Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) 1

அதிரைநிருபர் பதிப்பகம் | April 09, 2015 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 10

அது திண்ணை. ஆனால், வெட்டிப் பேச்சுக்கு அங்கே வேலையில்லை!

தங்கியிருந்தவர்கள் சீடர்களல்லர். தூய்மை நபியின் தோழர்கள்! அனைவர் பெயரும் ‘அஸ்ஹாபுஸ் ஸுஃப்பாஹ்!’ (திண்ணைத் தோழர்கள்!).

உடம்பிலே ஒரு ஜோடி உடையில்லை! மேலாடை என்பது அவர்கள் பிறர் உடலில் பார்க்கும் பொருளாகவே இருந்தது. அன்றாடம் உணவு என்றால், அதுவும் கிடைப்பதில்லை!

சிலவேளை, மேலே கூரையில் செருகப்பட்ட பேரீத்தங்குலைகளில் இருந்து ஒவ்வொரு பழமும் உதிர்ந்து விழும்போது மட்டுமே அமுத உணவாய் அவர்களை அடையும். அதுமட்டுமே! அதனால் என்ன? அவர்களின் சோகத்தை மாற்றி சுவர்க்கத்தைக் காட்டும் சுந்தர நபி (ஸல்)யின் நேசத்தின் முன்பு, நெருங்கிய பாசத்தின் முன்பு இந்த அற்பத் தேவைகள் எல்லாம் எம்மாத்திரம்? அந்தப் புன்னகை வேந்தரின் பொன்னகைப் பார்வையில் பசி என்ற உணர்வு எல்லாம் பஞ்சாய்ப் பறந்து போனது!

ஆங்கே, ஈச்சந் தட்டியால் வேயப்பட்ட அந்தக் கூரைப் பந்தல் வெறும் இளநிலைப் பள்ளிக்கூடமல்ல. நல்ல பண்புகள் அனைத்தும் பயிற்றுவிக்கப்படும் பல்கலைக் கழகம்!

பொருளியலில், அரசியலில், புதுமை விஞ்ஞானமதில், அருளியலில், இல்லறத்தில், ஆன்மீக நெறிமுறையில் அறிவின் திறவுகோல்கள் அவர்களுக்கு ஆளுக்கொன்றாகவும் சிலருக்குக் கொத்துக் கொத்தாகவும் படித்தரங்களுக்கு ஏற்பக் கொடுக்கப்பட்டன! ஆம். அது அல்லாஹ்வின் தேர்வு. அதன் வெகுமதி?

அதுதான் பேரழகர் பெருமானார் (ஸல்) அடிக்கடிக் குறிப்பிடும் நிம்மதி என்னும் நிரந்தர சுவர்க்கம்! அந்த அழியாப் பேரின்பத்தை அடைய வயிறை மட்டுமல்ல, உயிரையும் தியாகம் செய்ய நிலையாய் நின்றார்கள் அந்த நேர்மைத் தோழர்கள்!

அந்தத் திண்ணைத் தோழர்களுக்கு, அன்று பெருநாள் போல ஒருநாள்! அதுதான் அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழர் அபூபக்ரு (ரலி) அவர்கள் தம் பயணக் குழுவுடன் நாடு திரும்பிய நன்னாள்! கடும் வெயில் சுட்டெரிக்கும் கோடைகாலமதில்  வர்த்தகப் பயணம் சிரியாவை நோக்கிச் சென்றிருந்தது.

ரோமர்கள் கட்டியாண்ட ஷாம் தேசத்தின் கலை நகர் போஸ்த்ரா. வளம் நிறைந்த ஒரு வர்த்தக மையம்! பல்லாயிரம் ஆண்டுகளாக, கோடை காலத்தில் சிரியாவையும் குளிர் காலத்தில் யமன் நாட்டையும் இலக்காகக் கொண்டு ஹிஜாஸ் பெருவெளியைச் சேர்ந்த மக்க(மதீனவாசிக)ளால் மனம் விரும்பி மேற்கொள்ளப்படும் மாபெரும் வணிகப் பயணம்(1) அன்று நிறைவுற்று நிறைந்த பொருட்களுடன் திரும்பி இருந்தது!

தம் குடும்பத்தினரைவிட வள்ளல் நபியால் அதிகம் வாஞ்சை காட்டப்பட்ட திண்ணைத் தோழர்களின் தேவைகள் முதலில் தீர்த்து வைக்கப்பட்டன.

இந்தத் திண்ணைக்குத் தெற்கேதான் உலகப் புகழ் பெற்ற, ஒளி பொருந்திய ஓர் ஆலயம் இருக்கிறது. அது அல்லாஹ்வின் இல்லம். மதீனாவில் அதன் பெயர் மஸ்ஜிதுன் நபவீ!

அன்று என்னவோ தேனீக்கள் போன்று சூழ்ந்துகொண்ட தோழர்களுக்கு மத்தியில் நடு நாயகமாக நம்  நபிகள் நாயகம் (ஸல்). யாருக்கும் எழுந்து போக மனமில்லை. புதிதாக வருபவர்க்கு அமர ஓர் அங்குல இடமுமில்லை!

காண்பதற்கு, நீல வானத்தின் முழு நிலவைச் சுற்றித் தோரணங்களைப் போல மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களாய் மங்காப் புகழ் பெற்ற நம் தங்கத் தலைவரைச் சூழ்ந்துகொண்ட நட்சத்திரத் தோழர்கள். அங்கே, அகிலம் போற்றிடும் அண்ணலுக்கு அருகில், ஆனந்த உரையாடலில் ஒளி வீசும் அந்தப் பெரிய தாரகை யார்? அது அண்ணல் நபியின் ஆருயிர் நண்பர் அபூபக்ரு (ரலி) அல்லவா! அவர் சுவையான விஷயம் ஒன்றை விவரித்துக் கொண்டிருக்க, வியப்பினாலும் சிரிப்பினாலும் திண்ணைத் தோழர்க் கூட்டத்தில் கலகலப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. சுவையான சம்பவம் விரிவாகச் செல்லவும், அன்றலர்ந்த செந்தாமரை மலர்போல் அண்ணலின் முகம் மலர்ந்து ஆனந்த மணம் அங்கு வீசியது. நிகழ்வின் உச்ச வர்ணனை உயர்ந்து செல்லவும் தேனமுதம் சிந்தும் தெள்ளிய சிரிப்பால் காஸிமின் தந்தைக்குக் கடைவாய்ப் பல் மின்னியது!(2) சம்பவம் ஒருநாள் இருநாள் அல்ல! வேடிக்கையின் விளைநிலம் அந்-நுஐமானின் நினைப்பு வரும்போதெல்லாம் ஓராண்டுக்கு மேல் எல்லோராலும் சொல்லிச் சொல்லிச் சிரிக்கப்பட்ட சுவையான நிகழ்ச்சி அது!(3)

வல்லோன் தந்த மார்க்கம் செழிக்க, வள்ளலாய்ச் செல்வமெல்லாம் வாரித்தந்தவர் அவர். அவர்தாம் அந்த வர்த்தகக் குழுவின் தலைவர் அபூபக்ரு (ரலி) அவர்கள். பொறுப்புகளை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்தபோது உணவு விநியோகத்துறையை சுவைபித் இப்னு ஹர்மலாஹ் (ரலி) யிடம் ஒப்படைத்தார்கள்.

கண்டிப்புக்கும் கறாருக்கும் பேர்பெற்ற ஸஹாபி சுவைபித் (ரலி) அவர்களுக்கு  அந்-நுஐமான் (ரலி) போல வெடவெடவென்ற ஒல்லியான உருவமல்ல. நல்ல ஆஜானுபாகுவானவர்! இருவரும் பத்ரு யுத்தத்தில் தோளோடு தோள் நின்று களம் கண்ட தோழர்கள்தாம்! எனினும், குணத்தில் இருவரும் எதிரும் புதிரும் ஆனவர்கள்.

கோடையின் வெட்கை. அத்தோடு நீண்ட இடைவிடாத பயணம். அந் நுஐமானுக்குப் பசி வயிற்றைக் கிள்ளத் துவங்கியது. உணவு கேட்டு ஒற்றைக் காலில் நின்றார் சுவைபித் (ரலி) யிடம். தொந்தரவு தாங்காத சுவைபித் (ரலி), “இளைப்பாறும் இடம் இன்னும் வரவில்லை. தங்குமிடம் வந்ததும் முதலில் உனக்குத் தந்துவிடுவேன் உணவை நுஐமான்” என்றார். ஆனால், பசி பொறுக்காத அந்-நுஐமானின் வயிறு, ஒரு கட்டத்தில் பொறுமை மீறி கரடி போல உறும ஆரம்பித்துவிட்டது.

கடுப்பாகிவிட்டார் தோழர் அந்-நுஐமான் (ரலி). சினத்துடன் எழுந்து, “சுவைபித்! நீ உடனே எனக்குக் கொஞ்சமாவது உணவு தராவிட்டால் உன்னை என்ன செய்வேன் தெரியுமா?” என்று மிரட்டிப் பார்த்தார். விழியை உருட்டிப் பார்த்தார். அதற்கெல்லாம் மசியவில்லை சுவைபித் (ரலி). “இந்தச் சலசலப்புகளுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் தம்பி. இயன்றதைப் பார்த்துக்கொள். சாப்பாடு இப்போதைக்குக் கிடையாது” என்று கறாராகச்  சொல்லிவிட்டார்.

வயிற்றெரிச்சலால் அந்-நுஐமான் (ரலி) பெருமூச்சு விட்டுவிட்டு, அவர் வயிறு கிட்டத்தட்ட புகைந்து போய்விட்டது!

பசி போட்டுப் பாடாய்ப் படுத்தியதில் அசந்து போனார் அந்-நுஐமான் (ரலி). ஒரு கவளம் உணவு தராமல் நொந்துபோக வைத்ததை நினைத்து வெந்து கொண்டிருந்தார் அவர்!

இளைப்பாறிச் செல்ல இடம் பார்த்ததில், நகரின் நுழைவாயில் அருகே வாகான ஒரு தலம் கிடைத்தது. குழுவின் தலைவர் அபூபக்ரு (ரலி) அவர்கள் சுவைபித் (ரலி) யை அழைத்து, நகருக்குள் சென்று கடைவீதியில் அவசியமான பொருட்கள் குழுவினருக்காக வாங்கி வரப்பணித்தார்கள். அங்கு, சுவைபித்தையே சுற்றிக் கொண்டிருந்தவரைப் பார்த்து, "நீயும் துணைக்குப் போய்வா நுஐமான்" என்றார்கள்.

யானைக்கொரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பது போல் அந்-நுஐமான் (ரலி) க்கு அந்த சந்தர்ப்பம் அப்பொழுதே வாய்த்தது.

ஆரவாரமான அலங்கார நகர் அது! கடைவீதியின் பிரதான வளைவில் இருந்தது, உல்லாசச்  செல்வந்தர்களின் அந்த ஒய்யார மையம்! கண்டதும், அதிரடியாக ஒரு முடிவெடுத்தார் நம் அந்-நுஐமான் (ரலி). விருவிருவெனச் சென்றவர், இருந்த செல்வந்தருள் சிறந்தவராகத் தெரிந்தவரிடம் போய், “என்னிடம் திடகாத்திரமான உடல்கட்டு வாய்ந்த அரபு நாட்டு அடிமை ஒருவன் இருக்கின்றான். விலை 10 பவுன்” என்றார்.  அவசரமாக எழுந்தான் அந்நாட்டுச் செல்வந்தன்! "சுவாரஸ்யமான செய்தி! நிஜமாக 10 பவுன் மட்டும்தானா?"

சத்தியமாக! அதோ பார். அவன்தான்!” சுட்டிக் காட்டப்பட்டவர் சற்று தூரத்தில் பொருட்களைப் பார்த்து நின்ற சுவைபித் என்ற கட்டுமஸ்தான அரேபிய ஆண்மகன்!

அப்புறம்... முக்கியமான ஒரு விஷயம். உன்னை நான் எச்சரிக்க வேண்டும்! கிட்டே நெருங்கி உன் காதைக் கொடு. ரகசியம்: அவன் ஒரு மாதிரியான ஆள். அடிமையில்லை என்பான். ஆத்திரப்படுவான்! அடித்தும் சொல்வான். அப்பவும் கேட்காதே! அவன் என் அடிமைதான்!” கிசுகிசுத்தார். “என் பேச்சில் நம்பிக்கை இல்லையென்றால், வியாபாரத்தை விட்டுவிடு. அதோ அந்தக் கணவான் இடம் போய் 10 பவுனுக்கு விற்றுக் கொள்கிறேன்

இரு, இரு. நான் உன்னை நம்புகின்றேன். இந்தா பிடி 10 பவுன்” ஒப்பந்தம் பரபரவென்று முடிந்தது. “இனி அவன் என் பொறுப்பு. நீ செல்லலாம்

ஆனந்தமானார் அந்-நுஐமான் (ரலி). எனினும், சிரிப்பைக் காட்டிகொள்ளாமல், கண்ணைக் கூடச் சிமிட்டாமல், வேகமாக  விரைந்து மறைந்தார்!

திடீரென்று தன்னைச் சுற்றி சிலர் சூழ்ந்துகொள்ள, திடுக்கிட்டார் சுவைபித் (ரலி). சுதாரிப்பதற்குள், கழுத்தைச் சுற்றி கனமான துணியால், வேகமாய் இரண்டு பேரால் இழுக்கப்பட்டார்!

ஏய். அரேபிய அடிமையே! உன்னை விலைக்கு வாங்கிவிட்டேன். இப்போது நீ எனக்குச் சொந்தமானவன்” அதட்டுப் போட்டான் ஷாம் நாட்டு முதலாளி.

ஆடிப்போனார் சுவைபித் (ரலி). “யார் அடிமை? எவன் சொன்னவன்? நான் சுதந்திர மனிதன்” நான்தான் சுவைபித் பின் ஹர்மலாஹ்! அரண்டு போய்க் கத்தினார்!

சும்மா கூவாதே கண்ணு! நீ எப்படிப் பட்டவன் என்று ஏற்கனவே எங்களுக்குத் தெரியும். இப்படியெல்லாம் நீ முரண்டு பிடிப்பாய் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டார் உன் முன்னாள் எஜமானர் அந்-நுஐமான். திமிராமல் வந்து சேர். இல்லையேல், சவுக்கடிதான்  சாப்பிடுவாய் அரேபிய அடிமையே!

அதிர்ச்சியில் உறைந்து போனார் சுவைபித் (ரலி).

அங்கே, வழி எங்கும் உற்சாகமாய் சிரித்துக் கொண்டே கை நிறைய உணவுப் பொருட்களுடன் குதூகலமாக வந்து சேர்ந்தார் அந்-நுஐமான் (ரலி).

தோழர்களுக்கு நடுவே அமர்ந்து அங்கே வெற்றிகரமான அடிமை வணிகம் பற்றித் தம் வேடிக்கைப் பேச்சால் விலாவாரியாக விவரிக்கத் தொடங்கினார்.

விந்தையான வியாபார வர்ணிப்பில் வயிறு குலுங்கவும் விலா வலிக்கவும் சபையோர்களைச் சிரிக்க வைத்தார். வேடிக்கையான வர்த்தகச் செய்தி சடுதியில் அங்கே பரவிச் சென்றது!

ஒருவழியாக அடிமை வணிகம் பற்றிய சம்பவம் அறியக் கிடைத்ததும், அதிர்ந்து எழுந்தார் அருள்வடிவான அண்ணலாரின் அருமைத் தோழர் அபூபக்ரு (ரலி) அவர்கள். அந்-நுஐமான் (ரலி) உடைய குறும்புத்தனமான சேட்டைக் குறித்து விவரம் கேட்கக்கூட அவர் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை!

கூடாரம் கலைக்கப்படவும் போர்க்கால வேகத்தில் கடைவீதி அடையவும் விருவிருவெனக் கட்டளை பிறந்தது.

அந்-நுஐமான் (ரலி) யின் கேலிக் கூத்தான வியாபாரத்திற்காக வருத்தம் தெரிவிக்கப்பட்டு, 10 பவுனும் திருப்பி அளிக்கப்பட்டு அடிமை வணிகம் சரிகட்டப் பட்டது.

மீட்கப்பட்ட பிறகுதான் நிம்மதி மூச்சு விட்டார் சுவைபித் (ரலி), அவரைப் பொறுத்தவரை இந்த உலகமே அதிர்ச்சியால் அரைநாள் அசையாமல் நின்றுவிட்டதல்லவா!

அப்புறம் என்ன! மதீனா வந்து சேரும்வரை அந்-நுஐமான் (ரலி) க்கு நொறுக்குத் தீனி நிறையவே கிடைத்தது!

மக்களால் சுவாரஸ்யமாகச் சிரித்துச் சிரித்து மீண்டும் மீண்டும் சுவையாக சிலாகிக்கப்படும் நேசமான தோழர் என்றால், அது அந்-நுஐமான் இப்னு அம்ரு (ரலி) அவர்கள்தாம்.(4)

**********
அடிமை முறை:

ஆதிகாலம் தொட்டு சமூகத்தில் வேரூன்றி இருந்த அடிமை முறையை இஸ்லாம் வந்து 23 வருடத்தில் படிப்படியாக வேரோடு பிடுங்கி வீசி எறிந்தது!

அடிமைகளை விடுதலை செய்யும் விஷயத்தில் முன்மாதிரியாக, தன் வளர்ப்புத் தாய் உம்மு அய்மன் (ரலி) அவர்களையும் தன் வளர்ப்பு மகனாய் இருந்த ஸைத் இப்னு ஹாரிதா (ரலி) வையும் முஃமின்களின் தாய் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்த அன்று பெருமானார் (ஸல்) சுதந்திர உரிமை அளித்தார்கள்.

ஓர் அடிமை, தான் விடுதலை பெறுவதற்கான பணத்தைத் தன் உரிமையாளனிடம் கொடுத்து விடுதலை வேண்டின், உடனே அவனுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிடுமாறு அருள்மறையில் அல்லாஹ் பணிக்கின்றான் (5)

மேலும் தவறு செய்பவர்கள், அடிமையை விடுதலை செய்து அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையையும் பெற்றுக்கொள்ளுமாறு வான் மறை குர்ஆனிலே ஊக்குவிக்கப் படுகிறார்கள். (6) 

ஆழ்கடல்போல அறிவு நிறைந்த அண்ணல் அவர்கள் அடிமைகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டார்கள்:

நீங்கள் எதனை உண்ணுகிறீர்களோ அதனையே அவர்களுக்கும் கொடுங்கள். எதனை உடுத்துகிறீர்களோ அதனையே அவர்களுக்கும் அளியுங்கள். மேலும், அவர்களால் இயலாத செயலை ஆற்றுமாறு பணிக்காதீர்கள்!” என்றார்கள் நமக்கெல்லாம் சமத்துவம் சொல்லித் தந்த சன்மார்க்கத் தலைவர் (ஸல்) அவர்கள்.

அண்ணல் பெருமானின் இறுதி மூச்சும் "அடிமைகள், அடிமைகள்" என்பதாகவே இருந்தது.

                                                  o  o  o  o  0  o  o  o  o  
ஆதாரங்கள்:
(1)  அல்குர்ஆன்  106 : அல்-குறைஷ்
(2) அண்ணல் நபியின் அழகிய பெயர்களில் ஒன்று அபுல்காஸிம்
(3) முஸ்னத் அஹ்மத் : அன்னை உம்மு ஸலமா (ரலி)
(4) அல்இஸாபாஹ் : Vol. 2/ Page 98
(5) அல்குர்ஆன்  24:33
(6) அல்குர்ஆன்  5:89 
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

1 Responses So Far:

sabeer.abushahruk said...

நபி(ஸல்)காலத்து நாகரிகமான நகைச்சுவையைத் தொகுக்கிறது நயமான மொழி!

மாஷா அல்லாஹ்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு