Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் வீட்டுத் தோட்டத்தில்...! 31

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2013 | , , , ,

மரம் நடுவதை நபி (ஸல்) அவர்கள் பல ஹதீஸ்களின் வாயிலாக ஊக்குவித்திருக்கின்றார்கள். அதனை அவர்கள் வெறும் உலகியல் நடவடிக்கையாக மட்டும் குறிப்பிடாமல்  அதனை நன்மை தரும் தர்மமாக மார்க்கத்துடன்  தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார்கள்.

‘எந்தவொரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது ஒரு பயிரை விளைவித்தால் அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது பறவையோ அல்லது விலங்கோ உண்ணும் காலமெல்லாம் அவருக்கு அது தர்மமாக அமையும். 

‘உங்களில் ஒருவரின் கையில் மரச்செடியொன்று இருக்கும் நிலையில் மறுமை வந்து விட்டது என்றிருந்தாலும் அவர் அச்செடியை நாட்டிவிடட்டும்’ (ஆதாரம் : அஹ்மத்) 

எவ்வளவு ஆழமான கருத்துக்களை இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.


‘இமாரத்’ என இப்பணி அழைக்கப்படுகின்றது. ஒரு மனிதன் இவ்வுலகில் மேற்கொள்ள வேண்டிய மூன்று முக்கிய பணிகளில் இபாதத், கிலாபத்,  இமாரத் என்பவையாகும். இதில் 'இமாரத்' என்பது பூமியை பரிபாலித்து நிர்வகித்து அதனை வளப்படுத்தும் இப்பணி சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன் தொடர்பானது. இப்பூமியை அதில் காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி மனிதன் சிறப்பான முறையில் வாழ்வதற்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கும் அதனைத் தொடர்ந்து நிலைபெறச் செய்வதற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை இஸ்லாம் ஒவ்வொரு மனிதன் மீதும் கடமையாக்கியுள்ளது.

‘அவனே உங்களைப் பூமியிலிருந்து தோற்றுவித்து அதனைப் பரிபாலிக்குமாறும் கேட்டுக்கொண்டான்’ (அல்குர்ஆன் 11 : 61). 

இவ்வாறெல்லாம் நம் இஸ்லாத்தில் மரம் வளர்ப்பின் அவசியத்தை கூறப்பட்டுள்ளது. இத்தகைய நன்மையான அரும்பணியை நம் வீடுகளிலும் பொது இடங்களிலும் நடுவதுடன் அழகிய பொழுது போக்குடன் நன்மையும் அடைய முடியும்.

இத்தகு நற்பணியில் எனது உழைப்பில் வளர்ந்த காய்கறிகளும் அதன் பலனும்.

கொண்டையிலெ பூ இடையிலெ கனி - சோளம்


சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சுட்டு உப்புடன் மிளகாதூள் லெமன் தடவியும் விளக்காரிகளிடம் அவித்து வருவதை வாங்கி கொரித்து சாப்பிட மற்றும் பிரத்யேகமாக பொழுது போக்கிக்கென்றே இதனை வறுத்து உருவகமற்ற  பாப்கார்னாகவும் விற்கப்படுகிறது.  இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.  

சோளம் அரைத்த  மாவிலிருந்து சப்பாத்தி தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மாவை பொறிக்க வேண்டிய பொருளின் மீது தூவி பொறித்தால் சுவையாகவும், எண்ணெய் அதிகம் உறிஞ்சப்படாமலும் காக்கும். இதில்  கலோரி, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம் , இரும்புசத்து, கரோட்டின் இன்னும் பல  சத்துக்கள் கலந்துள்ளன. 

கோழியுடன் சம்பந்தமே இல்லை ஆனால் - முட்டை கோஸ்


வயிற்று புண்ணை ஆற்றி, குடலுக்கு பலமூட்ட உடலுக்கு வனப்பும் வலிமையையும் தரும் நல்ல உணவு. சமைக்கும் பொழுது கூடவே மிளகும் சீரகமும் சேர்த்து சமைப்பதால்  கோஸ் கீரைகளிலுள்ள விஷத்தன்மைகள் முறியும் .அதனால் ஏற்படும் ஒவ்வாமை நீக்கும்

இதன் வண்ணமே தனி அழகு  -  கலர் முட்டை கோஸ்


இது  திருப்பூர் கோவை பகுதியில் அதிகம் கிடைக்கிறது. இதில் முட்டை கோசுக்குரிய சத்துக்களுடன் பீட்ரூட்டின் மகத்துவமும் கலந்து உள்ளது.

டைலருக்கோ, நாவிதருக்கோ சம்பந்தமில்லா காய்- கத்தரி


பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்துடன் ஃபைபர்  மாங்கனீசு , பொட்டாசியம் , ஃபோலேட் , வைட்டமின் கே , வைட்டமின் பி ,, வைட்டமின் சி , மெக்னீசியம் ,ஆகியவை உள்ளன. ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது. 

காதல் கணி எனப் பெயரும் உண்டு  - தக்காளி 


இதில் வைட்டமின் சி பொட்டாசியம் மாங்கனீசு இன்னும்  சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. இதை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரககல் உருவாகும் என்பது ஆதாரப்பூர்வமானதல்ல!

காயாக, காய்ந்ததாக, காரத்தூளாக – மிளகாய்


காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்து  உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலின் கொழுப்பைக் குறைக்க  பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்வது மட்டுமல்லாமல் சந்தோச உணர்வைத் தூண்டும் ஒருவகை சக்தியும் இதில் இருக்கிறது.

இரத்தம் ஓட நல்ல ரூட் -பீட்ரூட். 


இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் அல்சர் குணமாக, பித்தப்பையும் சுத்திகரிக்கப்பட,  நல்ல உணவு.  இதன் சாறு   அஜீரணத்தை நீக்கி மலச் சிக்கலையும் போக்குகின்றன. இதில் வைட்டமின்  A B B1 B2  C  மற்றும் கால்சியம் இரும்பு சத்துக்களும் மிகுந்திருக்கின்றன.

நிறமே இதன் தரம் - கேரட்


கேரட்  சாப்பிடுவதால் பற்கள் ஒளிர்கின்றன.கண் பார்வையை பாதுகாக்கின்றன.  இதயம்  மற்றும் வலிப்பு நோயை தடுக்கின்றன.முதுமையை பிற்படுத்தி  ஆரோக்கியமும் மினுமினுப்பும் உடைய தோள்களை பெற முடியும். இதிலும் பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின்கள் இருக்கின்றன.

உருவத்தில் பல வகை - உருளைக்கிழங்கு 


இதற்கு பூமியின் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு.உருளை சத்து மிகுந்தது. அரிசியை போன்ற மாவுப் பொருள்.  இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது.

தமிழ் பெயர் இல்லாத பூ - காலிஃப்ளவர்


சமையலில் பயன்படுத்தப்படும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும்.  காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா  சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.  இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது.  

இது நரம்பை பலமாக்குவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை அதிகம் ஏற்படாது.

தலைப்புக்கு பொருத்தம் இல்லாத- பூ


இது ரோடியம் மிளிரும் வண்ண செடிகள். நான் வளர்த்தவை அல்ல கடையில் கிளிக்கியது.

நாமும்  மரம் செடி வளர்ப்போம் மனமகிழ்வும் பெறுவோம்.

M.H.ஜஹபர் சாதிக்

31 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என் வீட்டுத் தோட்டத்தில்...
எல்லாமே என் விருப்பத்தில்... ன்னு சொல்ல வைக்கும் MHJயின் அற்புதமான வித்தியாசமான சிந்தனை !

MHJ-யின் வெள்ளை உள்ளம் போல், எல்லாமே பசுமை ! அதனுள் அசல் காய்கறிகளின் அசத்தல் தோட்டம் !

அழகான தோற்றம் !

பனிச்சறுக்கில் விளையாட வேண்டிய புள்ளை இப்படி பச்சைக் காறிகளை விதைத்து வியப்பூட்டுகிறது ! :)

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.மரத் தமிழனாக,மாறாத்தமிழனாக மாற்றான் (அயல் நாடு)தோட்டத்தில் இருந்தாலும் மகிழும் .அதை பகிரும் குணமே மணம் வீசும் தோட்டம்தான்.Mஹ்J-யுடன் நானும்(பூவோடு சேரும் நாறும்)மனம்மகிழ்கிறேன்.

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே,

அருமையான பதிவு. நான் சவுதியில் வசித்து வந்தக் காலங்களில் என் வீட்டுத் தோட்டத்திலும் பொழுதுபோக்காக தோட்டமிட்டிருந்தேன். சவுதியில் தோட்டமா? அதனால்தான் அது ரொம்ப சவாலான பொழுதுபோக்காக மாறியிருந்தது. நான் வசித்தது ஜுபைலின் ராயல் கமிஷன் பகுதியில் ஒரு வில்லாவில். அங்கு வீட்டின் பின்னால் புல்தரையும் பார்பிக்யூ உபகரணங்களும் வீட்டின் முன்னால் கார் காரேஜுக்கு இப்புறமாக சிறு தோட்டமும் இட்டிருந்தேன். அதில் பச்சை மிளகாய், தக்காளி, புதினா, மல்லி, வெந்தயக் கீரை மற்றும் ஏராளமான பூச்செடிகள் இட்டு பார்க்க ரொம்ப ரம்மியமாக இருக்கும்.

தோட்டத்தில் செலவிட்ட நேரங்கள் மனத்திற்கு மகிழ்ச்சியாகவும் புத்துணர்வாகவும் இருந்தது. அத்துடன் பிள்ளைகள் வளர்த்துவந்த லவ் பேர்ட்ஸும் சப்திக்க கீச்கீச்சென்ற சப்தத்தோடு தோட்டத்தில் ஸ்ப்ரிங்கிள்ஸின் தண்ணீர் தெளிக்கும் சப்தத்தோடும் ஒரு சூழலை கற்பனை செய்து பாருங்கள். அத்துடன் வரவேற்பறைக்கும் தோட்டத்துக்குமான சுவர் முற்றிலும் கண்ணாடியாதலால் வாழ்க்கை மிக ரம்மியமாகக் கழிந்தது. இத்தனையும் சவுதியில் என்பதுதான் ஆச்சரியம்.

அதிருக்கட்டும். காய்கறி வாங்கும் செலவில் மிச்சப்படும் துட்டும் ஊட்டுக்காரம்மாவுக்கு ஒழுங்காக அனுப்பி விடுகிறீர்களா?

நல்ல பழக்கத்தை ஊக்குவிக்கும் பதிவிற்கு மிக்க நன்றி

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே,

வளர்ப்பவரின் தன்மை
வாய்க்கப் பெறுமெனில்
உம் வீட்டு
மிளகாய்ச் செடிகளில்
இனிப்பு மிளகாய் விளைகிறதா?

தக்காளிப் பழங்களுக்கு
பட்டி பார்த்து வர்ணமடித்தீரா
இத்தனை நேர்த்தியாய் அழகாய்
உம் வீட்டுத் தக்காளி என்ன
ஆப்பிளுக்குப் பங்காளியா?

sabeer.abushahruk said...

//நானும்(பூவோடு சேரும் நாறும்)மனம்மகிழ்கிறேன்.//

கிரவுன்,

பூவோடு சேரும்
நாறும் மணக்கும்
பூவோடு பூசேர
ஊரும் மணக்கும்

ஆறோடு நீர் சேர
ஊர் செழிக்கும்
ஆரோடும் நீ(ர்) சேர
பார் சிறக்கும்!

தோழன் செடி வளர்க்க
தொடர்பில் நாமிருந்தால்
அவர் வீட்டுத் தோட்டத்தில்
நம் நட்புச் செடி தழைக்கும்!

Shameed said...

அருமையான ஹதீஸ்களுடன் அழகிய விளக்கங்கள் தோட்டம் சூப்பர்
எனக்கும் மரம் செடி கோடி வளர்ப்பதில் அதீத ஆர்வம் உள்ளது


ஊருக்குள்ளே தண்ணீ வரதுக்குள்ள இப்படி காய் கனியை காய்க்க வச்சிடியல

Unknown said...

நல்லாத்தான் வளர்த்திருக்கான் நம்ம ஜஹபர் சாதிக்

அந்த தக்காளிதான் ஏதோ ப்ளாஸ்டிக் தக்காளி மாதிரி இருக்கு

என்னதான் இருந்தாலும் நம்மஊரு அழுக்கு காய்கறிக்குதான் மவசு அதிகம்

Yasir said...

வித்தியாசமான பதிவு ....அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பணி இது....இஸ்லாம் எல்லாவற்றையும் சொல்லி தந்திருக்கின்றது.....எல்லா காய்கறிகளையும் போட்டு ராலையும் சேர்த்து + தேங்கப்பாலையும் சுவைக்கு தக்கவாறு சேர்த்தால் வருகின்ற சுவை இருக்கின்றதே ..அப்பப்பா...நற் பணி...சேமிப்பிற்க்கும் வழி ஆர்கானிக்கூட ஆரோக்கியம் பேணுகின்றீகள் சகோ.ஜெகபர் சாதிக்...வாழ்த்துக்கள்

Yasir said...

//மரத் தமிழனாக,மாறாத்தமிழனாக// மரக்கறி பயிருடுகின்றார் நண்பர்....”மரக்கறி” என்றால் மலையாளத்தில் காய்கறி......சரியா கவிச்சேட்டா ( காக்கா)

Ebrahim Ansari said...

மூன்றாம் நான்காம் வகுப்பில் இயற்கைப் பாடமும் தோட்ட வேலையும் என்று ஒரு பாடம் இருக்கும். அன்று முதல் தோட்டம் போடுவதில் ஒரு ஈர்ப்பு. இன்பம்.

இதுவரையாரும் தொடாத பொருளை அருமையாகப் பதிந்து இருக்கும் தம்பி ஜ்ஹபர் சாதிக் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

அதிலும் அந்த கத்தரிக்காய்.! . கத்தரிக்காய் இல்லாத விசேஷங்கள் எந்த மதத்தோருக்கும் இல்லை.

நீங்கள் படம் பிடித்துப் போட்டு இருக்கும் கத்தரிக்காய் ஒரு வயதுக்கு வந்த பெண் மறைப்புக்குப் பின்னால் நின்று கொண்டு இருப்பது போல் அடக்க ஒடுக்கமாக அழகாக மரியாதையாக ........ I Like It.

Ebrahim Ansari said...

//வளர்ப்பவரின்தன்மை
வாய்க்கப்பெறுமெனில்
உம்வீட்டு
மிளகாய்ச்செடிகளில்
இனிப்புமிளகாய்விளைகிறதா?

தக்காளிப்பழங்களுக்கு
பட்டிபார்த்துவர்ணமடித்தீரா
இத்தனைநேர்த்தியாய்அழகாய்
உம்வீட்டுத்தக்காளிஎன்ன
ஆப்பிளுக்குப் பங்காளியா?//

தம்பி ஜகபர் சாதிக்! தம்பி சபீர் அவர்களின் கேள்விகளுக்கு கவிதையிலேயே பதில் தேவை. அந்த பதில்கள் இப்படிக்கூட இருக்கலாம். .

எங்கள் கவிக்க்காக்காவின்
கவிதை நீர் அருந்தினால்
என் தோட்டத்தின்
மிளகாயும் இனிக்கவே செய்யும்.

சட்டிக்குப் போகும் சாபம்
வாய்க்கப்பெற்ற தக்காளிக்கு
பட்டி பார்க்கவில்லை ஆனால்
பாவத்துடன் தொட்டுப் பார்த்தேன்.
விரல்களின் மென்மையின்
வெளிச்சமாக இருக்கலாம்.

பங்காளிகள் என்போர் – நீதிமன்ற
படிக்கட்டுகள் ஏறும் காலம் – ஆதலால்
உற்றதை உரியதை அளந்து கொடுத்துவிட்டேன்.
பெற்றவன் நான்
ஆப்பிள் என்றும் தக்காளி என்றும்
பேத உரமிட்டு வளர்க்கவில்லை. .

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மச்சானின் ஆரோக்கிய கட்டுரை நம் அனைவருக்காகவும்.

வகை,வகையான செடி வளர்க்கிறோம் அதற்கு நல்ல உரமும் இடுகிறோம். மரணித்த பின் நாமே உரமாகி நமக்கு மேலே ஒரு செடி நடப்படுகிறது.

உம்மாவின் கப்ரில் அன்று யாரோ ஊன்றிச்சென்ற செடி ஒன்று இன்று முளைத்து நின்று என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறது.

sabeer.abushahruk said...

//....”மரக்கறி” என்றால் மலையாளத்தில் காய்கறி......சரியா கவிச்சேட்டா ( காக்கா)//

மலையாளிகள் "பச்சகறி" எந்நல்லோ பறையும்? மரக்கறி தமிழ் என்பதே எண்ட விசாரம்.

ஓஃப்பீஸில் கொம்ப்யுட்டர்ல நோக்கியாலும் மனசுலாக்காம், அல்லே?

sabeer.abushahruk said...

//நீங்கள் படம் பிடித்துப் போட்டு இருக்கும் கத்தரிக்காய் ஒரு வயதுக்கு வந்த பெண் மறைப்புக்குப் பின்னால் நின்று கொண்டு இருப்பது போல் அடக்க ஒடுக்கமாக அழகாக மரியாதையாக ........ I Like It.//

இந்த வர்ணனை...i like it!

sabeer.abushahruk said...

//
சட்டிக்குப் போகும் சாபம்
வாய்க்கப்பெற்ற தக்காளிக்கு
பட்டி பார்க்கவில்லை ஆனால்
பாவத்துடன் தொட்டுப் பார்த்தேன்.
விரல்களின் மென்மையின்
வெளிச்சமாக இருக்கலாம்.

பங்காளிகள் என்போர் – நீதிமன்ற
படிக்கட்டுகள் ஏறும் காலம் – ஆதலால்
உற்றதை உரியதை அளந்து கொடுத்துவிட்டேன்.
பெற்றவன் நான்
ஆப்பிள் என்றும் தக்காளி என்றும்
பேத உரமிட்டு வளர்க்கவில்லை. . //

ஆஹா...ஆஹா... நடுவர் கிடைத்தாயிற்று! இன்னும் ஏன் கவியரங்கம் துவங்கப் படவில்லை???

செடி வளர்த்து -நற்
கொடி வளர்த்து
கனியுமுன் காய் கவர்ந்து...
உண்டு புசிக்கு முன் - மனிதா
கண்டு ரசி!


m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யாண்டாப்பா கிரவ்னு !

நங்கள்ளாம் திராவிடக் கட்சிக் காரங்க தார் பூசின மோடி ஹிந்தியிலா எழுதுறோம்... நாங்களும் உங்கூட்டு எங்கூட்டு தமிழ்லதானே எழுதுறோம் !?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

யாதார்த்தமாக இன்னக்கி பார்த்து அப்பப்ப அடிக்கடி வர முடியாமெ போச்சு!
--------------

பதிவுக்குள் புகுத்தி முதல் ஊட்டத்திற்கு நன்றி நெ. காக்கா.
அதோடு பனிச்சறுக்கிலும் வருடம் ஒரு முறை வெளையாட வேண்டி இருப்பதால் தொடர் விளைச்சலுக்கு தடை போடுகிறது நாட்டின் சூழல்.
-------------------

Mr.க்ரவ்ன்: மரத்தமிழனாக, மாறாத்தமிழனாக மட்டுமல்லாமல் மண்டையிலும் தமிழ் உணர்வே மிகும் உங்களின் மணமான தமிழ் விளக்கத்தால்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


சபீர் காக்கா
நானும் வந்த காலமாக தவறாமல் திருப்தியான விளைச்சலை இங்கு பெற்றிருக்கிறேன். இதற்கு இடையூறு செய்த காரணிகள் ; ஆண்டுகொரு வீடு மாறலும், ஆண்டில் பாதி குளிரும்!

நீங்க சொன்ன மாதிரி கார்டனுக்காக செலவிட்ட நேரங்கள் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் புத்துணர்வாகவும் இருந்தது மட்டுமல்லாமல் அதிரை நிருபருக்கே குறைவாக வரவேண்டிய சூழலும் ஏற்பட்டது.

இதனால் காய்கறி வாங்குற செலவு குறையும். அதன் பலன் அருகில் தங்கி இருக்கும் சகாக்களுக்கே இலவசம்! ஊட்டுக்காரவங்களுக்கு பிச்சர் மட்டுமே காட்டுவேன்!

இன்னும் சொல்லப் போனால் தழைத்திருக்கும் செடியருகில் செல்லும் போது அதன் அசைவுகளை பார்க்கும் போது அது என்னுடன் சிரிப்பதாகவே உணர்வேன்.( காற்றில் அசைகிறது என்ற நம்பிக்கை அந்த நேரத்தில் எனக்கு வராது)

ஏற்றவாறு அனுபவத்தை அழகாய் எடுத்துச் சொல்லி அவ்வப்போது கவிமழை பொழிந்து வீரியமூட்டி சிறப்பித்தமை ரொம்ப மகிழ்சி!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//ஊருக்குள்ளே தண்ணீ வரதுக்குள்ள இப்படி காய் கனியை காய்க்க வச்சிடியல//

தண்ணி வரமுன்னாடி இங்கே என்றால் ஆத்தோரத்திலே இருக்குற எங்க வீட்டிலையும் புள்ளைகளிடம் சொல்லி தண்ணி வந்த பலனையும் அனுபவிப்போம்ல!

தங்கள் நல் வரவுக்கு நன்றி ஹமீதாக்கா!
--------------


நல்லா தான் வளருது இங்கே நன்றி ஜபருல்லா!
அழுக்கு காய்கறி காய்கறி மீது மெளசு கொண்ட உங்களுக்கு எங்க சிரிக்கும், மிளிரும் கனிகளை பார்த்தா பிளாஸ்டிக்காகவும் தெரியும். ஏப்ரல் மேயிலே பசுமையே துவங்கும் போது தந்தி அடிக்கிறேன் அப்ப்ப வந்து பிளாஸ்டிக்கா இல்ல பசுமையா 'னு பாத்துட்டு போங்க!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மரியாதைக்குரிய இ.அ .காக்கா உங்களின் மேலான ஊட்டம் தரும் வரவு இனிக்கிறது!

எனக்காக சபீர் காக்காவுக்கு நீங்களே கவியுருவாக்கிய பாங்கு.. I like it.

சபீர் காக்காவிடம் கவிநீர் பெற்று
சத்தான வீரியம் நீங்க தந்து
காய்க்கும் மிளகாய் மட்டுமல்ல
கசப்பான பாகக்காயும் சுவைக்கும் கண்டிப்பாய்!

நான் வளர்த்த தக்காளியும்
என்னருகாமை கண்டு
ஒளிருகையில் போலியென
சிலரின் வினவல் ஏனோ!

பறிப்பதில் புசிப்பதை
வசிக்கும் வீட்டினர் முதற்பட
அக்கம்பக்க குடியிருப்பு
அதிரையர் உட்பட மகிழ்வர்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சுண்டி இழுக்கும் உணவுக்கு மெனுவுடன் வந்த சகோ. யாசிர் நன்றி. பயணங்கள் தொடர்வதெப்போது?

Vegetable நம் தமிழில் காய்கறி,
.......அண்டை நாட்டுத் தமிழில் மரக்கறி
.....................அண்டை மாநில மொழியில் பச்சக்கறி
-------------------

நெய்னாவின் வரவுக்கு நன்றி, தொடரட்டும் வரவு!

வகை,வகையான செடி வளர்க்கிறோம் அதற்கு நல்ல உரமும் இடுகிறோம். மரணித்த பின் நாமே உரமாகி நமக்கு மேலே ஒரு செடி நடப்படுவதே இவ்வுலக மனித கதையாக உள்ளது.

அன்று ஊன்றிச் சென்ற செடி ஒன்று இன்று முளைத்து நிற்பதை மறுமை வாழ்வு சிறக்கிறது என நம்புவோம். அதுபோல் முன் சென்று விட்டேன். உங்கள் மறுமைக்கு அல்லாஹ்வை முறையாக வணங்குவதுடன் சென்று விட்ட எங்களுக்காக துஆவும் தருமமும் செய்வது மட்டுமே எங்களுக்கு பலன் என்றும் உங்களுடன் இருக்கும் சகோதர மனைவி மக்களுடன் மகிழ்வுடன் இருங்கள் என்றும் சொல்வதாக நம்புவோம். ஆமீன்.

Ebrahim Ansari said...

https://www.facebook.com/photo.php?fbid=657254697658500&set=gm.550369311723011&type=1

வீடு மாடியில் தோட்டம் போடலாம்.

ZAKIR HUSSAIN said...

எம் ஹெச் ஜே கைக்கு போட்ட விதை எல்லாம் பலன் தரும்.

adiraimansoor said...

///இன்னும் சொல்லப் போனால் தழைத்திருக்கும் செடியருகில் செல்லும் போது அதன் அசைவுகளை பார்க்கும் போது அது என்னுடன் சிரிப்பதாகவே உணர்வேன்.( காற்றில் அசைகிறது என்ற நம்பிக்கை அந்த நேரத்தில் எனக்கு வராது)///


எம் ஹெச் கலக்கிட்டிய போங்க என்ன அற்புதமான கண்ணோட்டம் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனை கான்போம் என்பார்கள் சிலர்

ஆனால் நீங்களோ செடிகளின் அசைவில் சிரிப்பினைக்காண்போம் என்கின்றீர்கள் உண்மையிலேயே புதிய சிந்தனை புதிய கண்ணோட்டம் செடிகளின் அசைவைப் பார்க்கும்போது அது தன்னைப்பார்த்து சிரிப்பது போன்ற தோற்றம் மிக அருமையான வாசகம் இந்த வாசகம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

காய்கறி கடைக்கே போகவேண்டியதில்லே, சொந்த வளர்ப்பு,
மாஷா அல்லாஹ், அருமையான விளக்கத்துடன்கூட காய்கறி தோட்டம்.

Unknown said...

உண்மையிலேயே அந்த அழுக்குக் காய்கறிகளை நானும் மிஸ் பன்னுகிறேன்.. இங்கேயும் தூரத்தில் இருந்து பார்க்கும்போது ப்ளாஸ்டிக் காய்கறிபோலத்தான் இருக்கும்

எலுமிச்சை பழமே ஆரஞ்சு அளவுக்கு பெரிதாக உள்ளது. பாதி தக்காளியில் கறி வைத்துவிட்டு பாதி தக்காளியை அடுத்த நாள் கறிக்கு உபயோகிக்கும் அளவுக்கு பெரிது.

அந்த ஊட்டி கேபேஜ் என ஊரில் அழைக்கும் நீ வளர்த்துள்ள முட்டைகோஸ் சலாடுக்கு நன்றாக இருக்கும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜாஹிர் காக்கா, மன்சூர் காக்கா, சகோ. மாலிக்: உங்களின் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி!

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் M.H.ஜஹபர் சாதிக் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தங்களின் அழகிய தோட்டம் அழகாக இருக்கிறது. அழகிய மனம் போல் அழகிய தோட்டம்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

தமிழன் வளர்த்த ஆங்கில காய்கறிகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வ அலைக்கு முஸ்ஸலாம். மனம் நிறைந்த கமென்டுக்கு நன்றி அலாவுதீன் காக்கா!,
தேங்க்ஸ் சபீர் மச்சான்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு