நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மண்டியிட மறுத்த மருத நாயகம்..2 16

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, மே 31, 2014 | ,

தொடர் – 26
மருதநாயகம் என்கிற கான் சாகிப் என்று அழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் அவர்களுடைய இந்த வரலாற்றின் முதல் அத்தியாயம் ,  அவர் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் எவ்வாறெல்லாம் உதவிகரமாக இருந்தார் என்பதை பற்றிப் பேசியது. அதன் பின் அவர் உரிமைக்குரல் எழுப்பும் வீரமகனாக மாறிய வரலாற்றை இந்த இரண்டாம் அத்தியாயம் சொல்லும். முதல் அத்தியாயத்தில் அவர் அன்னியர் இட்ட ஏவல்களைச் செய்யும் – இன்னும்  சொல்லப்போனால் அவர்களுடைய அடியாட்களில் ஒருவராகவே வாழ்ந்தார். அந்நிய ஆதிக்க சக்திகளின்  கட்டளைக்குக் கட்டுப்பட்ட ஒரு வேட்டை நாயாகவே மருதநாயகம் வாழ்ந்தார் அதன் மூலம் ஏற்றமும் பெற்றார். என்பதுதான் அவரது வாழ்வின் முதல் பக்கம். இது ஒரு வகையில் துரதிஷ்டமே . அதே நேரம் யாவும் இறைவனின் கட்டளைப்படித்தான் நடக்கிறது. ஒரு கொலைகார பாதகன் என்று அறியப்பட்டவன் கூட இறைவனின் நாட்டம் இருந்தால் நல்ல ஆட்சியாளனாக  மாறிவிட இயலும். அப்படித்தான் இறைவனின் நாட்டமானது, அன்னியர்  கைகளில் பொம்மையாக இருந்த  கான் சாகிபை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது. 

மதுரை மற்றும் திருநெல்வேலி சீமைகளை உள்ளடக்கிய தென் மண்டலத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட கான் சாகிப் , தனது ஆட்சித்திறமையாலும் மனிதாபிமான நடவடிக்கைகளாலும் மக்களின் மனம் கவர்ந்தார். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்"  என்ற பாடலுக்கு இலக்கியமாக பல நற்பணிகளைச் செய்து கருணையும் காருண்யமும் மிக்க கள நாயகராக கான் சாகிப் பவனி வந்தது ஆற்காட்டு நவாபுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. தான்  உருவாக்கிய ஒரு சாதாரண சிப்பாய்,  இப்படி கவர்னராகி கலக்கிக் கொண்டிருப்பது ஆற்காட்டு நவாப்பின் நல்ல பாம்புக் கண்ணை உறுத்தியது. அந்த ஆற்காட்டுப் பாம்பு படமெடுத்து ஆட  ஆரம்பித்தது. 

ஒரு மரம்,  மனிதனைப் பார்த்து, "நீ என்னை செடியாக நட்டு இருக்கலாம்; எனக்கு நீரும் ஊற்றி இருக்கலாம் ; அதற்காக நான் உன்னைவிட உயரமாக வளரக் கூடாதா ?" என்று கேட்டதாம். 

இதே மனநிலைதான் கான்சாபிடமும் உருவானது. இதனால் ஆற்காட்டு நவாபுக்கும் கான் சாபுக்கும் பனிப்போர் தொடங்கியது. வரலாற்றின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் ஒருவருக்கொருவர் ஆயுதப் போரை ஆரம்பித்து வைப்பது மனத்தளவில் ஏற்படும்  பனிப்போர்தானே! அதே கதைதான் இங்கும் ஆரம்பமானது.  

கான் சாகிப் கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு நவாபுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் வருவாயும் வரிவசூலும் பெருகினாலும்,  கான் சாகிப் அந்த வட்டாரங்களில் பெரிய மனிதராக உருவாவது இருவருக்கும் பிடிக்கவில்லை. இதனால் பெரும் ஆபத்து வரலாம் என்று கருதினார்கள்.  பொறாமை கொண்ட ஆற்காட்டு நவாப்,  கான் சாகிபின் செல்வாக்கைக் குறைக்கவும் கட்டுப் படுத்தவும் காய்களை நகர்த்தத் தொடங்கினார். கான் சாகிப் வசூலிக்கும் வரித்தொகையை ஆற்காட்டு நவாபாகிய அவரிடமே நேரடியாக செலுத்த வேண்டுமெனவும் வணிகர்களும் மற்றவர்களும் கூட  அவர் மூலம்தான் வரிசெலுத்த வேண்டுமென்றும் ஒரு  புதிய உத்தரவைப் பிறப்பித்தார். இதற்காக கிழக்கிந்தியக் கம்பெனியிடமும் போட்டுக் கொடுத்து அதற்கான அனுமதியும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஆற்காட்டு நவாபின் இந்தச் செயல் கான் சாகிபுக்கு எரிச்சலூட்டியது. 

தனது எரிச்சலை கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கான் சாகிப் எடுத்துரைத்தபோது அவர்கள் அளித்த பதில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது. கான் சாகிப்  கவர்னராகவே இருந்தாலும் ஆற்காட்டு நவாபுக்குக் கட்டுப்பட்ட பணியாளர்தான் என்று கூறியது கிழக்கிந்தியக் கம்பெனி. அவர்களது இந்த பதில் கான் சாகிபின் உள்ளத்தில் அவரது சுயமரியாதையை அசைத்துப் பார்த்தது. ஆஹா ! தவறு செய்துவிட்டோமே  இதுவரை பாம்புகளுக்குப் பால் வார்த்து இருக்கிறோமே! என்று உணர வைத்தது. அதனால் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்த உத்தரவை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கினார் கான் சாகிப். இதனால் யார் இருவரின் கைப்பாவையாக இதுவரை செயல்பட்டாரோ அவ்விருவருக்கும் கான் சாகிப் எதிரியாகிவிட்டார். இதனால் ஆற்காட்டு நவாபுக்கும் கான் சாகிபுக்கும் இடையே பகைமைப் பயிர் தழைத்து வளர ஆரம்பித்தது. 

அந்த நேரம் டில்லியின் அரசுப் பிரதியாக இருந்த ஷாவும் ஹைதராபாத் கிமாம் அலியும் கான் சாகிபின் உதவிக்கு வந்து கிழக்கிந்தியக்  கம்பெனியிடம் கான் சாகிபுக்காக வாதாடினார்கள். சட்டபப்டி , கான் சாகிப்தான் மதுரை மற்றும் தென் மண்டலத்துக்கு கவர்னர் என்று அவர்கள் வாதாடியதை கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்க மறுத்தது.  

ஏற்கனவே செலுத்திக் கொண்டிருந்த ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்பதை ஏழு லட்சம் என்று அதிகரித்து செலுத்திடவும் ஆனால் தனது தனது சுதந்திர அதிகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்றும் கான் சாகிப் ஒரு சமரச திட்டத்துக்கு முன்வந்தார். ஆனால் அவரது இந்த அதிகரித்த தொகையைக் கூட ஏற்க நவாபும் கம்பெனியும் மறுத்துவிட்டனர். இதெற்கெல்லாம் அடிப்படைக் காரணம் , தங்களை விட மக்களின் செல்வாக்குப் பெற்று ஒருவன் நாயகனாக  உருவாவதை அவர்கள் விரும்பவில்லை என்பதுதான். அத்துடன் தென் மண்டலத்தில் இருந்த சில இனத்தைச் சேர்ந்த வணிகர்கள், கான் சாகிப் மீது பொறாமை கொண்டு கான் சாகிப் பிரிட்டிஷாருக்கு எதிராக மக்களைத் தூண்டியும் திரட்டியும்   வருவதாகவும் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு உணர்வை  மக்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும் குலத்தொழிலின்படி  “கோள்”மூட்டி விட்டனர்.  

இந்தப்  பூசாரிகள் போட்ட சாம்பிராணிக்கு பிரிட்டிஷ் நிர்வாகப் பேய்  ஆட ஆரம்பித்தது .  கேப்டன் மேன்சன் என்ற மனுஷனை அழைத்து கவர்னர்  கான் சாகிபை  கைது செய்து கொண்டுவரும்படி உத்தரவிட்டனர். இந்த செய்தியறிந்த கான் சாகிபின் உள்ளத்தில் உறங்கிக்  கொண்டிருந்த தன்மானச் சிங்கம் சிலிர்த்து  எழுந்தது. ஆயிரம் ஆனாலும் சுதந்திரம் சுதந்திரம்தான் அடிமைத்தனம் அடிமைத்தனம்தான் என்று உணர ஆரம்பித்தார்.  இந்த உணர்வின் உந்து சக்தியின்   விளைவாக கவர்னர் கான் சாகிப் தன்னை மதுரைக்கு மன்னராக அதாவது மதுரையின் சுதந்திர  சுல்தானாக தன்னைப் பிரகடனபடுத்தி, அந்தப் பகுதி முழுதும் தனது ஆளுமைக்கு உட்பட்டது இதில் அன்னியர் வந்து புக இயலாது என்று பிரகடனப் படுத்தினார். தான் இனி தானே சுயமாக இயங்கும் -   யாருடைய தளைக்கும் உத்தரவுக்கும் கட்டுப்படாத சுதந்திர சுல்தான் என்று ஊரெங்கும் அறிவித்தார். 

இப்படி அறிவித்துக் கொண்டதற்கு ஆற்காட்டின் தரப்பிலிருந்து ஆங்கிலேயர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வருமென்று எதிர்பார்த்த கான் சாகிப் தனக்கு ஆதரவாக தோளோடுதோள் நின்று போராட  27,000 வீரர்களைக் கொண்ட பலமான படையையும் தயாராகத் திரட்டினார்.  எதிர்க்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில் சில பிரெஞ்சு நாட்டு வீரர்களும் கான் சாகிபுடன் அவருக்கு ஆதரவாக அணிவகுத்தனர். 

ஆனால் ஆங்கில ருசி கண்ட பூனை அவ்வளவு சுலபமாக தனது மண்ணாசையையும் சுளையாகக் கிடைத்துக் கொண்டிருந்த வரி வசூல் தொகையையும்  விட்டு விடுமா? 1763 செப்டம்பர் மாதம் கலோனியல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்க திரண்டது ஆங்கிலேயருக்கு ஆதரவான படை.  இதற்கு முன் ஆங்கிலேயருக்கு ஆதரவாக யார் யாரையெல்லாம் கான் சாகிப் தாக்கி தனக்கு எதிரியாக்கிக் கொண்டாரோ அந்த பாளையக்காரர்களும் தஞ்சை, திருவிதாங்கூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் , சிவகங்கை ஆகிய அனைத்து சமஸ்தான்களும் கான் சாகிபை பழிவாங்கவும்  ஆங்கிலேயருக்கு  பயந்து கொண்டும்  தங்களின் படைகளை  அனுப்பினர். இவர்களுடன் நவாபின் படையும் சேர்ந்துகொண்டு ஒரு பெரும் கூட்டமே கான் சாகிபுக்கு எதிராக கரம் கோர்த்தனர். இந்த சண்டை  22 நாட்கள் நீடித்தது . ஆனால் ஆங்கிலேயருக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. அவர்கள் தரப்புக்கு பலத்த  சேதத்தை உண்டாக்கினார் கான் சாகிப் 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். ஆங்கிலப் படையும்  அதன் ஆதரவுப் படைகளும்  நிலை குலைந்து பின் வாங்கின.

தோல்வி முகம் கண்டு கொண்டிருந்த ஆங்கிலப் படை தனது தோல்வியைத் தவிர்க்க பம்பாய் மற்றும் சென்னையிலிருந்து பல எண்ணிக்கையிலான பெரும் படைகளைக் கொண்டு வந்து குவித்து மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது.  ஆனாலும் இவ்வளவு முயற்சிகளுக்குப் பின்னரும் கூட  ஆங்கிலேயருக்கு வெற்றி கிட்டவில்லை. முற்றுகை இடப்பட்ட கான் சாகிபின்  மதுரைக் கோட்டைக்குள் இத்தனை படைகளின் ஈ காக்காய் கூட நுழைய முடியவில்லை. பதிலுக்கு ஆங்கிலேயரின்  படையில் 160 பேர்கள் பலியானார்கள். இதனால் போரில் பொருதி கான் சாகிபை வெற்றி கொள்ள இயலாது குள்ளநரித்தனமே குணமுள்ள மருந்து என ஆங்கிலேயர் நினைக்கத் தொடங்கினர்.  

ஆகவே கோட்டைக்குள் செல்லும் உணவையும் குடிநீரையும் நிறுத்தினார்கள். இதன் காரணமாகக்  கோட்டைக்குள் இருந்த வீரர்களிடையே ஆங்கிலேயர் நினைத்தபடி குழப்பமும் மனச் சோர்வும் ஏற்பட்டது. கான் சாகிப் எப்படியாவது உயிருடன் எங்காவது தப்பித்து  போய்விடலாம் என்று போட்ட திட்டமும் நிறைவேறாமல் போனது.  இதனால் உடனிருந்த பிரெஞ்சு நாட்டுத் தளபதி  கான் சாகிப்பிடம் சரணடைந்துவிடும் திட்டம் ஒன்றைக் கூறினான். இதனால் கோபமுற்ற கான் சாகிப் பிரெஞ்சுக் காரனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் . வெள்ளைக்காரனின் கன்னத்தின் கீழ் வானம் சிவந்தது. இதன் காரணமாக கூட்டணிக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டது. கான் சாகிபின் இந்தக் கோபம் அவரது அழிவுக்குக் காரணமாக இருந்தது. 

கோட்டைக்குள் இருந்தபடியே பிரெஞ்சுத் தளபதி சிவகங்கை தளபதி தாண்டவராயப் பிள்ளை மூலமாக எதிரிகளைத்   தொடர்பு கொண்டு மதுரைக் கோட்டையில் திவானாக இருந்த சீனிவாசராவ் பாபா  சாஹிப் ஆகியோருடன் சதித்திட்டம் தீட்டி கான் சாகிபைப் பிடித்துக் கொடுக்க சம்மதித்தான்.  1764 அக்டோபர்  13 ஆம் நாள்  முகமது யூசுப்கான் ஆகிய கான் சாகிப்  காலைத்தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது முதுகுக்குப் பின் திரண்ட அந்த நம்பிக்கை துரோகிகள் கான் சாகிபை அவர் தலையில் கட்டியிருந்த முண்டாடாசைத் தரையில் தட்டிவிட்டு உதறி,  அதைவைத்து கான் சாகிபின் கையும் காலையும் கட்டிப் போட்டனர். உடனே கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டு ஆங்கிலப் படை உள்ளே நுழைந்தது. கர்ஜித்துக் கொண்டிருந்த கான் சாகிப் இப்படி சூழ்ச்சியாலும் துரோகத்தாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு  கைது செய்யப்பட்டார். 

15-10-1764 ஆம் நாள் மதுரையில் சம்மட்டிபுரத்தில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவ முகாமில் அமைக்கபட்டிருந்த தூக்கு மேடை!  ஆற்காட்டு நவாப் அணி சூழ்ந்திருக்க  கண்ணைக் கட்டிக் கொண்டுவரபப்ட்ட கான் சாகிப் அங்கிருந்த தூக்குமரத்தில் தூக்கிலடப்பட்டார். 

இந்தக் கொடுமை இத்துடன் நிற்கவில்லை. இறந்து  விறைத்துப் போன கான் சாகிபின் உடலின் பாகங்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டன. இறந்து போன பின்னும் கூட கான் சாகிபின்  உடலைப் பார்க்கவே ஆங்கிலேயரும் பாளையக்காரர்களும் அஞ்சினர். கான் சாகிபின் தலை துண்டிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டது. கைகள் துண்டாக்கபப்ட்டு பாளையங்கோட்டைக்கும் கால்கள் தஞ்சாவூருக்கும்  திருவிதாங்கூருக்கும் ஆளுக்கொன்றாக அள்ளிக் கொண்டு போனார்கள். கான் சாகிபின் தலையும் கைகளும் கால்களும் இழந்த நடு உடல் பகுதி மட்டும் அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் புதைக்கப்பட்டது. 

அவர் புதைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1808 ல் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு கட்டிடம் எழுப்பப்பட்டு ஒரு தர்கா போல இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.. கான் சாகிப் பள்ளிவாசல்  என்று சம்மட்டிபுரத்தில் அழைக்கப்படும் அந்தப் பள்ளியின் அருகிலேயே தொழுகை நடத்தும் பள்ளியும் ஷேக் இமாம் என்பவரால் கட்டிக் கொடுக்கப் பட்டு திகழ்ந்து வருகிறது.  

மகுட முடிடால் விருதிலங்க
மதயானை வளர்த்தெடுத்த வரிவேங்கைக் குட்டி
விகடமிடுவோர்கள் குல காலன்
விசையாலீம் குலம் விளங்க வரு தீரன்

என்றெல்லாம்  தென்பகுதிச் சீமையில் பாடப்படும் கிராமியப்  பாடல்களில் மருத நாயகத்தின் புகழ் பாடப்பட்டு வருகிறது.   

மருதநாயகம் கான் சாஹிப்  அவர்களின் வரலாற்றைப் படிக்கும் போது அவர் நல்லவரா கெட்டவரா என்று கமலஹாசனைப் பார்த்து ஒரு சிறுவன் கேட்பதுபோல்தான் நாம் கேட்க வேண்டுமென்று நமக்குள் தோன்றுவது இயல்பான கேள்விதான்.  காரணம் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயரின் படைவீரராக அவர்களிட்ட கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துப் பணியாற்றிய  கான் சாகிப் , பின்னாளில் தனக்கே ஒரு நெருக்கடிவரும்போதுதான் சுதந்திரப்  போராட்ட வீரராக மாறினார். ஆனாலும் தான் செய்த தவறை உணர்ந்தது அந்நியன் அந்நியன்தான் என்ற உணர்வுடன் அவரது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் அவர் மேற்கொண்ட நற்பணிகளையும் இறுதி நாட்களில் எதிரிக்கு மண்டியிட மறுத்து எதிர்த்துப் போராடிய வீரத்தையும் மறைந்த  பின்னும் அவரது உடல்கூட சின்னா பின்னபடுத்த பரிதாபத்துக்குரிய வரலாற்றுச் செய்தியையும் காணும்போது , விடுதலை வீரர்களின் பட்டியலில் மண்டியிட மறுத்த மருத  நாயகத்தின்  பெயரையும் நமது உதடுகள் உச்சரிக்கின்றன.    

இறைவனருளால்  நிறைவுற்றது. 

அன்புகாட்டிப் படித்த அனைவருக்கும் நன்றி. 

இபுராஹீம் அன்சாரி
ebrahim.ansari@adirainirubar.in
==================================================================
எழுத உதவியவை : 
திரு. ந.ராசையா எழுதிய “ மாமன்னன் பூலித்தேவன் “
திரு. ந.ராசையா எழுதிய “ இந்திய விடுதலைப் போரின் முதல் முழக்கம்”
ஹுசைனி எழுதிய “பாண்டியர்களின் வரலாறு” 
மஹதி எழுதிய “ மாவீரர் கான்சாகிப்.”
Yusuf Khan the Rebel Commander by S Charles Hill.
திரு.  எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் எழுதிய வீர விலாசம் எனும் நூல்.

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 71 3

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, மே 30, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

அல்லாஹ் கூறுகிறான் :

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத்தோழருக்கும், நாடோளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் : 4:36)

''அபூதர்(ரலி) அவர்களிடம் அழகிய மேலாடை இருக்கக் கண்டேன். அவரது ஊழியரிடமும் அதே போல் அழகிய மேலாடை இருக்கக் கண்டேன். இதுபற்றி அவர்களிடம் கேட்டேன் அப்போது அவர்கள், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் தாம் அடிமை ஒருவரை ஏசியதாகவும், அவரின் தாயார் பற்றி பழித்துக் கூறியதாகவும் கூறிவிட்டு, அப்போது நபி(ஸல்) அவர்கள் ''(அபூதர்ரே!) நீர் இன்னும் அறியாமைக் காலத்தவராக உள்ளீர். அவர்கள் (அடிமைகள்) உங்களின் சகோதரர்கள் ஆவர். உங்களின் கைகளுக்கு கீழே அவர்களை அல்லாஹ் ஒப்படைத்து உள்ளான். எனவே தன் கையின் கீழ் தன் சகோதரர் இருந்தால், தான் சாப்பிடுவதிலிருந்து அவருக்கு உண்ணக் கொடுக்கட்டும்! தான் உடுத்திய ஆடை போல் உடுத்தக் கொடுக்கட்டும்! அவர்களால் இயலாத ஒன்றைச் செய்யக் கூறி, அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். அவர்களுக்கு சிரமமான வேலை தந்தால், அவர்களுக்கு துணையாக நீங்களும் உதவுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: மஹ்ரூர் இப்னு சுவைத் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1360)

''உங்களில் ஒருவருக்கு, அவரது ஊழியர் உணவைக் கொண்டு வந்து கொடுத்ததும், அவரை தன்னோடு உட்கார வைக்க இயலவில்லையானால், (ஊழியரான) அவருக்கு அதில் ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் உணவைக் கொடுத்து விடட்டும். ஏனெனில், அவர்தான், இவரின் உணவைச் (சமைக்க) சிரமம் மேற்கொண்டார்''  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1361 )

''குழப்பம் நிறைந்த காலத்தில் வணங்குவது, என்னிடம் ஹிஜ்ரத் செய்து வருவது போலாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: மஹ்கல் இப்னு யஸார் (ரலி) அவர்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1366)

கடனை நிறைவேற்றுதல், கடனை மன்னித்தல்

அல்லாஹ் கூறுகிறான் :

நீங்கள்  எந்த நன்மையைச் செய்தாலும், அல்லாஹ் அதை நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:215)

என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் : 11:85)

''ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தன் கடனைத் திருப்பித் தரும்படிக் கேட்டு கடுமையாக நடந்து கொண்டார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள், ''அவரை விட்டு விடுங்கள். (கடன் தந்த அவருக்கு) உரிமை காரணமாக ஏதேனும் பேசிட அனுமதி உண்டு'' என்று கூறிவிட்டு, பின்பு ''அவர் தந்த ஒட்டகை போன்ற ஒரு ஒட்டகையை அவருக்கு வழங்குங்கள்''என நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! அந்த ஒட்டகையை விட மிக உயர்ந்த ஒட்டகையே எங்களிடம் உள்ளது'' என்று நபித்தோழர்கள் கூறினர். அதையே கொடுங்கள் நிச்சயமாக உங்களில் சிறந்தவர், அழகிய முறையில் கடனை நிறைவேற்றுபவரே'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1367)

''விற்கும் போதும், வாங்கும் போதும் கடனை வசூலிக்கும் போதும், மென்மையாக நடக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.  (அறிவிப்பவர்: ஜாபிர்  (ரலி) அவர்கள் (புகாரி) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1368)

''மறுமை நாளின் சிரமங்களை விட்டும் அல்லாஹ் தன்னைக் காப்பாற்றிட விரும்புகின்றவர், (தம்மிடம் கடன் பெற்ற) ஏழைக்கு கால அவகாசம் அளிக்கட்டும்! அல்லது அவருக்கு விட்டுக் கொடுத்து (தள்ளுபடி செய்து) விடட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1369)

''ஒருவர் மக்களுக்கு கடன் வழங்குபவராக இருந்தார். அவர் தன் ஊழியரிடம், ''நீ கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்படுபவரிடம் சென்றால் அவருடைய கடனை தள்ளுபடி செய்து விடு! இதனால் அல்லாஹ் நம்மை விட்டும் (குற்றத்தை) தள்ளுபடி செய்யக் கூடும்'' என்று கூறினார். (மரணத்திற்குபின்) அல்லாஹ்வை அவர் சந்தித்தபோது, அவரை விட்டும் அவரின் குற்றங்களை அல்லாஹ் தள்ளுபடி செய்து விட்டான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1370 )

''உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒருவரிடம் (மறுமை நாளில்) கேள்வி – கணக்கு கேட்கப்படும். அப்போது அவரிடம் நன்மை எதுவும் இருக்காது. ஆனால், அவர் மக்களிடம் கொடுக்கல் - வாங்கல் செய்து கொண்டு, வசதியாக வாழ்ந்து வந்தார். (அத்தோடு) துன்பப்படுவோருக்கு கடனை தள்ளுபடி செய்திட தன் ஊழியர்களுக்கு கட்டளையிட்டு இருந்தார். (இதன் காரணமாக) ''தள்ளுபடி செய்வதில் இவரை விட நானே அதிக தகுதி வாய்ந்தவன். அவரின் பாவங்களை தள்ளுபடி செய்யுங்கள் என அல்லாஹ் கூறுவான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்பத்ரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1371 )

''அல்லாஹ் தன் அடியார்களில் ஒரு அடியாருக்கு செல்வத்தை வழங்கி இருந்தான். அவரிடம் (மறுமையில்) ''உலகில் என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அல்லாஹ்விடம் எவரும் எதையும் மறைக்க மாட்டார்கள். அவன், ''இறைவா! எனக்கு உன் செல்வத்தை வழங்கி இருந்தாய்.  அதன் மூலம் மக்களிடம் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். தர்மம் வழங்குவது, என் குணத்தில் இருந்தது.

வசதியானவர்களிடம் இலகுவாக நடந்து கொண்டேன். துன்பப்பட்டவனுக்கு கால அவகாசம் அளித்தேன்!'' என்று கூறுவார். அப்போது அல்லாஹ், ''நான் உன்னை விட (விட்டுக் கொடுக்க) தகுதியானவன். என் அடியாரின் (பாவங்களை) தள்ளுபடி செய்யுங்கள்'' என்று கூறுவாhன்.

உக்பா இப்னு ஆமிர் (ரலி), அபூமஸ்ஊத் அன்சாரீ (ரலி) இருவரும் ''இவ்வாறே நபி(ஸல்) அவர்களிடமிருந்து நாங்கள் கேட்டோம்'' என்று கூறினர். (அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1372 )

''சிரமப்படும் கடனாளிக்கு அவகாசம் அளித்தால், அல்லது கடனை தள்ளுபடி செய்தால் அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் தன் அர்ஷுக்கு கீழே நிழல் அளிப்பான். அந்நாளில் அவனது நிழலைத்தவிர வேறு நிழல் இருக்காது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1373 )

''நபி(ஸல்) அவர்கள் ஓர் ஆண் ஒட்டகையை என்னிடம் விலைக்கு வாங்கினார்கள். அதற்கான கிரயத்தை (காசுகளை) நிறுத்துக் கொடுத்தார்கள். அப்போது சற்றுக் கூடுதலாக திருப்பித் தந்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1374 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்

அலாவுதீன் S.

புதிய மத்திய அரசு எதிர் நோக்கியுள்ள சவால்கள்.- 2 11

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், மே 29, 2014 | , ,

இந்தத் தலைப்பில் கடந்த வாரத்தில் நாம் விவாதித்த போது, இப்போது பதவி ஏற்றுள்ள புதிய மத்திய அரசு எதிர் கொள்ள இருக்கும் பல சவால்களைப் பட்டியலிட்டுக் காட்டி இருந்தோம். அவைகளில் பல சவால்கள் பொதுவாக எந்த அரசு பதவிக்கு வந்தாலும் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்தான். இப்போது பொறுப்புக்கு வந்துள்ள நரேந்திர மோடியின் அரசுக்கென்று பிரத்தியேகமாக - சில சவால்களை மட்டும் இந்த அத்தியாயத்தில் விவாதித்து நிறைவு செய்யலாம். 

காரணம், மற்ற எந்த அரசையும் விட நரேந்திர மோடியின் அரசு உண்மையிலேயே சில வித்தியாசமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சரவைப் பட்டியலைப் பார்த்தாலே இது ஒரு வித்தியாசமான அரசு என்பதையும் வித்தியாசமான சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற அரசு என்பதையும் நாம் உணரலாம். நரேந்திர மோடியின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவை நாடு முழுதுக்குமான மாநிலங்களுக்கு சரிநிகர் சமமானமான பிரதிநிதித்துவம் இல்லாத அமைச்சரவையாக அமைக்கப் பட்டிருப்பது ஒரு ஆரம்ப வித்தியாசம். அத்துடன் தனித்தனி அமைச்சர்களால் கையாளப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஒரே அமைச்சரிடம் இணைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது இன்னொரு வித்தியாசம். உதாரணமாக, அருண் ஜெட்லி வசம் நிதி மற்றும் இராணுவத்துறைகள் தரப்பட்டு இருப்பதாகும். 

 உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியமான எட்டு துறைகள் ஒதுக்கப்பட்டும் அதற்கு அண்டை மாநிலமான பீகாருக்கு அதே போல ஐந்து அமைச்சர்களை ஒதுக்கி இருக்கும் முடிவைப் பார்க்கும் போதும் மராட்டிய மாநிலத்துக்கும் நான்கு அமைச்சர்களை பதவியில் அமர்த்தி இருக்கும் போதும் தென் இந்தியாவுக்கு வழங்கப் பட்டு இருக்கிற அமைச்சரவைப் பிரதிநிதித்துவம் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. கேரளத்திலிருந்து ஒரு அமைச்சர் கூட இல்லை; தமிழ் நாட்டுக்கு ஒன்றே ஒன்று; ஆந்திராவுக்கு ஒன்றே ஒன்று; கர்நாடகத்துக்கு இரண்டு மட்டுமே என்று அமைச்சரவையில் வெளிப்படையாக தென்னகம் புறக்கணிக்கப் பட்டிருப்பது “வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது ! “ என்று ஒரு காலத்தில் எழுந்த கோஷம் மீண்டும் எழுப்பப்பட வேண்டிய அவசியத்துக்கு நாட்டைத்தள்ளி இருக்கிறதோ என்று எண்ண வேண்டி இருக்கிறது. 

அதே நேரம் தனது கட்சி, அதிக உறுப்பினர்களை வென்று எடுத்த மாநிலங்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் தரப் பட்டு இருக்கிறது என்கிற பிஜேபியின் வாதமும் ஏற்க முடியாமல் இருக்கிறது. காரணம் மொத்தம் 25 பாராளுமன்றத்தொகுதிகளையும் வென்றெடுத்த இராஜஸ்தானுக்கும் கூட ஒரு அமைச்சரைக் கூட ஒதுக்கவில்லை. ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில், தேர்தலில் தோல்வியுற்ற அருண் ஜெட்லி மற்றும் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப் பட்ட ஸ்மிருதி இராணி ஆகியோர் கூட அமைச்சர்களாக்கப் பட்டிருக்கும் போது வெற்றி பெறாத மாநிலங்களில் இருந்தும் , பிரதமர் நினைத்து இருந்தால் அமைச்சர்களைக் கொண்டு வந்து நாட்டின் எல்லா மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளித்து இருக்க முடியும். ஆனால் இதை மேற்கொள்ளாதது இந்த அரசின் ஆரம்பப் போக்கு களின் மீது ஐயம் கொள்ளவே வைக்கிறது. 

மாநிலவாரியான பிரதிநிதித்துவம் சரியாகப் பின்பற்றப்படாதது மட்டுமல்லாமல் மொழிவாரி, இனவாரி, மதவாரியான பிரதிநிதித்துவங்களும் இந்த அரசின் ஆரம்ப அமைச்சரவையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. உதாரணமாக நாட்டின் மக்கள் தொகையில் 18% இருக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதியாக நஜ்மா ஹெப்துல்லா என்கிற ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே பதவியில் அமர்த்தப் பட்டு இருக்கிறார். இதே பிஜேபியில் நீண்டகாலமாக குழல் ஊதிக் கொண்டிருந்த முகத்ர் அப்பாஸ் நக்வி, ஷா நாவாஸ் ஹுசேன், அண்மையில் ஆசையுடன் இணைந்த எம் ஜே அக்பர் போன்றவர்கள் நரேந்திர மோடியின் கண்ணுக்கும் கருத்துக்கும் தென்படவில்லை. மேலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் அமைச்சரவையில் பூதக்கண்ணாடி வைத்துத் தேட வேண்டி இருக்கிறது. காரணம் தலித்துகளும் பழங்குடியினரும் கூட புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்குரிய போதுமான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. இந்தப் போக்குகளை அரசின் மீது ஐயம் கொள்ள மட்டுமல்ல அச்சம் கொள்ளவும் வைக்கிறது. “ MINIMUM GOVERNMENT; MAXIMUM GOVERNACE ” குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சரவை அதிக சாதனைகளை செய்யும் என்பது மேடைப் பேச்சுக்கு அழகாக இருக்கும். நிர்வாகத்துக்கு சரியாக வருமா என்பது போகப் போகத்தான் உரியவர்களால் உணரப்படும். முட்டிக் கொண்டபின் குனிவது அரசியலுக்குப் புதிதல்ல. 

அமைச்சரவை பதவி ஏற்ற நாளில் இரண்டு முக்கிய சம்பவங்கள் மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. ஒன்று, இதுவரை இல்லாத முன்மாதிரியாக தெற்காசிய கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தது . இரண்டு , சுதேசிப் பொருள்கள் – தொழில் முன்னேற்றம் என்றெல்லாம் பேசி ஆட்சிக்கு வந்த கட்சியின் அமைச்சரவை பதவி ஏற்பு விழா அன்று இதுவரை இந்தியாவில் சாலையெங்கும் ஓடிக் கொண்டு இருக்கும் அம்பாசிடர் கார் நிறுவனம் அதன் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலைக்கு மூடுவிழா நடத்தப் போவதான அறிவிப்பு. 

தெற்காசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கையை – அதன் அதிபர் ராஜபக்சேயை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தது தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பி , இதன் காரணமாக தமிழ்நாடு உட்பட பல மாநில முதலமைச்சர்களும் பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியாகிய மதிமுக வும் பதவி ஏற்பு விழாவைப் புறக்கணிக்க வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டது. இந்த அரசின் முக்கிய சவால்களின் ஒன்றாக நாம் கருதுவது எல்லை நாடுகளான உறவில் நிச்சயம் பல முன்னேற்றங்களை இந்த அரசு உருவாக்கிக் காட்ட வேண்டுமென்பதும்தான். காரணம் காங்கிரஸ் ஆளும்போது இவற்றில் முன்னேற்றம் இல்லை என்று காங்கிரஸ் ஆட்சியைக் குறை சொன்னார்கள். 

அதே நேரம் எல்லை நாடுகளின் நமது நல்லுறவுக்கு அச்சுறுத்தலாக இருப்பது சீனா போன்ற வளர்ச்சி அடைந்த நாடு, நமது எல்லையில் இருக்கும் நாடுகளின் மீது செலுத்தும் செல்வாக்கு ஆகும். பூடானை மிக சுலபமாக சீனா தனது வலையில் வீழ்த்தும். இந்தியாவால் உருவாக்கப்பட்ட வங்க தேசம் பல பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப் பாட்டை எதிர்த்து வருகிறது. யார் கை நீட்டினாலும் ஏற்கும் நிலையில்தான் வங்க தேசத்தின் பொருளாதாரம் இருக்கிறது. பாகிஸ்தானுடன் நமது உறவைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆப்கானிஸ்தானும் நம்மோடு அவ்வளவு திறந்த மனதுடன் இல்லை. இந்த நாடுகளின் உறவில் முன்னேற்றம் காண்பது முக்கியமான சவாலாகும்.

இலங்கையில் தனி ஈழம், இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவது, மீனவர் பிரச்னை, போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சேயை நிறுத்துவது உட்பட பல்வேறு பிரச்னைகளில் இந்தியா தலையிட வேண்டிய உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தம் இருக்கிறது. இத்தகைய பிரச்சனைகளில் இதற்கு முன் இருந்த அரசு செயல்படவே இல்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து நரேந்திர மோடி இப்பொது பொறுப்பேற்று இருக்கிறார். இந்த அரசு, இலங்கைப் பிரச்சனையை எப்படி கையாளப் போகிறது என்று உலகமே ஆவலுடன் எதிர் பார்க்கிறது. இந்தியாவின் தீவிர தலையீடு அதிகரிக்கும்போது , இலங்கையை ஒரு எதிரி நாடாக சீனாவின் ஆதவுடன் கையாளவேண்டிய நிலையும் ஏற்படும். இந்தியாவை இலங்கை எதிர்க்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு பாகிஸ்தானும் உதவக்கூடும். இதை உத்தேசித்துத்த்தான் காங்கிரஸ் ஆட்சி இலங்கையுடன் ஒரு மென்மையான போக்கைக் கடைப் பிடித்து வந்தது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றால் தமிழக மீனவர் பிரச்சனைகளை ஊதித் தள்ளிவிடுவார் என்றெலாம் மிகப் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த எல்லை நாடுகள் பற்றிய சவாலை மோடி எப்படி கையாளப் போகிறார் எவ்வாறு பிரச்சனைகளைத் தீர்க்கப் போகிறார் என்பது பொறுத்துப் பார்க்க வேண்டிய விஷயமே. 

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவது விஷயம் தொழில் வளர்ச்சி. கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி மேற்கொண்ட உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய கொள்கைகளின் காரணமாக இந்தியா, உலகப் பொருள்களின் சந்தையாகிவிட்டது. இதனால் உள்ளூர்த் தொழில்கள் அழிந்துவிட்டன. அழிந்து வருகின்றன. அதற்கு அழகிய உதாரணம்தான் அம்பாசிடர் கார் தயாரிப்பு நிறுத்தப் பட்டிருக்கும் அறிவிப்பு. இது போல இன்னும் பல அறிவிப்புகள் வரலாம். சாதாரண கோலி சோடாவிலிருந்து அன்னியப் பொருள்களுக்கு அடிமைப்பட இந்திய சமுதாயம் பழக்கப்படுத்தப் பட்டு விட்டது. கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பற்றி வாய் கிழிய எப்போதும் பேசும் பிஜேபி இந்தக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இந்த மண்ணின் பாரம்பரியத் தொழில்களும் கலைகளும் அழியாமல் பார்த்துக் கொள்வதில் தனது கவனத்தை செலுத்த வேண்டும். தற்சார்புக் கொள்கையை கைவிடாமல் இருந்தாலே இறக்குமதி குறையும். உள்நாட்டுத்தொழில்கள் வளரும்.

உதாரணமாக, உலகமெல்லாம் பட்டாசு வெடி போன்றவைகளுக்கு நமது சிவகாசிக்கு ஆர்டர் கொடுத்துக் கொண்டு இருக்கிற நேரத்தில் நமது நாட்டில் இருந்து சீனா சென்று இவற்றை வாங்கி வரும் போக்கு நமது அந்நிய செலாவணியை அழிக்கிறது என்பதை நிச்சயம் இந்த அரசு உணரும் என்று எதிர்பார்க்கலாம். நம்மால் செய்ய முடிந்த தொழில்களை இன்னும் ஊக்கமாக செய்து உற்பத்தியைப் பெருக்குவதற்கு வேண்டிய உதவிகளை செய்தாலே வேலை வாய்ப்புகள் பெருகி தனி நபர் வருமானம் பெருகிட வாய்ப்பு இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசிகள் வானுயரத்துக்கு ஏறிவிட்டன என்ற குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது. நரேந்திர மோடி மற்றும் பிஜேபியினர் தங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் பாராளுமன்றத்திலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படுமென்று மக்கள் முன்னால் சத்தியம் செய்யாத குறையாக வாக்குறுதிகளை வழங்கினார்கள். மக்களும் இந்த அளவுக்கு பிஜேபிக்கு வாக்குகளை வாரி வழங்கிட புதிய ஆட்சி வந்தால் விலைவாசி குறையும் என்று முழுக்க முழுக்க நம்பியதும் முக்கியமான காரணம். மக்களின் இந்த நம்பிக்கையை பிஜேபி அரசு ஒரு முக்கிய சவாலாக எடுத்துக் கொண்டு விலைவாசிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு முன்னுரிமை தரப்பட வேண்டிய காரியமாகும். 

கடந்த காலத்தில் விலைவாசி ஒரு நிலைத்த தன்மை இல்லாமல் இருந்ததற்கு முக்கியமான காரணம் எண்ணெய் விலையை எண்ணெய் வணிக நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டதுதான் என்று ஒரு மிகப்பெரும் குற்றச்சாட்டு இருந்தது. இப்போது இந்த உரிமை எண்ணெய் நிறுவனங்கள் இடமிருந்து பறிக்கப்படுமா என்று தெரியவில்லை. இத்தகைய விலை நிர்ணய உரிமையை பிஜேபி விமர்சித்து வந்தது. இப்போது இதற்கான மாற்று ஏற்பாடு என்ன என்பது இந்த புதிய அரசின் முன் உள்ள மிகப் பெரிய சவால்களில் ஒன்றாகும். 

பிஜேபி ஆட்சி அமைக்கிறது என்ற செய்திகள் வந்த உடனேயே பங்கு சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டது. இதனால் வர்த்தகங்கள் பெருகப்போகின்றன என்றும் உற்பத்தி பெருகப் போகிறதென்றும் ஊடகங்கள் அந்த பலூனை ஊதிப் பெரிதாக்கின. சாதாரண பொதுமக்கள் இந்த செய்திகளைப் பார்த்து விலைவாசிகள் உடனே குறையப் போகின்றன என்று நம்பத் தொடங்கினார்கள். இப்படி பங்கு சந்தை ஏற்றம் என்பது பொருளாதார மறுமலர்ச்சியின் தொடக்கம் என்று நம்பக் கூடியவர்களுக்குச் சொல்கிறேன். இந்த நாட்டில் பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மொத்த வணிக சமுதாயத்தில் ஒரே ஒரு சதவீதத்தினர் மட்டுமே. 

இரண்டாவதாக பங்கு சந்தை வணிகம் என்பது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பது ஆகும். புதியதாக ஒரு அரசு பெரும்பான்மையுடன் அமைகிறது அதனால் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் என்கிற கண்களைக் கறுப்புத் துணி கொண்டு இறுகக் கட்டிக் கொண்டு காசைப் போடுகிற ஒரு நம்பிக்கையில் அந்தப் பங்குகளை வாங்குவதும் விற்பதுமாகும். இதை சில முகவர்களும் ஊக்குவிக்கிறார்கள். குதிரைகளின் மீது பணம் கட்டுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் கருதவில்லை. ஆகவே ஒரு யூக அடிப்படையில் நடைபெறும் சூதாட்டத்தை வைத்து பொருளாதாரம் உயரப் போகிறது என்று எண்ணுவதும் நம்புவதும் எதிர்பார்ப்பதும் தவறான அணுகுமுறை. 

உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது உற்பத்திப் பெருக்கத்திலும் , நாட்டின் தன்னிறைவு போக எஞ்சியதை ஏற்றுமதி செய்வதிலும்தான் இருக்க முடியும். வெறுமனே பங்குச் சந்தை ஏறிவிட்டது என்று அதை பொருளாதார வளர்ச்சியோடு முடிச்சுப் போடுபவர்கள் பகல் கனவு காணும் பத்தாம்பசலிகளே. ஆகவே புதிய அரசுக்கு இது புரியாத விஷயம் அல்ல. அந்த வகையில் விலைவாசி குறையவும் பொருளாதாரம் உயரவும் உற்பத்திப் பெருக்கத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த அரசின் முன் இருக்கும் முக்கியமான சவாலாகும்.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கறுப்புப் பணத்தை நாட்டுக்குக் கொண்டு வருவது பற்றி பெருமளவில் பாரதீய ஜனதா எதிர்க் கட்சி வரிசையில் இருந்து பேசி இருக்கிறது. இப்போது அதிகாரத்துக்கு வந்திருக்கிற அந்தக் கட்சி இதை எவ்வாறு கொண்டுவரப் போகிறது என்று நாடு எதிர்பார்க்கிறது. இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே கறுப்புப் பணத்தை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கைத் தர ஒரு சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கபட்டிருப்பது நம்பிக்கை தரும் விஷயம் . ஆனாலும் இதன் செயல்பாடுகளை விளைவுகளை வைத்தே கணக்கிட முடியும். 

கடந்த பல ஆண்டுகளாகவே நாட்டின் முதுகெலும்பான விவசாயம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் தொழிலை விட்டுவிட்டு நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுவிட்டன. விவசாயம் என்பது ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை என்பதை மக்கள் உணர்ந்து அதை புறக்கணித்துவிட்டனர். விவசாயத்தைப் புறக்கணிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை பொருளாதாரத்துக்கு அதுவும் கிராமப் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக அமையும். இதனால் உற்பத்திக் குறைவு ஏற்பட்டுவிட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாட்டு மக்களுக்குக்காக தொலைக் காட்சியில் உரையாற்றிய நரேந்திர மோடி நாட்டின் ஒவ்வொரு மூல முடுக்கில் இருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் அவருடைய விவசாயத்தேவைக்குரிய தண்ணீர் வழங்கப்படுமென்று உறுதியளித்தார். இதனால் இந்த அரசு விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று நாட்டின் விவசாயிகள் எதிர் பார்க்கிறார்கள். உண்மையில் விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதும் இந்த அரசின் முன் உள்ள முக்கிய சவாலே.

விவசாயத்தில் மறுமலர்ச்சி அல்ல ஒரு புரட்சியே ஏற்பட வேண்டுமானால் பல ஆண்டுகளாகவே பாரதீய ஜனதா முன்னிறுத்துகிற நதி நீர் இணைப்புத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். “வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் “ என்று பாரதியார் பாடினார். ஒரு புறம் பெருமளவு நீர் வீணாக கடலில் கலக்கிறது; மறுபுறம் நீரின்றி வரட்சியில் பல மாநிலங்களின் நிலங்கள் தங்களின் உயிரைவிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அரசு நதி நீர் இணைப்புத்திட்டங்க்களை புரட்சிகரமான முறையில் மேற்கொண்டால் காலம் காலத்துக்கும் நாட்டில் வளமான பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட அடிகோலிய பெருமை இந்த அரசுக்கு சேரும். தானே முன்னிறுத்திய இந்த சவாலை இந்த அரசு எப்படி நிர்வாகப் படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். 

அடுத்து இந்த அரசு எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்று எதிர்பார்க்க வைக்கும் இன்னொரு உணர்வு பூர்வமான விஷயம், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையாகும். மண்டல் கமிசன் அறிக்கை வெளியிடப்பட்டு அதை வி பி சிங் அரசு ஏற்றுக் கொண்டு உத்தரவிட்ட போது அதை எதிர்த்து நாடெங்கும் மாணவர்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சி செய்த கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஜாதி ரீதியான வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சாமியார்களின் முக்கியத்துவம் - இந்த ஆட்சிக்கு முன் வரிசையில் அமர்ந்து ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளை - பதவி ஏற்பு விழாவில் காண முடிந்தது. நாடு இன்றும் இருக்கும் நிலையில் இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் புதிய அரசு கை வைக்காமல் காப்பாற்றித் தொடர வேண்டுமென்றே அடித்தட்டு மக்கள் ஆசைப்படுகின்றனர். உயர் ஜாதியினரின் கட்சி என்ற முத்திரையை பெற்றுள்ள பிஜேபி ஆட்சி இட ஒதுக்கீடு விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்பதற்கு விடை சொல்ல காலம் காத்திருக்கிறது. 

 அதே போல் இந்த அரசு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்கிற செய்திகள் வெளியான நாட்கள் முதல் சிறுபான்மையினரின் பாதுகாப்பு முதலிய அம்சங்கள் நாடெங்கும் பதட்டத்தையும் பயத்தையும் தோற்றுவித்து இருப்பதை மறுக்க இயலாது. ஒரு வளர்ச்சியை முன்னோக்கியுள்ள நாடு நாட்டின் மண்ணின் மைந்தர்களை பிரித்துப் பார்க்காமல் சமமாக தொடர்ந்து நடத்துவது நாட்டில் அமைதியை நிலை பெறச் செய்யும். அமைதி இழந்த நாடுகளின் பக்கம் வெளிநாட்டின் முதலீடுகளோ உள்நாட்டின் முதலீடுகளோ தொழில் வளர்ச்சியோ ஏற்படாது. ஆகவே மக்களின் ஜாதி இன பேத மோதல்களை உருவாக்காத வகையில் ஆட்சியின் காய்களை நகர்த்திச்செல்வதும் இந்த ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள சவால்தான். இதைபற்றி நமது எந்த விமர்சனத்தையும் இப்போது பதிவு செய்ய விரும்பவில்லை. நன்மைகளே தொடரும் என்ற நம்பிக்கையுடன் புதிய அரசுக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் சொல்லி 

“இந்திய நாடு என்வீடு
இந்தியன் என்பது என் பேரு 
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு”

என்கிற உணர்வும் உத்வேகமும் நாட்டின் எல்லா மக்களிடமும் வளர்ந்தோங்கவும் கடந்தகால கருப்பு வரலாறுகளை இந்த நாடு மறந்துவிட்டு அனைவரும் அவரவருக்கு அரசியல் சட்டத்தில் வழங்கப் பட்ட உரிமைகளை நிலைநாட்டவும் ஒன்றுபட்டுப் பாடுபட்டு நாட்டை உயர்த்தவும் உறுதி எடுத்துக் கொண்டு உழைக்கும் விதத்தில் எதிர்கால ஆட்சி அமைய வேண்டுமென்ற நல்ல எண்ணத்துடன் அனைவரும் கரம் கோர்ப்போமாக! 

இபுராஹீம் அன்சாரி

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் - 37 3

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மே 28, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் பொறுமை மற்றும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக கண்மணி நபி(ஸல்) அவர்களும், உன்னத நபித்தோழர்களும் சோதனைகளை எதிர்கொண்டு வாழ்ந்த சம்பவங்கள் சிலவற்றை நினைவுறுத்தி, நாமும் பொறுமையோடு அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக வாழ வேண்டும் என்பதை அறிந்துக் கொண்டோம். இந்த வாரம் இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களும் ஸஹாப்பாக்களும் எத்தஹைய பணிவோடு வாழ்ந்தார்கள் என்பதை காணலாம்.

இந்த உலகில் பாவங்கள் நடைபெறுவதற்கு காரணமாக இருப்பது முன்று விசயங்கள். 1) பெருமை 2) பேராசை 3) பொறாமை. இம்மூன்றுமே இவ்வுலகம் படைக்கப்பட்ட பின்னர் நம்முடைய வம்சத்தின் தந்தை ஆதம் (அலை) அவர்கள் இவ்வுலகில் வந்தவுடன் ஆரம்பமானது.

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜூது செய்யச் சொல்லி நெருப்பினால் படைக்கப்பட்ட இப்லீஸுக்கு கட்டளையிட்டான். ஆனால் இப்லீஸ் “நான் நெருப்பால் படைக்கப்பட்டவன், நான் மண்ணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு சிரம்பணிய மாட்டேன்” என்று சொன்னது முதல் பெருமைத்தனம்.

தந்தை ஆதம்(அலை) அவர்களுக்கும் அன்னை ஹவ்வா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஓர் கட்டளையிட்டா “ஒரு மரத்தில் இருக்கும் கனியை உண்ணக்கூடாது என்று”. ஆனால் இப்லீஸின் தூண்டுதலில் மற்றும் சூழ்ச்சியால் அவ்விருவரும் அல்லாஹ் தடை செய்த காரியத்தை செய்யத்தூண்டியது பேராசைத்தனம்

நம் தந்தை ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளில் சிலர் அழகான பெண்களை திருமணம் செய்து கொள்வதற்காக, சைத்தானுடைய தூண்டுதலால் ஒருவரை ஒருவர் கொன்றுக் கொண்டது. பொறாமைத்தனம்.

இன்றும் நாம் பார்க்கலாம் உலகில் நடைபெறும் எந்த ஓர் பாவமாக அல்லது குற்றமாக இருந்தாலும் பெரும்பாலும் இந்த மூன்று கெட்ட குணங்களில் அடங்கிவிடும். ஆனால் இன்று இவைகளுக்கு நேர் எதிரான ஒரே ஒரு தன்மை என்னவென்றால் அது தான் “பணிவு”. இந்த பணிவு பற்றி அருமை நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வை கொஞ்சம் திறந்துப் பார்த்தால், சுப்ஹானல்லாஹ் எவ்வளவு பணிவு, எவ்வளவு தன்னடக்கம், எவ்வளவு மென்மையான அடக்கமான குணம். எவ்வளவு குழந்தைத்தனமான புன்னகை கொண்ட அழகிய முகம் கொண்ட உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களின் தன்மைகளை வார்த்தைகளால் சொன்னால் நிச்சயம் கண்ணீர் அருவி போல் கொட்டும். அல்லாஹு அக்பர்.

நம்முடைய உத்தம நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வுலகில் கிடைத்தது, வேறு எந்த மனிதனுக்கும் இனி கிடைக்காத பதவி அந்தஸ்த்தை அல்லாஹ் கொடுத்தான். அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்ற அந்தஸ்து, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த தலைவர் என்ற அந்தஸ்து, மறுமை நாளில் இவ்வுலகிற்கு வந்த நபிமார்களே ஒன்றும் பேச முடியாத நிலையில் நபி(ஸல்) அவர்கள் மட்டும் அல்லாஹ்விடம் முழு உம்மத்திற்காக சிபாரிசு செய்யப்போகும் இறைத்தூதர் என்ற அந்தஸ்து. இப்படியான உயரிய அந்தஸ்துக்கு சொந்தக்காரரான, நம் அருமை நபி(ஸல்) அவர்களிடம் இருந்த பணிவு தன்மையை நாம் ஒவ்வொரு வினாடியும் நினைவுகூர்ந்து நம்மை நாம் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். காரணம் நம்மிடம் பெருளாதார ரீதியான வளமோ, பதவி அந்தஸ்து என்று சமூக அங்கீகாரமோ கிடைத்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பது போல் உணர்ந்து பெருமையின் உச்சநிலைக்கு சென்று பணிவற்றவர்களாக வாழ்கிறோம். இதோ அண்ணல் நபி(ஸல்) அவர்களின் ஒரு சில உருக்கமான வரலாற்று சம்பவங்கள்.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் சபைக்கு ஓர் மனிதர் வருகிறார். நபி(ஸல்) அவர்களை பார்த்தவுடன் தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவரின் தோல் புஜம் நடுங்கிய நிலையில் பயத்துடன் காணப்பட்டார். இதனை கண்ட நபி(ஸல்) அவர்கள் அந்த மனிதனை பார்த்து. “ ஏன் பயப்படுகிறீர், என்னைக் கண்டு நீங்கள் பயப்படக்கூடாது, நான் யார் தெரியுமா?, இந்த மக்கா நகரத்தில் ஆமீனா என்ற பெண்மணிக்கு மகனாக பிறந்து, ஒர் அனாதையாக வாழ்ந்து, காய்ந்த ரொட்டி துண்டுகளை தின்று வளர்ந்தவன் தான் நான். நீ நடுங்க வேண்டாம்.” என்று அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய பணிவை தன்னைக் கண்டு பயந்த ஓர் சாதாரண மனிதரிடம் அன்பாக காட்டினார்கள். (இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் பதிவாகி உள்ளது)

நபி(ஸல்) அவர்கள் தனக்கு அளவுக்கு மீறி பேசியவர்களை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிறருக்கு அறிவுறுத்தி தன்னடக்கத்தின் உதாரணமாக இவ்வுலகில் வாழ்ந்துள்ளார்கள்.

ஆனால் இன்று நம்முடைய நிலை என்ன? என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். என்னை அவர் மதிக்கவில்லை, எனக்கு மரியாதை செய்யவில்லை, எனக்கு சலாம் சொல்லவில்லை, எனக்கு அந்தஸ்து தரவில்லை என்ற வரட்டு கவுரவத்தை தலையில் தூக்கிக்கொண்டு மமதையில் இருக்கிறோமா இல்லையா? 

மற்றுமொரு சம்பவத்தில் கிராமப்புரத்து அரபிகளில் ஒருவர், நபி(ஸல்) அவர்களின் சபைக்கு வந்து அவர்களின் கழுத்துச் சட்டையை உயர தூக்கிப் பிடித்து, அரசாங்கத்தின் சொத்திலிருந்து எனக்கு தர வேண்டும் என்று கோபத்துடன் அடம்பிடித்து கேட்டார். உயிரினும் மேலான ரஹ்மத்துல் ஆலமீன் முஹம்மது (ஸல்) அவர்களை கோபத்துடன் கழுத்துச் சட்டையைப் பிடித்த அந்த காட்டரபியை கடும்கோபத்துடன் சுற்றி இருந்த அந்த சத்தியத் தோழர்கள் அனைவரும் முறைத்தார்கள். இந்த பரப்பரப்பை பார்த்து  “நிறுத்துங்கள், அவருக்கு தேவையான சொத்தை அள்ளிக் கொடுங்கள்” என்று கட்டளையிட்டார்கள் பணிவின் சிகரமான சமாதான தூதுவர் நபி(ஸல்) அவர்கள். இப்படிப்பட்ட அற்புத தலைவரை எங்கள் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் நாம் என்றைக்காவது இது போன்று கோபத்தை தூண்டும் நிகழ்வுகள் நடைபெரும் போது பொறுமைகாத்து பணிவோடு நடக்கிறோமா?

செய்த பாவங்களை அல்லாஹ்விடம் சொல்லி, நான் ஒரு அடியான் என்ற சிரம் தாழ்த்திய பணிவோடு அவனிடம் பாவமன்னிப்பு தேடியவர்களாக நாம் இருக்கிறோமா?

அல்லாஹ்வின் இறுதித் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பணிவுக்கு மற்றுமொரு உறுக்கமான சம்பவம் முஸ்லீம் ஹதீஸ் தொகுப்பில் பதிவாகியுள்ளது. ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் “யாராவது ஒருவர் எனக்கு ஓர் ஆட்டுக்காலையோ அல்லது ஆட்டு சந்து கறியையோ எனக்கு அன்பளிப்பாக தர ஆசைப்பட்டாலும் நான் பணிவோடு ஏற்றுக் கொள்வேன்.’ என்று தன்னை சுற்றி இருந்த சஹாப்பாக்களிடம் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களுடைய வாழ்வு அந்த நிலையில் தான் இருந்தது ஒரு ஆட்டுக் காலை 15 நாட்கள் அவித்து வைத்து அவித்து வைத்து சாப்பிட்ட பஞ்சம் நிறைந்த காலத்தில், ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், பசி பட்டினியை அனுபவித்த அந்த நேரத்திலும்கூட பணிவோடு நடந்துக் கொண்டார்கள்.

ஆனால் நாம் ஒருவர் நமக்கு கொடுக்கும் அன்பளிப்புகளில் எத்தனையோ தேவையில்லாத குறைகள் கண்டு நம்முடைய வரட்டு கவுரவத்தை காட்டி அன்பளிப்பு கொடுத்தவரை மனம் நோகும்படி செய்திருக்கிறோமா இல்லையா? நமக்கு கிடைக்கும் திருமண விருந்தாகட்டும், வேறு எந்த ஹலாலான விருந்துகளாகட்டும், அதில் உள்ள குறைகளையே பிறரிடம் சொல்லிக்காட்டி பெரிது படுத்தி மமதையில் விருந்தளித்தவர்களை மனநோகடித்திருக்கிறோமா இல்லையா? இதற்காக பாவமன்னிப்பு தேட வேண்டாமா?

நமக்கு முன் மாதிரி நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள், அவர்களின் பணிவுத்தன்மை நம்மிடம் வர வேண்டும். இது வரை நாம் பணிவற்றவராக இருந்தால், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்போம், யா அல்லாஹ் எங்களை பணிவுள்ள மனிதர்களாக மாற்றுவாயாக என்று அடிக்கடி து ஆ செய்வோமாக.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்..
M.தாஜுதீன்

பொய் வழக்கு... என்ன கொடுமை? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், மே 27, 2014 | , , , ,

2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மாலை மணி 4:30.

முஃப்தி அப்துல் கையூமின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறந்தார். வந்தவர்கள் புலனாய்வுத் துறையிலிருந்து வந்திருப்பதாகக் கூறினர். "என்ன விஷயம்?" என்று முஃப்தி கேட்க, "ஸஹாப் உன்னைப் பார்க்க விரும்புகிறார்" என்றனர். குஜராத்தில் 'ஸஹாப்' என்றால் யாரைக் குறிக்கும் என்று அங்கு எல்லாருக்கும் தெரியும்.

"நான் போயிருக்கக் கூடாதுதான். ஆனால் வேறு வழியில்லை" என்று பதினொரு ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்து, நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட பின்னர் 'தி ஸிட்டிஸன்' இணைய இதழுக்குப் பேட்டியளித்த முஃப்தி கூறுகிறார்.

வாகனத்தில் ஏறி உட்கார்ந்ததும் கண்கள் கட்டப்படுகின்றன. வாகனம் அஹ்மதாபாத்திலுள்ள புலனாய்வுத் துறையின் தலைமையகத்தில் போய் நிற்கிறது. விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முஃப்திக்கு உடனேயே சித்திரவதை தொடங்குகிறது. "எவ்வளவு கொடூரமான, எத்தனை வகையான சித்திரவதைகளை வேண்டுமானாலும் நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவையெல்லாம் நான் அனுபவித்தவற்றுக்கு ஈடாகாது" என்கிறார் முஃப்தி.

"நினைவு தடுமாறி மயங்கி விழும்வரை அடித்தார்கள்; மின்சார அதிர்வுகளை உடலில் பாய்ச்சினார்கள். நினைவு திரும்பியதும் 'அக்'ஷர்தம் கலாச்சார மண்டபத்தில் நடந்த தாக்குதலில் உன்னுடைய பங்கு என்ன?' எனக் கேட்டனர். அதுவரை எதற்காக நான் இங்கு அழைத்து வரப்பட்டேன்; சித்திரவதை செய்யப்படுகின்றேன் என்றே எனக்குத் தெரியாது. நான் அலறினேன். 'எனக்கு வன்முறையிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. என்னுடைய மார்க்கம் வன்முறையைப் போதிப்பதல்ல. வன்முறைக்கு நான் எதிரானவன். நீங்கள் சொல்லுவதில் நான் ஈடுபடவில்லை' என்று வேண்டிய மட்டும் கதறினேன். கேட்கத்தான் ஆளில்லை. ஒருநாள் இரண்டுநாள் இல்லை. பதினொரு நாட்கள் (ஆகஸ்ட் 28 வரை) நான் தாங்கவியலாத சித்திரவதைக்கு ஆளானேன். அதுவரைக்கும் நான் சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்ட விஷயமே வெளி உலகுக்குத் தெரியாது"

"என்னுடைய மஹல்லாவைச் சேர்ந்த பெண்கள், எனக்காகவும் என்னைப் போலவே 'காணாமல் போன' மற்றவர்களுக்காகவும் ஒரு போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். 2003செப்டம்பர் 23ஆம் தேதி என்னிடமும் மற்ற ஐவரிடமும் 'ஒப்புதல் வாக்குமூலம்' என்பதாக வெற்றுத் தாளில் அதிகாரிகள் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். கூடுதலாக, முர்த்தஸா என்பவருக்கும் அஷ்ரஃப் அலீ என்பவருக்கும் நான் எழுதுவதாகத் தனித் தனியாக இரண்டு கடிதங்களை அதிகாரிகள் சொல்லச் சொல்ல நான் எழுத, அக்கடிதங்களைப் பெற்றுக் கொண்டு, அந்த நரகத்திலிருந்து எங்களைச்  சிறைச்சாலைக்கு அனுப்பினர். 

சிறைச்சாலை அதிகாரிகளும் மனிதர்கள்தாமே! எங்களைப்போல் எத்தனையோ பேரைப் பார்த்தவர்கள். நாங்கள் குற்றம் செய்யாத அப்பாவிகள் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. சிறை அதிகாரிகள் எங்களை நல்ல முறையில் நடத்தினர்"

முஃப்தி அப்துல் கையூம், விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக அழைத்துச் செல்லப்பட்டபோது அவருக்கு வயது 31. அவருடைய ஐந்து வயது மற்றும் எட்டுமாதக் கைக்குழந்தை இருவரும் இப்போது பதின்ம வயதை அடைந்திருக்கின்றர். 'பயங்கரவாதி'யின் மனைவி எத்தனையோ துன்பங்களையும் அவப் பெயரையும் சுமந்துகொண்டு இரு பிள்ளைகளையும் வளர்த்தெடுத்தார்.

முஃப்தி சிறையிலிருந்த காலத்தில் அவருடைய தந்தை இறந்து போனார். முதிய தாய் விதவையானார். தந்தையின் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்ளக்கூட முஃப்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

2002 செப்டம்பர் 24, மாலை மணி 4.45.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 23 ஏக்கர் பரப்பளவில் எழுப்பப்பட்டுள்ள சுற்றுலா கேந்திரமான அக்'ஷர்தம் கலாச்சார ஆலயத்தின் புறவாசல் எண் மூன்றின் அருகில் ஒரு வெள்ளை நிற அம்பாஸ்டர் கார் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய இருவர், தம் பொதிகளைச் சுமந்தவர்களாக உள்ளே நுழைய முயன்றனர். காவலாளி தடுக்கவே, புறவாசல் கதவின் மீதேறி உள்ளே சென்றனர்.

பின்னர் தம் பொதிகளிலிருந்து துப்பாக்கிகளை எடுத்து, இலக்கில்லாமல் சுட்டனர்; கையெறி குண்டுகளையும் வீசினர். (2008இல் மும்பையில் மாவீரர் கார்கரே கொல்லப்பட்டபோது நடந்த தாக்குதல் போலவே இதுவும் இலக்கற்றதாக இருந்தது. இதிலும் சுரேஷ் எனும் முக்கியமான ஒரு கமாண்டோ கொல்லப்பட்டார்).

கலாச்சார மையத்தின் உள்ளேயிருந்த காவலர்களுக்கு வயர்லெஸ் மூலமாகத் தாக்குதல் செய்தி அனுப்பப்பட்டது. உள் கதவுகள் மூடப்பட்டன. உள்ளூர் காவல்துறையினரும் தேசிய பாதுகாப்புப் படையினரும் 15 நிமிடங்களுக்குள் வந்து சேர்ந்தனர். அப்போதைய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானியின் உத்தரவின் பேரில் கருப்புப் பூனை கமாண்டோக்களும் பறந்து வந்தனர். அந்த நேர இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட பயங்கரவாதிகள் பொருட்காட்சியகத்தின் முதலாவது மண்டபத்துக்குள் நுழைந்து மறைந்து கொண்டனர்.

கமாண்டோக்கள் கலாச்சார மையத்தைச் சுற்றி வளைத்துக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தபோது 32 அப்பாவிகள் உயிரிழந்திருந்தனர்; 80 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

பயங்கரவாதிகள் தம் பதுங்குமிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டனர். கமாண்டோக்கள் தொடர்ந்து போராடி மறுநாள் 24 செப்டம்பர் 2002 காலை 6.15 மணியளவில் இரு பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர்.

இவை அத்தனையும் குஜராத்தின் முதல்வராகவும் உள்துறை அமைச்சராகவும் மோடி பதவியேற்ற அடுத்த ஆண்டு நடைபெற்ற தாக்குதல் பற்றிய சுருக்கக் குறிப்புகளாகும்.

அக்'ஷர்தம் கலாச்சார மையத் தாக்குதல் தொடர்பான விசாரணை, குஜராத்தின் முன்னாள் காவல்துறை துணை இயக்குநரும் சொஹ்ராபுத்தீன் குழுவினர் உட்படப் பலரைப் போலி என்கவுண்டரில் கொலை செய்து தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பவருமானவன்சாராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கலாச்சார மையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளாக முர்தஸா ஹாஃபிஸ் யாசீன் மற்றும் அஷ்ரஃப் அலீ முஹம்மது ஃபாரூக் ஆகிய இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லக்'ஷரே தொய்பா அமைப்பினர் என்றும் குஜராத் முதல்வர் மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்றும் பின்னர் இலக்கை மாற்றிக் கொண்டார்கள் என்றும் காவல்துறையினரால் கூறப்பட்டனர்.

பாகிஸ்தானிலிருந்து வந்த இரு பயங்கரவாதிகளுக்கும் உடந்தையாக உள்ளூர் ஆட்கள் வேண்டுமே! அதற்கு என்ன செய்வது?
முஸ்லிம்களின் பொருளாதார உதவியுடன் தொடக்கக் கல்வியிலிருந்து ஐப்பீஎஸ் வரை படித்த வன்சாரா, அப்பாவி முஸ்லிம்களை அள்ள ஆரம்பித்தார்.

(1) ஆதம் சுலைமான் அஜ்மீரி, (2) ஷான் மியான் (எ) ச்சாந்த் கான் (உ.பி), (3) முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி, (4) முஹம்மது சலீம் ஷேக், (5) மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரி, (6)அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக்.

ஆகிய அறுவரைக் கைது செய்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி கதை வசனம் எழுதியது குஜராத் காவல் துறை. ஆதம் சுலைமான் அஜ்மீரி, பயங்கரவாதிகள் தங்குவதற்குத் தம் சகோதரரின் வீட்டைக் காலி செய்து கொடுத்தாராம். அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக், ஆயுதங்கள் வெடி மருந்துகள் சப்ளை செய்தாராம். எந்த இடத்தைத் தாக்குவது என்பதை இலக்கு நிர்ணயித்து வாகன வசதி செய்து கொடுத்தவர்கள் முஃப்தி அப்துல் கையூம் மன்சூரியும் மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரியுமாம். இதில் முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி இரு கடிதங்களை உருது மொழியில் எழுதி பயங்கரவாதிகளின் பாக்கெட்டுகளில் ஆளுக்கு ஒன்று வைத்து அனுப்பினாராம். மேற்காணும் அறுவரைத் தவிர மேற்கொண்டு 28 பேரை காவல்துறை இதுவரை தேடி வருகிறதாம்.

மேற்காணும் கதை வசனம் குஜராத்தின் POTA சிறப்பு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு, கடந்த ஜூலை 1, 2006இல் (1) ஆதம் சுலைமான் அஜ்மீரி, (2) ஷான் மியான் (எ) ச்சாந்த் கான் (உ.பி), (3) முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி ஆகிய மூவருக்கு மரண தண்டனையும் முஹம்மது சலீம் ஷேக்குக்கு ஆயுள் தண்டனையும் மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரிக்குப் பத்தாண்டு சிறையும் அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக்குக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்து POTAசிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. குற்றத்துக்கான சான்றுகளாக, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 'எழுதிக் கொடுத்த' ஒப்புதல் வாக்குமூலங்களும் பயங்கரவாதிகளின் பாக்கெட்டுகளில் 'கண்டெடுக்கப்பட்ட' முஃப்தி எழுதியதாகக் காவல்துறை கூறிய இரு கடிதங்களும். 

குற்றம் சாட்டப்பட்ட அறுவரும் தாங்கள் அனைவரும் நிரபராதிகள் என்பதாகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

"மூன்றும் மூன்றும் ஆறு; கணக்கு சரியாத்தானே வருது" என்பதாக மூவருக்குத் தூக்கையும் மூவருக்குச் சிறையையும் குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 30.5.2010 அன்று உறுதி செய்தது.

குற்றம் சாட்டப்பட்ட அறுவருக்காகத் தொடர் போராட்டம் நடத்திய ஜமாஅத்துல் உலமா ஹிந்தின் சட்டத்துறையில் பொறுப்பு வகிக்கும் மவ்லவீ அஷ்ரஃப் மதனீ, உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை நகர்த்தினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே. பட்நாயக், நீதிபதி வி. கோபால கவ்டா ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், கடந்த 16.5.2014 வெள்ளிக்கிழமை, "குற்றம் சாட்டப்பட்ட அறுவரும் நிரபராதிகள்" எனத் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் நில்லாமல், "நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் சவாலான இந்த வழக்கில் புலன் விசாரணை அமைப்புகளின் கையாலாகாத் தனத்தை எண்ணி வேதனைப் படுகிறோம்" என்று நீதிபதிகள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

கமாண்டோக்களின் துப்பாக்கிக் குண்டுகளினால் துளைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் குருதியில் குளித்த ப்பேண்ட் பாக்கெட்டுகளிலிருந்து 'எடுக்கப்பட்ட' முஃப்தி அப்துல் கையூம் மன்சூரியின் கடிதங்கள் மட்டும் இரத்தக் கறை இல்லாமல், தூசி படியாமல், மடிப்புக் கலையாமல் இருந்ததை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவனித்துவிட்டனர். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது 25 செப்டம்பர் 2002; அவர்களின் ப்பேண்ட் பாக்கெட்டுகளில் இருந்து 'எடுக்கப்பட்ட' கடிதம் எழுதப்பட்டதோ 23 செப்டம்பர் 2003இல்.

மேலும், "விலை மதிப்பற்ற பல உயிர்களை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதலில், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய காவல்துறை, அப்பாவிகளைக் கைது செய்ததோடு அவர்களுக்குக் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியது. குற்றம் சுமத்தப் பட்டவர்களிடமிருந்து 'பெறப்படும்' ஒப்புதல் வாக்குமூலங்கள் செல்லாது எனும் அடிப்படையான சட்டக் கோட்பாட்டைக் கீழ்க் கோர்ட்டுகள் கவனத்தில் கொள்ளவில்லை" என்று நீதிபதி கோபால கவ்டா குஜராத் காவல்துறையையும் கீழ்க் கோர்ட்டுகளையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

POTA சட்டம் கடந்த 30.8.2003 காலாவதியானது. அதற்குள் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை POTA வழக்குக்குள் கொண்டுவந்து, அவர்களைத் தூக்கில் போட்டுவிடவேண்டும் என்பதே காவல்துறையின் கனவாக இருந்தது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சான்றுகளின் மூலம் உறுதி செய்தனர்.

“எனவே, ஜுலை 1, 2006இல் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ஆணையையும் புறந்தள்ளியும் ஜுன் 1, 2010இல் குஜராத் உயர்நீதி மன்றம் வழங்கிய பொதுத் தீர்ப்பை மறுத்துரைத்தும் அனைத்துக் குற்றவாளிகளையும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கிறோம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் வலப்புற ப்பேண்ட் பாக்கெட்களிலிருந்து உருது மொழியில் எழுதப்பட்ட கடிதங்களை 'எடுத்ததாக'க் கூறிய பிரிகேடியர் சீத்தாபதியை POTA சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கவேயில்லை. மேலும் 46-60 தோட்டாக்களால் துளைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் உடைகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. அவை புழுதியும் உறைந்துபோன இரத்தமும் படிந்தவையாயிருந்தன.

பயங்கரவாதிகளின் ப்பேண்ட் பாக்கெட்டுகளைத் துளைத்த தோட்டா, அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட உருதுக் கடிதங்களைத் துளையிடவில்லை என்பது நம்பும்படியாக இல்லை" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்பாவிகளைக் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு நாடகமாடிய குஜராத் காவல்துறையினரை யார் தண்டிப்பது?

காவல்துறையின் செல்லாத ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, அப்பாவிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளையும் வழக்கு என்னவென்றே படித்துப் பார்க்காததோடு, அப்பாவிகளைக் கைது செய்த குஜராத் காவல்துறை துணை இயக்குநர் வன்சாராவை விசாரிக்காமலேயே தீர்ப்பெழுதிய குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளை யார் தண்டிப்பது?

விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக அடைத்து வைத்துச் சித்திரவதை செய்த புலனாய்வு அதிகாரிகளை யார் தண்டிப்பது?

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆறு நிரபராதிகள் இழந்த இளமைக் காலப் பதினொரு ஆண்டுகளை யாரால் திருப்பித் தர முடியும்?

அவர்தம் குடும்பங்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்களையும் துன்பங்களையும் அவப் பெயர்களையும் பொருளாதார இழப்புகளையும் எதைக் கொண்டு ஈடு செய்வது?

இந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது?

இது போன்ற கொடுமைகள் இனி இந்தியாவில் தொடர்ந்து அல்லாஹ் நாடினால் நடைபெறலாம், இன்றைய கால சூழலில் இவைகளை எதிர்க்கொள்ள சமுதாய இயக்கங்கள் தயாராக வேண்டும். தங்களின் ஈகோக்களை நிரந்தரமாக தூக்கி எறியும் தருணம் இப்போதுதான் என்பதை ஒட்டுமொத்த முஸ்லீம் இயக்கங்கள் உணர்ந்தால் சரி. உணர்வார்களா?

நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்

தொடர்புடைய சுட்டிகள்:-

யா அல்லாஹ்...! மன்னிப்பாயாக... 10

Unknown | செவ்வாய், மே 27, 2014 | , , , ,

யா அல்லாஹ்...! மன்னிப்பாயாக... [காணொளி தமிழில் எழுத்தோடை...]
படைத்தவன் அளித்த அருட்கொடைகள் ஏராளம் அதில் ஆயிரமாயிரம் பலன்களை ஒவ்வொரு மணித்துளிகளிலும் அடைந்து வந்தாலும், மனிதனென்ற அடிப்படையில் நிறை குறை சுட்டி இறைவனிடம் கையேந்த மறந்த தருணங்களை மூன்று விதமானச் சூழலை உணர்வுகளின் உயிரோடு உறவாடும் வரிகளைக் கொண்டு காட்சிக் காணொளியாக அமைத்து இங்கே பதிக்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் அழகிய பாடலாக நகர்ந்து செல்லும் காணொளிக்கு தமிழ் மூச்சு கொடுத்து அதன் அச்சு பிசகாமல் மனதில் பதிக்கும் கவிதை வரியாக வழங்கவும் அதனை அப்படியே காட்சிகளுக்குள் நடைபோட எழுத்தோடையாக்கிட உதவிய சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக !
நன்மை நாடி, நலன் வேண்டி பகிர்ந்தளியுங்கள் அதற்கான கூலியை அல்லாஹ்விடமே வேண்டிப் பெற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ் !

-- அதிரைநிருபர் பதிப்பகம்

கண்கள் இரண்டும் - தொடர் - 38 14

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், மே 26, 2014 | , ,


வாக்குக் கண் அல்லது மாறுகண்

கண் விழித்திரை மற்றும் கண்மணி இயல்பானதாகத் தோன்ற வேண்டும்

கார்ணியா என்றழைக்கப்படும் கண் விழித்திரை, மற்றும் கண்மணியின் கரும்பாகம் இயல்பான தோற்றத்தைக் கொண்டிருக்கவேண்டும். அவை வித்தியாசமாகத் தோன்றினால், கண்களை ஒரு கண் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

வாக்குக் கண் அல்லது மாறுகண் பார்வையை சீர்திருத்துவதற்கு, ஒரு அறுவைச் சிகிச்சை இருக்கின்றது பலவீனமான தசையை இறுக்கமாக்குவது மற்றும் வலிமையான தசையைத் தளர்த்துவது போன்றவற்றை அறுவைச் சிகிச்சையில் செய்து கண்களை நன்கு நேர்வரிசைப்படுத்துகின்றனர். 

வாக்குக் கண் பார்வை அறுவைச் சிகிச்சையின்போது என்ன சம்பவிக்கிறது அறுவைச் சிகிச்சைக்கு முன், ஒரு பொதுவான மயக்க மருந்து என்றழைக்கப்படும் ஒரு விசேஷ “நித்திரைக்கான மருந்து” கொடுக்கப்படும். இது அறுவைச் சிகிச்சை நேரம் முழுவதும் அருவை சிகிச்சை செய்யப்படுபவர் நித்திரையில் இருப்பார் ஆபரேஷன் செய்யும்போது எந்த வலியையும் உணரமாட்டார் 

அறுவைச் சிகிச்சையில் மருத்துவர் கண்களிலுள்ள பலவீனமான தசையை இறுக்கமாக்குவார் மற்றும்/அல்லது வலிமையான தசையைப் தளர்த்துவார். அறுவைச் சிகிச்சை மருத்துவர் கண் தசைகளை அதன் புதிய ஸ்தானத்தில் வைப்பதற்கு அகத்துறிஞ்சக்கூடிய தையல்களை உபயோகிப்பார். இந்தத் தையல்கள் அகற்றப்பட வேண்டியதில்லை. அறுவைச் சிகிச்சைக்குபின் 6 முதல் 8 வாரங்களில் இவை தாமாகவே கரைந்துவிடும். அறுவைச் சிகிச்சையின்போது, கண் அதன் குழியிலிருந்து ஒரு போதும் எடுக்கப்படமாட்டாது. கண்ணைச் சுற்றியிருக்கும் தோலும் வெட்டுப்பட மாட்டாது. லேசர் கதிர்கள் எதுவும் உபயோகிக்கப்படமாட்டாது.

ஆப்ரேஷனுக்குப் பிறகு கண்கள் பல வாரங்களுக்கு சிவந்தும் கொஞ்சம் வீங்கியும் இருக்கும். இரு வாரங்களின் பின் சிவந்த நிறமும் வீக்கமும் குறையத் தொடங்கும். வீக்கம் மோசமடைந்தால் அல்லது சிவந்த நிறம் தொடர்ந்திருந்தால், ஆப்ரேஷன் செய்த மருத்துவரிடம் சென்று காட்டவும். அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட கண்ணில் கொஞ்சம் வலி அல்லது அசௌகரியம் இருக்கலாம். வலி அல்லது அசௌகரியத்திலிருந்து நிவாரணமடைய டாக்டரிடம் மருந்து கேட்டு வங்கிக்கொள்ளவேண்டும்..

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எல்லாம் இரட்டையாகத் தோன்றலாம். பெரும்பாலும், கண்களின் வீக்கம் குறைந்து, கண் தசையின் புதிய ஸ்தானத்துக்குப் பழக்கப்படுத்தப்படும்போது, இது மறைந்துவிடும். முன்பு போல நன்கு பார்க்கமுடியாவிட்டால் அல்லது இரட்டைப் பார்வை தொடர்ந்திருந்தால் கண் மருத்துவரிடம் காட்டுங்கள்

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு கண்களிலிருந்து இளம் சிவப்பு நிற கண்ணீர் அல்லது இரத்தம் கலந்த திரவம் சிறிதளவு வெளியேறலாம். இந்த திரவம் வெளியேறுவது குறையாவிட்டால் அல்லது மேலதிக இரத்தம் கலந்த கண்ணீர் வெளியேறினால், கண் டாக்டரிடம் செல்லவும். கண்களைச் சுற்றி, விசேஷமாக அவன் நித்திரையிலிருந்து விழிக்கும்போது, வெள்ளை நிறத் திரவம் வெளியேறியிருப்பதை காணப்படலாம் சில சமயங்களில் தெளிவான மஞ்சள் நிற கண்ணீரும் காணப்படலாம்.

கண்களைக் கழுவுவதற்காக ஒரு சுத்தமான முகந்துடைக்கும் துணியை வெந்நீரில் பிழியவும். 1 முதல், 2 நிமிடங்களுக்கு முகந்துடைக்கும் துணியை கண்களின்மேல் போட்டுவிடவும். பின்பு வெளியேறிய திரவத்தை மெதுவாகத் துடைத்து விடவும். மற்றபடி  மஞ்சள் அல்லது பச்சை நிறத் திரவம் ஏதாவது வெளியேறியிருந்தால். கண் மருத்துவரிடம் காட்டவும்

வாக்குக் கண்பார்வைக்கான அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அன்டிபையோடிக் மருந்து மற்றும் கோட்டிசோன் சொட்டு மருந்துகொண்டு பராமரிக்கவேண்டும்
             
 இந்த மனோராவைப் பார்த்த்துமே தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனின் கதைகள் நிறைய கிடைக்கும் அவர் ஆண்ட கால்த்தில் கட்டி எழுப்பிய  மினாராதான் இன்று மனோரா என்று அழைக்கப்பட்டு  மல்லிபட்டினத்தில் அவரின் பெயரை சொல்லிக்கொண்டு கம்பீரமாக நிற்கின்றது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து  அங்கு சுற்றுலா செல்பவகளுக்கு அதன் சுற்றுப்புற சூழல் ஒவ்வொருவரின் மனதை கொள்ளை கொள்கின்றது எனறால் மிகையாகாது 

அந்த சரபோஜி மன்னர் ஒரு கண் சிகிச்சை நிபுனர் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி ராஜா போன்ஸ்லே 2 உலக வரலாற்றிலேயே கைதேர்ந்த டாக்டராகவும் கண் அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்திருக்கிறார் என்பதே இன்றைய தலைமுறையினர் நம்ப  முடியாத வரலாற்று பதிவாகும்.

மக்கள் நோய் தீர்க்க மருத்துவ முறைகளை கண்டதுடன் வாயில்லா ஜீவன்களான யானை குதிரை ஒட்டகம் மாடுகள் ஆகியவற்றுக்கும் மருத்துவ முறைகளை கண்டு முன்னோடியாக திகழும் முதல் டாக்டர் சரபோஜி மன்னர்தான்.  இவர் (1777-1832) கல்வி சிறக்க சரஸ்வதி மகாலையும் கலை சிறக்க சங்கீத மகாலையும் நோய் தீர்க்க தன்வந்திரி மகாலையும் தஞ்சையிலேயே உருவாக்கியவர்.

மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜியின் வம்சா வளியினரான சரபோஜி மன்னர் 1799ல் காலத்தின் கட்டாயத்தால் கிழக்கிந்திய கம்பெனியிடம் தஞ்சாவூர் ராஜ்ஜியத்தை ஒப்டைக்க வேண்டியதாயிற்று. தஞ்சாவூர் கோட்டையை மருத்துவம் உள்ளிட்ட சகல புலங்களின்கோட்டையாக மாற்றியமைத்தார். ராமேஸ்வர யாத்ரீகர்கள் கர்ப்பிணிகள் முதியவர்கள் ஆதரவற்றோர்களுக்காக சத்திர தர்மங்களை ஏற்படுத்தியதன் மூலம் ஏராளமானவர்களுக்கு வேலைவய்ப்புகளையும் உருவாக்கினார்.

இவற்றையெல்லாம் விட இவரது மகுடத்தில் ஒளி வீசும் மாணிக்கமாக திகழ்வது சித்த யுனானி ஆயுர்வேத மருத்துவ ஆய்வு தொகுப்பான சரபேந்திர வைத்திய முறைகளை உலகிற்கு வழங்கியது எனலாம். அரண்மனை அந்தபுரத்தில் பெரும் மூலிகை தோட்டமே இருந்திக்கிறது. மருத்துவத்திற்கு தேவையான பொருட்களை சேமித்து வைக்க ஒரு கொட்டடியே (கிடங்கு) இருந்திருக்கிறது. மன்னர் சரபோஜி மருத்துவக் கல்லூரியில் படிக்காதவர். 

கண் சிகிச்சைக்கென சிறப்பு பயிற்சி பெறாதவர். ஆனாலும் கண் அறுவை சிகிச்சை நிபுணராக எப்படி இருக்க முடிந்தது என்பது இன்றைய மருத்துவ உலகின் ஜாம்பவான்களுக்கு புரியாத புதிர் பழைய ஆவணங்களில் இருந்து ஆங்கிலேயரான கண் டாக்டர் மெக்டீன் தன்வந்திரி மகாலில் சரபோஜி மன்னருக்கு உதவியாக இருந்ததாகவும் அவருக்கு கிழக்கிந்திய கம்பெனியே ரூபாய் 4 ஆயிரம் சம்பளம் வழங்கியதாகவும் தெரிகிறது.  மன்னர் சரபோஜி கண்புரை அறுவை சிகிச்சை செய்த 50 பேரின் விபரங்கள் சரஸ்வதி மகாலில் உள்ளது.  இதில் நோய் பற்றிய ஆய்வு நோயாளியின் விபரம் ஆபரேஷன் விபரம் ஆபரேஷனுக்கு முன்னும் பின்னும் நோயாளியின் நிலை ஆகியவை கவனமுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஸ்கேன் எக்ஸ்ரே இல்லாத இந்தகால கட்டத்தில் நோயுற்ற கண் ஆபரேஷனுக்கு முன்னும் பின்னும் என்று வண்ணத்தில் ஓவியமாக தீட்டி பதிவு செய்திருப்பது மன்னனின் நிபுணத்துவத்துக்கு சான்றாக உள்ளது.  நோயாளிகள் தான் டாக்டர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக பணம் கொடுப்பர். ஆனால் மன்னர் சரபோஜி இலவச சிகிச்சை அளித்ததுடன் நோயாளி வீட்டுக்கு செல்லும்போது 2 ரூபாயை கைச்செலவுக்கு கொடுத்து அனுப்பினார்.                

அடுத்த தொடரில் வெள்ளெழுத்து பற்றிய இடம்பெறும்

(தொடரும்)

அதிரை மன்சூர்

என் இதயத்தில் இறைத்தூதர் ! - 12 - "சிறுபான்மையும் பெரும்பான்மையும்" 6

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மே 25, 2014 | , , ,

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரலி அறிவித்தார்கள் "ஒரு ஜனாசா எங்களைக் கடந்து சென்றது, உடனே நபி ஸல் அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம், பின்பு நாங்கள், "இறைத்தூதர் அவர்களே, இது ஒரு யூதனின் ஜனாசா என்றோம். அதற்கு நபி ஸல் அவர்கள் "ஜனாசாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்" என்று கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

நம் தலைவர் அண்ணல் நபி ஸல் அவர்களின் வாழ்வில் நமக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். 

எந்தெந்த நாடுகளில் மக்கள் சிறுபான்மை இனத்தவராக வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வருவதை நாம் எல்லா நிலைகளிலும் கண்டு வருகிறோம். அங்கு நடைபெறும் அரசாங்கமாக இருந்தாலும், பெரும்பான்மை இனமாக இருந்தாலும், சரி. அவர்கள் மூலம் சிறுபான்மை மக்களுக்கு துயரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பெரும்பானமை இந்துக்கள் மூலம், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், காஷ்மீர் மக்களும், தலித்களும்,பழங்குடி இன மக்களும்,  இலங்கையில் அங்குள்ள அரசு மற்றும் புத்த மத பெரும்பான்மையினர் முஸ்லிம்களுக்கும்,  தமிழர்களுக்கும், பர்மாவில் அந்த நாட்டு அரசும், அங்குள்ள மக்களும் முஸ்லீம்களுக் கெதிராகவும், ஈரானில் ஷியா என்ற வழிகேட்டைக் கொண்ட அந்த அரசும். ஷியாக்களும், முஸ்லிம் களுக்கு எதிராகவும்,பாகிஸ்தானில் உள்ள அரசும்,மக்களும் அங்கு சிறுபான்மையாக உள்ள சீக்கியர், இந்துக்களுக் கெதிராகவும்   என்று இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும் அளவிற்கு சிறுபான்மையினரின் எல்லா நலன்களும் பறிக்கப்பட்டு, பழைய துணிகள் போல் சுருட்டப்பட்டு, மூலையில் தூக்கி விசப்படுகிறார்கள்.

இஸ்ரேல் என்றொரு  நாடு பாலஸ்தீன் என்ற நாட்டை வைத்து உருவாக்கப்பட்டு இன்று அந்த மக்கள் சொந்த மண்ணிலே அகதிகளாக நிற்கிறார்கள். இதே பாலஸ்தீனில், எப்பொழுதெல்லாம், முஸ்லீம்களின் ஆளுமைகளின் கீழ் இருந்தததோ, அன்றெல்லாம் யூதர்கள் மிகவும் நிம்மதியாக வாழ்ந்ததை வரலாறு சொல்கிறது. கிறிஸ்தவர்களின் ஆட்சியில்தான் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலத்தில் யூதர்கள் மிக சிறுபான்மையினராக வாழ்ந்த ஒரு நேரம். யூதர் ஒருவர், முஸ்லிம் ஒருவருக்கு எதிரான வழக்கு ஒன்றை கொண்டு வந்து, நபிகளாரிடம் முறையிடுகிறார்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இருவரிடமும் விசாரனை செய்கிறார்கள். யூதர் பக்கமே நியாயம் இருப்பதாகத் தெரிகிறது. எனவே யூதருக்கு ஆதரவாகவும், முஸ்லிமுக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதுபோல பல எண்ணற்ற சம்பவங்களை நாம் காண முடியும். யூதருடைய இறந்த உடல் கொண்டு வரப்பட்டபோது கூட , அது ஒரு யூதருடையதுதான் என தெரிந்தும் எழுந்து நின்று மரியாதை செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மாமனிதரை நாம் காணவே முடியாது.

ஆனால், மனிதர்களிடையே உள்ள அகம்பாவம், திமிர், நான் மெஜாரிட்டி, நீ மைனாரிட்டி, உயர்ந்தவன், தலித், தாழ்ந்தவன் இன்னும் இது போன்ற சிந்தனையில் ஏற்பட்ட கோளாறுகளால் மீரட்,பீவண்டி போன்ற கலவரங்கள் நடந்தன.இன்னும், குஜராத், முஸாஃபர் நகர் போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசும், போலீசும், காவிகளும் அன்றைய குஜராத் முதலைச்சர் தலைமையில் சுமார் 3000க்கு மேல் முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்பட்டதை எவராலும் மறக்க இயலுமா ?

இப்படி ஒரு பக்கம் நசுக்கப்பட்டு, பொய் வழக்குகள் போடப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு ,பல வருடங்கள் கழிந்து, பல மேல் முறையீடுகள் மூலமாக - அவர்கள் நிரபராதிகள் என்று கடைசியில் விடுவிக்கப்படுவது தான் பெரும்பாலும் நடை பெற்று வருகிறது.

இப்படி ஒரு பக்கம் இருக்க அதே அநீதிக் காரர்கள் இன்று இந்திய தேசத்தை ஆளும் வர்க்கமாக இருக்க படைத்தவன் அல்லாஹ் நாடியிருக்கிறான். அந்த வல்லவனுக்குத் தெரியும் தான் நாடியோருக்கு நல்வழிகாட்ட இன்ஷா அல்லாஹ்.

இனி ஒரு குஜராத் போன்று இன்னொரு முறை நிகழா வண்ணம் கண்டிப்புடன் நடந்து கொள்வது மோடி மற்றும் பாஜகவின் முக்கியப் பொறுப்பாகும். சிறுபானமை இன மக்களின் உரிமைகளைப் பேணி நடப்பது ஒரு பிரதமராக மோடி அவர்களின் கடமையாகும். என்ன நடக்கப் போகின்றது என போகப் போகத் தெரியும்.

3:189. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

முஸ்லிம்களுக்கென்று குர்ஆனும், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் போதனைகளும் இருக்கின்றன.அந்த இரண்டின் படிதான் ஒரு முஸ்லிம் வாழ வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளோம். எனவே,அந்த முறையில் வாழ எங்களுக்கு எல்லாவித சகல சவுகரியங்களும் செய்ய வேண்டியது இந்தியப் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மோடியின்   கடமையாகும்.அனைத்து தரப்பு மக்களும் - இந்திய மக்கள் என்ற உணர்வுடன் வாழ இது மிக அவசியமாகும்.

காந்தி சொன்ன 'உமர் ரலி' அவர்களின் ஆட்சியே இந்தியாவுக்கு வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா நகரட்டும். மெஜாரிட்டி மக்களை மைனாரிட்டிக்கள் மதிக்கவும், மைனாரிட்டி மக்களை மெஜாரிட்டி மக்கள் அரவணைக்கவும்  வல்லோனிடமே பிரார்த்திப்போம்.

தொடரும் (இன்ஷா அல்லாஹ்)

இப்னு அப்துல் ரஜாக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு