Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இறைவன் அருளிய இரவு! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2014 | , , , , ,


தெளிவான வேதம் தரைவந்த மாதம்
ஒளியான இரவில் இறைதந்த மார்க்கம்
பிரகாச இரவை பிசகாத அருளை
பிறைசார்ந்த உறவை படைத்திட்ட இறைவா

பாவமென அறிந்தும் பழகியன பொறுத்து
பாரமென அழுத்தும் தண்டனை அகற்ற
கடைப்பத்து நோன்பின் ஒற்றைப்படைப் பிறையில்
கிடைத்திட அருள்வாய் ‘லைலத்துல் கதிர்’

கைக்கெட்டும் தூரம் கவளமென சோறும்
கைப்பிடி குவளையில் கனிகளின் சாறும்
கண்படும் அருகில் கிடைத்திட்ட போதும்
கடன்பட்ட நாவோ இறைப்புகழ் ஓதும்

நிற்கின்ற நிலையில் நெடுநேரம் தொழுதோம்
நெற்றி நிலம்தொட்டு நின்றன்முன் விழுந்தோம்
பட்டதுய ரெல்லாம் போதுமென அழுதோம்
பகலிரவு பாராமல் பிரார்த்தித்தே எழுந்தோம்

கணக்கிட்டுக் கொடுத்த தர்மங்கள் அறிவாய்
மெனக்கெட்டு செய்த தியானங்கள் ஏற்பாய்
மனக்கட்டுக் கொண்டு துதித்தது உனையே
இனக்கட்டுச் சிறக்க இறைஞ்சுகிறோம் அல்லாஹ்

அன்பிலும் அருளிலும் அளவற்ற நீதான்
அகத்தையும் புறத்தையும் அறிந்திட்ட அல்லாஹ்
எண்ணமும் செயல்களும் செய்திட்டப் பாவம்
மன்னித்துக் காத்திடு மறைதந்த இறையே

இம்மையும் மறுமையும் அழகாக்கி தருவாய்
இழிவையும் அழிவையும் நிகழாது நீக்கு
உன்னையே துதிக்கிறோம் உளமாற கேட்கிறோம்
நரகத்து நெருப்பை எமைவிட்டு விலக்கு

ஏந்திடும் கரங்களில் ஈடேற்றம் இடுவாய்
ஏகனே எங்களைச் சுவர்க்கத்தில் விடுவாய்
நீர்நிலை நெளிந்தோடும்  நதிக்கரை தருவாய்
நின்னையே வணங்கினோம் எம்மைநீ காப்பாய்

நரகத்து நெருப்பிற்கு விறகாக்க வேண்டாம்
நாள்தோறும் வெந்தழியும் தண்டனை வேண்டாம்
சுவனத்துக் கதவுகள் திறக்கின்ற மாதம்
சுகமான சீவிதம் கிடைக்கட்டும் இறைவா

ஆயிரம் இரவுகளுக்கு மேலான இரவின்
அருள்மழை எம்மீது பொழியட்டும் அல்லாஹ்
முகமன் செய்தொழுகும் அதிகாலை வரையே
வானவர் உலவவே இறைஞ்சுகிறோம் அல்லாஹ்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
இது ஒரு ரமளான் மீள்பதிவு

4 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆயிரம் இரவுகளுக்கு மேலான இரவின்
அருள்மழை எம்மீது பொழியட்டும் அல்லாஹ்
முகமன் செய்தொழுகும் அதிகாலை வரையே
வானவர் உலவவே இறைஞ்சுகிறோம் அல்லாஹ்!
//


நன்றி... கவிக் காக்கா !

sheikdawoodmohamedfarook said...

கண்ணில்பட்டனகவிதை;'காதில்பட்டனஓசை!எந்தவரிகளைதொடுவதுஎந்தவரிகளை விடுவது என்ற தவிப்பை தரும்கவிதைஅல்ல; படைத்தவனை துதிபாடும் அற்ப்புதப்படைப்பு! . [ உன்]'அருள் மழை எம்மீது பொழியட்டும் அல்லாஹ்'/ஆமீன்.

Iqbal M. Salih said...

அழகிய மாதம் குறித்து அழகிய எழுத்து!

ஆயிரம் மாதங்களைவிட உயர்ந்த இரவைப் பற்றி எழுதியதற்காக, ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள் சபீர்.

adiraimansoor said...

நன்பன் இக்பால் கூரும் பின்னுட்டைத்தையே நானும் வழி மொழிகின்றேன்
அழகிய மாதம் குறித்து அழகிய எழுத்து!

ஆயிரம் மாதங்களைவிட உயர்ந்த இரவைப் பற்றி எழுதியதற்காக, ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள் சபீர்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு