Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவலை நேரத்திலும் கவிதையா? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 05, 2014 | , , , ,

ஹிஜ்ரி பத்தாம் ஆண்டின் இறுதியில் அண்ணலாரும் அருந்தவத் தோழர்களும் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிவிட்டு, மதீனாவுக்குத் திரும்பியிருந்தார்கள். அந்த ஹஜ்ஜுதான் நபியவர்களுக்கு முதலும் இறுதியுமான ஹஜ். இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் தம் இணையற்ற வாழ்வின் இறுதிப் பகுதியை – அறுபத்து மூன்றாவது அகவையை – எட்டியிருந்தார்கள். 

ஹிஜ்ரி பதினொன்றாம் ஆண்டும் தொடங்கிற்று. ஐரோப்பியக் கண்டத்திலும், கிழக்கு நோக்கிய பாலஸ்தீனத்திலும் தமது ஆட்சியை விரிவாக்கி, அப்பகுதிகளில் தமது ஆணவப் பெருக்கைப் பரவ விட்டிருந்த ரோமப் பேரரசின் மன்னர் ஹிராக்லியஸின் படையினர் அந்தந்தப் பகுதிகளின் மண்ணின் மைந்தர்களுக்குப் பாதகம் விளைத்து வந்தார்கள். இந்த அரசியல் சூழலில், பாலஸ்தீனத்து அரபுகள் ஆட்சியாளர்களின் அடக்கு முறையால் மிகவும் பாதிப்படைந்திருந்தனர்! 

இந்தத் தகவல் பெருமானாரைப் பெரிதும் வருந்தச் செய்தது. அதன் விளைவாக, 3000 பேர் கொண்ட முஸ்லிம் படையொன்று ஆயத்த நிலையில் ‘மஸ்ஜிதுந் நபவி’யின் முன் அணி வகுத்து நின்றது!

பாலஸ்தீனின் ‘பல்காஉ’ என்ற பகுதிக்குச் செல்லவேண்டும்; அங்கே ஐரோப்பியர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றுத் திரும்பவேண்டும் என்பதுவே அப்படைக்கான ஆணை! அப்படையில் பட்டறிவு மிக்கப் படை வீரர்களும் புகழ் மிக்க நபித்தோழர்களும் (முஹாஜிர்களும் அன்சார்களும்) இடம் பெற்றிருந்தனர். அப்பெரும் படைக்குத் தளபதியாக அண்ணலார் (ஸல்) அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர் யார் தெரியுமா? பதினெட்டே வயதை எய்தியிருந்த உசாமா இப்னு ஜெய்து (ரலி). அவர், ஹசனுக்கும் ஹுசைனுக்கும் இணையாக, அண்ணலார் (ஸல்) அவர்களின் மடியில் தவழ்ந்து, அன்பைப் பெற்று வளர்ந்தவர்!

அவருடைய தலைமையினை ஏற்க, நபித்தோழர்கள் சிலர் மறுப்பைத் தெரிவித்தனர். அவரின் தந்தையான ஜெய்தை "மூத்தா’ப் போரின் தலைமைப் பொறுப்பை ஏற்கச் செய்தபோதும் சிலர் எதிர்த்தனர்; இப்போதும் எதிர்ப்பா?அப்போது தமது முடிவில் உறுதியாக நின்ற பெருமானார் (ஸல்), படைத் தளபதியும் பாசத்துக்கு உரியவருமான உசாமாவை அருகில் அழைத்து இவ்வாறு கூறினார்கள்:

"உசாமா! ஷாமை நோக்கிய உமது படை சென்றுவிட்டு வெற்றியுடன் திரும்பும்போது, என்னைக் காணமாட்டீர்; எனது மண்ணறையையும் இந்தப் பள்ளியையும்தான் காண்பீர்.”

படைத் தளபதி பதறிப்போனார்! இருப்பினும் என்ன? கண்கள் கண்ணீரை உகுக்க, படைத் தளபதி உசாமா இலக்கை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மதீனாவுக்கு வெளியில், ‘ஜுர்ஃப்’ என்ற இடத்தில் படை பல பிரிவுகளாக்கப்பட்டு அணிவகுத்து நின்றது. இதற்கிடையில், இரண்டு நாள்கள் சென்றிருந்தன.

உசாமாவின் தாய் உம்மு அய்மன் (ரலி) அவர்களால் அனுப்பப்பட்ட, அண்ணலார் (ஸல்) அடுத்து வந்த திங்கள் கிழமை (ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் 12 க்குச் சமமான ஜூன் 8, கி. பி. 632) அன்று இறந்துவிட்டார்கள் என்ற செய்தி சென்றடைந்தது !

மதீனாவின் புறநகர்ப் பகுதியில் இருந்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் செய்தி போய், அவர்கள் தம் மகள் ஆயிஷாவின் வீட்டுக்கு விரைந்து வந்து, நபியின் இறப்பை உறுதி செய்ததுவரை, “நபி இறக்கவில்லை! ‘இறந்துவிட்டார்கள்’ என்று எவரும் கூறினால், அவரின் தலை துண்டாகிப் போகும்!” என்று உண்மைக்கு மாற்றமாக உரத்துக் கூறிக்கொண்டிருந்த உமர் (ரலி) துவண்டு விழுந்தார்! என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்ற உஸ்மான் (ரலி) அவர்கள், தமக்கு உமர் ‘ஸலாம்’ கூறியதைக்கூடச் செவியுற முடியாமல் நின்றிருந்தார்கள்! அந்தப் போதில், ‘ஷாயிருன் நபி’ (நபியின் கவிஞர்) என்று புகழ்ப் பெயர் பெற்ற ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) இயல்பான சொற்கோவையால், கவலையில் கையறுநிலைக் கவி பாடிக்கொண்டிருந்தார்:
"மர்திய்யா" (கையறுநிலை) கவிதையான 60 அடிகளுக்கு மேல்பட்ட இதன் முழுப் பாட்டையும் மொழியாக்கம் செய்தால், நமது உணர்வு கொப்பளித்துக் கொதிக்கும்! அதனால், இடைப்பட்ட எட்டு அடிகளை மட்டும், என்னால் முடிந்த அளவுக்கு உணர்வு ததும்பத் தமிழ்க் கவியாக்கம் செய்துள்ளேன்.

மண்ணில் வாழ்ந்த இறையின் தூதர்
மறைந்து விட்டார்! என்னுடைய
கண்ணுக் கெதிரே இருக்கு முண்மை
கண்டே யானும் அழுகின்றேன்.

அழுகை யொன்றே இப்போ தெங்கள்
அன்பின் சிறந்த அடையாளம்.
தொழுகை முடித்தோர், சூழ்ந்து நிற்போர்
துவண்டு போனார் கவலையினால்.

கவலை மிகைப்பால் ஒப்பா ரியுடன்
கண்ணீர் சிந்தல் முறையில்லை.
இவரைப் போன்றோர் உலகில் இல்லை
இனியும் புவியில் வரமாட்டார்.

எங்கள் நபியாம் இவருக் கிணையாய்
எவரும் இல்லை; இனியுமிலை!
மங்கும் உலகின் முடிவு வரைக்கும்
மாற்றுத் தூதர் வரமாட்டார்!

நபிவரலாற்றாசிரியர் இப்னு ஹிஷாம் அவர்கள் பதிவு செய்த இக்கவிதை, இன்றும் நம் உணர்வுகளை உந்தச் செய்கின்றது. இக்காலத்தில் புனையப்பட்டுப் புனிதத்துடன் ‘மவ்லூது’ எனும் பெயரில் ஓதப்படும் வரம்பு கடந்த புகழ்ப் பாட்டன்று அது. உள்ளத்தில் கிளர்ந்த உணர்ச்சிகளின் உண்மை வெளிப்பாடு! நபியவர்களாலும் தோழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை இலக்கியம்!

கவிதைக்குத் தொடர்பற்ற சில நிகழ்வுகளைத் தொடக்கத்தில் தொட்டுக் காட்டியதன் நோக்கம், இயல்புக் கவிஞர்களாக வாழ்ந்தவர்கள், மகிழ்ச்சியிலும் மனவருத்தத்திலும், தமது இயல்பை, நபியவர்களால் பாராட்டுப் பெற்ற தமது திறனைக் கவலையிலும் வெளிப்படுத்துவார்கள்; அதுதான் நபித்தோழரும் கவிஞருமான ஹஸ்ஸானின் உளப்பாங்கும் உண்மைப் படுத்துகின்றது.

அதிரை அஹ்மது

4 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சொல்ல வேண்டியதை எப்படிச் சொல்ல வேண்டும், பதிவொன்று எழுதுவதென்றால் எப்படி எழுதுவது என்ற பாடம் கற்றுக் கொடுக்கிறது இதுபோன்ற பதிவுகள்.

sabeer.abushahruk said...

அற்புதமான கவிதை; உள்வாங்கி வாசிக்க உருகிவிடுகிறது உள்ளம்.

நன்றி, அஹ்மது காக்கா!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sabeer.abushahruk said...

காக்கா,

எங்க ஸ்டைலில்:

அண்ணல் நபி(ஸல்)
மறைந்து விட்டாலும்
அத்துணை மனங்களிலும்
நிறைந்து விட்டார்கள்

உண்மை செய்தியால்
உறைந்து விட்டவர்கள்
உள்ளம் உருகி அழுதே
கரைந்து விட்டனர்

தொழுது முடித்தோரும்
அழுது கலங்கினர்
பொழுது முடிந்தும் -குழுக்களாய்ப்
புலம்பல் தொடர்ந்தது

அண்ணல்(ஸல்) மீதான
அன்பை வெளிப்படுத்த
அழுவதையன்றி
அறிந்தது வேறுயில்லை

கவலை மிகைத்தாலும்
ஒப்பாரி வைக்க
ஒப்பவில்லை
நபி(ஸல்) சொல்லித்தந்த
நல்வழி கற்றதால்

அற்ப உலகம்
அழிந்துபோகும்
அண்ணல்(ஸல்) புகழோ
மங்காது மறையாது

எத்தனைப் பிறப்பு
எங்கெங்கு நிகழ்ந்தாலும்
ஏந்தல் நபிபோல்
பிறப்போர் யாருமில்லை!

Ebrahim Ansari said...

கவிதைக்கு வார்த்தைகள் கிடைத்துவிட்டன.

ஆனால் கவிதை எழுதப்பட்டதன் சோகமான காலப் பின்னணி அதை நமது மரியாதைக்குரிய காக்கா அவர்கள் தமிழ்படுத்தி தந்துள்ள விதம் ,

தொடர்ந்து நமது ஆஸ்தான கவி அவர்களின் தொடர் கவிதை ஆகியவற்றைப் பாராட்டத்தான் வார்த்தைகள் கிடைக்கவில்லை.

ஒரே ஒரு வார்த்தை கிடைக்கிறது அது "மாஷா அல்லாஹ்."

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு