Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அல்லாஹ்வின் மீது அன்பு... 3

அதிரைநிருபர் பதிப்பகம் | January 09, 2015 | ,

:::: தொடர் - 5 ::::
பாவங்களை நினைந்து வருந்தி, இறைவனிடம் மன்னிப்பும் கோருகின்றான் அடியான். அந்த வல்லானின் அருளை எண்ணி, அவனுக்கு நன்றியும் செலுத்துகின்றான். இது, அந்த அடியான் தன் மீது அருள் புரிந்த இறைவனை - அல்லாஹ்வை நேசிக்கிறான் என்பதன் அடையாளமாகும். எனினும் அல்லாஹ்வை நேசிப்பது, மற்ற மனித நேசங்களுடன் மோதுவதாக எண்ணிவிடக் கூடாது. படைத்தவன் மீது பற்று வைப்பதன் அடையாளம், அவனுக்குக் கட்டுபடுவதும் அவனை மட்டுமே வணங்குவதும் ஆகும். அது, நாம் நினைக்கும் விதத்தில் அமையும் ஒன்றாகாது. மாறாக, அதற்கொரு முன் மாதிரியுண்டு.

இறைவனை நேசிப்பவர்கள், அவனுடைய கட்டளைகளுக்கும் விருப்பங்களுக்கும் இணங்குவார்கள்; மாறு புரிய மாட்டார்கள். நமது வாழ்க்கை, நேரம், வலிமை, செல்வம், கல்வி, சமூகச் சிறப்பு போன்ற அல்லாஹ்வின் அருட்கொடைகளை இறைநெறியில் பயன்படுத்தாமல் இருப்பது, நன்றி கொன்ற பாதகச் செயலாகும். இவ்வாறான அருட்கொடைகளை நினைத்து, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தம் தலைகளைத் தரையில் வைத்து ‘சுஜூத்’ எனும் வழிபாட்டைச் செய்தால், அல்லாஹ்வின் நேசமும் நெருக்கமும் மனிதர்களுக்கு வந்து சேரும். மாறாக அந்தத் தலை தாழும் வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் பொருள்களுக்கும் செய்வது, இறைமறுப்பு மட்டுமன்று; நன்றி கொன்ற நாசச் செயலுமாகும். மனிதப் படைப்பின் உயர்வுக்குக் களங்கம் விளைவிப்பதும் அதுதான்.

அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டும். இதன் அடையாளம் எது? இதைத் தன் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெளிவு படுத்திவிட்டான் கீழ்க்கண்ட மறைவசனத்தின் மூலம்:

அத்தியாயம் “ஆலு இம்ரான்’ எனும் மறைப் பகுதியின் முப்பத்தொன்றாம் வசனம் கூறுவது இதுதான்: “(நபியே! இறையடியார்களுக்குக்) கூறுக: ‘நீங்கள் அல்லாஹ்வை உண்மையில் நேசிக்க வேண்டுமாயின், (அதற்காக) என்னைப் பின்பற்றுங்கள். அப்போது உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்களின் பாவங்களை மன்னிப்பான். ஏனெனில், அவன்தான் பாவங்களை மன்னிக்கத் தகுதியானவன்.” (அல்குர்ஆன் :39)

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றுவதே இறைநேசத்தின் அடையாளமாகும். இதுபற்றி நம் மனத்தில் எவ்வித ஐயப்பாடும் இருக்கக் கூடாது. இறைத்தூதரின் ‘சுன்னா’வைப் புறந்தள்ளிவிட்டு, இறை நேசத்தை - இறை நெருக்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனமும் முட்டாள் தமாகும். ஒருவன் தன்னைத் தானே முட்டாள் ஆக்கிக்கொள்கின்றான் என்பதற்கும் இதைவிட வேறு சான்றுண்டோ?

இப்போது நமக்கு முன்னால் வரைகோடு இடப்பட்டுவிட்டது. இனி, நாம்தாம் நமது தேர்வைச் செய்துகொள்ள வேண்டும். அல்லாஹ் படைத்திருப்பது, ஒன்றுக்கொன்று தொடர்புடைய உலகமாகும். நம்முடைய செயல்களுக்கு இரு விளைவுகள் உள்ளன; இவ்வுலகில் நற்பலன் அல்லது தீங்கு; மறுமையில் வெகுமதி அல்லது தண்டனை. ஒவ்வொரு செயலும் இத்தகைய இரு விளைவுகளை உண்டாக்குகின்றது. ஒன்று இந்த உலகில்; மாறாத மற்றொன்று மறுமையில்!

தலைமைத்துவத்தின் மீது ஆர்வம் கொண்டு, பொதுமக்களை இயக்க வேண்டும் என்று எண்ணுவோர், அல்லாஹ்வுடன் தமது தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவனுக்கு அடிபணிந்து நடக்காதவரை, அவர்களை மக்கள் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அது நிகழும் என்றெண்ணுவதும் சாத்தியமாகாது!

நபித்தோழர் அபூஹுரைரா(ரலி) அவர்களின் அறிவிப்பாக இமாம்கள் புகாரீ, முஸ்லிம், மாலிக், திர்மிதீ (ரஹ் - அலைஹிம்) ஆகியோர் பதிவு செய்த நபிமொழியொன்று நம் கவனத்தில் கொள்ளத் தக்கது:

“அடியான் ஒருவனை அல்லாஹ் நேசிக்கும்போது, தன் வானவர் தலைவர் ஜிப்ரீலை அழைத்து, ‘நான் இன்ன அடியானை நேசிக்கிறேன்; எனவே நீரும் அவரை நேசிப்பீராக’ என்று கூறுகின்றான். அதற்கிணங்க அவரும் அவனை நேசித்து விட்டு, வானுலகத்தவர்களிடமும் அறிவிக்கின்றார்; அவர்களும் நேசிக்கிறார்கள். அதன் பின்னர், இவ்வுலகில் அவ்வடியானைப் பற்றிய ஏற்புடைமை நிலைபெறுகின்றது. இதுபோன்றே, அடியான் ஒருவனை அல்லாஹ் வெறுக்கின்றபோது, தன் வானவர் தலைவர் ஜிப்ரீலை அழைத்து, ‘நான் இன்ன அடியானை வெறுக்கின்றேன்; எனவே நீரும் அவரை வெறுப்பீராக’ என்று கூறுகின்றான். அதற்கிணங்க அவரும் அவனை வெறுத்து விட்டு, வானுலகத்தில் உள்ளவர்களிடமும் அவ்வாறே அறிவிக்கின்றார்; அவர்களும் வெறுக்கின்றார்காள். அதன் பின்னர், இவ்வுலகில் அவ்வடியானைப் பற்றி வெறுப்பு நிலைபெறுகின்றது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தலைமைத்துவத்தில் ஆர்வம் காட்டுவோருக்கு இருக்க வேண்டிய மற்றொரு பண்பு, ‘தவக்குல்’ எனும் இறைச் சார்பு நிலையாகும். நம் இதயங்களில் இந்த இறைச் சார்பு நிலையை உறுதிப்படுத்தி, இறைவனுடைய நெருக்கத்தைப் பெற மூன்று வழிகள் உள்ளன. இறைத்துதூதர் (ஸல்) அவர்களின் தொடக்க காலப் பிரச்சாரப் பணியில் இந்தப் பண்பு எத்துணை வலிமையுடன் வெளிப்பட்டது என்பதைப் பாருங்கள்:

ஒரு நாள், மக்காவின் ‘சஃபா’ மலை மீது ஏறி நின்று, “யா ஸபாஹா!” என்று நபியவர்கள் உரத்துக் குரலெழுப்பினார்கள் அதற்குச் சற்றே முன்புதான்,

“(நபியே,) உம் நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” எனும் இறைவசனம் இறங்கியிருந்தது. அதைப் பெற்றவுடன் தம் அழைப்புப் பணியை வெளிப்படையாக்கிக் குரலெழுப்பினார்கள் அண்ணலார் (ஸல்). அடுத்து நடந்தது என்ன கொடுமை என்பதை நபி வரலாற்றுப் பக்கங்கள் தெளிவாக விளக்குகின்றன. இறைவனின் எச்சரிக்கையை எடுத்துக்காட்டு ஒன்றால் நபியவர்கள் விளக்கினார்கள். மக்கத்துக் குரைசியர் தூற்றினர்! சொந்தப் பெரிய தந்தை அபூலஹப் மண்ணை அள்ளித் தன் மகனென்றும் பாராமல், முகத்தில் வீசினான்! நபியவர்கள் குறைஷிக் கிளைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக விளித்துப் பார்த்தார்கள்: பயனில்லை. இந்தப் பணியைச் செம்மையாக இறைத்தூதர் அவர்கள் முடித்த பின்னர்தான், தமது பணியை முடித்த நபியின் தியாகத்திற்கு வெகுமதி அளிக்கும் முகமாக, அபூலஹமையும் அவனைச் சார்ந்தவர்களையும் சபித்து வெஞ்சினம் இறைவாக்காக வெளிப்பட்டது (அல்குர்ஆன் 111:1-5).

பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பியிருந்தால், வேறு வழியைத் தேர்ந்தெடுத்து, மக்காவின் வேந்தராக மாறியிருக்கலாம். அவர்களுக்கு அதற்கான தகுதிகள் அனைத்தும் இருந்தன. குலத்தால் பெருமை, குணத்தால் உயர்வு, நடத்தையால் சிறப்பு போன்ற அனைத்தும் இருந்தும், அவர்களிடத்தில் இருந்த உறுதியான உணர்வு, இறைவாக்கை உயர்வு படுத்தியே ஆகவேண்டும்  எனும் தகைமை! குறைஷிகள் தரச் சம்மதித்த செல்வங்களையும் உலகத்தின் சிறப்பை எல்லாம் ஒப்புக்காகப் பெற்றுக் கொண்டு, அதன் பின்னர் தமது அழைப்புப் பணியைத் தொடங்கிச் செயல்பட்டுவிட்டு, உண்மை மார்க்கத்தை எடுத்தோதியிருக்கலாம், செய்தார்களா ? இல்லை.

இன்னொரு விதத்திலும் அவர்களின் தேர்வு இருந்திருக்கலாம். அதாவது, மக்காவில் திருத்தப்பட வேண்டிய தீயவை நிறையவே இருந்தன. அதற்கான ஆளுமையும் நபியிடம் இருந்தது. பக்கத் துணைகளும் இருந்தன. அந்தச் சீர்திருத்தப் பணியைத் தொடங்கிச் செயல்பட்டுவிட்டு, உண்மை மார்க்கத்தை எடுத்தோதியிருக்கலாம். செய்தார்களா? இல்லை.

அல்லது, மக்கத்து மார்க்கங்களுள் ஒன்றாக இஸ்லாத்தையும் அறிமுகப்படுத்தி, சில நாட்கள் சென்றபின், தூய நெறியின் பிரச்சாரத்தைக் தொடங்கியிருக்கலாம். செய்தார்களா? இல்லை.

எனினும், இவற்றுள் ஒன்றையும் தேர்ந்தெடுக்காமல், தம் மக்களின் முன்னால் தைரியமாக வந்து நின்று, “மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்! கற்சிலைகளைக் கடவுள்களாகக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வையன்றி வேறு எவரிடமும், எதனிடமும் உதவி தேடாதீர்கள்! ஒரு நாள் நீங்கள் அந்த அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டி வரும்! அப்போது உங்களுக்கு துணை செய்ய வேறு தெய்வங்கள் வாரா!” என்று எச்சரித்துக் கூறினார்கள்.

இந்த வழியைத் தெரிவு செய்தது கொண்டு, மக்காவின் தலைவர்கள் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டார்கள் அண்ணலார்(ஸல்). ஏனெனில், கற்சிலைக் கடவுள்கள் கற்பனையானவை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அந்தக் கற்சிலைகளை வணங்கி வந்த மக்கத்துத் தலைவர்களுக்கு, தாம் ஒரு நாள் இறைவன் அல்லாஹ்வின் முன் நிற்க வேண்டும் என்பது தெரியாது; அதை அவர்கள் நம்பவுமில்லை.

மக்கத்து ‘முஷ்ரிக்’குகளின் மத நம்பிக்கையை மட்டும் இது தகர்க்கவில்லை. அவர்களின் வருமானத்தையும் அல்லவா பாதித்து விட்டது! ஆம், ஓரிறை என்று வந்துவிட்ட பின்னர், முன்னூற்று அறுபது சிலைகளுக்கு அங்கென்ன வேலை? அவை இருந்தால் அல்லவா கற்சிலைகளை வணங்குவோர் கூட்டம் கூட்டமாகக் கஅபாவை நோக்கி வருவார்கள்? அஃதின்றேல், அவர்களின் வருமானம் எங்கே? அதனால்தான் அவர்கள் வெகுண்டெழுந்தார்கள்! வீரியம் கொண்டார்கள்! ஆனால், பெருமானார் (ஸல்) அவர்கள் தளர்ந்தார்களா? இல்லை. அதுதானே அவர்களின் பணி? அவர்களின் முன்னோரான இறைத்தூதர்கள் செய்த பணியும் அதுவே.

அவர்கள் மக்களிடம் பொருளாதார, சமூக, அரசியல் மேம்பாடுகளைக் கேட்டார்களா? இறைநெறிப் பரப்புதலில் முந்தைய நபிமாறும் நம் இறுதித் தூதரும் பின்வந்த அறிவுடையச் சான்றோரும் பின்பற்றிய, பின்பற்றிவரும் முன்மாதிரியன்றோ இது? இவ்வாறு செய்துவிட்டு, இதற்காக வெகுமதியை இறைவன் ஒருவனிடமிருந்து மட்டுமே எதிர்பார்த்தார்கள். இதைத் தான் தலைமைப் பதவியை வகிக்க நாடும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அந்த உண்மையை மாற்றாமல் மறைக்காமல், கூட்டாமல் குறைக்காமல் செய்யும்போதுதான், முஸ்லிம்களுக்கும் மற்ற வேதக்காரர்களுக்கும் இடையில் வேறுபடும் தனித்துவமும் புலப்படும். இறையன்பு ஒன்றை மட்டும் நோக்காகக் கொண்டு, தன்னலம் கருதாமல், துணிச்சலுடன், ஓய்வு ஒழிச்சலின்றி உண்மையை எடுத்துரைத்ததுதான், இரும்பு இதயம் கொண்டிருந்த உமர் போன்றவர்களை இளகச் செய்தது. இந்த இணையற்ற தலைவரின் இஸ்லாமிய போதனையும் இதுவே. இதுவே தகைமை மிக்க தலைவரின் தனித்துவம்.
தொடரும்
அதிரை அஹ்மது

3 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒவ்வொரு அடியானும் படித்து தன்னைத்தானே திருத்திக்கொள்ளவேண்டிய பதிவு.

sheikdawoodmohamedfarook said...

சொல்ஒன்றும்செயல்ஒன்றுமாய்செயலாற்றும்இன்றையமனிதர்கள்படித்து திருந்தவேண்டியநபிகள்நாயகம்[ஸல்]அவரகளின்வாழ்க்கையும்வாக்கும் ஒருவழிகாட்டி.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய அஹ்மது காக்கா,

அற்புதமானதொரு பதிவு, அழகுத்தமிழில்.

எம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தலைமைத்துவக் குணங்களில் ஒரு சிலவேனும் தற்காலத் தன்னலத் தலைவர்களிடம் இருந்திருப்பின் இந்தியா என்றைக்கோ வல்லரசு ஆகியிருக்கும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு