Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 22, 2015 | ,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்   

யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர். 

இவர் பேச நான் கேட்ட மற்றும் படித்த சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ் 
  
இவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...

அது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.

இந்த சூழ்நிலையில் தான் யுவான் ரிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும் மறைமுகமாக அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார். எப்படி? புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார்.

உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபன் வீரர் ஒருவரின் முன், கழுதையிலிருந்து தவறி விழுந்து மாட்டிக்கொண்டார். உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். 

சிறையிலிருக்கும் போது தன்னை ஒரு தாலிபன் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே சென்ற பின் குரானைப்  படிப்பதாக தான் அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.

கொடுத்த வாக்குறுதியை காப்பதற்காகவும், மேலும் பெண்களின் நிலை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆராய்வதற்கும் குரானைப் படிக்க, 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...

இனி இவர் சொல்ல நான் படித்த, கேட்ட சில தகவல்கள்...

சிறையிலிருந்த போது... 

"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.

அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத் துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப்  போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு <> பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...  

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.

அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?

இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..

என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?

இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச  மரியாதை அளித்தால் போதுமாம்.

இதனை அந்த குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது. மேலும் சண்டே எக்ஸ்பிரஸ் குழுவினர் என்னை காப்பாற்ற எடுத்த முயற்சி அளப்பறியது"                

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே, அதாவது இஸ்லாத்தை பற்றி படித்துக்கொண்டிருந்த போதே,  மது அருந்துவதை நிறுத்தி விட்டார்.

"இஸ்லாம் என் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்துவிட்டது. நான் மதுவை நிறுத்தி விட்டேன். இனி தொலைப்பேசியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஆண் நண்பர்களிடமிருந்து பார்ட்டிகளுக்கு செல்ல எப்போது அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் போவதில்லை"

<>இவருக்கு இஸ்லாத்தில் உள்ள சந்தேகங்களை களைய பெரிதும் உதவியது, பிரிட்டன் ஊடகங்களால் அடிப்படைவாதி என்றும் தீவிரவாத எண்ணங்களை உருவாக்குபவர் என்றும் சொல்லப்பட்ட பின்ஸ்பரி பார்க் (Finsbury Park Mosque, North London) மசூதியின் இமாம் அபு ஹம்சா அல்-மஸ்ரி.   

"அவர் எனக்கு மிகவும் உதவியிருக்கிறார். ஒருமுறை எனக்கு அவரிடமிருந்து அழைப்பு.

சகோதரி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள். 

இல்லை இல்லை, நான் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது.

அப்படியா, ஒன்றும் அவசரமில்லை, நன்றாக ஆராய்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவி தேவையென்றால் முஸ்லிம் சமுதாயமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நமக்கு மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். நாளையே நீங்கள் இறந்தால் நீங்கள் சேருமிடம் நரகம்தான்...

ஊடகங்களோ இவரை தவறாக சொல்கின்றன, ஆனால் இவரோ மிகவும் கண்ணியமானவராக தெரிந்தார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன.அந்த வார்த்தைகள் நான் இஸ்லாத்தை ஏற்கும்வரை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன"

யுவான் ரிட்லி அவர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தன்னால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டது ஐந்து வேலை தொழுகைகளைத்தான். இப்போது அவர் அதனை நிவர்த்தி செய்து கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்                           

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளை கடுமையாக விமர்சிப்பவர்...

அமெரிக்காவின், தீவிரவாதத்தின் மீதான போரானது, உண்மையில் இஸ்லாத்தின் மீதான போர் என்று கூறியவர்.

தான் சிறையிலிருந்தபோது இஸ்ரேலின் உளவுத்துறை தன்னை கொல்ல சதி செய்ததாகவும், அதன்மூலம் தாலிபன்களின் மீதான போருக்கு ஆதரவு கூடுமென அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறியவர்.

பல சமயங்களில் சகோதரி யுவான் ரிட்லி அவர்களின் வார்த்தைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு முறை அவர் கூறினார்...

"கோக கோலாவை (Coca Cola) முஸ்லிம்கள் குடிப்பது நம் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் சகோதரிகளின் ரத்தத்தை குடிப்பதற்கு ஈடாகும். இதற்கு நாம் நேரடியாக இஸ்ரேலிய ராணுவத்திடம் சென்று குண்டுகள் கொடுத்து நம் பாலஸ்தீனிய மக்களை சுடச்சொல்லலாம்"

ஆவேசமாக பேசக்கூடியவர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், மிகுந்த துணிச்சல்காரர்.
  • அரசுகளால் தீவிரவாதிகள் என்று கூறப்படும் சிலருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர்.
  • ஒருமுறை சவூதி இளவரசரிடம் கைக்குலுக்க மறுத்து தன் வேலையை இழந்தவர்.
இப்படி பல சொல்லலாம்.

முஸ்லிம்களுக்கெதிரான செயல்களை கண்டித்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். 

ஒருமுறை "ஏன் சிலர் (Islamophobes) முஸ்லிம்களை கண்டால் பயப்படுகிறார்கள்" என்று ஒருவர் கேட்டதற்கு, "நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை அவர்கள் நம்மை பார்த்து பயந்து கொண்டுத்தான் இருப்பார்கள் (They will fear us until we fear Allah(swt))" என்று கூறியவர்.

மேலும் "ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்"

தன்னை மிகுந்த நெகிழ்ச்சி அடையச்செய்த ஒரு நிகழ்ச்சியாக அவர் கூறியது...

"எனக்கு இறைவன் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில வருடங்களிலேயே கொடுத்தான். ஒருமுறை தொழுகைக்கு தாமதமாகிவிட்டது. பாங்கு சொல்லிவிட்டார்கள். நான் அவசர அவசரமாக ஓடுகிறேன், அங்கே சென்றால் என்னைப்போல பலரும் தாமதம். நாங்கள் எல்லோரும் முட்டிமோதி கொண்டிருக்கிறோம் பள்ளிவாயிளுக்குள் நுழைய. ஒரே குழப்பம்.

அப்போது தக்பீர் சொல்லப்பட்டது. நான் என் தொழுகை விரிப்பை சாலையிலேயே விரித்து விட்டேன். அப்போது பார்க்கிறேன் என் முன்னும் , பின்னும் ஆயிரக்கணக்கான மக்கள், மிக அழகாக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள், மிக அதிக ஒழுக்கத்துடன். சில நொடிகளுக்கு முன் குழப்பங்களுடன் இருந்த இடமா இது?

நான் சொல்லுகிறேன், உலகில் எந்த ஒரு ராணுவமும் இப்படி ஒரு ஒழுங்கை ஒருசில நொடிகளில் கொண்டுவரமுடியாது. பாருங்கள் என் குடும்பத்தை, இதுதான் எங்கள் ஒற்றுமை, இதுதான் எங்கள் சகோதரத்துவம்.

இந்த சகோதரத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடித்திருந்தால், இன்று அவர்கள் நம் நாடுகளை நெருங்கியிருக்க மாட்டார்கள். நம் சகோதரர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்"      

ஹிஜாப்பைப் பற்றி இவர் சொல்ல கேட்கனுமே...அடடா...

"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது? என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்"  

ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,

"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே...இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,

சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், "நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பது...

இறைவன், தான் நாடியவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வரும் ஒவ்வொரு விதமும் வியப்பைத் தருகின்றன. அவர்களின் மூலம் அவன் நிறைவேற்றும் காரியங்களும் நம் கற்பனைக்கெட்டாதவை. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

சமீபத்தில் நான் கண்டு வியந்த மற்றுமொருவர் சகோதரர் ஜோஷுவா எவன்ஸ் (Br.Joshua Evans) அவர்கள். இவருடைய "How the Bible led me to Islam" என்ற வீடியோவை பாருங்கள், யு டியுப்பில் கிடைக்கிறது. இவர்களைப் போன்றவர்களை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றில் முக்கியமான கேள்வி "Did I took Islam for Granted?" என்பதுதான்...


யுவான் ரிட்லி அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரு மிகப்பெரும் ஆசை, தன் மகள் டைசி (Daisy) இஸ்லாத்தின்பால் வரவேண்டும் என்பதுதான்.  

"ஆம், அவள் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவளாக வரவேண்டும்" 

ஒருமுறை யுவான் ரிட்லி அவர்கள் மிக அழகாக சொன்னது...

"இஸ்லாத்தில், இறைநம்பிக்கையை வைத்தே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும், அழகினாலோ, வைத்திருக்கும் பணத்தினாலோ, பதவியினாலோ அல்ல"    

அவர் சொன்ன இந்த குரானின் அர்த்தங்கள் நம்மிடம் என்னென்றும் இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும்.

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்... 

References:
1. Sister Yvonne Ridley's Speech at Reverts Meeting, New Zealand, 2005
2. Sister Yvonne Ridley's Interview at "The Hour", Canadian Broadcasting Corporation TV   
3. Sister Yvonne Ridley's interview with BBC, dated 21st Spetember 2004.
4. Sister Yvonne Ridley's Interview with Rachel Cooke, The Guardian dated 6th July 2008.
5. How I come to love the Veil, interview with Sister Yvonne Ridley, The Washington Post dated Oct 22, 2006


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ
நன்றி : http://www.ethirkkural.com/2010/03/blog-post.html

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு