Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மண்சட்டி! 31

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2013 | , , , , , ,

அது ஒரு சின்னக் குடும்பம்! செல்வக் குடும்பம்! திரண்ட சொத்து. கணவன்-
மனைவி, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு ஒரே ஒரு பெண்பி ள்ளை வயது’ பதினாறு கூடக் கூடப் போனால் பதினெட்டுக்கு மேல் போகாது. தாயும் தந்தையும் நடுத்தர வயதினரே!

கணவருக்கு அரசாங்கத்தில் பெரிய வேலை. பெரிய சம்பளம், மாத்ச் சம்பளம் வாங்கித்தான் குடும்பம் ஓட்ட வேண்டும் என்ற நிலை இல்லை. பூர்வீக சொத்துக்கள் நகை நட்டுகள் குவிந்து கிடக்கிறது. இதையெல்லாம் ஆள ஒரு ஆண்பிள்ளை இல்லாத குறை ஒன்றே அவர்கள் குறை. மற்றதுக்கு எல்லாம் சுக்கூர் அல்லா!

ஆண்பிள்ளை கேட்டு தவமா தவமிருந்தார்கள். பெண்பிள்ளை ஒன்றுக்கு பிறகு தாய் வயிற்றில் பூச்சிபுழு எதுவும்உசும்பவில்லை. காட்டாத டாக்டரிடமெல்லாம் காட்டினார்கள். திங்காத மருந்தெல்லாம் திண்டார்கள். போகாத பள்ளிவாசல் இல்லை. நேராத நேத்திக் கடன் இல்லை. காசை காசென்று பார்க்காமல் தண்ணீர்’ செலவு செய்தார்கள். ஒன்றும் கைகூடவில்லை. ’கல்லசை-என்னசை’ என்று சொல்லி விட்டது அடிவவுறு. ஆம்புளே வாரிசு இல்லே. பொம்புளே புள்ளே ஒன்னே ஒன்னுதான். ‘’தலைலே போட்டு வச்ச விதி யாராலே   மாத்த முடியும்’! என்று சும்மா இருந்து விட்டார்கள். திரண்டு கெடக்கும் எல்லா சொத்துக்கும் ஒரே ஒரு பெண் பிள்ளைதான் வாரிசு. குடும்பம் ஓடியது.

வீட்டில் பெரிய கொல்லை. அங்கே ஒரு கீத்து கொட்டகை! கறுக்கு மட்டையில் செய்த படல் [கதவு] கொட்டகைக்குள் ஒரு வயதான கிழவி. வயது எழுபத்தைந்து அல்லது எழுபத்து ஏழு இருக்கும்.

வீட்டுக்கார  அம்மா ஒரு மண்சட்டியில் சோறும் சோத்துக்கு மேலேகறியும் ஆணமும் ஊத்தி கிழவிக்கு கொண்டு போய் கொடுக்கும். யார் அந்த கிழவி என்று பெண் பிள்ளைக்கு தெரியாது. கிழவி ‘கருப்பா? செவப்பா? கட்டையா? நெட்டையா?’ என்றும் தெரியாது!. யாரோ ஒரு வயதான கிழவி!. பொம்புளைக்கு வயசானா அவகிழவிதானே!

ஒருநாள் ‘’நீ சோறு போடுறீயே! அந்த கெளவி யாரும்மா?’’ பிள்ளை கேட்டது. 

’’அதெல்லாம் தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போறே? பேசாமே போயி உன் வேலையைப் பாரு!’’ அம்மாவின் காட்டமான பதில்! 

சில நாள் கழித்து பொம்புளே புள்ளே அதே கேள்வியை திரும்பவும் கேட்டது ’’என்னா? நீ கிளிப்பிள்ளை மாதிரி கேட்டதேயே கேட்டுகிட்டு இருக்கே? ஒருக்கா சொன்னா தெரியாதா?” பிள்ளை மேல் அம்மா எரிஞ்சு விழுந்தாள்! பிள்ளை ஒன்னும் பேசாமே வாயை மூடிகிட்டு போச்சு!

இன்னும் சில நாள் கழித்து புள்ளே அதே கேள்வியை கேட்டது.

அம்மாவின் அதே பதில் வந்தது. ஆனால், பிள்ளையோ அம்மாவின் பதிலைக் கேட்டு வழக்கம் போல் சும்மா இருக்கவில்லை. வயசு வந்துடுச்சுல்ல! சும்மா இருக்குமா?’’ நீ பதில் சொன்னாத்தான் சோறு உம்பேன்!. இல்லேனா பட்டினி கிடப்பேன்! பள்ளிக்கூடம் போக மாட்டேன்.” என்று சத்தியாகிரக அறிக்கை வெளியிட்டது.

உண்ணாவிரதம் தொடங்கியது.. “பசி தாங்க மாட்டா! இன்னும் கொஞ்ச நேரஞ்செண்டு போட்டுக் கொடுத்தா பேசாம வாயே மூடிகிட்டு உண்டுட்டு போயிடுவா!” என்று தாய் போட்ட கணக்கு தப்பா போச்சு! உண்ணாவிரதம் போல் தொடர்ந்தது.

இது சென்னை அண்ணா சிலையில் இருக்கும் உண்ணாவிரதம் அல்ல!. 

காலை ஆறு மணிக்கு தொடங்கி ஆறு இருபத்தொரு நிமிஷத்திலேயே முடித்து ஆறே முக்காலுக்கு வீட்டுக்கு பிரேக் பாஸ்ட் எடுக்க போகும் உண்ணாவிரதம் அல்ல!?  [அதாவதுBed-Coffeeகும் Break-fastக்கும் இடையே கொஞ்சம் மெரீனா காத்து வாங்கும் உண்ணாவிரதம் அல்ல!]

இது வீட்டிற்குள் நடந்த உண்ணா நோன்பு! அங்கே வங்க கடலோரம் தங்க மனம் கொண்ட அண்ணா துயில் கொள்ளும் அண்ணாசமாதியும், அவரின் சிலையும் இல்லை. மெரீனா பீச்இல்லை!.

இந்த சிறு பெண் பிள்ளையின் உண்ணாவிரதம் எதிர்வரும் தேர்தலில் ஒட்டு வாங்க வியூகம் வகுத்து மேற்கொண்ட ‘கண்கட்டி’ உண்ணாவிரதம் அல்ல! ஒரு வயதான மூதாட்டிக்கு தன் தாய்-தந்தையரே இழைக்கும் கொடுமையை எதிர்த்து நடத்தும் மனித உரிமை போராட்டம். ஒரு மணி நேரம் தொடர்ந்தது உண்ணா நோம்பு!

தாய் மனம் அல்லவா! பத்து மாதம் சுமந்து தவமிருந்து பெத்த பிள்ளையாச்சே! தாய் மனம் கேக்குமா! மகளின் பசி பார்த்து தவித்தது தாய் மனசு. “சோத்தை உண்ணு! நான் சொல்றேன்!” சொன்னது தாய். 

’’ஊஹூம்! முடியாது; முதலில் நீ சொல்! பிறகு நான் உன்கிறேன்!” இது பிள்ளையின் குரங்கு பிடி!

தாயின் ’பாச்சா’ பெற்ற பிள்ளையிடம் பலிக்கவில்லை. ‘’சரி! சொல்றேன் கேளு!” தாய் தொடங்கினாள் அந்த கதையை. 

“நான் சின்ன புள்ளையா இருந்தப்போ இந்த பொம்புளே இங்கே வேலை தேடி வந்தாளாம். ’’உம்மா, வாப்பா சொந்தகாரங்க யாருமில்லே; நான் ஒரு அநாதை ஆதரிப்பார் யாருமில்லே! உன்கச் சோறும், உடுத்த துணியும், தங்க இடமும் தாங்க! நேரங்காலம் பாக்காமே சொன்ன வேலையும் பாக்குறேன்; சொல்லாத வேலையும் பாக்குறேன்னு சொல்லி வேலை கேட்டு உன் பாட்டியோட காலை கட்டி புடிச்சு அழுதாலாம்! பார்த்தா இரக்கமா இருந்துச்சாம்! உன் பாட்டி வேலைக்கு சேர்த்துக்கிட்டா. அன்னேயிலேயிருந்து அவ நம்ம ஊட்டுலே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கா.

எனக்கு கல்யாணம் கொஞ்ச நாளைலே உன் பாட்டிக்கு ஏலாமை வந்து படுத்த படுக்கையா கெடந்தா! எல்லாத்தையும் இவதான் பாத்தா! ஒருநாள் என்னை கூப்பிட்டு, அந்த வேலக்காரி நம்மாலே நம்பி நம்மட்டேயே இருந்துட்டா! அவளே நீ நல்லா வச்சுக்கோ! அவளுக்கும் வயசாச்சு! ஏலாமை எடஞ்சல் எதுவந்தாலும் காசு பணத்தை பார்க்காமே நல்ல டாக்டர்ட்டே காட்டு! அல்லாஹ்வோட விதி வந்து அவ மவுத்தா போனா நல்லபடியா மையத்து எடுத்துடு’’ண்டு உன் பாட்டி ஒசியத்து சொல்லிட்டு கண்ணை மூடிட்டா! ஒன் பாட்டி போன ரெண்டு மூனு வருசத்திலே இவளும் கொணங்கிட்டா!” என்றுஉம்மா சொன்னாள்!

‘கொணங்கிட்டா’  என்றால் என்னாமா?’’ பிள்ளை கேட்டது.

‘’அதா?! வயசாயி சீக்கு வந்து வேலை செய்ய முடியாமே போறது!’’ அம்மா சொன்னாள்.

’’கொஞ்ச நாள்ளே அவளுக்கு ஒடம்பெல்லாம் எலைக்க ஆரம்பிச்சுடுச்சு. ‘லொக்கு-லொக்கு’ இரும வேறே வந்து இருமி-இருமி கண்ட-கண்ட எடத்துலே எச்சியே துப்புனா! டாக்டர்டே கொண்டுபோய் காட்டி என்னாண்டு கேட்டோம். டாக்டர் டிகிரி வச்சு பாத்துட்டு ‘டிபி’ண்டு சொன்னாரு’’.

டி.பி.ண்டா என்னா?’’ண்டு கேட்டோம். ’’அதா! அது காச நோய்! ஒரே இருமலா இருமும். சளி சளியா வாயாலே கக்கும். கெட்ட சீக்கு கிட்டே யாரும் போகாதீய. ஒட்டிக்கிடும்’’ என்றார்.

அதான் அந்த பொம்புலேயே கொல்லையிலே கொட்டகை போட்டு தனியா வச்சுருக்கேன்! நீ கிட்டே போயிடாதே! ஒட்டிக்கிடும்’’ என்று அம்மா சொன்னாள்.

இதைக் கேட்ட பிள்ளை தன் ஒன்னரை மணி நேர உண்ணாவிரதத்தை ‘கை’விட்டு செம்புலே இருந்த தண்ணியிலே கை கழுவி சோறு உண்டது. எல்லா உண்ணாவிரதமும் ஆக கடைசியில் ‘கைவிடப்பட்ட’ அநாதை ஆகிப்போச்சு! பாவம் உண்ணாவிரதம்!. உண்ணாவிரதம் முடிஞ்சா அடுத்தது உங்கிற வேலைதானே உண்ணாவிரதம் இருந்துட்டு சோத்துலே உக்காந்தா நல்லா ஒரு புடிபுடிக்கலாம். தன் சொந்த வவுத்தே Activate பண்றதுக்குதான் தலைவைங்க உண்ணாவிரதம் இருக்கான்யா!

’’நான் ஜோடித்து சொன்ன   பொய் நல்லா வேலை செஞ்சுருச்சு’’ தாய் மனசுக்குள்ளேயே சந்தோஷபட்டுகிட்டா! பொய் எப்பொழுதும் தன்னை தானே அலங்காரம் செய்தே மற்றவரை கவரும்.

கொஞ்ச நாள் ஓடியது. ஒரு நாள் உம்மா, வாப்பா, மகள், எல்லோரும் ஷாப்பிங் போனார்கள். விலை உயர்ந்த சாமான்களை வாங்கினார்கள். பிறகுஒருசட்டி-பானை கடையில் ஒரு மண்சட்டியும் வாங்கினார்கள்.

அம்மா கையில் மண்சட்டி இருப்பதை கண்டபிள்ளைக்கு ஆச்சரியம்! ’எப்பொழுதுமே விலைஉயர்ந்த சாமான்களை வாங்கும் உம்மா இன்று ஏன் மண் சட்டி வாங்கியது?’ என்ற கேள்வி எழுந்தது .’’ஏம்மா இந்த மண்சட்டி வாங்குனே?’’

‘’நம்ம ஊட்டு கொல்லைலே கிடக்குறாள்ல ஒருகிளவி அவளுக்குத்தான்! பழைய சட்டியே ஓடச்சுப் புட்டலாம்!. அதான் புது சட்டி வாங்கியாந்தேன். இப்புடி வருசத்துக்கு அஞ்சாறு சட்டி ஒடச்சு ஒடச்சு குமிக்கிது., ஒரு நாளைக்கி மூனு நாலு சட்டிசோறு திண்டு அழிக்கிது! எப்போ சாவுவாளோ’? அள்ளி போட்டு பொதச்சுட்டு அல்லான்டு நிம்மதியா உக்காரலாம்!’ என்று உம்மா அலுத்துக்கிட்டா!

மாதங்கள் பல ஓடியது. உம்மா, வாப்பா, மகள் – மூவரும் ஷாப்பிங் போனார்கள். வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்கினார்கள்.

’’உனக்கு ஏதும் தேவைப்பட்டால் வாங்கி கொள்ளேன்’’ மகளிடம் தாய் சொன்னாள்.’ ’’’ஆமாம் நானும்தான் வாங்கணும்!.’ இங்கேயே கொஞ்சம் நில்லும்மா! நான் போய் வாங்கி வருகிறேன்’ என்று மகள் எங்கேயோ போனாள். கொஞ்ச நேரம் கழித்து திரும்பினாள்! கையில் இரண்டு மண்சட்டிகள் இருந்தது.

மகள் கையில் மண்சட்டிகளை கண்ட தாய்க்கும் தந்தைக்கும் மனதுக்குள்ஒரு குழப்பம். ’’இந்த ரெண்டு மஞ்சட்டியும் கெளவிக்கா? நாந்தான் அன்னிக்கே வாங்கிட்டேனே! நீ வேறே எதுக்கு வீணா ரெண்டு சட்டிவாங்குனே!’’ என்று அம்மா கேட்டாள். ‘’அந்த கெழவிக்கு நான் வாங்கலேம்மா! அவளுக்குத்தான் நீ வாங்கி கொடுத்துட்டியே!’’ என்று மகள் சொன்னாள்.

’’பின்னே! இந்த ரெண்டு சட்டியும் ஏன் வாங்குனே?’’ அம்மா கேட்டாள்! இன்னும்கொஞ்ச காலத்துலே நம்ம ஊட்டுக்கு ஒரு கெழவியும் கெழவனும் வரப்போறாங்க! அவங்களுக்கு கொடுக்கத்தான் இதை வாங்கினேன்’’ என்று மகள் சொன்னது.

வாப்பாவுக்கும் உம்மாவுக்கும் பிள்ளை சொல்வது ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ’’நீ என்னம்மா சொல்றே? ஒன்னும் புரியலேயே? ’இன்னும் கொஞ்ச காலத்துலே நம்ம ஊட்டுக்கு வர்ற! கெழவனும் கெழவியும்யாரு?’’ என்று அம்மா கேட்டாள். 

‘’ஒ! ‘அந்தக் கெழவன் கெழவி’ யாருன்னு கேக்றியா? அது வேற யாருமில்லேம்மா! அது நீயும் வாப்பாவும்தான். நீங்க கெழவன்-கெழவியானதும் உங்களை கொட்டகையில் அடைத்து சோறு போடத்தான் இந்த ரெண்டு மண்சட்டியேயும் வாங்கினேன்’’ என்று பிள்ளை சொன்னது.

இதைகேட்டு தாயும் தந்தையும் திடுகிட்டார்கள். ’’என்னாது? நீ எங்களை கீத்துக் கொட்டகையில் அடைத்து மண்சட்டியில் சோறு போடப்போறியா?’’ அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

.’’ஆமாம் அம்மா!’’ இது மகளின் அமைதியான பதில்.’ ‘’பெத்து பாலுட்டி செல்லமா வளத்த எங்களுக்கா நீ பிச்சைகாரர்களுக்கு சோறு போடுவது போல் சோறு போடப்போறே?’’ என்று நீ கேக்குறே இல்லையா? நம்ம ஊட்டு கொல்லைலே கொட்டகை போட்டு ஒதுக்கி வச்சு எல்லாரும் திண்டு மிஞ்சின கடைசி சோத்தை நாய்க்கி போடுறது போல ஒருவயதான பொம்புலைக்கு போட்டியே ‘அவயாருன்னு எனக்கு தெரியாது’ன்னு நெனச்சுயா?அவதான் பத்துமாதம் சுமையா சுமைசுமந்து உன்னை பெற்றெடுத்த தாய்!.

ராத்தூக்கம் பாக்காமே பகத்தூக்கம் பாக்காமே படாத பாடுபட்டு உன்னை வளத்த தாய்! ‘’அவ ஒரு வேலக்காரி. அவளுக்கு காச நோய் அவ கிட்ட போகாதே!’’ என்று என்னிடம் சொன்னா! ஆனா அது நீ கட்டிய பொய் கதை. ஒருநாள் நீவீட்டில் இல்லாத நேரம் கொட்டகைக்கு போய் பேசினேன். அவங்க ஒன்னு விடாமே எல்லாத்தையும் புட்டுபுட்டு வச்சுட்டாங்க !உன் பகட்டு வாழ்கைக்கு இந்த பொக்கை வாய்காரி வீட்டு நடு கூடத்தில் இருந்தது கௌரவ குறைவா இருந்துச்சு அதுனாலே கொல்லைப் பக்கமா ஒதுக்கிட்டே சரிதானா? நீ ஒன் தாய்க்கு செய்த கொடுமையே உனக்கு செய்யவே இந்த மண்சட்டி! இது ஆரம்பம்’’ என்றது பிள்ளை.

அம்மாவின் கண்ணில் நீர் ஓடியது. ‘’நீ சொன்னதெல்லாம் உண்மை! நீ கொடுக்கும் தண்டனையே எனக்கு கொடு! அந்த தண்டனைக்குரியவள் நான்’ என்றாள் அம்மா.

உனக்கு தண்டனை கொடுப்பதும், அல்லது மன்னிப்பதும் உன் தாயின் கையிலேதான் இருக்கிறது!வீட்டுக்கு வந்து உன்தாயிடமே மன்னிப்புகேள்!’’என்றாள்மகள்.

வீட்டுக்கு வந்த மூவரும் நேரே கொட்டகைக்குள புகுந்தார்கள். தரையில் பனை ஓலை பாயில் அம்மா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். அம்மா கிட்டே சென்று’’அம்மா! அம்மா!’’ என்று கூப்பிட்டாள்.

பதில் இல்லை மகள் மீது அம்மாக்கு கோபமோ! அல்லது நல்ல தூக்கமோ! உசிப்பினாள். 

அம்மா எழுந்திருக்கவில்லை, கண் திறந்து மகளை பார்க்கவில்லை. அம்மாவின் கண்களிலிருந்து ஈக்கள் பறந்தது. விழித்த விழிகள் விழித்தபடி இருந்தது.’’ அம்.......மா....ஆஆஆஅ.......!!!!!!!.’’அம்மா!  தாருல் பனாவை விட்டு தாருல் பக்ரா சென்று விட்டாள்.

இன்னா லில்ஹி வஇன்னா இளைஹி ராஜூவுன். இன்னும் ஒரு மணிநேரம் அம்மா  தாமதித்திருந்தால் மகளுக்கு சொர்கத்தின் கதவுகள் திறந்தே இருந்து திருக்கும். இன்னும் ஒருமணி நேரம் மகளே முந்தி இருந்தாலும் சொர்க்கத்தின் கதவுகள் மூடாமல் திறந்தே இருக்கும். இதில் முந்தியது யாரோ? பிந்தியது யாரோ?விடை காணமுடியாத கேள்விகள்!

ஆனால் அல்லாவின் அழைப்பு யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை; முந்திக் கொள்வதும் இல்லை. ஒரு மண்சட்டி உடைந்தது.

இன்னும் எத்தனையோ சட்டிகள் உடைய காத்திருக்கிறது. அவைகள் மண்ணிலிருந்தே வந்தது!. மண்ணுக்கே போகும்!

S.முஹம்மது ஃபாருக்

31 Responses So Far:

Ebrahim Ansari said...

கதையைப் படிக்கும் போதே ஊகித்துவிடலாம் என்றாலும் கதையை படித்து முடித்த பிறகுதான் தெரிகிறது எழுதியது யார் என்று .

இதுவே ஹைலைட். எக்செலென்ட்.

Unknown said...

அன்பு பாரூக் காக்கா ,

இந்த மண் சட்டி எத்தனையோ குடும்பங்களில் இருக்கத்தான் செய்கின்றது.
பெற்ற தாயை மதிக்காத எத்தனையோ பிள்ளைகள் நாமும் ஒரு காலம் வந்தால் கிழவன் கிழவி தான் என்பதை மறந்து நடந்து கொள்ளும் விதம் இதைப்போன்ற ஆக்கங்கள் மூலம் தெளிவு பெற்று புத்தி பெற வழி வகை செய்யும் என்று நினைக்கின்றேன்.

இளமை என்பது கொஞ்ச காலம் தான், அது நிரந்தரமில்லாதது. நரம்புகள் தளர்ந்து விட்டால் நாமும் மண் சட்டி சோறு சாப்பிடும் நிலைக்கு நம் பிள்ளைகள் நம்மை ஒதுக்கிவிடும் நாம் நம் தாயை ஒதுக்கியது போல் என்று ஏன் தான் நினைத்து வாழ மனம் மறுக்கின்றது என்று தெரியவில்லை.

மண் சட்டி

பெற்ற தாயை அரவணைத்து பேண சொல்லும் ஒரு சட்டி.

அபு ஆசிப்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மூத்த சகோதரர் ஃபாரூக் காக்காவின் பெற்றோரை பேணச்சொல்லும் முத்தான ஆக்கம். நேற்று சுபுஹுத்தொழுகையில் வாசித்த ஒரு ஹதீஸும் இதையே வலுயுறுத்தியது. "கேவலப்படட்டும், கேவலப்படட்டும், கேவலப்படட்டும்" என்று நபித்தோழர்கள் முன் திடீரென எம்பெருமானார் நபி (ஸல்.) அவர்கள் வினவியதை கேட்ட நபித்தோழர்கள் யாரசூலல்லாஹ்! என்ன இப்படி கேவலப்படட்டும் என்ற வார்த்தையை மூன்று முறை வினவினீர்களே? என்ன காரணம்? தெரிந்து கொள்ளலாமா? எனக்கேட்டுக்கொண்டதற்கு நபி(ஸல்.) அவர்கள் கூறி இருக்கிறார்கள் "வயோதிகம் அடைந்த தாய், தந்தையரில் இருவருவோ அல்லது அவர்களில் யாரையேனும் ஒருவரை உயிருடன் பெற்று அவர்களுக்கு பணிவிடைகள் முறையே செய்யாமல் விட்டு விட்ட பிள்ளைகள் நாளை மறுமையில் கேவலப்படட்டும்" என்று கூறி இருக்கிறார்கள்.

பெற்றோரைப்பேணாத பிள்ளைகள் உலகிலேயே கேவலப்படுவதை நாமே கண் கூடாகப்பார்த்து வரும் பொழுது மறுமையில் கேவலப்படுவது எவ்வளவு பயங்கரமாக இருக்குமோ என கற்பனைக்கெட்டாத அச்சம் எம்மை சூழ்ந்து கொள்கிறது.

எனவே தாய், தந்தையரை உயிருடன் பெற்றிருக்கும் அருமைக்குழந்தைகள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் நல்ல முறையில் பயன்படுத்தி ஈருலகிலும் செளபாக்கியங்களுடன் சந்தோசமாக வாழ ஈருலகையும் படைத்த அல்லாஹ்வே நமக்கெல்லாம் நல்லருள் புரிவானாக....ஆமீன்.

இஸ்லாம் தன் தாய், தந்தையர் இன்னும் இஸ்லாத்திற்குள் இணையாமல் காஃபிராகவே இருந்தும் வரும் நிலையில் கூட அவர்களுக்குப்போய் இஸ்லாமியப்பிள்ளைகள் தா'அவா பணியுடன் பணிவிடைகள் குறைவின்றி செய்யச்சொல்கிறதென்றால் இறைமார்க்கத்தின் பெருந்தன்மையை எண்ணி வியக்காமல் இருக்க கல்நெஞ்சக்காஃபிர்களுக்குக்கூட மனம் வரவே வராது.......சுபஹானல்லாஹ்.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மூத்த சகோதரர் ஃபாரூக் காக்காவின் பெற்றோரை பேணச்சொல்லும் முத்தான ஆக்கம். நேற்று சுபுஹுத்தொழுகையில் வாசித்த ஒரு ஹதீஸும் இதையே வலுயுறுத்தியது. "கேவலப்படட்டும், கேவலப்படட்டும், கேவலப்படட்டும்" என்று நபித்தோழர்கள் முன் திடீரென எம்பெருமானார் நபி (ஸல்.) அவர்கள் வினவியதை கேட்ட நபித்தோழர்கள் யாரசூலல்லாஹ்! என்ன இப்படி கேவலப்படட்டும் என்ற வார்த்தையை மூன்று முறை வினவினீர்களே? என்ன காரணம்? தெரிந்து கொள்ளலாமா? எனக்கேட்டுக்கொண்டதற்கு நபி(ஸல்.) அவர்கள் கூறி இருக்கிறார்கள் "வயோதிகம் அடைந்த தாய், தந்தையரில் இருவருவோ அல்லது அவர்களில் யாரையேனும் ஒருவரை உயிருடன் பெற்று அவர்களுக்கு பணிவிடைகள் முறையே செய்யாமல் விட்டு விட்ட பிள்ளைகள் நாளை மறுமையில் கேவலப்படட்டும்" என்று கூறி இருக்கிறார்கள்.

பெற்றோரைப்பேணாத பிள்ளைகள் உலகிலேயே கேவலப்படுவதை நாமே கண் கூடாகப்பார்த்து வரும் பொழுது மறுமையில் கேவலப்படுவது எவ்வளவு பயங்கரமாக இருக்குமோ என கற்பனைக்கெட்டாத அச்சம் எம்மை சூழ்ந்து கொள்கிறது.

எனவே தாய், தந்தையரை உயிருடன் பெற்றிருக்கும் அருமைக்குழந்தைகள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் நல்ல முறையில் பயன்படுத்தி ஈருலகிலும் செளபாக்கியங்களுடன் சந்தோசமாக வாழ ஈருலகையும் படைத்த அல்லாஹ்வே நமக்கெல்லாம் நல்லருள் புரிவானாக....ஆமீன்.

இஸ்லாம் தன் தாய், தந்தையர் இன்னும் இஸ்லாத்திற்குள் இணையாமல் காஃபிராகவே இருந்தும் வரும் நிலையில் கூட அவர்களுக்குப்போய் இஸ்லாமியப்பிள்ளைகள் தா'அவா பணியுடன் பணிவிடைகள் குறைவின்றி செய்யச்சொல்கிறதென்றால் இறைமார்க்கத்தின் பெருந்தன்மையை எண்ணி வியக்காமல் இருக்க கல்நெஞ்சக்காஃபிர்களுக்குக்கூட மனம் வரவே வராது.......சுபஹானல்லாஹ்.......

sabeer.abushahruk said...

தாயை மதிக்காதோரை நான் நாயைவிட கீழாகவே மதிப்பதுண்டு. ஈன்றெடுத்த அன்னையின் அன்புள்ளத்தை வென்றெடுப்பது எளிது.

ஆயிரமாயிரம் குறைகளைச் சொன்னாலும் அன்னையான பெண்ணை அவளுக்குப் பிள்ளையல்லாதோரும்கூட அன்னையாகவே பார்க்க வேண்டும்.

நல்ல புத்திமதி, ஃபாரூக் மாமா

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

KALAM SHAICK ABDUL KADER said...

கண்கள் கண்ணீரை வடித்தன;’
கல்பெங்கும் உணர்வுகள் துடித்தன;
பெண்களின் கொடுமையைப் படித்தன
பெண்ணிலும் சிறந்த மகளைக் கண்டு
பேறு பெற்ற பெண்மணி இவளே என்று வாழ்த்தும் என் நெஞ்சம்.

நெடுந்தொடர் எழுதும் உங்கள் கரங்களிலிருந்து சிறப்பானதொரு சிறுகதையும் உணர்ச்சிப் பூர்வமாகவும் சிந்திக்க வைப்பதாகவும் படைக்க முடியும் என்பதை அறிந்து கொண்டேன்; பாராட்டுகள் காக்கா.

ஓர் அன்பான வேண்டுகோள்:

இந்தச் சிறுகதையை நெறியாளரின் அனுமதி பெற்று “முஸ்லிம் முரசு” , “இனிய திசைகள்”, “ சமநிலைச் சமுதாயம்: , “சமரசம்” போன்ற இதழ்களுக்கு அனுப்பி வையுங்கள்; இன்ஷா அல்லாஹ், படிப்பவர்களைக் கண்ணீர் விட வைக்கும் ஆழமான உணர்வுள்ள இந்தச் சிறுகதையை உறுதியாக ஏற்பார்கள்; பிரசுரமாகும் வாய்ப்பும் உள்ளது என்பது என் தாழ்மையானக் கருத்தாகும்.

இளம்வயதில் - பள்ளிப்பருவத்தில் “முஸ்லிம் முரசு” மாத இதழைப் படித்து அங்குள்ள சிறுகதைகளைப் படித்து விட்டு அடியேனும் அதுவேபோல் சிறுகதை எழுத ஆவலுடன் “சிறுகதை எழுதுவது எப்படி” என்ற நூலை வாங்கிப் படித்து எழுதியிருக்கின்றேன்; ஆனால், இன்று இப்பொழுதுப் படித்த இந்தச் சிறுகதையின் மூலம் தான் உண்மையில் சிறுகதை எழுதுவது எப்படி என்ற ஓர் அரிய உத்தியைக் கண்டுபிடித்து விட்டேன்; இன்ஷா அல்லாஹ், தங்களின் அடியொற்றி அடியேனும் சிறுகதை எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டி விட்டீர்கள், என் மதிப்பிற்குரிய மூத்த காக்கா அவர்களே! ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா. நல்ல ஆரம்பம்.

نتائج الاعداية بسوريا said...

அன்பு பாரூக் காக்கா,

இதை இரண்டாவது முறை படித்ததில் ஒரு கருத்து சொல்ல என் மனம் ஏங்கியது, அதாவது,

சில விஷயங்களுக்காக அல்லாஹ் ஒரு சிலரை இவ்வுலகில்லேயே தன் தண்டனையை அமுல் படுத்தியும் பார்ப்பதுண்டு. இந்த மண் சட்டி சோறு உண்ட அந்த கிழவி அவளின் தாய் தந்தையை எப்படி மனம் புண்படி செய்ததோ அல்லது பெற்றோர் என்றும் பாராமல் என்ன கொடுமை செய்ததோ அல்லாஹ்வே அறிவான்.

இது தொடர்கதையாக இவ்வுலகில் நடப்பதில்லை என்றாலும், இவ்விஷயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி என்பது, தாய் தந்தையர் தன் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பெற்றோர்களின் முக்கியத்துவத்தையும், அவர்களை பேண வேண்டியதின் அவசியத்தையும் உணர்த்தி வளர்ப்போமேயானால் இது போன்ற அவல நிலை தாய் தந்தையருக்கு ஏற்ப்படாது.

சில குழந்தைகள்,நாளை மஹ்ஷரில் தன் பெற்றோர்களுக்கு எதிராகவே அல்லாஹ்விடம் சாட்சி சொல்லக்கூடிய அவலநிலைக்கு ஒரு சில தாய் தந்தையரின் நிலை ஏற்ப்படும். அப் பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இவ்வுலக சுகபோகங்களை கொடுத்து ஆகிறத்தின் நினைப்பில் கொஞ்சமும் கவனம் செலுத்தாமல் விட்டதுதான் காரணம்.

மண் சட்டி சோறு வரை தன் தாய் தந்தையரை கொண்டுசெல்பவர்கள் நிலை மட்டுமல்ல , தன் குழந்தைகளை அவளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து அதுவே இறை நினைப்பை விட்டும் வெகு தூரமாக்க காரணமாக இருந்த தாய் தந்தையரின் நிலையும் நாளை மஹ்ஷரில் கைசேதமே.

அல்லாஹ் காப்பாற்றுவானாக !

அபு ஆசிப்.

Anonymous said...

அன்புள்ள தம்பி அபு ஆசிப்:

//இரண்டாவது முறை படித்ததில்//

உங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ள கூடியதே!

எல்லா மறை பொருளும் விளைவுகளும் அதன் காரணங்களும் அவனே அறிவான்!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

சிறுவயதில் அதிரை கிளை நூலகத்தில் வாங்கிப்படித்த கதைத் தொகுப்பில் "சங்கு சேகண்டி" என்ற பெயரில் இதே கருத்துடன் ஒரு கதை வாசித்துள்ளேன். எனினும், அதிரை வட்டார பேச்சு வழக்கில் வந்துள்ள இந்த ஆக்கம் சுவாரஸ்யமாக உள்ளது.

கதைப்படி, கொட்டகைக் கிழவி அனேகமாக வாப்பிச்சாவாகவே இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் நமதூரில் பெற்றதாயை இந்தளவுக்குத் தனிமைபடுத்தி கொடுமைபடுத்தும் கல்மனம் கொண்டவர்கள் நானறிந்து இல்லை.

தாய் வீட்டுடன் மகளைத் தங்கவைத்து, மருமகன் வந்துசெல்லும் பழக்கமும் இதைக் கருத்தில் கொண்டே உண்டாகி இருக்குமோ என்று நினைக்கிறேன்.

வயதான பெற்றோரைக் கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு சுருக் என்று இருக்கும்படியான ஆக்கம்.

N.ஜமாலுதீன்

ZAKIR HUSSAIN said...

வயோதிகத்தில் ஏற்படும் டிஜெனரேட்டிவ் நியூரோ சிம்ப்டம்ஸ்.....வயதானவர்களை மீண்டும் குழந்தை நிலைக்கு கொண்டு செல்கிறது. குழந்தையாக இருக்கும் போது செய்த மனித இயல்புகளை பெரியவர்கள்களானதும் செய்யும்போது அதை சரியாகப்புரிந்துகொள்ளாமல் அவர்களை தூர ஒதுக்குவது ...புரியாமையா இல்லை இளமையாக உள்ளவர்கள் சுதந்திரமாக இருக்க தடையாக இருக்கிறதா.

ஆனால் பொறுப்பை தட்டிக்கழிக்கும் ஜென்மங்களை காலம் தண்டிக்கும்போது கொஞ்சம் கொடூரம் அதிகமாகவே இருக்கும்.

எனக்குத்தெரிந்து 2 பேர் [ஆண்கள்] மிகவும் நல்ல நிலையில் இறைவன் வைத்து இருக்கிறான். அந்த இருவரும் வேறு வேறு ஆட்கள். அவர்களிடம் இருந்த ஒற்றுமை தாயை / தகப்பனை படுக்கையில் எல்லாம் கழிந்த நிலையிலும் முகம் சுழிக்காமல் அவர்கள் பார்த்துக்கொண்ட விதத்தை இறைவன் கருணையுடன் பார்த்திருக்கக்கூடும்.

அந்திம வாழ்க்கை - மனிதவாழ்க்கையின் ஞான நிலை.


Anonymous said...

இன்றைய நிலையில் பெரும்பாலான ஊர்களில் ஜாதி மத பேதமின்றி
நடைபெறும் நிகழ்வுகளை கருவாக கொண்டு சொந்த கருத்துக் கோர்வைகளால் புனையப்பட்டஒரு Moral-லை வற்புறுத்தும் நோக்கமே என் பதிவு!

சம்பவங்கள் என்று சொல்வதை விட''காலம் காட்டும் கண்ணாடி'' என்று சொல்வதே சரியென்று நினைக்கிறேன்.

''சங்கு சங்கன்டியே'' தழுவியோ அல்லது கதாநாயகர்களை மாற்றியோ எழுதியதல்ல!

காலத்தையும் அதன் மாற்றத்தையும் பார்த்தும் கேட்டும் மனதில் உருவான கருவை பதிவாக்கினேன்.

பதிவின் குறி: ''முதியோர்களை பேண வேண்டும்'' என்பதேயாகும்!...

அது உறவிகளில் யாராக வேண்டுமானலும் இருக்கலாம். ஏன் ஒருக் கால் நாமே அந்த கொட்டகை கிழவனாகவோ / கிழவியாகவோ இருக்கலாம்!

பாரம் என்று ஒதுக்கிய பின் மாளிகை கட்டி A/C போட்டா தருவார்கள்!.

கொட்டகை சட்டி சோறு தான் இந்த மாதிரி சம்பவங்களும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இப்படி ஒரு கதை ஏற்கனவே ஒருவர் உருவாக்கி விட்டதை சுட்டிக் காட்டிய தம்பி ஜமாலுதீனுக்கு நன்றி!.

அதை படிக்காதவர்கள் இதை படித்து பயன் பெறட்டுமே!

S.முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்

Unknown said...

எது எப்படியோ காக்கா

இன்றைய, பெற்றோர்களை மதிக்கத்தெரியாத அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காத இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் ஒரு ஜாக்கிரதை விழிப்புணர்வு பதிவு.

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பெற்றோரை தூற்றுபவர்களை அதிரை மொழியில் சொல்லும் இந்த மண்சட்டிக்கதை, மண்டையில் குட்டி விழிப்பூட்டுகிறது.

Ebrahim Ansari said...

ஒரு கருத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

பொதுவாக ஆண்மக்கள் , மனைவிமார்களின் சொல் கேட்டு தன்னை பெற்றவர்களை சரியாகப் பேணுவதில்லை என்கிற குற்றச்சாட்டு நிறைய நிலவுகிறது. நடக்கிறது.

அதே நேரம்

தன் தாய் பெயரில் இருக்கும் வீடு வாசல் சொத்து மற்றும் நகைகள் யாவையும் "அப்பி" க் கொண்டு தாய் தகப்பன்களை கவனிக்காமல் விட்டுவிடும் பெண் மக்களைப் பற்றியும் பேசவேண்டும்.

அவர்களும் ஒரு கணிசமான அளவு இவ்வுலகில் ஏன் நம் ஊரிலேயே இருக்கிறார்கள். இப்படி எல்லாவற்றையும் மகளுக்கும் மகள் பெற்ற பிள்ளைகளுக்கு தாரை வார்த்துவிட்டு மகன்களுக்கு பட்டை நாம சாத்திய பல தாய்மார்கள் கடைசியில் மகன்களாலும் மருமகள்களாலும் நன்கு கவனித்துக் கொள்ளப் படுகிறார்கள்.

இருந்தாலும் அப்படிப்பட்ட தாய்மார்கள் இன்னும் மகன்களிடமிருந்தும் பிடுங்கி மகள்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கே கொடுக்கப் பார்க்கிறார்கள்..

மகள்கள் வெளிப்படையாக ஒரு தவறு செய்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் "வெளங்காம" செய்கிறாள் என்று சப்பைக் கட்டு கட்டும் தாய்மார்கள் , தன்னை கவனித்துக் கொகொள்ளும் மருமகள்கள் அறியாமல் ஒரு தவறு செய்துவிட்டால் கூட வேண்டுமென்று செய்கிறாள் என்று பழி சொல்வதில் முன் நிற்கிறார்கள்.

ஒரு தாயிடம் வீடு சொத்து நகைகளை வாங்கிக் கொண்டு அந்தத் தாயை வைத்துப் பேணாமல் அந்தத் தாயின் மகன் இடமிருந்து மாதப் பணம் வந்தால்தால் சாப்பாடு தருவேன் என்று சொல்கிற மகளை எனக்குத்தெரியும்.

என் வீட்டில் சாப்பிடுவதானால் சட்டி பானை கழுவ வேண்டுமென்று வயதான தாய்க்கு கண்டிஷன் போடும் மிருக மகளையும் எனக்குத் தெரியும்.

அன்றைக்கு மீன் மார்க்கெட்டுக்குப் போய் கறி வாங்கித்தர இயலாமல் கால் வலி என்று படுக்கும் தாய்க்கு சோறு போடாமல் விட்ட மகளையும் எனக்குத்தெரியும்.

அதைவிடப் பெரிய கொடுமை , தனது தாய் இறந்த பின் அவரது அனைத்தையும் அடைந்து கொண்ட ஒரு மகள் அந்தத் தாயைக் குளிப்பாட்ட தண்ணீர் கொண்டுவரச் செய்த தண்ணீர்க் குட செலவு வரை கணக்குப் போட்டு அந்தத்தாயின் மகனிடம் வசூலித்ததும் எனக்குத் தெரியும்.

இந்தப் பதிவைத் தந்துள்ள பெரியவர் தான் பார்த்த - அறிந்த - கேட்ட உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிரார்கள். பதிவின் கரு , எனது முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல் ஊகிக்க முடிந்ததுதான் என்றாலும் உணர்வுகளோடும் மண்வாசனை யோடும் ஒன்றும் விதமாக எழுதி இருக்கிறார்கள்.

ஒரு திருப்தி மாஷா அல்லாஹ் ! இதை எழுதிய அறிஞர் தனது வயதான காலத்தில் ஒரு பாசக்கூட்டில் வாழ்ந்து வருவதே நாங்கள் செய்த பாக்கியம்.

சில பதிவுகள் சிலரின் அனுபவங்கள். சில பதிவுகள் சிலரின் பார்வைகள்.

பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு?
பாசம் மட்டும் போதும் கண்ணே!
காசு பணம் என்னத்துக்கு?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மகனோ, மகளோ, மருமகனோ, மருமகளோ என்று உறவுகளால் பிண்ணப்பட்டு பாசப்பிணைப்பில் வாழ்ந்து மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று சொல்லி சாந்தமுடன் வாழ்ந்து வந்த காலங்கள் மலையேறி இன்று "பணமிருந்தால் மார்க்கமுண்டு" என பழமொழியை திருத்தி இன்றைய சமூகம் பாழாய்ப்போய்க்கொண்டிருக்கிறது என்னவோ உண்மையே........

sabeer.abushahruk said...

ஈனா ஆனா காக்கா,

"எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்" என்று குறிப்பிடும் நிகழ்வுகள் மனிதர்களுக்கிடையேதான் நிகழ்கிறதா?

அல்லாஹ் காப்பாத்தனும்.

//பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு?
பாசம் மட்டும் போதும் கண்ணே!
காசு பணம் என்னத்துக்கு? //

இறுதியில்,
பனி
கொட்டும் காலத்தில்
காது வரைக்கும் கம்பளி போத்தும் கருணைதான் நிலையானதா?

ZAKIR HUSSAIN said...

இன்றைக்கு லன்ச் 5 நட்சத்திர ஹோட்டலில் [ வாழ்க கார்ப்பரேட் குழுமங்களின் கரிசனம் ]. காரைத்திறந்து விடும் சேவகம் , சல்யூட் அடித்து அனுப்பிவைக்கும் லாவகம் இருப்பினும்......

வீட்டில் இருக்கும்

சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கிறது!!!

Yasir said...

சிந்திக்க வைக்கும் ஆக்கம்....பெற்றோரைப் பாதுகாத்து அவர்கள் குழிக்குள் செல்லும் வரை கடமையாற்றுவது நம் கடமை..அல்லாஹ் நாம் அனைவரையும் பெற்றோருக்கும்/உற்றோர்களுக்கும் சேவை செய்பவர்களாக ஆக்கி வைப்பானாக

Ebrahim Ansari said...

//"எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்" என்று குறிப்பிடும் நிகழ்வுகள் மனிதர்களுக்கிடையேதான் நிகழ்கிறதா?//

ஆமாம் தம்பி சபீர் அவர்களே! மனிதர்கள்தானே கடிதம் எழுதுகிறார்கள் .

அதுவும் என்னை க் கூப்பிட்டு எழுதிக் கேட்டால் இதெல்லாம் எனக்குத் தெரிய வராதா ?

Ebrahim Ansari said...

//இறுதியில்,
பனி
கொட்டும் காலத்தில்
காது வரைக்கும் கம்பளி போத்தும் கருணைதான் நிலையானதா?//

ஆமாம். அது கூட அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சமீபத்தில் மரணமடைந்த என் அருமைத்தாயார் பற்றி சிலர் என்னிடம் பெருமிதம் கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி சொல் என்றார்கள்.

காரணம் 1 : அவர்கள் நீண்ட நாட்கள் படுத்த படுக்கையில் கிடந்து மலம்,ஜலம் கழித்துக்கொண்டு பணிவிடை செய்யும் எவரையும் என்றைக்காவது ஒரு நாள் முகம் சுழிக்க வைத்து விடாமல் நோய்வாய்ப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே அல்லாஹ்விடம் சென்றடைந்து விட்டார்கள்.

காரணம் 2 : வீட்டின் ஏதேனும் சூழ்நிலையால் யாருக்கும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ யாரிடமேனும் காசு,பணத்தேவைக்கு கடன்கள் வாங்கி பின்னர் அதை திருப்பிக்கொடுக்க இயலாமல் போய் அவை யாவும் பிள்ளைகளின் பொறுப்பில் சுமையாக வந்து இறங்காமல் சலாமத்தாக செல்ல வேண்டிய இடம் சென்றடைந்து விட்டார்கள் என்பதனாலுமே.

என்ன தான் ஆயிரம் காரணங்கள் சொல்லி என் அருமைத்தாயின் பிரிவை சமாதானப்படுத்தினாலும் "(சகோதரனில்லா) நீ ஒருத்தனையும் ஆயிரம் ஆண்மகனுக்கு சமமாக்கி வை யா அல்லாஹ்!!!" என வாயார, மனதார வாழ்த்தி இறைவனிடம் இறைஞ்சும் து'ஆவை இனி நான் யாரிடமிருந்து பெறுவேனோ???

சிறு பிராயத்தில் நட்ட நடு சாமத்தில் பகலில் மழையில் நனைந்ததால் ஆழ்ந்த உறக்கத்தில் வரும் லொக்கு, லொக்கு என்று இருமும் இருமலுக்கு திடீரென ஒரு கனத்த கை என் நடு நெஞ்சின் மேல் தடவிக்கொடுக்கும். யாரென திடிக்கிட்டு விழித்து பார்க்கயில் அருகில் உம்மா அமர்ந்து கொண்டு ஓதிப்பார்க்கும். அந்த திடுக்கத்தையும் அதன் பின் வரும் அரவணைப்பையும் இனி எங்கு நான் காண்பேன்???

ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும் திரும்பி வீடு வரும் பொழுதும், புறப்படும் பொழுதும் நடு நெஞ்சை கட்டி அணைத்து முத்தமிட்டு வாழ்த்தி வழியனுப்பி அந்த வல்லோனிடம் பொறுப்பு சாட்டி அனுப்பி வைக்கும் அந்த அருமைத்தாயை இனி நான் எங்கு காண்பேன்???

சிறு பிராயத்தில் நடுசாமத்தில் மெத்தையில் படபடக்கும் சன்னல் கதவும், பூனையின் உருட்டலும் சிறுபிள்ளையாய் இருக்கும் எம் அகக்கண்களுக்கு பேயாய், கள்ளனாய் அச்சமுடன் தெரியும் அச்சமுடன் தெரியும் அச்சமயம் தனியே கையில் விளக்கெடுத்து மெத்தை ஏறி "யாரடா அது?" என அஞ்சா நெஞ்சம் கொண்டு கேட்டு வரும் அந்த தைரியத்தாயை இனி நான் எங்கு காண்பேன்???

இப்படி ஏராளம் அருமை, பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். இது கட்டுரை எழுதுமிடமல்ல கருத்துரை பதியுமிடம். அப்படியே எழுதினாலும் நீங்கள் சோர்ந்து விட மாட்டீர்கள். காலம் கருதி இத்துடன் சோகத்துடன் முடிக்கின்றேன்.

எனவே நம் தாய்,தந்தையர் அவர்கள் தாய்,தந்தையரை எப்படி கவனித்தார்கள் என்பதை நாம் அலசி ஆராய வேண்டிய தேவையில்லை. நம் தாய்,தந்தையரை நல்லபடி மன நோகாமல் பார்த்து பணிவிடை செய்து இறைப்பொருத்தத்தையும் இன்முகத்துடன் பெற்றுக்கொள்வோமாக!!! ஆமீன்.

sabeer.abushahruk said...

எம் எஸ் எம்,

இப்படிப் பிழிந்தெடுத்தால் எப்படி மிஞ்சும் எம் கண்களில் நீர்.

அம்மா என்ற சொல்லுக்கு மட்டும்தானே பொருளோடு சேர்த்து அருளையும் உணர்த்தும் சக்தி இருக்கிறது.

இழந்தது அம்மா என்னும் உறவை மட்டுமே எம் எஸ் எம்; அம்மா என்னும் உணர்வு உங்களோடுதான் என்றும் இருக்கும்.

அந்த உணர்வு இறப்பதில்லை சகோதரா. உன்னோடு உடனிருக்கும் நீ விரும்பும் வண்ணம் வாழ்வளிக்கும்.

மீண்டு வாருங்கள்.

Yasir said...

கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டீர்கள் சகோ.நெய்னா முகம்மது

Anonymous said...

//அதை விட பெரிய கொடுமை [தன்] அந்த தாய் இறந்த பின்......../ /

இப்ராஹிம்அன்சாரிசொன்னது/

மச்சினம் புள்ளே நல்லா புட்டு- புட்டு வைக்கிறியளே! இதையே மூன்று நாட்களுக்கு முன் ''மண்சட்டி!' பின்நூட்டதிற்கு அ. நி.க்கு எழுதி அனுப்பினேன்.இன்னும் வரவில்லை! ஒரு வேளை மிஸ்ஸாகி இருக்கலாம் !

யார் எழுதினால் என்ன? உண்மையே உறக்க கூறுவோம்! இறுதியில் உண்மையே வெல்லும்!

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இன்னும் இருக்கிறது......

மூவேளை சாப்பாட்டில் நாருசிக்க பிள்ளைகளுக்கு வயிறார தந்து எஞ்சிய ருசியில்லா மிச்சம் மீதியை காலமெல்லாம் நமக்காக ருசியுடன் சாப்பிட்டு காலம் கடத்திய அந்த அருமைத்தாயை இனி எங்கு நான் காண்பேன்???

தாயே! என்னதான் உனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் ஒரு நாளும் எங்களுக்கு உங்க,திங்க திண்டாட்டம் வைத்ததில்லை நீயே....

விளையாட்டு களைப்பில் இரவில் பசும்பால் குடிக்க மறந்து படுத்துறங்கினாலும் பக்குவமாய் எழுப்பி பாலூட்டும் அந்த தாயை இனி எங்கு தான் காண்பேன்???

தென்னை மரத்திற்கு தேள் கடித்து பனை மரத்துக்கு வீங்குவது போல் எனக்கு வரும் ஒவ்வொரு தும்மலும் உன்னை விம்மியழ வைத்து விடுவது எப்படியோ???

எப்பொழுது திரும்புவோம் என நிச்சயிக்கப்படாமல் புறப்பட்டு செல்லும் வெளிநாட்டுப்பயணத்தில் வருடங்கள் பல வழி மேல் விழி வைத்து காத்திருந்து வந்ததும் வாரியணைத்துக்கொள்ளும் நீ இன்று இல்லாமல் வெற்றிடமாய் நான் அந்த வழியில் வெறுமனே நின்றேன்.

வீட்டிற்கும், குடும்பத்திற்கும் ஒரு இரும்புப்பெண்மணியாய் இருந்த நீ இன்று துரும்பாய் கூட இல்லாமல் திரும்பிப்பார்க்காமல் சென்று விட்டாயே என் தாயே!

சபீர் காக்கா சொல்வது போல் நீ இன்று தொட்டுப்பார்க்கும் ஒரு உறவாய் இல்லாமல் போனாலும் உள்ளத்தோடு ஒட்டி உறவாடும் உணர்வாய் உன்னை என்றும் எனக்கு இறைவன் தந்தருளட்டுமாக.....

தாய் உயிருடன் இருக்கும் பொழுது அவர்களின் அருமை, பெருமைகளை சரிவர உணர்ந்து பணிவிடை செய்ய முடியவில்லை. ஆனால் அவர்கள் பிரிவுக்குப்பின் நினைவு ரொம்ப வாட்டுது......

அடுத்த வீட்டு பையனின் அயல் நாட்டு பயணத்திற்கு அவர்கள் உம்மா அவனை வழியனுப்பி வைத்து அழுது நின்றது. அதை பார்த்த எனக்கு என் வீடு செல்லும் வரை அழுகை தாரை வார்த்தது. காரணம், இந்த முறை என்னை ஆரத்தழுவி அரவணைத்து வாழ்த்தி து'ஆச்செய்து வழியனுப்பி வைக்க என் உம்மா இந்த முறை இல்லவே இல்லையே என் இறைவா!!!

Anonymous said...

ஒரு தாய் ஆண் மகன் பெற்றதும் முதலில் அவள் வாங்குவது தொட்டில் கையிறு அல்ல; அரிவாள். கதிர் அறுக்கும். அரிவாள் ! மகனார் வரப்புக் கட்டி வாய்க்கா வெட்டி, நிலம் உழுது நீர் பாய்ச்சி நாத்து நாட்டு, கதிர் வளர்ந்து தலை சாய்ந்த பின் இடுப்புச் சீலையே வரிஞ்சு கட்டி அறுவடை செய்யவே அந்த அறுவா!

S.முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

அன்புள்ள 'M.S.M !'

என் இரு கண்ணிலும் நீர் தேக்கிவிட்டீர்கள்!

S.முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

அதிரைநிருபர் வாசக அன்பு நெஞ்சங்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்! [வரஹ்]

'மண்சட்டி' ஆக்கத்திற்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த வரவேற்புக்கு என் கனிவான நன்றியே தெரிவித்துக்கிறேன். இன்னொரு கோணத்தில்
சொல்வதென்றால்' மண்சட்டியே பொன்சட்டி'யாக்கி விட்டீர்கள். என்பதே என் கருத்து!

இன்சா அல்லாமீண்டும்சந்திப்போம்

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Ebrahim Ansari said...

தம்பி !எம். எஸ் .எம்.

எழுத வார்த்தைகள் வரவில்லை. ரிலாக்ஸ் மை பிரதர்.

Thameem said...

வாப்பா இந்த கட்டுரைக்கு என் கண்ணீர் துளிகளை சமர்ப்பணம் செய்கிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு