Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாற்றமும் ஏற்றமும் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2015 | ,

:::::: தொடர் - 24 :::::::
பழைய மோசமான நிலையிலிருந்து மாறி, புதிய நல்ல நிலைக்குச் செல்லவேண்டிய சிறந்த கொள்கைகளைப் பரப்பும் எந்தத் தலைவரும், தனது கோட்பாடு தமக்குப் பின்னும் தொடர்ந்து மக்களுக்குப் பயன் விளைவிக்க வேண்டும் என்றே கருதுவார். அதற்குக் காரணம், அந்தக் கொள்கை அதனைப் பரப்பும் ஆளைப் பொருத்தல்லாமல், அதன் உயர்ந்த தன்மைக்காக நிலைத்திருக்க வேண்டும் என்றே கருதுவார்.  

அவரது இறப்பிற்குப் பின்னரும் அது உலகளாவிய தன்மையைப் பெறுவதற்குத் தேவையான வழிகள் யாவை?  இதற்கு மூன்று முக்கியமான தன்மைகள் அமைந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

தெளிவான வழிகாட்டல்களைப் பெற்றிருக்கும் கொள்கைகள் முதன்மை பெற்று, மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலும், பின்பற்றுவதற்கு ஏற்றதாகவும் இருக்கவேண்டும்.  காலப் போக்குக்குத்  தேவையான சில மாற்றங்கள் செய்வதற்கு அதன் கொள்கைகளில் இலகுத் தன்மைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கொள்கைகளைப் பலருக்கும் எடுத்துரைத்து, கொள்கைப் பரப்புதல் (‘தஅவா’) செய்ய முடியும்.  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அவற்றை ஏற்று, மற்றவர்களுக்குப் போதிப்பார்கள்.  இதன் மூலம் அந்தத் தூய நெறிகளின் ஆதரவாளர்களாகவும், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பைச் சுமந்தவர்களாகவும் மக்கள் மாறுவார்கள். 

ஒரு தலைமையைப் பின்பற்றுபவர்கள் வேறு வேறு இனத்தவர்களாகவும், பல குடும்பங்கள் கோத்திரங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கக் கூடும்.  இந்தப் பல இனத்தவர்களை ஒன்றுகூட்டும் முயற்சியில் தலைவர் ஈடுபடும்போது, அவரவர் இனத்துக்குத் தக்க முறையில் அவர்களை நடாத்த வேண்டும். இதனால், முழுக் கூட்டத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயல்படும் தன்மை உருவாகும்.

அரபுச் சமுதாயத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகம் செய்தபோது, அம்மக்கள் பல கிளைகளையும் கோத்திரங்களையும் சேர்ந்தவர்களாகவும், அந்தந்தக் கோத்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருந்தனர்.  அதுதான் அவர்களின் உயர்ந்த கோட்பாடாகவும் இருந்தது.  இதனால்தான், பல இனத்தவர்கள் தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், ‘அன்ஸார்’ எனும் உதவியாளர்களாகி, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆதரவு அளித்தனர்.  முன்பு அவர்களுக்கிடையே நிலவிய விசுவாச உணர்வு, இனப் பகையாக மாறிப் பல தலைமுறைகளாக இருந்து, அவர்களுள் பகைத் தீயை வளர்த்து, அழிவு நாசத்தில் அவர்களை ஆழ்த்தியிருந்தது!  இறப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும்போது, தந்தை தனது இனப்பகையைத் தன் மகனிடம் ஒப்படைத்துச் செல்லும் அளவுக்கு, தொடரும் பகையாக ஆகிவிட்டிருந்தது! இதற்கு மாறாக, இறைத்தூதரின் இனத்தவர் களான மக்கத்துக் குறைஷிகள் தமக்கு ஆதரவு தராதிருந்தது, நபிக்கு விநோதமாகவும் கவலைக்குரியதாகவும் இருந்தது!

இந்தக் கூட்டு வாழ்க்கை, நட்புக்கும் பகையுணர்வுக்கும் பொதுவான ஒன்றாக இருந்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை வடிவமைக்கும் ஒன்றாக இருந்தது.  இப்படித்தான், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்து வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த இரு பெரும் அரபுக் கோத்திரங்களான ‘அவ்ஸ்’ ‘கஸ்ரஜ்’ இனத்தவர்களுக்கிடையில் பகையுணர்வு கொழுந்துவிட்டு எரியும் பகைத் தீயாக மாறி இருந்தது! அவர்களின் பெருந்தலைவர்கள் பலர் போரில் கொல்லப்பட்டிருந்தனர்! அப்போது, இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை மதீனத்து அரபுக் கோத்திரங்களுக்கு அறிமுகம் செய்வதற்காக மக்காவிலிருந்து ‘ஹிஜ்ரத்’ செய்து வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு, அரபுக் கோத்திரங்களைச் சமாதானத்தில் ஒன்றிணைக்கும் பொறுப்பும் சேர்ந்து இருந்தது.  நாளடைவில் அந்தப் பகையுணர்வு மாறி, அவர்கள் ‘நபித்தோழர்கள்’ என்ற ஒரே சமுதாயமாக மாறக் காரணமாக இருந்தது.

‘ஹிஜ்ரத்’ என்ற உள்ளமும் உடலும் வருத்தப்பட்ட நிகழ்வானது, காலக் கணக்குக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்டதன் காரணம், நபி வரலாற்றில் அதன் முக்கியத்துவம் கருதி,  நபி (ஸல்) அவர்களின் பிறப்பையோ இறப்பையோ அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்களின் புலம்பெயர்வு என்ற நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. முஸ்லிம்களின் காலக் கணிப்பிற்குப் பொருத்தமாக அமைந்து, உமர் (ரலி) அவர்களால் முடிவு செய்யப்பட்டது. இது எத்துணை உயர்விடத்தைப் பெற்றது என்பதும், எவ்வளவு பொருத்தமானது என்பதும் சிந்திக்கத் தக்கதாகும்.  

நபியவர்கள் ஏற்படுத்த முடிவு செய்த சகோதரத்துவ சமுதாய அமைப்பு மதீனாவில் அமைந்தபோது, நூற்றாண்டுகளாக நிலவிய பகையைக் களைந்து, அனைவரும் சகோதரர்கள் என்ற கொள்கையை உறுதியாக நிலைநாட்டியது.  அப்போதுதான் ‘பகைவர்கள்’ என்ற நிலை மாறி, ‘சகோதரர்கள்’ என்ற உணர்வு முகிழ்த்தது.  இந்தச் சாதனையானது, அல்லாஹ்வின் உதவியாலன்றி வேறு எந்தச் சக்தியாலும் அமைக்க முடியாத ஒன்றாக இருந்தது.  அதனால் அடிக்கடி, நபியவர்கள் அல்லாஹ்வுக்குத் தமது நன்றியை உரித்தாக்கினார்கள். குலம்  கோத்திரம் என்ற வேறுபாடுகளால் பிளவுபட்டு எதிரிகளாக இருந்த மதீனாவாசிகள், இஸ்லாம் வந்தபின் இப்போது சகோதரர்களானார்கள். இதனை அல்லாஹ் தனது மறை வாக்கு மூலம் மனிதர்களுக்குக் கூறினான்:

“இந்த உங்கள் சமுதாயம், (உண்மையில்) ஒரே சமுதாயமாகும்.  நானே உங்கள் இரட்சகனாவேன்.  எனவே, நீங்கள் என்னையே வணங்குவீர்களாக!”    (21:92)

“இந்த உங்கள் சமுதாயம், (உண்மையில்) ஒரே சமுதாயமாகும்.  நானே உங்கள் இரட்சகனாவேன்.  எனவே, நீங்கள் என்னையே அஞ்சுங்கள்.”               (23:52)

முன்பு அறியாமையில் மூழ்கியிருந்த அம்மக்களின் நிம்மதியற்ற, அமைதியற்ற, பாதுகாப்பில்லாத கடந்த கால வாழ்க்கையை நினைவூட்டி, இஸ்லாம் வந்த பின்னர் எவ்வாறு அவர்கள் அச்சமற்ற, நிம்மதியாக வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், அவர்கள் எத்தகைய உயர்வைப் பெற்றார்கள் என்பதையும் நினைவூட்டினான் அருளாளன் அல்லாஹ்:

“நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளுங்கள்.  பிரிந்துவிடாதீர்கள்!  நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகி, நரகப் படுகுழியில் விழும் நிலையிலிருந்த உங்களை, இதயங்களால் பாசத்துடன் ஒன்றிணைந்தவர்களாக்கிய வல்லோன் அல்லாஹ்வின் அருளை எண்ணிப் பாருங்கள். இவ்வாறு அல்லாஹ் தனது தெளிவான அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டி, உங்களை நேர்வழில் ஆக்கினான்.”  (அல்குர்ஆன் - 3:103)

அல்லாஹ், மேலும் கூறினான்:  “உங்கள் இதயங்களை அன்பு உணர்வினால் ஒன்றுபடுத்தினான். உலகில் உள்ள உங்கள் உடைமைகள் அனைத்தையும் செலவு செய்தாலும், இதயங்களை அன்பினால் இணையச் செய்ய முடியாது. அதைச் செய்ய வலிமை பெற்றவன் அல்லாஹ் ஒருவன்தான்.  திண்ணமாக, அல்லாஹ் வல்லமை உடையவனும் பேரறிவாளனும் ஆவான்.” (அல்குர்ஆன் – 8:63)

மக்காவிலிருந்து மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்து வந்த நபியவர்களுக்கு இந்த ‘இதயங்களின் இணைப்பு’ எப்படிச் சாத்தியமாயிற்று?  மக்காவில் இருந்த தம் சொத்து சுகங்கள், உற்றார் உறவினர்கள் மற்றுமுள்ள வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அல்லாஹ்வுக்காக என்றே விட்டுவிட்டு மதீனாவுக்கு வந்த ‘முஹாஜிரீன்’களுக்கு,  மதீனாவில் வாழ்ந்த ‘அன்ஸார்’களுடன் தோழமையை ஏற்படுத்தி, அவர்களோடு ஒவ்வொன்றிலும் பங்கு கொடுக்கச் செய்து, உண்மைச் சகோதரத்துவத்தை நிலைநாட்டினார்கள் பெருமானார் (ஸல்). அந்த நேரத்தில் மதீனத்து அன்சார்கள் நபியவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே!  ‘முஹாஜிரீன்’களுக்கு எங்கள் தோட்டம் துரவுகளிலும் பங்கு வைத்துக் கொடுத்தால் என்ன?” எனக் கேட்டார்கள்.

ஆனால், நபியவர்கள் சம்மதிக்கவில்லை.  தமது முதல் பரிந்துரையை அண்ணலார் ஏற்கவில்லை என்றான பின்னர், இன்னொரு பரிந்துரையையும் மதீனத்து ‘அன்ஸார்’கள் வைத்தார்கள்: “சரி, அப்படியானால் இந்த ‘முஹாஜிர்’ தோழர்களை எங்கள் தோட்டங்களில் வேலை செய்யவாவது அனுமதி தாருங்களேன்.  எங்களுடன் அவர்களும் இணைந்து வேலை செய்து, அதன் மூலம் கிடைக்கும் உற்பத்தியைச் சமமாகப் பிரித்தெடுத்துக் கொள்வோமே?” என்று கெஞ்சிக் கேட்டார்கள். இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.

அந்த அனுமதி கிடைத்தவுடன், மதீனத்து ‘அன்ஸார்’கள் தம் ‘முஹாஜிர்’ சகோதரர்களுடன் இணைந்து உழைக்க முடிவு செய்தார்கள்.  ஆனால், பணி செய்யத் தொடங்கிய பின்னர், ‘முஹாஜிர்’களைவிட ‘அன்சார்’களே கூடுதலாகப் பணி செய்தார்கள்! அதிலிருந்து கிடைத்த மகசூலை உளப்பூர்வமாக, இரண்டு சமமான பங்குகள் வைத்துத் தமக்கிடையில் பிரித்துக்கொண்டார்கள்!

இப்படித் தம்மை ஏற்றுக்கொண்டு, எல்லாவற்றிலும் சமமாகப் பங்கு வைத்துத் தரும் அருங்குணம் கொண்ட ‘அன்ஸார்’கள் போன்று வேறு எவரையும் தாம் கண்டதே இல்லை என்று மக்காவிலிருந்து வந்த ‘முஹாஜிர்’கள் நபியவர்களிடம் வியப்புடன் கூறினார்கள். பொருளாதாரத்தில் குறைந்த ‘அன்ஸார்’கள், தம் ‘முஹாஜிர்’ தோழர்களுக்கு ஆறுதல் கூறி, அரவணைத்துக் கொண்டார்கள்.  வசதி படைத்த ‘அன்ஸார்’களோ, அறுவடையில் சமபங்கு வைத்துக் கொடுத்துத் தம்முடன் தாராளத் தன்மையுடன் நடந்துகொள்கின்றனர் என்று நபியவர்களிடம் வந்து ‘முஹாஜிர்’கள் வியந்து கூறினார்கள். 

“இவர்களைப் போன்று வேறு எவரையும் நாங்கள் கண்டதில்லை!  இந்தத் தாராளத் தன்மையாலும், இந்த அரவணைப்பு மற்றும் ஆறுதல் கூறுவதிலும்,  மதீனத்து ‘அன்ஸார்’களைப் போன்று வேறு எவரையும் நாங்கள் கண்டதில்லை!  எம்மைவிடக் கூடுதலாக உழைத்து, எமக்குச் சரிசமமாக மகசூலைப் பிரித்துத் தரும் இவர்கள், நாளை மறுமையில் எல்லா நன்மைகளையும் எடுத்துக்கொண்டு, எங்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் செய்துவிடுவார்களோ என்று அஞ்சுகின்றோம்” என்றும் கூறி வியந்தார்கள்.

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்:  “இல்லை.  நீங்கள் நன்றி உடையவர்களாகவும், உங்கள் தோழர்களான இந்த மதீனத்து ‘அன்ஸார்’களுக்காகப் பிரார்த்தனை செய்பவர்களாகவும் இருக்கும்வரை, உங்களுக்கும் நன்மையுண்டு.” 

மூல நூலாசிரியர் கூறுகின்றார்:  அல்லாஹ்வே! எங்களுக்கு என்ன நேர்ந்தது? இன்றைக்கு உள்ள முஸ்லிம் சமுதாயத்தின் உண்மை நிலை எதிர்மறையாக அன்றோ உள்ளது!  அன்றைய மதீனத்துச் சமுதாயத்தின் சகோதரத்துவம், அன்புப் பிணைப்பு, ஒற்றுமைக்கெல்லாம் காரணமாய் இருந்தவர், அந்த இரு சமுதாயங்களுக்கும் தலைமை ஏற்று வழி நடத்திய வள்ளல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் அல்லவா, யா அல்லாஹ்?

அன்றிருந்த அந்தச் சகோதரத்துவமும் நட்புறவும் எங்கே சென்றுவிட்டன? அது என்றாவது ஒரு நாள் திரும்பி வருமா?  உன்னை நேசிக்கும் நாங்கள், உனது மார்க்கத்தை விரும்பும் நாங்கள், உன்னைச் சந்திக்கும்வரை, அழுது கண்ணீர் வடித்துக் கவலைப்பட்டு நிற்கின்றோம், அல்லாஹ்! இந்த நிலை, நாங்கள் உன்னைச் சந்திக்கும் மறுமை வரையா நீடிக்கும்? 

அதிரை அஹ்மது

1 Responses So Far:

sabeer.abushahruk said...

மதீனத்து அன்சார்களின் பண்பு இஸ்லாமியரின் அடையாளங்களில் ஒன்று என்பது தெளிவு.

அழகாக விளக்கினீர்கள்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு