Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குறிக்கோளுக்கு முதலிடம் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | April 10, 2015 | ,

:::: தொடர் - 18 ::::
தலைவர் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் ஒன்று, எதற்கு முதலிடம் கொடுப்பது என்பதே.  தனது சுய விருப்பா? வெறுப்பா?  நண்பர்களா? எதிரிகளா? அல்லது, கொண்ட குறிக்கோளின் இறுதி வெற்றிக்கா?  தலைவரின் கீழ்ப் பணியாற்றுவோருக்கு அவருடைய சொந்த விருப்பு வெறுப்பைப் பற்றித்  தெரியாத நிலையில், தனது சுய விருப்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தான் எடுத்துள்ள குறிக்கோளையே தெரிவு செய்து, தலைவர் அதன் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்.

இந்த நிலைபாட்டுக்கு முன்னுதாரணமாய் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் செயல்பாடுகள் நம் கண் முன் வரலாற்றுப் பதிவுகளாக இருக்கின்றன.  மக்கத்துக் குறைஷிகளின் போர்த் தளபதியாக இருந்து, அவர்களுக்குப் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த பெருமை, காலித் பின் வலீத் என்ற வீரருக்கு உண்டு.  காலித் இஸ்லாத்தின் எதிரியாகத் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை, இஸ்லாத்திற்கு எதிரான போர்க்களங்களில் செலவழித்தார்.  உஹதுப் போரில் முஸ்லிம்களுக்குப் பின்னடைவை உண்டாக்கிய பெருமை காலிதையே சேரும்.  அதில் எழுபது நபித்தோழர்களின் சாவுக்கு அவரே காரணமாவார்!  இறந்தவர்களுள் முக்கியமான பெருவீரர், அண்ணலாரின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) ஆவார்கள். 

ஹம்ஸாவும் பெருமானாரும் ஏறத்தாழ ஒரே வயதுடையவர்கள்.  இருவரும் சிறு வயது முதல் விளையாட்டு நண்பர்கள்.  மக்காவில் இஸ்லாத்தைத் தழுவிய மக்களுள் முதன்மை நிலையில் இருந்தவர்.  இஸ்லாத்தைத் தழுவிய பின்னர், நபியவர்களுக்கு மிகப் பெரிய உதவியாளராகவும் உந்து சக்தியாகவும் இருந்தவர். இத்தகைய ஆதரவாளர் அந்தப் போரில் இறந்துவிட்டார் என்ற செய்தி, அண்ணலாரைப் பெரிதும் வாட்டியெடுத்தது!  எனினும், குறைஷித் தலைவர்களுக்கு மிகப்பெரும் வலிமையாக இருந்த இளைஞர்களான காலித் பின் வலீதும் அம்ரு பின் அல் ஆஸும் மனம் மாறி, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மதீனாவுக்கு வந்தபோது, அவ்விருவரையும் அன்புடன் வரவேற்றார்கள் அண்ணலார் (ஸல்).  கடந்த காலத்தில் அவர்களால் தமக்கும் முஸ்லிம்களுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் இழப்புகளையும் தம் இதயத்திலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, அவர்களை அன்புடன் வரவேற்றார்கள்!  

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:  “முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதிராக நான் ‘பத்ர்’ போர்க்களத்தில் இணைந்திருந்தேன்;  அப்போது அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான்!  அதையடுத்த ‘உஹத்’ போரில் பங்கெடுத்து, எதிரணியில் நின்று போரிட்டேன்;  அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான்!  அதையடுத்த அகழ்ப் போரிலும் அவருக்கு எதிராகப் போரிட்டேன்;  அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான்!  இவற்றால் எல்லாம் எனக்குச் சாவு வராமல் இருந்த நிலையில், நான் சிந்திக்கத் தொடங்கினேன்.  ‘எத்தகைய நிலையிலும், இறுதி வெற்றி முஹம்மதுக்குத்தான்! அவருடைய படை பட்டாளம் விரிவடைந்துகொண்டே சென்றது.  அவர் செய்துவந்த அழைப்புப் பணி, வலுவடைந்துகொண்டே சென்றது.  

“எதிர்ப்பாளிகளாக இருந்த நாங்கள் சுருங்கிக்கொண்டே சென்றோம்.  இத்தகைய எண்ணத்தால், என் இதயம் கனத்தது.  எமக்கு முன்னால் இருந்த வெற்றி வாய்ப்புகளோ, கேள்விக் குறியாகவே ஆயின.  என் இதயத்தைக் கனக்கச் செய்தது!   இந்தச் சிந்தனையால் கிடைத்த குற்ற உணர்வு என்னை வாட்டியது.  எனவே, மக்கத்து மக்களை விட்டு ஒதுங்கி, தொலைவான ஓரிடத்துக்குச் சென்று என் குடும்பத்துடனும் சொத்து சுகங்களுடனும்  தனித்து வாழத் தொடங்கினேன்.  அந்தத் தனிமை வாழ்க்கை, முஹம்மதுக்கும் மக்காத் தலைவர்களுக்கும் இடையிலான ‘ஹுதைபிய்யா ஒப்பந்தம்’வரை தொடர்ந்தது.”  

அந்த ஒப்பந்தமானது, முஹம்மதை முஹம்மதாகப் பார்க்காமல், மக்கத்துத் தலைவர்கள் முஹம்மதை இறுதித் தூதராக ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்திற்குத் தள்ளியது!  இந்த ஒப்பந்தமானது, மக்கத்துக் குறைஷியருக்கு எவ்வளவு இக்கட்டான சூழலை உருவாக்கிற்று என்பதைப் பற்றியும், எவ்வாறு முஸ்லிம்களுக்கு அது மாபெரும் வெற்றியாகவும் ஆயிற்று என்பது பற்றியும், பின்னொரு பொருத்தமான இடத்தில் விளக்குவேன், இன்ஷா அல்லாஹ்.  ஏனென்றால், அந்த இக்கட்டான உடன்படிக்கையின் பயனாய், நபியவர்களின் தலைமைத்துவம் எத்தகைய உயர் நிலையில் ஆகியது என்பதை விவரிப்பதற்காக நான் எடுத்துரைப்பேன், இன்ஷா அல்லாஹ்.  வாசகர்கள் அதன் மூலம் சிறந்த தலைமைத்துவப் பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள்.

மிக விரைவில் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்வார் என்று அம்ர் பின் அல்-ஆஸ், இப்போது தெளிவான முடிவுக்கு வந்துவிட்டார்.  அதனால், மக்காவிலோ தாயிஃபிலோ வசிப்பது சரியில்லை என்ற முடிவுக்கு வந்து, தன் மக்களையும் உறவினர்களையும் கூப்பிட்டு, அவர்களுடன் பேசத் தொடங்கினார்:  

“முஹம்மதின் இந்தப் பிரச்சினை, படுபயங்கரமான சூழலை உருவாக்கிவிட்டது!  அவர் கட்டாயம் மக்கத்துக் குறைஷிகளைத் தோற்கடிப்பார்!  அத்தகைய சூழலில், நாம் மக்காவில் வசிப்பது நல்லதல்ல!  வாருங்கள், நாம் அனைவரும் அபிசீனியாவின் கிருஸ்தவ மன்னர் நஜ்ஜாஷியிடம் போய்த் தஞ்சமடைவோம்!  ஒருவேளை, மிக விரைவில் முஹம்மது இந்த மக்காவை வெற்றிகொண்டுவிட்டால், அந்த வெற்றி நம்மைப் பாதிக்காது.  காரணம், தொலைவான நாட்டில் போய் வாழும் நாம் மக்காவின் வீழ்ச்சியால் துவண்டுபோய்விட மாட்டோம் அல்லவா?  மாறாக, முஹம்மதுக்கும் குறைஷிகளுக்கும் இடையிலான சண்டையில் குறைஷிகள் வென்றுவிட்டால், நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்தானே!”

இவ்வாறு பெருமை பேசியவர், தன் பேச்சின் இறுதியாகச் சொன்னார்:  “முழு மக்கத்து மக்களும் முஹம்மதின் மார்க்கத்தைத் தழுவிவிட்டாலும், இந்த அம்ர் மட்டும் மாறவே மாட்டான்!” 

அம்ரின் ஆணவப் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.  எனவே, அவர்கள் அனைவரும் அபிசீனியாவுக்குப் பயணமாயினர்.  அபிசீனிய மன்னருக்கு உவப்பான பொருள், பதப் படுத்தப்பட்ட தோல்களால் செய்யப்பட கைவினைப் பொருள்கள்.  எனவே, ஆனைவரும் தம்மால் எடுத்துக்கொள்ள முடியுமான அளவில் தோல் பொருள்களை எடுத்துச் சென்றனர்.  குறிப்பிட்ட ஒரு நாளில் அவர்கள் அனைவரும் அபிசீனியாவை நோக்கிப் படகுகளில் புறப்பட்டுச் சென்றனர்.  

அம்ரின் தலைமையிலான மக்காவின் மைந்தர்கள் அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷியின் அவையைச் சென்றடைந்தபோது, அந்த அவையிலிருந்து இன்னொரு அம்ர் வெளியில் வந்துகொண்டிருந்தார்!  அவர், அம்ர் பின் உமையா அல் ழமீறி என்ற நபித்தோழர்.  அவர் அண்ணலாரால் நஜ்ஜாஷியிடம் அனுப்பப்பட்ட தூதுவர்.  எதற்காக?

குறைஷித் தலைவர் அபூசுஃப்யானின் மகளான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்குத் தன் கணவரோடு வந்தவர்.  வந்து சேர்ந்த சில நாட்களில் கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோயிருந்தார்.  அதனால், உம்மு ஹபீபா விதவையானார்.  அவரின் காத்திருப்பு (இத்தா) நாள்கள் முடிந்த பின்னர், அவரைத் தாம் மணந்துகொள்ள விரும்பியதால், நபியவர்கள் உம்மு ஹபீபாவின் இசைவைக் கேட்டுவரும்படி அபிசீனியாவுக்கு அம்ர் அல் ழமீரி (ரலி) அவர்களை அனுப்பி,  அவர் அதற்கு இசைந்தால், நஜ்ஜாஷி மன்னரைத் தம் சார்பில் இருந்து மண ஒப்பந்தம் செய்து தரக் கோரியிருந்தார்கள் அண்ணலார் (ஸல்).  இறைத்தூதரின் அனுமதியைப் பெற்று, நஜ்ஜாஷி அத்திருமணத்தை நடத்திவைத்தார்.

சில மாதங்கள் முன்பு நஜ்ஜாஷியின் அவைக்கு வந்து சென்றவர் எனும் அடிப்படையில், தான் கொண்டுவந்த அன்பளிப்புப் பொருள்களை அரசரின் முன்பு போட்டு, அவருக்கு முன்னால் சிரம் பணிந்து நின்றார் அம்ர் இப்னுல் ஆஸ்.  அதுவே அபிசீனியரின் மரியாதை வழக்கம்.  அரசரின் மகிழ்வைச் சாதகமாக்கிக்கொண்டு,  சற்று முன்பு அவையிலிருந்து சென்ற  அம்ர் பின் உமையாவைப் பற்றி, அம்ரு பின் அல் ஆஸ், “அரசர்க்கரசே! இவரும் இவரைப் போன்ற சிலரும் எங்கள் தலைவர்களைச் சாகடித்தவர்கள்.  உமது அனுமதி இருந்தால், அவரை நானே கொன்றுவிடுவேனே?” என்று கூறினார்.

இதைக் கேட்ட நஜ்ஜாஷி, கடுஞ்சினம் கொண்டார்!  அதனை அடுத்து, அம்ரு பின் ஆஸின் முகத்தில் ஒரு குத்து விட்டார்!  இந்தத் திடீர்த் தாக்குதலால் நிலை குலைந்து போன அம்ர், தான் என்ன செய்வது என்று விளங்காமல், விக்கித்து நின்றார்!  அம்ர் வந்திருப்பதோ அந்நிய நாடு;  இடமோ, தஞ்சம் புகுந்த நஜ்ஜாஷியின் அரசவை.  தனக்கு ஏற்பட்ட தலைகுணிவையும் இழிவையும் நினைத்து, தன்னையே நொந்துகொண்டார்.  பின்னர் ஒருவாறு தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, “மன்னரே!  எனக்கு இது பற்றி முன்னரே தெரிந்திருந்தால், உங்களிடம் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன்” என்றார்ஆஸியின் மகன் .  

மன்னர் நஜ்ஜாஷியும் தனது கோபத்தைத் தணித்துக்கொண்டு,  “அம்ரே!  கண்ணியம் மிக்க ‘நாமூஸ் அல்–அக்பர்’ (ஜிப்ரீல்) வழியாக இறைச் செய்தியைப் பெற்றுவரும் முஹம்மதின் தூதுவரை அல்லவா உன்னிடம் ஒப்படைக்கச் சொல்கிறாய்?” என்றார்.

‘அரசர்களும் தலைவர்களும் ஏற்றுக்கொண்ட உண்மையான இறுதி நபித்துவத்தை அல்லவா நான் எதிர்த்து நிற்கின்றேன்;  என் மனத்தில் அந்த நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்கின்றேன்.  அரபுகளும் அரபி அல்லாதவரும் ஏற்றுக்கொண்ட உண்மையை அல்லவா இதுவரை நான் எதிர்த்து நிற்கின்றேன்’ என எண்ணிக்கொண்டு, அம்ர் நஜ்ஜாஷியைப் பார்த்துக் கேட்டார்:  “அரசரே!  அந்த மனிதரை (முஹம்மதை) நீங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டீர்களா?”

அதற்கு அம்மன்னர், “ஆம், வல்லமை மிக்க அல்லாஹ்வின் முன் நான் முஹம்மதின் நபித்துவத்தை ஏற்றுக்கொண்டேன்!  அம்ரே, நான் சொல்வதைக் கேளும்.  அந்த மனிதரை இறைத் தூதராக ஏற்றுக்கொள்.  இந்த மனிதர் தன்னை எதிர்த்து வரும் எல்லா எதிர்ப்புகளையும் உடைத்தெறிந்து, உண்மையின் மீது நிலைத்து நிற்பார்.  எனது நம்பிக்கையின்படி, மூஸா தனக்கு முன்னால் திரண்டு நின்ற ஃபிர்அவ்னின் பெரும்படையை முறியடித்தது போன்று, இவரும் முறியடிப்பார்!” என்று உறுதியாகக் கூறினார்.

அற்புதம்!  தமது வாழ்க்கையில் நபியவர்களைச் சந்தித்தே இருக்காத அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷி, முஹம்மதை ஏற்றுக்கொண்டு, இந்த உறுதி மொழியைக் கூறுகின்றார்!  ஆனால், அந்த நபியுடன் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாகத் தொடர்பு வைத்திருந்த அம்ரு, அத்தனை ஆண்டுகளும் அவரை எதிர்த்தே நின்ற அம்ரு, மறுத்து நிற்கின்றார்!  சற்று சிந்தித்துப் பாருங்கள்!  இங்கு நடைபெறும் இஸ்லாமிய அழைப்பு (தஅவா) எத்தகையது என்று நோக்குங்கள்.  ‘தஅவா’வுக்கு ஓர் எல்லையோ இலக்கோ கிடையாது. அது விரிவானது. அதில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டால், நம்மை இயக்குபவன் அல்லாஹ்தான் என்பதை உணரவேண்டும்.  குறிப்பிட்ட எந்தக் காரணமும் இல்லாமல், நமது திறமைக்கும் தகுதிக்கும் அப்பாற்பட்டு நம்மை இயக்குபவன் அந்த அல்லாஹ்தான் என்பதை நம் இதயங்களில் ஆழப் பதித்துக் கொள்ள வேண்டும்.

அம்ரு அடங்கிப் போனார்!  அடுத்து நடந்ததோ, அற்புதம்!  கண்களின் விளிம்பில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, நஜ்ஜாஷியின் கைகளைப் பற்றிக்கொண்டு, அதுவரை தான் வன்மையாக எதிர்த்து நின்ற அருள் மார்க்கத்தை உறுதிமொழி கூறித் தழுவிக்கொண்டார்!  இது அற்புதமல்லவா?

அபிசீனிய மன்னர் அகமகிழ்ந்தார்!  தனது தாக்குதலால் இரத்தம் வடிந்த அம்ரின் பழைய ஆடைகளைக் களையச் செய்து, அவருக்கு மாற்று உடை அணிவித்து, வாழ்த்துக் கூறினார்!

அம்ரு தனது தங்குமிடத்தை நோக்கித் திரும்பி நடந்தார்.  அங்கு இருந்த மக்கள், தம் வழிகாட்டியான அம்ரு புத்தாடை அணிந்து மகிழ்வுடன் திரும்பி வந்ததைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினர்!

“முஹம்மதின் தூதுவரை நம்மிடம் ஒப்படைக்க மன்னர் தமது சம்மதத்தைத் தந்துவிட்டாரா?” என்று முகங்களில் ஆர்வத்தைத் தேக்கிக் கேட்டனர்.

“இல்லை!  இது முதல் சந்திப்பாக இருப்பதால், நான் கேட்கவில்லை.  அடுத்தமுறை, நாளை  பார்த்துக்கொள்வோம்” என்று மட்டும் கூறி, அம்மக்களை ஆறுதல் படுத்தினார் அம்ரு பின் அல் ஆஸ்.  

தனக்கு ஒரு முக்கியப் பணி இருப்பதால், தான் விரைந்து செல்லவேண்டும் என்று கூறி, கடல் கடந்து செல்லப் படகு ஒன்றை ஆயத்தப் படுத்தினார் அம்ரு.  தன் மக்களிடம், தான் எங்கே செல்கிறார் என்பதைக் கூறாமல், மதீனாவை நோக்கிப் படகை ஓட்டச் செய்தார்!  தன்னுடன் மக்காவிலிருந்து ஹபஷாவுக்கு வந்த மக்களை அங்கேயே விட்டுவிட்டு, முதலில் தனக்கு நேர்வழி வேண்டுமென்ற எண்ணத்துடன் புறப்பட்டுவிட்டார்! 

செங்கடல் ஓரமாகச் சென்றுகொண்டிருந்த அம்ரு, ‘மர்ருழ் ழஹ்ரான்’ என்ற இடத்தில் கரையிறங்கியபோது, அங்கு இரண்டு பேர் கூடாரமடித்துத் தங்கியிருந்ததையும், அவர்களுள் ஒருவர் தனது ஒட்டகத்தைக் கட்டிக்கொண்டிருந்ததையும் கண்டார்.  நெருங்கிச் சென்று பார்த்தபோது, அவர்களைத் தன் நண்பர்கள் என்று அடையாளம் கண்டுகொண்டார்!  அவர்கள், காலித் இப்னு வலீதும் உத்மான் இப்னு தல்ஹாவும்!  அவர்களை நெருங்கிச் சென்று, “தோழர்களே!  எங்கே போகின்றீர்கள்?” என்று கேட்டார்.

“நம் மதிப்பிற்குரிய ஒருவர்கூட இப்போது மக்காவில் இல்லை.  ஆனால் முஹம்மதோ, நாளுக்கு நாள் தமது ஆதரவில் கூடிக்கொண்டே போகிறார்!  அதனால், நாங்கள் முடிவெடுத்துவிட்டோம், மதீனாவுக்குச் சென்று, அவருடன் இணைந்துவிடுவதென்று!”  காலித் உறுதியாகக் கூறினார். 

அதற்கு அம்ரு, “நண்பர்களே!  நானும் அதைத்தான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்” என்று கூறி, அவர்களுடன் இணைந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து, அவர்களின் தரைப் பயணம் மதீனாவை நோக்கித் தொடர்ந்தது.  ஓரிரு நாட்களில் அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.  மஸ்ஜித் நபவியில் தம் தோழர்கள் புடைசூழ அமர்ந்திருந்தார்கள் பெருமானார்(ஸல்).

அமர்ந்திருந்த தோழர்களுள் ஒருவர், தம்மை நோக்கி வந்துகொண்டிருந்தவர்களை அடையாளம்  கண்டுவிட்டார்!  “யா ரசூலில்லாஹ்!  மக்கா தனது பிடிகயிற்றை உங்களிடம் ஒப்படைத்துவிட்டதைப் பார்க்கின்றேன்!” என்றார்.  முஸ்லிம்களின் வலுவான எதிரிகளாக இருந்து, அவர்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண் டிருந்தவர்கள் அவ்விருவரும்!  அந்தக் கடும் பகை, அவர்களின் முன்னோர்களான வலீத் இப்னு முகீரா, உத்பத் இப்னு ரபீஆ, உமையா இப்னு கலஃப், அபூஜஹ்ல், அபூலஹப் போன்றவர்களின் உணர்வைப் பெற்றிருந்ததில் வியப்பில்லை. அந்த முன்னவர்கள் கொல்லப்பட்டுப் போயினர். ‘பத்ரு’ப் போரில் கலந்துகொள்ளாத ஒரே காரணத்தினால், தப்பிப் பிழைத்த அபூசுஃப்யான் மட்டுமே எஞ்சியிருந்தார்.  அவர் மட்டுமே இப்போது மக்கத்துக் குறைஷிகளின் தலைவர்.  அதனால், காலித், அம்ரு போன்ற இளைஞர்களின் கைகளில் மக்காவின் ஆளுகை அடங்கியிருந்ததில் வியப்பில்லை. 

அம்ரு, காலித் போன்றவர்களை மனம் மாறியவர்களாகக் காண்பதில், நபியவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.  அவர்கள் தம்மை நோக்கித் தலை குணிந்தவர்களாக வந்துகொண்டிருந்ததைப் பார்க்க, அவர்களுக்கு ஆனந்தம்!  அத்தருணத்தில், அந்த இளைஞர்கள் தமக்குச் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்துவிட்டார்கள்.  அந்த இளைஞர்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை நோக்கி வருவதால், அவர்களைக் கொண்டு இஸ்லாத்திற்குக் கிடைக்க இருக்கும் வெற்றிகளை எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள் பெருமானார் (ஸல்) .

முதலில் அம்ரு பேசினார்:  “யா ரசூலில்லாஹ்!  நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறேன்.  அதற்குப் பகரமாக, கடந்த காலத்தில் நான் செய்த என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடும்படி அல்லாஹ்விடம் தாங்கள் எனக்காக மன்னிப்புக் கோரவேண்டும்.”

அதைக் கேட்ட பெருமானார், “அம்ரே!  உமக்குத் தெரியாதா?  இஸ்லாத்தைத் தழுவியவுடன், ஒருவரின் கடந்த காலப் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் பட்டுவிடும்.  ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்தலும் அவ்வாறே பாவங்களுக்குப் பரிகாரமாகும்.  ஹஜ்ஜும் அவ்வாறே பாவங்கள் மன்னிக்கப்படக் காரணமாகுமே,  தெரியாதா?” என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த உலகில் வாழ்ந்திருந்தவரை, அம்ரு, காலித் போன்றவர்களைத் தம் நேரடிப் பார்வையில் வைத்து, கனிவுடன் நடத்திவந்தார்கள்.  அவ்வாறே, அவர்களுக்குப் பின் இஸ்லாமிய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலீஃபாக்கள் அபூபக்ரும் உமரும் அண்ணல் அவர்களின் முன்மாதிரியைக் கடைப்பிடித்துக் கருணையுடன் நடத்தினார்கள்.  கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது, அன்னார் காலிதோடு கண்டிப்புடன் நடந்துகொண்டது, அவர்களின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் அடிப்படையிலேதான் என்பதை வரலாற்றைப் படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அதிரை அஹ்மது

1 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி ஆதரங்களோடு எம்பெருமானார் நபி (ஸல்) அவர்களின் தலைமைத்துவ பண்புகளை விளக்கும் விதம் மிக அருமை.

அல்லாஹ் ஆத்த்கிக் ஆஃபியா, காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு