Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் – 19 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 27, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

முந்தைய பதிவில் அம்மார் (ரலி) அவர்களின் தாயார்  சுமைய்யா அவர்கள் தந்தை யாசிர் (ரலி) அவர்கள் இருவரின் வாழ்வில் நிகழந்தவைகளின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் பார்த்தோம், தொடர்ச்சியாக இந்த வாரம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதற்காக அவர்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லெனா இன்னல்கள் பற்றி மேலும் அறிந்து நாமக்கு அவற்றிலிருந்து எவ்வகை படிப்பினைகள் இருக்கிறது என்பதை அறியலாம். இன்ஷா அல்லாஹ்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தூய இஸ்லாத்தை எத்தி வைத்த காலகட்டத்தில், ஆரம்ப காலங்களில் இஸ்லாத்தை ஏற்ற அனைவருக்கும் குரைஷிகள் காஃபிர்களால் தொந்தரவு கொடுக்கப்பட்டது குறிப்பாக பனுமக்சூம் என்ற கூட்டத்தினரால். ஆனால், அன்றைய சூழலில் அடிமைகளாக இருந்தவர்களும் இஸ்லாத்தை தழுவியதால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொந்தரவுகள் சித்தரவதைகள் சொல்லால் எடுத்துரைக்க இயலாது. அதிலும் அடிமையின் வாரிசுகளுக்கு கொடுமைகள் இன்னும் அதிகம். அடிமைகளாக இருந்த தம்பதியருக்கு பிறந்த அம்மார் (ரலி) அவர்கள் எண்ணிலடங்காத் துன்பங்களை சந்தித்தார்கள். கல்நெஞ்சம் கொண்டவர்களின் நெஞ்சம்கூட கரைந்து விடும் அளவிற்கு அம்மார் (ரலி) அவர்கள் போன்றவர்களுக்கு இழைக்கப்பட்டது.

குரைஷி காஃபிர்களுக்கு தூய இஸ்லாத்தை தழுவிய முஸ்லீம்களை கொடுமைப்படுத்துவது என்பது ஒரு பொழுது போக்காகவே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் காலை அம்மார்(ரலி) அவர்களை அழைத்து இஸ்லாத்தை விட்டுவிடு என்று சொல்லி அம்மார்(ரலி) அவர்களுக்கு மயக்கம் வரும் வரை அடிப்பார்கள், மயங்கிவிடுவார் அந்த பொறுமைசாலியான அல்லாஹ்வின் அடிமை. செத்தான் அடிமையின் மகன் என்று சொல்லி அந்த இடத்தைவிட்டுச் செல்வார்கள் பனுமக்சூம் குரைஷிக் காஃபிர் கூட்டம். அம்மார்(ரலி) அவர்கள் சற்று மயக்கம் தெளிந்து அமர்ந்திருகும்போது.

அதே நாள் மாலை மீண்டும் தரதரவென இழுத்து வீதிகளுக்கு கொண்டு வந்து, இஸ்லாத்தை விட்டு விடு என்று சொல்லியே அடிப்பார்கள் மறுபடியும் மயக்கமடைந்து விடுவார்கள் அம்மார்(ரலி) அவர்கள். இது ஒரு நாள், வாரம், மாதம் என்று நின்றுவிடவில்லை, தொடர்ந்து பல நாட்கள் இதுபோன்ற கொடுமைகளைச் சந்தித்து வந்திருக்கிறார்கள் பொறுமையின் சிகரம் அம்மார்(ரலி) அவர்கள். சுப்ஹானல்லாஹ்…!

அம்மார்(ரலி) அவர்களை ஒரு நாள் கடுமையாக தீ மூட்டப்பட்டு தக தகவென்று எரியும் அந்த தீயில் அம்மார்(ரலி) அவர்களின் முதுகை பிடித்து காய்ச்சினார்கள். கோழி, மாட்டுக்கறியை எறியும் அடுப்பில் சுடுவது போல் அம்மார்(ரலி) அவர்களின் முதுகை தீயினால் சுட்டார்கள் அந்த கல் நெஞ்சக்காரர்கள். தன் உடம்பை தீயினில் காய்சினாலும் தன்னுடையை உள்ளத்தில் உள்ள இஸ்லாத்தை எடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்து பொறுத்துக் கொண்டவர்கள்தான் அம்மார்(ரலி) அவர்கள். வேதனை தாங்க முடியாமல், துடியாய் துடித்துப் போனார் தியாகத் தம்பதியரின் அருமைப் புதல்வரான அம்மார் (ரலி) அவர்கள். 

ஒரு நாள் மனிதருள் மாணிக்கம் நபி(ஸல்) அவர்கள் அம்மார்(ரல்) அவர்களை கடந்துச் சென்றார்கள். அப்போது அம்மார்(ரலி) அவர்கள் “யா ரசூலுல்லாஹ்! என்னுடைய மேனியில் துன்பமும் வேதனையும், உடம்பின் ஒரு பாகத்தைக்கூட விடவில்லை யா ரசூலுல்லாஹ்!, எங்கள் உடம்பில் சகித்துக் கொள்ள வேறு இடமே இல்லை யா ரசூல்லுல்லாஹ்!, எல்லா வேதனையும் எங்களுக்கு தந்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். 

இதனை கேட்டு விட்டு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அம்மார்(ரலி) அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டு பிரார்த்தனை செய்தார்கள் “ யா அல்லாஹ் எப்படி இபுறாஹீம்(அலை) அவர்களை பகைவர்கள் தீ குன்றத்தில் தூக்கி எரியும்போது எப்படி நீ அந்த தீ குன்றத்தை குளிர் அடைய செய்தாயோ அது போல் இந்த அம்மாருக்கு யாராவது தீயின் மூலம் தீங்கிழைத்தால் அவருக்கு அந்த தீயை குளிர செய்வாயாக யா அல்லாஹ்” மேலும் இது போன்ற ஆறுதல் வார்த்தைகளைக் கொண்டு நபி(ஸல்) அவர்களால் சொல்ல முடிந்தது.

ஒவ்வொரு காலைப் பொழுது வந்தால் அம்மார்(ரலி) அவர்களுக்கு பதற்றம் அதிகரித்து விடும், காரணம் காலைப் பொழுதில் “எங்கே அந்த அடிமையின் மகன்” என்று சொல்லி அந்த மக்கத்துக் குரைஷிக் காஃபிர்கள் அம்மார்(ரலி) அவர்கள் கொடுமைப்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். ஒரு நாள் மூன்று கொடுமைகளை ஒரே நேரத்தில் செய்தார்கள் மக்கத்துக் காஃபிர்கள். நீண்ட வாள்களை தீயில் காட்டி பழுக்க வைத்து, அம்மார்(ரலி) அவர்கள் முதுகில் பாலம் பாலமாக கோடு போட்டனர். மீண்டும் அம்மார்(ரலி) அவர்களை அந்த பாலைவன வீதிக்கு இழுத்து வந்து காயம்பட்ட அவர்களின் முதுகை சுடு மணலில் படும்படி போட்டதோடு அல்லாமல், நெஞ்சின் மீது பாரங்கற்களை வைத்து எந்தப் பக்கமும் அசைய முடியாத அளவுக்கு வைத்து கொடுமை செய்தனைர். அந்த மக்கத்துக் காஃபிர்கள் சொன்னது ஒன்றே ஒன்று தான். அந்த முஹம்மதை திட்டு, முஹம்மதை கேவலமாக பேசு, லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன் என்று வாயால் சொல்லு, அது போதும் உன்னை விட்டு விடுகிறோம். ஆனால், அந்த பொறுமையின் சிகரம் அம்மார்(ரலி) அவர்கள் பதில் ஏதும் கூறாமல் மவுனம் சாதித்தார்கள். 

சினங்கொண்ட அந்த கயவர்கள் பாதி மயக்கத்தில் இருந்த அம்மார்(ரலி) அவர்களை ஒரு தண்ணீர் தொட்டி அருகே கொண்டு வந்து தலையை பிடித்து அந்த தண்ணீரில் முழ்கி எடுத்தார்கள். மூச்சுத் திணறினார்கள். இன்றோடு தான் மரணித்து விட்டுவேனோ என்று நினைத்திருந்திருக்கிறார்கள் அம்மார்(ரலி) அவர்கள். ஒரு பக்கம் பிலால்(ரலி) அவர்களுக்கு கொடுமை, இன்னொரு பக்கம் அம்மார்(ரலி) அவர்களுக்கு கொடுமை. அப்போதையச் சூழலில் அவர்களைச் சுற்றி இஸ்லாத்தின் வீர வாள்கள் உமர்(ரலி) இல்லை, அலி(ரலி) அவர்கள் இல்லை, ஹம்ஜா(ரலி) இல்லை, காலித் பின் வலித் (ரலி)  இல்லை, முஸ்ஹப்(ரலி) இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுடன் இருந்த நபி(ஸல்) அவர்களால் அப்போது ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே சொல்லி அல்லாஹ்விடமே கையேந்த மட்டுமே முடிந்தது. 

உடலாலும் உள்ளத்தாலும் சகிக்க முடியாத கொடுமையாலும், தாங்க முடியாத வேதனையாலும், தன் உடம்பில் உயிர் இருந்தால் இந்த தூய இஸ்லாத்தை இன்னும் பலருக்கு சென்று சேர்க்க வேண்டும் என்ற தூய எண்ணத்தினாலும், வேறு வழியே இல்லாமல் வாயளவில் லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன் என்னை விடுங்கள் என்று சொல்லி அவர்களிடம் அன்றைய தினம் தப்பித்தார்கள் அம்மார்(ரலி) அவர்கள். இருப்பினும் அந்த கயவர் கூட்டம் “நாளை வருகிறோம்” என்று சொல்லிச் சென்றார்கள்.

வேதனை தாங்க முடியாமல் தன் வாயால் “லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன்” என்று இறை நிராகரிப்பு வார்த்தையை சொல்லிவிட்டோமே என்று தன் உடல் வேதனைகளை காட்டிலும் பல மடங்கு மனதில் வேதனையுடன் துடியாய் துடித்துப் போய் அன்றைய காலகட்டத்தில் தன் மேல் பாசம் வைத்துள்ள ஒரே ஜீவன், அறுதல் வார்த்தை சொல்லி தன் உள்ளத்தைச் சமாதானப்படுத்தும் அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள் அம்மார்(ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்களிடம் நடந்த சம்பவத்தைச் சொல்லி அழுதார்கள் அம்மார்(ரலி) அவர்கள். அப்போது அம்மார்(ரலி) அவர்களின் கண்ணீரைத் துடைத்துவிட்டு அண்ணல் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் “என்னுடைய அம்மாரே, லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன் என்று நீங்கள் சொன்ன நேரத்தில் உங்களுடைய உள்ளத்தில் ஈமான் எப்படி இருந்தது” என்று கேட்டார்கள். அதற்கு அம்மார்(ரலி) அவர்கள் “ யா ரசூலுல்லாஹ் என்னுடைய உள்ளம் ஈமானால் நிரம்பி இருந்தது யா ரசூலுல்லாஹ், நான் அதை நாவால் தான் சொன்னேன் யா ரசூலுல்லாஹ்! என்னை நான் காப்பாற்ற, இஸ்லாத்திற்காக வேண்டி நான் உழைக்க வேண்டும் என்பதால் நான் வாயளவில் சொன்ன வாசகம் தான் அது யா ரசூலுல்லாஹ்” என்று சொன்னார்கள். அந்த சமயத்தில் தான் பின் வரும் வசனம் இறக்கப்பட்டது.

எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. அல்குர்ஆன் (16:106)

இந்த வசனத்தை நபி(ஸல்) அவர்களின் நாவின் மூலம் ஓதக் கேட்ட பின்பு வேதனையில் இருந்த அம்மார்(ரலி) ஆறுதல் அடைந்தார்கள். வஹியின் மூலம் அல்லாஹ் எனக்காக இந்த வசனத்தை இறக்கியுள்ளானே என்று உள்ளத்தில் ஏற்பட்ட வேதனையை அனைத்து உத்வோகமுற்றார்கள் உத்தம நபியின் உன்னத தோழர் அம்மார் (ரலி) அவர்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அம்மார்(ரலி) அவர்களைப் பார்த்து “அம்மாரே இந்த மக்காவில் யாராவது உங்களை லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன் என்று சொன்னால் சொல்லுங்கள், என்னை திட்டச் சொன்னால் திட்டுங்கள் ஆனால் உங்கள் உள்ளத்தில் உள்ள ஈமானை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்த அம்மார் இந்த பூமியில் உயிர் வாழ வேண்டும்” உருக்கமாகக்கூறி அம்மார்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் நேசித்தார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது கண் கலங்காமல் இருக்க முடியவில்லை.

ஒரு முறை இஸ்லாத்தின் போர் வாள் என்று அழைக்கப்படும் காலித் பின் வலித்(ரலி) அவர்கள் அம்மார்(ரலி) அவர்களை மனம் புண்படும்படியான வார்த்தையைச் சொல்லிவிட்டார். இதனால் அம்மார்(ரலி) அவர்கள் மனவேதனை அடைந்தார்கள். இதனை கேள்வியுற்ற நபி(ஸல்) அவர்கள் அம்மார்(ரலி) கையை பிடித்து மக்களின் செவிகளில் விழும்படிச் சொன்னார்கள் “ யார் இந்த அம்மாருடைய கோபத்திற்கு உள்ளாகிறார்களோ, அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு உள்ளாகிறார், யார் அம்மாரை வேதைப் படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் வேதனை செய்வான்”. இதனை கேட்ட காலித் பின் வலித்(ரலி) அவர்கள் உடனே அம்மார்(ரலி) அவர்கள் சந்தித்து ஆரக்கட்டித் தழுவி அவர் நெற்றியில் முத்தமிட்டு மன்னிப்புக் கோட்ட நிலை உருவானது என்றால். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அம்மார்(ரலி) அவர்களை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தியுள்ளார்கள் என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறியலாம்.

இஸ்லாத்தை ஏற்ற தருணத்தில் செய்த தியாகத்திற்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை நம்முடைய உத்தம நபியின் உன்னத தோழர் அம்மார்(ரலி). மஸ்ஜித் நபவி கட்டப்படும் அந்தச் சூழலில் மற்ற சஹாபாக்களைவிட ஒரு மடங்கு அதிகம் கற்களைச் சுமத்து கொண்டு வந்தார்கள். உடம்பில் தூசியோடு கற்களை அம்மார்(ரலி) அவர்கள் சுமந்து வருவதைக் கண்ட அண்ணல் நபி(ஸல்), ஒரு தாய் தனது சேய்க்கு பாசம் காட்டுவது போல் பாசம் காட்டி அம்மார்(ரலி) அவர்கள் மேனியில் இருந்த தூசியைத் தட்டிவிட்டு, அவரின் முகத்தில் இருக்கும் மண்ணை தட்டிவிட்டு முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகள் குழுமியிருந்த அந்த இடத்தில் சொன்னார்கள் “அட்டூழியக்கார மக்களால் என்னுடைய அம்மார்(ரலி) அவர்கள் கொல்லப்படுவார்”. இது நபி(ஸல்) அவர்களின் முன்னறிவுப்பாகவே இருந்தது. 

இதுபோலவே யூதக் கைக்கூலி இப்னு-சபா மற்றும் காரிஜியாக்கள் ஏற்படுத்திய குழப்பதின் காரணமாக முஆவிய(ரலி) அவர்களுக்கும் அலி(ரலி) அவர்களுக்கும் ஏற்பட்ட விரும்பதகாத சம்பவத்தால், அநியாயக்கார காரிஜியாக்களின் சூழ்ச்சியினால் அம்மார்(ரலி) அவர்கள் தன்னுடையை 93 வது வயதில் கொல்லப்பட்டு ஷஹீதானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். இரத்தம் படிந்த அம்மார்(ரலி) அவர்கள் ஜனாஸாவை அலி(ரலி) அவர்கள் சுமந்துச் சென்று ஜனாஸா தொழுகை வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது உள்ளம் உருகுகிறது.

“என்னுடைய அம்மாருடைய ஈமானுடைய நம்பிக்கை அவருடைய எலும்புக்கு உள்ளேயும் புகுந்துள்ளது” என்று ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஈமானில் முதிர்ச்சி பெற்றிருந்த அம்மார்(ரலி) அவர்களிடம் ஈமானிய உணர்வுகள் உள்ளத்தில் உரைந்திருந்தது. ஆனால் நம்மிடம் நாவளவில் மட்டுமே ஈமான் உள்ளதே என்பதை என்றைக்காவது நாம் கவலையுடன் பரிசீலனைச் செய்து பார்த்திருப்போமா?

அம்மார்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் அல்லாஹ்வின் நாட்டம் என்பதால் அந்த தியாகத் திருமகன் அனைத்தையும் அல்லாஹ்வுக்காக பொறுத்துக் கொண்டிருந்தார். நமக்கு ஒரு சிரிய பொருளாதார கஷ்டத்தை அல்லாஹ் நிகழ்வில் காட்டித் தந்தால் நாம் உடனே வாட்டி எடுக்கும் நிலைக்கு நம்முடைய எண்ணம் செல்லுகிறது. ஆனால் மயக்கம் வரும் வரை அடி வாங்கி, மயக்கம் தெளிந்த பின்பும் அடிவாங்கிக் கொண்டு தூய இஸ்லாத்தை கடுகளவும் விட்டுக் கொடுக்காத அம்மார்(ரலி) அவர்களைப் போன்றவர்களின் வாழ்வின் சகிப்புத் தன்மை, அல்லாஹ்வின் மீது உள்ள நம்பிக்கை, ஈமானிய உணர்வு  நம்மிடம் உள்ளதா என்பது நாம் நம்மிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய ஆழமான கேள்வி.

இஸ்லாத்திற்காக உடலாலும் உள்ளத்தாலும், பொருளாதாரத்தாலும் சொல்ல இயலாத துன்பங்களை எதிர்கொண்டு தூய இஸ்லாத்தை இவ்வுலகில் அல்லாஹ்வின் உதவியோடு நிலைத்திருக்க வைத்ததோடு அல்லாம் நமக்கும் அதனை கொண்டு வருவதற்கு பாடுபட்டுள்ளார்கள். ஆனால், நம் சமுதாய கண்மணிகள் காதல் என்ற ஒரு அர்ப்ப காரணத்திற்காக, நபி(ஸல்) அவர்கள், யாஸிர்(ரலி) சுமைய்யா(ரலி), அம்மார்(ரலி), பிலால்(ரலி), மிக்தாத்(ரலி), ஹம்ஜா(ரலி), முஸ்ஹப்(ரலி) ஸஃஆத் இப்னு முஆத்(ரலி) உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), முஆவியா(ரலி) இன்னும் பல தியாகிகளால் வளர்க்கப்பட்ட இந்த இஸ்லாத்தை ஒரு நொடிப் பொழுதியில் தியாகம் செய்து பிற மதத்தவருடன் ஓடிப் போவதும் அல்லது கள்ளக் காதல் தொடர்பில் இருக்கும் கொடூர நிலை இன்னும் தொடரத்தான் செய்கிறது. சுத்தந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு முன்னர் இந்த அம்மார்(ரலி) அவர்கள் போன்றவர்களின் வரலாறுகள் நம் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறப்பட வேண்டும்.

அம்மார்(ரலி) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த செய்திகளை வாசித்து விட்டு கண்ணீர் வடிக்கும் போது நம்முடைய ஈமான் வலுப்பெற வேண்டும், அந்த உண்மைச் சம்பவங்களின் மூலம் நாம் படிப்பினைகள் பெற வேண்டும். ஆனால் சீரழ்வின் உச்சம் சினிமாவினாலும், சின்ன சின்ன நிம்மதிகளை சின்னபின்னாமாக்கும் தொலைக்காட்சித் தொடர்களாலும், அவற்றில் தோன்றும்  பொய் கற்பனை கதாபாத்திரங்கள் வடிக்கும் கண்ணீர் காட்சி நடிப்பை பார்ப்பவர்கள் கண்ணீர்விடுவதால் ஏதேனும் பிரயோஜனம் உள்ளதா? என்பதை பற்றி நம் சமூதாய தாய்மார்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த பதிவிலும் இந்த பதிவிலும் நாம் பெறவேண்டிய படிப்பினை என்னவென்றால். தாய் சுமைய்யா(ரலி), தந்தை யாசிர்(ரலி) மகன் அம்மார்(ரலி) அவர்கள் ஒட்டுமொத்த குடும்பமே இஸ்லாத்திற்காக எண்ணற்ற கொடுமைகளை சந்தித்து தங்களின் உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். அந்த பாக்கியம் நமக்கு கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். ஷிர்க், பித் அத்துக்கள், அனாச்சாரங்கள், மூட பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், இதனால் ஏற்படும் கவுரம், அந்தஸ்து, பொருளாதாரம், உறவற்றுப் போகும் நிலை போன்ற இழப்புகளை தாங்கிக்கொள்ளும் தியாக உணர்வு உள்ள சகிப்புத்தன்மையுடைய மன நிலைக்கு வரவேண்டும். 

நம்முடைய உள்ளத்திலிருந்து தீமையான காரியங்களை இஸ்லாத்திற்காக விட்டுவிடும் தியாக உணர்வுள்ள பரிசுத்தமான உள்ளமாக, வல்லவன் ரஹ்மான் நம்மை ஆக்கி அருள் புரிவானாக. நாளை மறுமையில் இஸ்லாத்திற்காக தியாகம் செய்த இந்த உத்தமர்களோடு அல்லாஹ் நம் அனைவரையும் சொர்கத்தில் ஒன்று சேர்ப்பானாக.

யா அல்லாஹ் எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் நம் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M தாஜுதீன்

6 Responses So Far:

Unknown said...

அம்மார் (ரலி)

இவர்களைப்போன்று உச்சகட்ட கொடுமைகளை தாங்கிக்கொண்ட சஹாபாக்கள் வரலாறுகளை படிக்கும்போதும், கேட்கும்போதும், ஒரு சராசரி மனிதனுக்கு கூட கொஞ்சமாவது உள்ளத்தில் ஈமான் கூடிக்கொண்டுதான் போகும்.

அந்த அளவுக்கு இவர்களின் தியாகங்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தடம் பதித்திருக்கின்றது. ஒவ்வருவருடைய உள்ளத்தையும் ஒரு கணம் யோசித்து
நாமெல்லாம் நம் தூய இஸ்லாத்திற்காக எதை செய்திருக்கின்றோம் என்று
என்று சிந்திக்க வைக்கும் ஒரு உண்மை தியாகத்தின் சுவடுகள்.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

இவர்களைப்போன்று உச்சகட்ட கொடுமைகளை தாங்கிக்கொண்ட சஹாபாக்கள் வரலாறுகளை படிக்கும்போதும், கேட்கும்போதும், ஒரு சராசரி மனிதனுக்கு கூட கொஞ்சமாவது உள்ளத்தில் ஈமான் கூடிக்கொண்டுதான் போகும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நமது ஈமானுக்கு ஊட்டம் தரும் சம்பவங்கள்!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

Anonymous said...

இஸ்லாத்தின் போர்வாள் காலித் பின் வாலித்(ரலி) ஒரு அடிமையின் மகன் அம்மார் [ரலி] அவர்களிடம் தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டது மாபெரும் மனிதாபிமான செயல் மட்டுமல்ல மற்ற மனிதர்களுக்கும் இது ஒரு வழி காட்டல். இதை நாமும் பாடமாக கொண்டு அதன் வ ழி நடப்போமாக!

S.முஹம்மது பாரூக். அதிராம்பட்டினம்

Adirai pasanga😎 said...

//அம்மார்(ரலி) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த செய்திகளை வாசித்து விட்டு கண்ணீர் வடிக்கும் போது நம்முடைய ஈமான் வலுப்பெற வேண்டும், அந்த உண்மைச் சம்பவங்களின் மூலம் நாம் படிப்பினைகள் பெற வேண்டும். ஆனால் சீரழ்வின் உச்சம் சினிமாவினாலும், சின்ன சின்ன நிம்மதிகளை சின்னபின்னாமாக்கும் தொலைக்காட்சித் தொடர்களாலும், அவற்றில் தோன்றும் பொய் கற்பனை கதாபாத்திரங்கள் வடிக்கும் கண்ணீர் காட்சி நடிப்பை பார்ப்பவர்கள் கண்ணீர்விடுவதால் ஏதேனும் பிரயோஜனம் உள்ளதா? என்பதை பற்றி நம் சமூதாய தாய்மார்கள் சிந்திக்க வேண்டும்.//
மறுமையின் மகத்துவத்தினை விளங்கி அதன்படி செயல்பட்ட நபித்தோழர்களின் உண்மைவாழ்வினில் படிப்பினைப் பெறத்தயங்கும் நாம் இம்மையின் இன்பத்தினை நிஜமென நினைத்து போலிகளின் நடிப்பினைக் கண்டு மயங்கி ஈருலக வாழ்வினையும் தொலைப்பது வேதனையிலும் வேதனையே.

யா அல்லாஹ் அனைவர்க்கும் நேர்வழி காட்டுவாயாக.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், இந்த பதிவை வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு