Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 16 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 06, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

இதற்கு முன்னர் பதிக்கப்பட்ட இரு பதிவுகளில் நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியருடன் எப்படி அன்பாக நடந்து கொண்டார்கள் என்பதை ஒரு சில நிகழ்வுகளின் தொகுப்புகளிலிருந்து நாம் அறிந்தோம். அவையனைத்தும் நம் அனைவருக்கும் நல்லதொரு படிப்பினையாக அமைந்திருந்தது. நம் வாழ்வுக்கு வழிகாட்டியான நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறையில் நம்முடைய வாழ்வை முழுமையாக அமைத்து சந்தோசமாக மனைவி மக்களோடு வாழ முயற்சி செய்வோமாக இன்ஷா அல்லாஹ்.

இந்த வாரம் ஸஹாபாக்கள் சிலரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி பார்க்கலாம். முதலில் ஸஹாபி என்றால் யார் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

நமதருமை இறைத்தூதர் கண்மணி நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை ஏற்று, அவர்களைக் கண்ணால் கண்டு சந்தித்து, முஸ்லீமாக வாழ்ந்து முஸ்லீமாக மரணித்தவர்களை ஸஹாபாக்கள் என்று வரலாற்றில் நாம் அறிகிறோம். இதில் முஸ்லீம்கள் யாவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. நபி(ஸல்) அவர்களை கண்ணால் காணாதவர் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள்., நபி(ஸல்) அவர்களைக் கண்ணால் கண்டதில்லை இருந்தாலும் இந்த ஸஹாபி அவர்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லீமாக வாழ்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஸஹபாக்களைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறியுள்ளான். பின்வரும் வசனம் அதனைப் பரைசாற்றுகிறது.

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (திருக்குர் ஆன் 09:100)

அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்களை சுவனத்தில் கண்ணியப் படுத்துவேன் என்று கூறுகிறான்,  அந்த நல்லவர்களை நாம் நல்ல அபிப்பிராயத்தோடு நேசிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரத்தின்படி வாழ்ந்து, பல கஷ்டங்களை சந்தித்து, உடலாலும் உயிராலும் எண்ணற்ற தியாகங்கள் செய்த அந்த பெருமக்களின் மேல் நன்மதிப்பை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து முஹாஜிர்கள் என்ற பட்டத்துடன் மதீனாவிற்கு வந்தார்கள் மக்கா முஸ்லீம்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தங்குமிடம் கொடுத்து, உணவு கொடுத்து. தங்களது சொத்தில் பங்கு கொடுத்து, உடன்பிறவாச் சகோதரர்களாக அரவனைத்து வாழ்ந்தவர்கள் மதீனத்து அன்சாரி தோழர்கள். மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒருசில சிறு பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளே ஏற்பட்டாலும், அவைகள் நபி(ஸல்) அவர்களின் அன்பான உபதேசத்தால் அவர்கள் அனைவரின் மனதிலும் நீ முஹாஜிர், நீ அன்சார் என்ற எண்ணம் நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே உடைத்தெரியப்பட்டது.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை பின் வருமாறு கூறினார்கள்.

அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்து சென்றால் அன்சாரிகள் நடந்து செல்லும் பள்ளத்தாக்கில் தான் நானும் நடந்து செல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன்.  (புகாரி: 3779)

மற்றொரு சந்தர்ப்பத்தில் இப்படிக் கூறினார்கள்.

இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி: 3783).

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்" என்று இரண்டு முறை கூறினார்கள். (புகாரி:3786).

சரித்திரம் போற்றும் சாதனையாளார்களான அன்சாரி தோழர்களின் வாழ்வுகளிலிருந்தும், தன்னிடம் ஏற்ற இஸ்லாத்தைப் பாதுகாக்க வீட்டை இழந்து, சொத்துகளை இழந்து, சொந்தங்களை இழந்து, சொந்த நாட்டை இழந்து அகதிகளாக வந்து எண்ணிலடங்காக துன்பங்களைச் சுமந்து வாழ்ந்த முஹாஜிர் தோழர்களின் வாழ்விலிருந்தும் நிறைய படிப்பினைகள் நமக்கு இருக்கிறது. இனி வரும் வாரங்களில் நெகிழ்ச்சியூட்டும் பலரும் அறிந்த சம்பவங்களுடன் இன்னும் அறியாத சம்பவங்களைப் பற்றியும் நாம் அறிய இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

நபி(ஸல்) அவர்களின் வாழ்வை முன் மாதிரியாக வைத்து வாழ்ந்த அந்த சத்திய சஹாபாக்கள், நம்முடைய ஈமானிய நம்பிக்கைக்கு எடுத்துகாட்டாக வாழ்ந்துள்ளார்கள் என்பதைப் பல சம்பவங்களில் நாம் காணலாம். அல்லாஹ் திருக்குர்ஆனில் 90க்கும் மேற்பட்ட இடத்தில் முஃமீன்களே என்று அன்று வாழ்ந்த சஹாபாக்களைப் பார்த்து சொல்லுகிறான். 

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள். (குர் ஆன் 2:285.)

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் சஹாபாக்கள், அவர்களைத் தான் அல்லாஹ் ஈமான் கொண்ட மக்கள் என்று 90 தடவைக்கு மேல் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட சத்திய சஹாபாக்கள் மேல் நம் அனைவருக்கும் நன்மதிப்பு ஏற்பட வேண்டும்.

எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்கு புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள் - அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு. (திருக்குர்ஆன் 8:74)

மேற்சொன்ன வசனத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்து வாழ்ந்தவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தோழர்களான முஹாஜிர்களும், அன்சாரிகளும். 

நம்முடைய வாழ்வு அந்த அன்சாரி முஹாஜிர் தோழர்கள் எப்படி நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரப்ம்படி வாழ்ந்தது போல் நாம் வாழ்கிறோமா? என்ற கேள்வியை நமக்குள் கேட்டுப் பார்க்க வேண்டும்.

அன்சாரிகள், முஹாஜிர்களுக்கு உதவியது போல் அகதிகளாக நாதியற்று ஊரைவிட்டு விரட்டப்பட்டவர்கள் நம் முன்னே வந்தால், என்றைக்காவது நாம் உதவி இருக்கிறோம்? சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலம், முஸாபராபத்தில் முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கானவர்கள் சொந்த ஊரை விட்டு விரட்டப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் எத்தனை பேருக்கு ஏற்பட்டுள்ளது? சொந்த ஊரையும் வீட்டையும், சொத்துகளை விட்டு அகதி முகாம்களில் அவதியுறுகிறார்களே, அந்த சகோதர சகோதரிகளுக்காக குறைந்தபட்சம் நம் பங்கிற்கு துஆவாது செய்திருப்போமா? சிந்திக்க வேண்டும்.

யா அல்லாஹ் எங்கள் எல்லோரையும், சத்திய சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் எப்படி வாழ்ந்தார்களோ அது போல் எங்களையும் வாழ அருள் புரிவாயாக.

M தாஜுதீன்

15 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர், சகோ. தாஜுதீன்

நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் சஹாபாக்கள் எப்படி வாழ்ந்தார்களோ அது போல் எங்களையும் வாழ அருள் புரிவாயாக.

Unknown said...

முஹாஜிர் , அன்சார்கள் வாழ்வை முன்னெடுத்து செல்லும் தம்பி தாஜுதீன் அவர்களே !

அந்த தியாக வாழ்க்கையும், நம் இன்றைய வாழ்க்கையும் ஒப்பிட்டு பேசி செல்லும் தங்களின் இந்த தொடர் உண்மையிலேயே கொஞ்சம் அவ்வப்பொழுது மனதில் சிந்தனையை பரவ விட்டுதான் செல்கின்றது.

காரணம், அந்த பரஸ்பர விட்டுக்கொடுத்த, தியாக வாழ்வில் ஒரு சிறிய அளவிலாவது நம் வாழ்வில் நாம் செய்திருக்கின்றோமா அல்லது இனியாகிலும் செய்யும் வாய்ப்பு வந்தாலும், அதை சஹாபாக்கள் போல் பயன்படுத்தும் மன நிலையை அல்லாஹ் தருவானா என்ற ஏக்கமே.

நம் அனைவருக்கும் தர நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்..

தங்கள் ஆக்கம் ஒவ்வருவருடைய மனதிலும் ஒரு ஈமானிய தாக்கத்தை
ஏற்ப்படுத்தட்டும்..

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி தாஜுதீன்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

அண்மையில் நபிகள் நாயகம் என்கிற தலைப்பிட்ட நூலை ஒரு பிற மதத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன். கடந்த வாரம் அவரை நான் சந்தித்த போது படித்தீர்களா என்று கேட்டேன்.

அவர் மிகவும் புகழ்ந்தும் சிலாகித்தும் வியந்தும் சொன்னது மக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த பிழைக்க வழியற்ற சஹாபாக்களை மதினாவில் வசித்து வந்தோர் ஆளுக்கு ஒருவராக பொறுப்பேற்றுக் கொண்ட வரலாற்று சம்பவத்தையே.

நாம் படித்தாலும் உடல் சிலிர்க்கிறது.

துபாயில் விசிட் விசாவில் யாரும் வந்தாலும் அவர்கள் ஸலாம் சொன்னால் கூட பதில் சொல்ல தயங்குபவர்களைப் பார்க்கிறோம். பார்த்தும் பார்க்காதது மாதிரி போகிறவர்களையும் பார்க்கிறோம்.

எல்லோரையும் சொல்லவில்லை. வலிய வந்து அன்புடன் ஆதரிக்கும் அன்பர்களும் இருக்கிறார்கள்.

என்னுடைய வாழ்வில், மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில் மஸ்கட்டுக்கு விசிட் விசாவில் போனபோது ,என்னை தன்னுடைய வீட்டில் தங்க இடமும் உணவும் தனது வேலை கிடைக்கும்வரை போஷித்த கீழக்கரை அப்துல் ஹயூம் காக்கா அவர்களை இங்கு நான் நினைவு கூறுகிறேன்.

அவரது கடையில் வேலை செய்த அப்துல் காதர் என்கிற சிக்கல் என்கிற ஊரைச்சேர்ந்த நண்பர் என் கையில் பணம் தந்தால் நான் வாங்க மறுப்பேன் என்று எனக்குத்தெரியாமல நான் குளிக்கப் போகும்போது நான் இன்டர்வியூ செல்ல பஸ் செலவுக்காக பாக்கெட்டில் பணம் வைத்துவிட்டு என்னிடம் சொல்லாமல் சென்ற பண்புள்ளவர்களையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது போல மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சஹாபாக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆகையால்தான் நன் கண்மணி நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே அவர்களோடு வாழ வாய்க்கப் பெற்றார்கள்.

அந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்காவிட்டாலும் அவர்களின் ஈமானைப் போலவே திடமான சலனங்களற்ற ஈமானை அடைய நாம் முயல்வோமாக.

படிப்பினைகள் தொடரட்டும்.

வாழ்த்துகள் தம்பி தாஜுதீன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். யாரோ விசமி என் பெயரை உபயோகித்து என் தொடருபுள்ள அனைவருக்கும் பேஸ் புத்தகத்திலும், யாஹூ ஈ மெயிலிலும் நான் பிலிப்பைன்சிலிருப்பதாகவும், அவசரமாக பணம் வேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும் தொடர்ந்து அனுப்பி இருக்கிறான்(ள்).கவணம் நான் அமெரிக்காவில் அல்லாஹ்வின் உதவியில் நல்ல முறையில் இருக்கிறேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். யாரோ விசமி என் பெயரை உபயோகித்து என் தொடருபுள்ள அனைவருக்கும் பேஸ் புத்தகத்திலும், யாஹூ ஈ மெயிலிலும் நான் பிலிப்பைன்சிலிருப்பதாகவும், அவசரமாக பணம் வேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும் தொடர்ந்து அனுப்பி இருக்கிறான்(ள்).கவணம் நான் அமெரிக்காவில் அல்லாஹ்வின் உதவியில் நல்ல முறையில் இருக்கிறேன்.

نتائج الاعداية بسوريا said...

//அஸ்ஸலாமு அலைக்கும். யாரோ விசமி என் பெயரை உபயோகித்து என் தொடருபுள்ள அனைவருக்கும் பேஸ் புத்தகத்திலும், யாஹூ ஈ மெயிலிலும் நான் பிலிப்பைன்சிலிருப்பதாகவும், அவசரமாக பணம் வேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும் தொடர்ந்து அனுப்பி இருக்கிறான்(ள்).கவணம் நான் அமெரிக்காவில் அல்லாஹ்வின் உதவியில் நல்ல முறையில் இருக்கிறேன்.//

இரத்தத்தோடு கலந்துவிட்ட ( அதாவது இன்றைய தொடர்பு சாதனங்களோடு கலந்துவிட்ட ) ஷைத்தாநியத்தின் வலைகளிலுருந்தும், மற்றும் அவனின் சூழ்ச்சிப்பின்னல்கலிளுருந்தும் இறைவன் நம் அனைவரையும் காக்கட்டும்,

இத்தகைய சூழ்சிகளில் இருந்து நாம் அனைவரும் கொஞ்சம் கவனமாக இருக்க வேணுமாய் கேட்டுக்கொள்ளும்.

அபு ஆசிப்.


Yasir said...

கிரவுன் இதுதான் இப்போதைய டேட்டஸ் ஸ்கேம்.....ஒரு நாதரி என் ஹாட்மெயில் ஐடியில் இருந்தே வெளங்காமே என்னுடைய கம்பெனி இமெயில் ஐடிக்கும் பிச்சை இமெயில் அனுப்பிருந்தான்....என்னத்த சொல்ல

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உரக்கச் சொல்லும் உரைகல் ! இந்த தொடர் !

o0o0o0o0o0o0o0o0o0o0o0

கிரவ்னு ! [ஸாரி இல்லே இல்லே மன்னிச்சுக்கோ இல்லே மாஃகரோ - இந்தப் பதிவுக்கு சந்ம்பதமில்லாத கருத்தினை இங்கே பேஸ்ட் அடிச்சதுக்கு]

தமிழை சாவடிக்க ஒரு கூட்டம் கெளம்பியிருக்கு(டா)ப்பா !...

எனக்கு என்னமோ அந்த கேங்குதான் 'அதிரைநிருபரின் எழில்' எங்கோ ஃபிலிப்பைன்ஸில் மாட்டிகிட்டதாக உடான்ஸ் விட்டு மெயில் பீதி ஏற்படுத்தியிருக்கு !

உஷார் ! :)

இணைய கடலில் தத்தளித்து ஃபேஸ்புக்கில் மூழ்கியதும் எங்கே கரை ஒதுங்கிட்டோம்னு பிரம்மையை ஏற்படுத்தும் இத்தகைய மின்னஞ்சல்களுக்கு பஞ்சமில்லை !

தனி மின்னஞ்சலில் பேசிக்கலாம் வா ! ரூட் போட்ட இடத்திற்கு ஒரு டிக்கெட் போட்டுடலாம் !

Shameed said...

//நமதருமை இறைத்தூதர் கண்மணி நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை ஏற்று, அவர்களைக் கண்ணால் கண்டு சந்தித்து, முஸ்லீமாக வாழ்ந்து முஸ்லீமாக மரணித்தவர்களை ஸஹாபாக்கள் என்று வரலாற்றில் நாம் அறிகிறோம். //

ஸஹாபாக்கள் பற்றிய அழகிய விளக்கங்கள்

வாழ்த்துகள் தம்பி தாஜுதீன்

Shameed said...

Yasir சொன்னது…
//கிரவுன் இதுதான் இப்போதைய டேட்டஸ் ஸ்கேம்.....ஒரு நாதரி என் ஹாட்மெயில் ஐடியில் இருந்தே வெளங்காமே என்னுடைய கம்பெனி இமெயில் ஐடிக்கும் பிச்சை இமெயில் அனுப்பிருந்தான்....என்னத்த சொல்ல//



பிச்சைகாரர் கூட வீடு வீடா தெருத்தெருவா போய் பிச்சை எடுக்கின்றார்கள் அதில் சிறு உழைப்பு இருக்கு இந்த நாதாரி பயலுவோ உட்காந்த எடத்துலையோ இருந்து பிச்சை எடுக்குரானுவோ

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடைசி பத்தியில் தோழர்களுக்கு உதவும் நல்ல எண்ணத்துடன் கேட்ட கேள்விகள் நெஞ்சை கிள்ளுகிறது! ஆனால் அன்றைய சகாபாக்கள் போல் இன்றைய நண்பர்கள்/மனிதர்கள் இல்லையே !

நம் ஊரிலிருந்து 'அல்- குரான்' தமிழ் மொழி பெயர்ப்பு மலேசியாவில் விற்க வந்த ஒருவருக்கு எந்த என் சொந்த ஆதாயமும் கருதாமல் என் போட்டு விட்டு உதவியதில் அவர் எனக்கு எப்படி நன்றி சொன்னார் தெரியுமா? ''உன்னை போல் இலிச்சவாய் கேனப்பயல் யாருமில்லை!' முழுதும் எழுத .உடல்நிலை இடம் தராததால் எழுத முடியவில்லை.
இன்சா அல்லாஹ் நேரில் சந்திக்கும் போது முழுதும் சொல்கிறேன்.

அதையும் எழுதலாம்.

S. முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

//என் 14-வது பின்னூட்டத்தில் ஒரு திருத்தம்// [ஆதாயமும் கருதாமல் .என்.... போட்டு விட்டு] என்று இருப்பது தவறு.].

ஆதாயமும் கருதாமல் என் சொந்த வேலையே போட்டு விட்டு//எ ன்று தயவு செய்து திருதிக் கொள்ளவும்..

S.முஹமதுபாரூக் அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு