Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுவை உணவும் நகை நிகழ்வும் 9

அதிரைநிருபர் பதிப்பகம் | April 02, 2015 | ,

நபிமணியும் நகைச் சுவையும் - தொடர் : 9

சஹாபி என்றாலே பொருள் நபித்தோழர்தாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லுரைகளாலும் தோழர்களுடன் நடந்துகொண்ட பெரும் கனிவினாலும் அவர்கள் நபித் தோழமையில் பேருவகை கொண்டிருந்தனர். அருள் நபி தந்த திருமறையை தினமும் வாசித்தார்கள். அறியாமை இருளில் ஏகத்துவச் சுடரை ஏற்றிவைத்த ஏந்தல் நபியை உயிருக்கும் மேலாய் நேசித்தார்கள். எந்த அளவுக்கு என்றால், யுத்த களத்தில் உயிர் பிரியும் தருவாயில் கூட, இந்தத் தரணியில் மானிடர் நலமுடன் வாழ, வழி வகுத்துத் தந்த தங்கள் தியாகத் தலைவரின் காலில் ஒரு சிறு முள் தைப்பதைக்கூடப் பொறுக்க மாட்டாத அளவுக்கு அவர்கள் பெருமான் நபி (ஸல்) மீது பேரன்பு கொண்டார்கள்.

நபித்தோழர்களுள் உங்களுக்கு உத்மான் (ரலி) பற்றித் தெரிந்திருக்கலாம்; சல்மான் (ரலி) பற்றித் தெரிந்திருக்கலாம். ஆனால், அந்-நுஐய்மான் (ரலி) பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? நகைச்சுவைக்கு உயிர் வந்து நடமாடினால், அதன் பெயர் அந்-நுஐய்மான் என்றுதான் இருக்கும்.

இரண்டாவது அகபா உடன்படிக்கையில் வள்ளல் நபியிடம் வாக்குறுதி வழங்கிய முக்கியமான தோழர்களில் நமது அந்-நுஐய்மான் இப்னு அம்ரு (ரலி)யும் ஒருவர்.

“அல்லாஹ் அந்த முஃமின்களைப் பொருந்திக்கொண்டான் என்றும் அதிலும் பத்ரு யுத்தத்தில் பங்கு கொண்ட நபித்தோழர்களின் பாவங்களை முன்கூட்டியே மன்னித்து விட்டான் என்றும்” அல்லாஹ்வின் தூதரால் நன்மாராயம் சொல்லப்படும் அருட்பேறு பெற்றவருள் ஒருவருமாவார் அருமைத் தோழர் அந்-நுஐய்மான் இப்னு அம்ரு(ரலி) அவர்கள்.(1)

ஆள்தான் கொஞ்சம் வெகுளித் தனமானவர். மற்றபடி, 'நகைச்சுவை நகரின் நுழைவாயில் அந்-நுஐய்மான்' அவர்கள்தான்!

அந்-நுஐய்மான் (ரலி), புனித மதீனா நகரில் நல்லார் நபிபெருமானின்  தாய் மாமன்களான  பனூ நஜ்ஜார் குலத்தைச் சார்ந்தவர். அதுமட்டுமின்றி,  நபித்தோழர்களில் பெரும் செல்வந்தரும் திறமை மிக்கத் தொழிலதிபருமான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) உடைய சகோதரியைத்தான் மணம் செய்திருந்தார்! இதனாலேயே, எல்லோருக்கும் ஒரு செல்லப்பிள்ளை போலவே தோழர்கள் சமூகத்தை உரிமையுடன் அவர் வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு கூட்டத்தில் கலகலப்பும் உற்சாகமான சப்தமும் கொடி கட்டிப் பறக்கிறது  என்றால், அங்கு நம் அட்டகாசமான நகைச்சுவையாளர் அந்-நுஐய்மான் இப்னு அம்ரு (ரலி) உடைய தலையைப் பிரதானமாகக் காணலாம். அந்த அளவுக்கு நகைச்சுவை என்பது அவர் உதிரத்தில் கலந்து ஓடிக்கொண்டிருந்தது!

சன்மார்க்கம் உயர்ந்தோங்குவதற்காகப் பெரும் சஞ்சலங்களைத் தாங்கி நின்ற சத்தியத்தூதர் அவர்களுக்கும் வான்மறைப் பாதையில், வள்ளல் நபியின் போதனையில் இந்த இனிய இஸ்லாத்தின் புகழ் பரப்பும் பணியில் எண்ணில்லா இடர்களைச் சுமந்த அருமை நபித்தோழர்களுக்கும் சோர்வு தொற்றும் போதெல்லாம் குதூகலமான நம் அந்-நுஐய்மான் இப்னு அம்ரு (ரலி) உடைய சேட்டைகள் எல்லாம், சொல்லி சொல்லிச் சிரிக்கும் நல்ல கதைகளாயின!

நபித்தோழர்கள் எல்லாம் நபியை நேசிப்பதில் சற்றும் குறைந்தவர்களில்லை எனினும், அவர்களின் குணாதிசயங்களிலும் பழக்க வழக்கங்களிலும் பலதரமான படித்தரங்களைக் கொண்டிருந்தார்கள். அந்த அனைவரிலும் நகைச்சுவை நாயகர் யார் என்றால் நமது  அந்-நுஐய்மான் இப்னு அம்ரு (ரலி) அவர்கள்தாம்!

சித்திரை முழுநிலவாம் முத்திரை நபிக்கு, நுஐமானின் குதூகலமான குறும்புகளால் சமயத்தில் சில சங்கடங்கள் வந்து சேர்ந்தாலும், கண்ணியத்தின் இருப்பிடமாம் கண்மணி நபியவர்கள் அதையெல்லாம் பெருந்தன்மையுடன் பெரிதாகக் கண்டுகொண்டதுமில்லை! அதுபற்றி ஒரு புன்முறுவல் மட்டுமே நம் பொன்மனச் செம்மல் பூமான் நபியவர்களின்  பதிலாய் இருந்தது.

நமது சஹாபி அந்-நுஐய்மான் இப்னு அம்ரு (ரலி) இயல்பாகவே உணவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். மொத்தத்தில் பசி பொறுக்க மாட்டார்; மற்றவர் பட்டினி இருக்கவும் விடமாட்டார். அப்படிப்பட்ட உயர் கொள்கை அவர் கொள்கை!

அவர் செய்யும் கேலிக் கூத்துகளும் பெரும்பாலும் உணவைச் சுற்றியே இருக்கும்.

அன்று மதீனாவில் சந்தை நாள்!

பலவிதமான அங்காடிகள் கடைத்தெருவை அலங்கரித்திருந்தன. மக்கள் கூட்டம் பொருட்கள் வாங்குவதில் மும்முரமாகவும், வியாபாரிகள் விற்பனை செய்வதில் பரபரப்பாகவும் இயங்கிக்கொண்டு இருந்தார்கள்.

அந்-நுஐய்மானின்  கண்கள் மட்டும் உணவகத்தையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தன!

ஆஹா! எத்தனை வகை வகையான அறுசுவை உணவுகள்! பலவகை மணங்களில்! பலவகை நிறங்களில்! பார்க்கும்போதே உமிழ் நீரை ஊற வைத்தன!

தாயைச் சற்று நேரம் பிரிந்து விளையாடச் சென்றுவிட்ட சிறுவனுக்குத்  திடீரென்று அம்மாவின் நினைவு வருவதைப் போல, அப்போது அன்பே வடிவாம் அண்ணல் நபியின் நினைவு அந்-நுஐய்மானுக்கு வந்துவிட்டது. கூடவே, அவர் மனதில் பளிச்சென ஒரு பொறி தட்டியது!

உணவக உரிமையாளரை அழைத்தார். இருந்ததிலேயே உயர்ந்த வகை உணவுகளை ஒரு குடும்பத்தினர் உண்ணும் அளவுக்கு உடனே கட்டித் தருமாறு கட்டளையிட்டார்.

தாமதிக்கவில்லை! ஓர் ஆளைக் கூப்பிட்டு, "இந்த உணவு மரவையைக் கொண்டுபோய் அல்லாஹ்வின் தூதரிடம் கொடு! 'அந்-நுஐய்மானின் அன்பளிப்பு' என்று மறக்காமல் சொல்லி வை" என்று அனுப்பி வைத்தார்!

உலக மக்கள் யாவருக்கும் உரிமையான உத்தம நபியும் உணவை நன்றியுடன் பெற்று, குடும்பத்தினருடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தார்கள். சிறந்த உணவு இதுவென அல்லாஹ்வைப் புகழ்ந்து, உணவு அனுப்பிய அந்-நுஐய்மானுக்காக துஆச் செய்தார்கள்!

சற்று நேரத்தில்  உணவகத்தின்  முதலாளி வந்தார். "அந்-நுஐய்மான், காசு கொடு" என்றார்.

"சாப்பாட்டுக்கு காசுதானே! அது வந்து........ நீ அல்லாஹ்வின் தூதரிடம் போய்ப் பெற்றுக்கொள். அந்த உணவே ரசூலுல்லாஹ்வுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும்தான் தெரியுமா உனக்கு?" என்று அதட்டலாக அவரை  அனுப்பி வைத்தார் அந்-நுஐமான்!

கடைக்காரரும் காத்தமுன் நபி (ஸல்) யிடம் போய் காசு கேட்கவே, துணுக்குற்ற அருள் வடிவேயான அண்ணல்  நபி (ஸல்) அவர்கள் அந்-நுஐய்மானை வரவழைத்தார்கள்.

"உணவு அனுப்பியது நீதானே, அந்-நுஐய்மான்?"

"ஆமாம் நாயகமே!"

"அதை உன் அன்பளிப்பு என்றுதானே அனுப்பினாய்?"

"நிச்சயமாக, அது 'என் அன்பான அளிப்புதான்' அல்லாஹ்வின் தூதரே!"

அதாவது, நிகழ்ந்தது என்னவென்றால் "இறைவனின் தூதுவரே, எங்கள் இதயங்களை ஆள்பவரே! அந்த உணவு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றுதான்! அதை நீங்கள் உண்டு மகிழ வேண்டும் என்றுதான் ஏற்பாடு செய்தேன்!

அதை என் பரிசு என்றும் அனுப்பி வைத்தேன். ஆனால், கடைக்காரருக்குக் காசு கொடுக்க என் சட்டைப் பையில் ஒரு நயா பைசா கூட இல்லையே, யா ரசூலல்லாஹ்!" என்றார் அப்பாவியாக!

அவ்வளவுதான்!

ஆயிரம் நிலவின் ஒளியும் அண்ணல் நபியின் முகத்தில் சிரிப்பாய்ச் சிதறி மின்னலாய் ஒரு  வண்ணமடித்தது! கூடிநின்ற குடும்பத்தினரும் குதூகலச் சிரிப்பை அண்ணலுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர்! சுற்றி நின்ற தோழர்களுக்கும் சிரிப்பு தொற்றிக்கொண்டது! அங்கே பார்த்து நின்ற அனைவரையும் அது பற்றிக்கொண்டது!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என, அன்புச் சுடர் முகத்தினர் அல் அமீன் நபியவர்களுக்கு  வயிறார உணவையும் மனமாரச் சிரிப்பையும் அளித்துவிட்டு நைஸாக நழுவி நடையைக் கட்டினார் அந்-நுஐய்மான் இப்னு அம்ரு (ரலி).

கடைசியில், கடைக்காரருக்குக் காமிலான மாமணி (ஸல்) தான் காசு கொடுத்தார்கள் என்பதைச்  சொல்லவும் வேண்டுமோ?(2)

ooo 000 ooo 
ஆதாரங்கள்:
(1) அல்-குர்ஆன் (9:100)
(2) ஹயாத்துஸ் ஸஹாபா 
தொடரும் இன்ஷா அல்லாஹ்…
இக்பால் M.ஸாலிஹ்

9 Responses So Far:

அதிரைக்காரன் said...

யாரங்கே! ஒரு சஹன் மந்தி, ஒரு சஹன் லஹம் கப்ஸா, அர்யீஸ் என்னாவற்றையும் பார்சல் கட்டி, இக்பால் காக்காவுக்கு அனுப்புங்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.யாரங்கே! அதற்கான பில்லை அதிரை நிருபர் பதிப்பக உரிமையாளரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்

sheikdawoodmohamedfarook said...

நகைசுவைஒருகலைஅதுஅல்லாகொடுத்தஅருட்கொடை!அதைரசிப்பதும்ஒருகலையேஆனால்சிலமரமண்டைகளுக்குசிர்ர்ர்ரர்ரென்றுவரும்கோபம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//.யாரங்கே! அதற்கான பில்லை அதிரை நிருபர் பதிப்பக உரிமையாளரிடம் பெற்றுக்கொள்ளுங்கள் ///

அதானே.... யாவரும் எங்கே !? வாருங்கள் விருந்துக்கு...! :)

Iqbal M. Salih said...

விருந்து ஆர்டர் பண்ணியதற்கு மிக்க நன்றி!
ஆனால், அதிரைக்காரனின் பாக்கெட்டில் ஒரு நயா பைசா கூட இல்லை என்பதை நான் மட்டுமல்ல; வேறு யாருமே நம்ப மாட்டார்கள் தெரியுமா?

sabeer.abushahruk said...

நபி(ஸல்) அவர்களிடமும் நபித்தோழர்களிடம் இருந்த நகைச்சுவையில் நகை மட்டுமல்ல ரசிக்கத்தக்க நளினமும் இருந்திருக்கிறது.


இக்பால்,

அரேபியக் குதிரைகள் வாங்கும் அளவுக்கு அதிரைக்காரரிடம் துட்டு இருக்குடா.

அதிரைக்காரன் said...

இக்பால் காக்கா, நம்புங்கள்.அதிரைக்காரனின் பாக்கெட்டில் ஒரு நயா பைசா கூட இல்லை.

ஷபீர் காக்கா,

இந்தமாத பட்ஜெட் தாக்கல் செய்ததில் அதிரை கழுதைகூட வாங்க முடியாத நிலைமை :(

Shameed said...

//அரேபியக் குதிரைகள் வாங்கும் அளவுக்கு அதிரைக்காரரிடம் துட்டு இருக்குடா.//


அரேபிய கார் அதன் அர்த்தம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் கார்கள் தானே!
(இந்தியா அம்பாசிடர் கார் இதில் அடக்கம் இல்லைகாரணம் ஏற்கனவே அது அடக்கம் பண்ணியாச்சு )

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிரைக்காரன் சொன்னது… : பாக்கெட்டில் ஒரு நயா பைசா கூட இல்லை.//

நானும் சொல்றேன் ஆமா ஒரு நயா பைசா கூட கிடையாது (வழக்கொழிந்து போய்விட்டது) திர்ஹமாத்தான் இருக்கிறது...

Iqbal M. Salih said...

சற்றே பொறுங்கள் சகோதரர்களே!
அதிரைக்காரனின் பற்றாக்குறை பட்ஜட்டைப் பார்த்ததும், நானே மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்து விட்டேன். ஆனால், Preparation பெரிதாக இருப்பதால், சாப்பாடு தயாராக ஜுன் மாதமாகிவிடுமாம்! பரவாயில்லையா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு