Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 14 14

அதிரைநிருபர் பதிப்பகம் | February 13, 2016 | ,


பலதார மணம் ஒரு பாவமல்ல; பரிகாசத்துக்குரியதல்ல; அது சூழ்நிலையின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு சட்டபூர்வமான  பரிகாரமே என்ற கருத்தை சென்ற வாரம் நிலை நிறுத்தினோம். பலதாரம் என்பதால் இதுபற்றி பலமுறை பேச வேண்டி இருக்கிறது. இந்த முறையை பரிகசிக்கும் நண்பர்களுக்கு இன்னும் சில விளக்கங்களை அவர்கள் உணரும் வண்ணம் எடுத்துரைக்கவேண்டி இருக்கிறது. இது பற்றி அழைப்புப் பணியாளருக்கு விரிவான விளக்கங்கள் தேவைப் படுகிறது. 

கடந்த வாரம் மக்கள்தொகைப் பெருக்கத்தின் ஆண் பெண் சமமின்மை பற்றிப் பேசினோம். இந்த வாரம் சமூகம் சார்ந்த இன்னும் சில விஷயங்களையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.  

இஸ்லாம் அனுமதித்துள்ள பலதாரமணம் பற்றி பரிகசிக்கும் சகோதரர்கள் அதை ஏதோ உடல் உறவு தொடர்பான செயலாக மட்டுமே கருதிக் கொண்டு இருக்கிறார்கள். முஸ்லிம்கள் அதிகமான அளவு மாமிச உணவு வகைகளை உண்கிறார்கள்.  ஆகவே அவர்களுக்கு உடல் இச்சை என்பது அதிகமாக இருக்கிறது. அதனால் கூடுதலான பெண்களை மணமுடிக்கிறார்கள் என்று ஒரு அறியாமையின் அடித்தளத்திலிருந்து ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.  ஆனால் சிந்தித்துப் பார்த்தால் அந்த அனுமதி, வெறும் உடல் உறவு தொடர்பானதுமட்டுமல்ல . ஒரு குடும்பத்தின் அமைப்பு மற்றும் சமூக நலம் ஆகியவற்றோடு   பின்னிப் பிணைந்தது ஆகும் என்பது தெளிவாகும். 

மக்கள் தொகையின் சமத்துவமின்மைக்கு அடுத்து,  திருமணம் செய்யும் பருவத்தை ஆண்கள் முதலில் அடைகிறார்களா அல்லது பெண்கள் அடைகிறார்களா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு ஆண் இருபத்தி ஐந்து வயதில்தான் திருமணம் செய்துகொள்ளத் தகுதி பெறுகிறான். ஆனால் அதே இருபத்தி ஐந்து வயதில் பெண் திருமணம் ஆகாமல் இருந்தால் ‘முதிர்கன்னி’ என்று முத்திரை குத்தப்படுகிறாள். அத்தகைய பெண்களுக்கு பலநேரங்களில் வாய்ப்பாக அமைவது இரண்டாம்தாரமாகத் திருமணம் ஆவதுதான் என்பது யார் மறுத்தாலும் மறுக்காவிட்டாலும் உண்மையானது.   ‘பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவள் துணையாக வேண்டும்’ என்பார்கள். முதிர்கன்னிகளுக்குப் பொருந்தாத் திருமணம்தான் அவர்கள் வாங்கிவந்த வரமாக இருக்கிறது. 

காலம்கடந்த திருமணங்களால் சமூகத்தில் விபச்சாரம் போன்ற குற்றங்கள் மலிவாகிவிட்டன; பெற்றோருக்குத் தெரியாமல் கண்டவர்களுடன் ஓடிப்போகும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. திருமணமே ஆகாமல் பெண்கள் கற்பழிக்கப்படுவதும், கர்ப்பமடைவதும், கைவிடப்படுவதும் சகஜமாகிவிட்டன. இதற்கு ஒரு உதாரணமாக அல்லது ஆதாரமாக   மலேசியாவில் வாழும்  இந்து சகோதரர்களின் சமுதாயத்தில் அத்தகைய குற்றங்களும் அவலங்களும்  அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர் என்பதை மலேசிய நண்பன் என்கிற நாளிதழ் தனது 05/01/2002 தேதியிட்ட இதழில் குறிப்பிட்டு இருக்கிறது. 

ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறோம். பாலின ஏற்ற தாழ்வால் பாதிக்கப்பட்ட இருபால்   இளைஞர்கள்,  1948 ஆம் ஆண்டு ஜெர்மனியின்  மியுனிச் நகரில் ஒரு மாநாடு நடத்தினார்கள். மாநாட்டில் கலந்துகொண்ட சிலர் தங்களின் பிரச்னைகளுக்கு பலதாரமணத்தை தீர்வாக வைத்தார்கள். இதனை ஆரம்பத்தில் எதிர்த்த பலர் வேறு வழி ஒன்றும் காண இயலாமல் பலதாரமணமே இதற்கு தீர்வாக அமையும் என்று தீர்மானம் போடவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். அதுவே வழி என்று ஆய்ந்து அறிந்தார்கள்; அறிவித்தார்கள். 

சமூகக் கொடுமைகளில் மிகவும் தலையாய கொடுமை வரதட்சணைக் கொடுமையாகும். இது ஒருவகையான கவுரவக் கூலியாகும்.  இஸ்லாம் இந்தக் கொடுமையை அனுமதிக்காத போதும் வேறு சில சமூகங்களில் இந்தக் கொடுமை நிலவியே வருகிறது என்பது நிதர்சனம். அதே நேரம், பெரிய அளவில் முஸ்லிம்கள் வாழும் ஊர்களிலும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் ஏதாவது ஒரு வடிவில் வரதட்சணை தரும் பழக்கம் நிலவி வருவதையும் திரைபோட்டு மறைக்க நாம் தயாரில்லை. ஒருவகையில் முஸ்லிம்களுக்கிடையே நிலவும் வரதட்சணை அல்லது கைக்கூலிப் பழக்கம் அழைப்புப் பணியாளர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் சூழலையும் நாம் மறைக்கத் தயாரில்லை. ஆனால் இங்கு சொல்ல வருவது என்னவென்றால்  இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள நேரிடும்போது  முதல் திருமணத்தைப் போல வரதட்சணை ஒரு பொருட்டாக இருப்பதில்லை  கருத்தைத்தான்.  

அடுத்ததாக, புள்ளி விபரங்களை வைத்துப் பார்க்கும்போது பெண்களின் ஆயுட்காலம் ஆண்களின் ஆயுட்காலத்தைவிட அதிகமாக இருக்கிறது.  

திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மச்சாரிகளின் எண்ணிக்கையும்  ஆண்களின் பக்கமே அதிகரித்து இருக்கிறது. அதேபோல், துறவறம் பூண்டு ஆசிரமவாசிகளாக மாறுபவர்களிலும் ஆண்களே அதிகம். இதனால் மாப்பிள்ளை சந்தையில் மாப்பிள்ளைகளுக்கு பஞ்சம் நிலவுகிறது.

அதுமட்டுமல்ல. குடி கெடுக்கும் குடியிலிருந்து மீட்டெடுக்க முடியாத இளம் வயது ஆண்களையும்,  கொலைப்படை, கூலிப்படையில் வேலை செய்யும் ரவுடிகளையும்  திருமணம் செய்வதற்கு இலாயக்கு அற்றவர்களாக மாப்பிள்ளை சந்தையில் சொத்தைக் காய்கறிகளாக ஒதுக்கி அவர்களுக்குப் பெண்கொடுக்க மறுப்பதாலும் மணமாகாத பெண்களின் எண்ணிக்கை கூடுகிறது.    

தனக்குத் திருமணமே நடக்காது என்றெண்ணித் தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.  தம் பெற்றோரால் பொருத்தமான கணவனைப் பார்த்து அதற்குரிய வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாறிக் காமக்கொடூரன்களிடம் சிக்கிக் கற்பிழந்தும்  வருகின்றனர்.

மேலே பட்டியலிட்டவையாவும் சமூகத்தில் நிலவும் சூழ்நிலைகள்.இவைகளை செய்திகளில் அவ்வப்போது கண்டு , கேட்டு வருகிறோம்.

இப்போது இஸ்லாத்தின் பக்கமும் ஏனைய சகோதர மதங்களின் மீதும் ஒப்பீடாக  நமது கவனத்தைத் திருப்புவோம். 

உலகில் மனித குலத்தை வழிநடத்துவதற்காக இறைவனாலும் , மகான்களாலும் பல வேதங்கள் அருளப்பட்டிருக்கின்றன. அவற்றை ஆய்ந்து பார்ப்போமானால் இறைவனால் அருளப்பட்ட வேதமான திருக் குர் ஆனில் மட்டும்தான் ஒருத்தியை மட்டுமே  திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சொன்னதுபோல் நான்கு மனைவிகள் என்பது ஒரு அனுமதி மட்டுமே; மார்க்கத்தின் சட்டமல்ல.  

ஏற்கனவே அன்னிஸா அத்தியாயம் பற்றிப் பேசி இருக்கிறோம். அதன்  129 ஆம் வசனத்தில், 

"(இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு பல மனைவியர் இருந்து , உங்கள் மனைவியரிடையே (முற்றிலும் சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது..." என்று மனிதமனத்தின்  இயல்பை திருமறை படம் பிடித்துக் காட்டுகின்றது. 

ஆகவே திருமறை குர் ஆன்

  • 4:3 ல் "சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள் )" 
  • 4:129 ல் "சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது"
என்றெல்லாம் கூறுவதன் மூலம் ஒரு பெண்ணையே மணந்து கொள்வதைத்தான்   வலியுறுத்துகின்றது என்பதையும் இஸ்லாத்தை நோக்கி எதிர்க்குரல் எழுப்பும் நண்பர்கள்  புரிந்துகொள்ளலாம். 

இஸ்லாம் கூறும் ஒழுக்கமான உறவு நெறிகளைப் பின்பற்றினால் மட்டுமே அத்துமீறி வெளிப் பெண்களுடன் தொடர்பு வைப்பவர்களின் எண்ணிக்கை மறையும், குறையும் என்பதுதான் உண்மையான நிலை.  காரணம், திருமணம் என்ற சட்டபூர்வ நிலைக்கும், ‘தொடுப்பு’, ‘சின்ன வீடு’, ‘வைப்பு’  என்கிற உண்டபின் கைகழுவி உதறிவிட்டுப் போகிற நிலைக்கும் எவ்வளவு சட்டவியல் , உடலியல்  அறிவியல் பூர்வமான வித்தியாசங்களும் விளைவுகளும் இருக்கின்றன என்பதை வினா எழுப்புவோர் விளங்கிக் கொள்ளவேண்டும்.  

இஸ்லாத்தின் மீது தவறான புரிந்துணர்வை வைத்திருக்கக் கூடிய சகோதரர்கள் தாங்கள் பின்பற்றிவரும் தங்களது சொந்த மதங்களில் காட்டப்பட்டிருப்பவை யாவை என்பதை அறிய தங்களை தாங்களே  அவர்கள் திரும்பிப் பார்த்துக் கொள்ளவேண்டியதும் அவர்களது முதல் கடமையாகும். 

முதலில்,  பலதார மணத்தை இந்து வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் எவ்வாறு அணுகுகின்றன ? என்ன கூறுகின்றன? என்பதை பார்ப்போம்.

ஒரு பிராமணர் நான்கு மனைவியரை மணக்கலாம் ( விஷ்ணுஸ்மிருதி 24:1)

கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக  மகாபாரதத்தில் கூறப்படுகின்றது. 

“புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் இருவருக்காக
அந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக ”

என்று வாலி எழுதிய பாடல் யார் காதுகளிலும் விழவில்லையா? 

“ கோபியர் கொஞ்சும் ரமணா! கோபாலகிருஷ்ணா “ என்று இசைப்பதும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டுதானே இருக்கிறது? 

ராமரின் தந்தை தசரதர்,   கிட்டத்தட்ட அறுபதாயிரம் மனைவிகளைக் கொண்டிருந்தார் என்று ராமாயணக் காவியம்  கூறுகிறது. அவர்களும் அந்தப்புர நாயகிகள்தான்.  அவர்களுடன் அரண்மனை  அரசிகளாக கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியவர்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.   .

சிவபெருமானுக்கு பார்வதி, கங்கை என்ற இரு மனைவிகள் இருந்ததாகவும் அவரது மகனாகிய முருகனுக்கும் வள்ளி, தெய்வானை என இரண்டு மனைவிகள் இருந்தனர் என்பவை ,  கந்தபுராணம் முதல் சிவபுராணம் வரை சொல்லும் செய்திகள். ஏன்? வழிபாட்டுத்தலங்களில் இருமனைவிகளின்   சிலைகளையும்  சேர்த்துவைத்துத்தானே வழிபாடும் செய்கிறார்கள்? திருவிழாக் காலங்களில் இருமனைவிகள் இடமும் வலமும் இருக்கத்தானே ஊர்வலமும் நடைபெறுகிறது? . 

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி 1951 ஆம் ஆண்டுக்கும் 1961 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் பலதாரமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே பலதாரமணம் செய்து கொண்டிருந்தனர்" என்று கூறுகிறது. ( Page 66-  67)  அவ்வாறாயின் ஒரே மனைவிதான் என்ற  சட்டம் எங்கே  போனது? 

பைபிளும் பலதார மணத்தைத் தடைசெய்யவில்லை. அதற்கு மாறாக , பழைய ஏற்பாடும் அறிஞர்களின் எழுத்துக்களும் பலதார மணத்தை அங்கீகரிப்பதையே நாம் காண்கிறோம்:

இராஜாக்கள் 11:3 சாமுவேல் 5:13 உபாகமம் 22:7 'தல்முதிக்' (TALMUDIC) ஆகிய அதிகாரங்களில் இந்த அங்கீகாரத்துக்கான சான்றுகள் இருக்கின்றன. 

பதினாறாம் நூற்றாண்டு வரை யூதர்களும் பலதார மணப் பழக்கத்தைப் பின்பற்றியே வந்தனர். அவர்கள் இஸ்ரேலுக்கு வந்து குடியேறும் வரை, பலதார மணத்தைக் கடைப்பிடித்தே  வந்தனர். இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பின்பு நடைமுறைப்படுத்தப்பட்ட  சிவில் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டாலும் பலதார மணம் அங்கும் நடைமுறையில் இருந்தே வருகிறது. 

இந்தக் கருத்துக்களெல்லாம் ஒரு அழைப்பாளர் அறிந்துவைத்திருக்க வேண்டியவைகள் ஆகும். 

அதுசரி, பெருமானார் முகமது (ஸல்) அவர்கள் மட்டும் பல பெண்களை திருமணம் முடித்துக் கொண்டார்களே அது தவறில்லையா என்றும் ஒரு விவாதம் வைக்கப்படுகிறது.

அதற்குரிய பதில் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

இபுராஹிம் அன்சாரி

14 Responses So Far:

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கத்திமுனைமேல் நடப்பது போன்று கவனமாகக் கடந்து வருகிறீர்கள் பலதார மணம் பற்றிய சட்டங்களை!

அனுமதியைத் தவறாகப் புரிந்துகொண்டு இஸ்லாமியக் கட்டளை என்றுதான் பேசுகின்றனர் விளங்காதவர்கள்.

நெற்றியடி விளக்கங்கள் தொடரட்டும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

crown said...

ஒரு ஆண் இருபத்தி ஐந்து வயதில்தான் திருமணம் செய்துகொள்ளத் தகுதி பெறுகிறான். ஆனால் அதே இருபத்தி ஐந்து வயதில் பெண் திருமணம் ஆகாமல் இருந்தால் ‘முதிர்கன்னி’ என்று முத்திரை குத்தப்படுகிறாள். அத்தகைய பெண்களுக்கு பலநேரங்களில் வாய்ப்பாக அமைவது இரண்டாம்தாரமாகத் திருமணம் ஆவதுதான் என்பது யார் மறுத்தாலும் மறுக்காவிட்டாலும் உண்மையானது. ‘பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவள் துணையாக வேண்டும்’ என்பார்கள். முதிர்கன்னிகளுக்குப் பொருந்தாத் திருமணம்தான் அவர்கள் வாங்கிவந்த வரமாக இருக்கிறது.
------------------------------------
எதார்த்த உண்மை!

crown said...

அன்பிற்குரிய காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கத்திமுனைமேல் நடப்பது போன்று கவனமாகக் கடந்து வருகிறீர்கள் பலதார மணம் பற்றிய சட்டங்களை!

அனுமதியைத் தவறாகப் புரிந்துகொண்டு இஸ்லாமியக் கட்டளை என்றுதான் பேசுகின்றனர் விளங்காதவர்கள்.

நெற்றியடி விளக்கங்கள் தொடரட்டும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

abdul said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சரியாகவும் மிகவும் நிதர்சனமாகவும் வகைபடுத்தியுள்ளீர்கள் ”பொருளாதார தேடலிலும், அரோக்கியத்தில் குறைபாடு உள்ளவர்களும் மாப்பிள்ளை சந்தையில் புறக்கனிக்கபடுகிறார்கள்.”
"மாப்பிள்ளை சந்தையில் மாப்பிள்ளைகளுக்கு பஞ்சம் நிலவுகிறது.
அதுமட்டுமல்ல. குடி கெடுக்கும் குடியிலிருந்து மீட்டெடுக்க முடியாத இளம் வயது ஆண்களையும், கொலைப்படை, கூலிப்படையில் வேலை செய்யும் ரவுடிகளையும் திருமணம் செய்வதற்கு இலாயக்கு அற்றவர்களாக மாப்பிள்ளை சந்தையில் சொத்தைக் காய்கறிகளாக ஒதுக்கி அவர்களுக்குப் பெண்கொடுக்க மறுப்பதாலும் மணமாகாத பெண்களின் எண்ணிக்கை கூடுகிறது."
அப்துல் கலாம்.

Ebrahim Ansari said...

அன்புக்குரிய தம்பிகள் பாசமும் நேசமும் மிகுந்த தம்பிகள் தீட்டும் தமிழை கூர் பார்க்கும் குணமுடைய தங்கக் கம்பிகள் கவிஞர் சபீர், கிரவுன் , கலாம் ஆகிய தங்களுக்கு அன்பான

வ அலைக்குமுஸ் சலாம்.

ஸலாத்துக்கு பதில் கூறிவிட்டேன். பதில்கள் இன்ஷா அல்லாஹ் பின்னர்.

வஸ்ஸலாம்.

sabeer.abushahruk said...

இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் நிலவும், பல தலைப்புகளிலான வெற்றிடங்களைத் தங்கள் நூல்கள் கண்டிப்பாக நிரப்பும். அதற்கான தெளிவும் ஜனரஞ்சகமும் ஆய்வறிக்கைகளும் ஆதாரங்களும் மிகவும் திறம்பட எடுத்தாளப் பட்டிருப்பது இந்நூலுக்கு மேலும் புகழ் தேடித் தரும்.

மாஷா அல்லாஹ்.

sheikdawoodmohamedfarook said...

//ராமரின் தந்தை தசரதர் அறுபதாயீரம் மனைவியர்களை கொண்டிருந்தார்//அவர் வழுக்கி விழுந்தாலும் தாங்கி பிடிக்க ஒருலச்சத்து இருபதாயிரம் கரங்கள் உண்டு.கொடுத்துவச்ச மனுஷன்.

sheikdawoodmohamedfarook said...

//கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்//திருக்குறள். புராணங்களை படிக்க விரும்பாதவர்கள் கூடஇந்தபதிவில் கூறப்பட்ட புராண எடுதுக்காட்டுகளை விரும்பியே படிக்கும் அளவுக்கு சொல்நயமும் பொருள் நயமும் பொருந்தி இருக்கிறது.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அன்பின் தம்பி சபீர் அவர்களுக்கு,
//கத்திமுனைமேல் நடப்பது போன்று கவனமாகக் கடந்து வருகிறீர்கள்//
உண்மை. எடுத்துக் கொண்ட பேசுபொருள் அப்படிச் செய்ய வைக்கிறது. தாவா பற்றிய நூல்களைப் படிக்கும்போது இறைவனின் மார்க்கத்துக்கு அழைக்கும்போது, வட்டார மொழி மற்றும் இலக்கியங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பயிற்சியும் தரப்படுகிறது.

மேலும்,
திருமறை கூறுகிறது
" தூதர்கள் அனைவரையும் அவரவர்களின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாக நாம் அனுப்பி வைத்தோம். ( செய்தியை) அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக. ! ( சூரா இப்ராஹீம் அத்தியாயம் 14 : 4. )

ஆகவே நல்ல தமிழ்மொழியில் எடுத்துரைப்பது இறைவனின் வழிகாட்டுதல்களை நிறைவேற்றுவதே தவிர வேறு ஒன்றுமில்லை.

இதைப் போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்.

அதுமட்டுமல்ல,
இறைவன் கூறுகிறான் மொழிகள் மாறுபட்டு இருப்பதும் பல்வேறு மொழிகள் வழங்கபடுவதும் இறைவனின் சான்றுகளில் ஒன்று என்று.
இதோ அர்ரூம் அத்தியாயம் இப்படிப் பேசுகிறது.

“ வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும் , உங்கள் மொழிகளும், நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக , இவற்றில் எல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன." ( 30:22) .

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன்

//நெற்றியடி விளக்கங்கள் தொடரட்டும்.//

இன்ஷா அல்லாஹ். தலைவலி வராதவரை நெற்றியடி தொடரும்.

Ebrahim Ansari said...

தலைவலி என்று குறிப்பிட்டது எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி ஏற்படும் தலைவலியைச் சொன்னேன். யாரும் எதையும் கற்பனை பண்ண வேண்டாம். அப்படியே பண்ணினாலும் அதை ஒரு வில்லங்கமாக எடுக்க வேண்டாம். ஒரு ஹுமரஸ் என்ற முறையில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

தாமதமாக கருத்திடுவதற்கு மன்னிக்கவும்.

பலதார மணம் இந்துக்களின் புத்தகங்களில் உள்ளது என்பது அவர்களில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்களின் அந்த இதிகாச புத்தகங்களை முழுமையாக அர்த்தம் விளங்கி படித்தால் நம்மை விமர்சிக்க மாட்டார்கள். அவ்வளவு அசிங்கங்கள் அங்கே..

இறை மார்க்கம் எதைச் சொன்னாலும் அது மனித குலத்திற்கு நன்மையே தரும் என்பதை நம்பியவர்கள் நிச்சயம் பலதார மணத்தை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.

நல்ல அருமையான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி காக்கா.. ஜஸக்கல்லாஹ் ஹைரா..

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் !

வ அலைக்குமுஸ் சலாம்.

ஜசக்கல்லாஹ் ஹைரா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு