Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 13 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 30, 2016 | ,


இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கும் பிறமத சகோதரர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள முற்படும் சகோதரர்களும் தவறாமல் எடுத்து வைக்கும் முக்கியமான கேள்வி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பலதாரமணம் பற்றியதாகும். பெரும்பாலானோர் இது ஆண் பெண் சமவுரிமை என்கிற நோக்கில் அணுகுகிறார்கள். இன்னும் சிலர் இதை பெண்களுக்கு இஸ்லாத்தால் இழைக்கப்படும் கொடுமையாகவும் நினைக்கின்றார்கள். யாராக இருந்தாலும் அந்த நண்பர்களுக்கு விளக்கம் தரவேண்டியது ஒரு அழைப்புப் பணியாளரின் கடமையாகும்.

இஸ்லாம் எந்த சூழ்நிலையில் எந்தெந்தக் காரணங்களுக்காக பலதார மணத்தை அனுமதித்து இருக்கிறது – அப்படி அனுமதிக்கப்ட்டாலும் நடைமுறையில் அவ்வாறு பரவலாக பின்பற்றப்படுகிறதா என்பதைப் பற்றி பின்னர் பேசலாம். அதற்கும் முன்பாக பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் இருக்கும் நியாயத்தை சற்று அலசலாம். 

இந்த அலசலை, கடந்த வாரம் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து தொடங்குவது நலமாக இருக்கும் என்று கருதுகிறோம். அரசால் அறிவிக்கப்பட்ட தமிழக வாக்காளர் பட்டியல் இப்படிப் பேசுகிறது. 

ஆண் வாக்காளர்கள் 2,88,17,750
பெண் வாக்காளர்கள் 2,90,93,349
திருநங்கைகள் 4,383. 

இந்தப் புள்ளி விபரம் சொல்லும் உண்மை என்னவென்றால் , ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதுதான். இதே நிலை எல்லா மாநிலங்களிலும் நிலவுகிறது. பெண்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு புள்ளி விபரம் சொல்வது என்னவென்றால் பெண்களில், கணவனை இழந்த விதவைகள் குறிப்பாக இளம் விதவைகளும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் அதிலும் நாட்டிலேயே தமிழகமே முதலிடம் வகிக்கிறது என்பதும்தான். தமிழகம் இந்தத் தலைமை இடம் பெறக் காரணம் அரசே நடத்தும் மதுக்கடைகள் என்பது ஒரு தலையாய காரணம் . 

உலக மக்கள்தொகையை ஆய்ந்தாலும் உலகம் முழுதுமே ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்ற முதல் உண்மையை நாம் இப்போது உணர்த்த வேண்டியதாக இருக்கிறது. சில நாடுகளின் உதாரணங்களை சுட்டிக் காட்டலாம். அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட 78 லட்சம் அதிகமென்றும் நியூயார்க்கில் மட்டும் 10 லட்சம் அதிகமென்றும் அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருபாகம், எயிட்ஸ் நோய்க்கு பாதை போட்டுக் கொடுக்கும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் சொல்கிறது. பிரிட்டனில் இந்தப் பாலின வேறுபாடு 40 லட்சம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஜெர்மனும் இந்தப் பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறது. அந்த நாட்டில் பெண்கள் 50 லட்சம் பேர் அதிகமாக இருக்கிறார்களாம். ரஷ்யா இந்தப் போட்டியில் விட்டுக் கொடுக்குமா? அந்த நாட்டில் 90 லட்சம் பெண்கள் ஆண்களைவிட அதிகம் அதிகம்.

“ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை “ என்ற கோட்பாட்டை உலக நாடுகள் பின்பற்றினால் ஒரு ஆணுக்கு ஒரு பெண் மனைவியாக வாய்க்கும் அளவுக்கு இருபாலினத்தின் மக்கள்தொகை சமநிலையில் இருக்கிறதா என்ற கேள்வியை இந்தப் புள்ளிவிபரங்களைக் கண்ட பிறகு உலகைநோக்கி நாம் கேட்போம். 

மக்கள்தொகை மாறுபாடுமட்டுமல்ல பெண்களின் ஆயுட்காலம் ஆண்களின் ஆயுட்காலத்தைவிட அதிகம் என்றும் அறிகிறோம். அதனினும் மேலாக, போர் முதலிய உயிருக்கு ஆபத்தான காரியங்களில் ஆண்களே அதிகம் அல்லது முழுக்க முழுக்க ஈடுபடுகிறார்கள். அடுத்தபடியாக பிரயாணங்களில், விபத்துக்களில் உயிரை விடும் நிலைமையும் பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். ஒரு கப்பல் மூழ்கிறது அல்லது ஒரு விமானம் விபத்தில் விழுகிறது என்றால் அத்தகைய விபத்துக்களில் இறப்பவர்களிலும் ஆண்களே அதிகம். குடும்பத்துக்காக பொருள் தேடி வெளியுலகம் செல்லும் ஆண்களும் தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் ஆண்களுமே விபத்துக்களில் கொத்துக் கொத்தாக இறந்து போகிறார்கள். ஆகவே விதவைகளாக வாழவேண்டிய நிலைமை பெண்களுக்கும் அற்ப ஆயுசில் இறந்து போகும் நிலைமை ஆண்களுக்கும்தான் அதிகம் என்பது ஏற்கத்தக்க உண்மை. 

இத்தகைய காரணங்களால் விதவைகளாகப் போகும் பெண்கள், அப்படியே கவனிக்கப்படாமல் விட்டு விடப்பட வேண்டிய வேடிக்கைப் பொருள்கள்தானா? அந்தப் பெண்கள் மானம் கருதி உடல்பசியை அடக்கலாம்; வயிற்றுப்பசி அடக்க வழி என்ன? 

ஆண்களுக்கு அரவணைப்பு மட்டும் போதும். பெண்களானால் அவர்களுக்கு அரவணைப்பும் வேண்டும் அத்துடன் அவர்கள் போர்த்திக் கொள்ள போர்வையும் கொடுக்க வேண்டும். கணவன் என்ற பாதுகாப்பு வேலி பெண்களையும் அவர்களது மானத்தையும் வாழ்வையும் பாதுகாத்து வரும் நேரத்தில் போர், விபத்து போன்ற காரணங்களால் சாய்ந்து விழுந்துவிடுமானால் கண்ட கண்ட வெள்ளாடுகளும் வேலிதாண்டி மானம் எனும் பயிரை மேய்ந்துவிட வாய்ப்புண்டு. ஆகவே விதவையான பெண்களின் மானப் பயிரை சட்டரீதியாக மற்றொரு வேலிபோட்டு காக்கவேண்டிய கடமை உணரப்பட்டதாலேயே இயன்றவர்கள், சக்தி படைத்தவர்கள், வாய்ப்புள்ளவர்கள், நீதி தவறாத வகையில் தனது மனைவிமார்களை நடத்த வல்லமை படைத்தவர்கள் நான்கு பெண்கள் வரை திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்ற அனுமதி இஸ்லாத்தில் வழங்கப்பட்டது. 

சிறுவயது ஆண்களின் மரணம் சமுதாயத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்த நிலையில் அந்த ஆணை மணமுடித்த பெண் விதவையாகின்றாள். இவளுடைய வாழ்க்கை பாதுகாப்பு கேள்வியாகிறது. உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகள் அவளது பெற்றோர்களாளோ அல்லது உடன்பிறந்தவர்களாளோ கொடுக்கப்படக் கூடும். உணவு உடை உறைவிடம் போன்றவை எவ்வாறு ஒரு மனிதனுக்கு அவனது வாழ்க்கையில் தவிர்க்கப்பட முடியாத ஒன்றோ, அது போலவே, குடும்ப வாழ்க்கையும் தாம்பத்ய உறவும் உடற்கூறு அறிவியல் ரீதியாக தவிர்க்கப்பட முடியாத ஒன்றே என்பது உண்மையா? பொய்யா?

இது எல்லா மனிதர்களின் உடல் தேவை. உணவு உட்கொள்ள பொருளாதாரத்தை முறையான வழியில் ஈட்ட முடியாத ஒருவன் திருடுவது எப்படி தவிர்க்க முடியாமல் போய்விடுகிறதோ அதே போல, குடும்ப வாழ்வின் உடல் தேவைகள் முறைப்படி வழங்கப்படாதிருந்தால், முறைதவறிய வழியில் பெற வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். விபச்சாரமும் இரவு விடுதிகளும் உலகில் வளர்ந்தோங்க இவைகளே அடிப்படைக் காரணம். முறைதவறி பெறும் உடலின்பம் சமுதாயத்தின் நலனுக்கு உகந்ததல்லவே? எனவே, இத்தகையோருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது பரிகாரமே தவிர பரிகாசத்துக்குரியதல்ல. 

இந்த அனுமதி இறைவனால் எவ்வாறு எந்தக் காலகட்டத்தில் வழங்கப்பட்டது என்பதையும் பார்க்கலாம். திருமறையின் அன்னிஸா அத்தியாயம் பெண்களைப் பற்றியும் பெண்களின் உரிமைகளைப் பற்றியும் தொடக்கத்தில் பேசுகிறது. அந்த அத்தியாயத்தின் 3- வது வசனம், இப்படிக் கூறுகிறது. 

“அனாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் ( அவர்களிடையே) நீதமாக நடந்திடமுடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணைமட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருக்க இதுவே மிகவும் நெருக்கமானதாகும்”. 

அனாதைகள் என்று இங்கு திருமறை குறிப்பிடுவது யாரை? 

இஸ்லாத்தை பெருமானார் ( ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த காலங்களில் நடைபெற்ற உஹுதுப் போரில் - அதிகமான எண்ணிக்கை உடைய முஸ்லிம்கள் இஸ்லாத்தைத் தழுவாத நிலையில் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சிறு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 முஸ்லிம்கள் போரில் இறந்து போன காரணத்தால் குடும்பத்தலைவனை இழந்து அனாதைகளான பெண்களையும் அவர்களது குழந்தைகளையும்தான். 

இவ்வாறு திடீரென்று ஒரு கணிசமான எண்ணிக்கையுள்ள அனாதைகள் ஒரு சிறிய சமுதாயத்தில் உண்டாகும்போது அவர்களை அநியாயமான முறையில் இச்சைகளுக்கு இரையாக்கிவிடாமல் அவர்களை இறைவன் காட்டிய வழியில் சக்தி இருந்தால் மணம் புரிந்து அரவணைத்திடுங்கள்; சட்டபூர்வமான அங்கீகாரம் கொடுங்கள் என்று சொல்வது தவறா? 

ஒரு செய்தியை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ளலாம் என்று வெறுமனே அனுமதிப்பதற்காக மேற்கண்ட வசனங்கள் இறைவனால் எடுத்துரைக்கப்படவில்லை. ஏனெனில், இந்த வசனம் இறக்கப்படுவதற்கு முன்பே பலதார மணம் நடைமுறையில் இருந்தது. இந்த வசனம் இறங்கிடக் காரணமே போர்களில் இறைவனுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுடைய அனாதைக் குழந்தைகளின் பிரச்னையை தீர்த்துவைக்க உங்களால் இயலவில்லை என்றால் அக்குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களை உங்களின் மனைவிகளாக ஏற்றுக் கொண்டு ஆதரியுங்கள் என்ற சமூக நல நோக்கத்துக்காகவே . இந்த மனிதாபிமான ரீதியில் அனுமதிக்கப்பட்ட பலதாரமணம் தவறா? 

மேலும், அந்த வசனத்தை இன்னும் ஆய்ந்து பார்ப்போமானால் கட்டுப்பாடு இல்லாத பலதார மணத்தை திருமறை தடுத்து அதற்கு நான்கு என்ற வரையறை வைத்து இருக்கிறது. அதற்கும் சில கடுமையான நிபந்தனைகளையும் விதித்து இருக்கிறது என்பதை நடுநிலையாக நின்று காணலாம். எல்லா மனைவியரிடமும் நீதியுடன் சமத்துவமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை மீறுபவன் இறைவனின் கட்டளையை மீறியவனாவான். அந்த வகையில் மறுமையில் அவன் தண்டிக்கப்படுவான் . இந்த நிபந்தனை இஸ்லாத்தின் ஷரியத் சட்டம். இதை மீறுபவன் இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி இம்மையிலும் தண்டிக்கப்படுவான் என்பதே உண்மை.

எனவே ஆண்களின் ஜனத்தொகை குறைவு எனும் எதார்த்தமான நிலையில், விதவையான பெண்களுக்கு மணமுடித்துவைப்பது அல்லது அவர்களையும் இறந்த கணவனோடு சேர்த்தே உயிரோடு கொன்றுவிடுவது என்ற இரண்டு தீர்வுகளில் அவளுக்கு மறுமணம் செய்துவைப்பதுதான் மனிதநேயமான தீப்பாக இருக்கமுடியும். 

மறுமணம் என்கிற சலுகையும் வாய்ப்பும் இல்லாததால் பெண்கள், கணவன் இறந்ததும் அவன் உடலை எரித்த நெருப்பின் சிதையிலேயே உயிரோடு எரித்த உடன்கட்டை என்கிற “சதி” எனப்படுகிற பெண்களுக்கு எதிராக நடந்த சமுதாய சதி நூற்றண்டுகளுக்கு முன்பு வரை நமது இந்திய சமுதாயத்தில் இருந்துவந்த கொடுமையையும் நாம் அறிந்து இருக்கிறோம். 

சில அமைப்புகளும் சக்திகளும் தவறான புரிந்துணர்வில் முஸ்லிம்கள் பல பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை வகைவகையாக அனுபவிக்கிறார்கள் என்று தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். இஸ்லாம் அனுமதித்துள்ள பலதார மணத்தை சாடுகிறார்கள். தங்களின் தவறான புரிந்துணர்வுக்கு திருமறை வசனத்தையும் சான்றாகத் தந்து விவாதிக்கிறார்கள். யானையைத் தடவிப் பார்த்த குருடர்களின் கதையைப் போலத்தான் இந்நிலை இருக்கிறது. உண்மையில் அவர்களது இந்த விவாதங்கள் மேற்கத்திய அடிமைத்தனத்தின் விளைவே ஆகும். இஸ்லாம் அனுமதித்துள்ள பலதார மணத்தை ஒரு வசதி என்ற நிலையில்தான் பார்க்கவேண்டுமே தவிர சதி என்றோ சமத்துவமின்மை என்றோ என்று பார்க்கக் கூடாது என்பதை சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.காரணம், பலதார மணம் என்பது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சமூக, ஒழுக்க நடைமுறைகளில் தேவையாக இருக்கிறது என்பதை நமது மேற்கண்ட வாதங்கள் எடுத்துரைக்கின்றன. 

அளவற்ற அளவிலான பெண்களை அந்தப்புற நாயகிகளாக அனுபவித்துக் கொண்டு மிருகங்களை விடகேவலமாக நடத்திக் கொண்டிருந்த சமூகத்தில், அநாதைகளையும் நிர்க்கதியானவர்களையும் சட்டப்பூர்வமாக மனைவியாக்கி சாந்தியையும் சமத்துவத்துவத்தையும் பேணச்சொன்ன இஸ்லாம், அதிக பட்சம் நான்கு என்ற வரையறையையும் கட்டளையாக இட்டுள்ளதையும், ஆண்களால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் நீதமாக நடந்து கொள்ள முடியாது என்று எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தைச் சொல்லி நீதமாக நடக்க முடியாதவர்களுக்கு ஒரு மனைவியே போதும் என்று திட்டவட்டமாகச் சொல்லி இருப்பதை , கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை செயல்திட்டத்தின் அடிப்படையில் ( Single Agenda) சிந்திக்க மறுப்பவர்கள் சிந்திக்கும் வண்ணம் வாதங்களை எடுத்துரைப்பது ஒரு அழைப்பாளனின் கடமையாகும். 

எனவே பலதாரமணம் சமுதாயத்தில் இருக்க வேண்டிய பரிகாரமே.

அதைப் பயன்படுத்துவது தனிநபர்களின் சூழ்நிலைகளைப் பொறுத்தது என்பதே உண்மை. 

பலதாரமணத்தை எதிர்த்து அதற்காக வாதிடும் நண்பர்கள் சார்ந்துள்ள மதங்கள் உண்மையிலேயே பலதாரமண விஷயத்தை எவ்வாறு கையாள்கிறது என்பதையும் உலக மதங்களில், வரலாற்றில் இந்தக் கோட்பாடு எவ்வாறு எடுத்தாளப்பட்டிருகிறது என்பதையும் இன்னும் சற்று விரிவாக விளக்க வேண்டி இருக்கிறது. 

இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹிம் அன்சாரி

8 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

பலதார மணம் என்பது ஆண்களுக்கானச் சலுகையல்ல; அது பெண்களுக்கான நிவாரணம் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

ஆயிரம் மனைவியர் வைத்திருந்த தசரதர் முஸ்லிமல்ல என்பதும் வள்ளி தெய்வானையோடான இந்துக்களின் கடவுள் முருகன் முஸ்லிமல்ல என்பதும் கருத்தில் கொள்ளத் தக்கது.

நடைமுறையில் முஸ்லிம் அல்லாதோரே பலதாரம் வைத்துள்ளனர், செட்டப், வைப்பு, கேர்ள் ஃப்ரெண்ட் போன்ற திரைமறைப் பெயர்களைக் கொண்டு.

நல்ல, நீதமான விளக்கம்.

மாஷா ஆல்லாஹ்

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

crown said...

இது எல்லா மனிதர்களின் உடல் தேவை. உணவு உட்கொள்ள பொருளாதாரத்தை முறையான வழியில் ஈட்ட முடியாத ஒருவன் திருடுவது எப்படி தவிர்க்க முடியாமல் போய்விடுகிறதோ அதே போல, குடும்ப வாழ்வின் உடல் தேவைகள் முறைப்படி வழங்கப்படாதிருந்தால், முறைதவறிய வழியில் பெற வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். விபச்சாரமும் இரவு விடுதிகளும் உலகில் வளர்ந்தோங்க இவைகளே அடிப்படைக் காரணம். முறைதவறி பெறும் உடலின்பம் சமுதாயத்தின் நலனுக்கு உகந்ததல்லவே? எனவே, இத்தகையோருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது பரிகாரமே தவிர பரிகாசத்துக்குரியதல்ல.
---------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.அருமையான உதாரணமாக திருட்டோடு ஒப்பிட்டு கொள்ளையடிச்சிருக்கீங்க!கள்ள தொடர்பு என்பது திருட்டுதானே? அந்த இருட்டு திருட்டை வெளிச்சம் போட்டிருக்கீங்க!

crown said...

மறுமணம் என்கிற சலுகையும் வாய்ப்பும் இல்லாததால் பெண்கள், கணவன் இறந்ததும் அவன் உடலை எரித்த நெருப்பின் சிதையிலேயே உயிரோடு எரித்த உடன்கட்டை என்கிற “சதி” எனப்படுகிற பெண்களுக்கு எதிராக நடந்த சமுதாய சதி நூற்றண்டுகளுக்கு முன்பு வரை நமது இந்திய சமுதாயத்தில் இருந்துவந்த கொடுமையையும் நாம் அறிந்து இருக்கிறோம்.

சில அமைப்புகளும் சக்திகளும் தவறான புரிந்துணர்வில் முஸ்லிம்கள் பல பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை வகைவகையாக அனுபவிக்கிறார்கள் என்று தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். இஸ்லாம் அனுமதித்துள்ள பலதார மணத்தை சாடுகிறார்கள். தங்களின் தவறான புரிந்துணர்வுக்கு திருமறை வசனத்தையும் சான்றாகத் தந்து விவாதிக்கிறார்கள். யானையைத் தடவிப் பார்த்த குருடர்களின் கதையைப் போலத்தான் இந்நிலை இருக்கிறது. உண்மையில் அவர்களது இந்த விவாதங்கள் மேற்கத்திய அடிமைத்தனத்தின் விளைவே ஆகும். இஸ்லாம் அனுமதித்துள்ள பலதார மணத்தை ஒரு வசதி என்ற நிலையில்தான் பார்க்கவேண்டுமே தவிர சதி என்றோ சமத்துவமின்மை என்றோ என்று பார்க்கக் கூடாது என்பதை சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.காரணம், பலதார மணம் என்பது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சமூக, ஒழுக்க நடைமுறைகளில் தேவையாக இருக்கிறது என்பதை நமது மேற்கண்ட வாதங்கள் எடுத்துரைக்கின்றன.
--------------------------------------------------
இஸ்லாத்தின் அணைத்து காரியமும் ஒழுக்கம் மீறாமலே நடத்தப்படுவதும் ,பிற சமூகம் முன்பு சதி போன்றமூட கொலைகள் செய்து பெண்களுக்கு எதிராக இருந்தென ஆதாரம் கொண்டு விளக்கியவை எந்த சதியில்,சகதியிலும் எந்த திகதியிலும் சிக்குவதில்லை இஸ்லாம் கொள்கை!அருமை உதாரணங்கள்!

sabeer.abushahruk said...

//எனவே பலதாரமணம் சமுதாயத்தில் இருக்க வேண்டிய பரிகாரமே.//

ஆம்.

அன்றும் இன்றும் என்றும் மனிதர்களின் தேவையை அறிந்தே அவர்களின் வாழ்க்கையை வடிவமைத்த இறைவன் சொல்லும் வழி கண்டிப்பாக சரியாகத்தான் இருக்கும்.

Shameed said...

பலதார மணத்தை பற்றிய அலசல் வாக்காளர் பட்டியலில் இருந்து தொடங்கியது ஒரு நச்

Ebrahim Ansari said...

தம்பி கவிஞர் சபீர், & கிரவுன்

வ அலைக்குமுஸ் சலாம்.

இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் நாளை பதில் தருவேன்.

Unknown said...

எழுத்து என்பது நன்கு பழுத்திருக்க வேண்டும். அதிலும், உண்ணத் தக்க பழமாக இருக்க வேண்டும். இவ்விலக்கணம், இத்தொடரில் நன்றாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

"நியூயார்க்கில் மட்டும் 10 லட்சம் அதிகமென்றும் அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருபாகம், எயிட்ஸ் நோய்க்கு பாதை போட்டுக் கொடுக்கும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் சொல்கிறது."

"ஜெர்மனும் இந்தப் பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறது. அந்த நாட்டில் பெண்கள் 50 லட்சம் பேர் அதிகமாக இருக்கிறார்களாம். ரஷ்யா இந்தப் போட்டியில் விட்டுக் கொடுக்குமா? அந்த நாட்டில் 90 லட்சம் பெண்கள் ஆண்களைவிட அதிகம் அதிகம்."

எழிலான எழுத்தாக்கம்.




Ebrahim Ansari said...

அன்பான காக்கா,

அல்லாஹ் பெரியவன். தங்களைப் போன்ற அறிஞரின் பாராட்டு மிக்க மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. ஜசக்கல்லாஹ் காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு