Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2015 | ,

உலகில் தோன்றிய ஒவ்வொரு இனத்துக்கும் மொழிக்கும் சமுதாயத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. தங்களுடைய முன்னோர்களின் வரலாறுகளும் வாழ்க்கை முறைகளும் தற்கால சமுதாயத்துக்கு வழிகாட்டியாக நின்று விளங்கும். தங்களின் கடந்தகால வரலாற்றை மறந்த எந்த சமுதாயமும் தாங்கள் வாழும் நிகழ்காலத்தை நெறிப்படுத்தி வாழவோ எதிர்காலத்தை ஒளிமயமாக்கவோ இயலாது. அந்த வகையில் வரலாறு என்பது வாழும் சமுதாயத்துக்கும் வளரும் சமுதாயத்துக்கும் இன்றியமையாததாக இருக்கிறது. வரலாற்றில் இழைத்த நன்மையான காரியங்களை தொடர்ந்து செய்யவும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் வரலாற்று நிகழ்வுகள் படிப்பினையாக நின்று நிலவும். அந்த வகையில் இஸ்லாத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் மின்னலைப் போல் வெட்டி ஒளிவீசிய ஒப்பற்ற சில நிகழ்வுகள் – படிப்பினைகள்- தியாகங்கள் – நினைவை விட்டும் மாறாத சம்பவங்கள் ஆகியவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

*பெருமானார் நபி ( ஸல் ) அவர்களை பிடித்துப் போக வந்தவர்கள் :-

பாரசீகத்தை ஆண்ட மன்னன் கிஸ்ரா (Cbosreos Eparwz) என்பவனுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுத்து பெருமானார் (ஸல்) அவர்கள் கடிதம் எழுதி அனுப்பினார்கள் . இந்த அழைப்பு அந்த ஆணவம் பிடித்த மன்னனுக்கு ஆத்திரத்தைத் உண்டாக்கியது . பெருமானார் (ஸல்) அவர்களை கைது செய்து பாரசீக மன்னனின் அரசவையில் நிறுத்துமாறு தனது ஆளுமைக்குட்பட்ட எமன் நாட்டு கவர்னருக்கு உத்தரவிட்டான். யாரோடு மோதுகிறோம் என்று எண்ணிப்பார்க்காத அந்த எமன் நாட்டு கவர்னரும்  உடலால் பலம் பொருந்திய தனது  இரண்டு அடியாட்களை பெருமானார் (ஸல்) அவர்களின் சமூகத்துக்கு அனுப்பி அல்லாஹ்வின் அருள் தூதர்   அவர்களைக்  கைதுசெய்து வரும்படி அனுப்பிவைத்தான். 

மதீனாவுக்கு வந்து மாநபி அவர்களின் முன்னே தோன்றிய அந்த இரண்டு அடியாட்களும் பெருமானார் (ஸல்) அவர்களிடம் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறி வாயை மூடிக் கொண்டு தங்களுடன் வந்துவிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் பாரசீக மன்னனின் படையெடுப்பால் மதினா அழிக்கப்படும் என்றும் பயமுறுத்தினார்கள். இதைக் கேட்ட பெருமானார் (ஸல்) அவர்களின் இதழோரம் ஒரு புன்னகையின் கீற்று மட்டும் வெளிப்பட்டது. இந்த நிகழ்வைக்கண்டு கொண்டிருந்த சஹாபாக்களின் கரங்களோ தங்களின் கொடு வாள்களைத் தொட்டன. தனது தோழர்களை தனது பார்வையால் அமைதிப் படுத்திய பெருமானார் ( ஸல்) அவர்கள் ஏமன் நாட்டு ஏவலர்களைப் பார்த்து , “ நல்லது! இன்று போய் நாளை வாருங்கள் “ என்று சொன்னார்கள். 

இவ்வளவு இலகுவாக தாங்கள் வந்த வேலை முடியுமென்று எதிர்பாராத ஏமன் நாட்டினர் சரி என்று தலையசைத்து, அடுத்தநாள் பெருமானார் (ஸல்) அவர்களைக் கைது செய்து கட்டிக் கொண்டு போகும் ஆவலுடனும் ஆசையுடனும் அவர்களின் முன் தோன்றி, "என்ன தயாராக இருக்கிறீர்களா?" என்று கேட்டனர். உடனே பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி அந்த அவையில் இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆம்! எந்த ஆணவம் பிடித்த கிஸ்ராமன்னன் இறைவனின் அருள் தூதர் அவர்களிக் கைது செய்ய ஆணை இட்டானோ அந்த கிஸ்ரா மன்னன் நேற்று இரவே தனது மகனாலேயே கொலை செய்யப்பட்டுவிட்டான் என்கிற செய்தியே பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாகும். 

அவை அதிர்ந்தது. செய்தி எமன் கவர்னருக்குத் தெரிவிக்கப்பட்டு கிஸ்ரா மன்னன் கொல்லப்பட்டதாக பெருமானார் (ஸல்) அவர்களால் சொல்லப்பட்டது உண்மைதான் என்று உறுதிப் படுத்தப்பட்டது. அண்ணல் நபி ( ஸல்) அவர்களின் வாயில் இருந்த வந்த வார்த்தைகளின் வலு என்ன என்பதை வரலாறு குறித்துவைத்துக் கொண்டது. 

ஏமனிலும் இஸ்லாம் உள்ளச்சத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

*ஏழைகளின் பட்டியலில் இடம் பிடித்த கவர்னர்:- 

ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய வரலாறு காணும் மனிதர்களில் மறக்க முடியாதவர் ஆவார். ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் கலீபாவாக பதவி ஏற்ற பிறகு ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் பகுதியின் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். பதவிதான் கவர்னர் பதவி . ஆனால் அந்த பதவியின் சுகம் மட்டுமல்ல சாதாரண குடிமக்கள் அனுபவிக்கும் வாழ்க்கைச் சுகங்கள் எதையுமே அனுபவிக்காமலும் அவற்றை அரசு வழங்கியும் ஏற்றுக் கொள்ளாமலும் மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

கவர்னராக ஹிம்ஸ் பகுதிக்கு அனுப்பப்படும்போது அரசாங்க கஜானாவிலிருந்து கவர்னரின் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டுக் கொடுத்த சிறு தொகையைக் கூட ஏழைகளுக்கு தர்மம் செய்துவிட்டு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்க்கையை நடத்தினார்கள். 

இந்த நேரத்தில் , ஹிம்ஸ் வட்டாரத்திலிருந்துஒரு தூதுக்குழு கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்களை சந்திக்கச் சென்றது. அந்த தூதுக் குழுவிடம் உங்கள் வட்டாரத்தில் உள்ள பரம ஏழைகளின் பட்டியல் ஒன்றைத் தருமாறு கலிபா உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். கலிபா அவர்களின் கரங்களில் அத்தகைய ஒரு பட்டியல் தரப்பட்டது. 

அந்தப் பட்டியலில் முதல் பெயர் ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களுடையதாக இருந்ததைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அதிர்ச்சியுற்றார்கள். தனது சாம்ராஜ்யத்தின் ஒரு கவர்னரின் பெயர் பக்கீர்களின் பட்டியலா என்று அதிர்ந்தார். கவர்னரின் எளிய வாழ்வை அறிந்த கலிபா அவர்கள் கவர்னரிடம் தரும்படி கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பினார்கள்.

ஆனால் அந்தப் பணத்தை வாங்கி அனுபவிக்க மனமில்லாத கவர்னர் ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் தனது மனைவிடம் தன்னைத் தேடி இம்மையின் மோசமான பொருள் வந்திருக்கிறது அதை உடனே களைய வேண்டுமென்று சொல்லிவிட்டு அந்தப் பணத்தையும் ஏழைகளைத் தேடித் போய் பகிர்ந்தளித்துவிட்டு என்றும் போல தனது எளிய வாழ்வையே தொடர்ந்தார்கள். அல்லாஹ் அவர்களை நல்ல அடியார்களோடு பொருந்திக் கொள்வானாக. ஆமீன். 

*நினைத்ததும் நடந்ததும் வெவ்வேறு:-

இது ஒரு அழகிய வாழ்வியல் தொடர்பான வரலாற்று நிகழ்வு. ஒரு இளைஞருக்கு கல்விப்பசி அதோடு கூடவே வயிற்றுப் பசியும். பசி வந்திடப் பத்தும் பறந்து போய்விட்டது. இன்னொருவருக்கு சொந்தமான ஒரு ஆப்பிள் தோட்டத்துக்குச் சென்று ஒரு ஆப்பிள் பழத்தைப் பறித்து சாப்பிட்டுவிட்டார். 

வயிற்றுப்பசி நீங்கியது. ஆனால் மனசாட்சி உறுத்தியது. ஆப்பிள் தோட்டத்துக்கு சொந்தக்காரரைத் தேடித் போய் அவரிடம் உண்மையைக் கூறி மனம் பொறுக்கச் சொல்ல வேண்டுமென்று பல இடங்களில் அவரைத்தேடி அலைந்து கண்டுபிடித்து நடந்ததைக் கூறி அவரிடம் மன்னிப்புக் கோரினார். 

ஆனால் தோட்டத்தின் உரிமையாளரோ மன்னிக்க மறுத்தார். அத்துடன், "உனது தவறுக்காக மறுமை நாளில் அல்லாஹ்விடம் உனக்கு எதிராக வாதிடவும் செய்வேன்” என்றார். அந்த இளைஞர் மீண்டும் மீண்டும். “என்னை தயவு செய்து மன்னியுங்கள்” என்று கெஞ்சிக் கொண்டே இருக்க அவரோ எதுவும் பேசாமல் வீட்டினுள்ளே சென்று விட்டார்.

ஆனால் அந்த இளைஞரோ, வீட்டு வாசலிலேயே கால்கடுக்கக் காத்திருந்தார். பொழுதும் சாய்ந்தது இளைஞர் தான் நின்ற இடத்திலிருந்து நகரவில்லை. தோட்டக்காரர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் மீண்டும் மன்னிப்புக் கோரியதுடன், “ வேண்டுமானால் நான் செய்த தவறுக்காக உங்கள் வீட்டில் வேலைக்காரனாக இருந்து எனது பாவத்தைக் கழிக்க அனுமதியாவது தாருங்கள் “ என்று கேட்டான். 

இளைஞனின் தொடர் போராட்டத்தையும் முயற்சியையும் பார்த்த பெரியவர், 

“சரி! ஒரு நிபந்தனைக்கு நீ உடன்பட்டால் உன்னை மன்னிக்கிறேன் “ என்றார்.

"அப்பாடா!" என்று ஆசுவாசப்பட்ட இளைஞர் அதற்கு சம்மதித்து நிபந்தனையைக் கேட்டார். 

“எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளை நீ திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும் அந்த நிபந்தனைக்கு சம்மதமா?" என்று கேட்டார் பெரியவர். இளைஞனுக்கு கரும்பு தின்னக் கசக்கவில்லை. அந்தகனத்திலேயே, “ சரி” என்றான்.

பெரியவர் சொன்னார்., “ அவசரப்படாதே! என் மகளுக்கு சில குறைபாடுகள் உள்ளன. அவள் ஊமை! செவிடு! குருடு ! ஊனமுற்றவள் ! “ என்று சொன்னார். 

இளைஞர் அதிர்ந்தார். ஆனாலும் செய்த சிறு தவறுக்கு இறைவன் முன் மறுமையில் கை கட்டி நிற்க பயந்து அந்தப் பெண்ணை மணம் முடிக்க சம்மதித்தார். திருமண நாள் குறிக்கப்பட்டது. இளைஞரின் மனதிலோ சோகம். அவரது சோகம் நிறைந்த அகத்தின் அழகை முகம் காட்டியது. அதே நிலையில் திருமண ஒப்பந்தம் நிறைவேறியது. பெண்ணைக் கைப்பிடிக்க வீட்டினுள் நுழைந்த இளைஞருக்கு இன்னுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. 

தனது மனைவியாக ஏற்றுக் கொண்ட பெண்ணைக் கண்ட இளைஞர் ஆச்சரியப்பட்டுப் போனார். ஆம்! அவரின் முன்னே இருந்தது எவ்வித உடல் குறைபாடும் இல்லாத அழகான ஒரு பெண். 

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் ஊமையோ, குருடோ, செவிடோ , ஊனமுற்றவளோ அல்ல. எனக்காக ஒரு பொறுமைசாலியை- இறைவனுக்கு பயந்தவரை என் தந்தை தேடிக் கொண்டிருந்தார். ஒரு பழத்தைத் திருடி சாப்பட்ட காரணத்துக்காக நீங்கள் அல்லாஹ் வுக்கு பயந்து மன்னிப்புக் கோரி நின்ற விதம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. என் சம்மதம் வாங்கி உங்களை எனக்கு மணமுடித்துத் தந்தார்“ என்று அந்தப் பெண் சிரித்துக் கொண்டே சொன்னாள். 

“நான் ஹராமானதைப் பார்ப்பதிலிருந்து குருடானவள்! ஹராமனதைக் கேட்பதிலிருந்து செவிடானவள்! தீயவற்றைப் பேசுவதிலிருந்து ஊமையானவள்! தீய காரியங்களைத் தேடி நடக்காததிலிருந்து ஊனமுற்றவள்! மற்றபடி எனக்கு எந்தக் குறையும் அல்லாஹ் உதவியால் இல்லை" என்றும் கூறினாள். 

இந்த இரு நல்லவர்களுக்கும் பிறந்த மகன்தான் இமாம் அபூஹனிபா ரஹ்மாஹூமுல்லா அவர்கள். 

எறும்புக் கூட்டமும் பறவையும் எத்திவைத்த இஸ்லாம் :- 

திருமறையின் அந்நம்ல் என்கிற 27 ஆம் அத்தியாயம் பல வரலாற்று நிகழ்வுகளைச் சொல்கிறது. குறிப்பாக நபி சுலைமான் ( அலை ) அவர்கள் தொடர்பான இரு வரலாற்று சம்பவங்கள் படிக்கும் நமக்கு படிப்பினை தருவதாகும். 

ஒரு முறை சுலைமான் ( அலை ) அவர்கள் தனது படைகளுடன் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு எறும்பு, தனது கூட்டத்தின் மற்ற எறும்புகளைப் பார்த்து “எறும்புகளே! நீஙகள் உங்கள் புதருக்குள் புகுந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களைத் திண்ணமாக மிதித்து விட வேண்டாம்” எனக் கூறியது. ( 27: 17-18)

இந்த சம்பவம் நமக்கெல்லாம் ஒரு படிப்பினையாகும். ஒரு ஐந்தறிவுள்ள எறும்பு தனது இனத்தைச் சேர்ந்த அறியாமையில் உள்ள எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை நாம் இதன் மூலம் உணரவேண்டும். ஒரு எறும்புக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு இருக்கிறதா என்று இந்த வரலாற்று சம்பவத்தை வைத்து நாம் சிந்திக்க வேண்டும். 

நமது சமுதாயத்தின் சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் போது நாம் அவற்றைத் தடுக்காமல் இருக்கலாமா? அப்படி இருந்து விட்டால் எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா மனிதர்களாகப் படைக்கப்பட்ட நாம் சென்று விடுவோம்.

அதே அத்தியாயம் மற்றுமொரு வரலாற்று நிகழ்வையும் கூறுகின்றது. சுலைமான்(அலை)அவர்கள் தனது படையைப் பார்வையிட்டுக் கொண்டு வரும்போது வழக்கமாக இருக்கும் “ஹுத்ஹுத்” என்ற பறவையைக் காணவில்லை. இந்தப் பறவை தாமதித்து வந்து அதற்குரிய காரணத்தைக் கூறாவிட்டால் அதைக் கொன்று விடுவேன்; அல்லது கடுமையாகத் தண்டிப்பேன் என்று கோபத்தோடு கூறினார்கள். அடுத்தநாள் அந்தப் பறவை வந்து சுலைமான் (அலை) அவர்கள் முன் ஆஜராகி தான் வர இயலாத காரணத்தைத் தெரிவித்தது.

"நீங்கள் அறியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்துள்ளேன். ஸபாவில் இருந்து உறுதியான ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். அந்த மக்களை ஒரு பெண் ஆட்சி செய்கிறாள். அந்த நாட்டில் சகல வளங்களும் காணப்படுகின்றன. மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்குண்டு. அவளும் அவளது சமூகமும் ஒரே அல்லாஹ்வை வணங்காமல் சூரியனை வணங்குகின்றனர். ஷெய்த்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அழகாக்கி அவர்களை நேர்வழியைவிட்டு தடுத்துவிட்டான். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டாமா? என்று கூறியது. ( 27: 20-26)

பறவை தந்த இந்தத் தகவலைக் கேட்ட சுலைமான் ( அலை ) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு, இஸ்லாத்தின்பால் இணையும் அழைப்பைக் கொடுத்து தஃவா செய்து, அந்தப் பெண்ணும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தில் இணைந்ததை திருமறையின் இந்த அத்தியாயம் எடுத்துக் காட்டுகிறது. 

ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதைக் கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. தனது இனத்தை அழிவிலிருந்து எச்சரிக்கை செய்து காப்பாற்ற வேண்டுமென்று ஒரு எறும்புக்குத் தோன்றியுள்ளது. நமது சகோதரர்களில் பலர் அறிந்தும் அறியாமலும் மார்க்கத்துக்கு விரோதமான செயல்களிலும் மார்க்கம் தடுத்த காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய வரலாற்று செய்திகளை நமது மக்கள் நிறைய அறியவேண்டும்; அறிந்து உணரவேண்டும்; அறிவுஜீவிகள் உணர்த்த வேண்டும். 

இஸ்லாமிய வரலாற்றுக் கடலில் மூழ்கி எடுத்த சில முத்துக்களே இவைகள். இதே போல் எண்ணற்ற வரலாற்றுச் சம்பவங்கள் பாடங்களாகவும் படிப்பினைகளாகவும் காணப்படுபவற்றை நாம் தேடித் தேடித் படிப்பதுடன் அவற்றை நமது வாழ்விலும் அமல் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக!

இப்ராஹிம் அன்சாரி

7 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இஸ்லாமிய வரலாற்றுக் கடலில் மூழ்கி எடுத்த சில முத்துக்களே இவைகள். இதே போல் எண்ணற்ற வரலாற்றுச் சம்பவங்கள் பாடங்களாகவும் படிப்பினைகளாகவும் காணப்படுபவற்றை நாம் தேடித் தேடித் படிப்பதுடன் அவற்றை நமது வாழ்விலும் அமல் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக!///

மாஷா அல்லாஹ் ! வரலாறு என்று வந்து விட்டால் தங்களின் எழுத்தோவியத்தின் ஆளுமையும் ஆய்ந்து எடுத்துரைக்கும் பாங்கும் அற்புதம் !

நிறைவில் தாங்கள் குறிப்பிட்டது போன்றே... வரலாற்றுக் கடலில் மூழ்கி எடுத்த சில முத்துக்களே பதிவில் வாசித்தவைகள் இன்னும் எண்ணற்ற சம்பவங்களை தேடியெடுத்து பாடிப்பினைகளை பெறுவது நமது அவசியத் தேவையும் நமது வாழ்வில் செயல்படுத்தவும் அல்லாஹ் அருள்புரிவானாக !

sabeer.abushahruk said...

//நமது சமுதாயத்தின் சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் போது நாம் அவற்றைத் தடுக்காமல் இருக்கலாமா? //

இருக்கக் கூடாது. தடுத்தே ஆக வேண்டும். நபி வழியும் அதுதான். நம்மால் இயன்ற அளவில் எதிர்வினையாற்றியே தீர வேண்டும்.

அருமையான பதிவு.

நன்றியும் துஆவும் காக்கா

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sheikdawoodmohamedfarook said...

//பெரியவர்சொன்னார்அவள்ஊமை,செவிடு.குருடு,ஊனமுற்றவள்//இந்தக்காலத்து பிள்ளைகளாக இருந்தால் ''கேவலம் ஒரு ஆப்பிலுக்காக இவ்வளவுகுறைபாடுள்ளஉன்மகளைஎன்தலையில்கட்டப்பார்க்கிறாயா? நான்என்னஇளிச்சவாயனா?உன்மகளைகரைசேர்க்கவேண்டுமானால் ஆப்பில்தோட்டம்முழுவதையும்என்பேருக்குபத்திரம்முடிச்சுகொடு கல்யாணம்முடிக்கிறேன்?''என்பார்கள்

sheikdawoodmohamedfarook said...

நீண்டதூக்கத்துக்குபிறகுஎழுந்துவந்துஎழுதியஇந்தஆக்கத்தில்புதுசுவையும்தெளிவும்தென்படுகிறது.தடைஇன்றிவண்டிஓடட்டும்.எதற்கும்தலையில் ஹெல்மெட்அணிந்துகொள்ளவும்.ஆம்பூர்கலவரத்தால்ஆங்காங்கேபோலீஸ்நிக்கிறது.

sheikdawoodmohamedfarook said...

//ஒருசாம்ராஜ்யத்தின்பக்கீர்களின்பட்டியலில்ஒரு கவர்னரின் பெயரா"? என்றுஅதிர்ந்தார்கள்//இன்று அதேபட்டியல் வந்தால் ஹார்ட் அட்டாக்கில் போயேவிடுவோம்.இன்றையஆக்கம்மூச்சைபிடித்துஆழ்கடலில்மூழ்கிஎடுத்தஆணிமுத்து.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்

கருத்திட்ட நான்கு நல்லவர்களுக்கும் நன்றி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு