Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 22 11

அதிரைநிருபர் பதிப்பகம் | December 18, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
முந்தைய பதிவில் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களின் வாழ்விலிருந்த சம்பவங்கள் பற்றி அறிந்தோம், படிப்பினைகளையும் அறிந்து கொண்டோம். இந்த வாரம், நபி (ஸல்) அவர்களிடம் பாடம் படித்த உத்தம தோழர்கள் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள், அவர்களைப் பற்றிய ஒரு சில தகவல்களை அறிந்து அதனைக் கொண்டு நாம் எவ்வகை படிப்பினைகள் பெறப்போகிறோம் என்பதை பார்க்கலாம். அதற்கு முன்பு இதோ உங்கள் சிந்தனைக்காக ஒரு சில செய்திகளை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு முஸ்லீம் தனக்கு மரணம் எந்த நிமிடமும் வரும் என்று நம்புவது அவரின் இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படைகளில் ஒன்று என்பதை நம் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. எனக்கு மரணம் வந்தால் அடுத்த நிமிடம் என்ன நடைபெறப் போகிறது என்ற சிந்தனை நம்மிடம் வர வேண்டும் என்ற இஸ்லாமிய எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் நினைவூட்டவே இந்த பதிவு. 

உதாரணமாக, இந்த பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் நாம் இந்த நிமிடமோ அல்லது, இன்றோ அல்லது நாளையோ மரணித்து விட்டால் நம்முடைய அடுத்தக் கட்டம் என்ன என்பதை சற்று சிந்திக்க வேண்டும். மரணம் என்பது முற்றுப் புள்ளி அல்ல, மரணம் என்பது அது தொடர இருக்கும் மற்றொரு பயணம். ஆனால் அந்த பயணத்தை எதிர் நோக்குவதற்கு நாம் அஞ்சுகிறோம், அது நமக்கு தாமதிக்கக் கூடாதா என்று எண்ணுகிறோம், இது மனிதனின் இயல்பு. கொஞ்சம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி ஒரு படபடப்போ அல்லது ஒரு நடுக்கத்தில் காய்ச்சல் ஏற்பட்டாலோ நாம் மரணித்து விடுவோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது ஆனால் டாக்டரிம் சென்று ஊசி, மாத்திரை போட்டவுடன், “அல்ஹம்துலில்லாஹ் நான் இப்போ மவுத்தாக மாட்டேன்” என்று திருப்தியடைகிறோம். இது போல் இருதய நோய் உள்ள ஒருவர் கையில் ஒரு சிறிய மாத்திரை வைத்திருப்பார், கொஞ்சம் இருதயம் பட படவென்று அடிக்க ஆரம்பித்து ஒரு சோர்வு ஏற்பட்டால், மரண பயம் வந்து விடும், உடனே, அந்த சிறிய மாத்திரையை வாயில் நுனி நாக்கில் வைத்து விடுவார் சிறிது நேரத்தில் “அல்ஹம்துலில்லாஹ் நான் இப்போ மவுத்தாகவில்லை” என்று திருப்தியடைகிறார், இதுதான் யதார்த்த நிலை. 

ஆனால் ஒரு முஃமீன் வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் மரணத்தை எதிர்ப்பார்த்தவனாக வாழ வேண்டும் என்பதையே இஸ்லாம் வழியுறுத்துகிறது.

நம்மில் எல்லோருக்கும் ஒரு போலியான நம்பிக்கை உள்ளது, எனக்கு எந்த ஒரு நோயும் இல்லை, எனக்கு வயது குறைவு, எனக்கு பிள்ளைகள் நிறைய உள்ளது, எனக்கு சொத்துக்கள் உள்ளது, எனக்கு நோய் இருந்தாலும் மருத்துவம் செய்ய நிறைய செல்வம் உள்ளது, நான் நிறைய நற்காரியங்கள் செய்கிறேன், நான் நிறைய தர்மம், நிறைய தஃவா பணி செய்கிறேன், நான் நிறைய சமுதாய சேவை செய்கிறேன், நான் நிறைய அனாதைகளை பாதுகாக்கிறேன், அல்லாஹ் இரக்கம் கொண்டவன் ஆகவே என்னை இப்போது மரணிக்கச் செய்ய மாட்டான் என்ற ஒரு நம்பிக்கையிலும் வாழ்ந்து வருகிறோம். அல்லாஹ் சொல்லுகிறான்.

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!  (அல்குர் ஆன் 04:78)

மரணம் நாம் எங்கிருந்தாலும், எப்போதும் வந்தே தீரும் என்று அல்லாஹ் கூறுகிறான், “என்னுடைய சமூகத்தவரின் சராசரி வயது 63 வருடங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்று நம்முடைய வயதை வைத்து இந்த ஹதீஸின் கருத்தை உள்வாங்கி மேற்குறிப்பிட்ட திருக்குர் ஆன் வசனத்தையும் வாசித்து கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் நாம் மரணத்தை எதிர்ப்பார்த்த மக்களாக உள்ளோமா? இல்லையா? என்று. இன்றும் சராசரியாக மரணிப்பவர்களின் வயதும் 55 முதல் 65 வயதாகத்தான் உள்ளது. மிஞ்சிப்போனால், 70 வயது, 80 வயது, 90 வயது, மிகச் சொற்பமானவர்களுக்கு 100 வயது, அதன் பிறகு மரணம் தானே. இதோ மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த ஒரு சிலரை பற்றி பாருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் மற்றும் சுலைமான்(அலை) அவர்கள் இருவரின் ஆட்சிக்கு பிறகு நல்லாட்சி தந்த மிகச் சிறந்த மனிதர் உமர்(ரலி) அவர்கள். மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த மிக முக்கியமான உத்தம தோழர். உமர்(ரலி) அவர்கள் ஒரு விரல் சுண்டினால் போதும் அவர்கள் முன்னால் வந்து நிற்க பல நூறு ஆட்கள் வரும் அளவுக்கு மிகவும் பலம் வாய்ந்த ஆட்சியாளராக இருந்தவர்கள். ஆனால் ஒரு நாள் அந்த அமீருள் முஃமினீன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் அளவுக்கு ஓடி வருகிறார், வீதியில் ஒரு அடிமை கேட்கிறார் “அமீருல் முஃமினீன் அவர்களே எங்கே செல்கிறீர்கள்” என்று கேட்டார். “பைத்துல்மாலுக்கு சொந்தமான ஒரு ஒட்டகம் வெளியே ஓடிவிட்டது அதனைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன், பைத்துல்மாலுக்கு சொந்தமான அந்த ஒட்டகம் காணாமல் போனால் அது பற்றிய கேள்விக்கு நான் தானே பதில் சொல்ல வேண்டும்” என்று பதிலுரைத்தார்கள் உமர்(ரலி) அவர்கள். சமூக கடமை பொருப்போடு செய்து மரணத்தை எதிர்ப்பார்த்த அந்த உத்தமர் உமர்(ரலி) வாழ்வு இப்படி இருந்தது.

ஒரு முறை அதே உமர் (ரலி) அவர்களை சந்திப்பதற்காக வெளியூரிலிருந்து ஒரு சிலர் வந்தார்கள், வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறார்களிடம் அந்த வெளியூர் கூட்டத்தினர் “உங்கள் ஜனாதிபதியை நாங்கள் சந்திக்க வேண்டும், அவர்கள் மாளிகை எங்கே உள்ளது” என்று கேட்டார்கள். அதற்கு அந்த சிறுவர்கள் “நீங்கள் இப்படி போங்கள் அப்படி போங்கள் அங்கே ஒரு மரம் வரும் அங்கு ஒருவர் புரண்டு புரண்டு படுத்திருப்பார் அவர் தான் எங்கள் ஜனாதிபதி” என்று சொல்லி வழி சொன்னார்கள். அந்த சிறுவர்கள் சொன்ன வழியில் சென்றார்கள் அந்த வெளியூர்காரர்கள், அங்கே புழுதி படிந்த நிலையில் அந்த உத்தமர் புரண்டு புரண்டு படுத்துறங்கிக் கொண்டிருந்ததை பார்த்து இவ்வளவு எளிமையானவரா இந்த உமர்(ரலி) அவர்கள் என்று எண்ணி கண்ணீர் சிந்தினார்கள் அந்த வெளியூர்க்காரர்கள். மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த அந்த உத்தமத் தோழர் உமர்(ரலி) அவர்களின் வாழ்வு பல சந்தர்ப்பங்களில் அப்படி இருந்தது.

நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு மிகச் சிறப்பான ஆட்சி செய்த அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்பு ஹுதைபா(ரலி) அவர்களிடம் சென்று, “ஹுதைபாவே, நபி(ஸல்) அவர்கள் உங்களிடம் முனாபிக்குகளின் பட்டியல் தந்துள்ளார்களாமே, நீங்கள் அதனை என்னிடம் காட்ட முடியுமா?” என்று வினவினார். அதற்கு ஹுதைபா(ரலி) அவர்கள் “நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கொடுத்த அமானிதம், அதனை யாருக்கும் கொடுக்க எனக்கு அனுமதி இல்லை” என்று கூறினார். உடனே கண்ணியமிக்க அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் “ஹுதைபாவே அந்த பட்டியலில் என்னுடைய பெயர் உள்ளதா என்பதையாவது பார்த்துச் சொல்லுங்களே” என்று வினவினார். ஹுதைபா “நீங்கள் அதில் இல்லை” என்று கூறியவுடன் தான் அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்களுக்கு நிம்மதி. தான் ஒரு காலமும் முனாஃபிக் பட்டியலில் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த உத்தம நபியின் உன்னத தோழர், நபி(ஸல்) அவர்களால் சொர்க்கவாசி என்று நன்மாறாயம் சொல்லப்பட்டத் தோழர், அவரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபி(ஸல்) அவர்களால் சிலாகித்துச் சொல்லப்பட்ட கண்ணியமான தோழர் உமர்(ரலி) அவர்கள். வாழ்வு அப்படி இருந்தது.

அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் ஃபஜர் தொழுகைக்காக தயார்படுத்திக் கொண்டிருக்கும் போது காஃபிர் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு, உணவுக்குழாய் அறுக்கப்பட்டு காயப்பட்டு மரணத்தருவாயில் இருந்த அந்த நேரத்தில், தன்னுடைய மகன் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களை அழைத்து “என் அருமை மகனே, எனக்கு மரணம் நெருங்கிவிட்டது, நீ முஃமீன்களின் தாயிடம் (அன்னை ஆயிசா(ரலி)) போ, அவர்களுக்கு சலாம் சொல், பின்னர் நான் மரணித்தால், என்னுடைய ஜனாஸாவை நம் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள், என் அருமைத் தோழர் அபூபக்கர்(ரலி) அவர்கள் அடங்கி இருக்கும்மிடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய அனுமதி கேள்” என்று கூறி அனுப்பினார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்களிடம் சென்று உமர்(ரலி) அவர்கள் அனுமதி கேட்டதை சொல்ல. அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் எந்த தயக்கமும் இன்றி சம்மதித்தார்கள். ஒரு ஆட்சியாளர் தன் அதிகாரத்தால் எதையும் செய்ய முடியும், ஆனால் தன்னுடைய அடக்கஸ்தளத்தை தேர்ந்தெடுக்க அனுமதி கோரினார்கள் என்றால், உலகில் வேறு எந்த ஒரு ஆட்சியாளராலும் இப்படி உமர்(ரலி) அவர்கள் போல் நன்னடத்தை உள்ளவர்களாக வாழ்ந்திருக்க முடியாது. 

தான் ஒரு ஜனாதிபதியாக இருந்தாலும் அடுத்தவர் உரிமையை மதித்து வாழ்ந்து மரணித்த உத்தம தோழர் உமர்(ரலி) அவர்கள் என்று சொன்னால் மிகையில்லை.

காற்று ஊதப்பட்ட பலூனுக்கு அதில் உள்ள காற்று உள்ளவரைத் தான் மதிப்பு. பலூன் வெடித்து அந்த காற்று வெளியேறினால், அந்த பலூனுக்கு மதிப்பு உண்டா? அது போலவே உயிர் உள்ள நம் உடம்புக்கு உயிர் இருக்கும் வரைத் தான் மதிப்பு அந்தஸ்து, பதவி, செல்வம் எல்லாமே, அந்த உயிர் நம்மைவிட்டு சென்றுவிட்டால் நாமும் அந்த காற்றில்லா பலூன் போல் தான். 

அல்லாஹ்வை நம்பிய நாம், நமக்குள்ள மரணம் நமக்கு வந்தே தீரும் என்ற அல்லாஹ்வின் திருவசனத்திற்கு ஏற்ப தயார் நிலையில் இருக்கின்றோமா? சிந்திக்க வேண்டும்.  மரணத்தை எதிர்பார்த்து வாழும் ஒரு முஃமீன் இந்த உலகத்தில் நான், நீ என்று வாழ மாட்டான். ஆனால் இன்றோ நானா? நீயா? சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டையிடுகிறோம். வேலிச்சண்டை, கோழிச்சண்டை, பசியாரச்சண்டை, facebookல சண்டை என்று இப்படி சின்னச் சின்ன சண்டைகளுக்கெல்லாம் உறவுகளைப் பிரித்து மேய்ந்து விடுகிறோம் அதோடு பிரித்தாளவும் படுகிறோம்.

பெரியவன், படித்தவன், அறிவாளி, எல்லாம் தெரிந்தவன், முதலாளி, பணக்காரன் என்ற அகம்பாவம் நம்மில் ஒவ்வொருத்தரிடம் உள்ளதோ ? நான் என்றும்…! நமென்றும் எதுவரைக்கு இந்த நான்… நீ…. எல்லாம் இந்த உடலில் இருக்கும் உயிர் இருக்கும் வரைத் தான். 

பிடிவாதம் பிடித்து ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு மரணித்தவர்கள் சாதித்தது என்ன? நாம் மரணித்தால் நம்முடைய மரணத்தை நினைத்து வருத்தமடைந்து நமக்காக நம் சொந்தங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அண்டைவிட்டார், ஊர்காரர்கள், வெளியூர்காரர்கள் ஆகியோர் துஆ செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமா? அல்லது நம் மரணத்தால் அவர்கள் அனைவரும் “அல்ஹம்துலில்லாஹ் போய் சேர்ந்திட்டானா” என்று நம்மை பார்த்து பத்வா செய்வதை விரும்புகிறோமா? என்பதை தீர்மானிக்கும் நிலை நம்முடைய நல்ல நடவடிக்கையை பொருத்தே அமையும். 

மரணத்தை எதிர்ப்பாத்த நல்லோர்கள் வாழ்ந்தது போல் நாமும் மரணத்தை எதிர்ப்பார்த்த தூய்மையான மக்களாக நாம் வாழ முயற்சி செய்வோமாக. அல்லாஹ்வுக்கு இணை வைக்க வேண்டாம், உறவுகளை பேனவேண்டும், அண்டைவீட்டாரை மதிக்க வேண்டும், நற்காரியங்கள் நிறைய செய்ய வேண்டும். தீமைகளின் பக்கம் அறவே நெருங்க வேண்டாம். அல்லாஹ்விடம் அடிக்கடி தஃபா செய்ய வேண்டும்.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்....
M தாஜுதீன்

11 Responses So Far:

adiraimansoor said...

உமர் ரலிஅல்லாஹ்வின் வாழ்க்கைப்படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் நிம்மதி நம்மை தேடிவரும் நாம் எதிர்பார்க்கும் நிம்மதியான வழ்க்கையையும் (சொர்க்க வாழ்க்கை) நாம் அடையமுடியும்

Unknown said...

மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து சென்ற சஹாபாக்கள் வாழ்க்கை வாழ
அல்லாஹ் நமக்கு பேரருள் புரிவானாக !

ஆமீன் !

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

மரணம் சாஸ்வதம்; மாற்றுக் கருத்தில்லை. அதை எதிர்பார்த்துக் காத்திருக்கச் சொல்வதைச் சற்றே கவனமாகச் சொல்ல வேண்டும். காரணம், கையாலாகாத சோம்பேறி மனிதன் தன் இயல்பான வாழ்க்கையில் நாட்டமின்றி, ஏனென்று கேட்டால் மரணத்தை எதிர்பார்ப்பதாய் சாலிஹானவனாக ஆகிவிடுவான்.

நல்லுபதேசங்களுக்காக தாஜுதீனுக்கு நன்றி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உமர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் வாழ்வின் படிப்பினைகளை பின்பற்றி நாமும் மெளத்தை எதிர்பார்த்து நன்மைகள் மட்டும் செய்வோமாக!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மனது எத்தனை கரனம் போட்டாலும் !
மரணம் வந்தடைந்தே தீரும் !

ஒவ்வொரு ஆத்மாவுக்குக்கும் expiry date fixed ! *

* நிபந்தனைகளுக்கு உட்பட்டதல்ல !

Yasir said...

மரணம் வந்தே தீரும்...அல்லாஹ்வை அனுதினமும் புகழ்ந்து துதி பாடி அவனை தொழுகும் பாக்கியத்தை தந்தருள்வானாக..நன்றி ச்கோ தாஜூதீன்

Yasir said...

முகநூலில் வந்தது

வருங்கால IAS அதிகாரிகளே......!! அன்பு முகநூல் சகோதரர்களே.... சமுதாய நலன் சார்ந்த இந்த நல்ல செய்தியை பலருக்கும் கொண்டு செல்ல (Share செய்து அல்லது தனிப்பதிவாக போட்டு) உங்கள் முகநூல் Timeline மூலம் உதவுங்கள். சிறுபான்மைச் சமுதாய மாணவர்களுக்கு இலவச IAS பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. உரிய காலத்தில் இது பயன்படுத்தப்படாவிட்டால் வழக்கம்போல திரும்பிச் சென்று விடும்.. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதில் சேரத்தகுதி உடையோர். சென்னை மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வெளியூர் மாணவர்களுக்கு ரூ2000 உதவித்தொகையும் உண்டு.. ஆர்வமுடையோர் நமது கல்வி வழிகாட்டல் ஒருங்கிணப்பாளர் பேரா.எம்.எஃப்.கான் அவர்களைத் தொடர்பு கொள்க. அலைபேசி எண்கள் : 9840259611, 9677109759. தகவல் : பேராசிரியர் ஹாஜா கனி Source : சமுதாய உரிமை FB Page, தக்கலை கௌஸ் முஹம்மது

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் அஸ்ஸலாமு அலைக்கும்.

நேற்று ஒரு மரண அறிவிப்பை பள்ளியில் கேட்டேன். அறிவிப்பு கிட்டத்தட்ட இப்படி இருந்தது. அறிவிப்பு முடிந்த பிறகு அந்த அறிவிப்பில் ஒரு வார்த்தை என்னை சலனப் படுத்தியது. ஆனால் அந்த வார்த்தைதான் உண்மை.

மரண அறிவிப்பு:

அஸ்ஸலாமு அலைக்கும்.

முத்துபேட்டை நடுத்தெரு சி. தா அஜ்மல்கான் அவர்களின் மகனும், ஷேக்னசுருதீன் முகமது இக்பால், ஹாஜா மொய்தீன் அவர்களின் தகப்பனாரும், ஹாஜா கமால், இஸ்மாயில் கனி, ஜமால் முகமது அவர்களின் மாமனாரும், வர்த்தக ச்னக்கத்தின் முன்னாள் பொருளாளரும் ரோட்டரி சங்கத்தின் துணைத் தலைவரும் ஆன முகமது சேக்காதி அவர்கள் இன்று பகல் பனிரெண்டு மணியளவில் மவுத் ஆகிவிட்டார்கள். இன்னாளிள்ளாஹி வ இன்னா லை ராஜிஊன்.

ஜனாஸா இன்று மாலை ஏழுமணி அளவில் மொகிதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .

அறிவிப்பவர்: ஜமால் முகமது.
===================================================== .

வபாத் ஆனவரைப் பற்றிய அடையாளங்களை கவனித்து க் கொண்டே வந்தேன்.
கடைசியில் அந்த வார்த்தை " ஜனாஸா" ?

அல்லாஹ் கரீம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வ அலைக்குமுஸ்ஸலாம் இப்றாகீம் அன்சாரி காக்கா,

உயிருள்ள வரை தான் மனிதன்...உயிரற்ற உடலுக்கு ஜனஸா.. அல்லாஹு அக்பர்...

இதை மீண்டும் ஒரு முறை வாசித்து விடுங்கள் காக்கா.

காற்று ஊதப்பட்ட பலூனுக்கு அதில் உள்ள காற்று உள்ளவரைத் தான் மதிப்பு. பலூன் வெடித்து அந்த காற்று வெளியேறினால், அந்த பலூனுக்கு மதிப்பு உண்டா? அது போலவே உயிர் உள்ள நம் உடம்புக்கு உயிர் இருக்கும் வரைத் தான் மதிப்பு அந்தஸ்து, பதவி, செல்வம் எல்லாமே, அந்த உயிர் நம்மைவிட்டு சென்றுவிட்டால் நாமும் அந்த காற்றில்லா பலூன் போல் தான்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு