Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மழை வந்தாச்சு...! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2014 | , , ,


மழைவந் தாச்சு! மழைவந் தாச்சு!
               மனமகிழ் வூட்ட மழையும் வந்தாச்சே!
உழவர் அனைவர் உளமகிழ் வோடே
               உழுது பயிர்செய உடனே வந்தாச்சே!              (மழை)

படைத்த நாயன் பரிவோ டிந்தப்
               பாரைப் பயிரால் பசுமை யாக்கிடவே
கிடைத்த மழையால் நாடு செழித்துக்
               கேடுக ளெல்லாம் ஓடி ஒழிந்திடவே.               (மழை)

வானில் மேகம் வளமாய்க் கூடி
               வல்லோன் புகழை வாயால் பாடுவதால்
தேனின் இன்பம் தெவிட்டா விதமாய்
               தேடிப் பெய்யும் தேவை மழையாகும்!            (மழை)

இறந்த பூமி எழுந்து நின்றே
               ஏழ்மை நீங்கி இனிமை ஓங்கிடவே
பறந்து செல்லும் பறவை முதலாம்
               படைப்புக ளெல்லாம் பாடி மகிழ்ந்திடவே!    (மழை)

பசுமை நிலத்தைப் பார்த்து மகிழ்ந்து
               பக்குவ மாகப் படைத்த வல்லவனைச்
சிசுவைப் போன்ற சிந்தை கொண்டு
               செழுமை வழங்கச் சிறப்பாய் வேண்டுவமே! (மழை)

அதிரை அஹ்மது

9 Responses So Far:

sabeer.abushahruk said...

மழைநீரை மட்டுமல்ல, இது போன்ற மழைப் பாடல்களையும் சேகரிக்க வேண்டும்.

ஊரில் மழையென்றாலே அதிரை நிருபருக்குக் குடை இல்லாமல் வர முடியாது போலிருக்கின்றதே!

மழை வந்த உற்சாகம் மனிதர்க்கு ஏற்படுவது இயல்பு; வார்த்தைகளும் இங்கு உற்சாகத்தில் துள்ளிக் குதித்து மழையை அனுபவிக்கின்றன!

காக்கா அவர்கள் தான் பாட்டுக்குப் பாடிக்கொண்டே போக, தன் பாட்டுக்கு வந்தமர்ந்து கொள்கிறது இலக்கண மரபு!

வாசிக்க வாசிக்க எனக்குக் காணொளியாகவே விரிகின்றன காட்சிகள்!

வாநிலை அறிக்கை வாசிக்கும்போது எங்கள் ஊரில் பெய்த இந்த கவி மழையையும் பதிவு செய்து வாசிக்குமாறு கோரிக்கை வைக்கிறேன்.

அல்லஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

Unknown said...

நன்ன்ன்ன்ன்றி - வாழ்த்துக்கும் 'துஆ'வுக்கும்.
மரபுக் கவிதைக்குத்தான் இலகுவில் இன்னிசையைப் பொறுத்த முடியும்.
புதுக் கவிதைக்குப் பொறுத்த முடியாது; அல்லது, போராட வேண்டும்.

Unknown said...

//மரபுக் கவிதைக்குத்தான் இலகுவில் இன்னிசையைப் பொறுத்த முடியும்.
புதுக் கவிதைக்குப் பொறுத்த முடியாது; அல்லது, போராட வேண்டும்.//

அஹமது காக்காவின் ஞானம் சிலிர்க்கிறது....

sabeer.abushahruk said...

//புதுக் கவிதைக்குப் பொறுத்த முடியாது; அல்லது, போராட வேண்டும்.//

காக்கா,

"சரிகமபதநி"யை மாற்றி யோசித்த ஏ ஆர் ரஹ்மானுக்கும் மரபுத் தடைகளை விட்டுக்கொடுத்த வைரமுத்துவுக்கும்தான் தேசிய விருது கிடைத்தது (சின்னச் சின்ன ஆசை; சிறகடிக்க ஆசை)

பிழையில்லாதத் தமிழில் சுவையுறச் சொல்லும் மொழியின் எல்லா வடிவங்களும் எனக்குப் பிடிக்கும். என்ன ஒன்று என்றால் எவ்விதத்திலாவது வாசகனை ஈர்க்க வேண்டும்.

தன்னிச்சையாகவே தங்களுக்கு மரபிலக்கணம் அமைந்துவிடுவதால் தங்களின் கவிதைகளை நான் ரசிக்கிறேன்.

மரபைக்கட்டிக்கொண்டு பலரால் எழுதப்படும் பல கவிதைகளில் எந்த ரசமும் இல்லாததால் அவற்றை வாசிக்க உண்மையிலேயே எனக்கு ம் எஞ்சோட்டுப் பசங்களுக்கும் "சடப்பா வருவதே" உண்மை.

நன்றி!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சாச்சாவின் ம(ப்)ரபு மழையில் நனைந்ததில் ஜில்,ஜில் !!

Shameed said...

மரபு கவிதை போட்ட அஹ்மத் காகா அவர்கள் சமிப காலமாக பின்னுடங்களுக்கு மறப்பு போட்டதேனோ !

Unknown said...

//மரபு கவிதை போட்ட அஹ்மத் காகா அவர்கள் சமிப காலமாக பின்னுடங்களுக்கு மறப்பு போட்டதேனோ!//

அதா...? அது வந்து....என் கணினியில் யாரோ கை வைத்துவிட்டார்களா? பழைய செட்டிங் மாறிப் போச்சு! இப்ப, அதிரையிலிருந்து மதுக்கூருக்குப் போக முடிவு செய்து, அதிரையிலிருந்து கிளம்பி, முத்துப்பேட்டைக்குப் போய், முக்கூட்டு சாலை தாண்டி, மதுக்கூர் போகவேண்டியதாயிற்று! கஷ்டப்பட்டு தட்டச்சு செய்தது காணாமல் போய்விடுகிறது! என்ன ப்ராப்ளம் என்று தெரியலையே! இந்தக் கமெண்டாவது வருமா? இந்தத் தடவை, Adirai to Madukur direct.

மரபுக் கவிதையை எல்லாரும் விரும்புறீங்களா? அப்போ, நீங்கல்லாம் சின்னப் பிள்ளைகள்; நானுந்தான்.

Unknown said...

//மரபுத் தடைகளை விட்டுக்கொடுத்த வைரமுத்துவுக்கும்தான் தேசிய விருது கிடைத்தது.//

ஏதோ ஒரு இழையில், "வடமொழி'யின் துணையில்லாமல் தமிழ் தனித்தியங்க முடியாது" என்று வைரமுத்து வாந்தி எடுத்திருந்தார். எனக்கு வந்ததே சினம்! "இவனெல்லாம் தமிழனா?" என்று பின்னூட்டம் போட்டேன்.
இதை வைரமுத்துவின் விசிறி, கனடாக் கவிஞர் புகாரிக்கும் அனுப்பினேன்.
ச்சும்மா glamour!

Yasir said...

மழைக்கவிதை.மகிழ்ச்சி கவிதை ..உள்ளமும் உடலும் சிலிர்த்தது போன்ற உணர்வு அல்லாஹ் உங்கள் ஆரோக்கியத்தை காப்பானாக ஆமீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு