Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை இலக்கிய மாமன்றம் 13

அதிரைநிருபர் பதிப்பகம் | June 07, 2014 | ,

25 / 09 / 2005, காலை பத்து மணி. சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள ‘மஸ்ஜித் மஅமூர்’ பள்ளி வளாகத்தில் அதிரை மக்கள் திரண்டு நின்ற காட்சி, அங்கு எதோ ஒரு முக்கிய நிகழ்வு நடக்கப் போகின்றது என்பதை அறிவித்தது.  நமதூர் வழக்கறிஞர் அ.ஜ. அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் தலைமையில், ‘அதிரை அறிஞர்’, ‘தமிழ் மாமணி’, புலவர் அஹ்மது பஷீர் (மர்ஹூம்) அவர்கள் நிகழ்ச்சியின் நாயகனாக வீற்றிருக்க, கூட்டம் தொடங்கிற்று.

புலவர் பஷீர் ஹாஜியார், அ.இ.மா. வின் தோற்றம், புராதனப் பொருள்களின் சேமிப்பு, அதன் மூலம் நாம் பெறும் அறிவு பற்றியெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.  அதன் பின்னர் அதிரை வணிகர்கள் தம் கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.

தலைமை வகித்த வழக்கறிஞர் அவர்கள், “நமதூரின் புராதனச் சின்னங்கள், அரிய பொருள்கள், இலக்கிய ஏடுகள் போன்றவற்றைத் திரட்டிச் சேமிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்தி, அவற்றை இங்குக் காட்சிப் பொருள்களாகக் கொண்டுவந்து வைத்த புலவர் பஷீர் அவர்களின் முன்னுதாரணம் பாராட்டத் தக்கது.  இது அதிரை வரலாற்றுப் பக்கங்களில் பதியப்பட வேண்டிய ஒன்றாகும்.  கிடைத்தற்கரிய அறிவு நூல்களை நம் வீடுகளில் பாதுகாக்க வேண்டியதன் சிறப்பை என் சுய வாழ்வில் கண்டு அனுபவித்தும் உள்ளேன்.

“மஆரிஃபுல் குர்ஆன்’ எனும் திருமறை விரிவுரை நூலின் சில பாகங்கள் என்னிடம் இல்லாததை உணர்ந்து வருந்தினேன்.  இல்லாத பாகங்களை இந்தியா முழுவதிலும் தேடினேன்; கிடைக்கவில்லை.  பின்னர் லண்டனில் இருந்த நண்பர் ஒருவரின் மூலம் பெற்று, கிடைத்தற்கரிய பொக்கிஷம் கிடைத்தது போல் மகிழ்ந்தேன். 400 ரூபாய் மட்டுமே விலையுள்ள அந்தப் புத்தகத்தை வாங்குவதற்கு, 35,000 ரூபாய் செலவாகிற்று!  புத்தகங்களின் அருமையை, அவற்றை வாசிக்கும் பழக்கமுள்ளவர்களால்தான் உணர முடியும். நூல்களை வாசிக்கும் பழக்கத்தை நாம் கைவிடக் கூடாது.  வாசிக்கும் போதுதான், அவற்றின் மூலம் நாம் பெற்ற பலனை அனுபவிக்க முடியும்.  இன்று நம்மிடம் நூல் வாசித்தல் என்னும் பழக்கம் அருகிப் போய்விட்டது.  இனி வரும் காலத்திலாவது, நாம் – குறிப்பாக இளைஞர் சமுதாயம் - விளையாட்டுக்குக் கொடுக்கும் நேரத்தைப் போன்று நூல் வாசிப்புக்கும் கொடுத்தால்தான், எதிர்வரும் சமுதாயம் விவேகமானதாகத் திகழும்.

“இங்கு நமது மதிப்பிற்குரிய புலவர் பஷீர் அவர்கள் காட்சிப் பொருள்களாக வைத்திருக்கும் பல புத்தகங்கள் விலை மதிப்பற்ற பொக்கிஷங்களாகும்.  இவற்றைப் பற்றிய ஆய்வில் இறங்கும்போதுதான், இந்தப் பழைய பிரதிகளின் அருமை தெரியவரும்.  நம் திறமையையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள, இது போன்ற பழைய பிரதிகள் உதவும்” எனக் கூறித் தமது தலைமையுரையை நிறைவு செய்தார்கள்.

நமதூரின் ‘அண்ணாவியார்’ குலச் செல்வர் முஹம்மது யூனுஸ் அவர்களும் அக்கூட்டத்தில் கருத்துரை பதிய அழைக்கப்பட்டிருந்தார்.  அவர் தமது உரையில் சுருக்கமாகக் கூறியதாவது:

“எங்கள் குலத்து முன்னோர்கள் பலர் புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர்.  மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களைத் தம் கவித் திறனால் செய்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.  என் பெரிய தந்தையார் செய்யது முஹம்மது அண்ணாவியார் காலம்வரை, அவ்விலக்கியங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன.  அவர்களுக்குப் பின்னர் அவற்றைப் பாதுகாக்க முடியாத நிலையில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு அன்பளிப்புச் செய்துவிட்டோம்.  நமதூரில் அவ்விலக்கியச் செல்வங்களைப் பற்றிய மதிப்பு அறியப்படாமல் இருந்ததால்தான், அரசுப் பல்கலைக் கழகமாவது அவற்றைப் பாதுகாக்கட்டும் என்று முடிவு செய்து, பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்தோம்.”   

அவரை அடுத்து, புலவர் அவர்களின் புதல்வர் ‘அஃப்ழலுல் உலமா’ அஹ்மத் ஆரிஃப் (மர்ஹூம்) அவர்கள் , தமது பேச்சின் தொடக்கமாக, 

العلم ضالة ألمؤمن أءخذها أين وجدتها

(அறிவென்பது, இறைநம்பிக்கையாளனின் காணாமல் போன சொத்தாகும். அதனை எங்கு கண்டாலும், பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்)

என்ற நபிமொழியைக் கூறி,  ‘அதிரை இலக்கிய மாமன்றம்’ எப்படி உருவாயிற்று என்பதை விளக்கிய பின் கூறியதாவது:  
                              
“நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற அறிவுக் கருவூலங்கள் எத்தனையோ, நமது அறியாமையினால் குப்பையில் வீசப்பட்டும், அடுப்பில் எரியூட்டப்பட்டும் பேரிழப்புக்கு உள்ளாயின.  இந்நிலையில், எஞ்சியவற்றையாவது பாதுகாத்து வைத்து, நம் வருங்காலச் சந்ததியினருக்குப் பயன்படும் வகையில் அறிவுறுத்துவது நம் கடமையாகும்.  

“இந்த ‘அதிரை இலக்கிய மாமன்றம்’ என்பது ஆங்கிலத்தில் AIM என்றாகின்றது.  இதை இன்னொரு வகையிலும் விரித்துரைக்கலாம். A என்பது அல்லாஹ்வையும், I என்பது இஸ்லாம் மார்க்கத்தையும், M என்பது முஹம்மத் (ஸல்) அவர்களையும் குறிக்கும் என விரித்துரைக்கலாம்.  அதாவது, அல்லாஹ்வை நம் இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது நபியைத் தூதராகவும் ஏற்றுக்கொண்டு நம் வாழ்க்கையைப் பயனுள்ள வாழ்க்கையாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்ற பொருத்தமான கருத்தைக் கொண்டது இம்மாமன்றம்.

“இந்த வழியில் வாழ்ந்த நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற அறிவுப் பொக்கிஷங்களைப்பற்றி, இன்றைய வளரும் தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வை இம்மாமன்றம் நமக்கு உணர்த்துகின்றது.”

முன்னதாக விளக்கவுரை கூறிய புலவர் பஷீர் அவர்கள், இம்மாமன்றத்தின் நோக்கத்தையும்,  இதன் செயல்பாட்டையும் பற்றிக் கூறிவிட்டு,

  تعاونوا على البر والتقوا ولا تعاونوا على الإثم والعدوان                            

(நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவியாயிருங்கள். அன்றி, பாவத்திலும் பகைமையிலும் உதவி செய்யாதீர்கள்) 

என்ற இறைமறை வசனத்தை ஓதி, நம் முன்னோர்கள் நமக்குக் கையெழுத்துப் பிரதிகளாகவும், ஓலைச் சுவடிகளாகவும் விட்டுச் சென்ற இலக்கியச் செல்வங்கள் பல, நமது போதிய கல்வி அறிவின்மையாலும் கவனம் இன்மையாலும் அழிந்தவை போக எஞ்சியவை, நம் இல்லங்களில் அழியும் நிலையில் இன்னும் இருக்கின்றன.  அவற்றைத் தேடிப் பிடித்து, ஆய்வு செய்து, இனிவரும் சமுதாயத்திற்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

“இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல நாட்டு நாணயங்களும் அரிய பொருள்களும் நமதூரில் தேடிக் கண்டுபிடித்துச் சேர்த்தவையாகும்.  பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை.  இவை, நம் முன்னோர்கள் பல நாடுகளுக்கும் சென்று வாணிபம் புரிந்துள்ளனர் என்ற வரலாற்று உண்மையைப் பறைசாற்றும் சான்றுகளாகும்.  இது போன்ற அரிய பொருள்களைத் திரட்டிப் பாதுகாத்து வைக்கவேண்டும்.  

“கல்வி, தொழில், வாணிபம், வேலை வாய்ப்பு, மருத்துவம், மற்றும் அனைத்துத் துறைகளிலும் அனுபவம் பெற்றவர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.   வியாபாரிகள், தொழில் வல்லுனர்கள், மருத்துவர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய பட்டியல்களைத் தொகுத்து வைக்கவேண்டும். 

"எங்கே நாம் சென்றாலும், எங்கிருந்து மீண்டாலும், பொங்குகின்ற இறைவனருள் பொழியட்டும் மழையாக’ என்று வேண்டியவனாக, என் உரையை நிறைவு செய்கின்றேன்” என்று அறிமுக உரையை நிறைவு செய்தார்கள்.

என்னால்  இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற முடியவில்லை?  நான் சஊதியிலிருந்து இந்த அருமையான ஒன்றுகூடலுக்குச் சில நாட்களுக்கு முன்னரே final exitடில் ஊருக்கு வந்துவிட்டிருந்தது, பஷீர் ஹாஜியாருக்குத் தெரியாது;  இப்படி ஒரு நிகழ்வு சென்னையில் ஏற்பாடாகியது எனக்கும் தெரியாது!   அவை நிறைவுக்குப் பின் வெளிவந்த செய்தி மடல் மூலமே படித்தறிந்தேன்.  அதன் மூலமாகத் திரட்டப்பட்ட தகவல்களே இக்கட்டுரை.

அதிரை அஹ்மத்

13 Responses So Far:

adiraimansoor said...

///குறிப்பாக இளைஞர் சமுதாயம் - விளையாட்டுக்குக் கொடுக்கும் நேரத்தைப் போன்று நூல் வாசிப்புக்கும் கொடுத்தால்தான், எதிர்வரும் சமுதாயம் விவேகமானதாகத் திகழும்.///

காக்கா இதை திரும்ப திரும்ப அழுத்தி சொல்லக்கூடிய வார்த்தை
இன்று கிரிகட் என்ற பெயரில் நடக்கும் சூதாட்டத்திற்கு பின்னால் சீரழியும் இளைஞர்கள்
கிரிகட் என்பது ஒவ்வொருத்தனையும் சோம்பேரியாக்கி சம்பாதிக்க போகவிடாம்ல் இளைஞர்களின் வாழ்க்கைக்கு வெடி வைக்கும் ஒரு அனுகுன்டு என்றால் மிகையாகாது
எத்ட்னை பேர் ரசனை என்ற பெயரில் வேளைகளை விட்டுவிட்டு கிரிகட் பின்னாடி பைத்தியங்களாக அலைகின்றனர்

இப்னு அப்துல் ரஜாக் said...

Masha Allah
Wonderful memories
May Allah bless them all and forgive their sins.

sabeer.abushahruk said...

அதிரைக்கு என்றொரு பொது நூலகம்; அதில் நம் யாவரிடமும் உள்ள புத்தகங்களைப் பாதுகாப்பது; நம் சமுதாயத்தவரை புத்தகங்கள் படிக்கத் தூண்டுவது போன்றவை நல்ல அறிவுள்ள அதிரையர்களை உருவாக்கும்.

காக்கா அவர்கள் குறிப்பிட்டுள்ள முன்னோர்கள் முனைந்தார்கள்; நாம் தொடர்ந்திருந்தால் இப்போதுகூட நல்ல வாசிக்கும் பழக்கம் நமக்கிடையே உருவாகியிருக்கும்.


ஃபாரூக் மாமாவின் புத்தகங்களுக்கு உண்டான கதி வருந்தத்தக்கது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Aboobakkar, Can. said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

முறையாக சேகரித்தப் புத்தகமெல்லாம் - பாழும்
கரையான்கள் அரித்த காகிதமாச்சே;
உறையிட்டுப் பாதுகாத்தப் பொக்கிஷமன்றோ - பூச்சி
இரையென்று கடிச்சிபோட்டு குப்பையுமாச்சே!

அலைகடலோடித் தேடியத் திரவியமெல்லாம் - வீட்டில்
எடைக்கெடை போட்டு தீணியுமாச்சே;
அக்கரையில் வாங்கிவந்த புத்தகமெல்லாம்- இங்கே
சக்கரைக்கும் சீனிக்கும் விலையுமாச்சே!

Ebrahim Ansari said...

ஒரு காலம் இருந்தது.

அன்று நடுத்தெருவில் ஒரு நூலகம் இருந்தது.

பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் சமுதாய நல மன்றம் என்ற பெயரில் ஒரு நூலகம் இருந்தது.

இன்றைய இமாம் ஷாபி பள்ளி ஹசன் வானொலி பூங்காவாக இருந்தகாலத்தில் இக்ராம் டாக்டர் வீட்டுக்கு எதிரே அரசின் நூல் நிலையம் இருந்தது.

இந்த மூன்று நூல் நிலையங்களிலும் படித்த பலர் ( என்னையும் சேர்த்து) இன்றும் இருக்கிறார்கள். காலப் போக்கில் இந்த நூல் நிலையங்கள் என்னவாயின என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவற்றில் குறிப்பாக நடுத்தெரு அல்லாமா இக்பால் நினைவு நூலகத்திலும் ( பெயர் சரிதானா?) சமுதாய நலமன்ற நூல் நிலையத்தில் இருந்த நூல்களும் எங்கே? யாரிடம் இருக்கின்றன?

தகவல் தெரிந்தவர்கள் அவற்றைக் கேட்டு வாங்கி மீண்டும் ஒரு நூல் நிலையத்தை ஏடிடி சார்பாக அமைக்கலாம் என்ற கருத்தை முன் மொழிய விரும்புகிறேன். இதற்காக பலரும் நூல்களை அன்பளிப்பாக தந்து ஒரு நல்ல முழு அளவிலான நூலகத்தை அதிரையில் உருவாக்கலாம்.


Unknown said...

இ.அ.வின் தகவல்கள் சரிதான். முதல் இரண்டு நூலகங்களிலும் பொறுப்பு வகித்தவன்தான் நான். எதோ ஒரு சூழலில் இக்பால் நூலகத்தை மூடவேண்டிய சூழ்நிலை வந்தபோது, புத்தகங்களை ஜாவியாவுக்கு மாற்றி, 'இமாம் புகாரி நூலகம்' என்ற பெயரில் தொடர்ந்தது. அதற்கும் நான்தான் பொறுப்பாளன்..

பின்னர் அந்த நூலகத்திற்கு 'ஆபத்து' ஏற்பட்டபோது, TWA வில் கொண்டுபோய் வைத்து நடத்தினோம். எங்களின் பள்ளி இறுதித் தேர்வும், அதனைத் தொடர்ந்து கல்லூரிப் படிப்பும் சேர்ந்தபோது, சமுதாய நலமன்றத்துடன் இணைத்துவிடலாம் என்றெண்ணி அங்கு கொண்டு சென்றபோது, சமுதாய நல மன்றத்தில் dedicated பணியாளர் அபுல்ஹசன் அவர்கள் இறந்து போனார்கள்.

அதன் பின்னர், சிலரின் சுய லாபம் குறுக்கிட்டு, புத்தகங்கள் புதுப் பள்ளிக்கு மாற்றப்பட்டனவாம். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், அந்தப் பள்ளியோடு தொடர்பு கொண்ட ஆலிமிடம் கேட்டபோது, அந்த நூற்றுக் கணக்கான நூல்கள் 'காணாமல் போன' கதையை மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது. 'இன்னா லில்லாஹி..........' என்று இறந்தவர்களுக்காகக் கூறும் வாக்குகள் மட்டுமே என் நாவிலிருந்து வெளிப்பட்டது!

கழுதைக்குத் தெரியுமா கர்ப்பூர வாசனை?

Ebrahim Ansari said...

மரியாதைக் குரிய அஹமது காக்கா அவர்களின் தகவலுக்கு நன்றி.

நீண்ட நாட்களாக இந்தக் கேள்விகள் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. காரணம் அந்த நூல்கள் நாம் பழகிய நண்பர்கள் போல ஒரு உணர்வு.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் .

மீண்டும் ஒரு நூல் நிலையத்தை நாம் உருவாக்க முயற்சிக்கலாமா? இன்ஷா அல்லாஹ்.

அன்று சமுதாய நல மன்றத்துக்கு நாலணா சந்தா . நான் ஏழாம் வகுப்பு மாணவன்.

இன்று அல்லாஹ் உதவியால் நமது பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஒரு சிலர் ஒன்று கூடினால் ஒரு நல்ல நூலகத்தை உருவாக்கிவிடலாம்.

ஒரு வேலை ஏடிடி யின் துணை விதிகள் இப்படி நூலகம் அமைப்பதை தனகத்தே கொண்டிராமல் இருந்தால் அணித்து முஹல்லா அமைப்பின் மூலம் இதை நிறுவ ஏற்பாடு செய்வது பற்றி ஆலோசிக்கலாம் . அந்த அமைப்புக்கு இது ஒரு பெயர் சொல்லும் பணியாக அமைய வாய்ப்புண்டு.

இது பற்றி நானும் அந்த அமைப்பின் பொறுப்பாளர்களுடனும் பேசுகிறேன். இன்ஷா அல்லாஹ்.

அதிரை தேனருவி said...

மனிதஅறிவை கூர்மையாக்கும் நூல்களின்இல்லமானநூலகம் சிலநேரங்களில் சில மனிதர்களால்தீநாக்கு சுவையான விருந்து ஆனதுண்டு .உதாரணம் புத்தர்களின் நாளந்தா பல்கலை கழகமும் அதன்உலகின்முதல்நூலகமும்பெரிய நூலகமும்.அடுத்து திமுக ஆட்சியில்சென்னயில் நிறுவியநூலகம் துகில்உரியப்பட்டதிரௌபதை ஆனதை நாம்கண்டோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அரிய தகவல்கள் மட்டுமல்ல, ஆர்வமூட்டும் தகவல்களும் இந்த பதிவில் இடம் பெற்றிருக்கு !

கருத்தாடலில் களைகட்டும் காக்காமார்களின் விருப்பப்படியே... நூலகம் அவசியம் வேண்டும்.

அதிரையில் இன்னும் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அதிரை தாருத் தவ்ஹீத் இஸ்லாமிய நூலகம் கடைத்தெருவில் நான் ஊரில் இருக்கும்போது தினமும் கடந்து செல்லும் வழியில் (தக்வா பள்ளி பின்புறம்) இருக்கிறது அதில் இஸ்லாமிய நூல்கள் பெரும்பாலும் இருக்கிறது, அதனை இன்னும் வலுப்படுத்தலாம்.

பொத்தம் பொதுவாகவென்றால், திருமறையும், அன்றாட தினசரிகளும் அடங்கிய நூலகம் ஊருக்கு நடுப்பகுதியில் வேண்டும் !

முயற்சித்தால் முடியும்...! இன்ஷா அல்லாஹ் !

sheikdawoodmohamedfarook said...

மருமகன் சபீரின் இரங்கல் பா விற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.அஸ்ஸலாமுஅலைக்கும்.

Ebrahim Ansari said...

//(தக்வா பள்ளி பின்புறம்) இருக்கிறது //

இதற்கு இன்னும் ஊட்டச்சத்து கொடுத்து வளர்த்தெடுத்து அர்ப்பணிக்கலாமே!

பலரும் தங்களிடம் இருக்கும் நூல்களைக் கொடுத்து உதவலாம்.

என்னைப் பொறுத்தவரை என்னிடம் இருக்கும் நூல்களைத் தர தயாராக இருக்கிறேன். இன்னும் இயன்றவரை வாங்கியும் தர தயார். இதைத் தொட்டால் தொடர்வதற்கு இறைவன் துணை செய்வான்.

இதே போல் கல்வியாளர்கள் பலரிடமும் நூல்கள் கிடைக்கும் . கேட்க வேண்டும்.

இளைஞர்கள் முயன்றால் இதை நிறைவேற்ற முடியும். இன்ஷா அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு