Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சீனி சக்கரை சித்தப்பா சீட்டிலே எழுதி நக்கப்பா – எபிசோட் எண் இரண்டு 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2015 | , , , , , ,

தமிழ் மொழியில் தலையாயதும் அழகானதும் உணர்வுபூர்வமானதுமான வார்த்தை என்ன என்று கேட்டால் “அம்மா “ என்றுதான் அனைவரும் சொல்வார்கள். இன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை “ அம்மா” என்கிற வார்த்தைக்குப் பொருளும் புகழும் சக்தியும் - அந்த வார்த்தையின் உண்மைப் பொருளைவிடவும் - அதிகமாகும். காரணம் தமிழகத்தின் முதல்வரின் பெயர் செல்வி ஜெயலலிதா என்று சொல்பவர்களைவிட அம்மா என்று சொல்பவர்கள்தான் அதிகம். அம்மா என்றால் என்ன என்று யாராவது கேள்வி எழுப்பினால் அடிமைப் பெண் என்ற திரைப்படத்தில் இன்றைய தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது சொந்தக் குரலில் பாடிய ஒரு முழுப் பாடலையே நாம் பதிலாகக் சொல்லாம்.

“அம்மா என்றால் அன்பு
      அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி “

- என்று தொடங்கும் அந்தப் பாட்டில்

“அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
          அம்மா என்றொரு சொல்லில் உண்டு
பத்துத் திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை
          பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்தியமிருந்துக் காப்பாள் தன்
          ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுப்பாள் ” 

என்றெல்லாம் செல்வி ஜெயலலிதா  அம்மாவின் தன்மைகளைப் புகழ்ந்து பாடி இருப்பார்.

இவர் இப்படிப் பாடாவிட்டாலும் கூட ,  உலகில் பிறந்த அனைவரையும் அன்பால் கட்டிப் போடும் ஒரு மந்திரச் சொல்தான் அது . அம்மா என்கிற வார்த்தைக்கு இவ்வளவு மகிமை ஏற்படக் காரணம் அம்மா என்பவள் ஒரு ஒப்பற்ற தியாகி; இருக்கும் பிடி சோறும் தனக்கென எண்ணாமல் பிள்ளைக்கு ஊட்டி மகிழ்கிற தேவைதை அவள்; ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம் அம்மாவை வாங்க முடியாது. இரண்டு நிமிடம் கூட இறக்கிவைக்க இயலாமல் அந்த சுமையை பத்துமாதம் சுமந்து பெற்று பாலூட்டி வளர்ப்பவள் அம்மா. பெற்ற பிள்ளைகளிடம் பாசமுள்ள அம்மா பொய் சொல்ல மாட்டாள்; பெற்ற பிள்ளைகளை பாசமுள்ள அம்மா ஆசைகாட்டி மோசம் செய்ய மாட்டாள். பெற்ற பிள்ளைகளை அம்மா பேணி வளர்க்க தன்னையே தியாகம் செய்வாள். பிள்ளைகள் கேட்பதையும் கேட்காததையும் கூட குருவி,  கூட்டில் வாழும் தனது  குஞ்சுகளுக்கு இரை தேடிக் கொடுப்பது போல் கொடுப்பாள். கோழி தனது குஞ்சுகளை தனது இறக்கைகளுக்குள் அணைத்துப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாள்  அவள்தான் அம்மா; உண்மையான அம்மா.

மேற்கண்டவைகள் சுருக்கமாக,  பொதுவான அம்மாமார்களுக்குரிய அழகான தன்மைகள்; உண்மைகள்.

குடும்பத்தில் வாழும் அம்மாக்களை விட ஆட்சி, அதிகாரம் , நினைத்ததை முடித்திட   இயன்ற ஆற்றல் ஆகிய யாவும் ஒருங்கே குவிந்து அமைந்த அம்மாவுக்கு தனது பிள்ளைகளிடம் இன்னும் அதிகமான அளவுக்கு  அன்பும் பாசமும் செலுத்த இயலும்; அவர்களுக்குத் தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும் அந்த  அம்மாவால் இயலும். அதுவும் இந்த அம்மாவால் இமயத்தைக் கூட கன்னியாகுமரியில் வைக்க இயலும் என்று அவரது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பேசுகிறார்.

இப்போது அம்மாவை விட்டுவிட்டு அரசியலுக்கு  வருவோம்.

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது அதிருப்தி அடைந்த மக்கள் இன்னொரு முறை வாய்ப்புக் கொடுப்போமென்று நல்ல பெரும்பான்மையில் ஆட்சியமைக்கும் வகையில் அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் முதலமைச்சர் பொறுப்பை மீண்டும் வழங்கினார்கள். தமிழ்நாடு ஒரு தன்னிகரற்ற  மாநிலமாக – இந்தியாவிலேயே முதலிடம் பெரும் தகுதி படைத்த மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என்று அம்மையார் அறைகூவினார்கள்; அம்மாவே சொல்லிவிட்டார்கள் ஆகவே முன்னேற்றம் நிச்சயமென்று மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்த ஆட்சியின் ஐந்தாண்டுக் காலம் நிறைவடையும் நேரம் வந்துவிட்டது. இப்போது மக்கள் தராசுப் படிக் கற்களை தங்களின் கரங்களில் எடுத்து எடை போட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நான்கரை ஆண்டுகள்  ஆட்சியில் கட்சி சார்பில்லாத நம்மைப் போன்ற நடுநிலையாளர்களின் கண்களுக்குப் பளிச் என்று தெரிவது முதலமைச்சர் அம்மையார் அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின்  கீழ் அறிவித்த அறிவிப்புகள்தான். இந்த அறிவிப்புகளைப் பற்றி அலசும் முன்பாக, 110 விதி என்றால் என்ன என்பதை சொல்லி விடலாமென்று கருதுகிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208  வது பிரிவு,  1- வது உட்பிரிவின் ஷரத்துக்களின்படி தமிழ்நாடு சட்டமன்றத்தின் நடப்பு விதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன. இவற்றில்  23 அத்தியாயங்களும்  292 விதிகளும் உள்ளன. விதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன.. இந்த விதிகளின் அம்சங்களின் அடிப்படையில்தான் சட்டபேரவை , பேரவைத் தலைவரால் நடத்தப்பட வேண்டும். இந்த விதிகளின்படிதான் அமைச்சர்கள் முதல் அனைத்து உறுப்பினர்களும் சட்டமன்றத்தின் நடந்துகொள்ள வேண்டும்.  மேலே குறிப்பிட்ட  292 விதிகளுக்குள்தான் விதி எண்  110- ம் வருகிறது.

இந்த 110 – ஆம் விதி என்ன சொல்கிறது என்றால் ,

( 1 ) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அவைக்கு அளிக்கலாம்

(2) அவ்விதம் அளிக்கப்படும் அறிக்கையின் மீது அவையில் எவ்வித விவாதமும் இருக்கக் கூடாது.

(3) உள் விதி  1- ன் கீழ் அறிக்கையளிக்க விரும்பும் அமைச்சர் எந்த நாளில் அந்த அறிக்கையை அவைக்கு அளிக்க இருக்கிறார் என்பதை பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்கவேண்டும். அதன் பிரதியையும் சட்டபேரவை செயலாளருக்கும் முன்கூட்டியே அனுப்பிவிட வேண்டும்.

இந்த ஏழெட்டு வரிகள்தான் இன்றைய தமிழக அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் விதி 110 பற்றி அடிப்படையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.

இந்தவிதி எந்த நிர்வாகப்  பொதுநல நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

அவசர- அவசிய- தலைபோகிற- பட்ஜெட்டில் குறிப்பிடப்படாத- சூழ்நிலையின்  முக்கியத்துவம் கருதி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு பிரச்னையில் அரசு ஈடுபடப் போகிறது என்பதை அவைக்கு அறிவிக்கும் வாய்ப்பே இந்த விதியின் தலையாய நோக்கம். உடனடியாக செய்யவேண்டிய ஒரு பிரச்னையைப் பற்றி அவையில் விவாதித்துக் கொண்டிருந்தால் காலம் கடந்துவிடும் அதனால் பிரச்னை எல்லை மீறிவிடும் என்பதால் அவையில் விவாதிக்காமலேயே அரசு நடவடிக்கையில் இறங்குவதற்கு வழிவகுப்பது இந்த விதியின் முக்கிய அம்சமாகும்.

ஒரு அண்மைக்கால உதாரணத்தை நாம் குறிப்பிட வேண்டுமானால் புனித மெக்காவில் ஏற்பட்ட விபத்தால் பல நூற்றுக் கணக்கான ஹஜ்ஜாஜிகள் எதிர்பாராமல் இறைவனின் நாட்டப்படி மரணமடைந்தார்களே ( இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ) ,   அம்மாதிரியான நிகழ்வுகள் ஏற்பட்டால் ( அல்லாஹ் பாதுகாப்பானாக!) – சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் நிவாரண உதவிகளை அறிவிக்கலாம். சுனாமி, கடும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் எதிர்பாராமல் ஏற்பட்டால் அதற்கான விபரங்களையும் பரிகாரங்களையும் இந்த விதியின் கீழ் அறிவிக்கலாம்.  

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விதியின் கீழ் வரும் அறிவிப்புகள் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் சட்டபேரவைத் தலைவர் பி. தனபால் அவர்களே குறிப்பிட்டதைப் போல கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறத் தக்க வகையில் மொத்தம்  181 அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து இருக்கிறார். ( இந்து – தமிழ் 30/09/2015)  .

மேலே நாம் குறிப்பிட்டுள்ளபடி அவசர- அவசிய- தலைபோகிற- பட்ஜெட்டில் குறிப்பிடப்படாத- சூழ்நிலையின்  முக்கியத்துவம் கருதி ஏற்படுகிற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இந்த 181 அறிவிப்புகளும் உண்மையிலேயே பயன்பட்டிருக்கிறதா என்பதையும் அவ்வாறு அவசரமாக அறிவிக்கபப்ட்டவைகள் அதே  அவசரகதியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா என்பதையும்தான் நாம் காணவேண்டும்.  இவற்றைக் காண்பதற்கு முன் மாதிரிக்காக  இப்படி அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எவ்வளாவு காலக்கெடுவில் அறிவிக்கப்பட்டன என்பதன் தொகுப்பை நாம்  காணலாம். .

2011ஆம் ஆண்டு 8-6-2011 முதல் 13-9-2011 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் 19 அறிக்கைகளைப் படித்தார்.

2012ஆம் ஆண்டு 29-3-2012 முதல் 2-11-2012 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 61 அறிக்கைகளைப் படித்தார்.

2013ஆம் ஆண்டு 1-4-2013 முதல் 15-5-2013 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 46 அறிக்கைகளைப் படித்திருக்கிறார்.

2014ஆம் ஆண்டு 14-7-2014 முதல் 12-8-2014 அன்று வரை முதலமைச்சர் 39 அறிக்கைகளைப் படித்திருக்கிறார்.

இந்த அனைத்து அறிக்கைகளையும் ஒன்று சேர்த்துத்தான் தற்சமயம் நடைபெற்று நிறைவு பெற்ற சட்டமன்றத்தில் , பேரவைத் தலைவர் ஒட்டு மொத்தமாக 181 அறிவிப்புகளைப் படித்து இருக்கிறார் என்று பெருமையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த 181 அறிவிப்புகளிலும் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் அறிவிப்புச் செய்து இருக்கிறார். அவைகளின் எண்ணிக்கை சற்றேறக்குறைய அறுநூறு திட்டங்களாகும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

வெளிப்படையாகப் பார்க்கும் போது,  மக்கள் நல அரசு இவ்வாறு அவசரமாக மக்களுக்காக திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவது நல்லதுதானே என்றே தோன்றும். ஆனால் இப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் யாவை என்று ஓரக்கண்ணால் பார்த்தோமானால் அவற்றுள் நமக்குத் தென்படும் சில குறிப்பிடத் தகுந்த அவசரமும் அவசியமும் மக்களுக்கு இன்றியமையாத – இந்தத் திட்டங்கள் நிறைவேறாவிட்டால் நாட்டில் பட்டினிச் சாவு போன்றவை  ஏற்பட்டு விடும் என்கிற அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் சில :

1. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது
2. நடப்பாண்டு முதல் மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் “அம்மா இலக்கிய விருது” என்ற புதிய விருது
3. பிறமொழி படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கப்படும்.
4. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புகழைப் பரப்பிடும் வகையில் அவரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு, இரண்டு நாள் கவியரங்கம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.
5. தமிழ் மொழியின் அற நெறிக் கருவூலமான ஆத்திசூடியை சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
6. இலக்கணம், இலக்கியம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும், சித்திரை தமிழ்ப் புத்தாண்டில் `உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்’ வழங்கப்படும். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும் தகுதியுரையும் வழங்கப்படும்

மேலே நாம் குறிப்பிட்டிருக்கும் அனைத்துத் திட்டங்களும் அறிவிப்புகளும் அறிவிப்புகளின் மாதிரிகளில் சில மட்டுமே. மேலோட்டமாகப் பார்க்கும்போது தமிழ் மொழி வளரவும் , தமிழை வளர்க்கவும் முதலமைச்சர் சிறந்த திட்டங்களைத் தானே அறிவித்து இருக்கிறார் என்றே நமக்குத் தோன்றும். நாமும் அதை ஒப்புக் கொள்கிறோம். இந்தத் திட்டங்களை வரவேற்கிறோம்; முதல்வரைப் பாராட்டுகிறோம். ஆனால் இவற்றை 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதே எம் கேள்வி.

அண்மையில்தான் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த நிதி நிலை அறிக்கையில் இவற்றை இணைத்து இன்னும்  கூடுதலாகக் கைதட்டல்களை வாங்கிச் சென்று இருக்கலாமே!

மேலே மாதிரிக்காக குறிப்பிட்டுள்ள ஆறு திட்டங்களும் அறிவிப்புகளும் உடனே நிறைவேற்றப் பட்டால் எத்தனை உயிர்கள் அவற்றால் காப்பாற்றப்படும் ?  பற்றி எறியும் நெருப்பை இந்தத் திட்டங்கள் /அறிவிப்புகள் அணைத்துவிடுமா? பஞ்சம் பசியை நீக்கிடுமா? குடிக்க நீரைக் கொண்டுவந்து தந்திடுமா? காவிரியில் நீரை கரைபுரண்டு ஓடவைக்குமா? மின்வெட்டை சீர் செய்து மக்களின் அன்றாட வாழ்விலும் தொழிற்சாலைகளிலும் இருளை நீக்கிடுமா? வேலை வாய்ப்புகளை ஊக்கப்படுத்திடுமா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

ஆனால் இந்த அறிவிப்புகள் பற்றி விதிகளின்படி , சட்டமன்றத்தில்  எதிர்க் கட்சிகள் விவாதிக்க இயலாது ; விளக்கம் கேட்க இயலாது; கருத்துச் சொல்ல இயலாது. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காகவே இப்படிப்பட்ட சாதாரணமான திட்டங்களை அரசியல் சட்டத்தால் அவசரத்துகாகவே வழங்கப்பட்ட  . 110 விதியின் கீழ் அம்மா அறிவிப்புச் செய்கிறார் என்பதுதான் அரசியலை அறிந்தோர் கருத்தாகும்.

ஜனநாயகம் என்ற தாய்தான் இந்த ஜெயலலிதா  அம்மாவை ஈன்றெடுத்து தமிழக மக்களுக்கு வழங்கினாள். அப்படிப்பட்ட ஜனநாயகத்தாயின் குரல்வளையை – அம்மாவே நெறிக்கலாமா?

இந்தக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். உணமையாகவே  110 விதியின் கீழ் அறிவித்து உடனே களப்பணி ஆற்றிடத் தகுதி பெற்ற எந்தத திட்டங்களையுமே அம்மையார்  அறிவிக்கவே இல்லையா?

அப்படி ஒரேயடியாக அம்மாவைக் கைவிட்டு விட இயலாது. பற்பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார். சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலேயும் ஆகிவிட்டது. அத்தகைய திட்டங்கள் எல்லாம் தமிழக முன்னேற்றத்துக்கு அவசியமானவை; மக்களின் வாழ்வில் உணமையிலேயே மாற்றங்களைக் கொண்டுவரத் தக்கவை. பெயரளவு புரட்சித் தலைவியை உண்மையான புரட்சித் தலைவியாக வைத்துப் போற்றத் தக்கவை. துணை நகரங்கள் முதல் ஒளிரும் மின்திட்டங்கள் , சாலை மேம்பாடு, மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், அடுக்கு மாடி குடி இருப்புகள், தூர்வாரும் திட்டங்கள் இப்படி பல்வேறு பயன்படும் அறிவிப்புகள் /திட்டங்கள் இந்த விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

அவை யாவை? அவைகளின் நிறைவேற்றம்  எந்த நிலையில் இருக்கின்றன?  

இப்போதுதான்  தலைப்பு நமக்கு நினைவுக்கு வருகிறது. அத்துடன் சிரிப்பும் வருகிறது.

சீனி சக்கரை சித்தப்பா! சீட்டிலே எழுதி நக்கப்பா.

இந்த அலசல் இன்னும் முழுமைபெறவில்லை. சந்திக்கலாம்.. இன்ஷா அல்லாஹ்.

இப்ராஹிம் அன்சாரி

8 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

விதி எண் 110தின்படிஅறிவிகப்பட்டதிட்டங்கள் யாவும் மக்களுக்குகூட்டு வைத்துகொடுத்த ஏட்டுசுரைக்காய்! சட்டங்கள் மக்களின்நலன்கருதியே இயற்ப்பட்டது.ஆனால்''ஈசனின்கழுத்தில்சூடியமலர்கள்நீசனின்கால்பட்டு நாசமாய்போகிறது!''சட்டம்பற்றிபோதியவிழிப்புணர்வுஇல்லாதமக்களும், அற்பஇலவசங்களுக்கு ஆசைப்பாடும்மக்களும்நிறைந்தஇந்தநாட்டை எத்தர்கள்எத்தனைகாலம்வேண்டுமானாலும் ஆட்சிசெய்யலாம்.நல்ல கட்டுரை வரைந்து விழிப்புணர்வு தந்த மைத்துனருக்கு பாராட்டுக்கள். 'கோரிக்கை யற்றுகிடக்கும்வேரில்பழுத்தபலா' போல இல்லாமல் கொப்பில் பழுத்தபலாப்போல்வருக !

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பிற்குரிய காக்கா,

இதில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா?

சிவாஜி கணேஷனுக்கு மணிமண்டபம் கட்ட இடம் கொடுத்தும் அந்த ஏழை எளிய(!)வர்களால் கட்ட முடியாத மணிமண்டபத்தையும் போர்க்கால அடிப்படையில் கட்டித்தரப்போகும் அரசை நினைத்து அழுவதா சிரிப்பதா?

தலைப்பில் சிரிப்பு இருந்தாலும் உள்ளே மிகவும் சீரியஸான விஷயங்களை விஷயங்களை எளிதாகப் புரியும்படி விளக்கும் இத்தொடர் நீள்க! நீங்கள் வாழ்க!!!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் !

வ அலைக்குமுஸ் சலாம்.

நேற்று காந்தி பிறந்த நாள். நேற்று தொலைக் காட்சி விவாதத்தை காந்தியையும் காமராஜரையும் இன்றைய ஆளும் / ஆண்ட அரசியல்வாதிகளையும் ஒப்பிட்டு தந்தி டிவி நடத்தியது.

ஒப்பிடவே முடியாததை ஒப்பிட்டு நடத்திய விவாதம் ஒப்புக் கொள்ள முடியாதது. ஒருபக்கம்.

அது ஊதிவிடுவதற்காகவே நடத்தப்பட்டது என்பது மறு பக்கம்.

ஆனால் ஆளும் /ஆண்ட கட்சிகள் இதை ஊதி அனைத்து ஊத்தி மூடிவிடுவார்கள் என்பது நமக்குத் தெரியாதா?

அன்று ரஜினி சொன்னார் " தமிழ்நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேணும் "

இன்று அனைவரும் சொல்லவேண்டிய நிலை.

Unknown said...

110 விதி பற்றி கேட்டதை, 110 விதியின் இன்றைய நிலைக்கு ஆளாக்கிவிடாமல், 110 விதி செயல்பட வேண்டிய வேகத்தில் அலசி ஆராய்ந்து அதுகுறித்த அரிய தகவல்களை தந்துள்ளீர்கள், சபாஷ் எழுத்துலக இளைஞரே!

'A TEAM' மது வியாபாரியின் எண் 110 எனில் 'B TEAM' மரண வியாபாரியின் அறிவிப்புகளின் எண் என்ன 111?

தொடர்ந்து சமுதாய விழிப்புணர்வு பதிவுகளை தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

வேண்டல்:
ஒரு காவி இந்தியா முழுவதும் மாட்டுக்கறிக்கு தடை கேட்டு பசுமை தீர்ப்பாயத்தை அணுக, அவர்களும் இந்த வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்து பிரச்சனையை தீர்க்காமல் மாட்டு மூத்திரம் குடிக்கும் மத்திய அரசின் கருத்தை கேட்டு கடந்த வாரம் அனுப்பி தன் பங்கிற்கு பெட்ரோலை ஊற்றியுள்ளது. மாட்டுக்கறி கொலையில் மறக்கடிக்கப்பட்டுள்ள சதியை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பும் அடுத்துள்ளது.

அல்லாஹ் உங்களுடைய செயல்களை ஏற்று அதை அப்படியே மறுமைக்கு நன்மையாக்கித் தந்தருள்வானாக.

sabeer.abushahruk said...

என்ன காக்கா இது?

த்ரில்லர் படம் பாக்ற மாதிரி இருக்கு, இவங்க ஆட்சி செய்றது. இதுல இவனுக ஃபோட்டோவை வேறு போட்றானுகளா, மூஞ்சி ஹாரர் பட ரேஞ்சுக்கு பயங்காட்டுது.

தந்தி ட்டிவி நிகழ்ச்சிகள் வரவர எரிச்சலாக இருக்கிறது பார்க்க. அதிலும் அந்த "ஆயுத எழுத்து" ஒரு உதவாக்கறைகளின் சந்தக்கடை.

Ebrahim Ansari said...

அரசியல் செய்வதற்கு ஆயிரம் காரணங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
உருப்படியான காரணங்கள் இந்த நாட்டில் ஓராயிரம் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகரசபை குப்பையைக் கிளறி அரசியல் நடத்துகிறது நாட்டை ஆளவந்த கட்சி.

யார் வீட்டில் மாட்டுக்கறி இருக்கிறது- யார்வீட்டில் பூனைக் கறி இருக்கிறது- யார் இன்று சிறுநீர் கழித்தது? யார் இன்று வாய் கொப்பளித்தது ? யார் இன்று ஏப்பம் விட்டதென்று காரணம் தேடி அலையும் கழிசடையாக கட்சி நடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது

சிறைக்குள் கிடந்தது சித்திரவதைக்கு ஆளாக வேண்டி அறுபது டஜன் பேர்கள் ஆட்சிக் கட்டிலிலும் அதிகாரத்திலும் அமர்ந்திருக்க அரைக் கிலோ ஆட்டுக்கறி வைத்திருந்த காரணத்துக்காக ஒரு ஏழையை கல்லாலேயே அடித்து சிதைத்துக் கொன்றுள்ள கொடியவர்களும் கண்டு பிடிக்கப்பட்டு மரணதண்டனைக்கு சட்டப்படி உட்படுத்தபடுவார்களா ?

முஸ்லிம்களின் வாக்கு வாங்கியே முதல் மகனை முதல்வராக்கிய முலாயம் சிங்தான் பதில் சொல்ல வேண்டும்.

Shameed said...

மந்த புத்திக்காரனை நம்ம ஊரில் 110 என்று சொல்வார்கள் சரியாத்தான் சொல்லி இருக்கின்றார்கள் நம்ம ஊர் ஆட்கள்

அதிரை.மெய்சா said...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உறவில்லையே.

இதுபோன்ற அம்மா பாட்டெல்லாம் ஆட்சியாளர்களுக்காக திட்டமிட்டு பாடப்பட்டதாக இருக்குமோ.!?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு