Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

12

அதிரைநிருபர் பதிப்பகம் | October 18, 2014 | , , ,

தொடர் - பகுதி பனிரெண்டு

இந்தத் தொடரில் நாம் முன்பே குறிப்பிட்டது போல் , மூன்றாம் சிலுவைப் போருக்குப் பின் நடந்தவை எல்லாம் வேடிக்கைகளும் விநோதங்களும் நிறைந்த போர்கள். குறிப்பாக ஐந்தாம் சிலுவைப் போர் ஆரம்பிக்கப்பட்டதே சிலுவைப் போர்களின் உண்மையான நோக்கமான ஜெருசலத்தைக் கைப்பற்ற அல்ல. மாறாக, போரின் பெயரைச் சொல்லி “துட்டு- டெப்பு- மணி மணி “கறக்கத்தான். இந்தப் பணம் கறக்கும் பணியில் இறைப்பணியை இணைத்து உணர்வூட்டியவர் போப்பாண்டவரேதான். 

எடுத்துக்காட்டாக, ஐந்தாம் சிலுவைப் போருக்கு அறைகூவல் விடுத்தவர் இன்னோசென்ட் (3) என்ற பெயருடைய போப்பாண்டவர். ஆனால் இவருடைய உண்மை நோக்கம் போரிடுவதல்ல. போரிடுவது என்ற பெயரில் பணமும் இன வெறியும் கொண்ட கொழுத்த ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பணம் வசூல் செய்வதுதான். நன்கொடையாகத் திரட்டப் பட்ட பணம் மட்டுமல்ல , போர்களில்- குறிப்பாக கான்ஸ்டாண்டி நோபிளில் கிருத்துவர்களிடமே கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் போப்பாண்டவர் தன்னுடைய பதவியின் மாண்புகளை மீறி ஏற்றுக் கொண்டார். வரலாற்றின் வரிகள் இப்படிக் கேவலமாக குறிப்பிடப்படுகிறது.

"Nevertheless, the Pope accepted the new situation. When the crusaders took some of the piles of money, jewels, and gold that they had captured in the sack of Constantinople back to Rome, Innocent III accepted the stolen items."

ஆனால் இப்படி எட்டு சிலுவைப் போர்கள் நடத்தப்பட்டாலும் விளைவுகள் எதுவும் கிருத்துவர்களுக்கு நிரந்தர சாதகமாக அமையவே இல்லை. அவர்கள் நைல் நதியின் நடுவில் நின்று செய்த ‘சரிகமபதநிச’ சாதகங்கள் யாவும் சுருதிமாறிச் சென்றன என்பதே உண்மை. அவை இறைவனின் நாட்டம் என்பதே ஓங்கி உரைக்கவேண்டிய உண்மையிலும் உண்மை.

முதலாவது சிலுவைப் போர் கி.பி. 1097 ஆம் ஆண்டிலும்,
இரண்டாவது சிலுவைப் போர் கி.பி. 1149 ஆம் ஆண்டிலும்,
மூன்றாவது சிலுவைப் போர் கி.பி 1189 ஆம் ஆண்டிலும்,
நான்காவது சிலுவைப் போர் கி.பி. 1204 ஆம் ஆண்டிலும்,
ஐந்தாவது சிலுவைப் போர் கி.பி. 1218 ஆம் ஆண்டிலும்,
ஆறாவது சிலுவைப் போர் கி.பி. 1228 ஆம் ஆண்டிலும்,
ஏழாவது சிலுவைப் போர் கி.பி. 1248 ஆம் ஆண்டிலும்,
எட்டாவது சிலுவைப் போர் கி.பி. 1269 ஆம் ஆண்டிலும் நடைபெற்றன. 

இப்படி ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் இஸ்லாத்துக்கும் கிருத்துவத்துக்கும் நடைபெற்ற போர்களில் யூதர்கள் உப்புக்குச் சப்பாணியாகத்தான் கிடந்தார்கள் என்பதை இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் வெற்றிபெற்ற போதெல்லாம் யூதர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யப்படவில்லை. ஆனால் கிருத்துவர்கள் அங்கும் இங்குமாக அத்தி பூத்தாற்போல் வெற்றி பெற்ற பகுதிகளில் இருந்த யூதர்கள் வெட்டி சாய்க்கப்பட்டார்கள் விரட்டியடிக்கபட்டார்கள் என்பதே வரலாறு சுட்டும் வேதனையான உண்மை.

அதேபோல் மற்றொரு உண்மையையும் வரலாறு திரையிட்டு மறைக்கவில்லை . எல்லாம் வல்ல இறைவனின் கட்டளையின்படியும் பெருமானார் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படியும் முஸ்லிம்கள் போரிடும்போதும் போருக்குப் பின்பும் தங்களின் மீது வரம்புகளை மீறியவர்களின் மீது மட்டுமே வரம்பு மீறினார்கள். மற்றபடி போர்க்கைதிகளையும் பொது மக்களையும் மனிதாபிமானத்துடன்தான் நடத்தினார்கள் என்று வரலாற்றின் ஒவ்வொரு வரியும் புட்டுப்புட்டு வைத்து புகழ்ந்து விவரிக்கின்றன. 

அதேநேரம் கிருத்துவர்கள் நடத்திய கொடூரமான படுகொலைகளையும் வன்முறை, கொள்ளை மற்றும் சித்திரவதைகளையும் படம் போட்டுக்காட்டுகின்றன. ஆனால் எவ்வளவுதான் சிலுவைப் போர்கள் மூலம் கொடுமைகள் நிகழ்த்தினாலும் அவர்களால் வெற்றி மட்டும் பெறவே முடியவில்லை. ஜெருசலத்தை கைப்பற்ற வேண்டுமென்ற அவர்களின் நோக்கம் நிறைவேறவே இல்லை. 

தங்களின் நோக்கம் நிறைவேறாவிட்டாலும் முஸ்லிம்களின் மூலம் வரலாறு பல பாடங்களை கிருத்துவர்களுக்குப் படித்துக் கொடுத்தது. இந்தப் பாடங்களின் பேராசிரியராக சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் திகழ்ந்து வாழ்ந்து மறைந்தார்கள். ஆனால் ஜெருசலத்தைத்தான் கிருத்துவர்கள் அடைய இயலவில்லை என்றாலும், பல சிறப்புமிக்க வாழ்க்கை முறைகளையும் கலாசார அறிவியல் நாகரிக முன்னேற்றங்கள் ஆகிய நல்ல அம்சங்களை முஸ்லிம்களிடமிருந்து பார்த்தும் படித்தும் தெரிந்து கொண்டார்கள். உதாரணமாக குதிரையின்மீதமர்ந்து போரிடும்போது இரும்புக்கவசம் அணியும் முறையை முஸ்லிம்களிடமிருந்தே கிருத்துவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதை பிரான்சு நாட்டு வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

இன்னும் எவையெல்லாம் சிலுவைப் போர்களின் விளைவுகளாகவும் தாக்கங்களாகவும் இருந்தன? 

முஸ்லிம் மற்றும் கிருத்துவ மதங்களிடையேயான கலாச்சார புரிந்துணர்வு ஏற்பட்டதை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை தங்களுடைய அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாக இருந்தனர். மார்க்கம் பேணினர். ஆயினும் கிராமப்புற வாழ்வைமேற்கொண்டிருந்த முஸ்லிம்கள் ஐரோப்பியர்களைப் பார்த்து நகர்ப்புற வாழ்வுக்குத் தங்களை விரும்பித் தயார்ப் படுத்திக் கொண்டனர். சலாஹுதீன் அய்யூபி அவர்களின் காலத்தில் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையின்படி இருதரப்பிலும் சுதந்திரமான வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் கலாச்சாரப் புரிந்துணர்வும் பரிமாற்றங்களும் அடங்கின. 

அறிவியல் மற்றும் இலக்கியத் துறைகள் முஸ்லிம்களிடமிருந்து களவாடப்பட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி தங்களின் அறிவியல் மற்றும் இலக்கியங்களை முஸ்லிம்கள் பறிகொடுத்துவிட்டு வாய்பிளந்து நின்றதையும் நாம் மறுக்க இயலாது. போப் ஆண்டவர்கள் மூலம் முஸ்லிம்களைபற்றியும் அவர்களின் இலக்கிய ஆற்றல் பற்றியும் தவறான செய்திகளையே சொல்லப்பட்டு சொல்லப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட சிலுவைப் போர் வீரர்கள், உண்மை நிலவரம் அப்படியல்ல என்பதை நேரடியாக உணர்ந்து முஸ்லிம்களின் இலக்கிய பாணியில் தாங்களும் சிந்திக்கத் தொடங்கினார்கள். தாங்கள் கேள்விப்பட்ட முஸ்லிம்களின் வாழ்வுமுறைகளுக்கும் அவர்கள் உண்மையில் வாழும் முறைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருப்பதை சிலுவைப் போர்வீரர்கள் உணர்ந்தார்கள்.

முஸ்லிம்களிடம் நிறைந்து காணப்படும் மனிதாபிமானப் பண்புகளையும், அவர்களிடம் குடிகொண்டிருக்கும் சிறப்பான பண்புகள், வீரம், துணிவு, வாக்குறுதிகளை நிறைவேற்றும் தன்மை போன்ற தாங்கள் முன்னர் கேட்டிராத, கண்டிராத பல நற்பண்புகளைக் கொண்டவர்களாக முஸ்லிம்களைக் கண்டனர். மத்திய கிழக்கு முஸ்லிம்களிடம் காணப்பட்ட இப்பண்புகள் ஐரோப்பியரிடையே மனிதாபிமான ரீதியான பண்பாடுகள் வளர உதவியாக இருந்தன. 

சிலுவைப் போர்களில் ஈடுபட்டு நாடு திரும்பிய சிலுவைப் போர் வீரர்கள் தங்களின் பண்புகளில் சீர்திருத்தம் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களை அவ்விதம் மாற்றியது இஸ்லாமிய நெறிமுறைகளே . போர் நடந்த காலங்களில் அவர்களிடம்காணப்பட்ட பல பண்பற்ற முறைகள் போர் முடிந்த பிறகு அவர்களிடம் காணப்படாமல் விடைபெற்றன. 

முஸ்லிம்களைப் பின்பற்றி கடல்கடந்த வியாபார முறைகளையும் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றத் தொடங்கின. இதன் காரணமாக உலகெங்கும் ஐரோப்பியர்களின் காலனி நாடுகள், அவற்றில் குடியேற்றம் , அரசமைப்புகள் ஆகியன ஏற்பட இவை ஆரம்பக் காரணமாயின. 

வர்த்தக ரீதியில் முஸ்லிம்களின் குதிரைகளும் போர்க்கால ஆடைகளும் தானியங்களும் ஐரோப்பிய சிலுவைப் போர் வீரர்களுக்கும் தேவைப்பட்டன. பெரும்பாலும் நிலபிரபுத்துவ முறைகளில் பழகிப் போன ஐரோப்பிய வீரர்களுக்கு சுயமான உற்பத்தித் தத்துவம் நிறைந்த இஸ்லாமிய பொருளாதாரத்தின் தாக்கம் ஏற்பட்டது. இதற்காக சுய கைத்தொழிலில் அவசியத்தை அவர்கள் உணரத் தொடங்கினர். இது சிலுவைப் போர் கொண்டுவந்த மாற்றம்தான் என்று வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

மத்திய கிழக்கில் போருக்குபின்னால் தொடர்ந்து செய்யவேண்டிய வணிகங்களுக்காக பண்டமாற்றையும் தாண்டி பணம் என்ற இனம் பரிவர்த்தனைகளுக்காகத் தேவை என்ற கருத்து உணரப்பட்டது. பண்டமாற்று முறை வணிகம் மறைந்து கொடுக்கல் வாங்கலுக்கான ஒரு பொருளாதார மீடியம் தேவை என்பதை உணர்ந்து நாணயங்களை அச்சிட ஆரம்பித்தார்கள். 

இப்படிப்பட்ட மனமாற்றங்களை சிலுவைப் போர் வீரர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் மனங்களில் ஏற்படுத்திக் கொள்ள பரந்த மனப்பான்மைக்கும் அப்பால் அவர்களிடம் ஒரு உள்நோக்கமே ஓங்கி நின்றது என்பதையும் மறுக்க இயலாது. முஸ்லிம்களின் அரசியல் பொருளாதார சமூக அறிவியல் அமைப்பின் நுணுக்கங்களைத் திருடிச் சுரண்டுவதுதான் இந்த உள்நோக்கம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வாளெடுத்து வெல்ல முடியாத முஸ்லிம்களை அவர்களிடமிருந்த கல்வி மற்றும் கலாச்சாரத்தை திருட்டின் மூலமாவது வீழ்த்தி விட வேண்டுமென்பதும்தான் கிருத்துவர்களின் நோக்கம் என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

முஸ்லிம்களிடையே கிருத்துவ மதத்தை போதித்து அவர்களை கிருத்துவர்களாக மாற்றும் முயற்சியும் நடைபெற்றது. இதற்காக பிரெஞ்சு மொழி பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவுதான் இன்றும் கூட சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் பிரெஞ்ச் மொழியின் ஆதிக்கம் இருப்பதாகும். இந்நாடுகளில் பிரெஞ்ச்தான் அரசின் அங்கீகாரம் பெற்ற இரண்டாவது மொழி. 

முஹம்மத் குர்த் அலி என்கிற வரலாற்றாசிரியர் தனது “ இஸ்லாமும் அராபிய நாகரிகமும் “ என்கிற நூலில் பல செய்திகளைக் குறிப்பிடுகிறார். கிருத்துவர்கள் முஸ்லிம்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டாலும் கிருத்துவர்களிடமிருந்து முஸ்லிம்கள் உருப்படியாகத் தெரிந்துகொள்ள ஒரு விஷயமும் இல்லை. ஆனால் பல முஸ்லிம்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டன. இரண்டு நூற்றாண்டுகள் இஸ்லாம் வெற்றி கொண்ட பகுதிகளில் தங்கி இருந்த அல்லது அந்தப் பகுதிகளில் வெறி கொண்ட உணர்வுடன் சுற்றிக் கொண்டிருந்த சிலுவைப் போர் வீரர்கள் இஸ்லாமிய கலாச்சார கேந்திரங்களாக விளங்கிய பல நகரங்களை அழித்தார்கள். திரிபோலி, ஏக்ர் ஆகிய நகரங்கள் இவ்வாறு அழிவுக்குள்ளான நகரங்களில் அடங்கும். ஆனால் ஹிஜாஸ், எகிப்து, ஈராக், சிரியா முதலிய பிரதேசங்களையும் மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளையும் அழிப்பதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியைத்தழுவின. இந்த இடங்களைக் காப்பாற்ற முஸ்லிம்கள் எடுத்த துல்லியமான நடவடிக்கைகளால் சிலுவைப் போர்வீரர்கள் துடைத்து எறியப்பட்டனர் என்றாலும்இஸ்லாமிய நாகரிகத்தை பறைசாற்றும் பல நகரங்களின் கட்டிடங்கள் அழிவுக்கும் ஆளானதை மறுக்க இயலாது. 

இன்று வரை உலகில் நாம் காணும் கிழக்கு நாடுகளும் மேற்கு நாடுகளும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மோதிக் கொள்ளும் போக்குக்கு அடிப்படை அமைத்தவை அன்றைய சிலுவைப் போர்களே என்றும் வித்தகர்கள் விளக்கம் தருகின்றனர். இன்று யூதர்களை பூதங்களாக உருவாக்கி உருவெடுக்கவைத்து முஸ்லிம்களை அழிக்க ஆயுதங்களாகப் பயன்படுத்தும் வித்தைக்கு விதை ஊன்றியது சிலுவைப் போர்களே என்றும் குறிப்பிடப்படுகிறது.

சலாஹுதீன் அவர்களின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மகன்களும் பின்னர் இராஜ்ஜியத்தை இரண்டாகப் பிரித்து ஆண்ட பேரன்களும் அவ்வளவாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தவில்லை. அத்துடன் மத்திய ஆசியாவில் அன்றைக்கு ஆட்சியில் இருந்த பல சுல்தான்களுக்கிடையே சரியான ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இல்லை. பிற்காலத்தில் கலீபா பதவிக்கு வந்தவர்களும் செயல்திறன் அற்றவர்களாகவும் பதவி வெறி பிடித்தவர்களாகவும் இருந்தனர் என்பதையும் சிலுவைப் போர்கள் படம் பிடித்துக் காட்டின. இதனால் இறுதியில் பதினைந்து வருடங்கள் ஜெருசலம் முஸ்லிம்களிடமிருந்து பறிபோனது.

அறிவற்ற காரணங்களுக்காக ஆரம்பித்த சிலுவைப் போர்கள் அந்தப் போர்களை ஆரம்பித்தவர்களின் மீது களங்கச் சேற்றை சந்தனமாக பூசியே முடிவுக்கு வந்தன. அப்படி கிருத்துவர்கள் தங்கள் மீது பன்னீர் அபிஷேகமாக தெளித்துக் கொண்டவை முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் இரத்தத் துளிகளே! "When Jerusalem was captured, Muslim and Jewish residents in the city were slaughtered, including women. All of this for a short-lived Christian kingdom in the Middle East which proved to be unsustainable" என்பதே வரலாற்றின் வரிகள். 

இப்படிப்பட்ட படுகொலைகளுக்கு ரோம சாம்ராஜ்யம்தான் பொறுப்பு என்று பின்னாளில் கிறித்துவ மதத்தின் பிரிவாகத் தோன்றிய புரோடேஸ்டேன்ட்ஸ் பிரிவு ரோமன் கத்தோலிக் பிரிவின்மீது ஒரு குற்றமாக முன்வைத்தது. இது ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கும் ஒரு காரணமாக அமைந்தது. ஒட்டு மொத்த உலகமும் கிருத்துவ திருச்சபைகளின் மீதும் போப்பாண்டவர்கள் மீதும் புனிதமான நம்பகத்தன்மையை இழந்தது. போப்பாண்டவர்கள் காடுவெட்டி கண்ணப்பர்களாகவும் பட்டாககத்தி பைரவர்களாகவுமே மதிக்கப்பட்டனர். Distrust of Christians என்ற தலைப்பில், வரலாறு இதைக் குறிப்பிடுகிறது.

கிருத்துவப் பிரிவுகளே ஒற்றுமையின்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் , உதாரணமாக கான்ஸ்டாண்டி நோபிளில் கிருத்துவப்படைகள் பைசாந்திய கிருத்துவர்களுக்கு எதிராக நடத்திய படுபாதகச் செயல்கள் புதிய முஸ்லிம் படையெடுப்புகளை ஊக்குவித்தன. இதனால் ஆட்டோமான் துருக்கியப் பேரரசு ஐரோப்பாவை நோக்கி படையெடுக்கவும் காரணமாக அமைந்து முக்கியமான வரலாற்றுத் திருப்பமாகும். 

இதை வரலாறு Opened Way for Future Muslim Conquests of Europe என்ற தலைப்பிட்டுக் குறிப்பிடுகிறது. ‘ Ottoman Turks began advancing into Europe. Once the Byzantine was captured by the Ottoman armies, much of the reminder of Eastern Europe fell like a house of cards to the Ottoman Empire’ என்று வரலாற்றின் வரிகள் குறிப்பிடுவதைப் போல ஐரோப்பியர்கள் மண்கோட்டைகளை வைத்துக் கட்டிய மனக்கோட்டைகள் சீட்டுக் கட்டுக் கோட்டைகள் போல துருக்கியர்களிடம் சரிந்துவிழுந்தன.

துருக்கிக்கு சளி பிடித்துத் தும்மும் போதெல்லாம் ஐரோப்பா முழுதும் இருமும் சப்தம் அகிலமெங்கும் கேட்டது. 

இந்த இருமலின் எதிரொலி பாலஸ்தீனத்திலும் கேட்டது. 

இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹீம் அன்சாரி

12 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

மாஷா அல்லாஹ்

அடுக்கடுக்கான வரலாற்று ஆதாரங்கள்

முஸ்லிம்களின் நேர்மையும்,யூத,கிறிஸ்தவர்களின் நயவஞ்சகமும் !

இந்த வரலாற்றில் ஒன்று விளங்குகிறது,

எப்போதெல்லாம் முஸ்லிம்கள் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் வாழ்ந்தார்களோ - அன்றெல்லாம் சிறப்புற்று இருந்தார்கள்,எப்போது மேற்கத்திய கலாச்சாரம் பின் பற்றி நடக்க ஆரம்பித்தார்களோ - அன்று முதல் இன்று வரை சரிவுதான்.

அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்,ஆமீன்.

நல்ல வரலாறு தரும் - காக்கா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக,மீண்டும் சொல்கிறேன் -நல்ல வரலாறு தரும் - காக்கா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இத்தனை ஆதாரங்களைத் தேடிச் சென்று வாசிக்க இயலாத எங்களுக்கு, திரட்டிக் கொடுக்கும் உங்களின் உழைப்பிற்கு நற்கூலி (அல்லாஹ்விடம்) நிச்சயம் உண்டு இன்ஷா அல்லாஹ் !

மாஷா அல்லாஹ்...! வாசிக்க ஆரம்பித்த முதல் வரியிலிருந்து இந்த பதிவு நிறைவு வரை கண்களை விரிய வைத்து இருக்கிறீர்கள்.

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா..

sheikdawoodmohamedfarook said...

மொத்தம்எட்டுசிலுவைபோர்களா?கேட்பதற்க்கேபயமாய்இருக்கிறது! அத்தனைபோர்களுக்கும்சிலுவைசெய்ய தொழிற்சாலைகளுக்கு ஆர்டர்கொடுப்பதிலேயேபோப்நிறையகமிஷன்அடித்திருப்பாரே!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


நல்ல வரலாறு தரும் காக்கா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக
ஆமீன்.

புனித பூமியிலிருந்து ஜஹபர் சாதிக்.

sheikdawoodmohamedfarook said...

//சலாஹுதீன்அவர்களின்மறைவுக்குபிறகுஆட்சிக்குவந்தஅவரின் மகன்களும்பின்னர்ராஜ்யத்தைஇரண்டாகபிரித்துஆண்டபேரன்களும்....................................இதனால்ஜெருசலம்பதினைய்ந்துவருடம்முஸ்லிம்களிட மிருந்து பிரிந்து போனது//அப்போதேஆரம்பித்துவிட்டதாஅண்ணன்-தம்பிஅக்கா- தங்கை பேரன்-பேத்தி ஆட்சி போட்டி? நான் இங்கே மட்டும் தான் இப்புடின்னு நெனெச்சேன்!

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி, ஹாஜி ஜகபர் சாதிக் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

புனித பூமியிலிருந்து தங்களின் அன்பான கருத்திடலைக் கண்டு உணர்வு வயப்பட்டேன். ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

நல்ல உடல்நிலையுடன் விரைவில் தாங்கள் ஊர் வர இறைஞ்சுகிறேன்.

ஊர் வந்ததும் தங்களை நான் வந்து சந்திக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

Bro. Ibn Abdul Razak.

//நல்ல வரலாறு தரும் - காக்கா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக,மீண்டும் சொல்கிறேன் -நல்ல வரலாறு தரும் - காக்கா
அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.//

ஜசாக் அல்லாஹ் ஹைரன். அழுத்தமான வார்த்தைகளின் அர்த்தம் புரிந்துகொண்டேன்.

sheikdawoodmohamedfarook said...

சிலுவைபோருக்கு போகும்வீரர்களுக்கு போப் நிறைய சம்பளம்கொடுப்பாராம்.சில சமயங்களில் போருக்குசெல்லும்வீரர்கள் திரும்பிவரஅஞ்சாறு ஆண்டுகள்கூட ஆனாலும் ஆகுமாம்.'அவ்வளவுகாலம் தன்மனைவி கற்ப்பை காத்து கண்ணகிபோல் இருப்பாளா?' என்று சந்தேகம் கொண்டவீரர்கள்மனைவியர்கள்இடுப்பில்Chastity Belt ஒன்றை மாட்டி பூட்டுபோட்டுபூட்டிசாவியே கழுத்தில் மாட்டிகொண்டு 'அந்தக் கவலை' இல்லாமல்போருக்குபோவார்களாம்.Chastity Belt மாட்டியஒரு பெண் வேறுஒரு ஆண்மகனை விரும்பி அழைத்து போனாலும்கூட அது அவனுக்கேஅவனேவைத்தகொல்லியாகமுடியுமாம்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா அவர்களுக்கு,

எந்தப் பேசுபொருளைத் தொட்டாலும் அதில் ஆணி வேர் வரை பாயும் தங்களின் ஆய்வு இந்தத் தொடரை ஓர் அசாதாரணத் தொடராக சிறப்பாகக் கொண்டு செல்கிறது.

இதை எழுதுவற்காகத் தாங்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் அதற்கான பிரயாசையும் அளப்பறியது; வியப்பிற்குரியது.

இந்தக் கடின உழைப்பிற்கான ஆரோக்கியத்தையும் கால அவகாசத்தையும் அல்லாஹ் உங்களுக்குத் தந்தருள்வானாக, ஆமீன்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,
வ அலைக்குமுஸ் சலாம்.
அல்லாஹ்வின் அருளால் , தொடரை எழுதத் தூண்டியதும் துணை நிற்பதும் ஊக்கம் தருவதும் தங்களின் அன்பான வார்த்தைகள். நன்றி.
தம்பி அபு இப்ராஹீம் அவர்களுக்கு,
// இத்தனை ஆதாரங்களைத் தேடிச் சென்று// அப்படியானால் இதற்காக எனக்கு நிறைய நேரம் தேவை . நானும் இப்போதுதான் இவை எல்லாம்பற்றி விரிவாகப்படிக்கிறேன். விமர்சனங்களுக்கு ஆளாகாமலும் எழுத வேண்டி இருப்பதால் மிகவும் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. சில வாரங்கள் தொடரின் இவ்வாரப் பகுதியை அனுப்ப இயலாவிட்டால் தயவு செய்து பொறுத்திடுக!

அன்புள்ள மச்சான் SMF அவர்களுக்கு ,
Chastity Belt – கற்புக் கவசம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
இது பற்றியெல்லாம் எழுத நேரமில்லை. நமது ஊரில் முல்லா கதைகள் மற்றும் பஞ்சாபி ஜோக்குகள் போல சிலுவைப் போர் வீரர்கள் பற்றியும் பல நகைச்சுவை துணுக்குகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று இந்த Chastity Belt பற்றியது.
இந்த Chastity Belt என்பதை மனைவிமார்களுக்குப் போட்டுப் பூட்டிவிட்டு அதன் சாவியையும் சிலுவைப் போர் வீரர்கள் தங்களின் கழுத்துகளில் மாட்டிக் கொள்வார்களாம்.
ஒரு சிலுவைப் போர் வீரர் போருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. திரும்பி வர எவ்வளவு ஆண்டுகள் பிடிக்குமோ தெரியாது. அத்துடன் போரின் மும்முரத்தில் தனது கழுத்தில் இருந்து கற்புக்கவசத்தின் சாவி விழுந்து தொலைந்து போய் விட்டால் என்ன செய்வது என்று அச்சமாகவும் இருந்தது.
ஆகவே தனது மனைவிக்கு பெல்டைப் போட்டுப் பூட்டிவிட்டு சாவியை தனக்கு மிகவும் நம்பிக்கையான உயிருக்குயிரான நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு தான் போர்க்களத்திலிருந்து வந்தபின் பெற்றுக் கொள்வதாகக் கூறிவிட்டு போர்வீரர்கள் புறப்படும் இடத்தில் ஆயத்தமாக தளவாடங்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது தான் தான் சாவியைக் கொடுத்த நண்பன் வியர்க்க விறுவிறுக்க ஓடிவருவதைப் பார்த்த சிலுவைப் போர் வீரர் வெளியே வந்து
“ என்னடா மச்சான் ஏன் இப்படி ஓடி வருகிறாய்? “ என்று கேட்டார். அதற்கு அவர் உயிருக்கு உயிரான நம்பிக்கைக்குரிய நண்பர் சொன்ன பதில் ,

“ மச்சான் ! YOU HAVE GIVEN ME A WRONG KEY. THIS IS NOT OPENING “

sabeer.abushahruk said...

சிலுவைப் போர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தும் நம் தொடரின் மூலம் தெரிந்துகொண்டதே அதிகம்.

உங்கள் உழைப்பு வீண் போகவில்லை காக்கா. நீங்கள் சொல்லித்தருவதை நாங்கள் கற்றுக்கொண்டுதான் வருகிறோம்.

sabeer.abushahruk said...

//Chastity Belt//

Actually i've known this whole concept as a tale. it is news to me that it was truly adopted.

this could be the worst and nasty treatment against wives that the so called husbands commit.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு