Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

போர்முனையின் பேரணியில் புன்னகை மன்னர்! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 16, 2015 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் - 

'அல்லாஹ் ஒருவன்தான்'  என்று சொன்னதற்காக சத்தியத் தோழர்கள் அன்று சந்தித்த சோதனைகளும் கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல! மக்காவின் குறைஷிகளால் கொதிக்கும் பாலை மணலில், தலைகீழாகக் கட்டிப்  பலிகொடுக்கப்பட்ட விலங்கைப்போல் தொங்கவிடப்பட்டார்கள். சுடுமணலில் கிடத்தப்பட்டு கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி  அவர்கள் நெஞ்சின்மீது பாறாங்கற்களை  ஏற்றிவைக்கப்பட்டு வதை செய்யப்பட்டார்கள்.

கயிறுகளாலும் சங்கிலிகளாலும் கட்டப்பட்டு, சித்தப் பிரமை பிடித்த பைத்தியங்களை இழுத்துச் செல்வதுபோல் தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டார்கள். இன்னும் சிலர், கனலாய்க் கொதிக்கும் நெருப்புக் கங்குகளின்  மீது நெடுஞ்சாண் கிடையாகக்  கிடத்தப்பட்டார்கள். அந்தக் கொடும் நெருப்பில் வயிற்றுத் தோல் கருகி, வயிற்றின் கொழுப்பு உருகி அதன் காரணமாகவே அந்த நெருப்புக் கங்குகள் அணையும்வரை தொங்க விடப்பட்டார் தோழர் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்கள்.  எழுதவே கூசிடும் இழிவான முறையில் அன்னை சுமைய்யா (ரலி) அவர்களைக் கொன்று விட்டுக் கொக்கரித்தான் கொடியவன் அபூஜஹில் என்பவன்!

இந்த அடாவடித்தனங்கள் எல்லாம் அத்துமீறிப் போனதால்தான் புண்ணியத்தின் திருவுருவர் பூமான் நபியவர்களும் அவர்தம் தோழர்களும் அந்நிய தேசத்தில் அகதிகளாய்க் குடிபெயர்ந்தார்கள். அங்கும் சென்று நிம்மதியாய் இருக்கவிடாமல் விரட்டி விரட்டிச் சென்ற குறைஷிகள் அகதிகளான முஸ்லீம்களை அழித்தொழித்துவிடும் நோக்கத்தில் ஒவ்வொரு முறையும் மதீனாவுக்கே சென்று போர் தொடுத்ததால் தான், தங்களின் பாதுகாப்புக்காக முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த வேண்டியது  காலத்தின் கட்டாயமானது!

அமைதிக்கான அறைகூவலே யுத்தத்திற்கான ஓர் ஆயத்தப் பணிதான்! போரை வெறுப்பதன் மூலம் சமாதானத்தை எவராலும் ஏற்படுத்திவிட முடியாது. மாறாக, யுத்தத்திற்கு ஆயத்தமாக உள்ள நிலையில் சமாதானத்தை உறுதிப் படுத்த இயலும். 'தீய சக்திகளை நிர்மூலமாக்கி இவ்வுலகில் அல்லாஹ் (ஜல்) நமக்கு அருளியிருக்கும் சத்திய மார்க்கத்தின் அடிப்படையிலான வாழ்வுரிமையை நம்மிடமிருந்து எவரும் பறித்துவிடாத வகையில் தடுத்து நிறுத்திவைக்க ஆயுதம் ஏந்துவதில் தவறில்லை' என்பதே ஏந்தல் நபி (ஸல்) யின் தெளிவுமிக்க கோட்பாடு ஆகும்.

இந்த மானுட வர்க்கம் முழுமைக்குமான  இறுதி நாள்வரை நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு துறைக்கும் சரியான வழிகாட்டும் ஓர் இலட்சிய நாயகராய் அல்லாஹ் (ஜல்) வால் அனுப்பப்பட்ட அருட்கொடையான அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்று மாண்புகள் போர்முனையின் நிர்வாகத்தில்  கூட எத்தகைய ஒப்பற்ற தன்மையையும் உயர் தரமான  மனித நேயத்தையும் கொண்டிருந்தன  என்பதைச்  சற்று காண்போம்.  

த்ரு யுத்தம்:

'வெற்றி அல்லது வீரமரணத்தின் வெகுமதியான சுவர்க்கம்' இரண்டுமே முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒன்றுதான்! எனவேதான் அறப்போருக்குத் தயாராகுமாறு வீரம் நிறைந்த வேந்தர் நபியவர்கள்  அழைத்தவுடன் "சிங்க நிகர் அன்சார்கள் சீறிக் கிளம்பினார்கள். புலி நிகர் முஹாஜிர்கள் புயலெனப் புறபட்டார்கள்".

படையினரை ஒழுங்குபடுத்தத் தொடங்கிய  தூய நபியவர்கள், கையில் ஓர் அம்புடன் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தவும் படையணியை நேர்படுத்தவும் வேண்டி வந்துகொண்டிருந்தார்கள். ஸவாத் இப்னு காஜியா (ரலி) என்ற நபித் தோழர் அணிவகுப்புக் கோடு தாண்டி சற்று வெளியே நின்றதால், "வரிசையில் நேராக நில்லும் ஓ ஸவாத்!" எனக் கூறியவாறு தமது   அம்பால் அவர் மார்பில் தட்டிய நல்லார் நபியவர்கள்  சரியாக அவரை நிற்க வைத்தார்கள்.

" ஓ, அல்லாஹ்வின் தூதரே!  எனக்கு வலியை நீங்கள் உண்டாக்கி விட்டீர்கள். நான் பதிலுக்கு, தங்களையும் அவ்வாறே செய்ய வேண்டும்" என்றார் ஸவாத்! சற்றே வியப்படைந்த நீதி  நபியவர்கள், சற்றும் தாமதிக்காமல், அம்பை ஸவாதின்  கையில் கொடுத்து, தம் சட்டையைத் திறந்து காட்டி 'நெருங்கி வந்து பழிவாங்கிக் கொள், யா ஸவாத்" என்றழைத்தார்கள். ஸவாதின் செய்கை தோழர்களால் ஜீரணிக்க இயலாத ஒன்றாகி நின்றது! மொத்தப் படையணியின் கண்களும் ஸவாதை இப்போது மொய்த்து நின்றன!

உடனே, அண்ணலாரின் பொன்னிற மார்பில் சாய்ந்த ஸவாத் (ரலி) தன் மென்மையான முத்தங்களால் திருத்தூதரின் திருமேனியைக் குளிரச் செய்தார்! ஆச்சர்யத்துடன், "உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியது எது  ஓ, ஸவாத்?" என்ற வேந்தர் நபி (ஸல்) யின் வினவலுக்கு; 

“என்னை மன்னியுங்கள், யா ரசூலல்லாஹ்!” இந்தப் போரில் நான் உயிர் பிழைப்பேனா என்று எனக்குத் தெரியாது! எனவே, வீரமரணத்தைத் தழுவுமுன், தங்களை முத்தமிட விரும்பினேன்! அதனால்தான் அவ்வாறு நடந்துகொண்டேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றார் ஸவாத் (ரலி).

தம்  மீது அளப்பரிய பரிவையும்  விசுவாசத்தையும் இவ்வாறு வெளிப்படுத்தி நின்ற தம்  அன்புத் தோழரின் பதிலால் மகிழ்ந்து மனம் நெகிழ்ந்து போன பெருமானார் (ஸல்) அவர்கள், சிரித்துக் கொண்டே அவரை ஆரத்தழுவி அன்புடன் ஆசீர்வதித்தார்கள்!

"அணி அணியாக வரக் கூடிய ஆயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்" (1)  என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி அட்சரம் பிசகாமல் நிறைவேறியது. ஆம்! போரில் பங்கேற்ற தோழர்கள் சொன்னார்கள். "பத்ருப் போரில்  சண்டையிட வேண்டும் என்றில்லை. நாங்கள் வாளை உருவிய மறுகணம் எதிரியின் தலை தெறித்து நிலத்தில் விழுந்தது!" அநியாயத்தையும் அக்கிரமத்தையும் ஆணவத்தையும் கொடுமைக்  குணமாய்க் கொண்ட வஞ்சகன் அபூஜஹில், மிருக வெறியன் உமைய்யா போன்ற குரூரத்தின் மொத்த உருவங்கள் எல்லாம் அல்லாஹ்வின் உதவியால் கொன்று வீசப்பட்டார்கள்!

ஹத் யுத்தம்:

தலைக் கவசத்தின் மீது தீக்கோழிச் சிறகைச் சொருகி இருந்த மாவீரர் ஹம்ஸா (ரலி) வும் சிகப்புத் தலைப்பாகை மல்யுத்த மாமன்னர் அபூதுஜானாவும் பேரீத்தங்குலைகளை வெட்டி அறுவடை செய்வதுபோல் எதிரிகளின் தலைகளைச் சீவி எறிந்துகொண்டிருந்தார்கள். உச்சி முதல் உள்ளங்கால்  வரை உடலெல்லாம் வீரம் தோய்ந்த உறுதிமிகு தோற்றத்தாரான ஹம்ஸாவின் புஜபலத்திற்கு முன்னால்,  எந்தக் கொம்பனாலும் அன்று  ஈடு கொடுக்க முடியவில்லை! ஆனால், மறைந்திருந்து விஷம் தோய்த்து  ஈட்டி எறிந்த வஹ்ஷியால் அங்கமெல்லாம் சிங்கத்தின் கம்பீரச் சாயல் கொண்ட மாவீரர் ஹம்ஸா (ரலி) வீர மரணம் அடைந்தார். மாமல்லர் அபூதுஜானா (ரலி)வும் சூறாவளியாகச் சுழன்றடித்து  எதிரிகளை நிர்மூலம் செய்த பின், தம் அத்தனை வீர தீரச் சாகசங்களையும் வெளிக்காட்டிவிட்டு ஷஹீதானார்.  அத்துடன், மிக அண்மையிலேயே திருமணம் செய்துகொண்ட புதிய மணமகன் ஹன்ழலா (ரலி), புலியெனக் களத்தில் புகுந்து எதிரிகளைப் பந்தாடி இறுதியில் வீர சுவர்க்கம் அடையப்பெற்றார்.

அந்நிகழ்வில், சுவனத்தின் தென்றலான அண்ணலாரின் கவனம் வானை நோக்கித் திரும்பியது. பறவைகள் பறந்து செல்வதைக் கூர்ந்து கவனிப்பதுபோல் பார்த்து  நின்ற பெருமானார் (ஸல்) அவர்கள், "உங்கள் தோழர்! ஹன்ழலா!  மேகத்து நீரை வெள்ளிக் கிண்ணங்களை வைத்து வானவர்கள் அவரைக் கழுவுகின்றனர்!"  'என்ன ஒரு புதுமை' என  யோசித்து நின்ற நபியவர்களி டம், பின்னர் அவர் மனைவி ஜமீலா சொன்னார்: 'அறப்போரில் மரணமென்பது சுவர்க்கத்தின் நுழைவாசல்' என்ற அறிவிப்பைக் கேட்டதுமே, 'போருக்குத் தாமதமாகிவிடும் என்று சாதாரணமாகத் தம்பதியர் மேற்கொள்ளும் குளிப்பைக்கூட நிறைவேற்ற நேரமெடுத்துக் கொள்ளாமல் போர்க் களத்தை நோக்கிப் பாய்ந்து சென்றார்' என் கணவர் ஹன்ழலா! என்று.

வீரத்தின் விளைநிலம் வேந்தர் நபி (ஸல்) அவர்கள் "வாட்களின் நிழலின் கீழ் சுவர்க்கமிருக்கிறது" என்பதைச் சும்மாவா சொன்னார்கள்?

இப்னு காமியா என்ற இழிவடைந்தவன், நம் தானைத் தலைவர் (ஸல்) அவர்களின் தலைக் கவசத்தை நோக்கிக் குறிவைத்துத் தாக்கியதில், அவர்களின் கவசத்தின் வளையங்கள் கன்னத்தில் புகுந்தன. காயம் உண்டானது! ஆனால், "முஹம்மது கொல்லப்பட்டார்" என்ற பொய்யான வதந்தியை, தப்பிச் செல்கையில் பரப்பிச் சென்றான் பொல்லாங்கு சூழ்ந்த அந்தப் பொறுக்கிப் பயல்! போர்க்களம் நிமிடத்திற்கு நிமிடம் அதன் உக்கிரத்தை உயர்த்திக் கொண்டே சென்றது.

பத்ருப் போரில் சிறைப் பிடிக்கப்பட்டு இரக்கமிகு நபியால் உயிர்ப் பிச்சை அளிக்கப் பட்ட உபை என்ற அயோக்கியப் பதர் போகிற போக்கில் , தனது  'அவ்த் என்ற குதிரை மீதேறி வந்து உன்னைக் கொள்வேன்' என்று நம் சத்தியத் தூதரிடம்  சவால் விட்டான். அந்தக் குடிகாரப் பயலை நோக்கி! 'அல்லாஹ் நாடினால், என் கையாலேயே நீ கொல்லப் படுவாய்!' என்றனர் உறுதியுடன் உண்மை நபியவர்கள். அதே அயோக்கியன் உபை இப்போது வந்து உஹத் மலைப் பள்ளத்தாக்கில் நின்று கொண்டு 'ஓ, முஹம்மதே! நீர் உயிரோடு இருப்பின் நான் பிழைக்காது இருக்க வேண்டும்' என்று சப்தமிட்டான்.

அவனை நோக்கி வாட்களைத் திருப்பிய  தோழர்களைக் கை சைகையால் தடுத்துவிட்ட சமுதாயக் காவலர்  (ஸல்) அவர்களுக்கு, கன்னத்தின் காயத்திலிருந்து இன்னும் குருதி கசிந்து கொண்டிருந்தது. குருதி கசிந்தாலும் தன் உறுதி கசியாமல்  "ஒட்டகம் தன் முதுகில் அமர்ந்திருக்கும் ஈக்களை உதறிவிட்டதைப் போல" தன்னைச் சுற்றி நின்ற  தோழர்களை உதறி விட்டுச் சடாரென எழுந்து நின்ற தன்னிகரில்லாத் தானைத் தலைவர் (ஸல்)  அவர்கள், நபித்தோழர் ஹாரித் இப்னு ஸிம்மா (ரலி) விடமிருந்து ஓர் ஈட்டியை உருவிப் புயலெனப் பாய்ந்து சென்றார்கள்.  நாயகத்தின் தீர்க்கமான துணிச்சலைக் கண்டு அசையக்கூட துணிவில்லாதவர்களாய் அசந்துபோய் நின்றனர் நபித் தோழர்கள்! உருவிய வாளுடன் ஓங்காரமாகப் பாய்ந்து வந்த அந்த வெறியன் மீது சற்றும் தாமதிக்காமல் நேருக்கு நேராக அவன் கழுத்தை நோக்கி ஈட்டியைப் பாய்ச்சினார்கள் சரித்திரம் போற்றும் சர்தார் நபியவர்கள். எதிர்பாராத ஈட்டித் தாக்குதலால் நிலைகுலைந்துபோன அந்த அடிமுட்டாள் பதறிப்போய், சின்னாபின்னமாகச் சிதறிப்போய்  கீழே விழுந்து உருண்டு புறண்டு புறமுதுகு காட்டி ஓடித் தொலைந்தான் அந்த இழிவடைந்த உமைய்யாவின் சகோதரன் உபை.

மக்கத்து மடையர்களின் பாசறையை அடைந்த அவன் 'முஹம்மது என்னைக் கொன்று போட்டார்' என்று கதறினான்! அல்லாஹ்வின் எதிரிகள் அவன் கழுத்துக் காயத்தை ஒன்றும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை! எனினும் உபை என்ற அந்த உன்மத்தன் இறக்குமுன்பு இறுதியாகச் சொன்னான். 'என்னை அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் கொல்வதாகக்  கூறினார். நிச்சயமாக, என் மீது அவர் காறித் துப்பி இருந்தால்கூட நான் செத்தே போவேன்!' என்று விரக்தியில் வெறுப்பாய்ச் சொன்ன அவன் போகும் வழியில் சரஃப் என்ற இடத்தில் விழுந்து செத்துத் தொலைந்தான்!

போரின் முடிவில் ஒரு நபித் தோழர் சொன்னார்: “நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏதேனும் ஒரு முடிவினை நோக்கித் தீர்மானமாக இறங்கிவிடக் கூடுமாயின், அவர்களுடைய துணிவுடமையோடு ஒப்பிடக் கூடிய துணிச்சல் வேறு எவருக்கும் கிடையாது! உண்மை! இது வெறும் புகழ்ச்சி இல்லை!”

வாள் வீரமும் வளர்ந்த ஞானமும் எல்லை கடந்தறியும் தொலை நோக்குப் பார்வையும்  ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆண்மையும் கொண்ட நம் தானைத் தலைவரைப் பற்றி, அலீய் இப்னு அபீதாலிப் (ரலி) சொல்கின்றார்: "அன்றைய தினம் பொறுமையின் சிகரம் பெருமானார் (ஸல்) அவர்கள், பொங்கிவரும் சீற்றத்தோடு போராட்டத்திலே குதித்து நின்றார்கள். போர் மூர்க்கம் பெறும்போது நாங்கள் பெருமானாரின் முதுகுக்குப் பின்னே அபயம் தேடிக்கொண்டே  போரில் மும்முரம் காட்டினோம்."

"இறைவழியில் போரிட்டு வெட்டப்பட்டவர்களை அல்லாஹ் (ஜல்) நன்கு அறிவான். தங்களின் காயங்களிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருப்பவர்களாக மறுமை நாளில் அவர்கள் எழுப்பப் படுவார்கள். அது ரத்தம் போன்றிருக்கும். ஆனால், அதில் கஸ்தூரி வாசம் கமழ்ந்து கொண்டிருக்கும்" என அமரர்கள் வாழ்த்திடும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்போடு உரைத்தார்கள்.

கழி யுத்தம்:

அரபுலக வரலாற்றிலேயே புதுமையான ஒரு போர்! நபித் தோழர் ஸல்மான் ஃபார்ஸி (ரலி) யின் அரிய யோசனையின்படி, புதுமையான நடைமுறையாக  அகழி வெட்டித் தற்காப்பு ஏற்படுத்திக் கொண்ட ஒரு  போர். பெருமதிப்புடைய பெருமானார்  (ஸல்) அவர்கள் இப்போரில் மிகக் கடுமையாக உழைத்தார்கள். நபியவர்களைச் சிலபோது முஹாஜிர்களுடனும் சில வேளைகளில் அன்சார்களுடனும் சில நேரம் மண்வெட்டியுடனும் சில நேரம் கூடைகளில் மண் சுமப்பவர்களாகவும் அவர்கள் எங்கும் எல்லோருடனும் கலந்து இருந்தமையைக் காண முடிந்தது!

அப்போது ‘ஜூஅய்ல்’ (சின்ன வெட்டுக்கிளி) என்ற பெயருடையவர்  பனீ  ழம்ரா கிளையிலிருந்து வந்து  இஸ்லாத்தைத் தழுவினார்.  தோற்றத்தில் மிக மிகச் சாமான்யனாக இருந்த அவரை அழைத்து அண்ணலார் "அம்ர்" (நீண்ட வாழ்வு) என்ற கருத்தாழமிக்க ஓர்  அழகிய பெயரைச் சூட்டினார்கள். அவரும் மற்ற நபித் தோழர்களோடு  இணைந்து அகழில் மண் தோண்டும் காட்சியைக் கண்ட ஒரு முஹாஜிர் நபித்தோழர்;

"அப்பாவி மனிதனுக்குப்  பேருதவி செய்தனரே எங்கள் அண்ணலார் 

'ஜூஅய்ல்' என்ற பட்டப் பெயரை அழகாய்  'அம்ர்' என்று மாற்றினரே!"

என அம்ருக்குப் பாடிக் காட்டினார்.  இதனைச் செவியுற்ற மற்ற நபித் தோழர்களும் அதனை மீட்டு ஒரு பாடலாகவே அமைத்துப் பாடி மகிழ்ந்தனர். சிரமப் பட்டு நாளெல்லாம் மண் சுமந்த அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி  நல்லதொரு  புத்துணர்ச்சி தந்து சிரிப்பூட்டுவதாக அமைந்தது. பெருமானாரும் அந்தப் பாடலில் 'அம்ர்' என்றும் 'உதவி' என்றும் இரு சொற்கள் வரும்போது அழுத்தம் கொடுத்து உச்சரித்தார்கள்.

பின்னர், நாவலர் நபியவர்கள்  வேறொரு பாடலை அங்கே அறிமுகம் செய்து வைத்தார்கள்:

"நீயல்லால் எமக்கெங்கே நன்னெறிகள் யா அல்லாஹ்!
தர்மங்கள் செய்தோமா! உன்னைத்தான் தொழுதோமா!

அடக்கினரே எதிரிகள் எம்மை! முனைந்தனரே கெடுக்கத்தான் எம்மை!
நாங்களோ மறுத்து நின்றோம்! எங்களுக்கு அருள்பொழிவாய் நீயே!

போர்க்களத்தில் உன் திருப் பெயரால்  பொருதக் கிளம்பிவிட்டோம்
உறுதிசெய் எம் பாதங்களை! இறுதிசெய் வெற்றியை எங்களுக்கே யா அல்லாஹ்!"

தூக்கத்தின் தந்தை: 

அந்த அன்சார் சிறுவனுக்கு வெறும் பதினாறு வயது! பெயர் ஸைத் இப்னு ஸாபித். ஆர்வத்தில் அவரும் அறப்போரில் கலந்துகொண்டார். கடின வேலைகளுக்கு மத்தியில் போர்க் களத்திலேயே சிறிது கண்ணயர்ந்து போனார். அவர் நண்பரான உமரா என்பவர் விளையாட்டாக ஸைத் உடைய மண்வெட்டியையும் கடப்பாரையையும் எடுத்து ஒரு மறைவான இடத்தில் ஒளித்து வைத்துவிட்டார். தூக்கம் கலைந்து எழுந்தபோது தன்  உபகரணங்கள் காணாதது அறிந்து சங்கடத்தில் வெட்கி நின்றார் ஸைத் இப்னு ஸாபித்!

சஹாபாக்களில் சிலர் சற்று நேரம் அவரைத் தேடி அலையவைத்து, சற்று நேரம் கழித்து, ஸைதின்  சாமான்களை எடுத்துக் கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி, அவருடன் விளையாட்டாகச் சிரித்து மகிழ்ந்தனர்!

அப்போது அங்கு வந்து அதை அறிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்புடன் ஸைதை நோக்கி,  இங்கே வாரும் "யா அபூருகத்" (தூக்கத்தின் தலைவனே!) என்று அழகாக அழைத்தார்கள்! இதே ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள்தாம், அருள்மறை ஏந்திவந்த அண்ணல் நபிக்கு அருளப்படும் 'வஹீ''யை உடனுக்குடன் பதிவு செய்துகொள்ளும் பெரும் பேற்றைப் பிற்காலத்தில் பெற்றவர்! அருள்மறை பற்றிய ஆழ்ந்த ஞானமும் அது அருளப்பட்ட காலமும் அறிந்திருப்பதில் முதலிடம் வகித்த முக்கியமானவர் என்பதால், அருள்மறையை ஒன்று திரட்டித்  தொகுத்து அளிக்கும் அரிய பொறுப்பை அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) தமது ஆட்சியின்போது, இவர் வசமே ஒப்படைத்தார்கள்!

தாயிஃப் முற்றுகை:

மக்கள் மனமறிந்து அவர்களைத் தமது இதயத்தால் ஆளும் மகோன்னதமான மக்கள் தலைவர் மாண்பு நபி (ஸல்) அவர்கள். சமூகத்தில் பெரும்பான்மைக் கருத்துக்கு மதிப்பளிக்கும் ஓர் உண்மையான ஜனநாயகவாதியாகத் திகழ்ந்தார்கள். திறமை மிக்க தலைமைத்துவம் என்பது மக்களுக்குத் தலைமை ஏற்றுச் செல்வது மட்டுமல்ல! சில சமயங்களில் மக்களைப் பின் தொடர்வதும் ஆகும் என்பதை நன்குணர்ந்த ஓர் யதார்த்தவாதியாகத் திகழ்ந்தார்கள் என்பதைக் கீழ்வரும் நிகழ்ச்சியில் காண்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டபோது, அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறைவன் நாடினால்  நாம் நாளை மதீனாவுக்குத் திரும்பிச் செல்வோம் என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு வருத்தமளித்தது!  அவர்கள்,  'இந்நகரை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா' என்று பேசிக் கொண்டார்கள். அனுபவம் வாய்ந்த ராஜதந்திரியான நபி (ஸல்) அவர்கள் மீண்டும் ஒருமுறை “நாம் திரும்பிச் செல்வோம்” என்று சொன்னார்கள். பிறகு தோழர்களின் தயக்கத்தைக் கண்டு, “சரி. உங்கள் விருப்பம்போல் நாளை முற்பகலிலேயே போர் புரியுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் முற்பகலில் போர் புரிய, அதனால் பலத்த காயங்களுக்கு ஆளானார்கள். அப்போது மீண்டும் மாண்பு நபி (ஸல்) அவர்கள், “இறைவன் நாடினால், நாளை நாம் மதீனாவுக்குத் திரும்பிச் செல்வோம்” என்றார்கள்.

தத்துவத்தின் முத்துச் சுடர் முஹம்மது  (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு இப்போது மகிழ்ச்சியை அளித்தது. அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு வையகம் போற்றும் வள்ளல் நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.(2) 

தாத்துஸ் ஸுலாஸில்:

அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார். இந்தப் போர் ஒரு கடுமையான குளிர் காலத்தில் நிகழ்ந்தது. “தாத்துஸ் ஸுலாஸில்” எனும் இப்போரின்போது, குளிர் மிக்க ஓர் இரவில் எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. அவ்விரவில் அக்கடுங்குளிரில் நான் குளித்தால், நான் செத்தொழிந்து போய்விடுவேன் என்று நான் அஞ்சினேன். ஆகவே, நான் குளிக்காமல் 'தயம்மும்' செய்து, எனது மற்ற தோழர்களுடன் சேர்ந்து நான் சுப்ஹுத் தொழுகையைத் தொழுதேன்.

இவ்வாறு நான் 'தயம்மும்' செய்து தொழுததை, பிற்பாடு என் தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று குறை கூறலானார்கள். ஈமானை  எத்திவைத்த கோமான் நபியவர்கள் என்னை அழைத்து, 'அம்ரே! குளிப்பு உனக்குக் கடமையாக இருக்க, உன் தோழர்களுடன் சேர்ந்து நீ தொழுதாயா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘அந்தக் கடுங்குளிர்தான் என்னைக் குளிக்க விடாமல் தடுத்துவிட்டது, யா ரசூலல்லாஹ்!’ அருளாளன் அல்லாஹ் (ஜல்) 'உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளவேண்டாம். திட்டவட்டமாக அல்லாஹ் உங்கள் மீது அன்புடையவனாக இருக்கின்றான்' என்று தன் அருள்மறையில் கூறுவதை நான் நினைத்துப் பார்த்தேன்.(3) ஆகவேதான், இவ்வாறு நான் செய்தேன்' என்று கூறினேன்.

இதைக் கேட்டதும் செம்மல் நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள். வேறு எதுவும் என்னைக் கண்டித்துச் சொல்லவில்லை! (4)

க்கா வெற்றி:

வெண்ணிறக் கொடி பட்டொளி வீசிப் பறக்க, பத்தாயிரம் வீரர்களோடு தன்னடக்கத்துடன்  மக்காவில் இறங்கிய வெற்றிகளின் வேந்தர் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு சொல்லொணாக் கொடுமைகளை இழைத்த அனைவருக்கும் சேர்த்து அவர்களுள் யாரும் எதிர்பாராத ஒரு பொது மன்னிப்பைப் பிரகடனப் படுத்தினார்கள். மக்களே, அறிந்து கொள்ளுங்கள். "மக்காவின் வெற்றி என்பது அதை வென்றவர்களுக்கு மட்டுமல்ல. அதில், தோற்றவர்களுக்கும் சேர்த்துத்தான்" என்பதைச் சொல்லாமல் சொல்லி அந்த அனைவரையும் அரவணைத்துக் கொண்டது  ‘பெருந்தன்மையின் பொருள் கூறும் அந்தப் பொதுமன்னிப்பு!’

இஸ்லாமிய வரலாற்றில் இறைத்தூதர் (ஸல்) அவர்களோ, இறை நம்பிக்கையாளர்களோ நடத்திக் காட்டிய எந்தப் போரை எடுத்துக் கொண்டாலும் சரி. எதிரிகள் ஆயுதங்களை எறிந்து விட்டு இணங்கிவிட்டால், அவர்களுக்கு எவ்வித இன்னலும் கொடுக்கப் பட்டதாகச் சரித்திரமே கிடையாது! என்ன கொடுமைகளை முஸ்லீம்களுக்கு இதற்கு முன்னர் அவர்கள் இழைத்திருந்தாலும் அவை மன்னிக்கப்பட்டன; மறக்கப்பட்டன! 

மக்கத்துவாசி ஒருவர் அப்போது அண்ணலைக் கண்டு, பயத்தால் நடு நடுங்கி நின்றபோது, அவரை அருகே அழைத்த கருணை நபி (ஸல்) அவர்கள், மிகுந்த அடக்கத்துடன், "பயப்படாதே! ஏன் நடுங்குகிறாய்? நானொன்றும் அரசனல்ல! காய்ந்த இறைச்சியை உண்டு வாழ்ந்த ஒரு சாதாரணப்  பெண்மணியின் மகன்தான் நான்! என்னிடம் பயம் வேண்டாம். அல்லாஹ்வைப் பயந்துகொள்!' என்றார்கள் வெற்றித் திருமகனார் வேந்தர் நபியவர்கள். இத்தகைய இனிய பண்புகளின் வழிகாட்டுதலிலும் மன்னிக்கும் மாண்பினாலும் தான் இஸ்லாம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போனது! 

பூக் யுத்தம்:

கி.பி. 630 ஆம் ஆண்டு பைசாந்திரியர்களை நோக்கிய இப்பெரும் படையெடுப்பில் சிரியாவை ரோமர்களின் பிடியிலிருந்து விடுவிக்க படைகொண்டு பகைவென்ற பார் போற்றும்  நபியவர்கள்  பெரிதும் முயற்சி எடுத்தார்கள். "எவனொருவன் இறைவழியில் அறப்போராட்டத்தை மேற்கொள்ளாமல், அதைத் தன் மனதளவில் கூட நினைக்காமல் இறந்துவிடுகிறானோ, அவன் நயவஞ்சகத் தன்மையின் ஒரு பகுதியைத் தன்னுள் கொண்டவனாகவே இறந்தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  நவின்றார்கள்.

தபூக் போரின்போது அவ்ஃப் இப்னு மாலிக் அஷ்ஜா என்ற நபித் தோழர், அண்ணல் நபி (ஸல்) அவர்களைக்  காணச்  சென்றார். அந்த நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  தோலினால் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட   குறுகலான  சுற்று வடிவக்கூடாரம் அமைத்து அதன் உள்ளே  உட்கார்ந்து இருந்தார்கள். அண்ணல் நபிக்கு ஸலாம் சொல்லி நின்ற அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி), அண்ணலின் அனுமதியை வேண்டி நின்றார். உடனே, அண்ணலார் அவரை  வரவேற்கத்  திரும்பி உள்ளே அழைத்தார்கள். கூடாரமோ மிகக் குறுகலானது! அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்களோ, சற்று நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஆதலால், அவர் கூடாரத்தில் தலையை மட்டும் நுழைத்து நின்றவாறு நபியவர்களைப் பார்த்துக் கேட்டார். நான் முழுமையாக உள்ளே நுழைந்து விடவா, யா ரசூலல்லாஹ்?'  என்றார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு, அந்தப் போர்க்களத்தின் சூடான சூழ்நிலையிலும் அவர் கேட்டு நின்ற விதம் சிரிப்பை வரவழைத்துவிட்டது. அண்ணலார் சிரித்துக் கொண்டே ஆமாம், நீ முழுமையாகவே உள்ளே வந்து விடு', என்றார்கள். உடனே, அவர் அந்தக் கூடாரத்திற்குள் நெளிந்து வளைந்து உள்ளே  நுழைந்து விட்டார். (5)

தங்களின் தூதுத்துவப் பொறுப்பில், ஆயுதங்கள் ஏந்திப் போராடும் போர்க்களத்தில், பகைவர்களை எல்லாம் அடக்கி வெற்றி காணும் மிகச்சிறந்த படைத் தளபதியாக இருந்தபோதிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்றும் அமைதியை நேசித்தவர்களாகவும் இது போன்ற யதார்த்தமான நகைச்சுவையைப் போர்க்களத்தின் பேரலையில் கூட ரசிப்பவர்களாவுமே இருந்தார்கள்.

"என் சமுதாயத்தின் ஒரு கூட்டம் எப்போதும் உண்மைக்காகப் போராடிக் கொண்டும் அநியாயக்கார எதிரிகளை வெற்றியடைந்து கொண்டும் இருக்கும். இது எதுவரையில் என்றால், அவர்களின் இறுதிக் கூட்டம் தஜ்ஜாலுடன் போரிடும்வரைத் தொடரும்" என்றருளினார்கள் இனிய நபியவர்கள். அத்தகைய மேன்மைமிகு கூட்டத்தினரில்  அல்லாஹ் ரப்புல் ஆலமீன்  நம்மையும் ஆக்கி அருள்வானாக.

o o o 0 o o o
ஆதாரங்கள்: 
(1) அல்குர்ஆன் : 8:9
(2) புஹாரி 4325 : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(3) அல்குர்ஆன் :4:29
(4) அபூதாவூத் 283: அம்ர் இப்னு ஆஸ் (ரலி)
(5) அபூ தாவூத் 4982: அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி)
தொடரும் இன்ஷா அல்லாஹ்.
இக்பால் M. ஸாலிஹ்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு