Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 04, 2014 | , , ,

தொடர் ; பகுதி  பதினொன்று

சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் மரணமடைந்து விட்டாலும் அவருடைய வரலாற்றைப் பல்வேறு ஆசிரியர்களின் எழுத்துக்கள் மூலம் படித்து பகிர்ந்த அனுபவத்தை மறக்க முடியவில்லை. 

உலக சரித்திரம்,  அலெக்சாந்தரைப் புகழ்ந்த அளவுக்கோ, நெப்போலியனை மாவீரன் என்று எடுத்துக் காட்டிய அளவுக்கோ, பாபரை வெற்றி வீரராக சுட்டிக் காட்டிய அளவுக்கோ, அக்பரை மகா  அக்பர் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்த அளவுக்கோ ,  சிவாஜியை மற்றும் அவுரங்கசீப்பை விவரித்த  அளவுக்கோ அன்பின் உருவாகவும் தொடர் வெற்றியின் வீரராகவும் கொள்கையில் பிடிப்புள்ள தலைவராகவும் இரக்கத்தின் மறு உருவாகவும்   இறையச்சத்தின் எடுத்துக்காட்டாகவும் மக்கள் நலம் பேணிய  மன்னராகவும் பகைவரையும் அன்புடன் நடத்திய மனிதாபிமானத்தின் மறு உருவாகவும் வாழ்ந்து மறைந்த சலாஹுதீன் அய்யூபி அவர்களை வரலாறு அவ்வளவாக முன்னிலைப் படுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்தத் தொடரை எழுத வேண்டுமென்று அதற்காகப் படிக்கத் தொடங்கிய போதுதான் இவ்வளவு சிறப்புமிக்க  ஒரு சுல்தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்று நான் தெரிந்து  கொண்டேன் என்ற உண்மையை சொல்வதில் எனக்கொன்றும் தயக்கமில்லை. இதே உணர்வு கடந்த அத்தியாயங்களைப் படித்துவரும் நண்பர்களுக்கும் இருக்கலாமென்று கருதுகிறேன். 

இதுவரை நாம் படித்த மூன்று சிலுவைப் போர்களின் வரலாறும் ஒரு விஷயத்தை நமக்கு வேதனையுடன்  சொல்லி இருப்பதை நாம் உணர்ந்து இருக்கலாம். 

ஆபிரகாம் என்ற பெயருக்கும் இப்ராஹீம் என்ற பெயருக்கும் பெரிய அளவு வித்தியாசமில்லை; ஜோசப் என்ற பெயருக்கும் யூசுப் என்ற பெயருக்கும் பெரிய அளவு வித்தியாசமில்லை ; அதே போல்தான் மோசஸ், நோவா ,  ஜேம்ஸ் , ஐசக், ஜெமாயில் போன்ற பெயர்களுக்கும் மூஸா , நூஹ், ஷம்ஸ், இஷாக், இஸ்மாயில் ஆகிய பெயர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஈசா நபி( அலை) அவர்களை இயேசு என்று அழைப்பதும் இவ்வாறேதான் வித்தியாசமில்லாத விஷயங்கள். அடிப்படையான வேதங்களில்   அந்த வேதங்கள் இறக்கப்பட்ட மொழிகளின் இலக்கண  வரம்புக்குட்பட்டு வழங்கப்பட்ட பெயர்கள்தான் இவைகள் . 

ஆனால் அனைத்துக்கும் பொதுவானதும் அடிப்படையானதுமான   உண்மை  என்னவென்றால் இறைவன் ஒருவன் என்பதும் அவன் பல்வேறு காலகட்டங்களில்  பல வேதங்களை தனது தகுதிவாய்ந்த நபிமார்களுக்கு இறக்கிவைத்தான் என்பதும் காலங்களின் மாற்றத்துக்கு ஏற்ப தான் இறக்கிய வேதங்களிலும் சட்டங்களிலும் மாற்றங்களை அந்த இறைவனே அறிவித்தான் என்பதும் இறுதியாக பூரணமாக்கப்பட்ட இறுதி வேதமாக திருக் குர்ஆனை ம் அதற்கான இறுதித் தூதரையும் அனுப்பினான் என்பதும்தான்.  இந்த அடிப்படைக் கருத்தை உணர்ந்து ஒப்புக் கொள்ள மறுத்த காரணத்தால்தான் ஐரோப்பாவும் மத்திய ஆசியாவும் பாலஸ்தீனமும் இரத்த வெள்ளத்தில் மிதந்தன – மிதந்து கொண்டு இருக்கின்றன என்பதுதான் வேதனை மற்றும் கசப்பான. உண்மை.

இறைவனின் முதல் ஆலயம் மெக்காவில் என்பதும் , இரண்டாம் ஆலயம் பைத்துல் முகத்தஸ் என்பதும், பின்னாளில் மதீனாவில்தான் ஒரு இறைத்தூதர் இருந்து ஆட்சி செய்வார் என்றும் முன் அனுப்பப்பட்ட வேதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தும் அதை ஏற்காமல் அலட்சியம் செய்த காரணத்தால் அத்துமீறிய போப் ஆண்டவர்களால் புகட்டப்பட்ட விரோத மனப்பான்மையான விஷக் கருத்துக்களால் வெட்டப்பட்டமனித உடல்கள் எத்தனை? சீவப்பட்ட மனிதத் தலைகள் எவ்வளவு? கைகளையும்  கால்களையும் இழந்த ஊனமுற்றவர்கள் எத்தனை பேர்கள்? பிரிந்து சிதறிய குடும்பங்கள் எத்தனை இலட்சம்? சொத்து சுகங்களை இழந்து அகதிகளாக அலைந்த மனிதர்கள் எத்தனை பேர்?     இவ்வளவு கேள்விகளையும் இதுவரை நாம் படித்த மூன்று சிலுவைப் போர்களும் நமது சிந்தனைக்கு விட்டிருக்கவேண்டும். இவ்வளவு இரத்த சக்திக்கும் இடையில் நாம் சந்தித்த  சிறப்பான மனிதர்களின் தலைமை இடத்தில் சலாஹுதீன் அவர்கள் நிற்கிறார்கள். 

அவருடன் கூடவே, இங்கிலாந்தின் மன்னர் ரிச்சர்டும் ஒரு ஓரமாக நிற்பதை நாம் மறுக்க இயலாது. போப் ஆண்டவரின் வார்த்தைகளைத் தட்ட  முடியாமல்தான் படை திரட்டி வந்தாரே தவிர,  உண்மையில் போர்க்களத்தில் சலாஹுதீன் அவர்கள் நடந்து கொண்ட பண்பான முறைகளை பார்த்த போது அவரது மனசாட்சி, அவரிடம் கேட்ட கேள்வி  இந்தப் போர்கள் தேவைதானா என்பதுதான். அதனால்தான் அவர் சலாஹுதீன் அவர்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வர வரலாற்று சிறப்புமிக்க ஒரு பிரேரணை செய்தார் என்று வரலாறு சொல்கிறது . அதைக் குறிப்பிடாமல் இருந்தால் இந்த வரலாற்றில் முக்கிய அம்சத்தை சொல்லாமல் விட்ட குற்றத்துக்காக எனது மனசாட்சியே உறுத்தும். ஆகவே அதை சுட்டி  சொல்லிவிட்டு நான்காம் சிலுவைப் போரில் நடந்த கூத்துக்களை விவரிக்கலாம்.      

இங்கிலாந்து மன்னர் ரிச்சர்டும் தனது பங்குக்குப் படுகொலைகளை நிகழ்த்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அவருடைய மனசாட்சி தனது கதவைத் தானே  திறந்தது. சலாஹுதீன் தான் நோய்வாய்ப்பட்டபோது மருந்துகள் அனுப்பியதும், தனது குதிரையை தான் இழந்த போது அதற்கு பதிலாக குதிரை  ஒன்றை அனுப்பியதும் சலாஹுதீன் அவர்கள் ஒரு போரிடப்பட வேண்டியவரல்ல  மாறாக போற்றிப் புகழப்பட வேண்டியவர் என்ற எண்ணத்தை அவருக்குள் ஊட்டியது. பகைவர்களை வெல்ல வாளால்   மட்டும் முடியாது நல்ல வாழ்க்கை முறைகளாலும் முடியும் என்ற  முடிவுக்கு அவரைத் தள்ளியது. கருணை நிறைந்த சலாஹுதீனை எதிர்த்து கத்தியை ஏன் தூக்க வேண்டும் என்று யோசித்தார். அதே நேரம் இங்கிலாந்தில் சில அரசியல் சூழ்நிலைகள் மன்னர் ரிச்சர்டை இங்கிலாந்து திரும்பிச் செல்ல நிர்ப்பந்தித்தன. ஆகவே சலாஹுதீன் போன்ற ஒரு நல்லவருடன் நிரந்தர சமாதானமாகப் போய்விட்டு மீண்டும் தொடராவண்ணம் இந்தப் போர்களையும் உயிர்ப்பலிகளையும் நிறுத்திவிட்டு  நாடு திரும்பலாம் என்று யோசித்தார். அதற்காக அவர்வைத்த அமைதிப் பிரேரணை வரலாற்று சிறப்புடையது.   அதற்காக சலாஹுதீன் அவர்களின் தம்பியான சைபுதீன் அவர்களை மன்னர் ரிச்சர்டு சந்தித்தார். சந்திப்பின் நோக்கம் சமாதானம் மட்டுமல்ல நல்ல இடத்து சம்பந்தமும்தான். 

மன்னர் ரிச்சர்டுக்கு ஒரு விதவை சகோதரி இருந்தார். அவரை, சலாஹுதீன் அவர்களின் தம்பி சைபுதீனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டால் எதிர்காலத்தில் இஸ்லாமிய மற்றும் கிருத்தவப்படைகள் போரிட்டுக் கொள்ள வாய்ப்பு இல்லாமல் செய்து விடலாமென்று ரிச்சர்டு நினைத்தார். வரலாற்று ஆசிரியர்களும் இந்த “பந்தம்” ஒப்பந்தமானால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கும் போர்ப் பந்தங்களை இந்தத் திருமண நீர்  தெளித்து அணைத்து விட்டிருக்குமென்று அபிப்பிராயப்படுகிறார்கள். இழுவைப் போர்களாக மாறிய  சிலுவைப் போர்கள் எப்போதோ இவர்களின் முதலிரவோடு ஒரு முடிவுக்கும் வந்திருக்கும்.   

ஆனால், இந்த எண்ணத்தின் குறுக்கே துவேஷ  எண்ணங்களால் இரும்புத் தடைகளை ஏற்படுத்தி  தடை வித்திதார்கள் கிருத்தவ மத குருக்கள்.  மன்னர் ரிச்சர்டின் மனநிலையையே அவர்கள் சந்தேகப்பட்டார்கள்.  இதனால் மீண்டும் மீண்டும் போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் மூன்றாம் சிலுவைப் போருக்குபின்  தேன்நிலவோடு முடிந்திருக்க வேண்டிய போர்கள் நான்காம் சிலுவைப் போராக (1202- 1204) மீண்டும் ஆரம்பமானது. 


நான்காம் சிலுவைப் போரில் முஸ்லிம்களின் சார்பாக போருக்குத் தலைமை தாங்கியவர் மாலிக்-அல்-ஆதில் என்பவராவார். இவர் சலாஹுதீன் அவர்களின் வாரிசுதான். எனவே அதிக அறிமுகம் தேவை இல்லை. சலாஹுதீன் அவர்களின் போர்த்தந்திரங்கள் அவரோடு மடிந்து போய்விட்டது என்றெண்ணி ‘ தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டபிரசண்டன்’  என்று சொல்வார்களே அதேபோல் கிருத்தவப் பாதிரிமார்களின் தூண்டலில் இந்தப் போர் தொடங்கப் பட்டது. இந்தப் போருக்கு முஸ்தீபு செய்து முடுக்கிவிட்டவர் அன்று போப்பாண்டவராக இருந்த  செல்ஸ்டின் என்பவராவார் . 

 இந்தப் போர், கிருத்தவர்களைப் பொறுத்தவரை  பிள்ளையார் பிடிக்க குரங்காகிப் போன போராகும். உண்மையில் மூன்றாம் சிலுவைப் போர்களுக்குப் பின் நடைபெற்ற போர்கள் “போர்கள்“ தான். அவற்றில் சூடும் இல்லை; சொல்வதற்கு ஒரே ஒரு அம்சத்தைத்தவிர  சுவையான செய்திகளுமில்லை. ‘பனை மரத்தில் கட்ட வேண்டிய கலயத்தை கிருத்தவ வீரர்கள் பாக்கு மரத்தில் கட்டிய ‘ கதைதான் அது.   இந்த நான்காம் சிலுவைப் போர் பற்றி வரலாற்றில் இப்படிக் குறிப்பிடப்படுகிறது. 

The Fourth Crusade (1202–1204) was originally intended to conquer Muslim controlled Jerusalem by means of an invasion through Egypt.. Instead, in April 1204, the Crusaders of Western Europe invaded and sacked the Orthodox Christian city of Constantinople,   capital of the Byzantine Empire. This is seen as one of the final acts in the Great Schism between the Eastern Orthodox Church and Roman Catholic Church and a key turning point in the decline of the empire and of Christianity in the Near East.

நான்காம் சிலுவைப் போர் முஸ்லிம்களால் கைப்பற்றபட்ட புனித ஜெருசலத்தை வென்றெடுக்கும் நோக்கத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காகவே வரும் பாதையில் எகிப்தின் மீது ஒரு படையெடுப்பும் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த நோக்கங்களை மறந்த மேற்கு ஐரோப்பாவின் சிலுவைப் போர் வீரர்கள் கான்ஸ்டான்டினோபில் என்கிற  பைசாந்திய நாட்டின் தலைநகரை கலங்கடித்தார்கள். இதற்கான உள்நோக்கமான காரணம் கிருத்துவ மதத்தின் பிரிவுகளான கீழை நாடுகளின் பழமைவாத கிருத்துவர்களுக்கும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் இடையே நிலவிய பகைமையே காரணம். ஆக திரும்பவும் கூறுகிறேன் பிள்ளையார் பிடிக்கப் புறப்பட்டு குரங்கைப் பிடித்தார்கள்; கடித்தார்கள்; துப்பினார்கள்.   திசை மாறிய பறவைகளானார்கள் சிலுவைப் போர்வீரர்கள். முஸ்லிம்களை ஒழிக்கப் புறப்பட்டவர்கள் கிருத்தவர்களையே ஒழித்துக் கட்டினார்கள்; பெண்களை மானபங்கபடுத்தினார்கள்; கற்பை சூறையாடினார்கள்; நகரின் பல பகுதிகளை தீவைத்துக் கொளுத்தினார்கள்.   

இது ஒரு பக்கம் நிகழ மறு பக்கத்தில் பாலஸ்தீன் மற்றும் ஜெருசலம் என்கிற குறிகளை வைத்துப் புறப்பட்ட கிருத்துவ சிலுவைப் போர்ப்படை அன்றைய சிரியாவின் எல்லைக்குட்பட்ட இன்றைய லெபனானின் அழகொழுகும் அலைமகளும் மலைமகளும் கைகோர்த்துத் திரியும் தலைநகர் பெய்ரூட்டை கைப்பற்றினர். பதிலுக்கு சலாஹுதீன் அவர்களின் வாரிசு தலைமை தாங்கிய  படை ஜாஃபா கோட்டையை முற்றுகை இட்டு அங்கு சலாஹுதீன் அவர்களின் காலத்தில்  கருணைகாட்டி  இடம் பெயர்ந்த கிருத்தவ வீரர்களை உண்டு இல்லை என்று ஆக்கியது. 

சிலுவைப் போர்களைப் பற்றிய வரலாற்று செய்திகளை  கவனித்து வருபவர்களுக்கு ஒன்று புரியும் . தானாகவே திரண்டு போருக்கு வரவேண்டியது. வந்தபின் வெல்ல முடியாமல் தோற்றுப் போய் சமாதன உடன்படிக்கை கேட்க வேண்டியது ஆகியனதான் ஐரோப்பிய அரசர்கள், அவர்களைத் தூண்டிய பாதிரிமார்கள்,  கிருத்தவ வீரர்கள் ஆகியோரின் பழக்கம். 

அதேதான் இந்த நான்காம் சிலுவைப் போரிலும் நடந்தது. சலாஹுதீன் அவர்களின் பாணியில் கிருத்துவர்கள் காட்டிய வெள்ளைக் கொடிக்கு இஸ்லாமியப்படை மீண்டும் காட்டியது பச்சைக் கொடி. அதோடு தீர்ந்ததா பகைமை?  பலமுறை பல்லுடைந்தும் அத்தோடு படித்தார்களா பாடம் ? இல்லையே  ! 

ஐந்தாவது சிலுவைப் போர் ஆரம்பிக்கப்பட்டதே !  

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்கலாம்.   

இபுராஹீம் அன்சாரி

3 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

சிலுவைப் போர்களைப் பற்றிய குறிப்புகள் இத்தொடருக்கான போனஸாகக் கிடைத்து விட்டன.

ஜஸ்ட் லைக் தட் ஆரம்பிக்கப்போய் விரிவான தொடராக அமைந்து வருகிறது பாலஸ்தீனம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வரலாறு....! பதிக்கப்படுவது மட்டுமல்ல அது விதைக்கப்படவும் செய்கிறது...!

ஜெருசலம் பற்றிய அரிய தகவல்களும் அதன் வரலாற்று பின்னனிகளோடு மாவீரர் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் பற்றியும் நிரம்ப அறிந்து கொள்ள உதவும் இந்த தொடர் இன்னும் வளரனும் இதற்கு மேலும் தரனும்...

இது பேரவா...

Ebrahim Ansari said...

Dear Thambi Sabeer.

Wa Alaikkumussalam

Jasak Allah Hairan.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு