Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஏர்மைல் தவாலும், எங்கூரு 'தொனா கானாவும்" 20

அதிரைநிருபர் பதிப்பகம் | September 01, 2014 | , , , ,

இன்று மனித இதய ஓட்டத்தை துல்லியமாய் ஒரு காகிதத்தில் கோடு போட்டு காண்பிக்கும் ஈ.சி.ஜி. போல அன்று அயல் தேசங்களில் வாழும் நம் சொந்த பந்தங்களும், ஊரில் இருக்கும் உறவுகளும் தன் உள்ள ஓட்டத்தை ஒரு காகிதத்தில் பேனா மை கொண்டு  கடிதமாய்/கடுதாசியாய் எழுதி முடித்து உரியவருக்கு நாட்கள் பல ஆகினாலும் சென்று சேர அனுப்புவதே அக்கால மக்களின் ஒரே வழக்கமாய் இருந்து வந்தது. தொலைத் தொடர்புகளும், தொடு திரைகளும் இன்னும் உலகில் பிரசவிக்காத நேரம் அது.

எங்கோ தெருவின் ஒரு மூலையில் இருக்கும் வசதி படைத்தவர் வீட்டில் மட்டும் இருக்கும் விரல் நுனி விட்டு எண்ணை சுழற்றும் இரு கை தசைகளை வலு பெறச்செய்யும் இரும்பாலான 'டம்புல்ஸ்' போல ரிசீவருடன் இருக்கும் அந்த கறுத்த மொரட்டு தொலைபேசி. எழுதப்படாத விதியாய் ட்ரிங்....ட்ரிங் மட்டுமே இருக்கும் அக்கால ரிங் டோன். ட்ரங்கால் புக் பண்ணி வீட்டிலுள்ளவர்களை ஒரு நேரம் குறிப்பிட்டு அவ்வீட்டிற்கு வரவழைத்து கொஞ்சம் காத்திருக்க வைத்து கண்களில் நீரும், வாயில் தற்காலிக சந்தோசத்தை சிரமப்பட்டு வரவழைத்து கொஞ்சம் பொய்யும் கலந்து இங்குள்ளவரும், அங்குள்ளவரும் பரஸ்பரம் யாரும் மனம் நோகாமல் ஒருவருக்கொருவர் கச்சிதமாய் வேதனையை சிரமங்களுடன் உள்ளுக்குள் சமாளித்து தொலைபேசி உரையாடல்களில் இருபக்க நல விசாரிப்புகள் சில நிமிடங்களுக்காக வரையறுத்து தொடரும் காலம் அது.

கையடக்க தொலைத் தொடர்புகளெல்லாம் சாத்தியமில்லை அக்காலத்தில். ஆனால் தினம்,தினம் சந்தோசங்கள் அவரவருக்கு தொடர்பில் சாத்தியமாய் தான் இருந்தது. ஒருவருக்கொருவர் உறவு முறைகூறிக்கொள்வதில் அப்படி ஒரு உற்சாகம் அன்று. இன்று போல் தம்பியாய் இருந்தாலும் (அண்ணாவியார் வீட்டில் விடிகாலையில் விஷ கடிக்கு வேர் கட்டி) திரும்பிப்பார்க்காமல் செல்லும் காலமல்ல அது.

இன்று பாசிசமும், மத துவேசமும் புற்றீசல் போல் எங்கும் பரவி மனிதம் மாசடைந்துள்ளது போல் அன்று கேன்சரும், கிட்னிப் பிரச்சினையும் பரவாமல் எங்கோ ஒரு மூலையில் மட்டும் வந்து  யாருக்கும் அதிர்ச்சியூட்டாமல் அப்படியே மண்ணுக்குள் போய்ச் சேரும்.

கடிதங்கள் அன்று தந்த அந்த சந்தோசக்குவியலை இன்று தொடு திரைகள் சில சில்லரையாய்க்கூட நமக்கு தருகிறதா? தெரியவில்லை. 15 பைசா மஞ்சள் கார்டு தந்த அந்த அனுபவம் இன்று ஐ ஃபோன் தந்ததாக தெரியவில்லை. விண்டோஸ் நம் வீட்டின் ஜன்னலாக மட்டுமே இருந்த காலம் அது. மவுஸ், வீட்டின் தானியங்களை நாசம் பண்ணும் சிறு எலியாக மட்டுமே இருந்தது. ஹார்ட்வேர், கட்டுமான வீடுகளை ஆணி, கதவு, கொலிக்கி, திருகாணி, சுத்தியல், பூட்டு, கம்பி, வயர், லைட்டு, திருப்புளி கொண்டு பூர்த்தி செய்யும் சாமான்கள் விற்கும் கடையாக மட்டுமே இருந்தது. ஃபைல், காகித ஆவணங்கள் கச்சிதமாய் வைக்கப்பட்ட ஒரு கோப்பாக மட்டும் இருந்தது. பேஸ்ட், காலையில் பல் துலக்க பயன்படும் பற்பசையாக மட்டுமே இருந்தது. கட் என்றால் கத்தி கொண்டு வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக மட்டுமே இருந்தது. வெப் என்றால் சிலந்திவலையாக மட்டுமே இருந்தது. வைரஸ் என்றால் நோய் பரப்பும் நோய்க்கிருமியாக மட்டுமே இருந்தது. அப்ளிகேசன் என்றால் அது மனு கொடுப்பதாக மட்டுமே இருந்தது. ஆப்பிள், ப்ளேக் பெர்ரி போன்றவைகள் புரதம் நிறைந்த பழங்களாகவே இருந்தன.


பிறை போட்டு அதன் நடுவில் 786 முதலில் எழுதி நாயன் துணை, ஆண்டவன் துணை, தேவரீர், அன்பும், பாசமும், நேசமும் உள்ள........ என்றெல்லாம் பாசத்தின் பரிசுத்த மொழியை அடைமழைபோல் கடிதத்தில் கொட்டி தீர்த்து அத்துடன் சிலசமயம்  ஆசையாய் ஸ்டூடியோவில் எடுத்த அக்கால வண்ண புகைப்படத்தை ரகசியமாய் அதனுள் இணைத்து அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பி இருபத்தைந்து நாட்கள் கழித்து வரும் பதிலுக்காக உள்ளத்தில் உற்சாகமாய் காத்துக்கிடக்கும் காலம் அது.

சில சமயம் ஆசை வார்த்தைகளுடன் அது,இது அனுப்பி இருக்கிறேன் உம்மாவுக்கு தெரிய வேண்டாம் என்று மனைவிக்கு எழுதிய கடிதமும், மனைவிக்கு தெரிய வேண்டாம் என உம்மா வீட்டிற்கு அனுப்பும் சாமான்கள் பற்றி உம்மாவுக்கு எழுதிய கடிதமும் அங்கிட்டு, இங்கிட்டு மாறிப்போய் பெரும் சண்டை சச்சரவுகளில் முடிந்த சில சங்கட சம்பவங்களையும் கேள்விப்பட்டதுண்டு.

அரசுத்துறை மூலம் நடக்கும் மணியார்டர் எனும் பண பட்டுவாடா,தபால் பரிமாற்றங்களுக்கு மாரிமுத்து, நாடிமுத்து, குப்புசாமி, முனுசாமி.....போன்ற பெயர்களில் தபால்காரர்களும், நம்மைப்போன்ற அரசுசாரா அயல்நாட்டு (பிழைப்பு) சம்மந்தமான தபால், தகவல் பரிமாற்றங்களுக்கு சீருடை போல் என்றும் தலையில் அந்த தொப்பியும், கையில் ஒரு முரட்டு துணிப்பையும், இடது கால் மாற்றி வலது கால், வலது கால் மாற்றி இடது கால் என வழக்கமாய் மாற்றி போடப்பட்ட செருப்புமாய் வீட்டு வாசல் முன்னே வந்து நின்று "ராத்தா, அவ்வூட்லெ இவ்வொ வர்ர செவ்வாக்கெழமெ ராத்திரி சவுதிக்கு பொறப்புட்ராஹ...... தவாலு ஏதாச்சும் இருந்தா எழுதி வைங்க சாய்ங்காலம் வந்து வாங்கிக்கிட்டு போரேன்........" என்று எல்லோருக்கும் பரிச்சயப்பட்ட குரலுடன் வந்து நிற்கும் "தொனா.கானா." என்று எல்லோரும் ஒருமித்து ஆசையாய் அவரை எதிர்பார்த்து அழைக்கும் முத்து மரைக்காயர் அவர்களின் மரணச்செய்தி இரண்டு நாட்களுக்கு முன் நமதூர் வலைத் தளத்தில் பார்த்து நிழலாடும் அவர்களின் அக்கால மகத்தான தபால் பரிமாற்றப் பணியை இங்கு இச்சிறு கட்டுரை மூலம் என்னை நினைவு கூறச் செய்தது .... அல்லாஹ் அவர்களின் எல்லாப் பாவங்களையும் மன்னித்து கப்ரை பிரகாசமாக்கி வைப்பானாக!

எண்ணற்ற நம் சொந்தபந்தங்களின் ஏர்மைல் கடிதங்களை சுமந்து சென்றதால் தான் என்னவோ அந்த கம்பனும் இன்று ஏர்மைல் கடிதம் போல் காணாமல் போய் விட்டது.

உலகில் இன்று எங்கோ நாம் எப்படித்தான் பிஸியாக இருந்தாலும் ஒரு நாள் நம் வாழ்க்கை பிசுபிசுத்து காணாமல் போகத்தான் போகிறது. அது பற்றிய நினைப்புகள் அடிக்கடி வந்து செல்வது நல்லதே.

இப்பொழுதுள்ள இளைஞர்களுக்கு தொனா.கானா. பற்றி அந்தளவுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். பரிச்சயம் இல்லை என்பதற்காக நாம் பழசுகளையும், காலம் சென்ற நம் உறவுகளையும் எளிதில் மறந்து விட முடியுமா? அதற்கு தற்கால சொகுசு, பகட்டு, ஆடம்பர வாழ்க்கை தடையாக இருக்கலாம். மரணம் என்பது கேன்சர் பேஷண்டுக்கும், கிட்னி ஃபைலியர் ஆளுக்கு மட்டும் வரும் சமாச்சாரம் என யாரும் நினைத்துக்கொண்டு திரிந்தால் அதற்கு மரணமும் அதை சரியான நேரத்தில் தவறாமல் உரியவருக்கு அனுப்பி வைக்கும் உயிரை படைத்த அந்த உரிமையாளனும் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்கள். இது யாருக்கும்  இக்கட்டுரை  மூலம்  அறிவுரையல்ல  எழுதியவனுக்கும் சேர்த்தே ஒரு நினைவூட்டல்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

20 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எம்.எஸ்.எம். எழுத்து எப்போதும் அசந்து இருக்கும் மனதை அசைத்து விடும், அன்று இன்று ஒப்பீடும் அருமை !

தொனா கானா அவர்களின் சேவையை அறிந்தவர்கள் எவரும் அவரின் இழப்பு கொடுத்த நினைவால் சற்றே கலங்கத்தான் செய்வார்கள்..

நிறை மறுமை பற்றிய நினைவூட்டல் MSM(n)க்கே உரிய அழைப்புப் பணி... தொடரட்டும் இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கடுதாசி தந்த சுவராஸ்யங்களை தோனாகானா வுடன் இணைத்து தந்தமை மிக அருமை நெய்னா!

sabeer.abushahruk said...

//இன்று மனித இதய ஓட்டத்தை துல்லியமாய் ஒரு காகிதத்தில் கோடு போட்டு காண்பிக்கும் ஈ.சி.ஜி. போல அன்று அயல் தேசங்களில் வாழும் நம் சொந்த பந்தங்களும், ஊரில் இருக்கும் உறவுகளும் தன் உள்ள ஓட்டத்தை ஒரு காகிதத்தில் பேனா மை கொண்டு கடிதமாய்/கடுதாசியாய் எழுதி முடித்து //

கவிதைபோல துவங்கி கச்சிதமாய் எழுதப்பட்டிருக்கிறது கட்டுரை.

தொனா கானா அவர்கள் ஒரு காலகட்டத்தின் கலாசாரக் குறியீடாக வாழ்ந்து மறைந்துள்ளார்கள்.

Ebrahim Ansari said...

//ராத்தா, அவ்வூட்லெ இவ்வொ வர்ர செவ்வாக்கெழமெ ராத்திரி சவுதிக்கு பொறப்புட்ராஹ...... தவாலு ஏதாச்சும் இருந்தா எழுதி வைங்க சாய்ங்காலம் வந்து வாங்கிக்கிட்டு போரேன்........" / /

எத்தனை பேருக்கு இன்று இப்படிப்பட்ட சமூக சமுதாய பணியின் பொறுப்பு இருக்கும்?

தேனாகானா ஒரு சகாப்தத்தின் அடையாளமாக வாழ்ந்து மறைந்தார்.

அவருக்காக அனைவரும் து ஆச் செய்வோம்.

sheikdawoodmohamedfarook said...

786நாயன்துணைதேவரீர்அவர்கள்தேவரீர்முனா.சேனா.முனா.நெய்னா முஹமதுஅவர்களுக்கு மம்மதுபாருக்கு எளுதிகொல்லும் அஸ்ஸலாமு அலைக்கும்.இவடஞ்சுகம்.அவடஞ்சுகங்களுக்குதாக்கல்போடவும். தாங்கள்எளுதியபடியாகநான்உம்மாக்குதெரியாமேபொண்டாட்டிக்கிஎந்த ஜாமானோகாஸோபணமோஅனுப்பலே! சொவமாஅவஈக்கிராளான்டுகேட்டுஒருவார்த்தைஎலுதுனாலேஅவபாடு சந்திக்குவந்துடும். .இந்தக்கடுதாசியேதந்திபோல்பாவிச்சுமறந்துடாமேபதல் போடுங்க.நாஎளுதுனஇந்தகடுதாசியேஎங்கூட்டுலேகாமிக்காதிய.மற்றவைஅவடம்தாக்கல்பாத்து.எல்லாத்துக்கும்அல்லாபோதுமானவன். ஆகையால்வேணும்துவாசலாம்

sheikdawoodmohamedfarook said...

தோனா.கான வின் தோற்றம்ஒருமாதிரியாக தெரிந்தாலும் மிகவும்சுத்தம் பேணும்நபர் அவர்படுக்கும் இடத்தை இரண்டு அல்லது மூன்றுநாளைக்கு ஒருமுறைகழுவிசுத்தம்செய்தேபடுப்பார்.நடந்துபோகும்போதுபாதையில் கிடக்கும்குப்பைகூலங்களைஓரமாகஒதுக்கிபோட்டுநடப்பதைநான்பார்த்து''நான்இந்தியாவில்தான்இருக்கிறேனா?''என்றசந்தேகம்வந்தது.அவர்படுத்தஇடம்எப்பொழுதும்கழுவிஎப்படிசுத்தமாகஇருந்ததோஅதேபோல்அவரின் இந்தஉலகின் கடைசி தூக்கம் முடிந்த பின்னும் அந்த இடம் ஈரமாகவே இருந்தது. செவிகள்.செய்திகேட்டது;விழிகள்ஈரம்கண்டது.அல்லாஹ்அவருக்கு நல்லிடத்தைகொடுக்கயாசிப்போமாக.ஆமீன்.

ZAKIR HUSSAIN said...

இந்த உழைப்பாளி மனிதரை எனக்கு அவ்வளவு தெரியாது. [might have seen once or twice in 80's ] இவரைப்பற்றி படிக்கும்போது சோம்பேறியாகத் திரிவதை கெளரவமாக கருதும் ஆட்கள் மத்தியில் இவர் தலை நிமிர்ந்து நிற்கிறார். [ இப்போது மறைந்து விட்டாலும் ]

எம் எஸ் எம் மின் ஒப்பீடுகளும் , எழுத்தின் ஆர்வமும் தொடர்ந்து படித்து விட்டு மறுவேலை பார்க்க வைத்தது.

எம் எஸ் எம் மின் எழுத்து சில டிப்ஸ் தருகிறது. விசயத்தை சின்ன பாரா வுக்குள் பல விசயத்தை எழுத முடியும் எனவும், பழைய நிகழ்வுகளை , விசயங்களை எழுதும்போது 'காலம் தாண்டாமலும்' [ தந்திக்கு காத்திருக்கும் காலத்தில் ஃபேஸ் புக்கில் லைக் போட்டேன் என்று அபத்தம் செய்யாமல் ]

எழுதும்போது மற்றவர்களைப்பற்றி உயர்வான விசயத்தையே எழுதுவது என்ற கொள்கை. ...இன்னபிற...

ஒரு தமிழர் நம் ஊர் வலைத்தளங்களை படித்து விட்டு சொன்ன விசயம்.

' இந்திய முஸ்லீம்கள் தமிழ் வளர்ப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்....

இருப்பினும் ஏன் இவ்வளவு ஒற்றுமையில்லாத ஒரு நிலை?..."

question to ponder!!

Ebrahim Ansari said...

//786 நாயன்துணை .தேவரீர்அவர்கள்தேவரீர்முனா.சேனா.முனா.நெய்னா முஹமதுஅவர்களுக்கு //

மகாராசஸ்ரீ ராசஸ்ரீ என்றும் எழுதுவார்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எண்ணத்தில் தோன்றியதை இங்கு எழுத்துருவில் கொண்டு வந்து படித்த, பண்பட்ட மூத்த சகோதரர்களின் முத்தான கருத்துக்களை பெறச்செய்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.

இங்கு மூத்த காக்கா ஃபாரூக் காக்காவின் எழுத்து என்னை அந்த ஊதாக்கலரு இன்லாண்டு லட்டருக்கும், ஓரத்தில் ஊதாவும் செவப்பும் கலந்த ஏர்மைல் தவாலுக்குள் இழுத்துச்சென்றது.

sheikdawoodmohamedfarook said...

//இருப்பினும்ஏன்இவ்வளவுஒற்றுமைஇல்லாநிலை//ஒரேவார்த்தையில்சொல்வதானால்Egoism.''மற்றஎவரையும்விடதாம் மேம்பட்டவர்அல்லதுமுக்கியமானவர்''என்றஎண்ணப்போக்கு. இதுOxford ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ்அகராதியின்விளக்கம்.

Unknown said...

Assalamu Alaikkum

Generally there is a kind of taste when feeling the past happenings from the memories. Brother MSM Naina has sense of recollecting the past and presenting nicely. When we realise that the old memories are assisting us to re-live those moments again even with those who passed away.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai.

Unknown said...

Ego is psychological term, in a single word in Tamil "சுயம்". Over sense of the self, more self centered with arrogance induces artificial power in oneself, destroy harmonious relations and peace will fly away.

இப்னு அப்துல் ரஜாக் said...

எம்.எஸ்.எம். எழுத்து எப்போதும் அசந்து இருக்கும் மனதை அசைத்து விடும், அன்று இன்று ஒப்பீடும் அருமை !

தொனா கானா அவர்களின் சேவையை அறிந்தவர்கள் எவரும் அவரின் இழப்பு கொடுத்த நினைவால் சற்றே கலங்கத்தான் செய்வார்கள்..

நிறை மறுமை பற்றிய நினைவூட்டல் MSM(n)க்கே உரிய அழைப்புப் பணி... தொடரட்டும் இன்ஷா அல்லாஹ் !

அப்துல்மாலிக் said...

அல்லாஹ் அவர்களின் எல்லாப் பாவங்களையும் மன்னித்து கப்ரை பிரகாசமாக்கி வைப்பானாக!

தோனா கானா வைப்பற்றி இன்னும் அதிகமாக சொல்லிருக்கலாமோ நெய்னா.. ஏனென்றால் இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு

Yasir said...

தோனா.கானா...பற்றி தொடரே எழுதலாம்..அந்த அளவிற்க்கு சேவையில் சிறப்பாற்றியவர்.....வாங்கிதிண்ணும் பழக்கம் இல்லாமல் உழைப்பால் சாப்பிட வேண்டும் என்று சாகும்வரை சளைக்காமல் உழைத்தவர்.......
தோனா.கானா அவர்கள் குளத்தில் குளிக்கும்போது தபால் பை மூட்டையை ஒரு நீண்ட கயிற்றால் கட்டி அதனை தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு குளிப்பார் என்று கேள்விப்பட்டு இருக்கின்றேன்...அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக

சகோ .நெய்னா முகம்மது ஆக்கம் பழையவகளை நினைப்படுத்தி நம்மை உற்சாகப்படுத்தும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உழைப்பாளி + சமூக சேவகர் = தொனா கானா.

அல்லாஹ் அன்னவரின் பாவங்களை மன்னித்து, கபுருடைய வாழ்வை நிம்மதியானதாக்கி வைப்பானாக.

MSN N, இறுதியில் மரண நினைவூட்டல் தந்தமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா..

sheikdawoodmohamedfarook said...

ஒருபணக்காரர்காலமானால்அவரிடம்கடுகளேவேகூடஇல்லாதநல்ல குணங்களைஎல்லாம்மலையளவேஇருப்பதாககற்ப்பித்துகாவிபாடி பெருமைசெய்யும்இந்தஉலகில்தோனா.கானாபோன்றஒருஓட்டைசைக்கிள்கூட இல்லாத மனிதருக்கு அ.நி.யும் அதன் வாசகர்களும் அளித்த இதயாஞ்சலிகாலம் மாறுவதையும் மனிதனின் மனசாட்சி இன்னும் மரணிக்கவில்லைஎன்பதையும் காட்டுகிறது.

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.தாமததுக்கு வருந்துகிறேன்!
தொ.கா!தொலைதூர கணவை சுமந்து வந்தவர்! நம்மவரின் எழுத்து நடையை எழுந்து நடந்து, பல் தூரம் கடந்து சேர்த்தவர்!ஒவ்வொரு வீட்டு விலாசமும் இவரிடம் குசலம் விசாரிக்கும்!இப்ப எங்கே இவர் கானோம் என ஏங்கி நிற்கும்! ஒவ்வொரு விலாசமும் தன் முகவரி இழந்து நிற்கும்!இவரின் கால்களின் வாசம் எல்லா தெருமண்ணிலும் இன்னும் ஆழப்பதிந்திருக்கும்!இந்த உழைப்பாளிக்கு அல்லாஹ் சுவனதில் ஒரு விலாசம் கொடுக்கட்டும்!

crown said...

இவர் சோம்பேறித்தனத்தின் முகத்திரை கிழித்து! முத்திரை பதித்தவர்!பிச்சை எடுக்க தாபால்னு பிறர்காலில் விசும் பலரில் தாபால் மூலம் கவுரமாய் உழைத்து நிமிர்ந்தவர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு