Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இலக்கியச் செம்மல் இப்னு அப்பாஸ் (ரலி) 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 21, 2014 | , , , ,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அப்பாஸின் மகன் என்ற வகையில், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) நபிக்குச் சகோதரர் ஆவார். நபியவர்கள் தமது 63வது வயதில் இறப்பெய்தியபோது, அப்துல்லாஹ் எனும் இயற்பெயரையும் ‘இப்னு அப்பாஸ்’ (ரலி) எனும் சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இந்த இளவல் பத்து வயதே நிரம்பப் பெற்றிருந்தார்.  அதற்குள் எத்தனை விதமான வேத விளக்கங்கள்!  ஆயிரக் கணக்கில் நபிமொழிகளின் அறிவிப்பு!  ‘சஹீஹுல் புகாரி’யில் மட்டும், இவர் வழியாக அறிவிப்புச் செய்யப்பட்ட 1660 நபிமொழிகள் பதிவாகியுள்ளன!

இறையருள் வேதமாம்   குர்ஆனுக்கு அடுத்துள்ள நம்பகமான நபிமொழித் திரட்டாக இஸ்லாமிய உலகில் அறியப்படும் நூல் ‘சஹீஹுல் புகாரி’ எனும் நூலாகும்.  நபியின் இறப்பிற்குப் பின்னர் ஏறத்தாழ 60 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த இந்த நபித்தோழர், தமது அறிவுத் திறனால் வயது முதிர்ந்த நபித்தோழர்கள் பலரைவிட நபிமொழி அறிவிப்புச் செய்வதிலும் வேத விரிவுரை செய்வதிலும் முன்னிலை வகித்தவர் ஆவார்.

அறிவாற்றல் மிகுந்த இந்த ‘அப்பாஸின் மைந்தர்’ ஒரு நாள் நபியவர்கள் தொழுகையில் நின்று இறைவசனங்களை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களின் இடப்பக்கம் போய் நின்று, அவர்களுடன் சேர்ந்து தொழலானார்.  இதை உணர்ந்த நபியவர்கள், இப்னு அப்பாஸின் காதைப் பிடித்துத் தமது வலப்பக்கம் மாறி நிற்கச் செய்தார்கள்.

தொழுகை முடிந்த பின்னர், அப்பாஸின் மைந்தனே, நீர் ஏன் என்னுடன் சமமாக நிற்கவில்லை? என்று நபியவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதரே, உங்களின் உயர்வான தன்மையைக் கருதியே நான் உங்களுக்குச் சமமாக நிற்கவில்லை? என்று பணிவுடன் கூறினார்.  இதைக் கேட்ட நபியவர்கள்,

اللهم علمه الحكمة، اللهم علمه الكتاب

யா அல்லாஹ்! இந்தச் சிறுவரின் அறிவை விரிவாக்கிக் கொடுப்பாயாக! என்றும், இன்னோர் அறிவிப்பின்படி,  இறைவா! இவருக்கு நுண்ணறிவையும், உன் வேதம் பற்றிய அறிவையும் விரிவாக்கிக் கொடுப்பாயாக! என்றும் பிரார்த்தனை புரிந்தார்கள்.   (சஹீஹுல் புகாரீ – 3756)

‘ஹிக்மத்’ (நுண்ணறிவு) என்பது கவிதைக்கு மிகப்பொருத்தமானது என்பதால், பெருமானாரின் பிரார்த்தனையில், அப்பாஸின் மகனாருக்கு அதையே வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இறைஞ்சியது மிகப் பொருத்தமானதாகும்.

இத்தகைய இறைஞ்சலின் காரணத்தால், பிற்காலத்தில் வயது முதிர்ந்த நபித்தோழர் பலருக்கு முன்னால், இந்த இளவலின் மார்க்க விளக்கங்கள் உயர்வாக மதிக்கப்பட்டன.  குர்ஆனின் எழுத்து முறை, ஓதல் முறை, விளக்கவுரை, மார்க்கத்தின் ஆகுமானது – ஆகாதது (ஹலால்-ஹராம்), வாரிசுரிமைச் சட்டம், அரபி மொழி, இலக்கியம், கவிதை போன்றவற்றில் பிற்கால அறிஞர்களுக்கு விளக்கமளிக்கும் பேரறிஞராகத் திகழ்ந்தார்கள் இப்னு அப்பாஸ் (ரலி).

எமக்கு அண்மையில் கிடைத்த அரிய நூலான   مسائل نافع بن الأزرق  ‘நாஃபிஉ பின் அல்-அஜ்ரகின் கேள்விகள்’ எனும் நூலில் அதன் தொகுப்பாசிரியர் நாஃபிஉ பின் அல் அஸ்ரக் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து குர்ஆன் சொற்பொருள் விளக்கத்தை ஒவ்வொன்றாகக் கேட்டு, அவற்றிற்கான  மறுமொழியைப் பெற்றார்கள்.

உங்களுக்கு முன் ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலத்து இலக்கியவாதிகள், நீங்கள் கொள்ளும் பொருளில் கூறியுள்ளார்களா? என்ற வினாவைத் தொடுத்தார் நாஃபிஉ.  அவர் தொடுத்த ஒவ்வொரு இறைமறைச் சொல்லுக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) மேற்கோள் காட்டிய விதம், நம்மை வியக்க வைக்கின்றது.

உமய்யத் இப்னு அபிஸ்ஸல்த், ஹஸ்ஸான் இப்னு தாபித், அல்-நாபிகா, அபீ துஅய்ப் அல் ஹுதலீ, அபீ மிஹ்ஜன் அல் தகஃபீ, கவிதாயினி ஹுஜைலா பின்த் பக்ர், இப்னு சிர்ரிமத் அல்-அன்சாரி, லபீத் இப்னு ரபீஆ, ஜுஹைர் பின் அபீ சுல்மா, பிஷ்ர் பின் அபீ ஹாஜிம், உத்தைபத் அல்-லைதீ ஆகியோர் போன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மேற்கோள் காட்டும் அரபுக் கவிஞர்களின் பட்டியல் நீளுகின்றது.

இலக்கியத்தில் அந்தந்த மொழியின் மரபுக் கவிஞர்களின் படைப்புகள்தாம் வேத நூல்களின் சொல்லாடல்களுக்கு உரிய விளக்கம் தருவதற்குப் பொருத்தமானவை என்பதால், அப்பாஸின் மைந்தரான அறிவுச் செல்வர் அவர்கள் தமது வேத விளக்கங்களின் சான்றுகளாக எடுத்துக் காட்டும் தரம் வாய்ந்தவை என்பது இங்கு நோக்கத் தக்கவை.     

அத்தகைய மறுமொழி ஒவ்வொன்றுக்கும் அரபுக் கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள்களாகக் காட்டிய புதுமை, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை இலக்கிய வித்தகராக உயர்த்திக் காட்டுகின்றது.  அத்தகைய கவிதைகளை அருள்மறை குர்ஆனின் விரிவுரை நூல்களான தஃப்ஸீர் அத்தபரீ, தஃப்ஸீர் இப்னு கதீர், தஃப்ஸீர் அல்குர்துபீ போன்ற வேத விரிவுரை நூலாசிரியர்களும் தம் தொகுப்புகளில் எடுத்தாண்டுள்ளனர்.  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அரபுக் கவிதைகளைச் சான்றுகளாகக் காட்டும் சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டுகின்றேன்.

سورة الفلق  என்னும் அத்தியாயத்தின் ‘ஃபலக்’ என்னும் சொல்லுக்கு ‘அதிகாலை’ என்று எதன் அடிப்படையில் பொருள் கூறுகின்றீர்கள்? என்று வினவிய அறிஞர் அல்-அஸ்ரகுக்கு, அது ‘ஸுப்ஹ்’ என்னும் அதிகாலையைத்தான் குறிக்கும் எனக் கூறினார்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.

அரபு இலக்கிய வட்டத்தில் இதற்குச் சான்று ஏதேனும் உண்டா? என்று கேட்ட அல்-அஸ்ரகுக்கு, ஆம்; லபீத் இப்னு ரபீஆவின் கவிதையைக் கேட்டதுண்டா? எனக் கேட்டு, அறியாமைக் காலத்து அரபுக் கவிஞர் லபீது இப்னு ரபீஆ பாடிய கீழ்க்காணும் கவிதையடியை மேற்கோள் காட்டினார்கள்:

الفارج الهم مسدولا عساكره ؛ كما يفرج غم الظلمت الفلق

                                               இருளைப் போக்கி இதயம் மகிழ
இரவும் மாறிப் போவதுபோல்
மருளின் கவலை அடிவான் மீதில்
மறைந்து நின்று மகிழ்வூட்டக்
கவலை போக்கும் இறையின் தன்மை
காவல் வீரன் போலிங்கே
அவலம் நீக்கித் தெளிவுண் டாக்க
அருகில் தொங்கி நிற்கிறது.

உலகின் எந்த மொழியிலும் இலக்கியம் என்பது, கவிதைகளால்தான் சான்றாகக் காட்டப்படும்.  அதற்கு, அரபி மொழி உள்பட, எந்த மொழியும் விதிவிலக்கன்று.

‘ரஈஸுல் முஃபஸ்ஸிரீன்’ (குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர்) என்று புகழப்பெறும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே தாம் பொருள் கொள்ளும் சொற்களுக்கு இயைபாக அறியாமைக் காலத்துக் கவிஞர்களின் கவிதைகளையும் மேற்கோள் காட்டுகின்றார்கள் என்றால், கவிதை என்பது மார்க்கத்தில் கூடாது என்று சொல்வதில் ஏதேனும் பொருளுண்டோ?

இறைமறை குர்ஆனின் ‘அல்-நம்ல்’ அத்தியாயத்தில் வரும்  حدائق  எனும் சொல்லுக்குத் ‘தோட்டங்கள் – அல் பஸாதீன்’ என்று எவ்வாறு பொருள் கொண்டீர்கள்?  இதற்கு அரபு இலக்கியத்தில் ஏதேனும் சான்று உண்டா? எனக் கேட்ட அல்-அஸ்ரகை நோக்கி, ஏன் இல்லை?  அபீஹனீஃபத்துத் தைநூரீ என்ற கவிஞர் பாடிய இந்த அடிகளில் பொருத்தமான சான்றுண்டே எனக் கூறி, இந்தக் கவியடியைப் படித்துக் காட்டினார்கள் இப்னு அப்பாஸ் (ரலி).

بلاد سقاها الله أما سهولها ؛ فقضب و در مغدق و حداىق 
 
வெம்மைச் சூட்டில் வாடி வதங்கும்
வேற்றுமை யான பல்லுயிர்கள்
செம்மை யாக இறையின் அருளால்
சேர்ந்து குடிக்கும் விதமாகத்
தெளிநீர் ஓடை முத்துக ளோடும்
தேட்டம் நாட்டம் மகிழ்வோடும்
ஒளியால் இலங்கித் தாரா ளமுடன்
உயர்ந்து நிற்கும் தோட்டங்கள்.

இவ்வாறு, அருள்மறை குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் பெறக் கவிதைகள் எவ்வாறு துணை நின்றன என்பதை நாம் பார்க்க முடிகின்றது.  உயர்ந்த இலக்கியமான இஸ்லாமிய வேதம் குர்ஆனைப்  புரிந்துகொள்வதற்குக் கவிதை இலக்கியம் துணை நின்றுள்ளது என்று கண்டோம்.  இந்த உண்மையால், நம் கண்கள் வியப்பால் விரிகின்றன என்ற உண்மையை யாரால் மறுக்க முடியும்?

அதிரை அஹ்மது

7 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய அஹ்மது காக்கா,

அருமையான, வித்தியாசமானப் பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

'அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி)' என்றளவில் மட்டுமே நாங்கள் அறிந்திருந்த அப்பாஸ்(ரலி) அவர்களைக் குறித்த மேலதிக விவரங்கள் சுவாரஸ்யமானவையாக இருக்கின்றன.

ஆம்,
கவிதை வடிவம்தான் எந்த மொழிக்கும் அலங்காரம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

காரணம், கவிதையால் மட்டுமே ஒரு சிறு கண்ணசைவுக்கும் காவியம் எழுத முடியும்; கடலளவேயாயினும் கடுகளவில் சுருக்கி விளக்கவும் முடியும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

)எது கவிதை…?

மெல்ல விடிவதை
நல்ல மொழிதனில்
செல்ல வரிகளால்
சொல்ல முடிவதே…கவிதை!

உனக்குள் உருவாகும்
உள்ளத்து உணர்வுகளை
உள்ளது உள்ளபடி
உளராமல் உரைத்தால்…கவிதை!

பாலையில் யாவர்க்கும்
காலையும் மாலையும்
பாலை வார்க்கும்
வேலை பார்க்கும்…கவிதை!

சூரிய கிரணங்கள்
மேவிய தருணங்கள்
கூரிய வார்த்தைகளால்
கூறிய வருணனை…. கவிதை!

நுனுக்க உணர்வுகளையும்
மினுக்கக் கனவுகளையும்
துணுக்குத் தோரணங்களையும்
திணித்துவைத்த அனு...கவிதை!

கலைத்துப் போட்ட
பொம்மைகள்
குப்பை யென்றால்
அடுக்கி வைத்த கண்காட்சி...கவிதை!

உதறிய பூக்களும்
சிதறிய இதழ்களும்
கூலமென்றால்
கோர்த்தெடுத்த மாலையே…கவிதை!

அத்தனை பிள்ளைகளின்மேல்
அன்பிருந்தாலும்
செல்லப் பிள்ளையே….கவிதை!

கவிதை…
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.

கவிதை…
காட்டாறு எனினும்
வரம்புகளுக்குள் ஓடுமொரு முரண்பாடு.

கவிதை…
கதையோ கட்டுரையோவல்ல
வரி வரியாய் வாசிக்க,
வரிகளுக்கிடையே வாசிக்கப்படும் வசியம்.

கவிதையில் மட்டுமே…
வார்த்தைகளுக்கு வாய் முளைக்கும்
வாசிப்பவருக்கு வாய் பிளக்கும்

கவிதையில் மட்டுமே
காகிதங்கள் கருவுறும்
காரியங்கள் உருப்பெறும்

வானவில்லை மொழி பெயர்த்தால் கவிதை!
வாசமுல்லை வழி வாய்த்தால் கவிதை!
கானகத்துக் குயில் பாட்டும்
காமமற்ற காதலும்தான் கவிதை!

தேசிய கீதமும் கவிதை
நேசிக்கும் பாஷையும் கவிதை
சாரள வெளிச்சமும் கவிதை
சூரியப் பிரவாகமும் கவிதை

மின்மினி வெளிச்சமும் கவிதை
மின்னாத இருளும் கவிதை
சொல்லிய வார்த்தைகளும் கவிதை
சொல்லாத வெற்றிடமும் கவிதை

வட்டத்துக்குள் அடங்க
ஆரமல்ல கவிதை
மாதத்துக்குள் முடிய
வாரமல்ல கவிதை

வாசிக்கத் திணற
கவிதை பாரமுமில்லை
வார்த்தைகளுக்குள் அடங்க
கவிதைக்கு நேரமுமில்லை.

எது கவிதை?
கரம் கொண்டு விதைத்தால்
மரம்
கருவிதை விதைத்தால்
கவிதை!!!

N. Fath huddeen said...

காக்காவின் ஆக்கம் மிக அருமை!
ஜோ (= சபீர்) அவர்களின் கவிதை ஜோர்ர்ராஹ் இருக்கு!
மாஷா அல்லாஹ்!
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் தருவானாக. ஆமீன்.
காக்கா, ப்ளீஸ் தொடருங்கள்.

sheikdawoodmohamedfarook said...

மரியாதைக்குரியஅஹமத்காக்கா!அரபுகவிஞர்களையும்அரபு கவிதைகளையும்எங்களுக்குதமிழில்தெரியத்தாருங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சமீபத்திய வாசிப்பில் மிகவும் பிடித்த ஒன்று....

க்கம் மிக அருமை!

கவிக்காக்கா (= சபீர்) அவர்களின் கவிதை ஜோர்ர்ராஹ் இருக்கு!

மாஷா அல்லாஹ்!

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் தருவானாக. ஆமீன்.

ப்ளீஸ்... தொடருங்கள்.

ஆ முதல் ள் வரைக்கு நன்றி : N.Fath huddeen காக்கா

Ebrahim Ansari said...

இலக்கியத் தரமுள்ள காக்கா அவர்களின் இன்னொரு பதிவு.

தப்சீர் இப்னு கஸீர் படிக்கும் போது அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் இப்னு அப்பாஸ் ( ரலி ) அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முயல்வோருக்கு ஒரு சிறந்த அறிமுகம்.

ஜசாக் அல்லாஹ் ஹைரன் காக்கா.

N. Fath huddeen said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

ஆ முதல் ள் வரைக்கு நன்றி கூறிய தம்பி அபூ இப்ராஹிமுக்கு மிக்க நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு