Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரமளானும் அதன் சிறப்புகளும் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 21, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)  ஒவ்வொரு வருடமும் நம்மை வந்து அடையும் புனித மாதத்தை வரவேற்பதில் மிக அதிக அளவில் நாம்  மகிழ்ச்சி  அடைகிறோம். இன்னும் சில தினங்களில் நம்மை வந்து அடைய இருக்கும் ரமளானைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)

நோன்பு சென்று போன சமூகத்தாருக்கும் கடமையாகி ஆரம்ப காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பை கடமையாக்கி இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

ரமளான் பிறை:

'ரமளான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி : 1906)

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:

'ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரி: 1898).

'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி :1899).

நோன்பும் உள்ளமும்:

நோன்பு பசியை உணரச்செய்கிறது. நல்ல பழக்கங்களை கற்றுத் தருகிறது. பிறருக்கு உதவும் எண்ணத்தை தாராளமாக வழங்குகிறது. மற்ற நேரங்களில் உதவும் எண்ணம் இல்லாதவர்கள் கூட நோன்பு காலங்களில் பிறருக்கு உதவி செய்யும் நிலைகளை காணமுடிகிறது.

எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து செய்தால் பழக்கமாகிவிடும். மற்ற நேரங்களில் மனிதர்கள் பல தவறுகளில் இருந்தாலும் நோன்புக் காலங்களில் எல்லாவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்கள். இப்படியே தொடர்ந்து கொண்டு இருப்பதால் (வருடா வருடம் நோன்பு வைப்பதால்) இறையச்சத்துடன் நோன்பு வைத்தவர்களின் கஞ்சத்தனம், தீய செயல்கள் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விட்டு அகன்று உள்ளத்தை தூய்மைபடுத்தி நல்லபழக்கத்தை கற்றுத்ததருகிறது புனித ரமளான் நோன்பு.

ரமளானின் சிறப்புகள்:

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் : 2:185)

'சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸஹ்ல் (ரலி) நூல் : புகாரி : 1896)

'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும் பானத்தையும் இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறினான்)' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி : 1894)

'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி : 1904)

நோன்பு திறப்பதும் ஸஹர் உணவும்:

சிலபேர் 2மணிக்கு ஸஹர் செய்து விட்டு தூங்கி விடுகிறார்கள். ஸஹர் நேரத்தில் ஸஹர் உணவை சாப்பிடுவதுதான் சிறந்தது.

நீங்கள் ஸஹர் செய்யுங்கள். ஏன் எனில் ஸஹரில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) (புகாரி,முஸ்லிம்)

எனது சமுதாயத்தினர் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தி ஸஹர் செய்வதைப் பிற்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர். (புகாரி,முஸ்லிம்)

குர்ஆன் ஓதுதல்:

திருக்குர்ஆனை ஐந்து வேளை தொழுத பிறகும் ஓதுங்கள். நேரம் கிடைப்பவர்கள் மற்ற நேரங்களிலும் ஓதுங்கள். நன்மையை வாரி வழங்கும் இந்த மாதத்தில்தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

இந்த மாதத்தில் குர்ஆனை முழுவதும் ஓதி முடித்து விட வேண்டும் என்பது சிலரின் நம்பிக்கை. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. (நிதானமாக குர்ஆன் முழுவதையும் ஓதி முடிக்கலாம்). அவசரப்படாமல் குர்ஆனை தெளிவாக நிறுத்தி நிதானமாக ஓதுவது மிகச்சிறந்த நன்மையை பெற்றுத்தரும்.

இரவுத்தொழுகை:

ரமளானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸலமா (ரலி) (புகாரி : 1147)

லைலத்துல் கத்ர்:

'மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.' (அல்குர்ஆன் 97:1-5)

'நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (புகாரி : 35)

'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (புகாரி : 1901)

'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) (புகாரி : 2017)

நோன்பில் பொய் பேசுவது:

நோன்பு வைத்துக்கொண்டு தம் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு இறைத்தூதரின் எச்சரிக்கை:

'பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி : 1903)

பாவ மன்னிப்பு:

'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின் முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) , நூல்: புகாரி : 2008)

'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின்இ முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி),நூல்: புகாரி : 2014)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை:

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

'ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி : 1782)

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்:

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். 'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்' என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2119)

முன்னேற்பாடுகள்:

ரமளான் மாதத்தில் அதிகமதிகம் அமல்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன்: ஷாபான் மாதத்திலேயே நம்முடைய எல்லா தயாரிப்புகளையும் செய்து கொள்ள வேண்டும். நாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் எதையும் தாமதப்படுத்தாமல் செய்து விட வேண்டும். சகோதரிகள் ரமளான் மாதத்திற்கு தேவையான மளிகைகடை பொருட்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு மசாலா, மாவுப்பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் பெருநாளைக்கு வேண்டிய துணிகளை இந்த மாதத்திலேயே எடுத்து வைத்துக்கொள்ளலாம். ரமளானில் வீண் அலைச்சல் இருக்காது.

சகோதரர்கள் நோன்பிற்கு வீட்டிற்கும், உறவினர்களுக்கும் பணம் அனுப்புவீர்கள் பணத்தை இந்த மாதத்திலேயே அனுப்பி நோன்புக்கு முன்பாகவே அனைவருக்கும் கிடைக்கும்படிச் செய்வது நல்லது. ஏனென்றால் நிறைய இடங்களில் பணம் எப்பொழுது வரும் என்ற சிரமத்தில் காத்திருப்பதை காணமுடிகிறது.

சகோதரிகள் கையில் பணம் கிடைத்தவுடன். நோன்பு நடுவில்தான் உறவினர்களுக்கு கொடுப்பேன் என்று பிடிவாதத்துடன் இருக்கிறார்கள். நோன்பு ஆரம்பிக்கும் முன்பே உறவினர்களுக்கு கொடுத்து விட்டால் அவர்கள் எதிர்பார்ப்பின்றி பட்ஜெட் போட்டு தேவையானதை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

நோன்பு காலங்களில் செய்யவேண்டியவை:

ஸஹரில் உணவை தயாரிக்கிறேன் என்று சிரமம் எடுக்காமல் தூங்குவதற்கு முன்பாகவே உணவை தயாரித்து வைத்துக் கொண்டு ஸஹரில் சூடு காட்டி சாப்பிடலாம்.

தினமும் மாவு பொருட்களை (சப்பாத்தி, புரோட்டா) தயார் செய்யாமல் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தயார் செய்து பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

நோன்புக் கஞ்சியை தினமும் தயாரிக்க வேண்டியதில்லை. இரண்டு நாளைக்கு தேவையானதை தயார் செய்து கொள்ளலாம்.

கடற்பாசி முக்கிய உணவாக இருக்கிறது. இதையும் இரண்டு நாளைக்குத் தேவையானதை தயார் செய்து கொள்ளலாம்.

சகோதரிகள் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு ஒரு தூக்கம் போட்டு விட்டு நோன்பு திறப்பதற்கு வேண்டிய அனைத்தையும் லுஹருக்கு முன்பாகவே தயார் செய்து வைத்து விட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில் பிரஷர் அதிகமாகி அவசர அவசரமாக சமைத்து படபடப்புடன் நோன்பு திறப்பதிலிருந்து பாதுகாப்பு பெறலாம். செய்து வைத்த உணவுகளை நோன்பு திறப்பதற்கு முன்பாக சூடு காட்டிக்கொள்ளலாம்.

நோன்பு வைத்துக்கொண்டு தொழாமல் பிள்ளைகள், பெரியவர்கள் சில இடங்களில் இருப்பதை காணமுடிகிறது. சகோதர, சகோதரிகள் கவனத்தில் கொண்டு அவர்களையும் தொழுபவர்களாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

ரமளான் மாதத்தில் சொர்க்கத்திற்கு செல்வதற்குரிய வழிவகைகள் நிறைய இருக்கின்றன. ஆகவே நாம் வருகின்ற ரமளான் மாதத்தின் நோன்பை முழுவதுமாக வைத்து வல்ல அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கான காரியங்களில் ஈடுபடுவோம்.

நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக இந்த ரமளான் மாதத்தை மாற்றி நோன்பை வைப்பதற்கும், அமல்களை அதிகம் செய்வதற்கும், நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்!.

ரமலானின் சிறப்பைப்பற்றி விரிவாக தொடராக வரவேண்டியது. நேரமின்மையால் விரிவாக எழுதமுடியவில்லை.

S. அலாவுதீன்

1 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Alavudeen,

Thanks for sharing Ramadan related thoughts.

Jazakkallah Khair

B. Ahamed Ameen from Dubai.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு