Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நன்மைகளும் நம்பிக்கையாளரும் 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 18, 2015 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 19

இஸ்லாம் என்பது இயற்கையான, மனிதத் தன்மையின் இயல்போடு இணைந்து செல்லும் ஒரு வாழ்க்கை நெறியாகும்.  அது அசுத்தங்களுக்கு அப்பாற்பட்டது! வல்லமையும் மாண்புக்கும் மிக்க அல்லாஹ் (ஜல்) தன் அருள்மறையிலே கூறுகின்றான்:

“(நபியே!) உம்முடைய முகத்தை, தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ, அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் எத்தகைய மாற்றமும் இல்லை; இதுவே (சரியான) நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.” (1)

இத்தகைய இயற்கை வழியைப் பின்பற்றுகின்ற தன் அடியார்களின் தேவைகளை நிறைவேற்றித்தரும் பாரிய பொறுப்பை எடுத்துக் கொள்ளும் இரட்சகன், அந்த அடியார்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும்  எளிய வழிமுறையை இவ்வாறு இயம்புகின்றான்:

“என்னுடைய உயர்வுக்கு மதிப்பளித்து அதன் காரணமாக என்னைப் பணிந்து, எனது படைப்பினங்களிடம் கருணை கொண்டு, எனக்கெதிராகப் பாவம் செய்வதிலிருந்து விலகி இருந்து, என் நினைவிலேயே நாட்களைக் கழித்து ஏழைகளிடமும், பயணிகளிடமும், பலவீனமானவர்களிடமும் கஷ்டப்படுபவர்களிடமும் கருணை காட்டும் மனிதனின் துஆக்களை நான் (அப்படியே) ஏற்றுக் கொள்வேன்.” (2)

இத்தகைய நபித்தோழர்களுள் ஒருவர்தாம்  சலமா இப்னு அல்அக்வஉ (ரலி):

சலமா இப்னு  அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இறைவனின் இறுதித்  தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபிய்யாவை நோக்கிச் சென்றோம். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அங்கு தண்ணீர் குறைவாக இருந்ததால் எங்களுடைய ஐம்பது குர்பானி ஆடுகள் நீர் புகட்டப் படாமல் தாகத்துடன் இருந்தன.

அல்லாஹ்வின் அன்புத் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த கிணற்றின் சுற்றுச் சுவர்மீது அமர்ந்துகொண்டு பிரார்த்தித்தார்கள். உடனே கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்தது. உடனே நாங்கள் நீர் அருந்தினோம். எங்கள் கால் நடைகளுக்கும் நீர் புகட்டினோம்.

பின்னர், நம் நெஞ்சில் நிறைந்த நபிமணி (ஸல்) அவர்கள் அங்கிருந்த மரத்துக்குக் கீழே உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) வாங்குவதற்காக எங்களை அழைத்தார்கள். மக்கள் அனைவருக்கும் முன்பாக முதலில் நானே அவர்களிடம் சென்று உறுதிமொழி அளித்தேன். பிறகு ஒவ்வொருவராக வந்து உறுதிமொழி அளித்தனர்.

அப்போது என்னிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் கண்டார்கள். எனக்கு "சிறிய தோல் கேடயம்” ஒன்றை வள்ளல் நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். பிறகு என்னிடம் உறுதிமொழி பெற்றார்கள்.

மக்களில் இறுதி நபரிடம் அவர்கள் உறுதிமொழி பெற்றுக்கொண்டு இருந்தபோது, "சலமா! என்னிடம் நீ உறுதிமொழி அளிக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். நான், மக்கள் அனைவருக்கும் முன்பாகவும் மக்களில் பாதிப்பேராக இருக்கும்போதும்  தங்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டேனே, யா ரசூலல்லாஹ்" என்று சொன்னேன்.

"மீண்டும் ஒரு தடவை நீ உறுதிமொழி அளிப்பாயாக" என்றார்கள். நான் மூன்றாவது தடவையாக உறுதிமொழி அளித்தேன்.

பிறகு என்னிடம், "சலமா! உனக்கு நான் வழங்கிய உனது சிறிய தோல் கேடயம் எங்கே?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் அருமை நபியே! என் சிறிய தந்தை ஆமிர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார். அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லாமலிருப்பதை நான் கண்டேன். எனவே, அதை அவருக்குக் கொடுத்துவிட்டேன்" என்று சொன்னேன்.

அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதரின் முகம், அவர்களின் பளிச்சிடும் சிரிப்பால்  ஒளிவீசும் முழுமதியாய்ப் பிரகாசித்தது! மேலும், "நீர் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரைப் போன்றவர் ஆவீர். அவர் "இறைவா! எனக்காக ஒரு நண்பரைக் கிடைக்கச் செய்வாயாக! அவர் என் உயிரைவிட எனக்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அவரைப் போன்றே நீரும் உம்மைவிட உம் தந்தையின் சகோதரருக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்" என்று கூறினார்கள். (3)

அண்ணல் நபியவர்கள், அல்லாஹ்வின்  கட்டளைப்படி அச்சமூட்டி மக்களை எச்சரிக்கும் அதே வேளையில், இப்படிப்பட்ட நல்லவர்களுக்குச்   சுவனம் பற்றிய  நற்செய்திகளைத் தொடர்ந்து சொல்லி,   மறுவுலக நம்பிக்கையையும் அது பற்றிய மகிழ்ச்சியையும்  அளித்துக்கொண்டே   இருந்தார்கள்.

சத்திய மார்க்கமென்ற சோலையின் மலர்களுள் ஒருவரான சுஹைப் (ரலி)  அறிவிப்பதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தோழர்கள் ஆகிய எங்களுடன் ஒருமுறை அமர்ந்திருந்தபோது சிரித்தார்கள். பின்பு, “ஏன் சிரித்தேன் எனத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “ ஏன் சிரித்தீர்கள், எங்கள் நபியே?” என்று வினவினோம். அதற்கு அறிவுசால் நபி (ஸல்) அவர்கள் “இறை நம்பிக்கையாளனின் நிலையைக் கண்டு நான் ஆச்சரியப்படுகின்றேன். ஏனெனில், அனைத்து அம்சங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைந்துவிடுகின்றன”. அவன் நேசிப்பது நிகழ்ந்துவிட்டால், உடனே தன் இறைவனை நினைத்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி நவில்கின்றான். அது அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அவனுக்குப் பிடிக்காத ஓர் அம்சம் சம்பவித்தால் அவன் பொறுமையை மேற்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே ஆகிவிடுகின்றது.

ஆக, “அனைத்து அம்சங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைவது ஒரு முஃமினுக்கு அல்லாமல் வேறு யாருக்கும் இந்தப் பாக்கியம் கிடைப்பதில்லை! இதை எண்ணித்தான் நான் சிரித்தேன்” என்றார்கள்.(4)

முஃமின்களாகிய நாம்  எத்தகைய  பாக்கியம் பெற்றவர்கள் என எண்ணும்போது மெய் சிலிர்க்கிறது அல்லவா?

இறைவனுடன் ஒப்பந்தம்:

அறிவின் வளமும் ஆத்மார்த்தத்தின் வனப்பும் கொண்ட அருள்மறை குர்ஆனின் குரலைக் கேட்போம்: “உம் இறைவன், ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து; “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான்! நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்;

அல்லது, “இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே; நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)

அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.” (5)

இப்படி ஓர் உண்மை ஒப்பந்தத்தை இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும்   ஏற்கனவே நம் இறைவனுடன்  செய்து வைத்திருக்கும்போது, கருணைக் கடலாம் காருண்ய இரட்சகனைக் குறை கூற எந்த ஒரு மனிதருக்கும் அருகதை  இல்லை! இல்லவே இல்லை!

தனக்கு இணைவைக்காமல் ஏகத்துவக் கொள்கையில் வாழும்  தன் அடியார்கள் மீது, அல்லாஹ்வின் கருணை எத்தகையது என்பதையும் மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப் போகும் அளவுக்கு  இந்த இறை நம்பிக்கையாளர் பெற்றுக் கொள்ளும்   வெகுமதியையும்  இப்போது நாம் காணலாம்.

எழில்மிகு பண்பினர் ஏந்தல் நபியவர்கள் சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு கூறினார்கள்:

சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அப்போது, "இவர் செய்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரைவிட்டு நீக்கிவிடுங்கள்" என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, "நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன பாவத்தைச் செய்துள்ளாய்; மேலும், இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன பாவத்தைச் செய்துள்ளாய்" என்று கூறப்படும். அவரும் "ஆம்" என்று ஒப்புதல் கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் புரிந்துவிட்டிருக்கும் பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சிக்கொண்டிருப்பார். இந்நிலையில் அவரிடம், "நீ செய்த ஒவ்வொரு சிறு தவறுகளுக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு" என்று கூறப்படும். அப்போது அவர், "இறைவா! நான் இன்னும் பல பெரும் பாவச்செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!" என்று கேட்பார்.

இதைக் கூறும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன். (6)

இத்தகு நற்பேற்றை நமக்குத் தந்த அல்லாஹ்வுக்கு வாழ்நாள் முழுதும் நன்றியை சுஜூதிலேயே கழித்தாலும் போதாதல்லவா? நலமிகும் இஸ்லாத்தை இந்த நானிலத்திற்கே எத்தி வைத்த நாயகம் (ஸல்) அவர்களின் அடிச்சுவடுகளை அப்படியே அடியொற்றி வாழக்கூடிய நற்பேற்றை  வல்ல இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

ooooo 000 ooooo

ஆதாரங்கள்:
(1) அல்குர்ஆன்  30:30
(2) ஹதீத் குத்ஸீ
(3) ஸஹீஹ் முஸ்லிம் 3695 : சலமா பின் அல்அக்வஉ (ரலி)
(4) ஸஹீஹ் முஸ்லிம் 5726 : சுஹைப் பின் ஸினான் (ரலி)
(5) அல்குர்ஆன் 7:172
(6) ஸஹீஹ் முஸ்லிம் 314 : அபூதர் கிஃபாரி (ரலி)
தொடரும் இன்ஷா அல்லாஹ் …
இக்பால் M. ஸாலிஹ்

3 Responses So Far:

Unknown said...

'நபிமணியும் நகைச்சுவையும்' கட்டுரைத் தொடர் நூலுருவில் வெளியிடப்பெற்ற பின்னர், கீழ்க்கண்ட இடங்களில் விற்பனைக்கு உள்ளது:

தேவைக்கு அணுகவும்:
1 . பஷாரத் பப்ளிஷர்ஸ், அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை.
2 . சலாமத் பதிப்பகம், லிங்கிச் செட்டித் தெரு, சென்னை.
3 . தாருத் தவ்ஹீத், அதிராம்பட்டினம். தொடர்புக்கு: 9043727525 / 9894989230
குறிப்பு: புத்தக வியாபாரிகளுக்கு சலுகை விலையில் கிடைக்கும்.
- அதிரை நிருபர் பதிப்பகம்

Unknown said...

தற்போது கிடைத்துள்ள தகவல்படி, 'நபிமணியும் நகைச்சுவையும்' நூல், கீழ்க்காணும் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்:

1. சாஜிதா புக் செண்டர், தம்புச்செட்டித் தெரு, சென்னை.
2. திரீஎம் புக் செண்டர், அங்கப்ப நாயக்கன் தெரு, (ஈத்கா மஸ்ஜித் எதிரில்)

நூல் விவரம்: மொத்த பக்கங்கள் - 256
விலை: ரூ 150/-

sheikdawoodmohamedfarook said...

நல்லஅழகியஎளியதமிழில்கூறிய ஹதிஸ்விளக்கங்கள் படித்ததும் நெஞ்சில் பதிந்தது.ஹதிஸ்விளக்கங்களைதமிழ்மொழியில்எழுதும்தம்பிஇக்பாலின்மொழித்திறனுக்குஒருசபாஸ்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு