னோர் ஆண்டும் கழிந்தது.  மீண்டும் கர்ப்பமுற்றாள் வனிதா.  விளைவு, இன்னொரு பெண் குழந்தை!

“இதுவும் பெண்தானா?” என்று எகிரிப் பாய்ந்தனர் புகுந்த வீட்டினர்.  போதாதா அவர்களுக்கு?  முன்பு வனிதாவின் உள்ளத்தை வதைத்த அவர்களின் கொடுமைகள், இப்போது அவளது உடலைச் சரமாரியாகப் பதம் பார்த்தன!

கணவனால் கைவிடப்பட்டாள் வனிதா!  அவன் ஊரை விட்டோடித் தலைமறைவாகிப் போனான்!  பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தும் பயனில்லை.  மாமனார்-மாமியாரின் வதையும் வசையும் பொறுக்க முடியாமல், வனிதா திக்கற்றுத் திகைத்து நின்றாள்!  பிறந்தகம் செல்லலாமா என்றால், அங்கே தன் சகோதரர்களின் மனைவிமார் தம் பிள்ளைகளுடன் இருந்து கூட்டுக் குடும்பமாக வாழ்வது, அவளைத் தடுத்தது.  தான் எதற்காக, எந்தச் சடங்கு சம்பிரதாயங்களினால் ஒதுக்கப்பட்டாள் என்பதை நன்கு அறிந்திருந்தாள்.  கல்வி கற்றவளல்லவா வனிதா?  நிதானத்துடன் இருந்து சிந்திக்கத் தொடங்கினாள்.

உளமகிழ்விற்குப்பின், உடல் வருந்தி, பெருமையாகப் பெற்றெடுத்த பெண் மக்களைச் சாகடித்துவிடுவதா?  பெற்றோரால் அருமையாக வளர்க்கப்பட்ட தானும் அழிந்தொழிந்துவிடுவதா?  பிறகு, தான் கற்ற கல்வியின் பயன்தான் என்ன?  இந்தச் சிந்தனைப் போராட்டத்தின் பின், ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவளாக, தன் பெண் மக்கள் இருவரையும் கைகளில் பிடித்துக்கொண்டு, தன் புகுந்தகத்தை விட்டுப் புறப்பட்டாள் வனிதா!  தான் சார்ந்த இந்து மதம் தன்னை முன்பைவிட இன்னும் மிக மோசமாக நடத்தும் என்பதை நன்கு உணர்ந்துவிட்டிருந்தாள் வனிதா.  அதனால், 

அவளறியாமலேயே, அவளது கால்கள் ஒரு நடுத்தர முஸ்லிம் குடியிருப்பை நோக்கி இட்டுச் சென்றன.  அங்குப் பெண் மக்கள் எவ்வளவு அருமையுடனும் பாதுகாப்புடனும் வளர்க்கப்படுகின்றனர் என்பதை முன்பே அறிந்திருந்தாள் அவள்.  ஓர் அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன், தனக்கு ஆதரவுக் கைகள் கிட்டும் என்ற எதிர்பார்ப்புடன் அந்த நட்புக் குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தாள்.

ஏற்கனவே தனக்கு அறிமுகமாயிருந்த முஸ்லிம் கூடும்பம் ஒன்றின் வீட்டுக் கதவத் தட்டினாள்.  நேரமோ, அகால வேளை!  “யார்?” என்று உள்ளிருந்து வந்த குரலுக்கு, தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள்.  கதவு திறந்தது; காரண காரியங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

தூங்கி வழிந்த பிள்ளைகளைப் படுக்க வைத்துவிட்டுச் சற்று நேரம் தனது கதையைச் சுருக்கமாக அவ்வீட்டாருக்கு விளக்கிவிட்டுத் தானும் உறங்கப் போனாள் வனிதா.

அடுத்த நாள் முதல், வனிதாவும் அவ்வீட்டாருள் ஒருத்தியாகிவிட்டாள்!

“அந்த முஸ்லிம் குடும்பத்திலும் பெண் மக்கள் இருந்தனர்; என் மக்கள் இருவர் மேலும் ஒன்றிணைந்தபோது, அது ஒரு பெண்களின் பாட வகுப்பைப் போன்று இருந்தது.  அறிமுகமற்ற வெளியாட்கள் அங்கு வந்தால், அப்பெண் பிள்ளைகள் அனைவரும் அவ்வீட்டுப் பிள்ளைகளென்றே கருதுவார்கள்.  அந்த அளவுக்கு, என் பெண் மக்கள் அவர்களுடன் இரண்டறக் கலந்துவிட்டனர்!  அந்த முஸ்லிம் குடும்பத்தின் ஆதரவிலும் அரவணைப்பிலும் திக்குமுக்காடிப் போன நான், பெண்களுக்குப் பெருமை இங்குதான் உள்ளதென்று உணர்ந்து, அந்த வீட்டுக்கார அம்மாவிடம் தனிமையில், ‘நானும் உங்கள் மார்க்கத்தில் வந்துவிடட்டுமா?’ என்று கேட்டு வைத்தேன்” என்று தனது மன மாற்றப் பரிணாம வளர்ச்சியை விவரித்த வனிதா, 1987 ஆம் ஆண்டில் புனித இஸ்லாத்தைத் தழுவி, ‘ஹீனா பேகம்’ ஆனார்.

இதற்கிடையில் இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில், ஒரு வர்க்கப் போராட்டம் தொடங்கிற்று.  அந்த நேரத்தில், உச்ச நீதி மன்றம் Uniform Civil Code  ‘அனைவருக்கும் ஒரே சமூகச் சட்டம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அதனைச் செயல் படுத்தும்படி அரசாங்கத்தை வற்புறுத்திற்று.  பல்வேறு அரசியல் கட்சிகள், குறிப்பாக இந்துத்துவாக் கொள்கையுடைய கட்சிகள் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கின.

செய்தி ஊடகங்கள் இதற்குத் தூபம் போடுவது போல், ‘இந்துக்கள் மதம் மாறிப் போகின்றார்கள்’ எனக் கூக்குரலிட்டன.  அத்தகையவர்களைச் ‘சந்தர்ப்பவாதிகள்’ என்றும் தூற்றத் தொடங்கின.  மறு பக்கம், மதத் தீவிரவாதிகளான ஹிந்துக்களோ, இத்தகைய மத மாற்றங்களுக்குக் காரணம், இந்தியாவின் மிதமான சட்டங்களே என்று வாதிட்டனர்.  இத்தகைய அரசியல்-சட்டச் சூராவளிக்கிடையே, ஹீனா பேகத்தின் வாழ்வில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது!

பெங்களூரைச் சேர்ந்த கியான் சந்த் கோஷ் என்பவர், எஞ்சினியரிங் பட்டம் பெற்று, மேலும் அங்கேயே உள்ள Indian Institute of Management கல்விக் கூடத்தில் மேற்பட்டம் பெற்று, பின்னர் லண்டனுக்குச் சென்று, அங்குள்ள Huxley College என்ற புகழ் பெற்ற கலைக் கூடத்தில் நிர்வாக உயர் பட்டம் பெற்று, இந்தியாவுக்கு வந்து, கனரக இயந்திரங்களின் விற்பனைக் கூடம் ஒன்றைத் தொடங்கியிருந்தார்.

அறிவு தெளிந்த காலம் முதல், கியான் சந்த் தான் சேர்ந்த மதக் கடவுள் நம்பிக்கையற்றவராகவே இருந்துவந்தார்.  ஆனால், இளமைக் காலத்தில் பெங்களூரில் வாழ்ந்த முஸ்லிம் மாணவர்களுடன் பழகிய நாட்களில், இஸ்லாத்தைப் பற்றிய ஒரு சிறு, ஆனால் நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்றிருந்தார்.  அறிவியல் சார்ந்த விளக்கம் பெறவேண்டும் என்ற கருத்துடையவராயிருந்ததால், கியான் சந்த் அறிவுக்குப் பொருந்தும் இஸ்லாமியக் கொள்கை-கோட்பாடுகளின்பால் ஒரு விதமான ஈர்ப்பைக் கொண்டிருந்ததில் வியப்பில்லை.

லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது, இஸ்லாத்தின்பால் ஆர்வம் மிகைக்கவே, இஸ்லாமிய அறிஞர்கள் பலரைச் சந்தித்து, அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வாய்ப்பைப் பெற்றார்.  1984 இல் லண்டனிலிருந்து திரும்பிய கியான் சந்த், இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என்ற முழுமையான முடிவில் இருந்தார்.  

பெற்றோரின் முடிவின்படியும், தனது விருப்பத்தின்படியும், டில்லியில் சுஷ்மிதா என்ற பணக்காரப் பெண்ணைக் கரம் பிடித்தார்.

அவருடைய உள் மனத்தில் வைத்திருந்த திட்டத்தின்படி, தானும் தன் புது மனைவியும் திருமணம் நடந்தவுடனேயே இஸ்லாத்தைத் தழுவிவிடுவது என்ற முடிவுடன், அப்பெண்ணுடன் பேச்சைத் தொடங்கினார்.  அவ்வளவுதான்!  எரிமலை போன்று வெடித்தாள் அப்பெண்!

“தற்போது நான் ஹிந்துவாகத்தான் இருக்கிறேன்.  இந்த நிலையில்தான் உன்னை மணமுடித்தேன்.  ஆனால், முஸ்லிமாவது என்ற எனது முடிவு உறுதியானது.  நான் மட்டும் முஸ்லிமாவதைவிட, நாம் இருவருமே அந்த உண்மை மார்க்கத்தை ஏற்றுக்கொண்டால், எவ்வளவு சிறப்பாயிருக்கும்?” என்று இதமாகச் சொல்லிப் பார்த்தார் கியான் சந்த் தன் மனைவியிடம்.

அவளுடைய மறுமொழியோ, எதிர்மறையாகவே இருந்தது!  அன்றைய விவாதத்திற்குத் தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, இன்னொன்றைத் தன் மனைவியிடம் கூறிவிட்டு உறங்கிவிட்டார் கியான் சந்த்.  அதன்படி, சுஷ்மிதா ஒரு நல்ல முடிவுக்கு வரும்வரை, பெயரளவில் மட்டும் அவ்விருவரும் கணவன்-மனைவியாக இருப்பர் என்பதுதான் அது!  அன்றிரவு எதிரும் புதிருமாகக் கழிந்தது.

அடுத்த நாள் விடிந்தபோது, சுஷ்மிதா டில்லி போலீசின் மகளிர் பிரிவுக்குச் சென்று, அங்கிருந்த ‘மகளிருக்கு எதிரான குற்றப் பிரிவில்’ (CAWC) தன் கணவரைப் பற்றிப் பெரும் புகார் ஒன்றைப் பதிவு செய்து வைத்தாள்!

மூன்றாண்டுகள் வழக்கு இழுபறியாக நடந்து வந்தபோதே, 1987 ஆம் ஆண்டில், ஒரு தீர்க்கமான முடிவுடன் கியான் சந்த் இஸ்லாத்தைத் தழுவி, ‘முஹம்மத் கரீம் காஜி’யாக மாறினார்!  அதே ஆண்டில்தான் நம் ஹீனா பேகமும் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்.  டில்லி உச்சநீதி மன்றத்தில்தான் ஹீனா பேகத்துக்கு எதிராக இந்துத்துவா இயக்கங்கள் வழக்கைத் தொடுத்திருந்தன.  ஒரே விதமான வழக்கில் இடம் பிடித்திருந்த ஹீனா பேகமும் முஹம்மத் கரீம் காஜியும் நீதி மன்றத்தில் சந்தித்துக்கொண்டார்கள்.  இருவர் மனங்களும் இணைய விரும்புவது இயற்கைதானே! 

அதன் பின்னர், அவர்களுக்கு எதிரான வழக்கில் அனல் காற்று வீசிற்று!  அரசியல் கட்சிகளும் இந்துத்துவா இயக்கங்களும் சட்ட எதிர்வாதிகளும் வரிந்து கட்டிக்கொண்டு நின்றனர். ஏன், உச்ச நீதி மன்றமும்கூட, தீவிரமாகச் செயல்பட்டுத் தீர்ப்பை அவர்களுக்கு  எதிராக வழங்கிற்று!  அதையும் எதிர்த்து, மதம் மட்டுமே தம்மைக் கட்டுப்படுத்த முடியும்; இந்து மதத்தில் சட்டம் என்று ஒன்றிருந்தால், தம்மைக் கட்டுப்படுத்தட்டும் என்று எதிர் வாதம் புரிந்து, வெற்றி பெற்றனர் அவ்விருவரும்!

1992 ஆம் ஆண்டில்,  முஹம்மத் கரீம் காஜியும் ஹீனா பேகமும் கணவன்-மனைவியாக இணைந்தார்கள்!  தற்போது காஜியின் மூலம் ஹீனா பேகத்துக்கு ஆண் பிள்ளை பிறந்து வளர்ந்து வருகின்றார்.  அவருடன் ஹீனா பேகத்தின் முதல் கணவன் மூலம் பிறந்த இரண்டு பெண் மக்களையும் தன் பிள்ளைகள் போன்று வளர்த்துப் பரிபாலித்து வருகின்றார் முஹம்மத் கரீம் காஜி.

“என் கணவர் என் இரு மகள்களையும் தன் மக்களைப்போன்றே வளர்க்கின்றார்.  இன்னொரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சி எங்கள் குடும்பத்தில் நடந்துள்ளது.  அதாவது, என் மாமியாரான காஜியின் தாயார் இப்போது முஸ்லிமாகிவிட்டார்!  இந்துத் தீவிரவாதிகளிடமிருந்து எங்களுக்கு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் இன்னும்கூட வந்துகொண்டுதான் இருக்கின்றன.  அல்லாஹ்வின் பாதுகாப்பில் ஆதரவு வைத்து, நாங்கள் அச்சமற்று வாழ்கின்றோம்” என்று கூறும் ஹீனா பேகத்தின் உடல் அச்சத்தால் நடுங்குகின்றது.  

தனது அசைக்க முடியாத ஈமானின் காரணம் என்னவென்று விளக்கும்போது, “நாங்கள் இஸ்லாத்தை அடுத்திருந்து பார்த்து, அனுபவத்தில் அருமையான வாழ்க்கை நெறியாகக் கண்டோம்.  முஸ்லிம்களுள் பெரும்பாலாரிடம் சமூக ஒற்றுமை நிலவுகின்றது.  இது ஒன்று போதாதா, எம்மைப் போன்ற சிதைந்த சமுதாயத்தவரை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்கு?  பெண்களான எனக்கும் என் மகள்களுக்கும் பெருமை தேடித் தந்ததும் இஸ்லாம்தானே” என்று நெகிழ்வுடன் கூறுகின்றார் ஹீனா பேகம்.

அதிரை அஹ்மது

11 Responses So Far:

Unknown said...

அதிரை அஹமது காக்காவின் பேறு பெற்ற பெண்மணிகள் படிக்கும் பொழுது மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாம் கூறும் உன்னத வாழ்வியல் கோட்பாட்டை உலகறிய செய்யும் கருத்து புதையல்' தொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி
---------------------
இம்ரான்.M.யூஸுப்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்றைய சூழலில் தலைநகரை உலுக்கியெடுக்கும் சம்பவத்திற்கு ஒரே தீர்வு இஸ்லாம் காட்டும் நேர்வழியே !

//“நாங்கள் இஸ்லாத்தை அடுத்திருந்து பார்த்து, அனுபவத்தில் அருமையான வாழ்க்கை நெறியாகக் கண்டோம். முஸ்லிம்களுள் பெரும்பாலாரிடம் சமூக ஒற்றுமை நிலவுகின்றது. இது ஒன்று போதாதா, எம்மைப் போன்ற சிதைந்த சமுதாயத்தவரை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்கு? பெண்களான எனக்கும் என் மகள்களுக்கும் பெருமை தேடித் தந்ததும் இஸ்லாம்தானே” என்று நெகிழ்வுடன் கூறுகின்றார் ஹீனா பேகம்.//

ஆளுக்கு ஒரு போக்கு என்றிருக்கும் இந்திய பிறமதச் சமுதாயப் பெண்களே சிந்தியுங்கள் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஹீனா-கரீம் குடும்பம் மூலமும் படிப்பினையை மாற்றார் பெற்று, இருலோக வாழ்வு ஒளிமயமாக இருக்க நாயன் அருள்வானாக ஆமீன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

ஹீனா-கரீம் குடும்பம் மூலமும் படிப்பினையை மாற்றார் பெற்று, இருலோக வாழ்வு ஒளிமயமாக இருக்க நாயன் அருள்வானாக ஆமீன்.

Yasir said...

அதிரை அஹமது காக்காவின் பேறு பெற்ற பெண்மணிகள் படிக்கும் பொழுது மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாம் கூறும் உன்னத வாழ்வியல் கோட்பாட்டை உலகறிய செய்யும் கருத்து புதையல்' தொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி

sabeer.abushahruk said...

இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டவர்களைப்பற்றிச் சொல்வதன்மூலம் இஸ்லாத்தை எத்திவைக்கும் இத்தொடர் தொடரட்டும் தங்களின் தொண்டாக.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

Shameed said...

அஹமது காக்காவின் அழகிய எழுத்துப்பணி தொடரட்டும்

Ebrahim Ansari said...

பேறு பெற்ற பெண்மணிகள் என்கிற இந்தத் தொடர் இதுவரை ஒரு கல்லுக்கு ஒரு மாங்காய்தான் அடித்துக் கொண்டிருந்தது. இப்போது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கத்தொடங்கி இருக்கிறது.

படிக்கப் படிக்க பரவசமூட்டும் இந்தத் தொடரை வழங்கும் காக்கா அவர்களுக்கு இறைவன் நல் கிருபை, நல்ல உடல் நலம் அளித்து இதுபோல் நிறைய வாரி வழங்க நற் கருணை புரிவானாக.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அதிரை அஹமது காக்காவின் பேறு பெற்ற பெண்மணிகள் படிக்கும் பொழுது மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாம் கூறும் உன்னத வாழ்வியல் கோட்பாட்டை உலகறிய செய்யும் கருத்து புதையல்'

\\படிக்கப் படிக்க பரவசமூட்டும் இந்தத் தொடரை வழங்கும் காக்கா அவர்களுக்கு இறைவன் நல் கிருபை, நல்ல உடல் நலம் அளித்து இதுபோல் நிறைய வாரி வழங்க நற் கருணை புரிவானாக.//

.......ஆமீன்

KALAM SHAICK ABDUL KADER said...

படிக்கப் படிக்கப் பரவசமூட்டும் இந்தத் தொடரை வழங்கும் காக்கா அவர்களுக்கு இறைவன் நல் கிருபை, நல்ல உடல் நலம் அளித்து இதுபோல் நிறைய வாரி வழங்க நற் கருணை புரிவானாக.

Iqbal M. Salih said...

படிக்கப் படிக்கப் பரவசமூட்டும் இந்தத் தொடரை வழங்கும் காக்கா அவர்களுக்கு இறைவன் நல் கிருபை, நல்ல உடல் நலம் அளித்து இதுபோல் நிறைய வாரி வழங்க நற் கருணை புரிவானாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு