Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சகோதரியே! - தொடரிலிருந்து... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 01, 2015 | , , , , , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர்மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

அத்தியாயம் 7 மற்றும் 8ல் இஸ்லாமியத் திருமணத்தைப் பற்றி சிறிதளவேப் பார்த்தோம் மேலும் இந்த அத்தியாயத்திலும் தொடர்ந்து பார்ப்போம். பார்ப்பதற்கு முன் சென்ற அத்தியாயத்தில் ''சகோதரர் கவியன்பன் அபுல் கலாம் அவர்கள் கட்டாயத் திருமணம், 'பெண் கொடுத்து - பெண் எடுப்பது'  கூடுமா?'' என்ற கேள்வியைக் கேட்டிருந்தார்கள். இதற்கான பதிலைப் பார்த்து விட்டுத் தொடர்வோம்.

கட்டாயத் திருமணம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ''பெண் கொடுத்து - பெண் எடுப்பது  கூடுமா?'' என்பது பற்றி ஹதீஸில் தேடும்பொழுது முஸ்லிம் ஹதீஸ்  பாகம் - 2, பாடம் 7ல் வரும் நபிமொழியில் 'கூடாது' என்று வருகிறது. இதன் விபரம்:

மணக்கொடையின்றி பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் திருமண முறைக்கு ''ஷிஃகார்'' என்பர்: 

மஹ்ரின்றி பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் (ஷிஃகார் முறைத்) திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)  (முஸ்லிம்: 2768).

மஹ்ரின்றி பெண் கொடுத்துப் பெண் எடுத்தல் (ஷிஃகார்) இஸ்லாத்தில் இல்லை.  அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)  (முஸ்லிம்: 2769). 

பெண் கொடுத்து - பெண் எடுக்கும்பொழுது இரண்டு பெண்களின் கட்டாய உரிமையான மஹர்(மணக்கொடை) அடியோடு தவிர்க்கப்படுகிறது. பெண்களுக்கு வல்ல அல்லாஹ் வழங்கிய மஹர்(மணக்கொடை)  உரிமையைப் பறிக்கும் மனிதர்கள் வல்ல அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சிக் கொள்ளட்டும். 

பெண்ணை நேரில் பார்ப்பது:

சென்ற அத்தியாயத்தில் பெண்ணை நேரில் பார்ப்பது பற்றி கூறியிருந்தேன். இது சம்பந்தமாக பார்க்கலாம், பார்க்கக் கூடாது என்ற கருத்துக்கள் வந்திருந்தது. பெண்ணை நேரில் பார்ப்பது என்றால் மணமகனைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பெண்ணை பார்க்க வைப்பது என்ற அர்த்தம் இல்லை. மார்க்கம் நமக்குக் கொடுத்த அனுமதியை மார்க்க வரம்புக்குள் பயன்படுத்தினால் எந்த சீர்கேடும் ஏற்படாது, நன்மையைத்தான் பெற்றுத்தரும். 

மணமக்களுக்கு என்று ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும் படிப்பு, மார்க்கம், உயரம், நிறம் என்ற அடிப்படையில் விருப்பங்கள் இருக்கும்.  இரு தரப்பு பெற்றோர்களுக்கும் சம்மதம் என்ற நிலை வரும்பொழுது,  இந்த விபரங்கள் அனைத்தையும், மணமக்களிடம் அவசியம் எடுத்துக் கூறி இருவரும் சம்மதிக்கும் நிலை வந்த பிறகுதான்,  இரு வீட்டாருக்கும் நடுவில் பார்க்க அனுமதிக்கலாம். எந்த விபரத்தையும் மணமக்களிடம் கூறாமல் பார்க்க அனுமதிக்கக் கூடாது. (வெளிநாடு வாழ் 'மாப்பிள்ளைகளின்' சில வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவெல்லாம் கொடுத்து ஏமாற்றி 'திருமண நாளன்று' ஒன்றும் செய்ய முடியாமல் போன நிகழ்வுகளும் நிறைய நடந்துள்ளது). 

வெளித்தோற்றத்தையும், வருமானத்தையும் பார்த்து சில இடங்களில் ஏமாந்து விடுகிறார்கள். திருமணம் முடிந்த பிறகு மாப்பிள்ளையின் குணத்தைப் பற்றித் தெரியவரும் பொழுது எதுவும் செய்ய முடியாத நிலையில் பெற்றவர்கள் கவலைப்படுகிறார்கள்.  

'மணமகன், மணமகள்' என்று பேச்சு ஆரம்பிக்கும்பொழுது நம் சக்திக்கு உட்பட்டு நன்றாக தீர விசாரித்து திருமண காரியத்தில் இறங்குவது நலம் அளிக்கும் (முடிவெடுப்பதற்கு முன் ''இஸ்திகாராத்'' தொழுகையைத்  தொழுது இறைவனிடம் துஆக் கேட்பது சிறந்தது). நம்மால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்து விட்டுப் பிறகு ஏதாவது குறையைக் கண்டால், ''அல்லாஹ் நாடியபடி நடந்தது'' என்று பொறுப்புச் சாட்டி விட்டு, வல்ல அல்லாஹ்விடமே நிலைமைச் சீரடைய துஆக் கேட்க வேண்டும். 

திருமணம் முழுமை பெற என்ன தேவை: 
  • மணமக்களின் மனப்பூர்வமான சம்மதம்
  • மணமகளின் உரிமை பெற்ற மஹர்
  • மணகளுக்காக ஒரு பொறுப்பாளர்
  • உண்மையான இரு சாட்சிகள்
இவைகள் மட்டும் தான் தேவை. மாலை, ஆரத்தி, மற்றும் மார்க்கம் காட்டித் தராத வேறு எந்த காரியங்களும் தேவையில்லை. மேலும் திருமணத்தன்று (ஒரு நாளைக்கு) மட்டும் போடும் கோட், சூட் கூடத் தேவையில்லை. (இந்திய சூழலு(தட்ப வெட்பநிலை)க்கு ஒத்து வராத, சுகாதாரமற்ற வெள்ளைக்காரனுக்கு  மட்டும் சொந்தமான கோட், சூட் திருமணத்திற்குப் பிறகு ''வற்றல் போட்டு காய வைக்கும்பொழுது, காக்கை வராமல் இருக்க பயன்படலாம்'').

ஒரு சகோதரர் கோட், சூட் போடாமல் நடந்த அவரின் திருமண நிகழ்ச்சியைப் பற்றி கூறியது: திருமணத்தன்று 'அவர்' மற்றும் அவரின் உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் என்று சூழ இருக்கும்பொழுது 'உறவுக்கார பெண்மணி அங்கே இருப்பவர்களிடம் எங்கே மாப்பிள்ளை' என்று கேட்க, இவரைப் பார்த்து கையைக் காட்டி இருக்கிறார்கள். அவர் பார்த்து விட்டு என்னம்மா? ''ஒரே ஆலிம்ஷா'' கூட்டமாக இருக்கிறது, 'மாப்பிள்ளையைக் காணோமே' என்று சொல்லி இருக்கிறார். அந்தப் பெண்மணிக்கு காலம் காலமாக மனதில் பதிந்து உள்ள காட்சிகள் ஒரு ஆலிம் இருப்பார், மற்றவர்கள் கைலி சட்டையுடனும், 'மாப்பிள்ளை மட்டும் கோட், சூட்டுடன் மாலையுடன் இருப்பார்'. ஆனால் இந்த சகோதரர் திருமணத்தில் தாடியுடன், மாலை எதுவும் இல்லாமல் 'இவரும்', இவருடன் இருந்த அனைவரும் கைலி சட்டையுடனும், நிறையப் பேர் தாடியுடனும், இருந்ததால் மாப்பிள்ளை எங்கே என்ற கேள்வியைக் கேட்டுக் குழம்பி விட்டாராம்.  

மணமக்களுக்கு வாழ்த்து:

காலம், காலமாக, இன்றளவும் மணமக்களை வாழ்த்துகிறோம் என்ற பெயரில் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத துஆவை ஓதி வருகிறார்கள். 

'அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா, வநூஹ் வபாரிஸா, வஇப்றாஹீம் வஸாரா, வயூஸுஃப் வஸுலைஹா, ...'  இதுதான் அந்த துஆ நபிமார்களைப் போல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்களாம். நபிமார்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இவர்கள் 'எப்படி' அறிவார்கள்?.

நபி ஆதம் - ஹவ்வா போல் வாழ்க!:

நபி ஆதம் (அலை), ஹவ்வா இருவரும் இறைவனின் வார்த்தையை மீறி நடந்ததால், அவனின் கோபத்திற்கு ஆளாகி பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள். 

இந்த துஆவின் பயனால்தான், திருமணம் ஆன ஓரிரு மாதத்தில் மனைவி ஊரிலும், கணவன் வெளிநாட்டிலும் பல ஆண்டு காலங்கள் பிரிந்து வாழ்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. (ஆரம்ப துஆவே நபி ஆதம் (அலை) போல் 'வாழ்', என்று வாழ்த்தினால் எப்படி வாழ்வார்கள்? பாலைவனத்தில்தான் பிரிந்து வாழமுடியும்!).

நபி நூஹும் - ஃபாரிஸாவும் போல் வாழ்க!:

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம்  செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. ''இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!'' என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன்  : 66:10)

நூஹ் நபியின் மனைவி நரகத்திற்குச் செல்லக்கூடியவர் என்று வல்ல அல்லாஹ் தெளிவாக பிரகடனம் செய்து விட்டான். அல்லாஹ் அறிவித்த பிறகு பல ஆண்டுகள் ஓதி பட்டம் பெற்ற ஆலிம்களுக்கு எப்படி இதுபோல், வாழ்த்த தைரியம் வருகிறது. 'நரகவாசிப் போல் வாழ்' என்று 'மணமகளை' வாழ்த்துவது அநியாயம் அல்லவா?

நபி இபுராஹீம் - ஸாரா போல் வாழ்க!:

இபுராஹீம் நபி-ஸாரா தம்பதியருக்கு முதுமை வரை குழந்தைப் பாக்கியம் இல்லை. இதோ இபுராஹீம் நபி (அலை)  அவர்களின்  மனைவி கூறியதைப் பற்றி வல்ல அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்: 

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். ''இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்திதான்''  என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் : 11:71, 72)

வல்ல அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக விளக்கியப் பிறகும், முதுமைப் பருவம் வரை குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் போல்  வாழுங்கள் என்று மணமக்களை வாழ்த்துவது அநீதி அல்லவா? மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் சிந்திக்க வேண்டாமா?

நபி யூஸுஃப்-ஸுலைஹா போல் வாழ்க!:

"ஸுலைஹா" என்ற பெயர் குர்ஆனிலும், ஹதீஸிலும் வரவில்லை. "ஸுலைஹா"   (காசுக்காக ஓதுபவர்கள் எங்கிருந்து இந்த பெயரைக் கண்டுபிடித்தார்கள்?) இன்னொருவரின் மனைவி என்பதையும், அவரின் நடத்தையைப்   பற்றியும் வரும் குர்ஆன் வசனங்கள்:

எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர், தன் மனைவியிடம் ''இவரை மரியாதையாக நடத்து! இவர் நமக்குப் பயன்படக் கூடும். அல்லது இவரை நாம் புதல்வனாக்கிக் கொள்ளலாம்'' எனக் கூறினார். (அல்குர்ஆன்: ஸுரா யூஸுஃப் 12:21) 

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள்; அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து 'வா!' என்றாள். அதற்கவர் ''அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு  அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்'' எனக் கூறினார். (அல்குர்ஆன்: ஸுரா யூஸுஃப் 12:23) 

இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள். அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர். ''உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?'' என்று அவள் கூறினாள். (அல்குர்ஆன்: ஸுரா யூஸுஃப் 12:25)

''இவள் தான் என்னை மயக்கலானாள் என்று அவர் கூறினார். ''அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்'' என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார். (அல்குர்ஆன்: ஸுரா யூஸுஃப் 12:26,27)

அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது, இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது'' என்றார். (அல்குர்ஆன்: ஸுரா யூஸுஃப் 12:28) 

''யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு'' (என்று யூஸிபிடம் கூறிவிட்டு, மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக் கொள்! நீயே குற்றவாளி (எனவும் கூறினார்). (அல்குர்ஆன்: ஸுரா யூஸுஃப் 12:29) 

இன்னொருவரின் மனைவியை, நடத்தைக் கெட்ட பெண்மனியை நபிக்கு மனைவியாக்கியது வல்ல அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கும் செயல் அல்லவா?. 

(முஹம்மதே!) இந்தக் குர்ஆனை உமக்கு அறிவித்திருப்பதன் மூலம் மிக அழகான வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். இதற்கு முன் நீர் அறியாதவராக இருந்தீர். (அல்குர்ஆன்: ஸுரா யூஸுஃப் 12:3) 

நபி யூஸுஃப்(அலை) அவர்களைப் பற்றிக் கூறும் பொழுது, வல்ல அல்லாஹ் அழகிய வரலாறு என்றுக் கூறுகிறான். அழகிய வரலாறுக்குச் சொந்தக்காரரான நபிக்குத்   திருமணம் ஆகாமலேயே 'திருமணம்' ஆனது போல் நபியின் பெயரைப் பொய்யாக பயன்படுத்தி வாழ்த்துவது அநியாயம் என்பது ஓதுபவரின் மனதிற்குத் தெரியவில்லையா? மனசாட்சி உறுத்தவில்லையா? இவர்கள் குர்ஆனின் விளக்கத்தைப் படித்தவர்களா? இல்லை சில சில்லறைக் காசுக்காக மார்க்கத்தை விற்பவர்களா?

சகோதர, சகோதரிகளே! தங்களின் குடும்பங்களில் நடக்கும் திருமணங்களில்  நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத இந்த துஆ ஓதுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். இந்த துஆவை ஓதினால்தான் திருமணத்திற்கு நாங்கள் வருவோம், இல்லையென்றால் தங்களின் (பாத்திஹா இல்லாத) திருமணத்தைப் புறக்கணிப்போம் என்று மார்க்கம் அறியா மௌலவிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் சொல்வார்கள். இவர்கள் வருவதை விட வல்ல அல்லாஹ்வின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கும் இந்த துஆவை புறக்கணிப்பதே நன்மையளிக்கும்.

மணமக்களை வாழ்த்தும் உண்மையான துஆ:

நமது கண்மணி நபி (ஸல்) அவர்கள் மணமக்களை வாழ்த்துவதற்கு அழகிய துஆவை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ ஹைர் ...

(பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! )

(பரகத்) என்னும் அரபி சொல்லுக்கு 'புலனுக்கெட்டாத இறை அருள்' என்பது பொருள். (அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது).

இந்த துஆவை ஓத மௌலவிகள் தேவையில்லை, ஆமீன் போட வேண்டிய அவசியமுமில்லை. வந்திருக்கும் அனைவரும் மணமக்களுக்காகக் கேட்கலாம். 

வல்ல அல்லாஹ்வின் மிகப் பெரிய அருளைப் பெற்றுத் தரும் இரண்டு வரிகளில் உள்ள இந்த ''அழகிய துஆ சிறந்ததா?'' நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத  இறைவனின் கோபத்தைப் பெற்றுத் தரும்  ''அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா'' என்ற எந்த நன்மையையும் பெற்றுத் தராத, ஓதுபவருக்கும், ஓதுவதைக் கேட்டு  ஆமீன் சொல்பவருக்கும் பொருள் புரியாத இந்த துஆ சிறந்ததா? தங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். 

கண்மணி நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத செயல்களை மார்க்கம் என்ற பெயரால் செய்தால், நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்  என்ற கீழ்க்கண்ட நபிமொழியை மனதில் வைத்து நமது காரியங்களில் மிக மிக கவனமாக செயல்பட்டால் நரகத்தை விட்டு நமக்குப் பாதுகாப்பு கிடைக்கும். வல்ல அல்லாஹ் நேர்வழி காட்டப் போதுமானவன், அனைத்தையும் அறிந்தவன். 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: நஸயீ 1560)

திருமணத்தைப் பற்றிய விபரங்கள் இன்னும் இருக்கிறது, அடுத்த அத்தியாயத்தில் தொடர்ந்து பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்!.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி: 

''அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா''  துஆவை நமது குடும்பத்தில் நடக்கும் திருமணங்களில் ஓதாமல் இருப்பதற்கு,  நாம் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?.

அலாவுதீன்.S
இது ஒரு மீள்பதிவு

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு