Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மரமும் மனிதனும்... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | October 14, 2015 | , , ,


வாருங்கள், மரத்தோடு ஒரு பேட்டி எடுக்கப்போகிறேன்!

நான்:
மரமே ! நலமா ?
ஆறறிவு ஜீவன் - உன்
அருகினில் வந்திருக்கிறேன்!
வரவேற்பு பலமாய் இல்லையே! ஏன்?

மரம் :
என்னால் எழுந்து
வாசலுக்கு வந்து
வரவேற்க முடியாதென்பதாலதான்
காற்றிடம் பூச்செண்டு கொடுத்து
உன்னை வரவேற்றேன்!

நான்:
சரி...!
சில கேள்விகள்
பதில் சொல்!
காற்றின் சங்கீதத்திற்கு - எப்போதும்
சந்தோஷத்தில் தலையாட்டுவதால்
நீ காற்றை சார்ந்துதானே இருக்கிறாய்?

மரம் :
இருக்கட்டுமே!
நீ சிரிக்க வேண்டுமெனில்
சிலரோடு சேர்ந்திருக்க வேண்டும்!
உயிர் வாழவோ - நீ
என்னையே சார்ந்திருக்க வேண்டும்!!

நான்:
மீன் செத்தாலும் கருவாடு
மனிதன் செத்தாலும் வெருங்கூடு!
பசு இருந்தாலும் பாலாகும்!
செத்தாலும் தோலாகும்!"
பாடலைக் கேட்டதுண்டா?

மரம் :
நாங்கள்
நின்றாலும் நிழலாவோம் !
வீழ்ந்தாலும் விறகாவோம் !

இருந்தாலும்
மழலைகளின் தொட்டில் ஆவோம்!
இறந்தாலும் இளைப்பாறும் கட்டிலாவோம் !!

பலம் தரும் பழமாவோம் !
பல வழிகளில் இப்படியே பலனாவோம் !!

நான்:
கல்லாதவர்களை
வள்ளுவர் மரம் என்று அழைக்கிறாரே ?

மரம் :
அவரைப் பற்றி என்னிடம் பேசாதே!
கண்ட பாலுக்கெல்லாம்
தனி அதிகாரம் ஒதுக்கியவர்
தாய்பாலுக்கென்று
அதிகாரம் ஒதுக்காதவர் அவர்!

எங்கள் கிளைகளின் ஓலைகளில்
தன் வேலையை முடித்துவிட்டு
நன்றி மறந்த சாதாரண மனிதரே அவர்!!

நான்:
எங்களிடமும் பலசாலி
பலவீனர்கள் என்றுண்டு
அவர்களை நாங்கள்
மரமண்டை என அழைக்கிறோம்!

மரம் :
ஏன் !
எங்களிடமும் அப்படி உண்டு!
பலசாலிகள் தேக்கு புளிய மரங்கள்!
பலவீனன் முருங்கை மரமென்றும்!
அவற்றை நாங்கள்
மனித மண்டை என்றே அழைக்கிறோம்!!

நான்:
இப்போதெல்லாம் - உன்
சகத்தோழர்களான விலங்குகள்
காட்டை விட்டுவிட்டு நாட்டுக்குள் வந்து
தொல்லை செய்கிறதே!

மரம் :
காடுகள் எல்லாம்
வீடுகள் ஆகும் போது
வீடுகளெல்லாம் காடுகளாவதில்
என்ன தவறு?

என்னிடம் வார்த்தை இல்லை!
மெளனம் காத்தேன் - இப்போது
மரம் என்னிடம் கேள்வி கேட்டது..

அதென்ன!
மழைக்காக மறையோனிடம் வேண்டாமல்..
மரங்களின் தாலியை அறுத்துவிட்டு
கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் ??

என்னிடம் பதில் இல்லை.

நீங்கள் ! - ஏன்?
அவசரக்காரர்களாக இருக்குறீர்கள்?
நெடுங்காலத்து நட்பை
குறைந்த வார்த்தையில்
குடும்பக்கட்டுப்பாடு செய்கிறாய்!
சில விலங்குகள்
நன்றி காட்டுவதில்
விலங்கிலிருந்து மனிதனாகி விடுகின்றன !
நீயோ
கோபம் வந்தால்
மனிதனிலிருந்து மாறி
விலங்காகி விடுகிறாய்
ஏன் இந்த மாற்றம் ?

கைகள் இல்லாவிடினும்
காற்றை துவைத்து
ஆக்சிஜன் அனுப்புகிறோம்!

நீங்களோ
காற்றின் முகத்தில்
கரியமில வாய்வுகளால்
காறித் துப்புகிறீர்கள்!

உங்களுக்கு!
பல்லாக்கு தூக்கும் எங்களுக்கு
நீங்களேன் சந்தூக்கு தயாரிக்கிறீர்கள் ??

இதற்கும் என்னிடம் பதில் இல்லை.

என் அமைதியை பார்த்துவிட்டு முடிவாய் மரம் சொன்னது:

ஏ மனிதர்களே!

உங்களின் தேவைக்கு இன்றைக்கு
நாங்கள் விறகுகள் !
நாளை மறுமையில்
நரகத்தின் தேவைக்கு
தீமையானவர்களே விறகுகள்!!

ஷேக் முகைத்தீன்

13 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நல்ல கவிதை சகோதரரே.

"மனிதன் தோன்றுவதற்கு முன் மரம் தோன்றியது. ஆகவே, மரம் நமக்கு அண்ணன்" - வைரமுத்து.

அண்ணன் தம்பி உரையாடல் அருமை.

வாழ்த்துகள்.

sabeer.abushahruk said...

//நீ சிரிக்க வேண்டுமெனில்
சிலரோடு சேர்ந்திருக்க வேண்டும்!//

என்கிற தத்துவம்

//உயிர் வாழவோ - நீ
என்னையே சார்ந்திருக்க வேண்டும்//

என்று கவித்துவமாகியிருப்பது ரசிக்கத்தக்கது.

ZAKIR HUSSAIN said...

இதைவிட அருமையான / அழகான படம் தேர்ந்தெடுப்பது கடினம்.

SIMPLY SUPERB !!!

ZAKIR HUSSAIN said...

//கைகள் இல்லாவிடினும்
காற்றை துவைத்து
ஆக்சிஜன் அனுப்புகிறோம்!//


மற்றும் ஓர் நல்ல கவிதை தரும் கைகள் நமக்கு கிடைத்திருக்கிறது.
[ எங்கே இருந்து இது போன்ற சிந்தனைகள் வருகிறது???....]

இது போல் சிந்திக்க தெரியாதவர்கள் அப்டேட் இல்லாத சாஃப்ட்வேர் ஆவது என்னமோ நிதர்சனம்.

ZAKIR HUSSAIN said...

இப்ராஹிம் அன்சாரி அண்ணன் அவர்களின் மிகப்பெரிய பணியான பசுமை அதிரைக்கு இந்த கவிதைகள் உதவும்.

இந்த சமயத்தில் முக்கியமான ஒரு பணி இப்ராஹிம் அன்சாரி அவர்களின் இந்த முயற்சி.

மரங்களை பாதுகாக்க க்ரில் போடுவதை விட சிமண்ட் க்ளாரி முறை நெடுநாள் கிடக்கும்.

[நல்லா உழைக்கும்னு பழைய ஸ்டைலில் எழுதினால் ட்ராஃப்ட் எல்லாம் அனுப்பமா? என்று கேட்கலாம். ]

Ebrahim Ansari said...

ஆஹா ! அருமை என்று ஒரு உயர்ந்த மரத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்து கூவத் தோன்றுகிறது.

மரங்களைப் பற்றி பல கவிதைகளை நான் படித்து இருக்கிறேன்.

இது எது மாதியும் இல்லாத புது மாதிரி.

எழுத்தில் வடித்த சகோதரருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

தம்பி அபு இப்ராஹீம் வாருங்கள் காதோடு ஒரு ரகசியம்.

கடந்த வாரம் பசுமை அதிரைப் பதிவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமைக்கு பதியும்வண்ணம் " மரம் ஒரு அறம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மனமார சொல்கிறேன். ( அரசன் சோப் ரெம்ப ரெம்ப நல்ல சோப். )

இந்தக் கவிதைக்கு முன் அது நிற்காது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தம்பி அபு இப்ராஹீம் வாருங்கள் காதோடு ஒரு ரகசியம்.

கடந்த வாரம் பசுமை அதிரைப் பதிவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமைக்கு பதியும்வண்ணம் " மரம் ஒரு அறம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். //

ஹா ஹா !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

பசு`மை யாகவே இருக்கட்டும்....! பசு-வுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருந்து கொண்டு எழுத்தாளர்கள் மீது மை ஊற்றிக் கொண்டிருக்கிறது....!

உங்களின் தொடர் எவ்வித இடர் கள் இன்றி தொடர வாழ்த்துக்களும் துஆவும்...

காத்திருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

Anonymous said...

\\ஆஹா ! அருமை என்று ஒரு உயர்ந்த மரத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்து கூவத் தோன்றுகிறது. மரங்களைப் பற்றி பல கவிதைகளை நான் படித்து இருக்கிறேன். இது எது மாதியும் இல்லாத புது மாதிரி. எழுத்தில் வடித்த சகோதரருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள//

அல்ஹம்துலில்லாஹ் மூத்த சகோதரர் இபுராஹிம் அன்சாரி அண்ணே !ஒரே நாளில் பெய்த மழையில் நிறைந்த குளம் போல உங்கள் ஒரே கருத்தில் மனம் நிறஞ்சி போச்சி!

கருத்திட்ட எல்லோருக்கும் நன்றி சகோஸ்!!

ஷேக் முகைத்தீன்

Shameed said...

பசுமரத்தில் அடித்த ஆணிபோல் உள்ளது கவிதை

Anonymous said...

முதலில் அபுஇபுராஹிம் அண்ணனுக்கு நான் ரொம்ப கடமை பட்டிருக்கிறேன்! கேட்டு கொண்டதற்கிணங்க கவிதைக்கு ஏற்ற மாதிரி அட்டகாசமான படம் போட்டதற்கும் என் கவிதைகளை உடனடியாக வெளியிட்டு கொண்டு இருப்பதற்கும்..!! ஜஷக்கல்லாஹ் கைர் அண்ணே!

ஷேக் முகைத்தீன்

Anonymous said...

"மனிதன்
தோன்றுவதற்கு முன் மரம் தோன்றியது. ஆகவே, மரம் நமக்கு அண்ணன்" - வைரமுத்து"

ஜஷக்கல்லாஹ் கைரன் சபீர் அண்ணே! இது உண்மையில் வைரமுத்துக் கவிதையின் பாதிப்புதான் !!

ஷேக் முகைத்தீன்

Anonymous said...

\\மற்றும் ஓர் நல்ல கவிதை தரும் கைகள் நமக்கு கிடைத்திருக்கிறது.
[ எங்கே இருந்து இது போன்ற சிந்தனைகள் வருகிறது???....] இது போல் சிந்திக்க தெரியாதவர்கள் அப்டேட் இல்லாத சாஃப்ட்வேர் ஆவது என்னமோ நிதர்சனம்.//


ஜஷக்கல்லாஹ் கைரன் ஜாஹிர் ஹுசைன் அண்ணே! கவிதையை விட உங்க கமெண்ட் கருத்துள்ளதாக இருக்கே!!

ஷேக் முகைத்தீன்

Anonymous said...

//பசுமரத்தில் அடித்த ஆணிபோல் உள்ளது கவிதை//

Jazakkallah khairen shameed bai!!

ஷேக் முகைத்தீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு