Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மக்கள்தொகையா? மனிதவளமா? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2015 | , , ,

இந்திய வரலாற்றில் 1985, செப்டம்பர் – 26’ம் தேதி ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது என்ன?


இவையால்தான் அது இங்கே இல்லை... 

அவை இல்லை என்பதால்தான் இது எல்லாம் இங்கே இருக்கு...

என்பது தவறான புரிதல்.

ஓர் ஏழை எளியவனுக்கு, தன் வீட்டின் வாசலுக்கு முன்னாலுள்ள ஒரு பெரிய பாறாங்கல், இலகுவாக சென்றுவர இடைஞ்சலாக இருக்கிறது, . அதை அப்புறப்படுத்த இவனுக்கு போதிய பலமில்லை. அண்டை அயலாருடன் நட்புறவு பேணாததால் உதவுவார் எவருமில்லை. இப்படி ஆண்டுகள் உருண்டோட... ஒருநாள், அவ்வழியே வந்த ஒரு நிலவியல் விஞ்ஞானி ஒருவர், அந்த கல்லை சோதித்துவிட்டு, அது முழுக்க முழுக்க தங்கம் என்கிறார். மேலும், “இந்த பொக்கிஷத்தை விளங்காமல் ‘மதிப்பற்றது’ என்று தவறாக எண்ணி இத்தனை காலம் வெளியே போட்டுள்ளாயே, வீட்டினுள்ளே பத்திரப்படுத்தி உபயோகித்து செல்வந்தன் ஆக வேண்டியதுதானே?” என்கிறார்.

ஒரு நிமிஷம் எண்ணிப்பாருங்கள், அந்த ஏழை மனநிலையில்... இது போன்ற ஓர் அதிசயம்தான் 1985, செப்டம்பர் – 26 அன்று நடந்தது. அதுதான் என்ன?

மக்கள்தொகையில், 1950-ல் சுமார் 37 கோடியாக இருந்த நாம், 1960 –ல் சுமார் 45 கோடியாக மாறியபோது, அரசு “முக்கனிகள் மூன்றே நன்று” என்று பிரச்சாரம் செய்தும், 1970-ல் சுமார் 56 கோடியானோம். சளைக்காத அரசு “நாம் இருவர் நமக்கு இருவர்” என்றது. ம்ஹூம்... 1980-ல் சுமார் 70 கோடியாகிவிட்டோம். ‘விடமேட்டேண்டா’ என்று அரசும் “ஒளிமயமான வாழ்வுக்கு ஒன்றே நன்று” என்று சொல்ல ஆரம்பித்தது. அவ்வளவுதான் ஊடகங்களும், மக்களும், “அப்போ 1990-ல ஒண்ணுமே பெத்துக்க வேணாம்-னு சொல்லுவாகளோ” என்று கவலையுடன் கிண்டலடித்தன. இக்கிண்டலை மக்கள் மறந்துவிட்டாலும், துறை சார்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை உறுத்தி இருந்திருக்கும்போல..! உடனே ரூம்போட்டு சில ஆண்டுகள்(?) யோசித்ததன் விளைவுதான் 1985, செப்டம்பர்–26 ல் நடந்த அதிசயம். அது என்னன்னா...

‘அதை’, இந்த அதிகாரிகள் 'இரும்புமனுஷி' இந்திராகாந்தியிடம் சொல்ல பயந்தார்களா அல்லது அவர் ஏற்றுக்கொள்ளவில்லையா என்று தெரியவில்லை. ஆனால், பைலட்டாக இருந்து ‘திடீர் பிரதமரான’ ராஜீவ்காந்தியிடம் ‘அது’ சொல்லப்பட்டபோது அவர் அதை புரிந்து வரவேற்று உடனடி செயல்திட்டம் நிறைவேற உறுதுணையாற்றி அந்த அதிசயம் சாத்தியமாக கையொப்பமிட்டது என்னவோ பிரதமர் ராஜிவ்காந்திதான். அதன் விளைவாக, 1985, செப்டம்பர் – 26 அன்றுதான்...  

....அதுவரை ‘கல்வி அமைச்சகமாக’ இருந்து வந்தது... ‘மனித வள மேம்பாட்டு அமைச்சகமாக’ ஏற்றம் பெற்றது.

‘சரி, இதிலென்ன அதிசயம்?’ என்கிறீர்களா? இல்லை. என்ன காரணத்துக்காக மாற்றப்பட்டது என்பதில்தான் அதிசயம் அடங்கி உள்ளது. அதாவது... அன்றுவரை 'நாட்டு முன்னேற்றத்துக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது' என்று கருதப்பட்ட இந்திய ‘மக்கள்தொகை என்ற பாறாங்கல்’... 'இல்லை அது நம் நாட்டின் ஒரு பொக்கிஷ வளம் என்ற.... தங்கமலை’ என்று உணரப்பட்டது.  


----இந்த மனமாற்றத்தைத்தான் அதிசயம் என்கிறேன்.

“அதெப்படி மக்கள்தொகை, ‘மனிதவளம்’ என்ற ‘நாட்டின் ஒரு வளம்’ என்று கருதப்படும்?” என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு குட்டிக்கதை பார்ப்போம்.

ஒரு பெற்றோர்–(A) இருக்கின்றனர். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். வறுமையாலோ, கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலோ, பெற்றோரின் அறியாமையாலோ, சரியான வழிகாட்டப்படாததாலோ, பிள்ளைகளின் முயற்சியின்மை மற்றும் தவறினாலோ... அவர்களின் ஐந்து பிள்ளைகளுமே கல்வி அறிவற்றவர்களாக வளர்ந்து விட்டனர்.

இன்னொரு பெற்றோர்-(B) இருக்கின்றனர். ஓரளவு நடுத்தர வர்க்க அளவுக்கு செல்வம் இருந்ததாலோ, கல்வி பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்பட்டதாலோ, பெற்றோரின் கடும் உழைப்பினாலோ, சரியான வழிகாட்டலாலோ, பிள்ளைகளின் கடும் முயற்சியாலோ அவர்களின் ஐந்து பிள்ளைகளுமே கல்வி அறிவு பெற்றவர்கள் மட்டுமல்ல, நல்ல உயர்படிப்பு படித்து விஞ்ஞானியாக, மாவட்ட ஆட்சி அதிகாரியாக, மருத்துவராக, பொறியியல் வல்லுனராக, கல்லூரி பேராசிரியராக... என்று ஐவருமே பிரம்மானடமாய் உயர்ந்து விட்டனர்.

இன்னொரு பெற்றோர்–(C) பற்றி கடைசியில் பார்ப்போம்.

ஆக, 

முதல் பெற்றோர்–(A) நாட்டுக்கு விட்டது ‘மக்கள்தொகை’.! 

இரண்டாம் பெற்றோர்-(B) நாட்டுக்கு ஈந்தது ‘மனிதவளம்’.!

இப்போது புரிந்திருக்குமே?

'ஹலோ..'  

கொஞ்சம் பொறுங்க... ' 

ஒரு நிமிஷம்'  

பொறுக்க மாட்டீங்களே... அப்படி என்னதான் கேட்கனும்கறீங்க? சரி.. கேளுங்க.

“அவனவன் ஏழையாக சோத்துக்கே 'ததுங்கினத்தோம்' போடும்போது நாட்டுக்கு மனிதவளம் எப்படி கொடுக்க முடியும்?” 

---மிகச்சரியான கேள்வி...! 

இது நிச்சயமாக அரசே தீர்க்க வேண்டிய பிரச்சினை. அந்த ‘பெற்றோர்(A)-யின் பிள்ளைகளை எப்படி மனிதவளமாக மாற்றுவது’ என்பதுதான் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கிய பணி. அதற்கு அவர்கள் கையில் எடுத்த ஆயுதங்கள்தான் இலவச கல்வி, கட்டாய ஆரம்ப கல்வி, மதிய உணவு, சத்துணவு, முதியோர் கல்வி, இலவச பஸ்/ரயில் பாஸ், ஸ்காலர்ஷிப், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அஞ்சல்வழிகல்வி, மாலை கல்லூரி, பகுதிநேர கல்வி, தொலைதூர கல்வி, கல்வியை முழுத்தனியார் மயமாக்காமை, தாய்மொழிவழிக்கல்வி, அறிவொளி இயக்கம், அரசு மாணவர் விடுதி, ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம், குறிப்பாக கல்லூரி பேராசிரியர்களுக்கு யுஜிசி பே ஸ்கேல், இவ்வருடம் இயற்றப்பட்ட (6-14 வயது குழந்தைகளுக்கான) கல்வி உரிமை சட்டம் என்று இப்படி நிறைய சொல்லலாம்.

இவை எல்லாமே அன்று யோசித்ததன் விளைவுதான். அதாவது... மேம்பட்ட, தரமான, நவீன, சிறந்த கல்வி அறிவு ஒன்றுதான் மக்கள்தொகையை அது எவ்வளவு பெருகினாலும் மனிதவளமாக மாற்றிவிடும் என்ற முடிவு எடுத்ததன் விளைவுதான்.... இன்று நாம் காணும் இந்தியாவிற்கும் எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம். ‘வேலையில்லாத்திண்டாட்டம்’ என்ற ஒரு சொல்லை கேட்பது இப்போது அரிது. அதுதான் முக்கிய வித்தியாசம். எழுபதுகளில் பத்தில் எட்டு சினிமாக்கள்/நாவல்கள்/சிறுகதைகள் அதைப்பற்றித்தான் பேசும். இப்போது ஒன்று கூட அதைப்பற்றி பேசுவதில்லை. எல்லாருக்கும் வேலை கிடைத்துவிட்டதா? இல்லை.! ‘அதெல்லாம் கிடைத்துவிடும்... இது ஒரு பெரிய முக்கிய பிரச்சினை இல்லை’ என்ற அளவுக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகரித்து இருப்பதே, மக்களுக்கு தன்னம்பிக்கை தந்துவிட்டது. 

ஆக, Population Census-2010 -ல் மக்கள்தொகை அதிகரித்தால் ரொம்ப கவலை பட வேண்டியதில்லை. 

எத்தனையோ நாடுகள், மக்கள்தொகையை 'பெருக்க' எப்படியல்லாமோ முயற்சி எடுக்கின்றன தெரியுமா?

ரஷ்யாவில் அடுத்த பத்துவருஷ குறிக்கோள் மக்கள்தொகையையை எப்படி பெருக்குவது என்பதுதான்..!

சுவீடனில், சம்பளத்துடன் கூடிய 'மெட்டர்நிடி லீவ்' 16  மாதங்கள்..!

குழந்தை பெற்றால்... பிரான்ஸ்,இத்தாலி,ஜெர்மனி,போலந்து போன்ற நாடுகள், போனஸ் தருகின்றன...! அதுவே, ஜப்பானில்  இன்செண்டிவ் தருகிறார்கள்.

சிங்கப்பூரிலோ, முதல் குழந்தைக்கு 3000 டாலர். இரண்டாவதுக்கு... 9000 டாலர். அடுத்ததுக்கெல்லாம் 18000 டாலர் அரசு தருகிறதாம்.

ஆக, குழந்தையற்றவர்களுக்குத்தான் குழந்தையின் அருமை தெரியும். மக்கள்தொகை குறைந்து வரும் நாட்டுக்குத்தான் அதன் அருமை புரியும்.

'மக்கள்தொகைப்பெருக்கம்' என்றாலே அதன் தீமைகள் பற்றி மட்டுமே கேட்டும், பேசியும், படித்தும் எழுதியும் வந்து இருக்கிறோம். அதனால் ஏற்பட்ட நன்மைகள்தான்... மிக மிக அதிகம்...! ஆமாம்..! இப்போது நம் கண் முன்னே பார்த்துவரும் அனைத்து நவீன முன்னேற்றங்களும் மக்கள் தொகைப்பெருக்கத்தால் விளைந்தவையே என்பதை எப்படி மறந்தோம்? ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளுமே மக்கள்தொகையின் தாக்கத்தால் வந்த அத்தியாவசிய தேடல்தானே? தரைவழி, கடல்வழி, ஆகாயவழி வாகனங்கள், அச்சு இயந்திரம், தொலைத்தொடர்பு சாதனங்கள், தகவல்தொழில்நுட்பம், இணையம், விவசாயபுரட்சி (ஒரே நாளில் விதைத்து முளைத்து அறுவடை செய்யும் ஒரு புதுரக நெல்லும் வருங்காலத்தில் வரலாம் -- அது அப்போதைய மக்கள்தொகை பெருக்கத்தையும் அரிசியின் தேவையையும் பொறுத்தது)... என்று எல்லாமே மக்கள் தொகைப்பெருக்கத்தின் விளைவுகள்தான்.

இப்போது அந்த மூன்றாவது பெற்றோர்-(C) பற்றி பார்ப்போம்.

---இவர்களின் முந்தைய தலைமுறையே மனிதவளமாக மாறிவிட்டது. தற்போது நிறைய சம்பாதிக்கும் இவர்கள் பெரும்பணக்காரர்கள் அல்லது ‘கிம்பளம் வாங்கி கொழுத்த அப்பர் மிடில் கிளாஸ்’. இவர்கள் தங்களின் வாழ்க்கையை மிக மிக சொகுசாக, எல்லா விஷயங்களையும் மகிழ்ச்சியாக அனுபவித்து எந்த கவலையும் இன்றி பங்களாவில் வாழ்பவர்கள். இவர்களின் குழந்தைகளை கண்டிக்காமல், செல்லம் கொடுத்து வளர்ப்பார்கள். அவர்களோ, இந்த கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால், வீட்டில் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுவிட ஆபாசப்படம் பார்ப்பது, விபச்சாரம் செய்வது, ஓரினச்சேர்க்கை புரிவது, தினப்படி கிடைக்கும் கொழுத்த பாக்கெட் மணியால்... ஸ்கூலை கட்டடித்துவிட்டு சினிமா போவது, சிகரட், தண்ணி, போதை வஸ்து என்றும், இருபாலரும் இணைந்து படிக்கும் ‘மினிஸ்கர்ட் காவென்ட் பள்ளி’களில் ஆண்-பெண் நட்பு ‘கட்டாயமாகி’விட்ட இந்நாளில் கேர்ள்/பாய் ஃபிரன்டு என்று பைக்கில் வைத்துக்கொண்டு, பீச், தியேட்டர், டிஸ்கோத்தே, பார்ட்டி, ஹோட்டல், லாட்ஜ் என்று சுற்றி விட்டு வீட்டுக்கு எப்பவாவது தலையை காட்டுவது... என்று கண்காணிப்பின்றி-கண்டிப்பின்றி வளரும் குழந்தைகள், நாளை ஒருநாள், மருத்துவமனையில் எயிட்ஸ் வந்தோ, கர்ப்பக்கலைப்புக

்கோ வந்து படுத்துக்கொள்ளும் போதுதான் மேற்படி பெற்றோர்கள் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ஆனால், என்னபயன்? அவர்கள்தான் எப்போதோ தங்கள் மனிதவளத்தை... மக்கள்தொகையாக மாற்றி விட்டனரே..!

தங்கள் வேலையை சரியாக செய்யாமல் சொகுசு அனுபவிப்பதிலும் எந்நேரமும் காசு சேர்ப்பதிலுமே குறியாக இருந்த இப்பெற்றோருக்கு என்ன தண்டனை? மனிதவளத்தை மக்கள்தொகையாக மாற்றும் இப்பெற்றோரை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏன் கண்டுகொள்ள வில்லை? இதுபோன்ற பெற்றோர் & பிள்ளைகள் இருக்கும் குடும்பங்கள்தானே இப்போது பல்கி பெருகி வருகின்றன? நிலத்தடி தண்ணியைவிட டாஸ்மாக் தண்ணிதானே ஆறாக ஓடுகிறது தமிழ்நாட்டில்? முதலிரவுக்கு முன்பே ‘அதுபோல சில இரவுகளை’ பார்த்த மணமக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறதே? இதை இப்படியே கண்டும்காணாமல் விட்டால் நம் எதிர்கால இந்தியா இருண்ட இந்தியாவாகவல்லவா ஆகிவிடும்? இதனை எப்படி யார் தடுப்பது?

"மனிதவளத்தை மக்கள்தொகையாக மாற்றும் மேற்படி தீய காரணிகள் எல்லாமே இஸ்லாமிய மார்க்கப்படி நமக்கு ஹராம்... அதன் பக்கம் கூட நாம் செல்வதில்லை..". என்று முஸ்லிம்கள் நினைப்பீர்கள் என்றால்..., "அவற்றுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... அப்புறம் எதற்கு அத்தீய பக்கம் பற்றி இவ்வளவு கவலை நமக்கு...?” என்று அத்தீமைகளை பல காரணங்களால் வெறுத்த மற்றவர்கள் நினைப்பீர்கள் என்றால்...,ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்: பூவுடன் சேர்ந்த நார் மணக்குமோ மணக்காதோ (அது வாசமுள்ள பூவா என்பதை பொருத்தது)... நிச்சயமாக நெருப்புடன் சேர்ந்த நார் பற்றி எறியும்... அப்போது அதன் அருகிலே பூவாவது... மொட்டாவது...? எனவே, பிள்ளைகள் மீது விழிப்புடன் இருங்கள் பெற்றோர்களே...!

‘பல குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கை’களையும் தாண்டி(!?), கருவுற்று பிறந்த குழந்தைகளை ‘மக்கள்தொகை’யாக  நினைக்காதீர்கள். அதை ‘மனிதவளமாக’ மாற்ற முயற்சி செய்யுங்கள். அதற்காக கடுமையாக உழையுங்கள். தேவைக்கு பொருளீட்டுங்கள். போதவில்லை என்றால், அதிக ஊதியத்திற்கான பணியில் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அதேநேரம் குழந்தைகளையும் கவனித்து கல்வியறிவு ஊட்டி வளருங்கள். உங்கள் குழந்தைகள் மனிதவளமாவதும் மக்கள்தொகையாகிப்போவதும் உங்கள் முயற்சியிலும் உழைப்பிலும் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள், பெற்றோர்களே..!

முஹம்மத் ஆஷிக்

6 Responses So Far:

Ebrahim Ansari said...

குழந்தைகள் பசிக்கும் வயிறோடு மட்டும் பிறக்கவில்லை; சிந்திக்கும் மூளையுடனும் உழைக்கும் கரங்களுடனும் பிறக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

சீனர்கள் மக்கள் தொகையில் அதிகமாக இருந்தாலும் மனித வளத்தின் மேம்பாட்டில் மேம்பட்டு இருக்கிறார்கள். இருக்கும் மனித வளத்தை எவ்வாறு Optimum utilize செய்வது என்பதற்கு மத்திய மாநில அரசுகளிடம் செறிவான திட்டங்கள் இல்லை.

மாநாடுகளுக்கு ஆள் பிடிக்கவும் கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் குவார்ட்டர் வாங்கிக் கொடுத்து கூத்தடிக்கவும் இரசிகர் மன்றங்கள் வைக்கவும்தான் ஆளும் கட்சிகளும் எதிர்க் கட்சிகளும் இயக்கங்களும் முனைகின்றன.

மனித வள மேம்பாடு என்பது வாயளவில்தான் உள்ளது. முன்னேறத் துடிக்கும் முனைவோருக்கு தேவையானவற்றை செய்வதற்கு அரசு இயந்திரங்கள் முனைப்புக் காட்டாமல் சாதி மத இனம் பார்த்து அவர்களை முடக்கிப் போடும் இயல்பே பரவலாக இருக்கிறது.

நல்ல சிந்தனையைத் தெளித்துள்ள பதிவு.

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.ஆசிக்"யோசிக்"கும் படியான ஆக்கத்தை வழங்கியிருக்கிறார்.

sabeer.abushahruk said...

அருமையான ஆய்வு.
அறிவுகெட்ட அரசாங்கத்திடம் முன்னெடுத்துச்செல்ல வேண்டிய செய்தி!

Unknown said...

Assalamu Alaikkum

An excellent analysis on the positive side of having human resources. Its the postive perception to think human resources is strategic resource of a country or family. Viewing human as just head count is a negative.

Thanks and regards

B. Ahamed Ameen from Dubai.

Shameed said...

ராஜீவ் காந்தி நம் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் ராஜீவ் காந்திக்கும் இன்றைய பிரதமருக்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால் ராஜீவ் காந்தி பிரதமர் ஆகும் முன்பே விமானம் ஓட்டி உலகை சுற்றி வந்தார் இன்றைய பிரதமர் பிரதமர் ஆனதும் மக்களை மறந்து விமானத்தில் உலகை சுற்றி வருகின்றார்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு