Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புன்னகை 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 12, 2014 | , ,



’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’

மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.

பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும் இல்லதாவன் நிலை என்ன?  அவன் தலையைக் காப்பது கேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.

தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு வழிமுறை. ஒரு அரைத்துண்டு பேரிச்சம் பழத்தினையாவது தர்மம் செய்து அதன் மூலம் இந்த உலகில் மட்டும் இல்லை, மறுஉலக வாழ்விலும் நரக நெருப்பிலிருந்து தலையைத் தக்கவைத்துக் கொள்ளும் சூட்சுமம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது அட அது இதுன்னு ஒன்றுமே இல்லையா.. கவலையே வேண்டாம், ஒரு புன்னகை ஒரே ஒரு புன்னகை நம் எதிரிலிருப்போரைப் பார்த்து புன்னகை செய்தாலே போதும் தர்மம் செய்த புண்ணியம் நிச்சயமுண்டு என்று நபிமொழியினை மேற்கோளிட்டும் விவாதம் தொடர்ந்து நடந்தது கொண்டிருந்தது.. 

’அதெப்படீங்க.. நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்கு அவரும் புன்னகைப்பார் அவ்வளவுதான். எப்படி.அது தர்மமாகும்? லாஜிக் இடிக்குதே?’  இது ஒரு நண்பர்.

‘இதிலே தலைகாக்கும் தந்திரம் எங்கிருக்கிறது?’ இது மற்றொரு நண்பர்.

அறிவியல் பேசலாமா? அவர்களின் கவனத்தைத் திருப்பினேன்.


உண்மைதான், நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்கு அவரும் புன்னகைப்பார். அப்போது நம் தலையை மட்டுமல்ல அவரின் தலையையும் நம் புன்னகை காக்கிறது நாம் கருவில் இருக்கும் போதே கற்றுக்கொண்டதுதான் புன்னகை. ஆம், முப்பரிமான அல்ட்ராஸோனிக் தொழில்நுட்பம் மூலம் கருவறையில் இருக்கும் சிசு புன்னகைப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாம் பிறக்கும் போதும் புன்னகைக்கிறோம், பிறந்தபின்னும் புன்னகைக்கிறோம். பிறந்த குழந்தைகள் தூக்கத்திலும் புன்னகைப்பதைப் பார்த்திருப்போம். கண்பார்வை இல்லாத குழந்தைகள் கூட மனிதர்களின் குரலறிந்து புன்னகை புரிகின்றனர். 

மனிதர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்த சார்லஸ் டார்வின் எழுதிய The Origin of the Species என்ற நூலில் முகத்தில் உள்ள தசைகள் ஏற்படுத்தும் மாற்றங்களின் விளைவுகள் குறித்த கோட்பாடுகள் வரும்போது புன்னகை பற்றி பேசப்படுகிறது.

ஒரு மனிதன் புன்னகை புரியும் நேரத்தில் அவனின் முகத்தசைகளின் மாற்றங்களின் மூலம் தான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாய் உணர்கிறான் என்று டார்வின் சொல்கிறார்,

அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், 2009ம் ஆண்டில் ஜெர்மனியில் ஒரு ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் புன்னகை புரிவதின் மூலம் மூளையில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டபோது. புன்னகை மகிழ்வான மனநிலையினைத் தருவது உறுதியானது.

இந்த புன்னகை என்ன விலை தெரியுமா? நாம் புன்னகை செய்யும் நேரத்தில் நம் மனதில் (மூளையில்) ஏற்படும் மகிழ்ச்சித் தூண்டலினால் 2000 சாக்லேட்டுகள் சாப்பிட்ட அளவிற்கு மகிழ்வு ஏற்படுகிறதாம். காசைப்பார்த்து தான் காந்தி தாத்தா போல புன்னகை புரிவேன் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையாக தூய மனதோடு புன்னகைத்தால் 16,000 பவுண்ட் ( ஏறத்தாழ 13 இலட்சம் ரூபாய்) நம் கையில் இருந்தால் ஏற்படும் அளவுக்கு மகிழ்வு ஏற்படுகிறதாம். (போலியான புன்னகையினை மூளை அங்கீகரிப்பதில்லையாம்)

அளவுக்கு மிஞ்சிய சாக்லேட்டுகள் வேண்டுமானால் உடலுக்கு தீங்கு தரலாம். ஆனால் அளவுக்கு மீறிய புன்னகைகள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும். மனஅழுத்தம், இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கிறது. மனதையும் உடலையும் இதமாக வைத்துக்கொள்ள உதவும் ’எண்ட்ரோஃபின்ஸ்’ அளிக்கிறது.

புதுப்பணக்காரர் மார்க் ஸூக்கர்பெர்க் முகத்தில் தவழும் புன்னகையும், பணமென்றால் என்னவென்றே அறியாத புதுக்குழந்தையின் முகத்தில் தவழும் புன்னகையும் ஒரே மாதிரியாய் இருக்கும், ஏன் தெரியுமா? குழந்தை ஒருநாளைக்கு 400 முறை புன்னகைக்கிறதாம்.

ஒரு சிறு புன்னகை அனைத்தையும் விட மாபெரும் தர்மம் தானே??

அனைவரின் முகத்திலும் பூத்தது புன்னகை!

புதுசுரபி

7 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

//ஒரு சிறு புன்னகை அனைத்தையும் விட மாபெரும் தர்மம் தானே??//

[குழந்தை அழகாக சிரிப்பதை அறுமையாக படம் எடுத்த ஹமீதுக்கு வாழ்ந்த்துக்கள் ]

பெர்சனல் டெவலப்மென்ட் சமாச்சாரங்களில் ....ஒருவன் புன்னகையுடன் இன்னொரு மனிதரை அனுகும்போது அவன் தனது காரியத்தை மற்றவர்களை விட வெற்றிகரமாகவும், வேகமாக முடிக்கவும் முடிகிறது. என்பது உண்மை.

மலேசிய விமான நிலையங்களில் குடிநுழைவுத்துறையச்சார்ந்தவர்கள் புன்னகைக்கவேண்டும் என்ற கேம்பைன் நடக்கிறது.

இது எல்லா இடங்களிலும் , இன்னும் இந்திய விமான நிலையங்களுக்கும் விரிவு படுத்தப்பட வேண்டும்.

நாட்டின் நுழைவாயிலில் எழவு கொட்டக்கூடாது. ஒருமுறை நான் நேபால் காட்மாண்டுலிருந்து மலேசியா வரும்போது எனக்கு அப்படி ஒரு அனுபவம் நடந்தது.

sabeer.abushahruk said...

புன்முறுவலோடு
இன்னும் கொஞ்சம்
இனிமை சேர்த்து
பொன்முறுவலாக வறுத்தெடுத்தால்
அதுவே
புன்னகை

கவனம்
அதிகம் கருக்கினால்
அப்புறம்
சிரிப்பாய்ச் சிரித்துவிடும்

புதுநகை கேட்கும்
பூவையர்க்கை
ஜோக்கொன்று சொல்லுங்கள்
புன்னகை அணிந்து கொள்ளட்டும்.

சகோ. புதுசுரபி,

கடுகடு சிடுசிடு என்று மாறிக்கொண்டிருக்கும் மனிதர்கள் தலையில் ஒரு குட்டு உங்கள் பதிவு.


Hameed, super click

ZAEISA said...

அடடா........இந்த பதிவை காப்பி எடுத்து ஒவ்வொரு ஏர்போர்ட் இமிகிரேசன் ஆபிசருக்கும் ஃ ப்ரீயா ஃ ப்ரேம் போட்டு கொடுத்தாலும் சிரிக்கிறது கஷ்டம்தான்.

sheikdawoodmohamedfarook said...

லியோனார்டோ டாவின்சி வரைந்த மோனலிசாவின் இனம் தெரியா மர்மப் புன்னகை கோடிபெறும்! மாவீரன்ஜூலியஸ்சீசரைஎழிலரசிகிளியோபத்ராவின் பாதம்பணியவைத்தஅவள்புன்னகை! மொகலாயசக்கரவர்த்திஷாஜஹானைஉலகின் அதிசயங்களில்ஒன்றான தாஜ்மஹாலை கட்டவைத்ததுமும்தாஜின்இதழோரோரம் தவழ்ந்தபுன்னகை! வாளேந்தும்வீரனையும்செங்கோலேந்தும்மன்னனையும் வீழ்த்தவள்ளது புன்னகை! மற்றவர்கள்முகம்பார்த்துபுன்னகைஒன்றை வீசுவதால்நீங்கள் இழக்கப்போவதுஒன்றுமில்லை! மிருகங்களுக்குகொடுக்காதஒன்றைஅல்லாநமக்கு கொடுத்துஇருக்கிறான்! இறுகியமனதோடுஇதயத்துக்குள்பூட்டிவைதிருக்கும் புன்னகைகளைஎல்லாம் திறந்துவிடுங்கள்! இருண்டஇதயத்தின்இருள்விலகட்டும்: ஒளிபடரட்டும்.

sheikdawoodmohamedfarook said...

இந்தகட்டுரையைபிரதிஎடுத்துநம்மMP-MLAகளுக்குஅனுப்பலாம் மற்றும்அஞ்சுவருஷம்''சிரிக்கவேமாட்டேன்''என்றுபாரதபூமியே ஆண்ட நரஸிம்மராவ்அவர்களுக்கும்ஒன்னுஅனுப்பலாம்.

Ebrahim Ansari said...

//நரஸிம்மராவ்அவர்களுக்கும்ஒன்னுஅனுப்பலாம்//

இந்தக் கருத்து என்னை புன்னகைக்க வைக்கவில்லை. ஓங்கி கலகலவென்று சிரிக்க வைக்கிறது.

நரசிம்ம ராவுக்கு அனுப்பலாம்தான்- நரகத்துக்கு கூரியர் சர்வீஸ் இருந்தால்.

sheikdawoodmohamedfarook said...

//நரகத்துக்குஅனுப்பலாம்தான்அங்கேகூரியர்சர்விஸ்இருந்தால்//மைத்துனர்இப்ராஹீம்அன்சாரிகிண்டல். பதில்:[தெரிஞ்சுதான்போட்டேன்]நரகத்துக்குஅனுப்பினால்சிரிச்சுடவாபோறார்?!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு