Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

17

அதிரைநிருபர் | September 20, 2014 | , , ,

தொடர் பகுதி - ஒன்பது

பாலஸ்தீனமும் ஜெருசலமும் மீண்டும் முஸ்லிம்களின் வீரப்பிரதிநிதியான சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களால்  கைப்பற்றப்பட்டு - அவரது  ஆளுமையை ஏற்றுக்கொண்ட யூத கிருத்தவர்களையும் சமமாக ஜெருசலத்தில் வாழ அனுமதித்து - உயர் பதவிகளில் இருந்தவர்களை எல்லாம் பத்திரமாக அவரவர் சொத்துக்களுடன் அவரவர் ஊருக்கும் நாட்டுக்கும் அனுப்பி வைத்து - அநாதரவாக விடப்பட்ட சிலுவைப் போர் வீரர்களுக்கும் கருணையுடன் லெபனானில் இடம் ஒதுக்கித்தந்து வாழ வழிவகுத்துத்தந்த  சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களை நல்லுலகமும் நன்றி கூறும் உலகமும் நாவினிக்கப்  புகழ்ந்தது.

நன்றி கெட்டதனத்துக்கு நானிலத்துக்கே இன்றுவரை சரித்திரச் சான்றாகத் திகழ்ந்த    சிலுவைப் போர் வீரர்கள் திமிரெடுத்துத் திரண்டு வந்து மூன்றாம் சிலுவைப் போர் ஏற்பட்ட நிகழ்வுகளைக் காணும் முன்பு,  தான் வென்றெடுத்த பகுதிகளில் சலாஹுதீன் அவர்கள் எப்படி ஆட்சி நடத்தினார் என்பதையும் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி ஒரு உயர்வான மனிதராக நடந்து கொண்டு மார்க்கம் பேணிய மனிதராக வாழ்ந்தார் என்பதையும் ஒரு சுற்றுப் பார்த்துவிடலாம். ஏனென்றால் இன்னும் அடுத்தடுத்த அத்தியாயங்களில்  இந்த மாவீரரின் மரணப்பக்கத்தையும்  சந்திக்க இருக்கிறோம். 

 மிக்க மேலானவனான அல்லாஹ், மிகவும் குறுகிய காலத்தில்  சலாஹுதீன் அவர்களை  புகழின் உச்சிக்குக்  கொண்டு சென்றான். ஜெருசலம் மட்டுமல்ல கூடவே குர்திஸ்தான் என்று இன்று அழைக்கப்படும் ஈராக்கின் வாடாத  வட பகுதியையும் லெபனான், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை இணைத்து அகன்ற சிரியாவையும், எகிப்து, எமன், ஹிஜாஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய ராஜ்யத்தை ஏற்படுத்தி அப்பகுதிகளில் நல்லாட்சி புரிந்தார். செங்கடலை சுற்றி உள்ள பகுதிகள் அவரின் கட்டுப்பாட்டின்  கீழ் வந்தன. ஒட்டு மொத்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமை அப்போது பாக்தாத்தில் இருந்தது. அங்கு ஒரு கலிபாவும் இருந்தார். ஆனாலும்  அரசியல் உலகத்துக்கு  சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களின் பெயரே இஸ்லாமிய ஆட்சிக்கு அடையாளமும் சான்றும்  பகன்றுகொண்டிருந்தது .  
 
 சந்தேகமில்லாமல்  அய்யூபி அவர்களின் இறைநம்பிக்கையும்  அர்ப்பணிப்புமே  நூறாண்டுகளுக்கும் மேலாக எதிரிகளின் பிடியிலிருந்த ஜெருசலத்தை சுதந்திரம் பெற வைத்தது. சலாஹுதீன் அவர்களின் தன்னலமற்ற நோக்கங்களை அல்லாஹ் அங்கீகரித்து அவர் பக்கம் நின்றான்.  மூலைக்கொருபக்கம் முடங்கிக் கிடந்த  முஸ்லீம் நாடுகள் இஸ்லாத்தின் பேரில் இணைந்ததும், அரசியல் ரீதியாக நம்பிக்கை கொண்ட தலைவர்களும், அனுபவம் வாய்ந்த வீரர்களும் கண்டெடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட  உண்மையான காரணத்தால்தான்  இந்த மாபெரும் வெற்றி சாத்தியமானது . அல்லாஹ் தனது  அருட்கொடையாக வழங்கிய சலாஹுதீன் அவர்களின்  சீரிய தலைமை மட்டுமே முஸ்லீம்கள் முன்னோக்கி தொழுகை நடத்தும் முதல் மசூதியான அல் அக்ஸா மசூதியையும். நபி ஈஸா  (அலை)  பிறந்த பூமியையும் , பெருமானார்  முகம்மத் நபி (ஸல்)  அவர்கள் மிஹ்ராஜ் என்னும் பயணத்தின் போது இறங்கிய இடமும் அடங்கிய  ஜெருசலத்தை மீட்க வைத்த வரலாற்றுத் திருப்பத்தை வடிவமைத்துக் கொடுத்தது.

நாம் நினைவு கொள்வோம். ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் முதன்முதலில் ஜெருசலத்தில் தொழ நேர்ந்த போது சர்ச்சுக்கு உள்ளே தொழுதால் எதிர்காலத்தில் ஒரு உதாரணம் ஆகிவிடுமென்று சர்சுக்கு வெளியே நின்று தொழுதார் என்று பார்த்தோமல்லவா? அப்படி ஹஜரத் உமர் ( ரலி ) அவர்கள் தொழுத இடத்தில் அந்த நல்லெண்ண நினைவுக்காக ஒரு பள்ளியைக் கட்டினார். 

சலாஹுதீன் அவர்கள் தன்னுடைய ஆட்சி முழுக்க முழுக்க இஸ்லாமிய ஷரீயத்துடைய அடிப்படையிலான  ஆட்சி என்று அறிவித்தார்.  ஹராம் ஹலால் பேணப்படவேண்டுமென்று கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்தார்.  வெட்ககரமானவைகளையும் வீணாக்கும் செயல்களையும் வெறுத்து ஒதுக்கினார். அதுவரை பண்டிகை தினங்களில் ஒயின் குடித்து நடனமாடிக் கொண்டிருந்த எகிப்து முதலிய நாடுகளின் அரசர்களின் நடனத்தையும் சில ஹராமான தடம்புரண்ட  நடப்புகளையும் இரும்புக்கரங்களால் தடுத்து நிறுத்தினார். 

திருமறையை ஓதுவதை தினமும் கடைப் பிடித்த சலாஹுதீன் அவர்கள் உருக்கமான சில வாசகங்கள் அல்லது எச்சரிக்கைகள் ஓதப்படும்போது கதறிக் கண்ணீர் வடிப்பார் என்று அறிகிறோம். உலகின் ஒரு பகுதியை தனது சுட்டு விரலுக்குள் வைத்திருந்த ஒரு வெற்றி வீரர், அல்லாஹ்வின் வாசகங்களுக்கு முன்பாக அனைத்தையும் இழந்த ஒரு வெற்று மனிதராக  அமர்ந்திருந்தார் .

ஐவேளைத் தொழுகையை ஜமாத்துடன் நேரம் தவறாமல் நிறைவேற்றினார். இமாம் வரத் தவறினால், அதற்கு ஈடான ஒருவரை முன்னிறுத்தி தொழுது கொள்வார். தனியாக தான் எங்கும் செல்ல நேரிட்டாலும் , ஜமாத்துடன்தான் தொழவேண்டுமென்பதற்காக பிரத்யோகமாக ஒருவரைத் தனது கூடவே வைத்து இருந்தார் என்று அறியும்போது மெய்சிலிர்க்கிறது. அத்துடன் முன் பின் சுன்னத்துகளையும் தஹஜ்ஜத் தொழுகையையும் கூட போர்க்காலங்களில்  போர்க் களங்களில் கூட தொழுதுவந்ததை   அவர் நிறுத்தவில்லை என்று அபு ஷமாஹ் என்கிற வரலாற்றாசிரியர் வடித்துத் தருகிறார்.  

அதேபோல் சலாஹுதீன் அவர்கள்  தொழுகையில் மட்டுமல்லாமல் மற்ற மார்க்கக்கடமைகளிலும் இறை அச்சம் உள்ளவராகவும் இருந்தார். அதுவே அவர் ஒரு சிறந்த முஸ்லீமாக இருந்ததற்கு காரணமாய் இருந்தது. ஜகாத்தை கணக்குப் பார்த்து  கொடுக்காமல் இருந்ததில்லை. ஏழைகளுக்குப் பெருவாரியாக அள்ளி வழங்கினார். சில நாட்கள் தவறவிட்ட ரமலான் மாத நோன்பை தான் இறப்பெய்திய வருடம் ஜெருசலத்தில் நிறைவேற்றிவிட்டே கண்மூடினாரென்றால் நாம் அவரது இறையச்சத்தின் உச்சத்தை  உணர்ந்துகொள்ளலாம்.   மருத்துவர்கள்  இதுபற்றி எச்சரித்த போது கூட,  இதனால் அல்லாஹ்வால் தனக்கு விதிக்கபட்ட உலகவாழ்வின் நாட்களில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றார். தான் இறந்து போன அந்த வருடம் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், ஹஜ்ஜை நிறைவேற்ற  நேரமும் அவருக்கு அமையவில்லை; ஒரு சக்கரவர்த்தியாக இருந்தாலும்  பொருள் வசதியும் அமையவில்லை என்பதே உண்மை.  உடல்நலமும் ஒத்துழைக்காததால் அடுத்த வருடம் நிறைவேற்றலாம் என்று நிய்யத் வைத்திருந்தார் .  ஆனால் அவரது எண்ணத்தை  இறப்பு முந்தி விட்டது.

இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு வியாக்கியானங்களைக் கூறி திசை திருப்பும் தத்துவவாதிகளையும், இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக பேசும் பழமைவாதிகளையும் வெறுப்பார். அவர் ஆட்சிப்பகுதியில் அப்படி யாரும் பேசித் திரிவதை  அறிந்தால் அவர்களை இரக்கம் பார்க்காமல்  கொன்றுவிட ஆணையிட்டார். இன்றைய சமுதாயம் சந்திக்கும் பல்வேறு விவாதங்களையும் வியாக்கியானங்களையும்  சந்திக்கும் சூழ்நிலையில் சலாஹுதீன் அவர்களைப் போல  இப்போது இன்னொருவரை உருவாக்கி குழப்பவாதிகளை தலையில் தட்டி வைக்க   இறைவன் உதவுவானா   என்று ஏங்குகிறது இதயம். 

பூல் என்ற ஆசிரியரின்  குறிப்புகளின்படி,  சலாஹுதீன் அவர்கள்  தன் மகன்களிடமும்  கவர்னர்களிடமும், நீதியுடனும், நேர்மையுடனும், மக்களை சரியான வழியிலும், அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிந்தும் நடக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.  ஒரு முறை தனது மகன் அஸ்-ஸாஹிரை நோக்கி,

“நான் உனக்கு அல்லாஹ் விடம் பயந்து கொள்வதற்கு துஆ செய்கிறேன், ஏனென்றால் அது தான் நல்ல செயல்களை திறப்பதற்கான சாவி.

அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிய உறசாகப்படுத்துகிறேன், ஏனென்றால் அது ஒன்றுதான் மறுமைக்கான வழி.

இரத்தம் சிந்தப் படாமல் இருப்பதற்கு எச்சரிக்கையாக இரு, ஏனென்றால் ஒருமுறை இரத்தம்  சிந்த ஆரம்பித்தால் அதை  நிறுத்துவது கடினம்’ எனக் கூறியதாக குறிப்புகள் கூறுகின்றன.

அவர் இளமை முதல் சுயமாகக் கற்ற பாடங்கள் மற்றும் பெற்ற அனுபவங்களையே  நடைமுறைப்படுத்தினார் மற்றவர்களுக்கும் சொன்னார். தமது இன மக்களாலேயே கொல்லப்பட வேண்டிய முயற்சிகளிலிருந்து இறைவனருளால் தான் தப்பித்தார். தனக்கு இந்த உலகில் இறைவனுக்காக் இறைவழியில் போரிட வேண்டிய வேலை இருக்கிறது என்றே இறைவன் தன்னை காப்பாற்றியதாகக் கூறுவார்.

ஒவ்வொரு பிரதேசமாக அலைந்து திரிந்து முஸ்லீம் ஆட்சியாளர்களை ஒன்றிணைத்தார். தன் பலம் கொண்ட மட்டும் எதிரிகளை எதிர்த்தார். இதுவே அல்லாஹ் அவரை மோசமான சூழ்நிலைகளிலிருந்து விடுவிக்கவும், சோதனைகளிலிருந்து சுலபத்தில் வெளியேற்றவும் போதுமான தைரியத்தைக் கொடுத்தது. இறைநம்பிக்கை அவரது இதயக் கோட்டையாக இருந்தது. தனக்கு முன் நேர்மையான வழியில் நடந்த கலீஃபாக் களின் சுவடுகளை தொடர்ந்தார். அவர்கள் எப்படி வீரர்களை அல்லாஹ்வுக்கு பயப்படும் படி கட்டளையிட்டார்களோ அதே முறையில் நடந்துகொள்ளும்படி கட்டளை இட்டார். 

அல் கதி இப்னு ஷத்தாத், என்கிற  வரலாற்றாசிரியர் சலாஹுத்தீன் அவர்கள் ஜெருசலத்தை வெல்ல காட்டிய தீவிரம் பற்றிப் பலபடப் பேசுகிறார். இதற்காக பல நாட்கள் தனது குடும்பத்தைக் கூடப் பிரிந்து  தனது இனிமையான வாழ்நாட்களை இந்தப் புனிதப் பணிக்காக போரிடுவதற்காக அர்ப்பணித்தார். தன்னுடைய படை வீரர்களை வெள்ளிக் கிழமைகளில் கூட போரிச் சொன்னதுடன் கூடவே  இறைவணக்கத்திலும் நேரம் தவறாமல் ஈடுபடச் சொன்னார். வெற்றி என்பது தன்னால் மட்டுமல்ல  தனது படை வீரர்களில் யாராவது ஒருவருடைய து ஆவை  இறைவன் செவி மடுத்து அவரது அமலை அங்கீகரித்ததாலேயே   கிடைத்து இருக்கலாமென்று  அகந்தையின்றிப் பெருந்தன்மையாகப் பேசினார்.

இஸ்லாத்திற்கு புறம்பான விஷயங்களை தடை செய்தார். முஹர்ரம் 10 ஆம் நாள்  அஷுரா என்று அறிவித்து அந்நாளில் மக்கள் வேலைகளை விட்டுவிட்டு விடுமுறை அறிவித்துக் கொண்டு , வியாபார நிறுவனங்களை மூடிவிட்டு வீதிகளில் அடித்துக் கொண்டு  அழுது புரண்டு துக்க நாளாக கொண்டாடுவதை தைரியமாகத்   தடை செய்தார்.

அந்நாட்களில்  புனித மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொள்பவர்கள் ஜித்தா நகரில் நுழைவதற்கு  வரி செலுத்த வேண்டும் என்று மக்காவின் இளவரசர் ஒரு  சட்டம் வைத்திருந்தார். சலாஹுதீன் அவர்கள்  அந்த ரொக்க வரியை நீக்கி அதற்கு ஈடாக இளவரசருக்கு எட்டாயிரம் அர்திப்கள் ( ஒரு அர்திப்= 84 கிலோ) கோதுமையை நுழைவு வரியாக செலுத்தினார். அந்த கோதுமை மக்கா  நகர் மக்களின் பசி நீக்கும்   உணவுப் பொருளாக  பகிர்ந்தளிக்கப்பட பயன்பட்டது.  இதனால் பணமாக இளவரசரிடம்  குவியாமல் உணவுப் பொருளாகி மக்களுக்குப் பங்கிட வழி வகுத்துத் தந்தது.  இவ்வாறு சிறு செயல்களானாலும் அதில் பொதுமக்களுக்கு நலம்தரும் வழிவகைகள்   வரும்படி பார்த்துக் கொண்டார் சலாஹுதீன் அய்யூபி.

சலாஹுதீன் அவர்கள்  கட்டிடக்  கலைகளிலும் ஆர்வம் காட்டினார். கெய்ரோவின் பிரம்மாண்டமான சுவர் இடிந்துபோய்  வாயைப் பிளந்துகொண்டு யாரும்  இலகுவாக  நகருக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று வரக்கூடிய அளவுக்கு இருந்தது. அந்த சுவற்றை  29.302 கி. மீ. பரப்பளவில் மொத்த கெய்ரோவையும் உள்ளடக்கிய வண்ணம் சுற்றுச் சுவர் கட்டினார். எதிரிகளிடமிருந்து பாதுகாக்க கல –அத்-  அல் ஜபல் (மலை அரண்மனை) என்ற அரண்மனையையும்  கட்ட ஆரம்பித்தார்.  ஆனாலும் தொடர்ந்து போரில் ஈடுபட்டிருந்ததால் முழுப் பணிகளையும் முடிக்கவில்லை. இது எகிப்திய கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக இருந்தது. சினாய் பகுதியில் சூயஸ் நகரின் வடகிழக்கில் 57 கி. மீ. தொலைவில் கலா –அத்- சினா என்ற இன்னொரு அரண்மனையைக் கட்டினார். கிஸா, அர் ருதாஹ் தீவுகளை நைல் நதியின் ஆழ, அகலத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்தார். கெய்ரோவில் புகழ் பெற்ற மர்ஸ்தான் மருத்துவமனையைக் கட்டினார்.

கல்வியை வளர்ப்பதில்  ஆர்வமாய் இருந்தார். சிறு பிள்ளைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு குர்ஆன் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். ஆரம்பக் கல்வி முடித்த இளைஞர்களை அடுத்தடுத்த  நாடுகளுக்கு சென்றேனும்  உயர் கல்வி கற்க உதவி செய்தார். இவர் காலத்தில் கெய்ரோவில் அம்ர் இப்னு அல் அஸ், அல் அஸர், அல் அக்மார், அல் ஹகிம் பியம்ரில்லாஹ், அல் ஹுஸ்ஸைன் மசூதிகளும், அலெக்ஸாண்டிரியாவில் அல் அத்தரின் மசூதியும் கட்டப்பட்டன.

 டமாஸ்கஸ் நகரம் உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் மத போதனையாளர்களுக்கும், பயில்பவருக்கும் பாலமாக இருந்தது. எகிப்திலும், திரிபோலியிலும் அமைந்த தார் அல் ஹிக்மா கல்விச்சாலை , எண்ணற்ற மாணவர்களைக் கொண்டதாக இருந்தது. சலாஹுதீன் அவர்கள்  மதக் கல்வி போதனைகளை அஸ் ஸியுஃபியாஹ் பள்ளியில் பயிற்றுவிக்க வேண்டினார். அதற்காக 32 நிறுவனங்களின் மூலமாக வருமானம் வரச் செய்தார்.

அவரின் ஆட்சியில் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. வருமானத்தை ஜிஹாத், கட்டிடங்கள் நிர்மாணம், கோட்டைகள், அரண்மனைகள், அணைக்கட்டுகள், கல்வி, மருத்துவமனை  என்று பல துறைகளில் முன்னேற்றத்திற்கு செலவிட்டார். விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கினார். வணிகத்தில் கவனம் செலுத்தி எகிப்தை கிழக்கும், மேற்கும் இணைக்கச் செய்தார். வெனிஸ், பிசா போன்ற பல ஐரோப்பிய நகரங்களை வியாபார ரீதியாக எகிப்தின் முக்கிய நகரங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்தார். வெனிஸ் வியாபாரிகள்,  அலெக்ஸாண்டிரியாவில் அமைத்த      அல்- ஐக்- மார்கெட் என்ற வணிக வளாகம் அந்நாளில் மிகவும் புகழ் பெற்றது. அந்த வணிக வளாகத்தில் எகிப்து மற்றும் சிரியாவின் உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டன. திரிபோலியில் காகித தொழிற்சாலை அமைத்தது சலாஹுத்தீனின் நவீன சிந்தனையின் சாதனை . பின்னர் சிலுவைப் போராளிகள் இதை ஐரோப்பாவுக்கு மாற்றிக்கொண்டனர்.

அவருடைய  முக்கியமான கடற்படைத்  தளங்கள்  எகிப்தில்  இருந்தன. அலெக்ஸாண்டிரியா, டமெய்டா ஆகியவை முக்கிய துறைமுகங்களாக இருந்தன. நைல் நதியின் துறைமுகங்களான அல் ஃபுஸ்தத், குஸ் போன்றவைகளில்  போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு எந்நேரமும் எதிரிகளை எதிர்கொள்ளவும் தாக்குதலுக்கும்  தயாராய் இருந்தன.

நீதிக்கு முன் ஆண்டியும் அரசனும் சமமென்று சொல்லும் நிகழ்வு அவரது சொந்த வாழ்வில் நடந்தது. நேர்மை எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்படிப் பார்த்துக் கொண்டார். உமர் –அல்- கல்லதி என்ற ஒரு வியாபாரி, சலாஹுதீன்  அவர்கள் சுன்குர் என்ற தனது அடிமை ஒருவனை தன்னிடமிருந்து  அபகரித்துக் கொண்டதாக வழக்கு தொடர்ந்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளை நம் கண்முன்னால் கண்டு வருகிறோம். ஒரு அரசரின்  மீதே அடிமையை அபகரித்ததாக வழக்கு! ஆனாலும் வழக்குக்கு வாய்தா கேட்காமல் சலாஹுதீன் அவர்கள்  பொறுமையாக வழக்கை எதிர் கொண்டு தான் நிரபராதி என்று நிரூபித்தார். இறுதியில் வழக்குத்தொடர்ந்த அந்த வியாபாரிக்கு தனது வழக்கப்படி மன்னித்துப் பரிசும் கொடுத்தார்.

இப்படிப் போய்கொண்டிருந்த சலாஹுதீன் அவர்களின் நல்லாட்சியின் புகழ் வானத்தின் மீது போர் மேகங்கள் சூழ்ந்தன. அந்த மேகத்துக்கு வரலாறு சூட்டியுள்ள பெயர் மூன்றாம் சிலுவைப் போர்.

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன் பிறப்பில் முன்பு பிரிவு வந்தால் பின்பு உறவு வரும் ; நன்றி மறந்தவர்க்கும் நன்மை புரிந்தவர்க்கும் முன்பு உறவிருந்தால் பின்பு பிரிவு வரும் என்று சொல்வார்களே அதே போல் நன்றி மறந்தவர்களோடு பிரிவு வரத் தொடங்கியது. போர் தொடங்கியது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

இபுராஹீம் அன்சாரி

17 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹு அக்பர்.மாவீரர் சலாஹுதீன் அய்யூபி ரஹ் அவர்களின் தியாக வரலாறு படிக்கும் தோறும் மெய்சிலிர்க்கிறது.வீரம்,அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம்,பணிவு,நேர்மை,தர்மம் இன்னும் இது போன்ற செய்திகளை படிக்கு போது,ஒரு கணம் உமர் ரலி அவர்களைப் பற்றித் தான் படிக்கிறோமா என்று எனக்கு எண்ணம் வந்து விட்டது.அவர்களின் இரக்க குணத்தை சண்டாளர்கள் பயன்படுத்திக் கொண்டுவிட்டனர் என எண்ணும் போது இன்னொரு நினைவு வருகிறது.
உஹது அல்லது பதர் என்ற போரில் ( தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்) போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட பலரை அபூ பக்கர் ரலி அவர்கள் பிணைத் தொகை,கல்வி பயிற்றுவித்து விடுதலை போன்ற சில யோசனைகளை சொல்ல,உமர் ரலி அவர்கள்,நம் தலைவரிடம் சொல்கிறார்கள்,"என் உறவினரை என்னிடம் கொடுங்கள்,அதே போன்று அவரவர் உறவினர்களை அவரவர்களிடம் கொடுங்கள்,நமக்கு எதிராக போரிட்டவர்களின் தலைகளை நாங்கள் துண்டித்து விடுகிறோம்,என்று.ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்,அபூ பக்கர் ரலி அவர்களின் ஆலோசனைகளை ஏற்றார்கள்.ஆனால்,அல்லாஹ்வோ - உமர் ரலி அவர்களின் யோசனைப்படிதான் செய்திருக்க வேண்டும் என்று நபிகளாரிடம் வஹி அறிவித்தான்.

அதே போன்று,சலாஹுதீன் அயூபி ரஹ் அவர்கள் - அந்த வஞ்சகர்களின் தலையை கொய்திருக்க வேண்டும்.அந்த மாவீரரின் உள்ளத்தில் பிறந்த இரக்கம்,மூன்றாம் சிலுவைப் போராக வடி வெடுத்தது என அறியும் போது,அந்த நன்றி கெட்டவர்களின் தரா தரம் புரிகிறது.

கடல் அலைகள் போல் - ஆர்ப்பரித்து,சில நேரங்களில் அமைதியாகி எங்களை அணைத்து செல்லும் அழகிய எழுத்து உங்களுடையது.எல்லாம் வல்ல அல்லாஹ்,உங்களுக்கு மேன் மேலும் இது போன்ற - வரலாறுகளை அழகிய தமிழில் கொணர்ந்து,உலகம் தெரிந்து கொள்ள அருள் செய்வானாக.

இத, இத, இததான் உங்களிடம் எதிர்பார்க்கும் உங்கள்
மார்க்க சகோதரன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சென்ற பகுதியில் ஏற்பட்ட misconception க்காக வருந்துகிறேன்,காக்கா.

இப்னு அப்துல் ரஜாக் said...

17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

உங்கள் கட்டுரைக்கு சம்பந்தமான ஒரு குரான் வசனம்.

Ebrahim Ansari said...

தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களுக்கும் மற்றும் இந்தத் தொடரைப் படிக்கும் மற்ற சகோதரர்களுக்கும் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.

தொடரின் இந்த அத்தியாயத்தில் கூட சில உடன்பாடான தமிழ் இலக்கிய வரிகள் வந்து விழுந்தன. ஆனால் அவற்றை நீக்கிவிட்டு இந்தப் பதிவை நிறைவு செய்தேன்.

சில மார்க்க அறிஞர்களிடம் நமக்கு உடன்பாடான நமக்குப் பரிச்சயமான சில இலக்கிய வரிகளை நாம் படிப்பதோ அல்லது பயன்படுத்துவதோ தவறாகுமா என்று கேட்டேன்.

அவர்களின் கருத்துப் படி நமது அடிப்படைக் கருத்துக்களை தகர்க்கும் சாயல் உள்ள கருத்துக்களை துளி கூட பயன்படுத்தக் கூடாது ஆனால் நமது அடிப்படை கொள்கைகளுக்கு ஆதரவான கருத்துக்களைப் பயன்படுத்துவதில் குற்றம் வந்துவிடாது என்று கூறினார்கள்.

இதற்காக கடந்த அத்தியாயத்தையும் கருத்து மோதல்களையும் அவர்களுக்குப் படித்தும் காட்டினேன்.

அவர்கள் வழங்கிய அறிவுரைகள் மூலம் நாம் எழுதியவைகள் சரிதான் என்று இருந்தாலும் ஒருவேளை தவறாகிவிட்டால் என்ன செய்வது என்ற எனது சுய கேள்விக்கு விடையாக இந்த அத்தியாயத்தில் நான் எழுதி இருந்த புறநானூறு போன்ற வரிகள் உட்பட சில வரிகளை நானே நீக்கிவிட்டேன்.இதனால் வழக்கமான ஒரு சுவை இந்த அத்தியாயத்தில் குன்றி இருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் கடந்த அத்தியாயத்தில் நான் எழுதி இருந்த அல்லாஹ்வின் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் என்ற வார்த்தைகளைப் படித்த எனக்கு அறிவுரை பகன்ற என்னிலும் இளைய ஒரு மார்க்கம் படித்தவர் எனது தாவக் கொட்டையத் தடவி அப்படியெல்லாம் எழுதாதீர்கள் ஹாஜியார். அல்லாஹ்வின் சோதனையை அல்லது தண்டனையை நாம் கணிக்கவும் முடியாது தாங்கவும் முடியாது என்று கூறியது என்னை கண்கலங்க வைத்தது.

புயலுக்குப் பின் அமைதி உள்ளங்களிலும் உணர்வுகளிலும்.

அல்லாஹ் நமக்கு தொடர்ந்து நல்வழிகளையே காட்டுவானாக!

நமது எழுத்துக்களையும் பொருந்திக் கொள்வானாக! நமது எழுத்துக்களில் உண்மையும் அதனால் பலருக்கு நன்மையையும் விளையும் வண்ணம் நம்மை பயனுள்ள மனிதனாக பண்டுத்துவானாக !

இப்னு அப்துல் ரஜாக் said...

//புயலுக்குப் பின் அமைதி உள்ளங்களிலும் உணர்வுகளிலும்.

அல்லாஹ் நமக்கு தொடர்ந்து நல்வழிகளையே காட்டுவானாக!

நமது எழுத்துக்களையும் பொருந்திக் கொள்வானாக! நமது எழுத்துக்களில் உண்மையும் அதனால் பலருக்கு நன்மையையும் விளையும் வண்ணம் நம்மை பயனுள்ள மனிதனாக பண்டுத்துவானாக ! //

ஆமீன் யாரப்‌பல் ஆலமீன்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எங்கள் வேண்டுகோலை ஏற்று இந்தத் தொடரைத் தொடரும் காக்கா அவர்களுக்கு நன்றி.

இனி,
இடர் இன்றி
தொடர் -அறிவுச்
சுடர் விட்டெறியட்டும்!

அல்ஹம்துலில்லாஹ்.

தம்பி இப்னு அப்துர்ரஸாக்கின் புரிதலுக்கும் உற்சாகமானப் பின்னூட்டத்திற்கும் நன்றி.

sabeer.abushahruk said...

சலாஹுதீன் அய்யூபி அவர்களின் வீரமும் தீரமும் வேகமும் கேட்கக் கேட்க "ஆஹா, இப்படிப்பட்ட அற்புதமான மன்னரைப் பற்றி இத்தனை நாட்கள் தெரியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது.

(அது சரி, நாங்கள் என்ன செய்வோம்? எங்களுக்குப் பாடப்புத்தகங்களில் சொல்லப்பட்டதைத்தானே தெரிந்து வைத்திருப்போம்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காம செப்பாது கண்டது மொழிமோ என்னும் அதிமுக்கியப் பாடலை மனப்பாடம் செய்தால் 10 மார்க் தரும் கல்வித் திட்டத்தில் அய்யுபி அவர்களுக்காக ஒரு மார்க் கேள்விகூட கேட்பதில்லை. எப்படி அறிவது?)

அம்மட்டிலும் எங்களுக்கு இந்தச் சரித்திரத்தை எடுத்துச் சொல்லும் காக்கா அவ்ஶ்ரீகளுக்கு... அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

ZAKIR HUSSAIN said...

இவ்வளவு வீரம் நிறைந்தவர்கள் வாழ்ந்த பூமியில் இப்போது அந்த தேசத்து மக்கள் படும் அவதி சொல்லவே முடியாத அளவுக்கு கண்ணீரை வரவழைக்கிறது.

ஒற்றுமை இல்லாவிட்டால் கண்ட நாய்களும் நம்மை நாட்டாமை பண்ணும் என்பதற்கு பாலஸ்தீனம் ஒரு எடுத்துக்காட்டு.

sheikdawoodmohamedfarook said...

//உமர்அல்கல்லதிஎன்பவர்தன்அடிமைகளில்ஒருவரைசலாஹுதீன் அபகரித்துகொண்டதாகவழக்குதொடர்ந்தார்//அதுபோல்ஒருவழக்குநம் நாட்டில்அப்போதுதொடர்ந்துஇருந்தால்வாய்தாவாங்கி!வாய்தாவாங்கி! வாய்தாவாங்கி!வாய்தாவாங்கி!வாய்தாவாங்கியேநமதுகொள்ளுபேரன் கொள்ளுபேரனுக்குகொள்ளுபேரன்கூடவழக்கின்தீர்ப்பைஅறியமுடியாமல்போய்விடும்.ஒரு ஆட்சியாளர் தன் மீது பொய் வழக்கு போட்டு தோற்றவர்க்கு பரிசும் கொடுத்தது நெஞ்சை நெகிழ்ச்சி யடைய செய்கிறது'' .இன்னாசெய்தாரைஒறுத்தல்அவர்நாண நண்ணயம் செய்துவிடு'' என்னும்குறள் நினைவுக்கு வருகிறது. இந்தபெரும்தன்மைசலாஹுதீன்போன்றமாமனிதர்களுக்குமட்டுமேஉண்டு.இவற்றைபடித்ததோடுமட்டும்விட்டுவிடாமல்நாமும்அப்படியேநடக்க முயற்சிப்போமாக.

sheikdawoodmohamedfarook said...

//தொடரின்இந்தஅத்தியாயத்தில்சிலஉடன்பாடானதமிழ்இலக்கியவரிகள் வந்துவிழுந்தன.ஆனால்அவற்றைநீக்கிவிட்டுஇந்தப்பதிவைநிறைவு செய்தேன்//''அதாவது''இங்கேநல்லமீன்விலைமலிவாகவிற்கப்படும்''என்ற விளம்பரபோர்டைதூக்கிவெளியேபோட்டாச்சு''என்று.யூகித்துக்கொள்ள லாமா? இந்ததொடர்கொஞ்சம்சுவைகுன்றியேகாணப்பட்டது.'உடன்பாடானவரிகள்''என்றுமனமேஉணர்ந்தபோதுஅதைநீக்கியதுகட்டுரையின்கண்ணத்தில் அடித்ததுபோலஇருந்தது.[கவனத்திற்குஒருகுறிப்பு.]கட்டுரையின்முதல்பத்தியில்''சலாஹுதீன் தையுபிஅவர்களை நல்லுலகமும் நன்றிகூறும் உலகமும் நாவினிக்க புகழ்ந்தது''என்பதாகும். ''எல்லாப்புகழும்இறைவனுக்கே''என்றுஇருக்கும்போதுஏன்சலாஹுதீன் அய்யுபைபுகழ்ந்தார்கள்.[''ஏன்டிபட்டிமஞ்சதேச்சு குளிக்கிறேண்டு பேரென்கேட்டான்.பாட்டிசொன்னா.''பழையநெனப்புடா பேராண்டி!''

Unknown said...

Assalamu Alaikkum

Respected brother Mr. Ebrahim Ansari,

Your narration testifies that Salahuddeen Ayyubi's spiritual empowerment - from regularity in prayer, charity, fasting, to behaving good and fairly with fellow human beings - was the key to his personal strength, power and success.

Early expecting next episode.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

இப்னு அப்துல் ரஜாக் said...

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்!ஐய்யா கி வீரமணி அவர்களுக்கு கடிதம்!!

http://kadithams.blogspot.com/2014/09/blog-post_20.html

abs said...

பாலஸ்தீன் என்னும் பெருநிலப்பரப்பின் மிக முக்கிய அடையாளமான ஜெருசலேம் என்கிற நகரைக் கைப்பற்றுவது என்னும் நோக்கமுடன் தொடங்கப்பட்டன, சிலுவைப்போர்கள். உண்மையில் நிலத்தைக் கைப்பற்றுவதல்ல இப்போர்களின் நோக்கம். அது மட்டுமே என்றால் வழக்கமான நாடு பிடிக்கும் யுத்தங்களுள் ஒன்றாக இதுவும் கருதப்பட்டிருக்கும். மாறாக, இஸ்லாத்தின் பரவலைத் தடுத்து, மத்திய ஆசியாவில் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவுவதன் மூலம் நிரந்தரமாக கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஓர் இரும்புத்திரை எழுப்புவதே சிலுவைப்போர்களின் ஆதார நோக்கமாக இருந்திருக்கிறது.

கிறிஸ்துவம் எத்தனையோ வழிகளில் பரவிக்கொண்டிருந்தது. பிரசாரம் அவற்றுள் ஒன்று. மக்கள் இயல்பான உணர்ச்சிப்பெருக்கால் கிறிஸ்துவத்துக்கு மாறிக்கொண்டிருந்தது இன்னொன்று. நாடுகளை வெற்றி கொள்வதன் மூலம் மதத்தைப் பரவலாக்குவது செயல்திட்டத்தின் மூன்றாவது அம்சம்தான்.

ஆயினும் ஜெருசலேம் விஷயத்தில் ஐரோப்பிய சிலுவைப்போர் வீரர்கள் நடந்துகொண்டவிதம் பற்றி சரித்திரம் அத்தனை நல்லவிதமாகக் குறிப்பிடுவதில்லை. யுத்த நெறிமுறைகளை அவர்கள் காற்றில் பறக்க விட்டார்கள் என்பது மிக மேலோட்டமான ஒரு குற்றச்சாட்டு. வெற்றி கொள்ளும் பகுதிகளில் இருந்த மாற்று மதத்தவர்களை அவர்கள் காட்டுமிராண்டிகள் போல் வெட்டிச் சாய்த்ததுதான் இன்றளவும் சிலுவைப்போர்களின் முதல் அடையாளமாகச் சொல்லப்பட்டுவருகிறது.

மிஸாட் என்கிற சரித்திர ஆசிரியர், விட்டால் உலகிலுள்ள அத்தனை முஸ்லிம் மற்றும் யூத மதத்தவர்களையும் கொன்று புதைத்துவிட்டு, அவர்களைப் புதைத்த இடங்களிலெல்லாம் தேவாலயங்களை எழுப்பி அடையாளத்தை மறைத்துவிடும் வெறியில் அவர்கள் இருந்தார்கள் என்று சற்று மிகைப்படவே இதனைச் சித்திரிக்கிறார். அத்தனை மோசமாக மற்ற ஆசிரியர்கள் சொல்லாவிட்டாலும் அட்டூழியங்களைப் பற்றிக் கணக்கு வழக்கில்லாத புள்ளிவிவரங்கள் கிடைக்கவே செய்கின்றன.

abs said...

அப்போது மத்திய ஆசியாவில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த கலீஃபாக்களின் திறமைக் குறைவும் இதற்கு ஓரெல்லை வரை காரணம். இதனை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

முந்தைய நூற்றாண்டுகளில் எத்தனைக்கெத்தனை முஸ்லிம்களின் ஆட்சி வலு ஏறிக்கொண்டே இருந்ததோ, அத்தனைக்கத்தனை பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு பலமிழந்துகொண்டிருந்தார்கள். வாரிசு அரசியல் இதன் முக்கியக் காரணம். சுல்தானுக்குப் பிறகு அவர் மகன் என்கிற ஏற்பாடு ரேஷன் கார்டுக்குப் பொருந்தலாமே தவிர, மாபெரும் சாம்ராஜ்ஜிய நிர்வாகத்துக்கு எப்போதும் உகந்ததல்ல. சுல்தான் திறமைசாலியாக இருந்தால் அவரது மகனும் அப்படியே இருப்பார் என்று கூறுவதற்கில்லை அல்லவா? தவிரவும் நெருக்கடி மிக்க நேரங்களில் இத்தகைய ஏற்பாடு, மிகுந்த அபத்தம் விளைவிப்பதாக மாறிவிடுவதையும் தவிர்க்க முடியாது.

இன்னொரு காரணம், சுயநலம். சொந்த தேசத்திலிருந்தே எத்தனை கொள்ளை அடிக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது. வசூலிக்கப்படும் வரிகளைச் சில தனி நபர்களே பெரும்பாலும் பங்குபோட்டுக்கொள்ளும் வழக்கம் அன்றைய மத்திய ஆசியா முழுவதும் பரவலாக இருந்துவந்தது. இதனால் ராணுவம் போன்ற முக்கியத் துறைகளுக்கு உரிய பலம் சேர்ப்பதற்கான பணம் போய்ச் சேராமலேயே போய்விட்டது.

abs said...

சுல்தான்களைச் சுற்றி இருந்த காக்கைக்கூட்டம் மூன்றாவது முக்கியக் காரணம். இவர்கள் பெரும்பாலும் அமைச்சர்களாகவோ, பிராந்திய கவர்னர்களாகவோ, முக்கியத் தளபதிகளாகவோ இருந்தார்கள். பெரும்பாலும் சுல்தானை தலைநகரிலிருந்து கிளப்பி எங்காவது கோடை வாசஸ்தலத்துக்கோ, குளிர்வாசஸ்தலங்களுக்கோ அழைத்துப்போய் நிரந்தர போதையில் ஆழ்த்தி வைத்திருப்பார்கள். கச்சேரி, மது, கேளிக்கை என்று வாழ்க்கையை உல்லாசமாக அனுபவித்துக்கொண்டிருந்த சுல்தான்கள் யுத்தம் என்று வரும்போது இயல்பாக அச்சம் ஏற்பட்டு, வேறு யாரிடமாவது சிந்திக்கும் பொறுப்பைக் கொடுத்துவிடுவார்கள்.

போதாது?

சாம்ராஜ்ஜியம் அழியத் தொடங்கியது இதனால்தான். ஜெருசலேத்தைக் கைப்பற்றிய சிலுவைப்போர் வீரர்களை அடக்கி, அதன் ஆட்சியை மீண்டும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின்கீழ் கொண்டுவர, முஹம்மத் என்கிற ஒரு சுல்தான் கிடைத்தார் என்றால், அந்த வெற்றிக்கு வயது அவரது ஆயுட்காலம் வரை மட்டுமேதான். முஹம்மதின் மரணத்துக்குப் பிறகு மீண்டும் பழைய குருடி கதவைத் திறந்துவைத்து கிறிஸ்துவர்களுக்கே ஜெருசலேத்தை வழங்கினாள்.

சிலுவைப்போராளிகளிடம் ஒரு திட்டம் இருந்தது. நகரம் தங்கள் வசம் இருக்கும் காலத்தில் கூடியவரை இஸ்லாமிய மற்றும் யூத அடையாளச் சின்னங்களை அழித்து ஒழித்துவிடுவது. வழிபாடு நடக்கிறதோ இல்லையோ, ஜெருசலேம் எங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை எழுப்பி நிறுத்திவிடுவது. காலத்தின் ஓட்டத்தில் நடந்தவையெல்லாம் மறந்துபோகக் கூடும். சாட்சிகளாக நிற்கும் தேவாலயங்கள் காலம் கடந்து நிற்கும். ஜெருசலேம், கிறிஸ்துவர்களின் பூமிதான் என்பதை அவையே எடுத்துச் சொல்லும். தேவாலயங்களின் அடியில் புதைந்த உயிர்களும் பிற மதங்களின் அடையாளச் சின்னங்களும் கூட அதற்கே மௌன சாட்சியாக வேண்டிய அவசியம் உண்டாகும்.

இந்தச் செயல்திட்டத்தின்படி அவர்கள் இயங்கினார்கள். ஒட்டுமொத்த ஐரோப்பாவும் திரண்டெழுந்து அவர்களுக்குப் பண உதவி செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக போப்பாண்டவரின் ஆசீர்வாதம். வேறென்ன வேண்டும்? எப்படியும் ஒரு ஐம்பதாண்டு காலத்துக்குள் ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒரு பெரிய கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பிவிடமுடியும் என்றே அவர்கள் நினைத்தார்கள். கி.பி. 1173 வரை இது தொடர்ந்தது.

abs said...

அந்த வருடம் கலீஃபாவாக இருந்த நூருத்தின் மஹ்மூத் என்பவர் இறந்துபோனார். வழக்கப்படி அவரது வாரிசான மலீக்ஷா என்கிற சிறுவன் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக ஆக்கப்பட்டான். சிறுவன் என்று சொல்வது கொஞ்சம் அதிகப்படி. சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடைப்பட்டதொரு பொடியன் என்று வைத்துக்கொள்ளலாம். வயதோ, அனுபவமோ ஏதுமற்றவன். குமுஷ்டஜின் (Gumushtagein) என்றொரு குறுநில மன்னன், இவனுக்கு வழிகாட்டியாக உடனிருந்தான். குறுநிலத்துக்கு அவன் மன்னனே ஒழிய, சாம்ராஜ்ஜியத்துக்கு தளபதி மாதிரி.

இளைஞனான கலீஃபாவை எப்போது ஒழித்துக்கட்டி, தான் சக்கரவர்த்தியாவது என்கிற கனவுடன் அதற்கான செயல்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தவன் அவன்.

அந்தச் சமயம் கலீஃபாவின் பிரதிநிதியாக எகிப்தை ஆண்டுகொண்டிருந்தவர் பெயர் சலாவுதீன். சரித்திரத்தில் எப்போதாவது உதிக்கும் சில நல்ல ஆத்மாக்களுள் ஒருவர். ஐயோ சாம்ராஜ்ஜியம் இப்படி நாசமாகிறதே என்கிற கவலை கொண்டவர். மத்திய அரசுக்கு விசுவாசமானவர். ஒரு முயற்சி செய்து பார்க்கலாம், தலைநகருக்குப் போய் கலீஃபாவைச் சந்தித்து நிலவரத்தை எடுத்துச் சொல்லி கிறிஸ்துவர்களுக்கு எதிரான யுத்தத்தை முடுக்கிவிடலாம் என்று நினைத்தார்.

சலாவுதீன் சுல்தானைச் சந்தித்துவிட்டால் தன்னுடைய அரிசி, பருப்புகள் வேகாமல் போய்விடுமே என்று அஞ்சிய குமுஷ்டஜின், அவர் புறப்பட்டு வரும் செய்தி கிடைத்ததும் சுல்தானைக் கிளப்பிக்கொண்டு வேறொரு இடத்துக்குப் போய்விட்டான். சலாவுதீன் விடாமல் சுல்தான் எங்கெல்லாம் அழைத்துப் போகப்படுகிறாரோ, அங்கெல்லாம் பயணம் மேற்கொண்டார்.

ஒரு கட்டத்தில் குமுஷ்டஜின்னுக்கு எதிராக யுத்தம் செய்யவும் தயாராகி, வெறுப்பில் தனியொரு மன்னனாகவே தாம் முடிசூட்டிக்கொண்டுவிடலாமா என்று யோசிக்கிற அளவுக்கே போனார் சலாவுதீன்.

இதற்கொரு காரணம் கூட இருந்தது. இந்த சலாவுதீன் ஒரு பெரிய வீரர். கலீஃபாவின் பிரதிநிதியாக எகிப்தை ஆண்டுகொண்டிருந்தவர் என்றபோதும், தமது சுயபலத்தால் லிபியாவின் ஒரு பகுதி, ஏமன், ஹிஹாஸ் போன்ற இடங்களை கிறிஸ்துவர்களிடமிருந்து வென்று இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் இணைத்திருந்தவர் அவர். பலவீனமான நான்கைந்து பகுதிகளை வெற்றி கொள்ள முடிந்த தன்னால், கவனம் குவித்தால் பலம் பொருந்திய ஜெருசலேத்தையும் வெல்லமுடியும் என்று நினைத்தார். ஜெருசலேம் கிறிஸ்துவர்கள் பிடியில் இருந்தது அவருக்குச் சகிக்க முடியாததாக இருந்தது.

ஒரு மரியாதை கருதியே அவர் இதற்காக சக்கரவர்த்தியின் உத்தரவு கேட்டுப் போயிருந்தார்.

ஆனால் சக்கரவர்த்தி, இன்னொருவரின் கைப்பாவையாக இருந்ததால் வேறு வழியின்றி யுத்தத்துக்குத் தயாராகவேண்டியிருக்கும் என்று அறிவித்தார்.

நல்லவேளையாக அப்படியரு யுத்தம் ஏற்படவில்லை. பயந்துபோன கலீஃபா, உடனடியாக சலாவுதீனைத் தனியொரு சுல்தானாக அங்கீகரித்து (அதாவது, குறுநில மன்னர்) அவர் அப்போது ஆண்டுகொண்டிருந்த பகுதிகளை அவரே ஆளலாம், சக்கரவர்த்தியின் குறுக்கீடுகள் இருக்காது என்று சொல்லிவிட்டார். (இப்படியும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் சிதறுண்டது வேறு விஷயம்!)

கி.பி. 1182-ம் ஆண்டு தமது பத்தொன்பதாவது வயதில் கலீஃபா மலீக்க்ஷா மரணமடைந்தார். அதுவரை சலாவுதீன் பொறுமை காத்திருந்தார். மலீக்ஷா மரணமடைந்துவிட்ட செய்தி கிடைத்ததுமே தமது படைகளைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். கிட்டத்தட்ட மத்திய ஆசியா முழுவதையும் கபளீகரம் செய்யத் தொடங்கியது அவரது ராணுவம். இன்னும் ஓரிரண்டு இடங்களைப் பிடித்துவிட்டால் அவர்தான் கலீஃபா என்கிற நிலை. ஏராளமான சிற்றரசர்களும் பிராந்திய கவர்னர்களும் சலாவுதீனுடன் போர் செய்ய விரும்பாமல், தாமே முன்வந்து அவருக்கு அடிபணிவதாக எழுதிக்கொடுத்துவிட்டுப் போனார்கள்.

சலாவுதீன் வீரர்தான். அதில் சந்தேகமில்லை. ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றுவதென்பதும் சாதாரண விஷயமில்லை. ஆனால் நமக்குத் தெரிந்த அலெக்சாண்டர் போலவோ, ஒளரங்கசீப் போலவோ மாவீரனாக இவரை சரித்திரம் ஓரிடத்திலும் சொல்லுவதில்லை. ஆனால், அன்றைய மத்திய ஆசியாவெங்கும் ஆண்டுகொண்டிருந்த மன்னர்களிடையே 'சலாவுதீன் அச்சம்' என்பது ஒரு தவிர்க்கமுடியாத நோயாகப் பரவியிருந்தது இதன் அடிப்படைக் காரணமாகிறது.

இதனடிப்படையில்தான் அவர் போகிற இடங்களெல்லாம் அவருக்கு அடிபணிந்தன.

abs said...

சிரியா அப்போது கிறிஸ்துவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. மிகவும் கவனமாக சலாவுதீனின் வழியில் குறுக்கிடாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் ஓர் அசந்தர்ப்பமான சூழலில் அந்நாட்டு வழியே போன ஒரு முஸ்லிம் வர்த்தகக் குழுவை சிரிய ராணுவம் தாக்கிக் கொன்றுவிட, சலாவுதீன் சிரியா மீது படையெடுக்க முடிவு செய்தார்.

1187-ம் ஆண்டு அந்த யுத்தம் ஆரம்பமானது. டைபிரியஸ் (Tiberious) என்கிற இடத்தில் நடந்த யுத்தம். சிலுவைப்போர்களின் வரிசையில் மிகக் கொடூரமாக நடந்த யுத்தங்கள் என்று சில சொல்லப்படுவதுண்டு. அவற்றுள் ஒன்று இது. கிட்டத்தட்ட பத்தாயிரம் கிறிஸ்துவ வீரர்கள் இந்தப்போரில் இறந்துபோனார்கள். சலாவுதீனின் படை அதுவரை அடக்கிவைத்திருந்த ஆத்திரம் முழுவதையும் இந்த யுத்தத்தில் வெளிப்படுத்தியது. அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். சிரியாவுடன் தொடங்கும் இந்த யுத்தம் கண்டிப்பாக ஜெருசலேத்தில் போய்த்தான் முடியும்.

அப்படித்தான் ஆனது.

டால்மெய்ஸ், நப்லஸ், ரமல்லா, சீசர்லா, பெய்ரூத், ஜாஃபா உள்ளிட்ட அன்றைய சிரியாவின் பல நகரங்களைக் கைப்பற்றி முன்னேறிய முஸ்லிம்களின் படை, சரியாக ஜெருசலேத்தின் வாசலில் வந்து நின்றது.

அன்றைக்கு ஜெருசலேத்தில் மொத்தம் அறுபதாயிரம் கிறிஸ்துவ ராணுவ வீரர்கள் இருந்தார்கள். பல்வேறு தேசங்களிலிருந்து ஜெருசலேம் வந்து வசிக்கத் தொடங்கியிருந்த கிறிஸ்துவர்களின் எண்ணிக்கையோ கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம். தவிர, சில பத்தாயிரம் உள்ளூர்வாசிகள். ஒரு யுத்தம் என்று ஆரம்பமானால் எப்படியும் லட்சக்கணக்கில்தான் உயிரிழப்பு இருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிந்தது.

ஒட்டுமொத்த முஸ்லிம் ராணுவமும் யுத்த உத்தரவுக்காகத் தினவெடுத்துக் காத்துக்கிடந்த அந்தக் கடைசிக்கணத்தில் சுல்தான் சலாவுதீன், யாருமே எதிர்பாராவிதமாக ஒரு காரியம் செய்தார். ஜெருசலேம் மக்களுக்கு அவர் ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.

“அன்புக்குரிய ஜெருசலேம் நகரின் பெருமக்களே! ஜெருசலேம் ஒரு புனிதபூமி என்பதை உங்களைப் போலவே நானும் அறிவேன். ஒரு யுத்தத்தின் மூலம் அந்த மண்ணில் ரத்தம் சிந்தப்படுவதை நான் விரும்பவில்லை. நீங்களாக விரும்பி கோட்டையை ஒப்படைத்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்படிச் செய்வீர்களானால், என் மொத்த சொத்தில் ஒரு பகுதியையும் நீங்கள் சாகுபடி செய்வதற்குத் தேவையான நிலத்தையும் நான் உங்களுக்கு அளித்துவிட்டு வந்த வழியே போய்விடுவேன். யுத்தம்தான் தீர்வு என்று நீங்கள் முடிவு செய்வீர்களானால், விளைவுகளுக்கான பொறுப்பு என்னுடையதல்ல என்பதை இப்போதே தெரிவித்துவிடுகிறேன்.’’

மிரட்டல் அல்ல. திமிரும் அல்ல. உண்மையிலேயே சலாவுதீன் ஜெருசலேத்தில் ரத்தம் சிந்தக்கூடாது என்று விரும்பியிருக்கிறார்! அதே சமயம், ஜெருசலேத்தைக் கைப்பற்றியே தீருவது என்பதிலும் உறுதியாக இருந்திருக்கிறார். அதனால்தான் அப்படியரு அறிவிப்பைச் செய்தார்.

ஜெருசலேம் மக்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். அவர்களது யோசனைப்பாதைக்கு நேரெதிரான பாதையில் சிலுவைப்போர் வீரர்களும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 24 பெப்ரவரி, 2005

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு