Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

14

அதிரைநிருபர் பதிப்பகம் | November 08, 2014 | , , ,

தொடர் - பகுதி பதினைந்து

வளங்களின் வளர்ப்பிடம் ! கடல் மகளும் மலை மகளும் கைகோர்த்து அலங்கரிக்கும் அழகிய பாலஸ்தீன் ! இறைவன் கொடுத்த புனிதபூமி ! நபிமார்களின் தாயகம் ! பெருமானார் (ஸல்) மற்றும் கலிபா உமர் (ரலி) அவர்களின் பாதங்கள் பட்ட நிலம்! இப்படி பல்வேறு பெருமைகளுக்குரிய இந்த பாலஸ்தீனத்தின் ஆட்சியும் அதிகாரமும் பலரின் கைகளுக்கு மாறி மாறி உஸ்மானிய துருக்கியின் கைகளில் வந்து சேர்ந்ததும் யூதர்களின் மகிழ்ச்சி அலை மத்திய தரைக்கடல் அலைகளையும் மிகுத்தது.

துருக்கியின் ஆளுமைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தங்களை குடியேற அனுமதித்தது போல் பாலஸ்தீனத்திலும் குடியேற அனுமதி கேட்டு அரசர் முன் நின்றார்கள். யூதர்களைக் காப்பாற்ற கப்பல் அனுப்பி அவர்களை மீட்டுவந்த துருக்கி சுல்தான், அவர்கள் வடித்த நீலிக் கண்ணீரை நிஜக் கண்ணீர் என்று நம்பினார். பாலஸ்தீன் என்கிற யூதர்களின் முதலை மீட்டெடுப்பதற்கான முதலைக் கண்ணீரென்று சுல்தான் உணரவில்லை. பாலஸ்தீனத்திலும் யூதர்களைக் குடியேற அனுமதித்தார். இது ஒரு யூத சபதத்தின் - சங்கல்பத்தின் ஒரு அங்கமென்று சுல்தானுக்குத் தெரியவில்லை. அரசர் தலையாட்டினார்; யூதர்கள் பால்ஸ்தீனம் சென்று குடியேற மூட்டை முடிச்சுகளைக் கட்டினர். 

இந்த இடத்தில் நாம் ஒரு குறிப்பை சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது. 

ஒரு இனம் , நாடு விட்டு நாடுகள் தப்பிப் போன இனம் இடையில் சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டாலும் மீண்டும் தங்களது மூதாதையர்கள் வாழ்ந்த இடத்துக்கே திரும்பி வருவதற்காக ஆசை மட்டுமல்ல ; பிரயாசைகளும் பட்டார்கள். 

சாதாரணமாக , ஒரு ஐந்து அல்லது வருடங்கள் நம்மில் சிலர் வெளியூர்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ இருந்துவிட்டால் நமது சொந்த ஊருக்கு வந்து அங்கு குடியிருப்பை மாற்றிக் கொள்வதற்கு இலகுவாய் மனம் வராது. தாங்கள் தற்காலிகமாக வசித்த நாடுகளின் பெருமைகளையேப் பேசுவார்கள் அங்கேயே தங்கி இருக்கவே விரும்புவார்கள். நமக்கு பிறப்புரிமை இல்லாமல், வேலைக்காகக் சென்ற நாட்டிலேயே தங்கிவிட நிரந்தர அனுமதி கிடைத்தால் தங்களது தாய்நாட்டையே விட்டு விடக் கூட நம்மில் பலர் தயாராக இருப்பதை நாம் மறுக்க இயலாது. 

இன்று, அமீரகத்தில் நிரந்தரக் குடியுரிமை தருகிறோம் என்று அந்த நாட்டின் அரசு அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ‘இந்திய நாடு என்வீடு! இந்தியன் என்பது என்பேரு! ‘ என்று, எனக்கு என் நாடுதான் வேண்டும் என்று சொல்பவர்கள் நம்மில் எத்தனை பேர்கள் இருப்பார்கள்? மனதில் கை வைத்துச் சொல்லுங்கள். 

ஒரு ஐந்து வருடம் சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் வசித்தாலே அந்த ஊர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுபவர்கள், தாங்கள் பிறந்த மண்ணைப் பற்றி பல வகையிலும் தாழ்த்தியே பேசுவதைப் பார்க்கிறோம். இதோ பார் ! இந்த ஊரில் தண்ணீர் இல்லை- சாக்கடை ஓடுகிறது- பஸ் வசதி இல்லை என்றெல்லாம் பேசுபவர்கள் பலரைப் பார்த்து இருக்கிறோம். சாதாரண டீயா? டீ குடித்தால் பினாங்கில் குடிக்க வேண்டும் என்று பேசுபவர்களும் சிங்கப்பூர் மாதிரி வருமா என்று பீத்துபவர்களும் பீலாவாதிகளும் நம்மிடையே அதிகம் இருக்கவே செய்கிறார்கள்.

இத்தகைய மனிதர்களின் மனநிலைக்கு நேர்மாறானது யூதர்களின் மனநிலை. யூதர்களின் வரலாற்றை நம்முடைய மனநிலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். யூத சமுதாயம் பாலஸ்தீனை விட்டு விரட்டப்பட்டும் துரத்தி அடிக்கப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் நேற்று அல்ல நேற்று முன் தினம் அல்ல கடந்த ஆண்டல்ல பத்தாண்டுகளுக்கு முன்பல்ல நினைத்துப் பாருங்கள் இடையில் சில நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் இடையில் எத்தனை தலைமுறைகள் மறைந்தாலும் மாறினாலும் தாயகத்துக்குத் திரும்பி அங்கேயே வாழவேண்டும் அங்குதான் சாக வேண்டும் என்கிற தாயகத்துக்கான தாகமும் தேடலும் அவர்களது நெஞ்சங்களை விட்டு நீங்கவே இல்லை. 

 அதனால் துருக்கி அரசரின் அனுமதி கிடைத்ததும் புள்ளி மான்கள் துள்ளிக் குதித்தோடி வருவதைப் போல் தங்களின் குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக, பாலஸ்தீனை நோக்கி வர ஆரம்பித்துவிட்டார்கள். இது நம்ம பூமி என்ற எண்ணத்துடன் ‘நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம் அது நமக்கே உரியதாம் என்பதறிவோம்’ என்று பாரதியார் பாடிய வரிகளுக்கு உதாரணமாகவே யூதர்களின் செயல்பாடுகள் இருந்தன.

மீண்டும் அவர்களது வாழ்க்கையில் பாலஸ்தீனமும் புனித நகரான ஜெருசலமும் வரப்போகிறது என்பதை நினைக்கவே அவர்களுக்கு இனித்தது. இத்தனை ஆண்டுகள் - அல்ல- நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னும் அவர்களின் உள் மனதில் பாலஸ்தீனத்தின் பெயர் இனித்தது ஒரு வரலாற்று ஆச்சரியம்தான். இதற்குக் காரணங்கள் ? ஒன்றுமில்லை- கருவிலேயே அவர்கள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி.

 ‘தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு! ‘ என்று ஒரு கவிஞர் பாடினார் .’ தமிழன் என்று சொல்லடா! தலை நிமிந்து நில்லடா ! ‘ என்றும் பாடுவார்கள். இப்படி ஒவ்வொரு இனத்துக்கும் தங்களைப் பற்றிய பெருமைகளை தாங்களே புகழ்ந்து கொள்வது இயல்பு. ஆனால் இத்தகைய பாடல்களால் தமிழன் சாதித்தது என்ன என்றுதான் நமக்குத் தெரியவில்லை. அவை எல்லாம் வெறும் புகழ் மொழிகளாகத்தான் தோன்றுகின்றனவே தவிர, நடைமுறையில் அந்தப் பாடல்கள் வடித்துள்ள வரிகளால் எவ்வித முன்னேற்றமும் பெற்றதாக தெரியவில்லை. வசனம் பேசுவதில் நம்மவர்கள் வல்லவர்கள் என்பதால்தான் பாரதியார் கூட , ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ என்று பாடினாரோ? 

ஆனால் தலைமுறைகள் பல கடந்தாலும் – நடக்கும் பாதையில் தடைகள் பல வந்தாலும் - அடக்குமுறையும் அழித்தொழிப்பும் அன்றாட வாழ்வின் அம்சங்களாகிப் போனாலும் - இரத்த சகதிதான் தனது சமூகத்தின் மீது பூசப்பட்ட வாசனைத் திரவியம் என்றாகிப் போனாலும் - சீவப்பட்ட தலைகள்தான் தங்களது வரலாற்றை அலங்கரிக்கும் பூச்செண்டுகள் என்றாகிப் போனாலும் - பள்ளங்கள் தோண்டப்பட்டு அவற்றில் உயிருடன் புதைக்கப்பட்ட கூட்டத்துக்கு சொந்தக்காரர்களாகவே இருந்தாலும் - கண்டங்கள் பலவும் கண்டத்தைப் (கழுத்தை) பிடித்து தள்ளினாலும் அவமானப்படுத்தப்பட்டாலும் அனைத்தையும் சகித்தார்கள் யூதர்கள் . காரணம் அவர்களது குறிக்கோள் மீண்டும் பாலஸ்தீனம்! மீண்டும் ஜெருசலம்! என்பதே. அந்தக் கனவை நனவாக்கியது உஸ்மானிய துருக்கி அரசு.

அடிப்படையில் யூதர்களின் இந்த மனப்பான்மைக்குக் காரணம் அவர்கள் தங்களை உலகில் படைக்கப்பட்ட உயர்ந்த இனமென்று எண்ணிக் கொண்டதும், தங்களுக்கு வழங்கப்பட்ட வேதம்தான் உயர்ந்த வேதமென்றும் தங்களைத்தான் இறைவன் ஆசீர்வதித்துப் படைத்தான் என்றும் அவர்கள் நெஞ்சங்களில் நம்பிக்கையின் ஆணிவேர் ஆழமாகப் பதிந்து இருந்தது தான்.

யூதத் தாய்மார்களின் மார்பகங்கள் பால் சுரந்ததும் பாலஸ்தீனின் பெயர் சொல்லியே சுரந்தது. அவற்றில் இதழைவைத்து உறிஞ்சிக் குடித்த ஒவ்வொரு குழந்தையும் பாலஸ்தீன்! என்றும் ஜெருசலம் ! என்றும் சப்புக் கொட்டி சுவைத்தே தாய்ப்பாலருந்தின. ‘ உலகம் பிறந்தது எனக்காக – ஓடும் நதிகளும் எனக்காக- மலர்கள் மலர்வது எனக்காக பாலஸ்தீன அன்னை மடியை விரிப்பாள் எனக்காக’ என்பதே அவர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ஒவ்வொருவரின் இதயம் இசைத்த கீதமாக இருந்தது. 

யூதர்களின் தினசரி தியானங்களிலும் வழிபாடுகளிலும் பாலஸ்தீனத்தின் பெயரே உள்ளங்களிலும் உதடுகளிலும் ஓங்கி ஒலித்தது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

1512-ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் யூதர்களின் முதல் மூட்டை முடிச்சு பாலஸ்தீனுக்கு வரத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பலர் கூட்டங்களாக குடும்பங்களாக வரத் தொடங்கினார்கள். வந்தவர்கள் உடனே கடை விரிக்க ஆரம்பித்தார்கள். முதலில் விவசாயத்தைக் குறிவைத்து தொடங்கினார்கள். அதாவது விதைகளை வைத்து வித்தைகளைத் தொடங்கினார்கள். இந்த சிறு விவசாய நிலங்கள் மிகக்கூடிய விரைவில் விவசாயப் பண்ணைகளாக பரிணமித்தன. அதேபோல் பால் போன்ற இன்றியமையா உணவுப் பொருள்களையும் தங்களின் கரங்களில் இருப்பதுபோல் பார்த்துக் கொண்டார்கள். அதற்காக ஆட்டுபண்ணை மாட்டுபண்ணை ஆகியவற்றை அமைக்கத் தொடங்கினார்கள். ஏதோ வந்தேறிகள் தங்களால் இயன்ற தொழில்களை பிழைப்புக்காக நடத்திவருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு பாலஸ்தீனத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஹுக்கா உறிஞ்சிக் கொண்டும் கிருத்தவர்கள் ஒயினும் பீப்பாய்களில் பீரும் குடித்துக் கொண்டு சீட்டாடிக் கொண்டு இருந்த நேரத்தில் பல்வேறு தொழிகளிலும் யூதர்கள் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கினார்கள். இதனால் ஐந்து ஆண்டுகளில் அனைத்துத் தொழில்களும் யூதர்களின் கரங்களில் அடைக்கலமாயின. மொத்த வணிகத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் அடுத்து தங்களின் மொழியை வளர்க்க முனைந்தார்கள். 

தங்களுடைய உயிர்களையே காப்பாற்றிக் கொள்ள உலகெங்கும் ஓடி ஒளிந்த கடந்த காலங்களில் தங்களுடைய புராதன மொழியாகிய ஹீப்ரு மொழியும் தங்களைப் போலவே பந்தாடப்பட்ட நிலைகளை உணர்ந்த யூதர்கள் தங்களின் மொழியை மீண்டும் உயிர்கொடுத்து வளர்க்க வேண்டுமென்ற நிலையை எடுத்தார்கள். காரணம் இடைப்பட்ட காலத்தில் அரபு மொழியும் ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ் முதலிய மொழிகளும் தங்களின் மண்ணையும் தங்களின் மக்களையும் ஆக்கிரமித்து இருந்ததையும் உணர்ந்து ஹீப்ரு மொழியில் மொழியில் எழுதப்பட்டிருந்த யூதர்களின் வேதமான தெளரா (Tora) முதலிய நூல்களையும் பண்டைய காலக் கதைகளையும் இலக்கியங்களையும் தேடிப்பிடித்து தங்களுக்கிடையில் அவைகளைப் பயன்படுத்தி வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்படத் தொடங்கினார்கள்.

காரணம் தங்களின் வாழ்க்கையின் ஓட்டத்தில் யூதர்கள் எங்கெல்லாம் ஓடினார்களோ அந்த நாட்டு மொழிகளே யூதர்களின் மொழியாகிவிட்டு இருந்தது. இது இயல்பான ஒன்றுதான். எவ்வளவு வளமான மொழியாக இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால்தான் அந்த மொழி வளரும். பல ஆயிரம் ஆண்டுகள் புராதனமான ஹீப்ரு மொழி தன்னைப் பயன்படுத்த ஆள் இல்லாமல் தனது உண்மையான பண்புகளை இழந்து, இன்றைய தமிழ் மொழி போல் எடுப்பார் கைப்பிள்ளையாகி இருந்தது. 

தாங்கள் மீண்டும் உலகில் முதலிடம் பெறவேண்டுமானால் தங்களின் மொழியையும் தங்களுடன் உயர எடுத்துச் செல்லவேண்டும் என்பதன் உண்மையான தேவையை யூதர்கள் உணர்ந்து இருந்தார்கள். அதை செயல்படுத்தினார்கள். அதனால், தங்களின் கலாச்சாரத்தையும் மொழியையும் மீட்டேடுக்க வேண்டுமென்ற யூதர்களின் உத்வேகம் ஹீப்ரு மொழியை புதுப்பித்து தங்களின் மக்களிடையே புத்துணர்வோடு உலவவிட்டது. யூதர்களின் இந்த மொழி உணர்வு அவர்களின் பிற்கால எழுச்சிக்கு ஏணியாக இருந்து உதவியது என்றால் அது ஒன்றும் நாம் பொய்யாக எழுதும் புகழ் மொழியல்ல. 

ஒரு இனத்தின் மொழியும் பண்பாடும் கலாச்சாரமும் பண்பாடும் காலப் போக்கில் பல காரணங்களால் அழிக்கப்படுமானால் அவற்றை மீட்டெடுத்து தங்களின் மத்தியில் மீண்டும் நிலைபெறச் செய்யவேண்டியது தங்களின் அரசியல் உறுதிப்பாட்டுக்கு அஸ்திவாரம் அமைக்குமென்ற சூத்திரத்தை யூதர்கள் அறிந்து வைத்து இருந்தார்கள். அதனால் , உஸ்மானிய துருக்கிய அரசு தங்களுக்கு வழங்கி இருந்த குடியேற்ற சுதந்திரத்தை உரிய முறையில் பயன்படுத்தி செம்மொழிகளுள் ஒன்றான ஹீப்ரு மொழியை தங்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்பால் உயிர் கொடுத்து மீட்டு வந்தார்கள். 

இந்த இடத்தில் நம் கண் முன்னே நடக்கும் சில காட்சிகளைச் சொல்லி நாம் ஒரு கண்ணுக்கு அழாமல் இருக்க இயலவில்லை. உலக செம்மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று என்று உலக வரலாறு உணர்ந்திருந்தாலும் அது அரசு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது அண்மையில்தான். ஆனால், இப்படி அறிவிக்கப்பட்ட ஆனந்தத்தின் அறிகுறியாக அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவில் நட்டு வைத்த செடிகள் சென்ற இடம் எங்கே? ஆசியாவிலேயே பெரிய நூலகம் என்று அமைக்கப்பட்ட அண்ணா நூலகம் அரசியல் காரணங்களுக்காகப் பூட்டப்பட்டு திருமண மண்டபமாக பயன்படுத்தப்பட்டதேன்? அந்த நூலகத்தில் அடுக்கிவைக்கப்பட்ட அழகுதமிழ் நூல்கள் பதுக்கப்பட்டு பாழ்படுத்தபடுத்தப்பட்ட நிலை ஏன் ஏற்பட்டது? மொழியுணர்வால் மேம்பட்ட யூதர்களைப் பற்றி பேசும்போது இப்படி ஒரு ஒப்பீடு இயற்கையாக எமக்குள் எழுகிறது. 

செம்மொழி அந்தஸ்து பெற்ற இரண்டு மொழிகளுள் ஒரு மொழியைப் பேசுவோர் இனத்தால் அழிந்து ஒழிந்தாலும் தங்களுக்கு மீண்டும் வாழும் வாய்ப்பு வரும்போது தங்களுடைய பழம்பெரும் மொழியாகிய ஹீப்ருவை மீட்டெடுக்கிறார்கள். ஆனால் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னொரு இனத்தின் மொழியான தமிழ் மொழி, பிற மொழிகளின் ஆதிக்கத்தாலும் குறுகிய அரசியல் காரணங்களாலும் அழிவின் விளிம்புக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதை இங்கே வேதனையுடன் குறிப்பிட்டாக வேண்டிய கட்டாயம் நமக்குண்டு. 

போலந்து நாட்டில் பிறந்து வாழ்ந்த ஒரு யூதர் தனது நாற்பதாவது வயதில் பாலஸ்தீனத்துக்கு குடியேறி வந்ததாகவும் அத்தனை வயதுக்கு மேல் தனது தாய் மொழியாகிய ஹீப்ரு மொழியைக் கற்றுக் கொண்டு போலந்து மற்றும் ஐரோப்பாவில் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளை இலக்கியச் சுவை நிரம்பிய நூலாக எழுதி இருப்பதாகவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு குறிப்பிடுகிறது. இவரைப் போல இன்னும் பல வயதான யூதர்களும் கூட தலைமுறைகளாய் தாங்கள் மறந்து போயிருந்த ஹீப்ரு மொழியை கற்றுக் கொண்டு இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கினார்கள். இது ஒரு வரலாற்று அற்புதம்தான்.

இவ்வாறு பலவகைகளிலும் உஸ்மானிய துருக்கியின் பாதுகாப்பில் யூதர்கள் முன்னேறிக் கொண்டு இருந்த நேரத்தில் ஒரு ‘ரெம்ப நல்லவன் ‘ அவர்கள் வாழ்வில் வந்தான். இவனால் யூதர்களுடைய சிறப்பில் ஒரு கருப்பு விழுந்தது. இந்தக் கருப்பை கத்தரித்துப் போட உஸ்மானிய துருக்கி அரசர் தனது கரத்தில் கத்தியைத் தூக்கும் நிலை ஏற்பட்டது.

யார் அந்த ‘ரெம்ப நல்லவன்’ ? 

இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.

இபுராஹிம் அன்சாரி

14 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

//இறைவன் தனி கவனம் எடுத்து தயாரித்து தனது புதல்வர்களுக்குக் கொடுத்த புனிதபூமி !//
நவூது பில்லாஹ்.உவமை என்ற பெயரில் நீங்கள் சொல்லியுள்ள வாசகம் அப்பட்டமான ஷிர்க்.அதிரை நிருபர் உடனடியாக கவனிக்கவும்.எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் அனைவரையும் எல்லா வகை ஷிர்கிலிருந்தும் காப்பானாக


// நபிமார்களின் தாயகம் ! நபிமார்களின் உடல்களால் மக்கிப் போன மண்ணுக்குச் சொந்தமான இடம் ! //

நவூது பில்லாஹ். நபிமார்களின் உடல் மக்காது,மண் தின்னாது என்பது ஹதீஸ்.ஆனால் உண்மைக்கு மாற்றமாக எழுதிஉள்ளீர்கள் ,இதையும் திருத்தி வெளியிடும் படி கேட்டுக் கொள்கிறேன்.

அல்லாஹ்,ரசூல் ஸல் அவர்கள்,இஸ்லாம் விஷயத்தில் அதிக்க கவனம் தேவை.

sheikdawoodmohamedfarook said...

//இதுஒருயூதசபதத்தின்அங்கமென்றுமன்னருக்குதெரியவில்லை.மன்னர் தலையாட்டினார்//இப்படிப்பட்டதலையாட்டிபொம்மைகளைமன்னர்களாகபோட்டதனால்தான்இன்றுபாலஸ்தீனத்தில்யூதர்கள் வாலாட்டிக் கொண்டிருக்கிறார்களோ?

sheikdawoodmohamedfarook said...

//டீகுடித்தால்பினாங்கில்குடிக்கவேண்டும்என்றுசொல்லும்பீலாவாதிகளும் நம்மிடையேஇருக்கிறார்கள்//அதேசமயம்இவர்கள்அங்கேவந்துஎன்ன சொல்கிறார்கள்தெரியுமா?எங்கூருவட்டுலப்பமும்செம்மறியாட்டு எறச்சிபிரியாணியும்சாப்பிட்டுஇருக்கிரியாடா?''என்றும்சவால் விடுகிறார்கள். பினாங்கில்ஐஸ்போட்டடீகொடுக்கிறார்கள்.அதில்எலுமிச்சம்பழசாரும் பிழிந்துகொடுக்கிறார்கள்.இங்கேகொடுப்பார்களா ?கேட்டால்''வெயில் அதிகமாச்சு!தலையில்தேச்சுவிடவா?''என்பார்கள். மலேசியாவில்முன்னாள்பிரதமர்துங்குஅப்துல்ரஹ்மான் கட்டிய நாடாளு மன்றகட்டிடமும்அதன்அருகில்அவர்நிறுவியவீரர்களின்நினைவுசின்னமும்அப்படியேஇருக்கிறது.இங்கேதமிழ்நாட்டில்புதிதாக கட்டப்பட்ட சட்ட மன்றமும் நூலகமும் என்னஆனது? சென்னைகடலோரம்கையிலேசிலம்புபிடித்துகால்கடுக்கநின்றகற்பரசி கண்ணகியேகாணாமல்போனாலே!''என்ன?ஏது?''என்றுயாரவது கேட்டார்களா?இல்லைகேட்கவிட்டார்களா?அவள்ஓடினாள்!ஓடினாள்! வாழ்க்கையின்ஓரத்திற்கேஓடினாள்!சிவப்புவிளக்குபோட்டும்அவள் நிற்காமல் ஓடினாள்! அவள் ஓட்டத்தை தடுத்தார்களா? வாட்டத்தைபோக்கினார்களா?ஓட்டுனர்லைசென்ஸ்இல்லாமல்ஓடும் டுவீளர்கள்,கார்கள்இங்கேஉண்டு;அங்கேஇல்லை.அங்கேவீதி அழகும்உண்டு; நீதிஅழகும்உண்டு.இங்கேஉண்டா?

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்பிற்குரிய காக்கா,

இந்த வார அத்தியாயம் இலக்கிய ரசம் சொட்ட ஈர்க்கிறது மனத்தை. மர்ம நாவலின் உச்சகட்டத்தைப் போல வாசிப்பில் வேகம் கூட்டுகிறது.

அற்புதமான தங்களின் எழுத்துப்பணி இனிதே தொடர...

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sheikdawoodmohamedfarook said...

//அடிப்படையில்யூதர்களின்இந்தமனப்பாண்மைக்குகாரணம்அவர்கள் உலகில் படைக்கப்பட்ட இனங்களில் தங்களை உயர்ந்த இனம் என்று எண்ணிகொண்டதும்//இந்தநம்பிக்கையேஅவர்களைசெழித்துவளர வழிசெய்தது.அதுஇல்லையென்றால்அவர்களைபுதைத்தஇடத்தில் புல்முலைதிருக்கும்.மேலும் அவர்களில் 'இந்தியநண்டு' இல்லை! இருந்திருந்தால்அவர்கள்இந்தநிலைக்குவரவாய்ப்பேஇல்லை! வெற்றிபெறவேண்டியபாடங்களைஅவர்கள்மற்றவர்களுக்கு கற்று தந்திருக்கிறார்கள்.

sabeer.abushahruk said...

//இன்று, அமீரகத்தில் நிரந்தரக் குடியுரிமை தருகிறோம் என்று அந்த நாட்டின் அரசு அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ‘இந்திய நாடு என்வீடு! இந்தியன் என்பது என்பேரு! ‘ என்று, எனக்கு என் நாடுதான் வேண்டும் என்று சொல்பவர்கள் நம்மில் எத்தனை பேர்கள் இருப்பார்கள்? மனதில் கை வைத்துச் சொல்லுங்கள். //

உள்ளேன் ஐயா.

எனக்கு உண்மையிலேயே என் நாட்டைப் பிடிக்கும். அதன் அத்தனை லட்சணங்களோடும் பிடிக்கும். நம்மூர்வாசிகளில் பலர் இந்தியா என்றெண்ணி அதிரையின் லட்சணங்களையோ அதிகப்படியாக தமிழ்நாட்டின் லட்சணங்களையோ பிற நாடுகளோடு பொருத்தி இந்தியாவை வீழ்த்துகின்றனர். இது எனக்கு ஏற்புடையதல்ல.

நான் என் நாட்டுக்கு என்ன செய்தேன் என்று திருப்தியடையும்வரை நாடு எனக்கு என்ன செய்தது என்கிற கேள்வி ஞாயமற்றது என்பது என் நிலைபாடு.

sabeer.abushahruk said...

//பாலஸ்தீன் என்கிற யூதர்களின் முதலை மீட்டெடுப்பதற்கான முதலைக் கண்ணீரென்று சுல்தான் உணரவில்லை//

உங்களிடம் மிகவும் எதிர்பார்க்கும் பிடித்தமான பிரத்யேக எழுத்து.

sabeer.abushahruk said...

தம்பி இப்னு அப்துர்ரஸாக்,

தங்களின் முதல் சுட்டல் "லம் யலிது வலம் யூலது" என்னும் சூரத்துல் இக்லாஸை முரணுவதால் நீக்கப்பட்டது.

இரண்டாவது சுட்டலுக்கு ஆதாரம் தரவும், ப்ளீஸ்.

aa said...

@சபீர் காக்கா:

நபிமார்களின் உடல் மக்காது என்பது சரியான செய்தி தான். அவ்ஸ் ரலியல்லாஹு அவர்கல் அறிவிக்கும் இந்த செய்தி சுனன் அபூதாவூதில் பதிவாகியுள்ளது.

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ أَبِي الأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فَأَكْثِرُوا عَلَىَّ مِنَ الصَّلاَةِ فِيهِ فَإِنَّ صَلاَتَكُمْ مَعْرُوضَةٌ عَلَىَّ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلاَتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ قَالَ يَقُولُونَ بَلِيتَ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى حَرَّمَ عَلَى الأَرْضِ أَجْسَادَ الأَنْبِيَاءِ صَلَّى اللَّهُ عَلَيْهِمْ ‏"‏ ‏.‏

(அபூதாவுத் 1531; அல்பானி அவர்களால் ஸஹீஹ் என வகைப்படுத்தப்பட்டது)

aa said...

English translation is as follows:

Aws b. Was reported the Messenger of Allah (ﷺ) as saying:
Among the most excellent of your days in Friday ; so invoke many blessings on me on that day, for your blessing will be submitted to me. They (the Companions) asked: Messenger of Allah, how can our blessing be submitted to you, when your body is decayed ? He said: Allah has prohibited the earth from consuming the bodies of Prophets.

Refer: http://sunnah.com/abudawud/2/658

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்லாவுக்கே எல்லாப் புகழும் ! (அல்ஹம்துலில்லாஹ்...)

ஆராய்ந்து கருத்துவாக்கம் ஏற்படுத்தும் பண்பு நம்மவர்களோடு இருக்கிறது, அதனை மனமுவந்து ஏற்கும் பக்குவமும் இருக்கிறது.

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் சகோதரர்களே !

தலைத்தனையன் said...

Assalamu alaikkum. I have seen people praising their temporary makeshift places more than their origin. we have lessons even in slick Jewish community. Dont get despair brothers. Trust me, we are waking up. Alhamdu lillah.

sabeer.abushahruk said...

Thanks to bro abu Hajr and Ibn abdulRazak for correcting us. Corrections done accordingly.

Anonymous said...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

நான் வெளியூர்ப் பயணத்தில் இருந்த நேரத்தில் எழுதப்பட்டதில் இருந்த தவறுகளை சுட்டிக் காட்டிய தம்பி இப்னு அப்துல் ரஜாக் மற்றும் அதற்கான ஆதாரப் பரிகாரம் தந்த சகோதரர் மற்றும் நெறியாளர் தம்பி சபீர் ஆகிய அனைவருக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

மிகவும் கவனமாக இருக்க வேண்டியதை உணர்கிறேன்.

வஸ்ஸலாம்.

இபுராஹிம் அன்சாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு