Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 35 31

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2014 | , , , ,


பங்குச் சந்தை முதலீடுகள் பங்கமா? வாழ்வின் அங்கமா?

கடந்த அத்தியாயத்தில் முதலீடுகளின் சில வகைகளைப் பார்த்தோம். இப்போது பங்கு சந்தை பற்றி அறியும்  முன்பு பங்கு என்றால் என்ன என்று பார்க்கலாம்.

நாம் ஒரு தொழில் தொடங்க விரும்புகிறோம் அல்லது ஒரு தொழிலுக்கான ஒரு நல்ல திட்டம் நம்மிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வெறும் கை முழம் போடாது . ஆகவே அந்தத் தொழிலைத் தொடங்குவதற்கும் நடத்துவதற்கும் பணம் தேவைப்படும். நாம் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிற தொழிலுக்கு போதுமான அளவு நம்மிடம் நமது சொந்தப் பணம் இல்லை என்று நாம் உணரும் நிலையில் வங்கிகள் முதலிய வெளியார் இடமிருந்து கடன் வாங்கி  அந்தத் தொழிலைத் தொடங்கி நடத்த நினைப்போம். 

மிகப்பெரிய அளவில்  திட்டமிட்டு இருக்கிற தொழிலைத் தொடங்க வேண்டுமானால் தேவைப்படும் மூலதனத்தை பொதுச் சந்தையில் பொதுமக்களிடமிருந்து  திரட்ட  திட்டமிட்ட மூலதனத்தை சிறு சிறு   மதிப்பாகப் பிரித்து வெளியிட வேண்டும். இதற்காக சில ஒழுங்கு முறைகள் மற்றும் சட்ட பூர்வமான தகுதியும் அமைப்பும் அங்கீகாரமும்  தேவைப்படும்.  இவ்விதம் வெளியிடப்படும் அந்தப் பிரிவுகளின் மதிப்பே பங்கு எனப்படும்.  இந்த முறையில்  முகம் அறியாத பொது மக்கள் கூட ஒரு  நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் முதலீட்டாளர்கள் ஆக முடியும்.

எடுத்துக் காட்டாக, நம்முடைய தொழிலின் அபிவிருத்திக்கு அல்லது நமது தொழில் திட்டம் நடைமுறைக்கு வர  ஒரு கோடி ரூபாய் தேவைப் படுகிறது என்று வைத்துக் கொண்டால் அதை பத்து ரூபாய் மதிப்புள்ள பத்து இலட்சம் பங்குகளாக்கி  பொது மக்களிடம் விற்று தேவையான மூலதனத்தைத்  திரட்டலாம். 

இந்த முறையில் ஏற்படும் உடனடிப் பலன் என்னவென்று கேட்டால் நமக்குத் தேவையான – நமது சக்திக்கு அப்பாற்பட்ட முதலீடு திரட்டப்படுகிறது. அத்துடன்,  நிறுவனத்தின் முதலீட்டுத் தேவைக்காக கடன் வாங்கி அல்லது இருக்கும் அனைத்து சொத்துக்களையும் விற்று முதலீடு செய்தால் அதன் மூலம் வரும் இலாபமும் இழப்பும் ஒரு தனி நபரை மட்டுமே சார்ந்திருக்கும் . ஆனால் பங்குகளை வெளியிட்டு பல முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் நடத்தும்போது இலாபமும் இழப்பும் பங்குகளை வைத்திருக்கும் பலராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.  முதலீடாக திரட்டப்பட்ட தொகைகளுக்கு முதலீட்டாடளர்களுக்கு வட்டி என்று கொடுக்கப்படவேண்டியதில்லை. மாறாக, இலாபத்தில் டிவிடெண்ட் ( Dividend) என்று சொல்லப்படுகிற ஆதாயப் பகுதி முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். இந்த டிவிடென்டின் விகிதம்   நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். இந்த டிவிடென்டின் விகிதமே  ஒவ்வொரு நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை உயர்த்துகின்றன; அல்லது தாழ்த்துகின்றன. அதிக இலாபப் பங்கை  டிவிடெண்ட் ஆகக்  கொடுக்கும் நிறுவனத்தின் பங்குகளுக்கு தேவை அதிகமானால் அவற்றின் விலையும் அதிகமாகும்.  ஒரு நிறுவனம் தனது முதலீட்டை பங்காக பிரித்து விற்கத் தொடங்கிய பின் சட்ட பூர்வமான அளவில் அந்த நிறுவனம் தனி நபர் நிறுவனம் என்கிற அமைப்பை இழந்து பங்கு நிறுவனம் ( Joint Stock Company ) என்று ஆகிவிடும். 

பங்கு என்றால் என்ன என்று தெரிந்த பின்,  இந்தப் பங்குகளின் முக மதிப்பு  ( Face Value) என்றால் என்ன என்றும் தெரிந்து கொள்வோம். ஒரு நிறுவனம் வெளிஇடும் ஒற்றைப் பங்கின் நிர்ணயிக்கப்பட்ட விலையே அதன்  முக மதிப்பாகும். பத்து ரூபாய் பங்கு என்பது பத்து ரூபாய் முகமதிப்புடையதாகும். சில நேரங்களில் நிறுவனங்களின் கடந்த கால வெற்றி தோல்விகளைப் பொருத்து அந்த  நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு இதுவரை தந்து கொண்டிருந்த இலாபப் பங்குகளின் வீதத்தை வைத்து அந்த நிறுவனம் வெளியிடும் பங்குகளை வாங்க அல்லது வாங்காமலிருக்க மக்கள் முன்வரலாம் வராமலிருக்கலாம். நிறுவனங்களின் இத்தகைய வணிக வரலாறுகள் அவற்றின் பங்குகளின் விலையை விலாசமிடுகின்றன.  

இதுநாள் வரை சரியான அளவில் இலாபம் ஈட்டி நல்ல வீதத்தில் இலாபப்பங்குகளை தராத நிறுவனங்கள் தங்களின்  பங்குகளை வெளியிடும்போது பங்குகளின் முக மதிப்பில் கழிவு கொடுத்து விற்பார்கள். அதாவது பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கு எட்டு ரூபாய்க்கு விற்கப்படும். இதையே வேறு ஒரு ரீதியில் நல்ல பெயரோடு இயங்கும் நிறுவனம் தனது பங்கை வெளியிடும்போது முகமதிப்பை விட அதிக விலை வைத்து விற்பார்கள் . அதாவது பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கு பனிரெண்டு ரூபாய்க்கு விற்கப்படும். 

இதையே ஆங்கிலத்தில்,  முகமதிப்பில் குறிப்பிடப்பட்ட  அதே விலைக்கு விற்றால் Share at Par   என்றும் கழிவு கொடுத்து விற்றால் Share at Discount   என்றும்  கூடுதல் விலை வைத்து விற்றால் Share at  Premium  என்றும் கூறுவார்கள்.   

தொழில் முனைகிற எல்லோரும் பொதுமக்கள் இடம் பங்குகளை விற்கிறேன் என்று கூறி பணம் திரட்டிவிட முடியுமா? முடியாது. பங்குகளை பொது மக்கள் இடமிருந்து திரட்டும் நிறுவனங்கள் சில தகுதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

குக்கிராமத்தில் ஒரு தனி நபர் நடத்தும் ஒரு மளிகைக்கடையை பெரிய நகரத்துக்கு இடம் மாற்றி ஒரு பெரிய கடையாக்க விரும்புகிற  தனி நபர் நிறுவனம்  என்று அழைக்கப்படுகிற  Sole Proprietor நிறுவனம் இதற்கான கூடுதல்  முதலீட்டுத் தேவைக்காக பொதுமக்களுக்கு பங்குகளை விற்க இயலாது. அவ்விதம் தனது நிறுவனத்தை  அவர்  பெரிது படுத்த விரும்பினால் தன்னிடம் இருக்கும் அசையும் அசையாச் சொத்துக்களை விற்றுத்தான் முதலீட்டைப் பெருக்க முடியும். 

அதேபோல்   கூட்டு நிறுவனம் என்று அழைக்கப்படும் Partnership Companies ஆகியவைகளும் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு விற்கும் அதிகாரம் படைத்தவைகள் அல்ல. 

இன்னும் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் என்ற அமைப்பில் இருக்கும் நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு விற்க இயலாது. 

இந்த இடத்தில் நாம் அன்றாடம் பல இடங்களிலும் காணும் ஒரு வார்த்தை பற்றி விளக்க வேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு மன்னார்  & கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்பது போல் பல வணிக நிறுவனங்களின்  விலாசபலகைகளை கண்டிருக்கிறோம்.  இப்படி பிரைவேட் லிமிடெட் என்பதன் பொருள் என்ன என்பது பலருக்குத் தெரிவதில்லை. மிகச் சுருக்கமாக,  இதன் விளக்கம் என்ன வென்றால் இந்த லிமிடெட்  அதாவது அளவுக்குட்பட்டது என்கிற வார்த்தை ஒரு நிறுவனத்தின் லயாபிளிட்டி என்கிற செலுத்தப்படவேண்டிய நிலுவைகளோடு சம்பந்தப்பட்டிருப்பதாகும்.   அதாவது அந்த கம்பெனி பிறருக்குக் கொடுக்க வேண்டிய லயாபிளிட்டி லிமிடெட்-  வரையரைகுட்பட்டதுதான் -  என்பதை புரிந்து கொண்டால் இதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். 

ஒரு நிறுவனம் நடத்தப்படுகிறபோது அந்தத் தொழிலில் இழப்பு ஏற்பட்டு கடன்கார நிறுவனமாகிவிட்டால் ஒரு லிமிடெட் கம்பெனி தான் கொடுக்க வேண்டியவர்களுக்கு தன்னிடம் இருக்கக் கூடிய பங்கீட்டு மூலதனத்தின் அளவு வரையே திருப்பிச் செலுத்தக் கடப்பாடு உடையது என்றும், அந்த நிறுவனத்தின் பங்காளிகளாக இருக்கக்கூடியவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை விற்று அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்தத் தேவை இல்லை என்பதே இது பற்றிய விளக்கமாகும். அதாவது கடன் ஏற்படும் பட்சத்தில் போட்ட முதல் மட்டுமே போய்விடும் தன்னிடம் இருக்கும் மற்ற சொத்துக்கள் போய்விடாது . இப்படிப் பட்ட பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளும் வெளிச் சந்தையில் பொதுமக்களுக்கு தனது பங்குகளை விற்க முடியாது.  The liability of the shareholders to creditors of the Company is limited to the Capital originally invested . A shareholder’s personal assets are thereby protected in the event of Company’s loss or insolvency, but money invested in the Company will be lost. 

பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அளவுள்ள பங்குதாரர்களையே கொண்டு இருக்கும். மேலும் அவை குறிப்பிட்ட சில குடும்பங்களின்  உறுப்பினர்களையே பங்குதாரர்களாகக் கொண்டு இருக்கும்.  

Joint Stock Companies என்று அழைக்கப்படும்  பப்ளிக் கம்பெனிகள் மட்டுமே பங்கு சந்தைகளில் பதிவு செய்து கொள்ளவும் தனது பங்குகளை பொதுச் சந்தையில் விற்கவும் சட்டம் அனுமதித்து இருக்கிறது.  இப்படிப்பட்ட பெரிய கம்பெனிகள்,  பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டு அவர்களின் பெயர் இடம் பெறுவதையே லிஸ்டட் கம்பெனி ( Listed Company) என்று அழைக்கிறோம். இப்படிப்பட்ட கம்பெனிகள் தங்களின் தொழிலில் நாட்டும்  வெற்றிக் கொடியைப் பொறுத்து பங்குச்  சந்தையில் இவற்றின் விலைகள் ஏற்ற இறக்கம் காணுகின்றன.  இவற்றின் தரத்துக்கு ஏற்ப கடந்த காலங்களில் இத்தகைய நிறுவனங்கள் சாதித்துக் காட்டிய சாதனைகளின் அடிப்படையில் இவற்றிர்க்கு A, A+,+,+, B,  B+,+,+, C, C+  ஆகிய தரங்களும் வழங்கப்படுகின்றன.  SEBI   என்கிற Securities and Exchange Board of India என்கிற நிறுவனமும் பங்குச்சந்தை நடைமுறைகளை கண்காணிக்கிறது. 

பங்குகளை வாங்கித்தரவும் விற்றுத்தரவும் பதிவுபெற்ற தரகர்கள் ( Brokers)  இருக்கிறார்கள். இந்தத் தரகர்கள் அவ்வபோது நம்மை அலைபேசியில் அல்லது இணையத்தில் தொடர்பு கொண்டு புதிதாக சந்தைக்கு வரும் நிறுவனங்களின் பங்குகள், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள்  மேலும் வெளியிட இருக்கும் பங்குகள், Fluctuations என்கிற ஏற்ற இறக்கங்கள், யூகங்கள் ஆகியவற்றை நமக்கு அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. 

புதிதாக உருவாக்கப்படுகிற ஒரு நிறுவனம் தனது பங்குகளை வெளியிட வேண்டுமானால் பெரும்பாலும் நாம் ஏற்கனவே பார்த்த முகவிலை மதிப்பே இதன் பங்கின்  விலையாகும். சரி !  புதிய கம்பெனி ! இதன் பங்குகள் சிலவற்றை வாங்கி வைத்துப் பார்க்கலாமே என்று சிலர் வாங்குவார்கள். பெரும்பாலும் தொடக்கத்தில்  பிரிமியம் இல்லாமல் முகமதிப்பிலேயோ அல்லது ‘கம்பெனி விளம்பரத்துக்காக’  டிஸ்கவுண்டோடோதான் பங்குகள் விற்கப்படும். இவ்விதம் புதிதாக உருவான கம்பெனி வெற்றிகரமாக தனது தொழில் நடவடிக்கைகளை கையாண்டு நடத்தி இலாபம் சம்பாதித்துக் காட்டி தனது பங்கை வாங்கியவர்களுக்கு நல்ல இலாபப்பங்கீடும் அளிப்பதாக பங்குச் சந்தையில் செய்திகள் வெளியாகும் பட்சத்தில் அந்தக் கம்பெனியின் பங்குகளின் முக மதிப்பு ஏற்றம்  காணத் தொடங்கும். பலர் போட்டி போட்டுக் கொண்டு அந்தக் கம்பெனியின் பங்குகளை வாங்குவார்கள். 

இதற்கு மாறாக, இந்த நிறுவனம் தனது தொழிலில் இலாபம் சம்பாதித்துக் காட்டாவிட்டால் இதனுடைய பங்குகளை வைத்துக் கொண்டு இருப்பதைவிட விற்றுவிடுவது நல்லது என்று இந்தப் பங்குகள் விற்பனைக்கு வரும். வந்த விலைக்கு  இவைகள் விற்கப்படும் நிலைக்குத் தள்ளப்படும்  முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும்.  

சில புதிய நிறுவனங்கள் புதிதாக அமைக்கப்பட்டாலும் ஏற்கனவே வளர்ந்து நிற்கும் ஒரு ஆலமர கம்பெனியின் அரவணைப்பில் வெளியாகலாம். உதாரணமாக டாடா கம்பெனி, அத்வானி கம்பெனி, அத்னான் குரூப். முருகப்பா குரூப், சோழமண்டல நிறுவனங்கள், பொள்ளாச்சி மகாலிங்கம் குரூப் என்றெல்லாம் ஏற்கனவே வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்களின்  நிழலில் உருவாகி வரும் கம்பெனிகள் முதல் ஓவரிலேயே சிக்சர் அடிக்கும். வெளியீட்டின் போதே இவைகள் பிரிமியம் விலை வைத்து விற்கப்படும். அதே போல் உடனே விற்றும் தீர்ந்துவிடும். 

ஏற்கனவே வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்கள்  தங்களின் தொழில் விரிவாகத்துக்காக இன்னும் அதிக நிதி திரட்ட விரும்புகிறது என்றால் பங்குகளை வெளியிடும். இவ்விதம் வெளியிடும் பங்குகள் உடைய விலையை நிறுவனம் ஆரம்பத்திலேயே அதிக பிரிமியம் விலை வைத்து விற்கும். உதாரணமாக பத்து ரூபாய் முக மதிப்புள்ள ஒரு பங்கு இரு நூறு ரூபாய் என்று கூவும் ; அவை உடனே விற்றும் போய்விடும். காரணம் நம்பிக்கை மட்டுமல்ல; யூகமும்தான். ஜெயிக்கலாம் என்று நமபபடும் குதிரையின் மேல் பணம் அதிகமாக கட்டுவது மாதிரித்தான் இதுவும்.   பங்கு மார்கெட் வர்த்தகத்தின் இயல்புகளைப் பார்த்து வரும் நாம் இப்போது முக்கியகட்டத்துக்கு வந்திருக்கிறோம். 

அதிக இலாபம் தரும் பங்குகளின் மதிப்பு சந்தையில் அதிகரிக்கும் என்கிற யூக எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரிக்கும் என்பதால் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்க அதில் ஈடுபட்டுள்ளோர் முனைகிறார்கள்.  இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த வணிக அமைப்பின் மீது நாம் வைக்கத் தொடங்கும் விமர்சனங்கள்  வீதிக்கு வருகின்றன. பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரிக்க,  பலமுறை பல தந்திரங்கள் நடைபெற்று அம்பலத்துக்கு வந்திருக்கின்றன.  

பங்கு வணிகம் ஒரு சூதாட்டம் போன்றது என்கிற கருத்தை முன்னெடுத்து வைக்கிறவர்கள் பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் பத்தினிகள் அல்ல என்று குறிப்பிடுகிறார்கள். வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் என்று தங்களை சமரசப்படுத்திக் கொள்வோர் மனமறிந்து ஏமாற்றத் துணிவதற்கு பங்குச் சந்தை உரம் போட்டு வளர்க்கிற காட்சிகளை கண்டிருக்கிறோம். 

உண்மையில் இலாபம் சம்பாதிக்காமலேயே ஊடகம் மற்றும் அரசியல் செல்வாக்குகளின் துணையோடு செயற்கையாக  பங்குகளின் தேவைகளை வெற்று நிதிநிலை  அறிக்கைகள் மூலம் அதிகரித்து - ஏமாற்றும் நோக்கத்துடன் விலைகளை ஏற்றிவிட்டு - பொது மக்களை ஆசையுடன் வாங்க வைத்து பின்னர் விற்க முடியாமல் போகும்போது தங்களின் உழைத்து சேர்த்த சேமிப்பை இழந்து நடுத்தெருவில் நின்ற பலரையும் தற்கொலை செய்துகொண்ட சிலரையும்  சரித்திரம் சந்தித்து இருக்கிறது. இவற்றிர்க்கெல்லாம் அண்மைக்கால உதாரணமாக சத்யம் தொழில் நுட்ப நிறுவனத்தின் வீழ்ச்சியையும் ஹர்ஷத் மேத்தா மோசடி என்பவைகளையும் குறிப்பிட்டுக் காட்டலாம். 

சில நிறுவனங்கள்,  தங்களின் பங்கின் வெளிச்சந்தை  மதிப்பை இரட்டிப்பு அல்லது அதற்கு மேலும் போனஸ் என்று கூடக்  காட்டி  வெற்று வெளிச்சம் போட்டு விட இங்கே வழி இருக்கிறது. பங்குகளை வெளியிடும்போது பங்குகளுக்கு வைக்கப்படும் முகமதிப்பு விலை நாட்கள் செல்லச்செல்ல அதிகரிக்கப்படுகிறது. உண்மையாக விலை ஏறாவிட்டாலும் நிறுவனங்கள் தங்களின் நிலையை ஊதிக் காட்ட இவ்விதம் அதிகரிப்பதால் உண்மையான மதிப்பை உலகம் உணர முடியாமல் போகிறது. இப்படிப்பட்ட நிறுவனங்களை உருவாக்கும் புரமோட்டர்ஸ் நிறுவனங்கள் நிர்வாகத்தை தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு தங்களின் ஏனைய வணிகங்களுடைய நிதி நெருக்கடிகளுக்கு  பங்குகளை வெளியிட்டு பொதுமக்களை ஏமாளியாக்கும் வாய்ப்புகள் வாய்த்தது இந்தப் பங்குச் சந்தை.  

இப்படிப்பட்ட நிலைமைகள் வரும்போதுதான்  இஸ்லாம்  தடை செய்துள்ள பல அம்சங்கள் இங்கே தென்படுகின்றன என்று மார்க்க அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 

உதாரணமாக, ஒரு நிறுவனத்திடம்  இருக்கும் பங்குகளின் உண்மை மதிப்பு இருபது இலட்சம் ரூபாய் என்றால் அதை இரண்டு கோடி என்கிற அளவுக்கு மதிப்புக் காட்டி சொல்லப்படுகிறது. ஆகவே உண்மை மதிப்புக்கும் சொல்லப்படும் மதிப்புக்கும் இடையே ஒரு கோடியே எண்பது இலட்சம்    வித்தியாசப்படுகிறது. இத்தகைய நிறுவனங்களில் நாம் செய்யும் முதலீடு,  உண்மையின் அடிப்படையை தகர்த்துவிடுவதால் மார்க்கம் வகுத்த வணிக வழிமுறைகளுக்கு  மாறுபாடாக நிற்கிறது. இல்லாததை இருப்பதாக காட்டப்படுவதால் இஸ்லாமிய பொருளாதாரத்தின் வணிகத்தில் நேர்மை என்கிற அடிப்படை தகர்ந்து போகிறது. 

பங்குச் சந்தை மூலம்  முதலீடு செய்கிறவர்கள் அந்த   நிறுவனங்களின்  கணக்குகளை சோதித்துப் பார்க்கவோ அல்லது நிர்வாகத்தில் தலையிடவோ   அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. நமது கண் பார்வைக்குட்படாத ஒரு நிறுவனத்தில் முதலீடுகள் செய்வது அனுமதிக்கப்பட்டதல்ல. 

பங்கு சந்தை மூலம் முதலீடு செய்கிறவர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள பணம் எத்தகைய பொருட்களை வாங்க/ விற்க பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய மாட்டார்கள். ஒரு முஸ்லிம் பங்கு வாங்கிய நிறுவனத்தின் பணம் , மதுக்கடைகள் நடத்தவும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் இரவு நேர கேளிக்கைகள் நடத்தவும் கூட பயன்படுத்தப்படலாம். இப்படி தனது பணம் ஹராமான வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதா  அல்லது ஹலாலான வணிக நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறதாஎன்று அறிய முடியாத நிலையில் கண்ணைக் கட்டி காட்டில் விடும் பங்குச் சந்தை வணிகத்தில் முஸ்லிம்கள் இறங்கக் கூடாது என்று பல மார்க்க அறிஞர்கள் மற்றும் பொருளியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.    

ஆனாலும் நமது கருத்தை சிந்தனைக்கும் விவாதத்துக்குமாக  இப்படி சமர்ப்பிக்கலாம். 

இந்த நவீன யுகத்தில் - புதுமைகளை புரட்டிப் போட்டுப் பார்க்கும் வணிக சமூகத்தில் வளர்ச்சியின் பாதையில் செல்ல மார்க்கம் ஒரு தடையாக இருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி இருக்கிறது.  

ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று பத்வா கொடுத்து கல்வியில் நமது  சமூகம் பின் தங்கியது போல்  இன்றைக்குப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பங்கு சந்தைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு பெட்டிக் கடைகளையும் புரோட்டா கடைகளையுமே இந்த சமுதாயம் நடத்திக் கொண்டு இருக்க வேண்டுமா என்பதே நமது கேள்வி. ஒரு முஸ்லிமின் கரங்களில் என்றைக்கும் குஷ்கா போடும் கரண்டிதான் இருக்க வேண்டுமா? அவனது கரங்கள் பீடிதான் சுற்ற வேண்டுமா? அவன் தோல் தொழிற்சாலைக் கழிவுகளில் கிடந்துதான் சாக வேண்டுமா? அவன் கல்கத்தா வீதிகளில் கை ரிக்க்ஷா இழுத்துத்தான் பிழைக்க வேண்டுமா?

வளர்ந்து வரும் சமுதாயத்தில் தொலைக்காட்சிபெட்டிகள் இல்லாத முஸ்லிம்களின் வீடுகள் இல்லை; அலைபேசியும் தொலைபேசியும் இல்லாத இஸ்லாமியரை ஆள் வைத்துத்தேடவேண்டிய நிலை;  கணினி யுகத்தில் கல்வியும் கணினி மயமாகிவிட்டது; அதே கணினியில் கல்வியுடன் கூட கலவிக் காட்சிகளும் காட்டத்தானேப்படுகின்றன? அதற்காக கணினிகளைத் தூக்கி கடாசிவிட்டோமா? அவற்றின் பயன்பாட்டை ஒதுக்கிவிட்டோமா இல்லையே!  

விமானங்களில்  பயணிக்கும்போது, அனைவருக்கும் இலவசமாக மது பரிமாறப்படுகிறது. அடுத்த இருக்கையில் இருப்பவன் ஊற்றி ஊற்றிக் குடிக்கும்போது நாம் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கிவிடுகிறோமே அதேபோல் நமக்கு வேண்டாதை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு நாமும் இந்த பங்கு சந்தையில் ஒரு அங்கமாகி நம்மை வளர்த்துக் கொள்ளக் கூடாதா?  பலாப்பழத்தில் சக்கைகளைத் தூக்கி வீசிவிட்டு சுளைகளை மட்டும் சுவைக்கும் பக்குவம் பங்கு சந்தை வணிகத்துக்கும் நமக்குப் பயன்படாதா? 

வங்கிகளில் வட்டியை ஒழித்து இஸ்லாமிய வங்கி முறையை மார்க்க அறிஞர்கள் தந்திருப்பது போல் இஸ்லாமிய பங்குச் சந்தை முறைகளையும் களைய வேண்டியவைகளைக் களைந்து வடிவமைத்து வழங்கினால் அது சமுதாயம் நவீன பொருளாதார வளர்ச்சியுடன் இணையாக  போட்டி போட்டு வளர வழி வகுக்கும்தானே!   எடுத்த எடுப்பிலேயே ஒன்றைத் தவறு என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லும் மார்க்க அறிஞர்கள் அந்தத் தவறுகளைக் களைய வழிகளையும் சொல்லித் தர மாட்டார்களா? இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு விலங்கிடாதீர்கள்; சிந்தித்து அல்லாஹ் ஏற்கும் வழியில் உயரப் பறப்பதற்கு ஏற்ற சிறகாக ஆக்கித் தாருங்கள் என்று மார்க்க நல் அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு தலைப்பில் சந்திப்போம். 

இபுராஹீம் அன்சாரி

31 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

காலத்திற்கு தேவையான பதிவு.நன்றி காக்கா

sheikdawoodmohamedfarook said...

பங்குமார்க்கெட்பற்றியஒருதலை சார்பற்ற தெளிவான விளக்கம். .''ஆற்றில்முதலைகிடக்கிறது!ஆற்றில்முதலைகிடக்கிறது!''யென்று இக்கரையிலேயேநின்றுகொண்டிருந்தால்அக்கறைபோய்சேர்வதுஎப்படி.? நம்சமுதாயமும்கையிலேகணிசமான'முதலைகாண்பதுஎப்போ? ஹராமானபங்குமார்கட்டுக்குஅப்பால்ஹலாலானபங்குமார்கட்டுக்குமார்க்கமேதைகள்வழிகண்டால்இஞ்சிதண்ணிவித்தவர்கள்இன்னோவாகார் ஓட்டலாமே!Please teach us How to Swim with Shark!.

adiraimansoor said...

//// பங்கு சந்தை மூலம் முதலீடு செய்கிறவர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள பணம் எத்தகைய பொருட்களை வாங்க/ விற்க பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய மாட்டார்கள். ஒரு முஸ்லிம் பங்கு வாங்கிய நிறுவனத்தின் பணம் , மதுக்கடைகள் நடத்தவும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் இரவு நேர கேளிக்கைகள் நடத்தவும் கூட பயன்படுத்தப்படலாம். இப்படி தனது பணம் ஹராமான வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது ஹலாலான வணிக நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறதாஎன்று அறிய முடியாத நிலையில் கண்ணைக் கட்டி காட்டில் விடும் பங்குச் சந்தை வணிகத்தில் முஸ்லிம்கள் இறங்கக் கூடாது என்று பல மார்க்க அறிஞர்கள் மற்றும் பொருளியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்////
காக்கா இந்த ஒரு உதாரணமே போதும் பங்கு சந்தை கூட்டாது என்பதற்கு

என்னதான் தொழில் நுட்பங்கள் வலர்ந்தாலும் இஸ்லாமிய மார்கத்தின் சட்டதிட்டங்கள் நிறைவானவை முழுமையானவை எப்பொழுதுமே நிரந்தரமானவை
எத்தனைதான் தொழில் நுட்பம் வலர்ந்தாலும்
மார்க்கத்தை விட்டுவிட்டு நாம் வலைய முடியாது.
என்பதால் இன்றைய பங்கு சந்தையின் ஏமாற்று பேர்வழிகளின் சூழ்ச்சிகளின் காரணமாக நமக்கு தெரியாத முதலீடு காரணமாகவும் ஆலிம்களின் கருத்து முழுக்க முழுக்க சரியானதே
இஸ்லாமியர்களுக்கு பங்கு சந்தை ஹராம் என்றே சொல்லாலாம் அந்த அளவுக்கு அதில் உள்ள அபத்தங்களை நன்கு படம் போட்டு காட்டிவிட்டீர்கள் அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் அதிக் ஆபியா

adiraimansoor said...

///ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று பத்வா கொடுத்து கல்வியில் நமது சமூகம் பின் தங்கியது போல் இன்றைக்குப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பங்கு சந்தைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு பெட்டிக் கடைகளையும் புரோட்டா கடைகளையுமே இந்த சமுதாயம் நடத்திக் கொண்டு இருக்க வேண்டுமா என்பதே நமது கேள்வி. ஒரு முஸ்லிமின் கரங்களில் என்றைக்கும் குஷ்கா போடும் கரண்டிதான் இருக்க வேண்டுமா? அவனது கரங்கள் பீடிதான் சுற்ற வேண்டுமா? அவன் தோல் தொழிற்சாலைக் கழிவுகளில் கிடந்துதான் சாக வேண்டுமா? அவன் கல்கத்தா வீதிகளில் கை ரிக்க்ஷா இழுத்துத்தான் பிழைக்க வேண்டுமா?///

இதெல்லாம் படிப்பறிவு இல்லாததால் அவர்களாக அவர்களே தேர்ந்தெடுக்கும் தொழில்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் இவர்களை மாற்றிவிட முடியாது
சரியான படிப்பறிவு கொடுக்காதவரை அவர்கள் அவர்களாகவே இருப்பார்கள்.
நம் சமுதாய தலைவர்களாக தன்னை பிரகடனப் படுத்துபவர்கள்தான் இப்படிபட்டோருக்கு நல்ல வழிகாட்டுதலை காட்டவேண்டும்

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அற்புதமான விளக்கங்கள்; அருமையான உதாரணங்கள்; நிதர்சணமான கணக்கீடுகள்; நியாயமான ஐயங்கள், நிறைவாக மார்க்க அறிஞர்களிடம் தெளிவான தேவையான வேண்டுகோள்.

யார் எழுதியது என்று சொல்லா விடினும் காக்காதான் எழுதியது என்று அடித்துச் சொல்லும் அளவிற்கு பிரத்யேகமான, கட்டிப்போடும் எழுத்து நடை; புத்திக்கு எட்டும் இலகுவான விரிவுரை என்று வியந்து போகிறேன் தங்களின் ஆக்கங்களை வாசிக்கும்போது!

அதிரை நிருபர் வாசகர்களுக்கு அடித்த யோகம் தங்களின் பங்களிப்பு!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

அதங்கள் கட்டுரையின் இறுதியில் இழையோடும் ஆதங்கத்தை அடையாளம் கண்டதால் சொல்கிறேன்.

சாத்தியமே காக்கா. எந்த தொழிலில் முதலீடு செய்கிறோம் என்பதை ஹானஸ்ட்டாக டிக்ளேர் செய்துவிட்டு; அதை கண்காணிக்க மார்க்க அறிஞர் ஒருவரையும் நியமித்து; முதலீடுகளில் ஹராமான தொழில் இல்லை என்பதை நிலைநாட்டினால் சாத்தியமே; பங்குச்சந்தையில் இஸ்லாமியர் ஈடுபடுவது சாத்தியமே!

சுற்றியிருக்கும் அத்துணை மாற்று மதத்தவரும் பருகும்போதும் உண்ணும்போதும் ஓரிறைக்கொள்கையர் மட்டும் நோன்பிருப்பது சாத்தியமெனில் ஹலாலான முதலீடுகளில் லாப நஷ்டம் அனுபவிக்கும் பங்குச்சந்தை இஸ்லாமியனுக்கு சாத்தியமே!

மாமாறையையும் நபி(ஸல்) மொழிகளையும் தவிர எந்த உலமாவின் ஃபத்வாவும் மறுபரிசீலனைக்கு லாயக்கானதே!

sabeer.abushahruk said...

காக்கா,

யூக வணிகம் என்று அடையாளப் படுத்தி விவாதங்கள் நடைபெறுகின்றனவே அது பங்குச் சந்தையைப் பற்றி மட்டும்தானா?

அல்லது, வேறு எவை யூக வணிகங்கள், ப்ளீஸ்?

ZAKIR HUSSAIN said...

இங்கு உள்ள சில வாக்கியங்கள் இந்தியாவுக்கு மட்டும் பொருந்தும் வாக்கியமாக தெரிகிறது.

முதலில் நான் தெரிந்து கொள்ள நினைப்பது , இந்த ஆக்கத்தில் முஸ்லீம்கள் பங்கு சந்தையில் ஈடுபடுவது சரியா ? தவறா ?

கிடைக்கும் பதிலை வைத்து பின் தொடரலாம் .......,

Good Subject to Discuss & Argue

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

//இன்றைய பங்கு சந்தையின் ஏமாற்று பேர்வழிகளின் சூழ்ச்சிகளின் காரணமாக நமக்கு தெரியாத முதலீடு காரணமாகவும் ஆலிம்களின் கருத்து முழுக்க முழுக்க சரியானதே

இஸ்லாமியர்களுக்கு பங்கு சந்தை ஹராம் என்றே சொல்லாலாம்.//



I do not think so.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

யூக வணிகம் பங்குச் சந்தையை மட்டும் குறிவைத்து குறை சொல்லபடுவதல்ல. பங்குச் சந்தையில் அதிகமதிகம் யூகங்கள் - எதிர்பார்ப்புகள் ஆட்சி செலுத்துவதால் அதையும் குறிப்பிடுகிறார்கள்.

யூக வணிகம் பற்றி விரிவாக ஏற்கனவே ஆன்லைன் வர்த்தக முறைகளில் எழுதி இருக்கிறோம்.

விலை ஏறும் என்று வாங்கிப் பதுக்குவது கூட இதில் அடங்கும்.

ஆகவே யூக வணிகம் என்று அடையாளபடுத்தி நடைபெறும் விவாதங்கள் பங்கு சந்தை பற்றி மட்டும் உள்ளவை அல்ல.

Ebrahim Ansari said...

தம்பி மன்சூரும் தம்பி ஜாகிரும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு இருக்கிறார்கள்.

இது இது இதுதான் நான் எதிர்பார்த்த ஒரு ஆரோக்கியமான விவாதம். நாம் விவாதிக்கலாம்.

இன்னும் சகோதரர்கள் கருத்திடலாம். ஏற்புரையில் இயன்றவரை பதில் தர முயற்சிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

ZAKIR HUSSAIN said...

//தம்பி மன்சூரும் தம்பி ஜாகிரும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு இருக்கிறார்கள்.//


விவாதிப்பது என்பது கருத்து பரிமாற்றம்தான். மனிதர்களுக்குள் பிளவை ஏற்படுத்தாது, மாறாக அறிவை வளர்க்கும்.

நானும் சபீரும் விவாதித்த விசயங்களை ஒரு புத்தகமாகவே வெளியிடலாம்.

நானும் இக்பால் சாலிஹூம் பேசிக்கொண்டதை விட விவாதித்துக்கொண்டதே அதிகம்.

எனக்கும் சபீருக்கும் இக்பாலுக்கும் கருத்தில் வேறுபாடுகள் இருக்கும் ....நட்பில் , ஒருவன் மீது ஒருவன் வைத்திருக்கும் அன்பில் வேறுபாடு இருந்ததில்லை.

நண்பன் மன்சூரும் எங்களுக்கு புதிதல்ல.....எங்கள் கால்கள் கண்ட ஒட்டப்பந்தய திடல்கள் மாதிரி காலத்தை வென்று இருக்கும் எங்கள் அன்பு.

sabeer.abushahruk said...

நான் ஓப்பனாகவே சொல்கிறேன்:

பங்குச்சந்தை வர்த்தகம் இஸ்லாமியர்க்கு சாத்தியமே, provided வர்த்தகம் என்ன, முதலீடு ஹலாலானதுதானா என்று உத்தரவாதம் தர வேண்டும்.

உ.: ரெஸ்டொரண்ட், டூரிஸம், டெக்ஸ்டைல்ஸ், கார்மெண்ட்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எட்ஸெட்ரா!

sheikdawoodmohamedfarook said...

முற்றிலும்வட்டியேதலைகாட்டாததொழில்என்னஇருக்கிறது? வெளிநாட்டுக்கு போக பணம் தேவைபடும் போது நகையை பேங்கில் அடகு வைத்து வாங்கும் பணத்திற்கு வட்டி கட்டுகிறோம். விமானகம்பெனி கூடநாம்ஏறிசெல்லும்மானத்தைகடனுக்குவாங்கிஅதற்க்குவட்டிகட்டுகிறது.நாம்நேரடியாகவட்டிவாங்கவோகொடுக்கவோசெய்யாவிட்டாலும்மறை முகமாகநாம்அதில்Involveஆகிறோமா?இல்லையா?இப்படிஎல்லாமேவட்டி மயமாய்இருக்கும்போதுஅதிலிருந்துதப்பிக்கும்வழிஎது?

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் !

மன்சூரும் நீயும் மாறுபட்ட கருத்தைக் கொண்டு இருக்கிறீர்கள் என்று மகிழ்வுடனே குறிப்பிட்டேன்.

நீங்கள் இருவருமே பண்பும் அன்பும் மிக்கவர்கள். ஒரு சிறந்த ஆரோக்கியமான விவாதக்களம் உருவாகப் போகிறது என்ற இரட்டிப்பு மகிழ்ச்சிதான் காரணம்.

பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் உடைய கணிப்பு:

//இங்கு உள்ள சில வாக்கியங்கள் இந்தியாவுக்கு மட்டும் பொருந்தும் வாக்கியமாக தெரிகிறது. //

ஆமாம். உணமைதான். எனக்குத் தெரிந்தவற்றை தெரிந்தவரை எழுதியுள்ளேன்.

தொடர்ந்த பல தகவல்கள் இருந்தால் தெரிந்து கொள்ள அனைவருமே ஆவலுடன் இருக்கிறோம்.

நான் விவாதித்தும் படித்தும் பார்த்த அனைத்து மார்க்கம் படித்தவர்களும் இது கூடாது என்றே சொல்கிறார்கள். அப்படி சொல்கிறவர்களின் வீட்டுப் பிள்ளைகள் அமெரிக்காவிலும் யூ கே யிலும் இதில் ஈடுபட்டு வருவதாக அறிகிறேன். ஆகவேதான் இறுதிப் பகுதியில் எனது கேள்விகளாக சிலவற்றை வைத்து இருக்கிறேன்.

இங்கிலீசு நஸ்ராநியோட பாஷை என்று சொன்னதன் விலையை இன்னும் கொடுத்துக் கொண்டு இருப்பதையும் குறிப்பிட்டேன். இந்த அத்தியாயம் ஒரு ஆரோக்கியமான விவாதத்துடன் ஒரு தீர்வைச் சொன்னால் நலம்.

தம்பி சபீர்! அலைக்குமுஸ் சலாம்.

உங்களின் கருத்துக்கள் வழக்கம்போல சிந்தனைக் கதவைத் தட்டுகின்றன.

ஒரு சட்ட பூர்வமான தீர்வும் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் தேவைப் பட்டால் இன்னொரு அத்தியாயம் அல்லது நிறைவு பதிலில் .

sheikdawoodmohamedfarook said...

மலேசியாஎதிர்கட்சியானPan Islamic Party[பாஸ்] தலைவர் ''யூதன்வட்டி வாங்குபவன்! அவன் நிறுவனங்கள் தயாரித்த எந்தப்பொருளையும் வாங்காதீர்கள்'' என அறிக்கைவிட்டார். ..அதற்க்கு பதிலடி கொடுத்த பிரதமர் மகாதீர் முஹமது ''பாஸ்கட்சியின்தலைவர் இந்த முறை ஹஜ்ஜுக்குசென்று வந்த போயிங் விமானம் யூதகம்பனிசெய்தது' .'என்றதோடுநில்லாமல்''மலாய்காரர்களுக்குவானத்தில்பட்டம் செய்துவிடத்தான்தெரியும்.விமானம்செய்துவிட தெரியாது! பட்டதில்ஏறிஹஜ்ஜுக்குபோகமுடிந்தால்போய்வாருங்கள்' 'என்றார். எங்கெங்குபார்த்தாலும்வட்டியேசூழ்ந்திருக்கும்காலத்தில்அதிலிருந்து தப்பித்துபிழைக்கும்வழியேசொல்லுங்கள். குறிப்பு;மலாய்காரர்கள்வானத்தில்பட்டம்விட்டுவிளையாடுவது ஒருஹோபி.Malaysian Air Ways //Logoவும்பட்டம்தான்.

ZAKIR HUSSAIN said...

உண்மையில் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட வாணிகங்கள் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது.

இதோடு 'லோக்கல் ஆலிம்கள் / ஹஜ்ரத் களுக்கு ' பிடிக்காத தொழில் என்று சில இருக்கிறது, அல்லது விளங்காத தொழில் என்று இருக்கிறது. சந்தேகம் இருந்தால் செய்யாதே என்ற ஹதீசை இவர்களின் அறிவுக்கு எட்டாத தொழிலிலும் சொல்லி விடுவார்கள். நமக்கும் ஃபேஸ் புக்கில் லைக் போடவும் , சன் தொலைக்காட்சியில் வரும் சீரியல்களிலும் நேரம் அதிகம் தேவைப்படுவதால் மார்க்கத்தை பற்றி ரிசேர்ச் சமாச்சாரங்களை படிக்க நேரம் இல்லாத அளவுக்கு பிசி. உடனே இதுபோல் அப்டேட் ஆகாத ஆலிம்களின் திருவாய் மலர்ந்தவுடன் அப்படியே யோசிக்காமல் ஏற்றுக்கொள்கிறோம்.

சரி ஷேர் மார்க்கெட்டில் இஸ்லாத்திற்கு எதிர்ப்பான விசயங்கள் இல்லை.....கீழ்க்கண்ட காரணங்கள் சரியாக பின் பற்றப்பட்டால்

1. Syariah approved counters

உங்கள் முதலீடுகள் ஹராமான தொழிலுக்கு முதலீடு செய்யக்கூடாது. நல்ல உதாரணம் [ Petrolium Corporation ] ..தவறான முதலீடு [ டாஸ்மார்க் / சூதாட்ட கம்பெனிகள். ].
இதை உறுதிசெய்ய மார்க்கத்தில் சிறந்த அறிவு பெற்றவர்கள் , இஸ்லாமிய கல்வியை முறையான பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்றவர்கள் உறுதி செய்ய வேண்டும். International Islamic university , Malaysia - Madinah University - Saudi Arabia , Al Azhar University -Cairo போன்றவைகளில் சிறந்த இஸ்லாமியப்பொருளாதர மேல் படிப்புகள் / ஆராய்ச்சி படிப்புகள் பயிற்சி கொடுக்கிறார்கள்.


2. Governed By Syariah committee with the knowledge of profound Investment analyst background.

இஸ்லாத்திற்கு ஏற்புடையது இல்லாத முதலீடுகள் தெரிந்து சரியான சமயத்தில் ஃபண்ட் ஸ்விட்ச் செய்ய தெரிந்த ஃபண்ட் மேனேஜர்கள், அவர்களது முந்தைய அனுபவம் ஒரு நல்ல ஃபண்ட் மேனஜர்கள் என்பதை காண்பிக்க வேண்டும். எந்த விதமான கிரிமினல் கேஸ்களும் அவர்களின் பெயரில் இருக்க கூடாது. இதை செக்யூரிட்டி கமிசன் உறுதி படுத்த வேண்டும். நாட்டின் மத்திய வங்கியின் நேரடி ஆர்டரில் வேலை உறுதி செய்யப்பட வேண்டும்.


3. Fund Managers / Fund Management corporation is liable to investors on Profit / loss distribution.

முதலீட்டாளர்கள் நம்பும்படி அவர்களின் பெர்ஃபார்மென்ஸ் இருக்க வேண்டும். ஏற்கனவே பல ஊழலில் சிக்கி மந்திரிக்கு பழக்கம், தலைவருக்கு பழக்கம் அதனால் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் என்ற வசனங்களுக்கு இஸ்லாமிய முதலீட்டில் இடமில்லை. டிச்ட்ரிப்யூசன் ஒழுங்காக இல்லாவிட்டில் களி தின்ன வேண்டி வரும். பாச்சை ஒடும் சாதம் சாப்பிட முடியும் என்றால் மட்டுமே தில்லு முல்லு செய்ய முடியும்.



மேற் சொன்ன அத்தனை விசயங்களையும் நெறி செய்து மலேசியா , சவூதி , குவைத் , போன்ற நாடுகளில் 1984 ல் இருந்து இஸ்லாமிய பொருளாதாரத்தை கைக்கு எட்டும் தூரத்தில் கொண்டு வந்து விட்டார்கள். இஸ்லாமிக் இன்வெஸ்ட்மென்ட் முறையாக கையாள்வதால் மாற்று மதத்தினரும் அதிகம் முதலீடு செய்கின்றனர்.

மேற் சொன்ன அனத்திலும் மலேசியா கால் பதித்து வெகுநாட்களாகி / வருடங்களாகி விட்டது.

இதெல்லாம் தெரியாமலும் , இதை எதிலாவது படிக்க வேண்டும் என்றும் எண்ணம் இல்லாதவர்களையும் எப்படி நாம் ரெபரன்சுக்கு எடுக்க முடியும்.

நம் பகுதிகளில் ஒரு எழுதப்படாத விதி என்று இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட அனைத்து விசயங்களையும் ஒரு கோட் போட்ட வெள்ளைக்காரன் சொன்னால் அவன் குதிரைக்கு நெதர்லாந்தில் லாடம் அடிக்கிறவனாக இருந்தால் கூட ஏன் என்று கேட்காமல் நம்பும் நமது சனங்கள்...என்னைப்போல் கைலி கட்டிய "பாய்" களை நம்புவதற்கு யோசிக்கும்.

Unknown said...

Assalamu Alaikkum

Respected brother Mr. Ebrahim Ansari,

A well expressed details on investing in stock market with good examples and clarifications. It is motivating and encouraging Muslim community to think about stock market investment channel.

Investing in stock market needs analytical mind and knowledge about up to the minute trend of the business world, which in turn needs world's common medium of communication 'English' and proficiency in using communication and IT technologies.

Thorough knowledge about businesses based Sharia - business ethics based on Islam gives clarity and clears negativity and beats hesitations to involve investing in the stock market.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari said...

அருமைத் தம்பிகளே! ஜாகிர் & அமீன்

இன்னும் சொல்லுங்கள். இளைய சமுதாயம்தான் இதைச் சொல்ல முன் வர வேண்டும்.

இதை எல்லாம் சொல்லாவிட்டால் இந்த சமுதாயம் துருப்பிடித்துப் போய்விடும்.

Yasir said...

பல நாள் சந்தேகத்திற்க்கு உங்கள் ஆக்கம் மூலம் விவரமாக பதில் கிடைத்து இருக்கின்றது......எங்கே/எப்படி நம் பணம் முதலீடு செய்யபடுகின்றது என்பதை தெரிந்து கொண்டு செய்தால் இஸ்லாத்திற்க்கு எதிரானதாக இருக்காது என்றே தோன்றுகின்றது..அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக ஆமீன்...ஜாஹீர் காக்காவின் ஆணித்தரமான கருத்துகள் அதனை வலுப்படுத்துகின்றன

Shameed said...

//அதிரை நிருபர் வாசகர்களுக்கு அடித்த யோகம் தங்களின் பங்களிப்பு!//

உண்மையான செய்தி

மாமாவின் பங்களிப்பு எங்களுக்கெல்லாம் நல்ல யோகமே

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அன்பானவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

பலர் மவுனம் சாதித்து இருக்கிறார்கள் . மனமில்லையா ? நேரமின்மையா?


தம்பி ஜாகிர் அவர்களின் விரிவான விளக்கம் மற்றும் சில விவாதங்களின் அடிப்படையில் இந்தத் தலைப்பில் இன்னொரு அத்தியாயம் தேவைப் படுகிறது.


இன்ஷா அல்லாஹ் .

Ebrahim Ansari said...

முத்துப் பேட்டை ஆசாத் நகர் தலைம இமாம் கண்ணியத்துக்குரிய மவுலானா அசதுல்லா அவர்கள் எனக்கு அனுப்பிய அவர்களின் கருத்துக்கள்.

மவுலானா அவர்கள் விரைவில் அதிரை நிருபரில் ஒரு தொடர் எழுத இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ்.

இதோ அவர்களின் கருத்துக்கள் :

assalamu alaikkum varahmathullahi vabarakathuhu,
azahana katturai arumaiyana vimarsanangal masha allah.
share market patriya verivana alasalkal,share market halala harama endru arivathil aarvamulla anaivarukkum allah arulpurivanaha! aameen. aanal ekkatturaiyilum athan vimarsanangalilum oru karuththakkam uruvakkappattiruppathu varuththamalikkirathu.
athavathu muslimkalin porulathara pinnadaivukku ulamakkale karanamenrum avarkal vilakkamillamal shariyath anumathitha pala vishayangalai haram endru kuriththirivathu polavum thirumma thirumba kurappattirikkirathu.
halal haramai poruththa varai quran hadeesil thelivaha vanthathai karana kariyangalai patri yosikkamal athu halal allathu haram endru korividuvarkal. ex..1) pandri eraichi
ethrku entha karanamum solla thevai ellai.athanal nanmai endru ariviyal nerubiththalum sariea! 2)vatti .. ethanal makkalukku bathippu illai endralum sariea!
anal puthithaha oru pirachinai varum pothu athai haram enru kora vendumenil athil haramukkana karanam irukkiratha endru parpparkal haramukkana karanam irunthal athu haram, illai enil athu halal ahum endru koruvarkal.ex.veettai leessukku viduvathu .. ethil veettai vaadahai illamal payanpaduthuvathil vatti vullathal athu haram.
ulamakkal english haram endru sonnathum tv haram endru sonnathum intha vakaiyai sarnthathuthan.english tv haram endru quran hadeesil varavillai. enave athu haram endru solvatharkku karanam erunthathu. islathaiyum muslimkalaiyum arabi moziyayum azillum muyarchiyil english pukuththappattathal athai haram endrarkal,tv pothuvaha haram endru yaar kurinarkal? athai haramana nokkil payanpaduththum pothu thane haram endrarkal! yar muthalil haram endru kori pinnar halal endru koriyathu? indrakkum islathai azikkum nokkil oruvan aangilam padiththal athu haram thane! tv il aabasa padam parthal athu indraikkum haram thane! ella alimkalin pillaikalum english padikkirathala, ella alimkalin veettilum tv eruppathala athu tharaha payanpaduththinalum halal endru entha alimavathu korinarkala? illaiye! pirahu een entha karuthukkal? haramana ondrilirunthu vilahi eruppathal intha ummath eththanai kalathirku innum evvalavu vilai koduththalum athu thahum.(nan english padippathai koravillaai) share markettai porutha varai athil vatti,yuuham......pondra haramana vishayangal iruppathal thane athai haram engirarkal! ithil enna thavaru?
islathirku matramana entha vishayamum illamal share market irunthu athaiyum ulamakkal haram endru koruvathu pondru ekkatturaiyum athan pinnuuttangalum kurukirathu.
nam naattil ulla ezuthappadatha vithi eezaikalum padippu eeratha manavarkalum than madarasa selkirarhal,athanal share markettin ella nutpangalaiyum avarkal anaivarum arinthu kolvathu siramam than. enave padiththavarkal ethai patri thezivaha vizakka vendum. halalana ella muraikalaiyum eduththukkuri athaiyum ulamakkal haram endru korinal appothu katturaiyin kadaisiyil ketkappatta kelvikalai patri yosippom.

Ebrahim Ansari said...

மவுலானா அசதுல்லாஹ் அவர்கள் நோன்பு மாதத்தில் தங்களுடைய கடுமையான பணிகளுக்கிடையே இந்த பதிலைத் தந்திருப்பதற்கு அவர்களுக்கும் அவர்களை நம்மிடையே ஆக்கித் தந்த இறைவனுக்கும் நன்றி செலுத்துகிறோம்.

இது போன்ற ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் மிகவும் வரவேற்கப்படுகின்றன.

இதை நான் ஒரு வளர்ச்சியாக கருதுகிறேன்.

இன்ஷா அல்லாஹ் மவுலானா அவர்கள் எழுப்பி இருக்கும் ஆதங்கமான கேள்விகளுக்கும் நம்மால் இயன்ற பதிலை இந்தத் தொடரின் அடுத்த பதிவில் தருவதற்கு முயற்சிக்கிறேன்.

அதற்குள் மவுலானா அசதுல்லாஹ் அவர்கள் தமிழிலேயே எழுதும் அளவுக்கு அவர்களுடைய கணினியில் அமைப்புகள் சரிசெய்யபப்டும். இன்ஷா அல்லாஹ்.

ZAKIR HUSSAIN said...

share markettai porutha varai athil vatti,yuuham......pondra haramana vishayangal iruppathal thane athai haram engirarkal! ithil enna thavaru?

இதை மவுலானா அவர்கள் இந்தியாவில் உள்ள ம்யூச்சுவல் ஃபன்ட் மேனஜ்மென்ட்டை "மற்றும்" நினைவில் வைத்து சொல்லியிருக்கிறார்களா என தெரிய வில்லை.

இஸ்லாமியப்பொருளாதாரத்தை முறைப்படுத்திய நாடுகளான மலேசியா , குவைத் போன்ற நாடுகள். வட்டி கலக்காத ஷரியா அனுமதிக்கப்பட்ட பொருளாதாரமும் மார்க்கமும் சேர்ந்து படித்த , இஸ்லாமியத்துறையின் அனுமதி பெற்ற வல்லுனர்களால் நடத்தப்பட்டு இஸ்லாமிக் ஃ பன்ட் என்ற அனுமதியோடு நடத்தப்படுகிறது.

இது ஹராமான விசயமாக இருந்தால் இவ்வளவு ஏற்பாடுகள் செய்யத்தேவையில்லை.

மலேசியாவைப்பொருத்தவரை இஸ்லாமிக் ஃபைனான்ஸ் டிகிரியே இருக்கிறது. "INCEIF" [ இது பாஸ் செய்வது அவ்வளவு சுலபமல்ல ] .

Islamic Fund [ Syariah approved counters ] ஐ பொருத்தவரை Islamic Bond Fund , Islamic Equity Fund , Islamic Agressive Fund என்று இருக்கிறது. ஒரு ஃபன்ட் உடைய குணம் எதுவோ அது போலவே அது பெர்ஃபார்ம் செய்யும். இதில் வட்டி , ஊகம் இருந்தால் இதுவரை அத்தனை ஃபன்டையும் ஹராம் செய்து இருப்பார்கள்.

பொதுவாகவே எந்த விசயமும் ஹராம் ஹலால் என்று சொல்வதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வோம். ஆனால் அதை யார் சொல்வது என்பதை இந்தியா போன்ற நாடுகள் முறைப்படுத்த வில்லை இதுவரை. அதற்கென்று ஒரு துறை அதற்கென்று ஊழலும் லஞ்சமும் ' இன்னாருடைய மச்சான் , மருமகன் ' என்ற எந்த ரெக்கமன்டேசனும் இல்லாத துறையாக இருந்தாலே இது சாத்தியம்.


இந்தியாவில் 13.8% முஸ்லீம்கள் இருப்பதாக விக்கிபீடியா சொல்கிறது. இருப்பினும் இது போன்ற இஸ்லாமியத்துறைகள் இல்லாவிட்டால் பிறை பார்ப்பதிலேயே பிரச்சனைகள் வந்து போய்க்க்கொண்டிருக்கும்.

ZAKIR HUSSAIN said...

//"மற்றும்" நினைவில் //

Must read as "மட்டும்"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பங்குச் சந்தை பற்றி அதிகம் ஆர்வமில்லாமல் இருந்த காலம் போய் என்னை இன்று என்னோட முதலாளியின் அனைத்து பங்குகளையும் சந்தையில் புகுந்து சந்து பொந்துகளில் தேட வைத்திருக்கிறது !

ஐ-ஃபோன், ஃபேட், சாம்ஷங் இதோடு கணினி என்று அனைதிலும் லைவ் ஸ்டாக் மானிட்டருக்கான் அப்ப்ளிகேஷன் வைத்துக் கொண்டு தேட வைத்திருக்கிறது...

ரொம்பவே இன்டரஸ்டிங்கா போயிட்டு இருக்கும்போது சந்தை (கடை) சாத்தும் நேரத்தில் சரிவென்று தெரிந்தாலும்... என்னோட முதலாளி சொல்வது "அல்ஹம்துலில்லாஹ் !"

Ebrahim Ansari said...

அன்பானவர்களே!

இந்த அத்தியாயத்தின் பின்னூட்டத்தில் இவற்றுக்கு பதில் அளிக்க இயலாததால் இதற்காக இன்னொரு அத்தியாயம் இன்ஷா அல்லாஹ் எழுத நினைத்து இருக்கிறேன்.

வரும் சனிக்கிழமை சந்திக்கலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு