Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 16. 8

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2016 | ,


அல்லாஹ்வின் அருட் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்துகொண்ட திருமணங்களின் எண்ணிக்கையைப் பற்றி உண்மைகளை விளங்காமல் விமர்சிக்கும் பிற மத சகோதரர்களின் வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாக அழைப்புப் பணியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக, அறிவியல் , நடைமுறை , அரசியல் தொடர்பான செய்திகளைக் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொண்ட மனைவிமார்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பற்றியும் வனப்புமிகு வரலாற்றுப் பின்னணிகளைக் குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது.

கடந்த அத்தியாயத்தில் அன்னை ஹதிஜா (ரலி) மற்றும் ஸவ்தா (ரலி) ஆகியோர் பற்றி குறிப்பிட்டு இருந்தோம். அன்னை ஹதிஜா (ரலி) அவர்களோடு நிகழ்ந்த முதல் திருமணம், ஒரு அனாதையான ஊழியரை ஒரு செல்வசீமாட்டி வயது வித்தியாசம் கருதாமல் செய்துகொண்ட திருமணமாக இருந்தது என்பதை கோடிட்டுக் காட்டினோம். தன்னுடைய இளம் வயதில் பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்து செய்துகொண்ட முதல் திருமணமே, தன்னைவிட 15 வயது மூத்த பெண்ணுடன் என்பது உலகே மூக்கில் விரலை வைக்கும் நிகழ்வுதான். 

அதையும் விட அற்புதமானது அவர்கள் இருவரும் இருபத்தி ஐந்து வருடத்துக்கும் மேலாக, அன்பு இழையோட இல்லறமே நல்லறமாக வாழ்ந்த வாழ்க்கையாகும். இன்று, ஒத்த வயதினர் கூட மனம் ஒத்து வாழ்வதில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்ற நிலையில், பெரும் வயது வித்தியாசத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்துகொண்ட திருமணத்தில் முழு திருப்தியுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து பல குழந்தைகளையும் பெற்றார்கள் என்று எண்ணும் போதும் , அவர்கள் இருவரும் வாழ்ந்தகால கட்டம் இஸ்லாத்தின் சரித்திரத்தில் எவ்வளவு துன்பங்களும் துயரங்களும் நிறைந்த நெருக்கடியான கால கட்டம் என்பதை நினைக்கும் போதும் அத்தகைய துயரங்களையும் தாங்கி, தாண்டி பெருவாழ்வு வாழ்ந்த நின்ற அவர்களை எண்ணி கல் நெஞ்சமும் கண்ணீர் வடிக்கும். 

அன்னை ஹதிஜா (ரலி) அவர்களது மரணத்துக்குப் பிறகு, பெருமானார் (ஸல்) அவர்கள் தனது ஐம்பது வயதுக்குப் பிறகு மணந்து கொண்ட அன்னை ஸவ்தா பின்த் சம் ஆ (ரலி) அவர்களும் இஸ்லாத்துக்காக தியாகத் தழும்புகளை ஏற்றவர்களில் ஒருவராகவே இருந்தார். அழைப்புப் பணியின் ஆரம்ப கட்டத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள் முதன்முதலாக நாடு துறந்து அபிசீனியாவுக்கு சென்ற அணியில் தனது முதல் கணவர் அவர்களுடன் இடம் பெற்றிருந்தவர். நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த அவர்களது முதல் கணவர் அவருக்காக விட்டுச் சென்றவை நான்கு பெண் குழந்தைகள் மட்டுமே. ஒரு புறம் தாயில்லாத குழந்தைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களை கவனிக்க ஆளில்லாமல் அவதியுற்ற பெருமானார் (ஸல்) அவர்களையும் மறுபுறம் கணவனை இழந்து ஆதரிக்க யாருமின்றி நான்கு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அவதியுற்ற அன்னை ஸவ்தா (ரலி) அவர்களையும் கண்ட கவ்லா பின்த் ஹகீம் (ரலி) என்ற தோழியர், இருவரும் படும் துயரங்களை நீக்கும் பணியில் செயல்பட்டு இருதரப்பிலும் பேசி பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் ஸவ்தா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரின் துயரங்களும் தீர்ந்தன. அதைவிட அவர்கள் இருவரின் குழந்தைகளும் அரவணைக்கப்பட்டு ஆறுதலடைந்தனர். 

பெருமானார் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்ட பெண்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டுமே ஒரு கன்னிப்பெண்ணாக இருந்தார்கள். அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் விதித்த இறைத்தூதுப் பயணத்தின் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் உடனிருந்தவர்கள். நட்புக்கு இலக்கணம் வகுத்து யாருமே நம்பாத காலங்களில் பெருமானார் (ஸல்) அவர்களை உண்மைப் படுத்தியவர்களில் சிறந்தவர். அதனாலேயே “சித்தீக்” என்று புகழப் பெற்றவர். அத்தகைய நண்பருடன் தனது பிணைப்பையும் பந்தத்தையும் தனது வாழ்நாள் முழுதும் நீடித்துக் கொள்ளவே பெருமானார் (ஸல்) அன்னை ஆயிஷா  (ரலி) என்கிற அறிவுப்பெட்டகத்தை மணந்தார்கள். 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சிறந்த நினைவாற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று அறிகிறோம். அருட்தூதர் பெருமானார் (ஸல்) அவர்களுடன் நீண்டகாலம் வாழ்ந்தவர் என்ற சிறப்புக்குரியவர். அதனால் பெண்களிலேயே அதிகமான நபி மொழிகளை அறிவிப்புச் செய்த பெருமைக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஆளாகிறார்கள். மேலும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் வாழ்ந்த வீடுதான் இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்களின் மண்ணறையாக மதினாவில் நிலவி வருகிறது. 

அடுத்து, அன்னை ஹப்ஸா (ரலி) அவர்கள், பத்ருப் போரில் கலந்துகொண்ட ஒரு தியாக வரலாறு படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பத்ருப் போரில் காயம்பட்ட காரணத்தால் தனது கணவரை இழந்து, கண்ணீர் சிந்தி நின்ற ஒரு விதவை. அது மட்டுமல்ல வாளெடுத்தால் வையகம் கலங்கும் என்ற பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்களின் அன்பு மகள். அன்னை ஹப்ஸா (ரலி) அவர்களின் இயல்பான எழுத்தாற்றலை இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வகையாக்கிக் கொள்ளவும், நண்பர் உமர் (ரலி) அவர்களின் உறவையும் பந்தத்தையும் பலப்படுத்திக் கொள்ளவும் , அன்னை ஹப்ஸா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள்.

அரபு சமூகத்தில், மாமனார் வீட்டாரோடான உறவு மிகவும் மதிக்கப்பட்டது. அத்தகைய உறவு, மாறுபட்ட பல குடும்பங்களுக்கு இடையில் நெருக்கத்தையும் நேசத்தையும் ஏற்படுத்தும் வழிகளில் ஒன்றாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மாமனார் மற்றும் மருமகன்களுக்கிடையில் போரிட்டுக் கொள்வது இழுக்காக கருதப்பட்டு வந்த காலம் அது. பல மாறுபட்ட வம்சங்களில் இருந்து பெண்களைத் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கிடையே நிலவி வந்த பகையும் கோபதாபங்களும் மறைந்து, மலரும் புதிய உறவுகள் இஸ்லாமிய அழைப்புக்கு வலுவூட்டும் என்பதற்காக செய்து கொள்ளப்பட்ட திருமணத்துக்கு உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டதை சொல்லலாம். 

அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மக்ஜூம் கிளையைச் சேர்ந்தவர்கள். அதே கிளையைச் சேர்ந்த, அபுஜஹல் பத்ருப் போரில் கொல்லப்பட்டான். ஆனால் அவர்களைச் சேர்ந்த பெரும் வீரரான காலித் இப்னு வலீத் போன்றவர்களின் இஸ்லாத்துக்கு எதிரான நிலையை இஸ்லாத்துக்கு ஆதரவாகத் திருப்ப அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களை  மணந்தார்கள். விரைவிலேயே காலித் இப்னு வலித்(ரலி) அவர்கள் தனது எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள். இஸ்லாத்துக்கு ஆதரவான பல போர்களில் பங்கேற்று வெற்றிவீரரானார்கள். பின்னாளில் அல்லாஹ்வின் வாள் என்ற அர்த்தம் தரும் “சைபுல்லா” என்ற பட்டத்தையும் பெற்றார்கள். 

இவ்வாறே, அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர்கள் , இஸ்லாத்தின் கடுமையான எதிரியாகவும் உஹுதுப் போரில் குறைஷியர்களின் படைத்தளபதியாகவும் இருந்த அபுசுப்யானின் மகளாவார்கள். அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களை பெருமானார் (ஸல்) திருமணம் முடித்த பின்னர் அபுசுப்யான், இஸ்லாத்துக்கு எதிர்மறையான தனது செயல்களில் இருந்து பின் வாங்கத் தொடங்கினார். மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்திலும் இணைந்தார். இத்திருமணம் எதிரிகளை இணங்கவைத்து உறவுகளை ஓங்கி வளரச் செய்து இணத்தும் பிணைத்தும் வைத்தது., உருவப்பட்ட வாட்கள் உறவுகள் காரணமாக உறைக்குள் உறங்கின. 

அதே போல பனூ நளீர் மற்றும் பனு முஸ்தலிக் ஆகிய இரு யூத வம்சங்களில் இருந்து அன்னை ஷபிய்யா (ரலி) மற்றும் அன்னை ஜுவைரியா (ரலி) அவர்களையும் மணம் முடித்தார்கள். போர்களில் கைதிகளாக கைப்பற்றப்பட்டு கண்ணைக்கசக்கிக் கொண்டிருந்த அவர்கள் அடிமைச் சந்தைகளில் விற்கப்படாமல் நம்பிக்கையாளர்களின் அன்னையர்கள் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்கள். பரம்பரை பகைமையுணர்வும் விடைபெற்றது. அதுமட்டுமல்ல ஜுவைரியா (ரலி) அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் முடித்ததால் கைதிகளாக இருந்த அன்னை அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த நூறு குடும்பத்தினரும் நபித்தோழர்களால் உரிமையிடப்பட்டார்கள். இறைத்தூதரின் மாமனார் ஹாரிஸ் அவர்களின் பனு முஸ்தலக் கிளையைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இஸ்லாத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வு ஒரு பெரிய வரலாற்று மாற்றத்துக்கு வித்திட்டது. 

இஸ்லாத்துக்கு முந்தைய வழக்கமான , வளர்ப்புமகனை தனக்குப் பிறந்த மகனைப் போல உரிமை கொண்டாடும் வழக்கத்தை ஒழிப்பதற்காக, பெருமானார் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாக இருந்த ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களால் மணவிலக்குச் செய்யப்பட்ட அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களையும் திருமணம் முடித்துக் கொண்டார்கள். அறியாமை கால நடைமுறைப்படி, வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மகனுக்கு இரத்த உறவில் பிறந்த மகனைப் போன்றே வழங்கப்பட்ட உரிமைகள் இந்தத் திருமணத்தால் இறைவனால் ரத்து செய்யப்பட்டு திருமறையின் கட்டளையே இந்தத் திருமணத்துக்கு பொறுப்பாகவும் சாட்சியாகவும் ஆக்கப்பட்டது. 

அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள், தன் கணவர் ஃபத்ருப் போரில் கொல்லப்பட்டு நிர்க்கதியாக விடப்பட்ட நிலையில் பெருமானார் (ஸல்) அவர்கள், அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) திருமணம் புரிந்து அவர்களுக்கு ஆதரவும் அந்தஸ்தும் கொடுத்தார்கள். அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சில மாதங்களே வாழ்ந்தார்கள். அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் போன்று நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது மரணமடைந்தவர்கள் அன்னை சைனப் பின்த் குஸைமா (ரலி).  இவர்கள் உம்முல் மிஸ்கீன் (ஏழைகளின் தாய்) என்று வரலாற்றி அழைக்கப்படுகிறார்கள்.

அதேரீதியில், அன்னை உம்மு ஸலாமா (ரலி) அவர்களின் கணவர் அபூ ஸலாமா (ரலி) அவர்கள் பத்ருப் போரிலும், பின்னர் உஹதுப் போரிலும் அதன்பின் , பனு அசத் குலத்தவருடன் நடந்த போரிலும் பங்கேற்றார். பலபோர்களில் பங்கேற்ற அவரது உடலில் புரையோடிப் போன புண்களின் காரணமாக மரணமடைந்தார். அந்நிலையில் ஆதரவற்ற , வயது முதிர்ந்த அன்னை உம்மு ஸலாமா (ரலி) அவர்களையும் பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் செய்துகொண்டதுடன் அவர்களது குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள். 

அதே போல், அன்னை மைமூனா (ரலி) அவர்கள் பனூ ஹிலால் என்கிற மிகச் சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். இரண்டு திருமணங்கள் முடித்தும் இளம் வயதிலேயே விதவையானார்கள். திருமண உறவின் மூலம் பநூதீம், பனூ அதி, பனு உமையா, பனூமுஸ்தலக், பனூ அசத் ஆகிய கோத்திரங்களுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டது போல் அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்து பனூ ஹிலால் கோத்திரத்துடனும் பெருமானார் (ஸல்) அவர்கள் உறவை உண்டாக்கிக் கொண்டார்கள். ஏற்றம் பெற்றது இஸ்லாம். 

அன்னை மாரியா (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எகிப்திய மன்னரால் பரிசாக அனுப்பிவைக்கப்பட்ட கிருத்தவ அடிமையாக இருந்தார்கள். முதலில் அவர்களுக்கு அடிமைத்தளையில் இருந்து விடுதலை அளித்த பெருமானார் (ஸல்) அவர்கள் , அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்கும்படி எடுத்துக் கூறினார்கள். அதன்பின் மணம் புரிந்துகொண்டார்கள். அன்னை ஹதிஜா (ரலி) அவர்களுக்குப் பிறகு அன்னை மாரியா (ரலி) அவர்கள் மூலம்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் மீண்டும் தந்தையானார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

எவ்வளவு அறிவும் ஆற்றலும் பெற்ற ஆண்களாக இருந்தாலும் இரண்டு மனைவிகள் இடையே கூட சமத்துவமான நீதி செலுத்துவது கடினம் என்பது பொதுவாக வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளாகும். ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணம் புரிந்து கொண்டு வாழ்ந்தது அல்லாஹ் அவர்களுக்கு வைத்த சோதனையில் பெற்ற வெற்றி என்று சொல்லலாம். உலகத்துக்கு நீதியைப் பற்றியும் சமத்துவத்தைப் பற்றியும் போதித்த பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களின் சொந்த வாழ்விலும் , பல்வேறு இன, குல, கோத்திர , கிளைகளைச் சேர்ந்த மனைவிமார்களுக்கு இடையே அந்த நீதியையும் சமத்துவத்தையும் பேணினார்கள் என்பதை உலகுக்கு நிருபித்துக் காட்டவே இத்தனை பெண்களை மணம்புரிந்தும் அனைவருடனும் இன்புற்று வாழவைத்தது அல்லாஹ் தனது தூதருக்காக எடுத்த ஒரு அழகிய அளவுகோலாகும். 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நவின்ற மொழியே இதற்கு சான்று. முஸ்லிம் தொகுப்பில் ஸ அத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்களின் குணம் எப்படி இருந்தது என்று கேட்கப்பட்டபோது , “ அவர்களின் குணம் குர் ஆனாகவே இருந்தது “ என்று கூறினார்கள். (முஸ்லிம் 1233). 

இஸ்லாமிய சட்டங்களில் பாதி அளவு சட்டங்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிகளின் வாயிலாகவே உலகுக்குக் கிடைத்தன. நபித்தோழர்கள் கூட அந்த விபரங்களை அவர்களின் மனைவிகளிடமிருந்தே கேட்டு அறிந்து கொண்டார்கள். பெருமானார்  (ஸல்) அவர்கள் வரம்புக்குட்பட்ட திருமணங்களை மட்டும் செய்து இருந்தால் பல சட்டங்கள் வெளி உலகுக்கு அறிவிக்கப்படாமலே போயிருக்கும். 

மேலும் ஒரு மனிதனின் புற வாழ்க்கை ஒன்றாக இருக்கும் ; அக வாழ்க்கை மற்றொன்றாக இருக்கும். அகவாழ்விலும் புறவாழ்விலும் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணி வாழ்ந்த அருட் தூதர் அவர்களின் அகவாழ்வு மனைவியர் மூலமே வெளி உலகுக்குத் தெரிய வாய்ப்பு உண்டு. பெருமானார் (ஸல்) அவர்களின் வெளி உலக வாழ்வை உலகுக்கு எடுத்துச் சொல்ல பல்லாயிரக் கணக்கான தோழர்களின் தேவை இருந்தது போலவே அவர்களது வீட்டுலக வாழ்வை உலகுக்கு எடுத்துச் சொல்லி போதிக்க பல மனைவிகளும் தேவைப்பட்டார்கள். 

அன்பின் காரணமாக மனைவியர்களுக்குள் சில நேரங்களில் மண உரசல்கள் ஏற்பட்டதை நாம் மறைக்கத் தயாரில்லை. ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் அனைவரிடமும் அன்பாகவும் நேசமாகவும் நீதியாகவும் நடந்து தான் ஒரு இறைத்தூதர் என்பதை நிருபித்துக் காட்டினார்கள். கடுஞ்சொல் காணப்படவில்லை; கை நீட்டி அடித்ததில்லை; பாத அணியை செப்பனிட்டார்கள்; பால் கறந்தார்கள்; தூசுதட்டினார்கள்; யாதுமற்றோர்க்கு உதவி நின்றார்கள் யாம் உவக்கும் நாயகம் (ஸல்) அவர்கள்.  

எதிர்த்துக் கேட்போருக்கு நாம் இன்முகத்துடன் எடுத்துச் சொல்ல வேண்டியவை இவை. அழைப்புப் பணியில் ஆங்காங்கு ஏற்படும் உரசல்களை உண்மை சொல்லி விளங்கவைத்து நன்மையின்பால் அழைப்பதற்கான வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; வலிகளும்; வடுக்களும்தான். பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்றில் வழுக்கலும் இல்லை; வழுக்களும் இல்லை ; வழக்குகளும் இல்லை. 

இன்ஷா அல்லாஹ் இன்னும் பார்க்கலாம்.

இபுராஹிம் அன்சாரி

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்ஹம்துலில்லாஹ் !

இந்த தொடரை தொடர்ந்து வாசித்து வந்தாலும், தொடர்ந்து கருத்துக்கள் பதிவதில் சட்டென்று உதிக்கும் உணர்வை பட்டென்று பதிக்கும் பதிவுகளை விட தரமானதொரு இந்த தொடரை பொறுமையுடன் வாசிக்கவும் அதன் தாக்கங்களை புரிந்து கொள்ளவும் அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் !

மாஷா அல்லாஹ் காக்கா.... ஏற்கன்வே நூல் வடிவம் பெற்ற வெற்றித் தொடரய் வெளிவந்த நூல் பற்றிய surprise நாளைய தினம் இன்ஷா அல்லாஹ் ! :)

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

அருமையான ஆதாரங்கள்! எடுத்துச் சொன்னால் எதிர்க்கேள்வி கேட்க இயலாத விளக்கங்கள்!

மாஷா அல்லாஹ்!


அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sabeer.abushahruk said...

பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்றில் வழுக்கலும் இல்லை; வழுக்களும் இல்லை ; வழக்குகளும் இல்லை.


நிரூபிக்கப்பட்ட உண்மை!

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி கவிஞர் சபீர்,

வ அலைக்குமுஸ் சலாம். அல்ஹம்துலில்லாஹ்.

தம்பி அபு இப்ராஹீம்

இன்று காலை ஒரு மின்னஞ்சல்- தம்பி நூர் முகமது அவர்கள் இடமிருந்து வந்தததை அனுப்பி இருந்தேன். அன்னையர் ஜைனப் ( ரலி) அவர்கள் இருவரையும் அவர்களது தந்தையின் பெயரைக் கொண்டும் அடையாளப்படுத்தும் வகையில் திருத்தங்கள் செய்ய வேண்டுகிறேன்.

Ebrahim Ansari said...

உள்ளூர் அலைபேசி அழைப்பு ஒன்று கீழ்க்கண்ட வரிகளைப் பற்றி

// பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்றில் வழுக்கலும் இல்லை; வழுக்களும் இல்லை ; வழக்குகளும் இல்லை. //

இரண்டு தடவைகள் வழுக்கள் என்று எழுதி இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அவற்றுள் ஒரு வழுக்கள் = சறுக்கல் என்ற பொருள் படும்
மற்றொரு வழுக்கள் = பிழைகள் என்று பொருள் படும் என்று தெளிவுபடுத்தினேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

முஸ்லீமான ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய அற்புத பொக்கிஸம் இந்த பதிவு.

உம்முல் முஃமினீன்களான நம் அன்னையர்களை பற்றி அறியாதவர்களாக நாம் மரணித்தால், அது போன்ற கைசேதம் வேறு ஒன்றுமில்லை.

நம் அன்னையர்கள் பற்றிய நினைவூட்டலை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. ஜஸகல்லாஹ் ஹைரா.

இப்னு அப்துல் ரஜாக் said...

// பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்றில் வழுக்கலும் இல்லை; வழுக்களும் இல்லை ; வழக்குகளும் இல்லை. //
சத்தியமான வார்த்தைகள்

sheikdawoodmohamedfarook said...

இந்தப்பதிவின் மீது வழுக்களும்மில்லை;வழக்குகளுமில்லை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு