Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்.... தொடர் - 2 22

அதிரைநிருபர் பதிப்பகம் | January 05, 2013 | , ,


தொடர் : இரண்டு
மதங்களும் பொருளாதார இயலும்

உலகில் பல்வேறு மதங்கள் தோன்றி  அழிந்து விட்டன; சில வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மதங்களும் தங்களைத் தழுவிய மக்கள் சமுதாயத்துக்கு போதித்த கோட்பாடுகளில் பொருளாதாரக் கோட்பாடுகளும்  அடங்கும். இத்தகைய மதங்களையும் பொருளாதாரத்தையும் பொருத்திப் பார்க்கும் முன்பு மதம் அல்லது மார்க்கம் என்பதன் விளக்கங்களையும் பொருளாதாரம் என்றால் என்ன என்பதற்கு பல்வேறு அறிஞர்கள் அளித்திருக்கும் விளக்கங்கள் மற்றும் அந்த விளக்கங்களின் ஏற்புடைய தன்மைகள் ஆகியவைகளையும் பார்ப்போம். இவற்றுடன் இஸ்லாமியப்  பொருளாதாரத்தை ஒப்பிட்டும் பார்ப்போம்.

மதங்களைப் பற்றிய சாத்திர விற்பன்னர்களும்  (Theologians) சமூக அறிவியலார்களும் மதம் என்றால் என்ன என்பதற்கு பல்வேறு விளக்கங்களைத் தந்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக, பொருளாதாரம் தழுவிய இஸ்லாமிய நூல்களைத்  தந்த எம். அப்துல்லாஹ்  திராஜ் (M.A. Draz)  என்கிற வல்லுனர்  தனது அல்-தீன்  Al Din  (The Religion) என்கிற நூலில் பல மேற்கோள்களைச் சுட்டுகிறார். இவற்றுள் முக்கியமானவை Reveille,  Michael Mayer, New Webster’s Dictionary ஆகிய  ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளாகும். 

Reveille கூறுவது என்னவன்றால், மதம் என்பது  மனித இனத்தின் வாழ்வை  வடிவமைக்கிறது - மதம் என்பது சாதாரண மனிதனின் அந்தர ஆத்மாவுக்கும்  மிகவும் உயர்நிலையில் உள்ள அறியப்படாத சக்தி என்று நம்பப்படும் கருப்பொருளுக்கும் உள்ள பிரிக்க முடியாத பந்தம் என்ற கருத்தின் அடிப்படையானதுமாகும். (bond between the human soul and Mysterious Soul) இதைத்தான் ‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்’ என்று கூறினார்களோ?

Michael Mayer, என்கிற வல்லுநர் விளக்குவது மதம் என்பது மனிதன் தனக்கு வழிகாட்டும் கடவுள் என்று கருதப்படுபவை அளித்த நம்பிக்கை மற்றும் தீர்க்கதரிசனங்களின் தொகுப்பு  என்பதாகும். (set of beliefs and percepts)

New Webster’s Dictionary மதம் என்பதற்குத் தரும் விளக்கம் அது மனிதனை பயபக்தியுடன் வணங்கவும் கீழ்ப்படியவும் வைக்கிற ஒரு சிறப்புக்குரிய சக்தியின் ஆளுமை என்பதாகும். ( entitled to obedience, reverence and worship).

மேற்கண்ட எல்லா விளக்கங்களையும் ஊன்றிப் படித்த பின்னர் நாம் உணரும்   பொதுவான சாராம்சம்  என்ன வென்றால்

மதம் என்பது மனித இனத்தின் ஒட்டுமொத்த ஆன்மீக, சமூக, தனி மனித வாழ்வின் மீதும் இதர படைப்பினங்களைப் பற்றிப் பேசியும்  தொடர்புபடுத்தியும் வரையறுக்கிறது என்பதும்  மனித இனத்தின் நம்பிக்கை, கடைப்பிடிப்பு, அர்ப்பணிப்பு ஆகிய செயல்பாடுகளின்மேல் ஒழுங்குபடுத்தும் வகையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தன்னிகரற்ற சக்தியுமே  மதம்  ஆகும் என்பதே. 

மதம் என்பதன்  விளக்கங்களை அறிந்த பிறகு பொருளாதாரம் என்பதன் சுருக்கமான விளக்கத்தையும் நாம் காண வேண்டி இருக்கிறது. பொருளியல் விளக்கங்கள் பல்வேறு வல்லுனர்களால் தரப்பட்டுள்ளதை விளக்கவும் விவரிக்கவும் விவாதம் செய்யவும் வேண்டியுள்ளது. மேலே கண்டபடி மதம் என்பது ஒட்டுமொத்த மனிதவாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்று குறிப்பிடும் நேரத்தில் பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் செல்வங்கள், மூலவளங்கள், பணிகள், உற்பத்திப் பொருள்கள், வாழ்வின் தேவைகள்,  ஆகிய மனிதவாழ்வின் சில குறிப்பிட்ட பாகங்களின்  மீது மட்டும் தனது ஆதிக்கம் செய்யும்    ஒரு    தனித்துறையாகும்.

பொருளாதாரம் என்பதற்கு பல்வேறு பொருளியல் அறிஞர்கள் பல்வேறு மாறுபட்ட விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.( L. Robins),  ஆர். ராபின்ஸ்,  பி . சாமுவேல்சன் ( P. Samuelson.) ஜெ. ஹார்வி ( J.Harvey)  ஆகியோருடைய அணுகுமுறைகள் மாறுபட்டாலும் ஒரு பொதுவான அம்சத்தில் ஒத்துப் போகின்றன.

அதாவது, மனிதனுடைய நடைமுறைப் பழக்கங்களில் அவன் வாழும் நாட்டில் கிடைக்கும் மூலவளங்களையும் அவற்றைக்கொண்டு உற்பத்தியாகும் பொருள்களையும் பணிகளையும் தனது உயர்ந்த பட்ச திருப்திக்கும், உபயோகத்துக்கும் ஏற்றபடி எப்படி நிர்வகித்துக் கொள்கிறான் அல்லது ஆள்கிறான் என்பதே ஆகும். 

நவீன கால பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி ஆய்வு  செய்கிறவர்கள்  ஆடம் ஸ்மித் ( Adam Smith 1723- 1790 )என்கிற மந்திரப்பெயரை மறக்க முடியாது. இவர் தனித்தனிக் கோட்பாடுகளாக வந்துகொண்டிருந்த பொருளியல் கோட்பாடுகளை ஒன்று திரட்டி ஒரு வடிவமாகக் கொடுத்தவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர்.   An enquiry into the Nature and Causes of Wealth of Nations என்கிற இவரது நூலே நவீன அரசியல் பொருளாதாரத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. 

ஆல்பிரெட் மார்ஷல்  ( Alfred Marshal 1842- 1924) என்கிற மற்றொரு வல்லுநர் தனிமனிதனின் வாழ்க்கையில் காணப்படும் செல்வத்தை நோக்கிய செயல்பாடுகளின் கல்வியே பொருளாதாரம் என்று குறிப்பிட்டார். வாழ்வதற்குத் தேவையான வருமானத்தைத் தேடும் அல்லது  திரட்டும் வழிமுறைகளையும் அப்படித் தேடியவற்றை தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளையும் பொருளாதாரம் சொல்லித்தரும் என்று சொன்னார்.

இருந்தாலும் லயனல் ராபின்ஸ் சுட்டிக்காட்டிய கோட்பாடு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைந்தது. கோட்பாட்டின் அடிப்படை மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும். அவை :

மனிதனின் தேவைகள் அதிகம். (Countless Desires)

அந்தத்  தேவைகளை நிறைவேற்றும் பொருள்கள் அல்லது சேவைகள் பற்றாக்குறையானவை . (Scarce Means)

அவ்விதம் வரையறைக்குட்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகள்  மனிதனுக்கு ஒரே நேரத்தில் எழக்கூடிய மற்ற தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள மாற்றிப் பயன்படுத்தத் தக்கவை .  ( Alternative Uses)

(இந்தக் கருத்துக்களை நான் விளக்க ஆரம்பித்தால் நீங்கள் சற்று நிமிர்ந்து உட்காரலாம். சரியாத்தானய்யா சொல்லி இருக்கே! நல்லா யோசிச்சுத்தானே சொல்லி இருக்கே ! என்று சிலர் கூவவும் செய்யலாம்.)

முதலாவதாக மனிதனின் தேவைகள் அதிகம் என்பதைப் பார்க்கலாம். மனிதனுக்கு எல்லாமே தேவைதான். எதிலுமே ஆசைதான்.  மழை நாளில் வெயில்தேடும் மனிதன் வெயில் நாளில் மழை தேடுவான். ஆசைகளின் மூட்டை என்று மனிதனை வர்ணிக்கலாம். தேவைகள் இவனிடத்தில் தேங்கிக்கிடக்கின்றன. தேவைப்பட்டது அகப்பட்டதும்  அடுத்ததைத்  தேடுகிறான். குடிசையில் வாழ்பவனுக்கு மச்சு வீடு தேவை ; பாயில் படுத்துறங்குபவனுக்கு பஞ்சு மெத்தை தேவை; கஞ்சி கிடைத்தால் போதுமென்று நினைத்தவனுக்கு கவளச் சோறு தேவை ; நிற்க இடம் கிடைத்தால் போதுமென்று நினைத்தவனுக்கு உட்கார இடம்  தேவை; காலையில் காபி தேவை; பகலில் அறுசுவை உணவுதேவை; இடையில் தின்ன மசால் வடை தேவை; இரவில் குடிக்க பசும்பால் தேவை;   பிள்ளைகளுக்குப் படிப்புத்தேவை ; பெற்றவர்களுக்கு முதியோர் இல்லத்தில் இடம் தேவை; பெரிய வீட்டுக்கு மட்டுமல்ல சின்ன வீட்டுக்கும் சொந்தமாக சொத்துத் தேவை; ஏவல் செய்ய ஆள் தேவை ; இட்டதை முடிக்க பரிவாரங்கள் தேவை; இருக்கும் பணத்தை மறைத்துவைக்க சுவிஸ் வங்கியில் கணக்குத்தேவை என்பது வரை  மனிதனின் தேவைகள் சொல்லி மாளாதவை; மறையாதவை. சராசரி மனிதனை ஆசைதான் வாழ்வை நோக்கி இழுத்துச் செல்கிறது. ‘வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும் வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழி நெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. எந்க கட்டத்திலும் ஆசையும் தேவையும்  பூர்த்தியடையவில்லை.‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறது. ஆகவே தேவைகள் எண்ணற்றவை.

இரண்டாவதாக இத்தகைய தேவைகளை மனிதன் நிறைவேற்றிக்  கொள்ள   உலகில் அவனுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புக்கள் என்றுமே பற்றாக்குறையானவை.  தேவைப்பட்டுக் கேட்பவனுக்கு கேட்பது தேவையை நிறைவேற்றுமளவுக்குக் கிடைக்காது. அது இருந்தா இது இல்லை; இது இருந்தால் அது இல்லை. நாயை கண்டால் கல்லை காணோம்; கல்லைக் கண்டால் நாயை காணோம். மண்ணிலிருந்து மண்ணெண்ணெய் வரை – அரிசியிலிருந்து பருப்புவரை – மின்சாரம் முதல் குடிநீர் வரை- கல்லூரி முதல் கல்லறை வரையும் கூட மனிதத்தேவைகள் அவனின் தேவைகளின் அளவுக்கு கிடைக்காமல் பற்றாக்குறையாகவே இருக்கின்றன. இத்தகைய பற்றாக்குறைகள்- தேவைகள் –அவசரத்தேவைகள்  விலைகளைக் கூட்டுகின்றன அல்லது குறைக்கின்றன.  ஆகவே கிடைப்பவை பற்றாக்குறையானவை.

மூன்றாவதாக, இப்படி தேவைக்கு  பற்றாக் குறையாக  கிடைக்கின்றவைகளைக் கூட மற்ற தேவைகளுக்கும் உபயோகப்படுத்திக்கொள்ள முடியும் என்பதாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக எனக்கு ஒரு சைக்கிள் தேவை .வீட்டுக்கு அரிசி தேவை. மகனுக்கு சட்டை தேவை. சமையலுக்கு ஒரு சட்டி தேவை. வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். அம்மாவை வைத்தியரிடம் கூட்டிச் செல்லவேண்டும். இப்படி பல தேவைகளுக்கும் உதவ என்னிடம் எண்ணூறு ரூபாய்தான் இருக்கின்றது. இந்த எண்ணூறு ரூபாயை வைத்து   நான் சைக்கிள் வாங்கவா? சட்டை வாங்கவா? வைத்தியம் பார்க்கவா? அரிசி வாங்கவா? வாடகை கொடுக்கவா? நான் எதை தேர்ந்தெடுப்பேன்? எதைத் தேர்ந்தெடுப்பது  எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்? அரிசி வாங்க வைத்திருக்கும் பணத்தில் சட்டி மட்டும்  வாங்கினால் சரியாகுமா?  ஆகவே என்னிடம் பற்றாக்குறையாக இருக்கும் மூலவளத்தை நான் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தமுடியும். எதற்குப் பயன்படுத்தப் போகிறேன்? எதைத் தேர்ந்தேடுக்கப் போகிறேன்? எதைத் தேர்ந்தெடுப்பது எனக்கு உதவும்? என்பதே  பொருளாதாரம்.

இதுவே ராபின்ஸ் சொன்ன  “ A relationship between ends and scarce means that have alternative uses” என்கிற கோட்பாடாகும். அதிகமான தேவைகள் அல்லது எண்ணற்ற விருப்பங்கள்- பற்றாக்குறையான சாதனங்கள்- இருப்பவற்றுள் தேர்ந்தடுப்பது ஆகியவையே பொருளாதார நடவடிக்கைகளை எற்படுத்திகின்றன என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிப்படை. . மேலை நாடுகளின் பொருளாதார வல்லுனர்கள் பொதுவாக இந்தக் கோட்பாட்டை ஏற்றனர். நாமும் சற்று யோசித்துப் பார்த்தால்   இந்த அடிப்படையிலேயே ஆண்டி முதல் அரசன்வரை பொருளாதார நடவடிக்கைகளை  மேற்கொள்கின்றனர்   என்பதை    உணர முடியும். 

தாயின் வைத்தியத்தை அலட்சியம் செய்துவிட்டு சாராயக்கடைக்குப் போகிறவர்கள் – பள்ளிக் கூடத்துக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கொண்டு பட்டுப்புடவை வாங்குபவர்கள் – நிலமே  வாங்காமல் செங்கல் வாங்கி அடுக்குபவர்கள் – குடிதண்ணீருக்கு வழி செய்யாமல்  ஹோம் தியேட்டர் வாங்குபவர்கள் ஆகிய அவர்களை நமது வாழ்வின் வழிப் போக்கில் அன்றாடம் காணுகிறோம். இவர்களே பொருளாதாரம் அறியாத பேதைகள்.

இந்த அளவில் பொதுவான பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி ஓரளவு விளங்கிய பிறகு இஸ்லாமியப் பொருளாதாரச்  சிந்தனைகள் பற்றி இனி விரிவாக விவாதிக்கலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
இபுராஹீம் அன்சாரி

22 Responses So Far:

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

பல அறிஞர்கள் எழுதிய விசயங்களை படித்து தொகுத்தும் அறிவால் உனர்ந்தும் எங்களுக்கு கட்டுரையாக்கி தந்தமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர்

Unknown said...

Assalamu Alaikkum,

A deeper exploration of definitions of a religion, human being's countless desires, thoughts on economics with enough examples.

An excellent and very useful series. Eagerly awaiting for each next Saturdays to grasp your article series.


//(set of beliefs and percepts)// -
I think the correct word in the sentence is "(set of beliefs and prophecies)"


Thanks and best regards,

Iqbal M. Salih said...

தாயின் வைத்தியத்தை அலட்சியம் செய்துவிட்டு சாராயக்கடைக்குப் போகிறவர்கள் – பள்ளிக் கூடத்துக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கொண்டு பட்டுப்புடவை வாங்குபவர்கள் – நிலமே வாங்காமல் செங்கல் வாங்கி அடுக்குபவர்கள் – குடிதண்ணீருக்கு வழி செய்யாமல் ஹோம் தியேட்டர் வாங்குபவர்கள் ஆகிய அவர்களை நமது வாழ்வின் வழிப் போக்கில் அன்றாடம் காணுகிறோம். இவர்களே பொருளாதாரம் அறியாத பேதைகள்//

சரியான கணிப்பும் சுட்டலும் டாக்டர்!

இதுபோன்ற ஆட்கள் ஒருசிலரை நாம் ஊரிலே கண்டிருக்கிறோம். மிகையில்லை!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மதங்களிலிருந்து பொருளாதாரம் பற்றிய நல் விளக்க தொகுப்பு!
இஸ்லாத்தில் பொருளாதாரம் பற்றி பிரகாசமாக சொல்லப்பட்டிருக்கும், அது எவ்வகையில் என்பதை உங்கள் ஆக்கத்தின் மூலம் எதிர்பார்க்கிறோம். இன்சா அல்லாஹ்.

Unknown said...

பதிப்பு நன்றி, பொருளாதாரம் வாழ்வின் ஆதாரம்- இஸ்லாமிய உலகில் அறியப்பட்ட விசயங்களை அதிரையின் வளரும் தலைமுறையினர் படித்து அறிவார்ந்தவர்களாக, உலகம் போற்றும் மாமேதைகளாக வர வல்ல ரஹ்மான் நாடட்டும். இப்ராகிம் அன்சாரி காக்காவின் எழுத்துலக பயணத்தில் முத்திரை பதிக்க இருக்கும் மற்றொரு தொடர்.பொருளாதார கோட்பாட்டையும் வாழ்க்கை நிலைபாட்டையும் அலசும் அருமையான தொடர். ஜஸக்கல்லாஹ் ஹைர்
----------------
இம்ரான்.M.யூஸுப்

KALAM SHAICK ABDUL KADER said...

டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,

பொருட்பாலும், அருட்பாலும் கலந்து எங்கட்குத் தாய்ப்பால் போல ஊட்டமளிக்கும் இத்தொடரால், பொருளாதாரக் கேடு எனும் நோயை எதிர்க்கும் ஆற்றல் பெறுவோம். அதனால் இதனைப் பரிந்துரைச் செய்யும் வண்ணம் பதிவைச் செய்த டாக்டர் அவர்கட்கு ஜஸாக்கல்லாஹ் கைரன் என்னும் துஆவுடன் நன்றியை நவில்கிறேன்.

எனக்குத் துணைப்பாடமாக இருந்த “பொருளாதாரம்” இன்று முதல் முதன்மை பாடமாக ஆக்கிக் கொண்டு தங்களின் இப்பதிவுகள் நூலுருவில் வந்ததும் அதுவே என் பொருளாதாரப் புத்தகமாக என் வரவேற்பறையை அலங்கரிக்கும், இன்ஷா அல்லாஹ்.தங்களின் “மனுநீதி மனிதனுக்கு நீதியா?’ என்ற நூலை 5 பிரதிகள் வாங்கியுள்ளேன்; அவைகளைத் துபையில் உள்ள ஹிந்து நண்பர்கட்கு அன்பளிப்பாக வழங்குவேன் (இது தற்பெருமை அல்ல; மற்றவர்களும் வாங்க வேண்டுமென்ற ஊக்கப்படுத்தலே)
இன்ஷா அல்லாஹ், இத்தொடரும் நூலுருவில் வந்ததும், அதனை “பொருளாதாரப் பாடம்” படிக்கும் பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கட்கு வழங்கி என் அருமைக் காக்கா அவர்களின் உழைப்பின் பலனைப் பரவச் செய்வேன் என்பதை இச்சபையில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உண்மையில் புகழும் நன்றியும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. மனிதர்களில் இவ்விடயத்தில் நன்றி கூற முதன்மையில் அதிரை நிருபரின் அன்பு நெறியாளர் அபூ இப்றாஹிம் அவர்கட்குத் தான்! அவர்கள் மட்டும் டாக்டர் இப்றாஹிம் காக்கா அவர்களை எங்கட்கு அறிமுகம் செய்யாவிடில், இவர்கள் யார் என்றே எங்கட்குத் தெரியாமலே ஆகியிருக்கும். ஆம். நேற்று முகநூல் வாயாடியில் வந்த என் பள்ளித் தோழர் என்னிடம் கேட்டார்,”இப்ராகிம் அன்சாரி என்பவர் யார்?”
நான் சொன்னேன்,” அதிரை நிருபர் வலைத்தளத்தில் தொடர் ஆக்கம் எழுதும் பொருளாதார மேதை; பேரா.அப்துல்காதிர் அவர்களின் உற்ற நண்பர்” அவர் சொன்னார், “நான் அறிந்து கொண்டேன்; தி.மு.க மேடைகளில் மிகச் சிறந்த பேச்சாளராக வலம் வந்தவர்கள்” என்றார். எனக்கும் நேற்று தான் டாக்டர் இ.அ. காக்கா அவர்களின் பேச்சாற்றலும் முன்பே பேரும் புகழும் பெற்றிருப்பதை என் பள்ளித் தோழர் வழியாக அறிந்தேன்.

டாக்டர் அ.இ.காக்கா அவர்கள் உடல்நிலைதத் தேறி நமக்குச் சேவை செய்திட அல்லாஹ் அருள்புரிவானாக (ஆமீன்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஸ்ட்ராங்கான அஸ்திவாரம் ! அடித்தளமே வலுவாக ஆரம்பிக்கிறது...

இனிவரும் ஆய்வுகளும் இன்னும் பலம் சேர்க்கும் இன்ஷா அல்லாஹ் !

எதிர்பார்க்கிறோம் !

KALAM SHAICK ABDUL KADER said...

எனது நண்பர் இத்ரீஸ் கனி (கட்டிமேடு)அபுதபியில் பணியாற்றுகின்றார்கள்; அவர்கள் அனுப்பிய இக்கவிதை இவ்வாக்கத்துடன் தொடர்புடையது என்பதாலும் கவிதைத் தேனைப் பருகத் துடிக்கும் டாக்டர் இ.அ.காக்கா அவர்களின் அன்புப் பார்வைக்காகவும்:

//மலைகள் விலைப்போய்விட்டன
மரங்கள் சுரங்களாகிவிட்டன
பாழ்ப்பட்ட பகட்டின் பொருட்டு
பச்சைக் கோபுரங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு
இடுக்குகளிலும் கூட
அடுக்கு மாடிகளாக
அலங்கரிக்கப்பட்டுவிட்டன


பசி பொறுக்காது
புல்லுக்கும் வழியின்றி
எலி வேட்டையில்
இறங்கிவிட்டனப் புலிகள்


உறிஞ்சி உறிஞ்சியே
பூமியின் நாளங்களெல்லாம்
வெம்மையின் துளைகளாகிவிட்டன
உலர்ந்து, உணவில்லாதுத் துடிப்பிழந்து
வயல்வெளிகளெல்லாம்
வெறும் வெடிப்புகளாகிவிட்டன
கல்லறை மேடுகளாய்
உணவு வழியின்றி உடைக்கப் பட்ட
கஞ்சிப் பானைகளின் ஓடுகளாய்
கண்களுக்குக் காட்சியாகிவிட
பிழையெல்லாம் பொறுத்து
மழையொன்றை வேண்டி
நிலம் மேலே பார்க்கிறது
வானம் கீழே பார்க்கிறது
பார்க்க மேலும் கீழும்
வெற்றிடங்களே சுற்றிடங்களாக...!\\

KALAM SHAICK ABDUL KADER said...

A man found Rs: 100/= and went to a five star Hotel for dinner. His bill was for Rs: 3000/=. He said that he had only Rs:100/=and then he was handed over to police. He gave Rs: 100/= to the police and went free.

This is called FINANCIAL MANAGEMENT!!!

(Nice joke from Facebook)

ZAKIR HUSSAIN said...

//தாயின் வைத்தியத்தை அலட்சியம் செய்துவிட்டு சாராயக்கடைக்குப் போகிறவர்கள் – பள்ளிக் கூடத்துக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கொண்டு பட்டுப்புடவை வாங்குபவர்கள் – நிலமே வாங்காமல் செங்கல் வாங்கி அடுக்குபவர்கள் – குடிதண்ணீருக்கு வழி செய்யாமல் ஹோம் தியேட்டர் வாங்குபவர்கள் ஆகிய அவர்களை நமது வாழ்வின் வழிப் போக்கில் அன்றாடம் காணுகிறோம். இவர்களே பொருளாதாரம் அறியாத பேதைகள்//

To Brother Ebrahim Ansari,


இதுதான் சரியான சுட்டல். நீங்கள் சொன்ன சில விசயங்களையும் நம்மடவர்களிடம் பார்த்திருக்கிறேன். கடன் வாங்கி பகட்டை காட்டுவது. மற்ற பெண்கள் போட்டிருக்கும் நகை போன்று தானும் போட்டே ஆக வேண்டும் [ ஒல்டு ஃபேஷனாயிடுச்சாம் ] என்று சொல்லி பெண்கள் கடன் வாங்கி நகைகளை மாற்றுவதும். மன்னிக்க முடியாத குற்றம்.

இன்னும் எழுதுங்கள்...




m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்றைய ஹாட் நியூஸ்....

கடலை வியாபாரியிடம் ரூ 27,500/= கோடிக்கான அமெரிக்க கடன் பத்திரங்கள் இருப்பதாகவும் அவரோ... அது BOE (Bill of Exchange) என்றும் சொல்லியிருக்கிறார்...

ஸ்ட்ராங்காதான் பேசுகிறார் !

இது சாத்தியமா ?

sabeer.abushahruk said...

காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒரே வெள்ளைக்கார துரைகளின் புத்தகங்களே ரெஃபெர் செய்திருக்கிறீர்களே நம் நாட்டிற்கு அவர்களின் பொருளாதாரத் தத்துவங்கள் பொருந்துமா? பின்பற்றி முன்னேற ஏதுவாகுமா?  உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் இந்த நாட்டின் தன்மைக்கேற்றப் பொருளாதாரக் கொள்கைகளை யாரும் சொன்னதில்லையா?

அதற்குமுன்பாக, மதம் என்றால் என்ன என்று நானும் சொல்லலாமா? 

மதம் என்பது மனிதன் தனக்குள் இருக்கும் மிருகத்தை அடக்கி ஆள வழிவகைகள் தெரியாததால் அவர்களுக்குள் ஒரு புனிதரைத் தெரிந்தெடுத்து போதிக்குமாறு எல்லாம் வல்லவன் பணித்த வழிமுறை என்கிறேன். இந்த அத்தியாயத்தில் உள்ள அறிஞர்கள் சொன்னவை, எல்லாவற்றையும் மதம் என்று ஏற்றுக்கொண்டவர்களுக்கான ரெஃபெரென்ஸ். நமக்கல்ல காக்கா.

பெளதீகப் பையன் நானு. உங்க சகவாசத்தால என்னாமா தேறி எதிர்க் கேள்வியெல்லாம் கேட்கிறேன் கவனிச்சீங்களா?

கேள்வி அட்டுத்தனமா இருந்தா அலட்டிக்காம விட்டுருங்க காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தர் சபீர் அவர்கள் பொருளாதார வகுப்பில் இருந்தால் இது போன்ற இன்னும் வினாக்களைத் தொடுத்திருப்பார் என்னைப் போல்: ஆம். புகுமுக வகுப்பில் எனக்குப் பொருளாதாரப் பாடம் நடத்திய பேராசிரியர் அப்துல் ஜப்பார் அவர்களிடம் இது போன்றதொரு வினாவினைக் கேட்டேன்:

காற்று, நீர், நிலம்,நெருப்பு, ஆகாயம் எல்லாம் “இயற்கையின் கொடைகள்” என்று சொல்லப்பட்டதும், நான் கேட்டேன்,”அதெப்படி, இறைவனின் கொடைகள் என்றல்லவாச் சொல்ல வேண்டும்?” பேராசிரியர் சொன்னார்கள்:” இந்தப் பொருளாதாரச் சிந்தனைகளும், தத்துவங்களும் சொன்ன அதிகம் பேர் இறைமறுப்புக் கொள்கை உடையவர்களாதலால் அவர்கட்கு “இயற்கை” என்கின்ற வரைக்கும் தான் தெரியும்; ஆனால், நாம் முஸ்லிம்கள் அதையும் தாண்டிப் படைத்தவன், மறுமை என்று ஆழமான சிந்தனைக்குச் சொந்தக்காரர்களாகி விட்டோம்” என்று என்னை அமைதிப் படுத்தினார்கள். எனவே, டாக்டர் இப்றாஹிம் காக்கா அவர்கள் இஸ்லாம் கூறும் பொருளாதாரம் என்று ஆய்வைத் தொடங்கியிருப்பதால், நமது ஐயங்கட்குத் தேவையான தெளிவு கிட்டும்.

ஒருமுறை நீங்கள் உங்களின் உற்ற நண்பர்- ஜாஹிர் அவர்களின் படிக்கட்டுள் பற்றிய பின்னூட்டத்தில் சொன்னீர்கள்:”கவனத்துடன் எழுது” என்று., இதன் உட்பொருள் யான் அறிவேன். அஃதாவது, “உளவியல் என்பதும் மார்க்க நம்பிக்கைகளில் கூர் பார்க்கும் கத்தி” என்பது உங்கட்கும் தெரிந்துத் தான் அப்படி “கவனத்துடன் எழுது” என்று எச்சரித்தீர்கள். அஃதேபோல், பொருளாதாரப் பாடமும் சில நேரங்களில் மார்க்கச் சிந்த்தனைகளுடன் முரண்பட நேரிடும்; தேர்ந்த ஆய்வாளர் டாக்டர் இ.அ. காக்கா அவர்கள் மிகவும் கவனமாகவே கையாள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

sabeer.abushahruk said...

//குடிதண்ணீருக்கு வழி செய்யாமல் ஹோம் தியேட்டர் வாங்குபவர்கள்//

நிறைய இருக்கிறார்கள் உதாரண புருஷர்கள். எனக்குத் தெரிந்த ஒருவருக்குப் பாடவே தெரியாது. கரோக்கி ஸிஸ்டம், மைக்கெல்லாம் உள்ள ஆடியோ செட் வாங்கிட்டுப் போய் ஈ எம் ஹனீஃபா பாட்டு மட்டும் போட்டுக் கேட்டார். ஒரு பாட்டு ஓடறதுக்குள்ள பச்சை சிவப்பு ஊதா என்று பல வர்ணங்களில் விளக்கு அலங்காரம் ஓடும்

தேவைக்கு ஏற்ப வாங்குபவர்கள் மிகக்குறைவு.

KALAM SHAICK ABDUL KADER said...

////குடிதண்ணீருக்கு வழி செய்யாமல் ஹோம் தியேட்டர் வாங்குபவர்கள்//

வீட்டை அலங்காரமாகக் கட்டி விட்டு மொட்டை மாடியில் “ஒட்டுகல்/தட்டு ஓடு” பதிக்காமல் மழைக்காலத்தில் மழைநீர் ஒழுக வைத்திருப்பவர்களும் அதிரையில் பலர் உளர்.

இப்னு அப்துல் ரஜாக் said...

படிக்கும்போது போர் அடித்த பொருளாதார வகுப்பு இன்று டாக்டர் அவர்களால் இனிமையாக நூற் லாட்ஜ் அல்வா மாதிரி தரப்படுகிறது.எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு இஸ்லாம் மட்டுமே.அதை அரசுகளும் மக்களும் புரிந்துகொண்டால் நலமே.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி அஹமத் அமீன்,
அலைக்குமுஸ் ஸலாம். நீங்கள் வசிக்கும் வட்டாரத்தில் விளக்கெண்ணெய் அதிகம் கிடைக்கிறதா? கண்களில் ஊர்ரித்தேடுவீர்கள் போல் இருக்கிறது தவறு எங்கே என்று . பாராட்டுகிறேன். நன்றி. என் தவறுதான். நீங்கள் சொல்வதே சரி. நன்றியுரையில் திருத்தம் செய்ய நினைத்தேன். நீங்கள் சுட்டிக் காட்டிவிட்டீர்கள். மிக கவனமாக படிக்கிறீர்கள் என்று அறிய மகிழ்ச்சி.

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ் ஸலாம். தம்பி கவிஞர் சபீர் அவர்கள் கேட்பது

//ஒரே வெள்ளைக்கார துரைகளின் புத்தகங்களே ரெஃபெர் செய்திருக்கிறீர்களே நம் நாட்டிற்கு அவர்களின் பொருளாதாரத் தத்துவங்கள் பொருந்துமா? பின்பற்றி முன்னேற ஏதுவாகுமா? உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் இந்த நாட்டின் தன்மைக்கேற்றப் பொருளாதாரக் கொள்கைகளை யாரும் சொன்னதில்லையா?//

இந்தியா உட்பட உலகப் பல்கலைக் கழகங்களில் பொருளாதாரப் பாட அறிமுக
குறிப்புகளையே சுட்டிக்காட்டி இருக்கிறேன்.இந்தியாவுக்கே ஏற்ற பொருளாதாரமாக காந்தி சுட்டிய கிராமியப் பொருளாதாரம், ஜெயப் பிரகாஷ் நாராயணன் சொன்ன சர்வோதயப் பொருளாதாரம், இந்து , புத்த, ஜைன , சைவ, வைணவ மதக குறிப்புகள் சொன்ன பொருளாதாரம் ஆகியவற்றை எல்லாம் இனி வரும் அத்தியாயங்களில் இன்ஷா அல்லாஹ் பேச இருக்கிறோம்.

மதங்களைப் பற்றியும், பொருளாதாரக் கோட்பாடுகள் பற்றியும் அறிமுகக் கருத்துக்களில் கூறப்பட்டவற்றின் தொகுப்பே நான் சுட்டிக்காட்டி இருப்பது. இன்னும் நீண்ட தூரம் இந்த சுமையை சுமந்து கொண்டு பயணிக்க வேண்டி இருக்கிறது. அப்போது அவிழ்க்கப்படும் முடிச்சுகளில் உங்களின் வினாக்களுக்கு முடிந்தவரை விடை தர முயற்சிப்பேன்.

// இந்த அத்தியாயத்தில் உள்ள அறிஞர்கள் சொன்னவை, எல்லாவற்றையும் மதம் என்று ஏற்றுக்கொண்டவர்களுக்கான ரெஃபெரென்ஸ். நமக்கல்ல காக்கா.// ஆமாம். நமக்கென்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது இன்னும் இரண்டு அத்தியாயங்களுக்குப் பிறகே வரும். நீங்கள் சொன்னது போல் நான் குறிப்பிட்டது மற்றவர்களுக்கான குறிப்புகளே. இவற்றிலிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுவதே இந்தத் தொடரின் முக்கிய குறிக்கோள்.

அளந்து போடுவதை அப்படியே பைகளில் வாங்கிக் கொள்ளாமல் தரம் பார்த்து, கைகளில் அள்ளிப் பார்த்து, உமி இருக்கிறதா, கல் இருக்கிறதா, கருப்பரிசி கிடக்கிறதா, நிறுவை சரியாக இருக்கிறதா என்றெல்லாம் ஆய்ந்து ஏற்றுக் கொள்ளும் உங்களின் நற் குணம் போற்றிப் பாராட்டத்தக்கது.

ZAKIR HUSSAIN said...

///குடிதண்ணீருக்கு வழி செய்யாமல் ஹோம் தியேட்டர் வாங்குபவர்கள்//

//வீட்டை அலங்காரமாகக் கட்டி விட்டு மொட்டை மாடியில் “ஒட்டுகல்/தட்டு ஓடு” பதிக்காமல் மழைக்காலத்தில் மழைநீர் ஒழுக வைத்திருப்பவர்களும் அதிரையில் பலர் உளர். //



சமீபத்தில் ஊர் வந்திருக்கும்போது ஒரு யோசனை தோன்றியது. பெரும்பாலும் நம் ஊர்களில் மாடி வீடு கட்டும்போது தண்ணீர் ஒழுகாமல் இருக்க கல் பதிக்கிறார்கள். அதை விட செலவு குறைவாக கூரை [ வசதிக்கேற்ப ] ஏற்படுத்தி மழைநீரை ஒருமுகப்படுத்தி ஒரு டேங்கில் அனுப்பி வீட்டுப்பயன்பாட்டுக்கு கொண்டுவரலாமே.... விலை விசாரித்தேன்...நான் செய்த யோசனையின் செயல்பாட்டுக்கு செலவு குறைவு பயன் அதிகம் என்று கான்ட்ராக்டர் சொன்னார்.

வெயிலுக்கு நிழல் / மழை நேரத்தில் தண்ணீர் சேமிக்கவும் உதவும்.




Yasir said...

மற்றுமொரு முத்திரை ஆக்கம் அன்சாரி மாமாவிடமிருந்து,பொருளாதாரம் படிக்காத என்னைபோன்றோர்க்குக் கலங்கரை விளக்கம் இவ்வாக்கம் ..தொடர்ந்து எழுதுங்கள்

Ebrahim Ansari said...

கவியன்பன் அவர்கள் நவின்றவை

// அஃதேபோல், பொருளாதாரப் பாடமும் சில நேரங்களில் மார்க்கச் சிந்த்தனைகளுடன் முரண்பட நேரிடும்; தேர்ந்த ஆய்வாளர் டாக்டர் இ.அ. காக்கா அவர்கள் மிகவும் கவனமாகவே கையாள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.//

மிகவும் கவனமாக கையாளவேண்டிய பொறுப்பை ஏற்றிருப்பது உண்மைதான். முன்னுரையில் கூறியபடி அவ்வளவாக மார்க்கக் கல்வி பெற்றிராத என் போன்றோருக்கு மிகவும் கடும் சுமையே. துஆச் செய்யுங்கள். ஆலோசனை பகருங்கள். தட்டும்போது தட்டுங்கள். குட்டும்போது குட்டுங்கள்.

Ebrahim Ansari said...

தட்டிக் கொடுத்த மற்றும் சுட்டிக்காட்டிய அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு