Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆவணத்தின் அடிப்படைகள் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2015 | ,

:::::: தொடர் - 29 ::::::

மக்காக் காஃபிர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, அதன் பின்னர், பாதுகாப்பைத் தேடி ஆஃப்ரிக்காவின் அபிசீனியாவுக்கும், அன்புடன் அழைத்த மதீனாவுக்கும் புலம்பெயர்ந்து சென்ற முஸ்லிம்கள் நிம்மதியான வாழ்வைத் தொடங்கியிருந்த நேரம் அது. ‘மதீனா ஒப்பந்தம்’ என்ற சமூகச் சமாதான ஆவணம் இயற்றப்பட்டு, ஓர் அமைதியான, சகோதரத்துவ அமைப்பு உண்டாகிய காலகட்டம் அது.  

இந்த அமைதிச் சூழல் ஏற்பட அடிப்படைக் காரணிகள் யாவை என்பதை மேலும் தெளிவாக ஆய்வு செய்யவேண்டும்.

1. அதைச் சட்ட வரம்பாக வகுத்தவர் முஸ்லிம்களின் தலைவரான நபியவர்கள்.  முஸ்லிம்கள் உள்படப் பல மதத்தவர்கள் கூட்டு வாழ்க்கை நடத்தி, பகையுணர்வை அகற்றி, அமைதியான சூழலில் வாழவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.  அதனால், நபி (ஸல்) அவர்கள்தாம் நீதிபதியாவார்கள்.  இந்த ஒப்பந்தத்தைக் கொண்டு  முடிவு காண முடியாத நிலை ஏற்படும்போது, மக்கள் அல்லாஹ்வின் வேதத்திலும் தூதரின் ‘சுன்னா’விலும் தேடிப் பெறுவது அவர்களின் கடமையாகும்.  இதற்குக் காரணம், மார்க்கத்தில் தீர்வு ஒன்றை எட்டவேண்டுமாயின், இறைமறையாம் குர்ஆனும், அதன் நடைமுறைச் சட்டமான நபிவழியும்தான் முதல் அடிப்படைகளாகும். உடன்படிக்கையில் குறிப்பிட்டிருந்த ஒரே மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்தாம்.  அதனால், முதல் அணுகுமுறை, நபிவழிச் சான்றாகும். அதிலிருந்து தீர்வு கிடைக்காவிட்டால், அருள்மறையை அணுக வேண்டும். நபியவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான உறவுமுறை யாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு மாற்றமாகத் தமது முடிவைக் கூறமாட்டார்கள். நபியவர்களின் முடிவு, குர்ஆனுக்குத் தொடர்புள்ளதாகவே இருக்கும்.

2. உலகில் ‘முஸ்லிம் உம்மத்’ என்பது ஒரே கட்டமைப்பை உடையதாகும். எனவே, முஸ்லிம்கள் அனைவரும் ஒரு பக்கத்திலும், மற்றவர்கள் அனைவரும் எதிர்ப் பக்கத்திலுமாக இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

3. இந்த உடன்படிக்கையில் யூதர்களுக்கு, அவர்களின் வணக்க முறைகளைச் செய்ய உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும், அவர்களுக்கு முஸ்லிம்கள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்ற உறுதி மொழியும் வழங்கப்பட்டுள்ளது.  இந்த வணக்க உரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பகரமாக, அவர்களின் ஆதரவையும் சரியான வழிகாட்டலையும் மதீனத்து யூதர்கள் முஸ்லிம்களுக்குக் கொடுப்பது கட்டாயமாகும்.  

4. இக்காலத்தில் எவரும் தன்னுடன் ‘பாஸ்போர்ட்’ இல்லாமல் தனது நாட்டை விட்டு அயல்நாட்டுக்குப் பயணம் செய்ய முடியாதல்லவா?  அது போன்றே, நபியின் உத்தரவின்றி, யூதர்கள் மதீனாவை விட்டு வெளியில் செல்ல முடியாது என்ற நிபந்தனையும் மதீனா ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுள் ஒன்றாகும்.

5. மக்காவுக்கு அடுத்த நிலையில், மதீனாவும் ‘ஹரம்’ எனும் புனிதமான இடமாகும்.  இதனால், இங்கே வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல், சண்டையிடுதல் கூடாது.

இவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டே அந்த ‘மதீனா ஒப்பந்தம்’ எழுத்துருவாக்கப் பட்டது. 

மக்காவில் பல்லாண்டுப் போராட்டத்தின் பின்னர், இப்போது மதீனாவில் அமைதியான வாழ்க்கைக்கு அடிப்படையான சட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன.  புதிய சூழலில் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட முஸ்லிம்களின் தலைவர், தொடக்கமாகத் தனது தலைமையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.  அதன் அடிப்படையில்தான் புதிய விதிகளையும் சட்டங்களையும் வகுத்துக் கொடுத்து, தமக்குக் கீழ் இருக்கும் சமுதாயம் நிம்மதியாக வாழ்வதற்கான வழிகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுக்க வேண்டும். இப்போது, அம்மக்கள் தலைவரைப் பின்பற்றி நடக்காமல், அவரால் வகுத்தளிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி வாழ்வார்கள்.  இந்தக் கருத்தின்படியே ‘மதீனா ஒப்பந்தம்’ உருவாக்கப்பட்டது.

தலைவரால் இயற்றப்பட்ட சட்ட விதிமுறைகள், அவ்வக்காலத்து மக்களுக்கும் அவருக்கும் பின்னர் இறுதி நாள்வரைப் பின்பற்றப்பட வேண்டும் என்ற நோக்கமே இம்மதீனா ஒப்பந்தத்தின் கருப்பொருள். இதைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.  இதுவே பெருமானாரின் வெற்றிக்குக் காரணமாயிற்று. மக்கள் பொதுவாக        அண்ணலாரைத் தலைவராக ஏற்றுக்கொண்டது, அவர்கள் பிரபலமான குறைஷிக் குலத்தில் பிறந்தவர் என்பதற்காக அன்று.  மாறாக, அவர்களிடம் இருந்த தலைமைத்துவத் தகுதிக்காகவே என்பது முற்றிலும் உண்மையாகும்.  அந்தத் தகுதியால் விளைந்த நன்மை, பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னும், இன்றுவரை அவர்களின் ஆணைகளும் சட்டங்களும் வெற்றி வாழ்க்கையின் வாசல்களாகத் திகழ்கின்றன. 

புதிய சட்டத்திற்கான தேவை, அந்தத் தலைவருக்குப் பின்னர் இஸ்லாமியச் சமுதாயத்தை வழி நடத்தத் தலைமை ஏற்று வரவிருந்த கலீஃபாக்களுக்கும் அதே சட்ட திட்டங்களைத் தம் ஆட்சியின்போதும் கடைப்பிடிக்கத் துணை நின்றது.  அண்ணலாரின் மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலீஃபா அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் தமது பதவி ஏற்புப் பேருரையின்போது இப்படிக் கூறினார்கள்:  “மக்களே!  நான் எதுவரை அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டு நடக்கிறேனோ, அதுவரை நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்.  அதற்கு மாறாக நான் நடந்தால், மேற்கண்ட இரண்டின் பக்கம் என்னைத் திருப்பித் திருத்துங்கள்.”

தமக்குப்பின் வரவிருந்த ஆட்சித் தலைவர்களுக்கும் அந்த முன்மாதிரி அமையவேண்டும் என்பதற்காகத் திறந்த மனத்தோடு உரையாற்றி, அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் தலைமையின் தகைமையை வரலாற்றில் பதிவு செய்தார்கள்.  உலகின் அரசர்கள் அனைவருக்கும் பொதுவான நிலைப்பாடு, தலைவர்கள் அனைவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதே.  ஆனால், இஸ்லாமியத் தலைவர் அல்லது அரசர் அப்படி இருக்க முடியாது.  அவர் தவறிழைத்தால், அவரும் சட்டத் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும் என்பதே இஸ்லாமிய நெறியாகும். இதுவே சட்டத்தின் ஆட்சி (Rule of Law) என்பது.  இது, உலகின் பல பகுதிகளில் காணப்படும் (Rule of Man) மனித ஆட்சிக்கு மாற்றமானதாகும்.

சட்டத்தை வகுத்துத் தந்து, அது தமக்குப் பின்னும் உலகில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்ற தூய எண்ணத்தை விதைத்துச் சென்ற ஒப்பற்ற தலைவரின் முன்மாதிரி ஆகும்.  உலகம் மதிக்கும் உயர் நீதிகளைச் சட்டமாக்கி, அதை எழுத்தில் வடித்து, மக்கள் அதைப் பின்பற்ற இலகுவாக்கி, தமக்குப் பின்னும் அதை நடைமுறையாக்கிச் சென்ற ஒப்பற்ற தலைவரின் உதாரணமாகும். 

‘உலகப் பந்தை உருலச் செய்வதே பணம்தான்’ (Money makes the world go around) எனும் புதுமொழியை இங்குக் குறிப்பிடுவது முழுமையாகப் பொருத்தமற்றதுதான். என்றாலும், உலகியல் நடைமுறைகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது, உண்மை போல் தோன்றுகின்றது.  அதனால், இந்தக் கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.  இஸ்லாமிய அடிப்படையில், பணத்தையும் பொருள்களையும் தந்து நம்மை இயக்குபவன் அல்லாஹ் ஒருவன்தான் என்ற அடிப்படையை உறுதியாகக் கொண்டு, உழைத்துப் பிழைப்பதே முஸ்லிமுக்குத் தகுந்ததாகும்.  இதை உறுதிப்படுத்தும் நிகழ்வுகள் நம் ஒப்பற்ற தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்துள்ளதை நம்மால் காண முடிகின்றது.

அவர்கள் எல்லா முன்னெச்சரிக்கைகளையும் எடுத்து, எல்லா விதத் தயாரிப்புகளையும் செய்து, அல்லாஹ்விடம் கையேந்தி, அவனுடைய அருளையும் உதவியையும் கேட்டார்கள்.  உலகில் பணம் சம்பாதிப்பதற்கு ஓர் எல்லையை இஸ்லாம் வரைமுறைப் படுத்தவில்லை.  மாறாக, அந்த முயற்சியில் என்னென்ன வழிகளைப் பயன்படுத்தலாம் என்பதைத் தெளிவாக விளக்குகின்றது.  பொருளீட்டளைப் பொருத்தவரை,  எந்த வழிகளில் சம்பாதிக்கலாம்; எந்த வழிகளில் அதைச் செலவழிக்கலாம் என்பதைத்தான் வழிகாட்டலாகத் தருகின்றது.  பிறரை ஏமாற்றிப் பொருள் சம்பாதிப்பதை இஸ்லாம் தடை செய்கின்றது.  இந்த வகையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உள்ள உணவுப் பொருள்களைப் பதுக்கல், அளவு நிறுவைகளில் கூடுதல் குறைவு முதலான ஏமாற்று வேலைகளைத் தடை செய்கின்றது இஸ்லாம்.  இவ்வாறு ஈட்டப்பட்ட செல்வத்தின் ஒரு பகுதி, ஏழை மக்களின் நலனுக்காகச் செலவழிக்கும் பொது தர்மம், ஜக்காத் போன்ற அறச்செயல்களில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுகின்றது. கடமையான அளவைக் கொடுத்து முடிந்த பின்னரும், மேலதிகமாகவும் ஏழை மக்களுக்குக் கொடுக்கச் சொல்லி ஆர்வத்தை ஊட்டுகின்றது இஸ்லாம்.

வாணிபம் செய்து இலாபம் பெறுவதை நபியவர்கள் ஒருபோதும் தடை செய்யவில்லை.  மாறாக, பத்தில் ஒன்பது பங்கு அருள்வளம் வியாபாரம் செய்வதில் உண்டு என்று ஆர்வம்  ஊட்டியுள்ளார்கள்.  இறைத்தூதரின் வரலாற்றில் இதற்கோர் எடுத்துக்காட்டு உண்டு.  மதீனாவில் பொருள்களின் விலையேற்றம் நிலவியது.  அதுபோது, அந்த விலை ஏற்றத்தையே அங்காடியின் நடப்பு விலை என்று நிர்ணயிக்கும்படி மக்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் பரிந்துரைத்தார்கள்.  அதற்குத் தாம் ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை என்று மறுத்துரைத்தார்கள் மாநபியவர்கள்!  மக்களையும் கவனமாகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தி ஆர்வமூட்டினார்கள். சமூகப் பொறுப்பை மனத்தில் இருத்திக்கொண்டு யாரும் எந்த வியாபாரமும் செய்யலாம் என்ற அங்காடிப் பொதுமையை (free enterprise) அறிவித்தார்கள்.  அப்படிச் செய்தால், மறுமையில் அல்லாஹ்வின் அருளைப் பெறலாம் என்றும் ஆர்வமூட்டினார்கள்.

இந்தச் சான்றை அடிப்படையாகக் கொண்டுதான், உலகளாவிய அமைப்பொன்று வெற்றி பெற வேண்டுமாயின், பொதுமையான தர்மப் பொருள் வசூலித்தலும், அதன் முறையான பிரித்து வழங்கலும் அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.  இந்தப் பொதுமையான தர்மப் பொருள் திரட்டலுக்கும், வசூலித்த பொருளை முறையாகப் பிரித்துக் கொடுப்பதற்கும் ஓர் உயர்மட்ட நிர்வாக அமைப்பு வேண்டும்.  உறுதியான தலைமையகம் வழங்கும் செயல் திட்டங்கள் அடிப்படையில் சமூகத்தின் ஒவ்வொரு துணை நிர்வாகமும் இயங்கவேண்டும்.  அப்போதுதான் அந்த அமைப்பின் உண்மை நிலை மக்களுக்குப் புலப்படும்;  பொருள் மிகைத்த செல்வந்தர்களும் ஆர்வத்துடன் உதவி செய்ய முன்வருவார்கள்.  இந்த வகையில், ‘பைத்துல் மால்’ போன்ற பொருள் திரட்டும் பொது அமைப்பு, எதிர்வரும் ஆண்டில் எவ்வளவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் திட்டங்களை வகுக்க முடியும்.  மேற்காணும் மூன்று பிரிவுகளும் ஒன்றிணைந்து இயங்கினால், அந்த அமைப்பு வெற்றியை நோக்கிச் செல்லும்; உலகில் உறுதிப்படும்.  இந்த நடைமுறைப்படிச் செயல்படாத மார்க்கமோ, இயக்கமோ பின்னடைவைத்தான்  சந்திக்கும் என்ற உண்மையை, அடுத்து வரும் கருத்தாய்வின் மூலம் நாம் பார்க்கலாம்.

அதிரை அஹ்மது

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு