Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பத்ருக் களத்தில் படிப்பினைகள் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | May 01, 2015 | ,

::::: தொடர் - 21 :::::
முஸ்லிம்கள் மக்காவை விட்டு மதீனாவில் வந்து அமைதியுடன் வாழத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு எதிராகத் திரண்டு வந்த மக்கத்துக் குறைஷிகளின் படையெடுப்புதான் ‘பத்ரு’ப்  போர்.  முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அவர்கள் முன்னேற்பாடுகள் எதுவுமின்றிப் போர் புரியும் கட்டாயத்திற்கு ஆளானார்கள்!  அப்போரில் நபியவர்களும் தோழர்களும் எவ்வாறெல்லாம் உயிரைப் பணயம் வைத்துப் போரிட்டார்கள் என்பது பற்றிப் பின்னொரு தலைப்பில் பார்க்கலாம்.  இப்போது அதன் தொடக்கம் பற்றிப் பார்ப்போம்:

குறைஷியர்களின் நடமாட்டம் மற்றும் அவர்களின் வணிகக் கூட்டத்தின் தடயம் இருக்கின்றதா என வேவு பார்ப்பதற்காக, நபியவர்கள் தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி), சஈத் இப்னு ஜைத் (ரலி) ஆகிய தோழர்கள் இருவரையும் பத்ரின் பக்கம் அனுப்பிவைத்தார்கள்.  அவ்விருவரும் ‘ஹவ்ரா’ என்ற ஊரில் தங்கியிருந்தபோது, குறைஷி வணிகக் குழுவின் தலைவர் அபூசுஃப்யான் அவ்விருவரையும் பார்த்துவிட்டார்!

நபித்தோழர்கள் இருவரும் உடனே மதீனாவை நோக்கி விரைந்தார்கள்.  குறைஷி வணிகக் குழுவிடம் ஐம்பதினாயிரம் தங்க தீனார்களுடனும்  நாற்பது பாதுகாப்புக் காவலர்களுடனும்  மக்காவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக நபியவர்களிடம் வந்து தகவல் கொடுத்தார்கள்.  

குறைஷி வணிகக் குழு மதீனாவை ஒட்டியே சென்றுகொண்டிருப்பதாகவும் கூறினார்கள்.  மக்காவிலிருந்து ‘ஹிஜ்ரத்’ செய்து மதீனாவுக்கு வந்துள்ள ‘முஹாஜிர்’ தோழர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் குறைஷிகள் கவர்ந்துகொண்ட சொத்து சுகங்களின் மதிப்பு, இதைவிடப் பன்மடங்கு இருந்தபோதிலும், இதை  மட்டுமாவது முழுமையாகக் கவர்ந்துவிட வேண்டும் என்று ஆவல் கொண்டார்கள்.  அப்படிச் செய்தால், மக்கத்துக் குறைஷிகளின் பொருளாதார முதுகெலும்பை முறிக்கத் துணை செய்யும் என்றும் அவர்கள் கருதினார்கள். 

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உடனடி ஆணை பிறந்தது.  அதைச் செவியுற்றவுடன், தோழர்கள் திரண்டு நின்றார்கள்.  தானைத் தலைவரின் ஆணையைக் கேட்டுச் சிலர் தம் வீடுகளுக்குச் சென்று, அங்கிருக்கும் போர்க்கருவிகளை எடுத்துக்கொண்டு வந்து, பின்னர் படையுடன் கலந்துகொள்வதாகக் கூறினர்.  அதற்குப் பெருமானார் (ஸல்) இசையவில்லை.  அந்த நேரத்தில் அவரவரிடம் எதுவெல்லாம் போரிடத் தக்கதாக இருந்ததோ, அதைக்கொண்டே போரிடச் செல்லலாம் என்று கூறினார்கள். தோழர்களில், போரிடத் தக்கவர்கள் மட்டும் புறப்படலாம் என்றார்கள்.  இந்த மோதல், பொருளைக் கவர்வதற்கானது.  ஆதலால் போர்க்கருவிகள் தேவையில்லை என்று தோழர்களிடம் கூறினார்கள்.    

மதீனத்து மைந்தர்களான ‘கஸ்ரஜி’களைவிட, ‘அவ்ஸ்’ இனத்தோழர்கள் மஸ்ஜிதுன்னபி யிலிருந்து கொஞ்சம் தொலைவில் இருந்ததால், அவர்களின் எண்ணிக்கை குறைவாயிருந்தது. அதனால், அவர்களுள் அதிகமானவர்கள் நபியவர்களுடன் போருக்குச் செல்ல முடியவில்லை.

‘பத்ரு’க்குச் சென்று சேர்ந்தபின், குறிப்பிட்ட ஓரிடத்தில் முஸ்லிம்கள் தங்கவேண்டும் என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் தம்முடன் வந்த தோழர்களுக்கு ஆணை பிறப்பித்தார்கள்.   அந்த ஆணையைக் கேட்டவுடன், ஹப்பாப் இப்னுல் முன்திர் என்ற நபித்தோழர், “அல்லாஹ்வின் தூதரே, இந்தக் கட்டளை ‘வஹி’ (இறைச் செய்தி) மூலம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததா?   குறிப்பிட்ட ஓர் எல்லையைத் தாண்டிச் செல்லக் கூடாது என்று இறைவன் புறத்திலிருந்து வந்த தடையா?  அல்லது, உங்கள் போர்த் தந்திரக் கருத்தா?” என்று கேட்டார்.   

அதற்குப் பெருமானார், “போர்த் தந்திரமான எனது கருத்துதான்” என்றார்கள்.  “இவ்விடத்தைத் தாண்டி, ஒரு கிணற்றின் மறு பக்கத்தில் தாவளம் அடித்துத் தங்குவோமே?” என்று அத்தோழர் கூறினார்.  இதனால், எதிரிகளுக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை என்பதுவே அத்தோழரின் வலுவான கருத்தாகப் பதியப்பட்டது.  இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அத்தோழரின் வாதம் சரியெனப் பட்டது.  அதனால், படையினரை மேலும் முன்னோக்கிப் புறப்படக் கூறினார்கள்.

அன்றிரவு தம் தூக்கத்தில், நபியவர்கள் கனவு ஒன்றைக் கண்டார்கள்.  அதில், முஸ்லிம்களை எதிர்த்து வந்த குறைஷிப் படையானது, அதன் உண்மையான எண்ணிக்கையைவிடக் குறுகியதாகக் காட்டப்பட்டது.  அடுத்த நாள் காலைப் பொழுதில், சிறிய மழையொன்று பெய்தது.  அதனால், முஸ்லிம்கள் நின்ற பகுதி மழை நீரால் பதமானதாகவும், மக்கத்துக் குறைஷிப் படை தங்கியிருந்த பாறைப் பகுதியில் பெய்த மழை தங்கி நிற்காமல் பள்ளத்தை நோக்கி ஓடியதாகவும் இருந்தது.  ஒரே நேரத்தில் பெய்த மழையால், முஸ்லிம்களுக்குச் சாதகமானதாகவும், குறைஷிகள் நின்ற பகுதி, அவர்கள் நின்று போரிட முடியாததாகவும் இருந்தது.  இது, பத்ருப் போரில் நிகழ்ந்த அற்புதங்களுள் ஒன்றாகும்.  இந்த அற்புதத்தைப் பற்றித்தான், அல்லாஹ் தன் திருமறையின் வேறோர் இடத்தில் இவ்வாறு கூறினான்:

“(அல்லாஹ்வாகிய) அவனிலிருந்து பாதுகாவலாகச் சிறு உறக்கத்தை உங்கள் மீது பொதிந்துகொள்ளுமாறு  அவன் ஏற்படுத்திய நேரத்தில், அதைக்கொண்டு உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் மூலம் ஏற்படும் முனுமுனுப்பை உங்களை விட்டு நீக்குவதற்காகவும், உங்களுடைய இதயங்களை உறுதிப் படுத்தி, உங்கள் கால்களை நிலைப்படுத்துவதற்காகவும்  வானிலிருந்து மழையை இறக்கிவைத்தான்.”                            (8:11)

313 முஸ்லிம் போர் வீரர்களை மட்டுமே கொண்ட படை அது.  முஹாஜிர்கள் 82 பேரும், மதீனாவின் ‘கஸ்ரஜி’கள் 170  பேரும், ‘அவ்ஸ்’கள் 61 பேருமாக, மொத்தம் 313 பேர் கொண்ட சிறுபடை அது.  அவர்களிடத்தில் போதுமான போர்க்கருவிகள் இருக்கவில்லை.  இருந்தவர்களிடமும், பழையதாகித் துருப்பிடித்துப் போன கருவிகளாகவே  இருந்தன.  இரண்டே குதிரைகள் –  ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்களிடம் ஒன்றும், மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) அவர்களிடம் ஒன்றுமாக – இருந்தன.  மீதியுள்ளவர்கள் மாறி மாறி ஏறிச் செல்ல எழுபது ஒட்டகங்களே இருந்தன!  இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும், அலி பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்கும், மர்தத் இப்னு அபில் மர்தது (ரலி) என்ற நபித்தோழருக்கும் பொதுவாக ஓர் ஒட்டகம் இருந்தது.  தோழர்கள் இருவரும் அந்த ஒரே ஒட்டகத்தை நபியவர்களுக்கே விட்டுக் கொடுக்க முன்வந்தபோது, நபியவர்கள் கூறிய மறுமொழி என்ன தெரியுமா?  “தோழர்களே!  என்னைவிட நீங்கள் இருவரும் வலிமையில் மிகைத்தவர்களில்லை.  எனவே, உங்களுக்குக் கிடைக்கும் நன்மையைப் போல் எனக்கும் வேண்டுமல்லவா?” என்று கூறினார்கள்.

தலைமைத்துவத்திற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள் வகுத்த நெறி என்ன தெரியுமா?  அவர்கள் ஏதேனும் ஒரு படையைத் தலைமை ஏற்றுச் செயல்படுவதல்லாமல், எல்லாவற்றிலும் சம பங்கையும் பொறுப்பையும் அத்தலைவர் ஏற்கவேண்டும்;  இந்த முன்மாதிரியினால், அந்தத் தலைவர் நடந்துகொள்ளும் முறையால், போர் வீரர்கள் உள்ளத்தால் கவரப்படவேண்டும்;  எவ்விதமான சாக்குப் போக்குமின்றி, தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காக, அவர்களுள் யாரும் எதிலும் தனியுரிமை பாராட்டக் கூடாது என்பதைத் தம் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்கள்.

பத்ருப் போருக்காக நபியவர்கள் மதீனாவை விட்டுச் சென்றபோது, மதீனாவின் ஆட்சிப் பொறுப்பை அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களிடமும், அபூலுபாபா பின் அப்துல் முன்திர் (ரலி) அவர்களிடமும் கூட்டாக ஒப்படைத்தார்கள்.  போரைச் சந்திக்கப் புறப்பட்டுப் போன அந்தச் சிறு படையின் முழுப் பொறுப்பாளரும் தலைவருமாக முஸ்அப் பின் உமைர் (ரலி) என்ற நபித்தோழர் செயல்பட வேண்டும் எனப் பொறுப்பளிக்கப்பட்டார்.  அவரிடம் வழங்கப்பட்ட போர்க்கொடி, வெள்ளையாக இருந்தது.  பின்னர் அந்தச் சிறுபடை இரண்டாகப் பிரிக்கப்பட்டது.  ‘முஹாஜிர்’களின் பிரிவுக்கு அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களும், அடுத்த ‘அன்சார்’களின் பிரிவுக்கு சஅது பின் முஆது (ரலி) அவர்களும் கொடி பிடித்துத் தலைமை ஏற்றார்கள். வலப்புறத்தைக் கவனிக்கும் பொறுப்பு, ஜுபைர் பின் அல் அவ்வாம் (ரலி) அவர்களிடமும், இடப்புறத்தைக் கவனிக்கும் பொறுப்பு, அல் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடமும் கொடுக்கப்பட்டது.  மொத்தப் படையின் பின்புறத்தை கவனிக்கும் பொறுப்பை, கைஸ் பின் அபீ ஸஃஸஆ (ரலி) அவர்கள் ஏற்க, அந்தச் சிறு படை பத்ரை நோக்கிச் செல்லத் தொடங்கிற்று.  

ஒட்டுமொத்தப் படையின் தானைத் தலைவராகப் பெருமானார் (ஸல்) அவர்கள் முன்னிலை வகிக்க, மக்காவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் படை முன்னேறிச் செல்லத் தொடங்கிற்று.  சிறிது தொலைவில் சென்ற பின்னர், படை இடப்பக்கம் திரும்பி, பத்ரை நோக்கிச் செல்லத் தொடங்கிற்று.  பத்ருக்கு முன்னுள்ள ‘அஸ்ஸஃப்ரா’ என்ற இடத்தை அடைந்தவுடன், முதலில் எதிரிகளை வேவு பார்ப்பதற்காக நபித்தோழர்கள் இருவர் அனுப்பப்பட்டார்கள்.

மக்கத்துக் குறைஷிகளின் வணிகச் செம்மலான அபூசுஃப்யான், தன்னை முஸ்லிம்கள் வேவு பார்க்கிறார்கள் என்பதை அறிந்து, முஸ்லிம்களின் கண்களில் படாமல் மாற்று வழியில் தனது பயணத்தைத் தொடர்ந்து மக்காவைச் சென்றடைந்தார்.  அவர் மக்காவை அடைந்தபோது, ஆயிரம்பேர் கொண்ட பெரும்படையுடன், குறிப்பிடத் தக்கக் குறைஷித் தலைவர்கள் பத்ரை நோக்கிப் புறப்பட்டுவிட்ட தகவலையும் அறிந்துகொண்டார்.  

அந்தத் தகவலின் பின், தனது வாணிபப் பொருள்களும் திரண்ட செல்வமும் பத்திரமாக மக்காவுக்கு வந்து சேர்ந்துவிட்டதால், குறைஷிப் படையைத் திருப்பிக் கொண்டுவருமாறும், போர் முனைக்கு முன்னதாகச் சென்றுவிட்டவர்களை மக்காவுக்குத் திரும்பி வந்துவிடுமாறும் அறிவுரை கூறி, மடல் ஒன்றை அவர்களுக்கு அனுப்பினார்.  குறைஷித் தலைவர்கள் அதை ஏற்றுக்கொண்டு மக்காவுக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தமானார்கள்.  ஆனால், முரடன் அபூஜஹ்ல் மட்டும் விடாப்பிடியாக நின்று, ‘முன் வைத்த காலைப் பின் வைக்க முடியாது’ என்று சூல் கொட்டி நின்றான்.  அவன் தன்னை அழிவில் போட முனைந்து, தம்மையும் அவ்வழிக்குக் கொண்டுசெல்லப் பிடிவாதம் செய்கிறான் என்று  ஏனையக் குறைஷித் தலைவர்கள் உணர்ந்தாலும், அபூஜஹ்லின் பிடிவாதத்திற்கு முன்னால் தமது மறுப்புரை செல்லுபடியாகாது என்றெண்ணி, அரை மனத்துடன் போர் முனைக்குச் செல்வதை ஏற்றுக்கொண்டு, தமது நிலைபாட்டை அபூசுஃப்யானுக்குத்  தெரிவித்துவிட்டனர்.   

மக்காவாசிகளுள்  ஒரு சிறு பிரிவினரான ’பனூ ஜஹ்ரா’ குலத்தவர்கள் மட்டும், தமக்கு ஏற்பட இருந்த அழிவு நாசத்தை மனத்துள் கொண்டு, மக்காவுக்குத் திரும்பிச் சென்றனர்.  அதையடுத்து, ‘பனூ ஹாஷிம்’ இனத்தவர்களும் போரைச் சந்திக்கத் தயங்கி நின்றனர்.  ஆனால், அபூஜஹ்லின் முரட்டுப் பிடிவாதத்தைக் கருதி, வேண்டா வெறுப்புடன், போருக்குச் செல்லத் தமது உடன்பாட்டைத் தெரிவித்து, தம்மை அழிவுப் பாதையில் ஆக்கிக் கொண்டனர்.

மக்கத்துக் குறைஷிப் படையில் எஞ்சியிருந்தவர்கள் இப்போது ஆயிரம் பேரும் – பலர் அச்சத்துடனும், சிலர் மட்டும் ஆணவத்துடனும் – பத்ரை நோக்கிச் சென்று, ‘அல்-உத்வத்துல் குஸ்வா’ என்ற இடத்தில் தாவளமடித்தனர்.

குறைஷிப் படையின் மும்மடங்கு வலிமையை அறிந்து, தம் படைத் தளபதிகளுடன் பெருமானார் (ஸல்) அவர்கள் கலந்துரையாடல் செய்தார்கள்.  உண்மையில், முஸ்லிம் போர் வீரர்களுள் பலர் அப்போது அஞ்சிய நிலையில்தான் இருந்தனர்.  இதைக் கீழ்க்காணும் இறைவசனமும் உறுதி செய்கின்றது:

“(நபியே!  பத்ருப் போருக்காக) உம்முடைய இரட்சகன் உண்மையைக் கொண்டு உமது வீட்டை விட்டு வெளிப்படுத்தியபோது, இறைநம்பிக்கையாளர்களுள் சிலர் வெறுப்படைந்தனர். உண்மையில் அது தெளிவான பின்பும், அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், உம்மால் அவர்கள் இறப்பின் பக்கம் இழுத்துச் செல்லப்பட்டது போன்று கருதி, உம்முடன் (தர்க்கம் செய்தனர்).”                                                     (8:5,6)                                                                                                                         

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் வந்திருக்கும் எதிர்ப்புச் சூழலையும் அதன் தாக்கத்தையும் பற்றித் தோழர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்தார்கள்.  அந்த நிலையில், தமக்குச் சிறந்த பரிந்துரை கூறுமாறு கேட்டு நின்றார்கள்.  அப்போது அவர்களின் அருமைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களே முதலில் கருத்துச் சொல்ல எழுந்தார்கள்.  எவ்வித நிபந்தனையும் இல்லாமல், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்பட்டு, அவர்களின் பக்கத் துணையாக நிற்பதாக வாக்குறுதி அளித்தார்கள்.  அவர்களுக்கு அடுத்து, உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து, தம் ஆருயிர் நண்பர் கூறியதையே வழிமொழிந்தார்கள்.  

அவ்விருவருக்குப் பிறகு எழுந்த அல் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) எனும் வீரமிக்க தோழர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே!  வல்லவன் அல்லாஹ் தங்களை எந்த வழியில் செல்லக் கட்டளை இடுகின்றானோ, அதன் பக்கம் செல்லுங்கள்.  நாங்கள் உங்களுக்குத் துணையாக நிற்போம்!  இது போன்ற நிலை மூஸா (அலை) அவர்களுக்கு ஏற்பட்டபோது, இஸ்ராயீலின் சந்ததிகள் கூறியது போன்று,  ‘மூஸாவே!  நீரும் உம்முடைய இரட்சகனும் போய்ப் போர் செய்யுங்கள்;  நாங்கள் இங்கேயே இருந்து பார்த்துக்கொள்கிறோம்’ என்று நாங்கள் கூற மாட்டோம்.  அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்களும் உங்களுடன் வந்து போர் செய்வோம்!  எங்களை ‘பர்குல் கிமாத்’ எனும் தொலைவான இடத்திற்கு அழைத்துச் சென்றாலும், அங்கும் வந்து அவ்விடத்தை நீங்கள் வென்றெடுக்கும்வரையில் போரிடுவோம்!” என்று வீரச் சிற்றுரை நிகழ்த்தினார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அத்தோழரைப் பாராட்டி, வாழ்த்துக் கூறினார்கள். முதலில் பேசிய மூவரும் இஸ்லாமியப் படையின் சிறுபான்மையினராக இருந்த ‘முஹாஜிரீன்’கள்.  அதையடுத்துப் பெரும்பான்மையினராக இருந்த மதீனத்து ‘அன்சார்’களை நோக்கி, அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று பார்த்தார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள்.  

“என் மக்களே!  எனக்கு உங்கள் பரிந்துரையைக் கூறுங்கள்” என்று அன்சார்களைப் பார்த்துக் கேட்டார்கள்.  காரணம், இந்த ‘அன்சார்’கள்தாம் மக்கத்து ‘அகபா’ உடன்படிக்கையின்போது, ‘மதீனாவின் எல்லைக்குள் எவ்விதத் தீங்கும் ஏற்படாத வகையில் பெருமானாரைப் பாதுகாப்போம்’ என்று வாக்களித்தவர்கள்.  ஆனால், மதீனாவுக்கு வெளியிலிருந்து வரும் எதிர்ப்பைப் பற்றி அப்போது எவ்வித வாக்களிப்பும் கொடுக்கப்படவில்லை.  அதனால், இந்தத் தருணத்தில் தம் அருமை அன்சார்களின் நிலைபாடு என்ன என்பதை நபியவர்கள் அறிய விழைந்ததில் வியப்பில்லை. 

“உங்கள் ஆலோசனையைக் கூறுங்கள், என் மக்களே” என்று அன்சார்களைப் பார்த்து மீண்டும் கேட்டார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.  இதன் பின்னர்தான், அன்சாரித் தலைவர்களுள் ஒருவரான சஅது பின் முஆத் (ரலி) அவர்கள் பேச எழுந்தார்கள்.  “இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இத்தருணத்தில் எமது கருத்தைக் கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?” என்றவுடன், “ஆமாம்” என்று கூறினார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள்.  

உணர்ச்சி கொப்பளிக்க, எழுந்து பேசத் தொடங்கினார் சஅது:  “அல்லாஹ்வின் தூதர் அவர்களே!  உங்கள் மீது முழு நம்பிக்கை வைக்கிறோம் நாங்கள்.  நீங்கள் கொண்டுவந்த உண்மையின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைக்கிறோம்.  உங்களுக்குக் கட்டுப்பட்டு, அதன் மூலம் எவ்விதத் தியாகமும் செய்யக் காத்திருக்கிறோம்.  உண்மையைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக!  கடலில் மூழ்குங்கள் என்று நீங்கள் எங்களுக்குக் கட்டளையிட்டாலும், எங்களுள் ஒருவர்கூட எஞ்சியிருக்காமல், உங்கள் கட்டளைக்கு அடிபணிவோம்!  நம் முன்னே காத்திருக்கும் இந்த எதிரிகளின் முன்னே எதிர்த்து நிற்கத் தயங்கமாட்டோம்!  நாங்கள் பல போர்களைச் சந்தித்துத் தினவெடுத்த தோள்களைக் கொண்டவர்கள்!  அத்தகைய எங்கள் அனுபவத்தின் மூலம் நாங்கள் இறையுதவி கொண்டு எமது அர்ப்பணிப்பை இந்தப் போரில் காட்டத்தான் போகிறோம்!  அதை நீங்கள் கண்ணாரக் காணத்தான் போகின்றீர்கள்!  அல்லாஹ்வின் அருள் தூதர் அவர்களே! அன்பு கூர்ந்து எங்களை இந்தப் போர்க்களத்தை நோக்கி அழைத்துச் செல்லுங்கள்!” 

இத்தகைய உணர்ச்சிப் பெருக்கின் பின்னர், பத்ரில் என்னவெல்லாம் நடந்தன என்பது வரலாற்றுப் பதிவாகும்.  சுருக்கமாக, முஸ்லிம்களுக்கு இப்போரில் மகத்தான வெற்றி!  பகைவர்கள் பணிந்தார்கள்!  அபூ ஜஹ்ல் உட்பட, குறைஷிப் படையின் எழுபது பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள்.  அல்லாஹ் தன் வானவர்களை முஸ்லிம்களின் துணைக்காக அனுப்பி, அந்த அடியார்களுக்கு வெற்றியைக் கொடுத்தான்.  இதைப்பற்றியே, அல்லாஹ் தனது அருள்மறையாம் குர்ஆனில் கூறுகின்றான்:

“(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் எண்ணிக்கையிலும் வலிமையிலும் குறைந்தவர்களாக இருந்தபோது, பத்ரில் உங்களுக்கு (வெற்றியை) உதவியாகக் கொடுத்தான்.  எனவே, நீங்கள் நன்றியுடையோராக இருப்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.”                                                                                           (3:123)

இப்போது வாருங்கள், இந்த பத்ருப் போரின் மூலம் நமக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் படிப்பினைகள் யாவை என்று பார்ப்போம்:

மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கி நிற்கும்போது, தலைவரானவர் இறுதியில் தமக்குக் கிடைக்க இருக்கும் வெற்றி தோல்வியைப் பற்றிய தெளிவான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.  முதலில், வெற்றியின் பக்கம் தனது நோக்கை உறுதியாக வைத்துப் போரில் இறங்க வேண்டும்.  இதுதான் தலைவருக்கு வேண்டிய முதல் பண்பாகும்.

தன்னுடன் ஓரணியில் இணைந்துள்ளோரின் கருத்தையும் பரிந்துரையையும் செவி தாழ்த்திக் கேட்கவேண்டும்.  அவர்களை நம்பவேண்டும்.  அவர்களின் பரிந்துரையோடு தமது கருத்தும் ஒன்றிப் போனால், அதில் அழுத்தமும் விரைவும் காட்டவேண்டும்.  இதுதான், Consultative decision making என்று கூறப்படும்.  தலைவர் தன்னிடம் இருக்கும் தகவல்களை ஒவ்வொன்றாகத் தம் உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவை பற்றிய அவர்களின் கருத்துகளைப் பதிவு செய்யவேண்டும்.  தனக்குக் கீழுள்ள சகோதரர்களை முழுமையாக நம்பவேண்டும்.  அவர்களின் முழு ஒத்துழைப்பும் தமக்குக் கிடைக்கும் என்று நம்பவேண்டும்.  கருத்துகளுக்குச் செயலுருக் கொடுக்கும்போது, இடையில் வரும் தடைகளையும் இடைஞ்சல்களையும் எவ்வாறு எதிர்கொண்டு, அவற்றைப் போக்குவது அல்லது மாற்றுப் பரிகாரம் செய்வது என்ற அறிவும் எச்சரிக்கையும் தலைவருக்கு வேண்டும்.  வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றிய அறிவு மிகவும் இன்றியமையாதது.  வெற்றியடைவது பற்றி நம்பிக்கை வைத்தவாறு தலைவரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.

தலைமைப் பொறுப்பை ஏற்றவர், மறுமையில் தன் இரட்சகனான அல்லாஹ் தனியாகத் தன்னிடம் கேள்வி கேட்பான் என்ற அச்ச உணர்வைக் கொண்டிருக்க வேண்டும். தனது செயல்பாடு ஒவ்வொன்றுக்கும் இறையுதவியையும் இறைப் பொருத்தத்தையும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.  அந்த வல்லமை மிக்க அல்லாஹ்வுடன் அடிக்கடியான தொடர்பினை வைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.  அந்த இறைவன் தன் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அறிகின்றான், கேட்கின்றான் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும்.  நம் சமகாலத் தலைமைகளில் இதுதான் குறைவு. அல்லது அறவே இல்லை என்று நான் நினைக்கிறேன்.

அதிரை அஹ்மது

1 Responses So Far:

sabeer.abushahruk said...

//தமக்கு வாழ்க்கை நெறியாக இறைவனால் வழங்கப்பட்ட ‘இஸ்லாம்’ மார்க்கத்தைத் தாமே தமது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் முதலில் நடைமுறைப் படுத்தினார்கள்//

இப்படி ஒரு தகுதி வேறு எந்த தலைவருக்கும் இருந்ததேயில்லை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு